Monday 3 July 2017

‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா?

னதில் ஒரு வடுவையே ஏற்படுத்தியிருக்கிறது ‘மஞ்சள்’ நாடகம். நீலம் புரொடக்ஷன்ஸ், ஜெய் பீம் மன்றம்  இணைந்து தயாரித்த, கட்டியக்காரி குழுவினர் வழங்கிய அந்த நாடகத்தின் கலைஞர்கள் அத்தனை பேரையும் ஒரே அணைப்பாக அணைத்துக்கொள்ள ஆசை. நாடகம் குறித்து எனக்கு சில விமர்சனங்களும் உண்டு. உடன்பட்டு மனம் உருகுகிற, மாறுபட்டு எதிர்க்கருத்து சொல்ல விரும்புகிற இடங்கள் நாடகத்தில் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

இப்போது நாடகத்தில் இடம் பெற்ற ஒரு கருத்து பற்றி உடனடியாக உரையாட விரும்புகிறேன். அது, அநேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இலக்குவைத்து திட்டமிட்டே இடம்பெறச் செய்யப்பட்ட கருத்து என்றே நான் கருதுகிறேன். நாடகம் முடிந்த பிறகு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அக்கருத்தை வைத்து அழுத்தமாகப் பேசினார் (தன் நிலைபாட்டை வலியுறுத்தக் கிடைக்கிற மேடையைச் சரியாகப் பயன்படுத்துவது அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய கலை). அரங்கிற்கு வெளியே பலரும் என்னோடு அது பற்றிப் பேசினார்கள். ஆகவே அதையே இங்கு விவாதிக்க எடுத்துக்கொள்கிறேன். இதற்கு முன்பும் அடிக்கடி இந்த விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது என் மனதில் தோன்றிய சிந்தனையை வெளிப்படுத்த நினைத்தாலும், அதற்கான சூழல் அமையாமல் இருந்தது. தற்போது இந்த நாடகத்தாலும் அதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களாலும் அந்தச் சூழல் அமைகிறது.

தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் சாதியை ஒழித்தால்தான் முடியும். சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கக் கிளம்புவது சாதியைக் காப்பாற்றுகிற வேலைதான், சாதி இருக்கிற வரையில் தீண்டாமை இருந்துகொண்டேதான் இருக்கும் என்ற ஒரு கருத்து நாடகத்தில் வருகிறது. பல்வேறு தளங்களில், நிகழ்வுகளில் நடக்கிற சாதியம் தொடர்பான விவாதங்களில் இக்கருத்து சொல்லப்படுகிறது. சில நேரங்களில், நேரடியாக ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ அமைப்பைக் குறிவைத்தே விமர்சனங்களாகவும் தாக்குதலாகவும்  இக்கருத்து முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த முன்னணி இதுவரை செய்துள்ளவற்றைப் புறக்கணித்துவிட்டு இப்படிச் சொல்லப்படுகிறது. அல்லது “நீங்கள் நேர்மையாகத்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறீர்கள், ஆனாலும்...” என்ற இழுவையோடும் பகுதி அங்கீகாரத்தோடும் சொல்லப்படுவதுண்டு. சிலர், சாதி ஒழிப்பு என்பதையே இயக்கம் முன்வைத்தால் சரியாக இருக்குமே என்ற அக்கறையோடும், சிலர் மார்க்சிஸ்ட்டுகள் மீது வலிந்து சாதிய அடையாளத்தைப் பூசுகிற வன்மத்தோடும் இக்கருத்தைக் கூறுகிறார்கள்.

தோழர் திவ்யா பாரதி தயாரித்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தில் கூட, சில அமைப்புகளின் தலைவர்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி குறித்த இந்த விமர்சனக் கருத்தைக் கூறுகிறார்கள், அதற்கு முன்னணியின் பதில் கருத்து அல்லது  விளக்கம் என்ன என்று கேட்டுப்பெற்று சேர்க்கவில்லை. ஆயினும் மனித மலத்தை மனிதர்கள் கையால் அள்ளவைக்கும் மிகப்பெரும் சமூக அநீதிக்கு எதிரான போரில் ‘கக்கூஸ்’ ஒரு முக்கிய ஆயுதமாக உருவாகியிருக்கிறது. பல இடங்களில் சாதிய ஆதிக்கவாதிகளின் தலையீட்டால் காவல்துறையினர் அரங்கக் கூட்டங்களில் கூட அதைத் திரையிட விடாமல் தடுக்கிறார்கள் என்பதே அது எவ்வளவு கூர்மையான ஆக்கம் என்பதைக் காட்டுகிறது.

எனது வாதத்திற்கு ஆதாரமாகப் புத்தகங்கள் எதையும் மேற்கோள் காட்டப்போவதில்லை. கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோரையோ, சாதியம் குறித்து ஆய்வு செய்துள்ள மற்றவர்களையோ எடுத்துக்கூறப்போவதில்லை. அந்தப் புத்தகப் பெருங்கடலில் நீந்தி வந்த நுண்மான் நுழைபுலம் எனக்கில்லை என்பது ஒரு காரணம். எனது சிந்தனையும் புரிதலும் ஈடுபாடுமே எனக்கு ஆதாரம் என்பது இன்னொரு காரணம். அடுத்து, தங்களோடு அறிவு முற்றுப்பெற்றுவிட்டதாக மார்க்ஸோ எங்கெல்ஸோ அம்பேத்கரோ பெரியாரோ சொன்னதில்லை என்பதால் ஏற்பட்ட துணிவு மற்றொரு முக்கியமான காரணம்.

இங்கு நான் முன்வைப்பது எனது கேள்விதான். இதுவே இறுதிக் கருத்தல்ல. இதை மாற்றிக்கொள்வதே சாதிய ஒழிப்பை நோக்கிச் செல்வதற்கு ஏற்றது என்ற புரிதலுக்கு வருவேனானால் தற்போதைய என் கருத்தை மாற்றிக்கொள்வதற்கு நான் கூச்சப்படப் போவதில்லை. அதே போன்ற மன நிலையோடு, இதைப் படிக்கிற தோழமைகள் எதிர்வாதத்தை முன்வைக்கக் கேட்டுக்கொள்கிறேன். கட்சியையோ கட்சித் தலைவர்களையோ தாக்குவதும் வலிந்து பூணூல் மாட்டிவிடுகிற கைங்கர்யமும் வேண்டாம்.

பொதுவெளியில் விவாதிக்கும் விருப்போடு இப்போது நான் பதிவிடுவது கலப்படமில்லாத சொந்தக் கருத்தே.

தீண்டாமை ஒழிப்பு சாதியத் தகர்ப்பே. இதில் காந்தியார் அன்று தீண்டாமை ஒரு பாவச் செயல் என்று சொன்ன தொணிக்கும், கம்யூனிஸ்ட்டுகள் இன்று இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாத கூறு சாதிய ஒழிப்பு, அதற்காகவே தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் என்று சொல்கிற தொணிக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. சாதியப் பிரிவினை ஒரு சமூக வேலைப் பிரிவினையே எனக்கூறி சாதிகளையும் சாதிப் பாகுபாடுகளையும் அப்படியே வைத்துக்கொள்வது காந்தியம். உழைப்புச் சுரண்டலுக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் சமூகத் தளத்தை ஏற்படுத்திக்கொடுத்திருப்பது சாதிப் பிரிவினை, அதைத் தகர்க்கிற லட்சியம் சமத்துவ சமுதாயத்திற்கான நெடும் போராட்டத்துடன் இரண்டறக் கலந்திருக்கிறது எனக்கூறி களமிறங்கியிருப்பது இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கம்.

சரி, தீண்டாமை ஒழிப்பு சாதியத் தகர்ப்பே என்று ஏன் கூறுகிறேன்?

இந்தியச் சமுதாய அமைப்பின் தனித்துவமான ஏற்பாடாக இருக்கிற சாதி எப்படி உருவாகியிருந்தாலும் சரி - சமூகக் குழுக்களின் தொடர்ச்சியாக, அகமண முறையின் வளர்ச்சியாக, இயற்கை வளத்தை அல்லது சொத்தைக் கைப்பற்றித் தலைமுறை தலைமுறையாக வைத்துக்கொள்வதற்கான தொடர்ச்சியாக அல்லது ஆரிய வருகைக்குப் பின்னர் திணிக்கப்பட்ட வர்ணப் பிரிவினையாக, அல்லது எளிமையாகச் சொல்வதெனின் ஆட்சியதிகாரத் துணையுடன் சமூக விதியாக்கப்பட்ட பிராமணிய மேலாதிக்கத்தின் வகைமுறையாக - எப்படி உருவாகியிருந்தாலும் சாதியின் அடித்தளமே தீண்டாமைதான். ஆம் சாதியால் தீண்டாமை வரவில்லை,  தீண்டாமைக்காகவே சாதி வந்தது என்று நான் கருதுகிறேன்.

தலித் பிரிவுகள், தலித் அல்லாத இதர சாதிகள் என்று கூட நான் எடுத்துக்கொள்ளவில்லை. அதில் தெரிகிற பாகுபாடும் தீண்டாமையும் அப்பட்டமானவை, உலகின் படு மோசமான மனித உரிமை அவமதிப்புகளிலேயே மிக இழிவானவை. நான் எடுத்துக்கொள்வது தலித் அல்லாத இதர சாதிகளுக்கிடையேயான உயர்வு-தாழ்வு விவகாரம். சூத்திரர், வைஸ்யர், சத்திரியர், பிராமணர் என்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை பற்றிக் குறிப்பிடுகிறேன் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் மேம்பட்டவர்கள் என அவர்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிற மற்ற பிரிவுகளுக்கு இடையேயும் அந்தந்தப் பிரிவுகளுக்கு உள்ளேயும் அடிப்படையாக நிலவுகிற தீண்டாமை பற்றிக் குறிப்பிடுகிறேன்.

எங்கள் சாதி வேறு, உங்கள் சாதி வேறு என்று பிரிப்பதிலேயே, உங்களை விட நாங்கள் மேலானவர்கள் என்ற பெருமிதம் இருக்கிறது. அந்தப் பெருமிதத்தின் அடியிழையாக இருப்பது தீண்டாமைதான்.

சாதிக் கோபுர அமைப்பில் உச்சியில் உட்கார்ந்துகொண்டிருக்கிற பிராமணர் சமூகத்தில் எல்லோரும் சமமா? அதிலே உள்ள பிரிவுகளுக்கிடையே மண உறவுகள் எளிதாக சாத்தியமாகிறதா?

பிராமணர்களுக்கு நிகரானவர்கள் அல்லது பிராமணர்களை விடவும் உயர்ந்தவர்கள் தாங்கள் என்று சொல்லிக்கொள்கிற ஒரு சாதியைச் சேர்ந்த குடும்பம். அவர்களது மகன் ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்தப் பெண்ணின் குடும்பமும் இதே சாதிதான். பொருளாதார நிலையிலும் இரு குடும்பங்களும் சமமானவர்கள்தான். ஆனாலும் ஆண் குடும்பத்தார் மிகவும் தயங்கினார்கள். காரணம், ஒரே சாதிப்பெயர் என்றாலும், பெண் குடும்பத்தாரின் உட்பிரிவு இவர்களுடையதை விடவும் ஒரு படி கீழானதாம். பசங்கள் உறுதியாக இருந்ததாலும், மணவிழாச் சடங்குகளை அவனுடைய குடும்ப வழக்கப்படி (அதாவது அவர்களது உட்பிரிவின் மரபுப்படி), நடத்திக்கொள்வதற்கு அவளுடைய குடும்பத்தார் சம்மதித்தாலும் திருமணம் நடந்தது.

பிரம்மனின் தலைவழிப் பிறப்பெடுத்ததாகக் கூறிக்கொள்ளும் வர்ணத்திலேலேயே, பொதுவாக அய்யர் அல்லது அய்யங்கார் என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற பிராமணர்களிலேயே எத்தனை பிரிவுகள். அந்தப் பிரிவுகளுக்கிடையேயே நுட்பமான உயர்வு-தாழ்வு. தோள்வழிப் பிறப்பெடுத்த இடமளிக்கப்பட்டிருக்கும் சத்திரிய அடுக்கில் எத்தனை சாதிகள், அவற்றுள் எத்தனை உட்பிரிவுகள். தொடைவழிப் பிறப்பெடுத்தவர்கள் என்று வைக்கப்பட்டிருக்கும் வைஸ்யர் அடுக்கில் எத்தனை சாதிகள், எத்தனை உட்பிரிவுகள். கால்வழிப் பிறப்பெடுத்ததாகத் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் சூத்திர அடுக்கில் எத்தனை சாதிகள், எத்தனை உட்பிரிவுகள். இந்த அடுக்குகளோடு சேர்க்கப்படாத, மனிதப் பிறவிகளாகவே பார்க்கப்படாத, இடையறாப் போராட்டங்களாலும், அந்தப் போராட்டங்களின் பலனாகக் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசாங்க ஏற்பாடுகளாலும் தங்களைப் பார்க்க வைத்த பட்டியல் பிரிவுகளில் எத்தனை சாதிகள், எத்தனை உட்பிரிவுகள்.

ஒரே வர்ணத்தைச் சேர்ந்த ஒரு சாதி இன்னொரு சாதியை விடத் தன்னை உயர்வானதாகச் சொல்லி, என்னோடு நீ உறவுகொள்ள முடியாதெனத் தள்ளிவைக்கிறது என்றால் அது தீண்டாமை இல்லையா? அந்தச் சாதிக்குள்ளேயே ஒரு உட்பிரிவு இன்னொரு உட்பிரிவை விடத் தன்னை உயர்வானமாகச் சொல்லி, உன்னோடு நான் உறவுகொள்ள மாட்டேனெனத் தள்ளி நிற்கிறது என்றால் அது தீண்டாமை இல்லையா?

ஏதோவொரு வகையில் உன்னை விட நான் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன் என்பது தீண்டாமைதான். துப்புரவு வேலைகள், வயலில் இறங்கிச் செய்யும் வேலைகள், அலுவலகத்தில் மேசை மணியைத் தட்டியதும் ஓடிவந்து கைகட்டி நிற்கிற வேலைகள் என்ற தொழில்களில் தள்ளிவிடப்பட்ட மக்களை அருவருப்புக்குரியவர்களாக நடத்துவதும், பொது இடத்தில் ஒதுக்கிவைப்பதும், குறிப்பாக அந்தச் சமூகங்களின் ஆண்கள் பிற சமூகங்களின் பெண்களோடு கலந்துவிடக்கூடாதென அரிவாள் தூக்குவதும் தீண்டாமையின் மிகக் கோரமான, மிகக் கேவலமான வன்மங்கள். ஆனால்,  அவை மட்டுமே தீண்டாமை அல்ல. முதலிலேயே நான் குறிப்பிட்டது போல, ஒரு பிரிவு இன்னொரு பிரிவை விடத் தன்னை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொள்வதும், அந்த இடத்தில் நீ காலை வைக்காதே என்று நெருக்கித் தள்ளுவதும் கூட தீண்டாமைதான். இதை அப்படியே பராமரிப்பதற்காகத்தான் ஒவ்வொரு சமூகத்திற்கு உள்ளேயும் பரம்பரைப் பெருமை பேசும் கதைகள்.

ஆம், சாதியிலிருந்து தீண்டாமை வரவில்லை; தீண்டாமை அல்லது பாகுபாட்டிலிருந்துதான் சாதி வருகிறது.  இனி யாரையும் யாரும் இப்படியெல்லாம் தள்ளிவைக்க முடியாது, தன்னை உயர்வான இடத்தில் வைத்துக்கொள்ள முடியாது என்ற நிலை வருமானால், பிறகு அங்கே சாதிப் பெருமைக்கும் இடமில்லை, அதன் பிறகு அங்கே சாதியும் இல்லை. தீண்டாமை இல்லாத, அல்லது ஏற்றத்தாழ்வு இல்லாத சாதி அமைப்பு, செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டு போன்றதுதான்.

இதை முன்வைக்கிறபோது, சாதிய அடுக்கின் தட்டுகளைப் பிடித்துக்கொண்ட சாதிகள் எல்லாமாகச் சேர்ந்து அடித்தட்டுக்கும் கீழே தள்ளப்பட்ட தலித் மக்களை மிதித்துக்கொண்டிருப்பதை, அவர்களுக்குள் பல வேறுபாடுகள் இருப்பினும் தலித்துகளை அவமதிப்பதில் ஒற்றுமையாக இருப்பதை எள்முனையளவும் நான் மறுக்கவில்லை. தலித்துகளுக்கு எதிரான தீண்டாமையையும் மற்ற சாதிகளுக்கிடையேயான உயர்வு-தாழ்வு பாகுபாட்டையும் ஒருபோதும் சமமாகப் பார்க்கவே முடியாது.

சாதியை ஒழித்தால்தான் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்றால், சாதியை எப்படி ஒழிப்பது? சட்டம் போட்டா? அது வரையில் தீண்டாமை அவமதிப்புகள் தொடரலாமா? இந்த இந்த வேலைகளுக்கெனப் பிறப்பெடுத்தவர்கள் என்ற வக்கிரமான விதியைத் தகர்க்கும் சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு நியாயங்கள் தொடர்கிற வரையில், கல்வியிலும் வேலைகளிலும் இட ஒதுக்கீட்டிற்கான தேவைகள் நீடிக்கிற வரையில், அந்தச் சட்ட வாய்ப்புகள் உரியவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக சாதிப் பெயர்கள் கேட்கப்படுவதும் இருக்குமல்லவா?  பள்ளிகளிலேயே சாதிப்பெயர் கேட்கிறார்களே என்று வசனம் பேசுகிற பலரது உள்நோக்கம் இந்த இட ஒதுக்கீட்டுக் கதவை மூடுவதே அல்லவா?

இது பற்றிய ஒரு விவாதத்தின்போது ஒரு சிந்தனையாளர், “இட ஒதுக்கீடு தொடரத்தான் வேண்டும். ஆனால் அதைச் சாதியின் பெயரால் வழங்காமல், இட ஒதுக்கீட்டிற்கு உரிய அத்தனை சமூகங்களையும் ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவரலாம். உதாரணமாக, எஸ்சி என்ற ஒரு அடையாளம் மட்டும் போதும். அவர்களது சாதிப் பெயர் வேண்டாம். எஸ்டி என்ற அடையாளம் மட்டும் போதும். அதே போல் பீ.சி. என்ற அடையாளம் மட்டும் போதும்,” என்றார். அவருடைய நோக்கம் நல்லதுதான் என்று பாராட்டிவிட்டு, “ஆனால், குறிப்பிட்ட சாதியின் பெயரால் அல்லாமல் ஒட்டுமொத்தத்தில் எஸ்சி சமூகங்களை மற்றவர்கள் இழிவாக பார்ப்பது, எஸ்டி சமூகங்களை மற்றவர்கள் ஒதுக்கிவைப்பது, பீ.சி. மக்களைப் பின்னுக்குத் தள்ளுவது ஆகியவை தொடரத்தானே செய்யும்? இதுவே ஒரு சாதி அடையாளமாக மாறிவிடுமே,” என்று கேட்டேன். அவருடைய மௌனத்தில் தொடர்ந்து விவாதிக்க வேண்டியதன் தேவையை உணர்ந்துகொண்ட  புரிதல் வெளிப்பட்டது.

ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்காகக் களமிறங்கி, கழிவுக் குழியில் இனி கால்வைக்க மாட்டோம் என மறுக்க வைப்பதும், ஊருக்குள் பிரித்துக்காட்டும் சாதிச்சுவர்களை உடைக்க வைப்பதும், கோவில் கதவுகளைத் திறக்க வைப்பதும், தேர் வடங்களைப் பிடிக்க வைப்பதும், டீ கடைகளில் இரண்டாவது டம்ளர்களை வீசியெறிய வைப்பதும், வாடகை வீடுகள் கிடைக்க வைப்பதும், காதல் தடையைத் தகர்க்க வைப்பதும், கலப்புத் திருமணம் செய்ய வைப்பதும், ஆணவக் கொலைகளைத் தடுக்க வைப்பதும் சாதியை ஒழிக்க வைப்பதற்கான செயல்பாடுகளே.

சாதி ஒழிப்பு முன்னணி என்று பெயர் வைக்காததை ஏதோ சாதி ஆணவத்துடனான சமரசம் என்பது போல் சாடவும் வேண்டாம்; அப்படித்தானோ என்று தீண்டாமை ஒழிப்பு இயக்கத்துக்கென முன்னிறங்கியவர்கள் மனத்தடை கொள்ளவும் வேண்டாம். இது குறித்த விவாதங்களை நடத்திக்கொண்டே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பயணத்தில் தோள் சேர்ந்து வருகிற விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இயக்கங்கள் நம்பிக்கை தருகின்றன. இன்னொரு பக்கம், சாதி ஒழிப்பு முன்னணி என்று பெயர் சூட்டாததால் இணைந்து வரமாட்டோம் என்று விலகி நிற்கிற அமைப்புகள், சாதிக் கட்டமைப்பைத் தக்கவைக்க (அப்படியொரு உள்நோக்கம் அவர்களுக்கு இல்லை என்ற போதிலும்) உதவுகின்றனவோ என்ற ஐயத்தைத் தருகின்றன.


மறுபடி சொல்கிறேன், இதற்கு உள்நோக்கம் கற்பிக்கப்பட மாட்டாது என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன், இது ஒரு உரத்த சிந்தனைதான். மாற்றுச் சிந்தனைகளை வரவேற்கிறேன். வசவுகளால் அல்ல, விவாதங்களால்தான் சமுதாய மாற்றங்களுக்கான போராட்டங்கள் உருப்பெற்று வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. விவாதிக்கலாம் வாருங்கள்.

No comments: