Wednesday 25 November 2015

மீண்டும் ஒலிக்க வேண்டிய கொகாலு

தமுஎகச விருதுபெற்ற நூல்கள் வரிசை: 9

தீர்க்கப்படாமல் இருந்த திருட்டு வழக்குகளில் “தேடப்பட்ட”
குற்றவாளிகளாக அடிக்கடி இவர்களின் ஆண்கள் கைது செய்யப்படுவார்கள், அது உள்ளூர்ச் செய்தியாகப் போய்விடும். அதிகாரத் திமிரோடு ஆட்டம் போடுகிறவர்களின் காம நெருப்பில் இவர்களின் பெண்கள் பொசுங்குவார்கள், அது உள்ளூர்ச் செய்தியாகக்கூட ஆகாமல் மறைக்கப்பட்டுவிடும். யார் இந்த “இவர்கள்”? முன்பு சமவெளிப் பகுதிகளிலிருந்து காடுசூழ் மலைப்பகுதிகளுக்கு விரட்டப்பட்ட, இப்போது அங்கிருந்தும் விரட்டப்படுகிற இருளர் மக்களே இவர்கள். இவர்களுக்காக இவர்களது மொழியிலேயே குரல் கொடுக்க வந்திருக்கிறது ‘சப்பெ கொலாலு’ என்ற இந்த நூல்.

கவிஞர் லட்சுமணன் ஏற்கெனவே இருளர் பேச்சு மொழியில் எழுதிய ‘ஒடியன்’ கவிதைத் தொகுப்பு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இந்த நூல், இவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களைச் சொல்கிறது. தகவல்களைக் கோர்த்தளிப்பதாக இல்லாமல், இவர்களின் பாரம்பரியப் பாடல்களைக் கேட்கவைக்கிறது. அப்பாடல்களுக்கு அருஞ்சொற்பொருள் தருகிறது. இதனால் நாமே அந்தப் பாடல்களினூடே பயணித்து இந்த மக்களைச் சென்றடைய முடிகிறது. புத்தகம் அத்தோடு நிற்கவில்லை, அந்தப் பாடல்களில் பொதிந்திருக்கும் கதைகளையும் கற்பனைகளையும் வெளிப்படுத்தி, உண்மையிலேயே வரலாற்றில் என்ன நடந்திருக்கும் என்ற அறிவியல்பூர்வ தேடலை மேற்கொள்கிறது. ஆய்வும், படைப்பாக்கமும் இணைந்த மாறுபட்டதொரு அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.

“சப்பெ” என்றால் வாய்பேச இயலாத பெண். “கொகாலு” என்றால் முகவீணை அல்லது சின்னஞ்சிறு நாதசுரம் போன்ற இசைக்கருவி. வாய் பேச முடியாத சப்பெ உணர்வுகளைத் தேக்கி அந்தக் கொகாலுவை வாயில் வைத்து வாசித்தாளானால், இவர்களை விரட்ட வந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய ஆண் மறுநாள் செத்துப்போவான், அவர்கள் வளைத்துப்போட்ட நிலத்தில் வளர்ந்திருக்கும் பயிர்களை யானைக்கூட்டம் அழித்துவிடும்! இப்படியான பாமர நம்பிக்கைகளோடு இவர்கள் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்க, ஆக்கிரமிப்பாளர்களின் கட்டளைப்படி அந்த சப்பெ பலியிடப்படுகிறாள். அவளிடமிருந்து பறிக்கப்பட்ட கொகாலு கூரையில் வீசப்படுகிறது.

புத்தகம் நெடுகிலும் இப்படியான ஆக்கிரமிப்புகளால் ஏற்பட்ட வலிகள்  நெறிகட்டிப்போயிருப்பதைக் காண முடிகிறது. ஆதார ஆவணங்கள் இல்லாத நிலையில் அந்தப் பாடல்களும் வாய்மொழிக் கதைகளுமே இவர்களுக்கான அடையாளச் சங்கிலிகள். காலப்போக்கில் அந்தச் சங்கிலிகள் தேய்ந்து அறுந்து காணாமலே போய்விடக்கூடிய அபாயம் நேர்வதற்குள் எழுத்தில் பதிவு செய்திருப்பது ஒரு அருந்தொண்டு.

கொங்கு என்ற சொல்லுக்கு இருளர் மொழியில் கிழக்கு என்று பொருள். கொங்கர் என்றால் கிழக்கேயிருந்து வந்தவர்கள். குறிப்பிட்ட பிரிவினரையல்லாமல், வனத்திற்குள் கிழக்கிலிருந்து வந்தவர்கள் அல்லது கிழக்குத் திசை வழியாக வந்தவர்கள் எல்லோருமே இவர்களைப் பொறுத்தவரையில் கொங்கர்கள்தான். கானக உணவை மட்டுமே அறிந்தவர்களுக்கு, இட்லி கூட அரண்மனை உணவுதான். அந்த இட்லியையும் பிற பொருள்களையும் கொடுத்து இவர்களை மயக்கியிருக்கிறார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அதற்கெல்லாம் அசராதவர்களை வஞ்சகங்களாலும் வன்முறைகளாலும் அடக்கியிருக்கிறார்கள். இப்படி மயக்கியதற்கும் அடக்கியதற்கும் இரண்டு நோக்கங்கள்: ஒன்று, விலைமதிப்பில்லா மரங்களை வெட்டிக் கடத்துவது; இரண்டு, விலையேதும் தராமல் நிலங்களை வளைத்துப்போடுவது.

ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது இவர்களது இயற்கை உடைமைகள் மட்டுமல்ல, பண்பாட்டு அடையாளங்களும்தான். இயற்கை இவர்களது நேசத்திற்கும் வழிபாட்டிற்கும் உரியதாக இருந்துள்ளது. காட்டில் முதன் முதலில் தடம் பதித்து வாழ வழியேற்படுத்தியவர்களை சாமியாகப் போற்றிக் கதை புணைந்து கொண்டாடி வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒடுக்கப்பட்டதன் அடையாளமாகப் பின்னர் சிலை வடிவத் தெய்வங்களும், ஆதிக்க சமூக பூசைச் சடங்குகளும் புகுத்தப்படுகின்றன. “வானளவு எழுந்த பெருமாள்” பால் கேட்டபோது தயங்கிய காரையன் முதுகில் பிரம்படி விழுந்த கதையின் உள்ளடக்கம் இதுதான். “இந்தச் சாமியையெல்லாம் முந்தி சீந்த மாட்டாங்க்,” என்று ஒரு மூப்பன் சொல்வதிலிருந்து புலப்படுவதும் இதுவேதான்.

கதைப்பாடல்களில் எதிரொலிப்பது வேதனைகள் மட்டுமல்ல; அவ்வப்போது நிலைநாட்டப்பட்ட வெற்றிகளும்தான். அடிமைப்படுத்த முயன்றவர்களை மீறி, நிலத்தில் சாகுபடி செய்ய முன்னத்தி ஏராக மாறிய வள்ளியின்  வெற்றி அப்படிப்பட்ட ஒன்றுதான். விரட்ட வந்தவர்களை விரட்டியடித்த போராட்டங்களில் இவர்களுக்கு வன விலங்குகளும் அல்லவா துணையாக நின்றிருக்கின்றன! அந்தக் கதைகளில்தான் எத்தனை நையாண்டி! எத்தனை எள்ளல்!

இவர்களும் மலை வனத்திற்குள் சமவெளியிலிருந்து ஏறி வந்தவர்கள்தான், மற்றவர்களும் அப்படி வந்தவர்கள்தான். வேறுபாடு என்னவென்றால், இருளர்கள் இயற்கையோடு இணைந்து வாழத் தொடங்கினார்கள். மற்றவர்களோ இயற்கையைச் சுரண்டவே வந்தார்கள். இன்று கொங்கர்கள் மட்டுமல்ல, மேற்குலக கார்ப்பரேட் கடவுள்களுமல்லவா வளைத்துப்போட வருகிறார்கள்! அன்று இட்லி ஆசை காட்டப்பட்டதென்றால், இன்று கைப்பேசி உள்ளிட்ட நவீனப் பொருள்களின் வலை! வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போக வைத்து, நிலம் கைப்பற்றல் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் அரசின் வளர்ச்சி மந்திரங்களில் மறைந்திருப்பது இவர்களை இங்கிருந்தும் விரட்டுகிற தந்திரங்களுமல்லவா!

அச்சமறியாத இந்த மக்கள் நடுங்குவது பீ-ஒடியன் பற்றிய நினைப்பில்தான். இவர்களை அழிக்கவந்த தீய சக்தியாக அதனைக் கருதுகிறார்கள். விசாரித்தால் தொடக்கத்தில் இவர்களது முன்னோர்களை வதைத்த கொடுமைக்காரர்களின் கதைகள் கிடைக்கக்கூடும்.

ஒரு சமுதாயம் உண்மையிலேயே நாகரிகத்துடன் இருப்பதாக எப்போது சொல்ல முடியும் என்றால், மிகக்குறுகிய எண்ணிக்கை கொண்டவர்களின் உரிமைகளும் அடையாளங்களும் சமத்துவத்தோடு மதிக்கப்படுகிறபோதுதான். இருளர் சமூகத்தை இருட்டில் தள்ளத் துடிக்கும் நவீன பீ-ஒடியன்கள் வீழ்த்தப்பட வேண்டும். கூரையில் வீசப்பட்ட கொகாலு மீண்டும் கையில் எடுக்கப்பட வேண்டும், சப்பெ என அடக்கப்பட்டவர்களின் உரிமை முழக்கமாக உரக்க எழுந்து சக மனிதர்களை அணிதிரட்ட வேண்டும்.

(‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,’ வெளியிட்டுள்ள, லட்சுமணன் எழுதிய ‘சப்பெ கொலாலு’ என்ற இந்த நூலுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2014ம் ஆண்டுக்கான விளிம்பு நிலை மக்களுக்கான எழுத்தாக்கத்திற்கான விருதினை வழங்கியுள்ளது.)

விருது வழங்கல் விழா தஞ்சையில் நடைபெற்றபோது இப்புத்தகம் தேர்வு செய்யப்பட்டது குறித்து நான் உரையாற்றினேன். அதன் அடிப்பiடையில் எனது இந்தக் கட்டுரை  ‘தீக்கதிர்’ (நவம்பர் 23, 2015 இதழ்) நாளேட்டின் ‘இலக்கியச் சோலை’ பக்கத்தில் வெளியாகியுள்ளது.

1 comment:

G.Surendra Babu said...

மீண்டும் ஒலிக்க வேண்டிய கொகாலு பதிவை படித்தேன்.என் இதயம் கனிந்த நன்றியையும் பாராட்டுகளையும் பதிவு செய்கிறேன்.எல்லா நூல்களையும் எல்லா தகவல்களையும் தேடிப்படிக்க முடியவதில்லை.தாங்கள் பல துறைசார்ந்த தகவல்களை ஒரு இடத்தில் தருகின்ற மனித நூலகமாக உழைத்து சமைக்கிறீர்கள்.வாழ்த்துக்களை மீண்டும் தெரிவிக்கிறேன் தொடரட்டும் உங்கள் பணி உங்கள் உடல்நிலை ஆரோக்கியத்தின் கவனத்தோடு.