Saturday, 12 April 2025

பின்னால் இருப்பதே பெண்ணின் பெருமையா?

 


“வெற்றிபெற்ற ஒவ்வோர் ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்.” எப்போது, எங்கே, யாரிடமிருந்து தோன்றியது என்று தெரியாமலே உலகம் முழுவதும் பரவியிருக்கும் “பழமொழி” இது. வாழ்க்கையில் பெண்ணின் இடம் ஆணுக்கு உதவியாக இருப்பது மட்டும்தானா என்ற கேள்விகள் பெண்ணுரிமை இயக்கங்களில் இருந்து சென்ற நூற்றாண்டில் புறப்பட்டது. “தோல்வியடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் ஓர் ஆண் இருக்கிறான்” எனும் “எதிர்–மொழி” கிளம்பியது. பாலின சமத்துவச் சிந்தனை மேலோங்கி வருவதன் பயனாக இப்போது பெருமளவுக்கு அந்தப் பழமொழி பதுங்கிவிட்டது. ஆனாலும், அவ்வப்போது பதுங்கு குழியிலிருந்து  எட்டிப்பார்க்கும். சாதனையாளர்கள் சிலர் தங்களின் வாழ்விணையர்களின் ஒத்துழைப்பைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு பொது நிகழ்வுகளில் இப்படிக் கூறவே செய்கிறார்கள்.  அல்லது அவர்களின் இணையர்களை மேடைக்கு அழைக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இப்படிக் கூறுகிறார்கள்.

 

இன்னொருபுறம், பல குடும்பங்களில், ஆண் எதிர்கொள்ள நேரிடும் கடுமையான கடுமையான சூழ்நிலைகளைத் திறமையாகக் கையாளுவதற்கும் இக்கட்டிலிருந்து விடுபடுவதற்கும் பெண்ணின் அறிவும் அனுபவமும் வழிகாட்டுகின்றன. தனிப்பட்ட உணர்ச்சிப் பிரச்சினைகளில், சொந்தபந்தங்கள் தொடர்பான சிக்கல்களில், ஏன் ஆணின் தொழில் சார்ந்த சவால்களில் கூட  பெண் கைகொடுக்கிறாள். அவள் தாயாக இருக்கலாம், தாரமாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், காதலியாகவும் இருக்கலாம். “வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படுகிறபோதெல்லாம் எங்கள் அம்மா நிதானமா யோசனை சொல்வார், அதன்படி செய்தால் நிலைமை சீராகிவிடும்,” என்று கூறுகிறவர்களைக் காணலாம். “எப்படித்தான் அம்மாவுக்கு வியாபார நுணுக்கமெல்லாம் தெரிகிறதோ,” என்று வியந்து தெய்வமாக வணங்குகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் முன்னரங்கிற்கு வருவார்களானால் எத்தகைய சாகசங்களை நிகழ்த்துவார்கள்! ஒட்டுமொத்த சமுதாயம் எப்படியெல்லாம் பயனடையும்!

அவளுக்கென்று வரும்போது…

ஆனால் அந்தப் பெண்களே எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்று வருகிறபோது அவற்றின் தீவிரம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தள்ளுபடி செய்யப்படுகிறது. தன் பிரச்சனையைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. ஆணின் சுமையில் பாதியையும் தன்னுடைய சுமையை முழுதாகவும் சுமக்கும் சமநிலையற்ற பாதையில் நடப்பது இயல்பாக்கப்படுகிறது.

 

அந்தப் பாதையில் நடப்பதற்கான பயிற்சி சிறுமிகளாக விளையாடும் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. குடும்பத்தின் மூலமாக சமூகம் சிறுமிகளை மற்றவர்கள் பற்றி அக்கறைப்படுகிறவர்களாக இருப்பதற்குத் தயார்ப்படுத்துகிறது. விளையாட்டுப் பொம்மைகளைப் பராமரிப்பது முதல், பெரியவர்களை மதிப்பது வரையில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு செயல்பட அறிவுறுத்துகிறது. தனது சொந்த ஆசைகளையும் ஏக்கங்களையும் கோபங்களையும் கட்டுபபடுத்திக்கொண்டு, மற்றவர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பவளாக ஒவ்வொரு பெண்ணையும் வார்க்கிறது. உடன் பிறந்தவன் முதல், உடன் வாழப்போகிறவன் வரையில் ஆணின் உணர்வுகளைப் பக்குவமாகக் கையாள்வதற்கான நிதானத்தைப் புகட்டுகிறது. மற்றவர்களை மதித்துப் பக்குவமாகக் கையாள்வது ஆண்களுக்கும் தேவைப்படுகிற பண்புதான். ஆனால் பெண்களுக்கு மட்டுமே உரியவையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறுவயதிலிருந்தே, ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருப்பதற்கான பயிற்சி பெற்றவளாக, அதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும் “பக்குவம்” உடையவளாக வளர்கிறாள்.

அழகிய காட்சிதான், ஆனால்…

உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, தனது பொம்மைக்கு வலிக்கும் என்று அதை மெதுவாக எடுத்து வைத்த சிறுமியைக் கண்டேன். சிறிது நேரத்தில்  தொட்டிலில் படுத்திருந்த தம்பிப்பாப்பா அழத் தொடங்கியதும் அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அறைக்குள் சுற்றி வந்தாள். பையன் அழுகையை நிறுத்திக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான். இசைக் கருவிகளை விட இனிமையான அந்தச் சிரிப்பாலியைச் சுவைத்தேன். “தம்பி அழுதான்னா போதும், ஓடிப்போய் தூக்கி வெச்சிக்கிடுவா, அப்பா ஆஃபீசில் இருந்து வர்றப்ப சாக்லெட் வாங்கிட்டு வந்திருக்காரான்னு பாக்கெட்டுல கையை விட்டுத் தேடுவா. ஆனா அவரு மூட் அவுட் ஆகி வந்தாருன்னா தொந்தரவு பண்ண மாட்டா. அவரு அவ மடியிலே தலை வச்சிக்கிடுவாரு,” என்று அம்மாவும் மற்றவர்களும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவள் வெட்கத்தோடு சிரித்தாள்.

 

குடும்பத் தோட்டத்தின் ஓர்  அழகான காட்சி இது என்பதை மறுப்பதற்கில்லை. இதே போல் அந்தத் தம்பிப்பாப்பா வளர்க்கப்படுவானா என்ற கேள்வி மனதில் உதிப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

 

தம்பிப்பாப்பாக்களை சாதிக்கப் பிறந்தவர்களாகப் பார்த்து, சாதிப்பதற்காக சாத்தியமான எல்லா வகைகளிலும் ஊக்குவிக்கிறது சமூகம். அப்படி அவர்கள் சாதிப்பதற்கு அம்மா, அக்கா, தங்கை, அத்தை என அத்தனை பேரும் துணையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது அதே சமூகம். குடும்பப் பெண்ணின் இலக்கணங்களில் ஒன்றாக இது வகுக்கப்பட்டிருக்க, ஒரு மனைவியாகப் பொறுப்பேற்கிறபோது  தன்னியல்பாகவே கணவனின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவளாகிறாள்.

 

இந்த நடைமுறையின் இன்னொரு பக்கமாக, பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே, தனிப்பட்ட முறையில் கையாள்வதற்கும், தீர்த்துக்கொள்வதற்கும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். “எங்க அக்கா எந்தப் பிரச்சினைன்னாலும் அதை மத்தவங்ககிட்ட கொண்டுபோக மாட்டா, அவளே தீர்த்துக்கிடுவா,” என்று அந்தப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. அக்கா என்கிற இடத்தில் பெண்ணின் எந்த உறவு நிலையையும் பொருத்திக்கொள்ளலாம். இந்தப் பயிற்சி, “சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு பொண்ணே” என்று அறிவுரைகளிலிருந்து மட்டுமே கிடைப்பதல்ல. பெண்ணின்பிரச்சினையில் பங்கேற்கவும் துணை நிற்கவும் தீர்வு காணவும் ஆண்கள் யாரும் வரமாட்டார்கள் என்ற நடப்பு நிலைமையிலிருந்தும் கிடைக்கிறது.

பணித்தலங்களிலும்

இந்தக் குடும்பப் பயிற்சி, பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களிலும் தொடர்வதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விதிவிலக்கான சில அலுவலகங்கள், நிறுவனங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களிலும் சக ஆண்களுக்கு ஆதரவாக மட்டுமே இருக்கிறார்கள் பெண்கள். வளாகத்திற்கு உள்ளேயே உயர் பதவிக்கும், தலைமைத் தகுதிக்குமான போட்டி என்று வருகிறபோது, தாங்களும் களத்தில் நிற்பவர்களாக இல்லாமல், மோதிடும் ஆண்களின் “பின்னால்” நிற்க வேண்டியவர்களாகவே பெண்களின் அலுவலகச் சூழல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

 

வேலை முடிந்து வீடு திரும்பியதும், குழந்தைகளையும் பெரியவர்களையும் கவனித்துக்கொள்வது உட்பட அத்தனை சுமைகளையும் “முன்னால்” நின்று சுமப்பவர்களாக, “அந்நியன்” திரைப்படக் கதாநாயகன் போல “ஸ்பிளிட் பெர்சனாலிட்டி” ஆகிவிடுவார்கள்.

 

பொது மேடைகளில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் ஆண்களுக்கு அணிவிப்பதற்கான பொன்னாடைகளைத் தாம்பாளங்களில் வைத்து பட்டுப் புடவை கட்டி நளினமாக நடந்து வந்து, அணிவிக்கிற ஆண்களிடம் நீட்டுகிற ”பொறுப்பு” மட்டும்தானே வெகுகாலமாகப் பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது? இடதுசாரி இயக்கங்களும் அவை சார்ந்த அமைப்புகளும்தான் இந்த ஏற்றத்தாழ்வை விரைவிலேயே புரிந்துகொண்டு, பெண்களும் சிறப்பு விருந்தினர்களாக, மேடையில் தலைமை தாங்குவோராகப் பங்கேற்கச் செய்கிற மாற்றத்தைக் கொண்டுவந்தன. அவற்றிலேயே கூட பல இடங்களில் இந்த மாற்றம் தேவைப்படுகின்றது என்கிறபோது, பிற இயக்கங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

இவையெல்லாம் கூட, குடும்பத்தோடு இருந்தாலும், கூட்டத்தில் கலந்திருந்தாலும் தனிமையை உணர்கிற மனநலச் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன. ஆனால் மாணவர்களாக, தொழிலாளர்களாக, அதிகாரிகளாக, தலைவர்களாக ஆண்களின் தனிமை உணர்வு பற்றிப் பேசப்படும் அளவுக்குப் பெண்களின் நிலைமைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா? தனிமை என்கிறபோது, கொரோனா காலம் நினைவுக்கு வருகிறது. அப்போது, தனிமைப்படுத்திக்கொண்டும், வீட்டிலேயே இருந்துகொண்டும் பணியாற்ற வேண்டியிருந்த ஆண்களின் மனச்சிக்கல் பற்றியும், அதன் விளைவாக அவர்கள் எதிர்கொண்ட மன உளைச்சல்கள் பற்றியும் நிறையப் பேசப்பட்டன, எழுதப்பட்டன. அதே காலக்கட்டத்தில் பெண்களின் துயரங்கள் பற்றிய பதிவுகள்  குறைவாகவே வந்தன.  அந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், வீட்டிலேயே ஆண்கள் இருக்க நேர்ந்த கட்டாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன.

 

இவ்வாறு மற்றவர்களின், முக்கியமாக ஆண்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்து தீர்வு காண்கிற இடத்தில் வைக்கப்படுவதே கூட பெண்களின் மனச்சிக்கல்கள் அதிகரிப்பதற்கு இட்டுச்செல்கிறது.

மன முடிச்சு

கே. பாலச்சந்தர் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில் கதாநாயகன் தன் சேட்டைகளை உடன் பணியாற்றுகிற ஒரு மூத்த ஊழியரிடம் தினமும்  சொல்வான். அதையெல்லாம் கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்தில் அவர் மனநோயாளி போலப் புலம்பத் தொடங்குவார் அது நகைச்சுவைக் காட்சியாகக் கடந்து போனது. ஆனால், வீடுகளில் ஆண்களின் சிக்கல்களை அவிழ்த்து அவிழ்த்தே மனச்சிக்கல் முடிச்சுகளில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் ஏராளம். இந்தத் துயரங்களை அவர்கள் வெளியே பேசினாலோ, ஆறுதலான அரவணைப்புகளுக்கு மாறாக, “இவளுக்கு இதே வேலையாப் போச்சு,” என்ற விமர்சன அடிகள்தான் விழும்.

 

இப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பதை எடுத்துச் சொன்னால் குடும்ப இணக்கத்தையும் அமைதியையும் குலைப்பதாகப் பாய்வார்கள். சில பெண்களின் மூலமாகவே கூட அந்தக் குற்றச்சாட்டுகள் கூற வைக்கப்படும். ஆனால், குடும்ப நலன் கருதியே, புறக்கணிப்புகள் இல்லாத நல்லிணக்கத்தை வளர்க்கவே, சமத்துவமே அழகு என்ற உண்மையை உணர்த்தவே இத்தகைய  பகிர்வுகள்.

 

இது தொடர்பாக வெளியான ஒரு கட்டுரையை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கிற வாய்ப்புக் கிடைத்தது. அதில் நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் மதிக்கவும் பொறுப்போடு துணையிருக்கவும் சிறுவயதிலிருந்தே ஆணுக்குக் கற்பிக்க வேண்டும்  என்றார் ஒருவர். வீட்டிலும் பள்ளியிலும் அந்தக் கற்பிப்பு நடைபெற வேண்டும் என்றார் அவர். “பொண்ணா லட்சணமா பொறுப்பா நடந்துக்க” என்ற வசனம் மறக்கப்பட வேண்டும், பெண்ணின் உடல் சார்ந்த உரிமைகள் குறித்த புரிதல் அனைத்து மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மற்றொரு பங்கேற்பாளர் கூறினார். பெண்களின் பிரச்சனைகள் என்று ஒதுக்காமல் குடும்பத்தின், சமூகத்தின் பிரச்சனைகள் என்று தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் இன்னொருவர்.  பெண்களின் பணிச்சுமைகளை, பரிவுணர்வின் அடிப்படையில் அல்லாமல் சமவுணர்வின் அடிப்படையில் பகிர்ந்துகொள்ள ஆண்களைப் பழக்க வேண்டும், தனது வெற்றிக்குப் பின்னால் இருப்பவளாகவே பெண்ணை வைத்திருப்பது குறித்த சுயவிமர்சனப் பார்வை ஆணுக்குள் பதியமிடப்பட வேண்டும் என்ற ஆலோகனைகளும் முன்வைக்கப்பட்டன. இவற்றைக் கூறியவர்களில் ஆண்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணா, பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணா என்ற பட்டிமன்றங்கள் தேவையில்லை.  இருவரது வெற்றிக்கும் இருவரும் இருக்கிறார்கள் –பின்னாலோ முன்னாலோ இல்லை, சமமாக என்ற நிலையை உலகம் நிலைப்படுத்தட்டும். அந்த உலகம் அழகாக இருக்கும்.

[O]

மகளிர் சிந்தனைஏப்ரல் 2025 இதழில் எனது கட்டுரை


No comments: