இந்தியாவின் ஈடற்ற இழிவாக சாதிப் பாகுபாடு இருக்கிறது. அதை ஒழித்துக்கட்டுவது என்பது சில தலைவர்களின் முழக்கமும், இயக்கங்களின் கொள்கையும் மட்டுமல்ல... நாட்டின் சட்டங்களுக்கெல்லாம் அடிவாரமாகிய அரசமைப்பு சாசனத்தின் ஒரு மையமான லட்சியமுமாக அது இருக்கிறது. அதை அடைவதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள ஒட்டுமொத்தப் பயணத்தில் நீதித்துறையின் செயல்பாடு தலையாய ஒன்று.
சாதியக் கட்டமைப்பில் பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் நீதிமன்றங்கள் பல முன்னுதாரணத் தீர்ப்புகளை அளித்திருக்கின்றன. பல வழக்குகளில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான ஆணைகளையும் நீதிமன்றங்கள் பிறப்பித்திருக்கின்றன. இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
பி.ஆர்.கவாயின் சிறந்த பணி!
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில், எவரும் எடுத்துப் படிக்கத்தக்க வகையில், நவம்பர் 2025 ஆவணங்களில் ஒன்றாக இந்த அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றங்களில் சாதி பற்றிய கருத்துகள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்று அந்த அறிக்கை ஆராய்கிறது. இனி என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் அது முன்வைக்கிறது. தலைமை நீதிபதியாக இருந்த பூஷன் ராமகிருஷ்ண கவாய் பணி ஓய்வுபெறுவதற்கு முன் மேற்கொண்ட ஆகச் சிறந்த ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் ‘ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம்’ (சி.ஆர்.பி) இந்த அறிக்கையைத் தயாரித்திருக்கிறது.
1) நீதித்துறையின் சேவைகளில் தொடரும் சாதி சார்ந்த, காலனியாதிக்கக் கால பதவிப் படிநிலைகளுக்கு மாற்றாக, கண்ணியத்தை உறுதிப்படுத்தும் நடுநிலையான சொற்களால் அடையாளப்படுத்துதல்.
2) நீதித்துறையின் சாதி குறித்த கருத்தாக்கங்கள்.
3) பூர்வகுடி மக்களின் உரிமைகளுக்கான வழிகாட்டி.
4) உயர் நீதிமன்றங்களிலும் மாவட்ட நீதிமன்றங்களிலும் சட்ட ஆராய்ச்சியாளர்களை நியமித்தல்.
5) நீதிமன்ற எழுத்தர்களுக்கும் ஆராய்ச்சி உதவியாளர்களுக்குமான கையேடு.
6) பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு தொடர்பான வெள்ளையறிக்கை.
7) செயற்கை நுண்ணறிவு பயன்பாடும் நீதிமன்றச் செயல்பாடும் குறித்த வெள்ளையறிக்கை.
8) சட்ட உதவிப் பாதுகாப்புக் குழுக்களுக்கான பயிற்சிமுறைத் தொகுப்பு.
9) சிறைச்சாலைகளில் மனித உரிமை அடிப்படையிலான சீரமைப்புகளுக்கான வரைபடம்.
10) குழந்தை உரிமைகளும் சட்டங்களும் பற்றிய கையேடு. இப்படியாக, பத்து சி.ஆர்.பி அறிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சாதி, தகுதி, சமத்துவம்!
பொதுவாக, நீதித்துறையில் சமூகநீதி எந்த அளவுக்குச் செயல்படுகிறது என்ற கேள்வி நெடுங்காலமாகத் தொடர்கிறது. உயர்சாதி என்பதாகக் கூறிக்கொள்ளும் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே உயர்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளாவது ஏன் என்று கேட்கப்பட்டு வந்திருக்கிறது. மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகள் மாநில அரசுகளின் தேர்வாணையங்கள் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவதாலும், அங்கெல்லாம் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருப்பதாலும், அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம் ஒப்பீட்டளவில் உறுதியாகியிருக்கிறது.
தலைமை நீதிபதி பொறுப்பில் பி.ஆர். கவாய் இருந்த ஆறு மாத காலத்தில், பட்டியல் சாதிகளைச் சேர்ந்த 10 பேர், பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த 11 பேர் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டார்கள். அவரே, புத்த மதம் சார்ந்த தலித் சமூகத்திலிருந்து முதல் முறையாகத் தலைமை நீதிபதியானவர்தான். அவர் தலைமையிலான தேர்வுக் குழாம் (கொலீஜியம்) 129 பேர்களைப் பரிந்துரைத்தது. அவர்களில் 15 பெண்கள், 13 சிறுபான்மை மதத்தினர் உட்பட 93 பேர் நியமனம் பெற்றார்கள். மற்றவர்கள் ‘உயர்’ பிரிவினர்தான் என்றாலும், இதுவொரு குறிப்பிடத்தக்க முன் நகர்வேயாகும்.
இத்தகைய பின்னணியில்தான், நீதித்துறையின் கண்ணோட்டங்களிலும் செயல்முறைகளிலும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக, ‘நீதித்துறையின் சாதி குறித்த கருத்தாக்கங்கள்’ பற்றிய அறிக்கை வந்திருக்கிறது.
சி.ஆர்.பி இயக்குநர் அனுராக் பாஸ்கர், மெல்போர்ன் சட்டக் கல்லூரி பேராசிரியர் ஃபர்ரா அஹமது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்சியாளர் பீம்ராஜ் முத்து, மையத்தின் ஆலோசகர் சுபம் குமார் ஆகிய நான்கு பேர் கொண்ட குழு இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது.
இந்தக் கருப்பொருளில் உச்ச நீதிமன்றக் குழுவின் ஆய்வறிக்கை வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக உச்ச நீதிமன்றம் வழங்கி வந்துள்ள அரசமைப்பு சாசனம் சார்ந்த தீர்ப்புகளில் சாதி, தகுதி, சமத்துவம் ஆகியவை குறித்து மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாடுகளை இந்த அறிக்கை ஆராய்கிறது. 63 பக்கங்களில் குழுவினர் சுட்டிக்காட்டுகிற சில முக்கியமான காட்சிகளைக் காண்போம்.
நீ
திமன்றத்தில் முரண்பாடான மொழி பயன்படுத்தப்படுவதையும், சமூக முத்திரை குத்தப்படுவதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல தீர்ப்புகள், பாகுபாடுகள் மலிந்த சமுதாயத்தின் உண்மை நிலையைப் பிரதிபலித்துள்ளன. அவற்றை மாற்றுவதற்கான உந்துதலை அளித்துள்ளன. அதே வேளையில் பல தீர்ப்புகள், சாதியமைப்பு பற்றி எழுதப்பட்ட பழைய சாத்திரங்களும் பாரம்பர்யமான கதைகளும் சொல்கிற விதிகளை எதிரொலிப்பதாகவும் இருந்திருக்கின்றன என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
தவறான சொல்லாடல்கள்!
சில நீதிபதிகள், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பற்றிக் கூறுகிறபோது, ஏற்கெனவே சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிற கருத்துகளைப் படியெடுப்பது போலத் தாங்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். சமத்துவம் பற்றிய போதிய புரிதல் இல்லாமல், தவறான சொல்லாடல்களை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான முயற்சியில் ஒரு சட்டபூர்வ உரிமையாகிய இட ஒதுக்கீடு பற்றிக் கூறும்போது, அதனை ஓர் “ஊன்றுகோல்” என்று வர்ணித்திருக்கிறார்கள். இந்த மேலோட்டமான வர்ணனை, இட ஒதுக்கீடு நியாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. அந்த மக்களுக்கு ஒரு பரிவான ஏற்பாடு என மற்ற சமூகங்களின் பெருந்தன்மை போல முன்வைக்கிறது. சம உரிமை என்ற அரசமைப்பு சாசனக் கோட்பாட்டோடு பொருந்தாத சித்தரிப்பு இது.
அதே போல, இட ஒதுக்கீடு தேவைப்படுகிற பிற்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட, பழங்குடி சமூகங்களை விளையாட்டு மைதானத்தின் ஓட்டக் களத்தில் ஓடுகிறவர்களோடு ஒப்பிடும் வார்த்தைகளையும் நீதிபதிகள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஓட்டத்தில் பின்தங்கிய, ஊனமுற்றோரைப் போன்றவர்கள் என்று சித்தரித்திருக்கிறார்கள். அவர்கள் மீதான பரிவோடு பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக இது ஒலிக்கிறது. ஆனால், மாற்றுத் திறனாளிகளை மற்றவர்களோடு ஓட வைத்தது யார், அல்லது எது?
காலங்காலமாக முயல் – ஆமை ஓட்டப் போட்டிக் கதையைச் சொல்லி வருகிறோம். ஆனால், கதையின் கருத்து வேறு என்றாலும், ஆமையையும் முயலையும் ஒரே தளத்தில் ஓட வைத்தது சரியா என்ற கேள்வி அண்மைக் காலமாக ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அது ஈசாப் கதைகளில் ஒன்று என்பதால், அதை மாற்ற முடியாதுதான். ஆனால், மாறிவரும் சமுதாயத்தில் அந்தக் கதையும் மறுவாசிப்புக்கு உட்பட்டுதானே ஆக வேண்டும்? நீதிமன்றமும் மறுவாசிப்பு செய்யத்தானே வேண்டும்?
ஆகவேதான், ஆய்வுக் குழுவினர் இப்படிப்பட்ட சொல்லாடல்கள் பயன்படுத்தப்படுவதை, இழிவுபடுத்தி முத்திரை குத்தும் செயல் என்று விமர்சித்திருக்கின்றனர். ‘நீதிமன்றத்தின் இந்த மொழி, இடஒதுக்கீட்டாலும் பிற சமூக நீதி நடவடிக்கைகளின் மூலமாகவும் இழிவை நீக்குவதற்கு மாறாக, அதைத் தற்செயலாக மீண்டும் உருவாக்கிவிட்டது’ என்று அறிக்கை வாதிடுகிறது.
‘தகுதி’ என்ற மாயக் கருத்து!
சமூகநீதி தொடர்பான சில வழக்குகளில், ‘தகுதி’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது. அது பெரும்பாலும் வரலாறு நெடுகிலும் சாதி அடிப்படையில் சமத்துவம் மறுக்கப்பட்டு வந்திருப்பதைக் கண்டுகொள்ளத் தவறுகிறது. அத்துடன், சாதிப் பாகுபாடுகளின் தாக்கத்தைப் புறக்கணிக்கும் வகையிலும் தகுதி வரையறுக்கப்பட்டிருக்கிறது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நீதிமன்றம் தனது தொடக்க காலத் தீர்ப்புகளில், சாதியைத் தொழில்களோடு தொடர்புபடுத்தப்பட்ட, இழிவுபடுத்துவதோடு இணைக்கப்பட்ட, பிடிவாதமாகத் தொடர்கிற, பரம்பரை சார்ந்த அமைப்பு என்று அங்கீகரித்திருக்கிறது. இருப்பினும், பிற்காலத்தில், ’தகுதி’ என்ற கருத்து ஆதிக்கம் செலுத்த அனுமதித்த செயல், இடஒதுக்கீடு கோட்பாட்டின் அழுத்தத்தை நீர்த்துப்போகச் செய்தது என்று அறிக்கை கூறுகிறது.
இன்றளவும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் ‘தகுதி’ என்ற மாயக் கருத்தைத்தான் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். அவர்களிடமிருந்து இந்தத் தகுதி மயக்க வாதம் நீதிமன்றத்திற்குள் நுழைந்ததா அல்லது, அங்கேயிருந்து வெளியே வந்து இவர்களிடம் சேர்ந்ததா?
சென்னை உயர்நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்திற்கு வந்த ஒரு வழக்கு குறிப்பிடத்தக்கது. டாக்டர் சுபாஷ் காசிநாத் மகாஜன் எதிர் மகாராஷ்டிரா அரசு என்ற அந்த வழக்கில், 2018 மார்ச் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பட்டியல் சாதியினர் – பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அந்தத் தீர்ப்பு அமைந்தது.
குறிப்பாக, புகார் செய்யப்பட்டவர் அரசாங்க அலுவலராக இருப்பாரானால், அவர்களது துறை சார்ந்த உயரதிகாரிகளின் முன் அனுமதி பெற்றுத்தான் கைது செய்ய வேண்டும் என்று அந்தத் தீர்ப்பு கூறியது. சாதிய ஒடுக்குமுறை தொடர்பான வன்கொடுமை வழக்குகளில் சரியான தீர்ப்புக்கு உதவியாக இருப்பதே, குற்றம் சாட்டப்பட்டவர்களை யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் உடனடியாகக் கைது செய்யலாம் என்ற விதிதான்.
மேற்படி தீர்ப்பு, சட்டத்தின் நோக்கத்தையே முனை மழுங்கடிப்பதாக இருக்கிறது என்று தலித் அமைப்புகளும் பழங்குடியினர் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. பல்வேறு அரசியல் கட்சிகளும் அந்த எதிர்ப்பில் இணைந்தன. நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் ஒன்றியத்தின் நரேந்திர மோடி அரசு இறங்கி வந்தது. அதே ஆண்டு ஆகஸ்ட்டில் நாடாளுமன்றம் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற, உடனடிக் கைதுக்கான விதி மீட்டெடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது.
எம்.ஆர். பாலாஜி எதிர் மைசூர் மாநில அரசு என்ற வழக்கும் (1963) குறிப்பிடத்தக்கது. அன்றைய மைசூர் அரசு (1973 முதல் கர்நாடக அரசு) கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறிவித்தது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட அந்த வழக்கில், இட ஒதுக்கீட்டிற்கு சாதியை மட்டுமே ஒரு அடிப்படையாக வைத்துக்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுவும் கடும் விமர்சனங்களுக்கும், சமூகநீதிக் கொள்கையில் நீதித்துறை நிலைப்பாடு பற்றிய விவாதங்களுக்கும் இட்டுச்சென்றது.
பின்னாளில் இந்திரா சஹானி வழக்கில் (1992) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டப்படி செல்லும் என்று நிலைநிறுத்தப்பட்டது. அதே வேளையில், இட ஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இவ்வாறு 50 சதவிகிதம் என்று அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான வரம்பை நிர்ணயித்தது தவறு, பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கூடுதலாக இருக்கும் மாநிலங்களில் இந்த வரம்பை உயர்த்துவதற்கு ஏற்ப தீர்ப்பு திருத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் இப்போதும் தொடர்கிறது.
தமிழ்நாட்டின் 69 சதவிகிதம்!
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டின் மொத்த அளவை 69 சதவிகிதம் வரையில் உயர்த்தி 1994-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசால் ஆணை வெளியிடப்பட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றம் தனது முந்தைய ஆணையை விலக்கிக்கொள்ளாத நிலையில், அதே ஆண்டில் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்த, நாடாளுமன்றம் நிறைவேற்றிய 76-வது சட்டத் திருத்தத்தின் மூலம் தமிழ்நாட்டின் 69 சதவிகித இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.
1992-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் ஒன்றைத் தடுத்து நிறுத்திய சமூக சேவகி பன்வாரி தேவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ‘மேல் தட்டினர்’ என்பதால், அப்படிப்பட்ட குற்றத்தை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று கூறி ஜெய்ப்பூர் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இன்றளவும் அந்தப் பெண் நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட சமூக அநீதி அத்தியாயங்களும் நிறைய இருக்கின்றன.
சாதியப் பாறையில் உளிகளாய்..!
இந்த அறிக்கை, எதிர்காலத்தில் நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய, மாற்றத்திற்கான சில முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது. சாதி தொடர்பான வழக்குகளைக் கையாளும்போது உணர்திறன் மிக்க, நிதானமான பதங்களைக் கையாள வேண்டும்; தரம் தாழ்த்தும் உருவகங்களைக் கையாளக் கூடாது; இந்தியச் சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்குத் தடைக்கல்லாக, ஒரு நீடித்த பிரச்னையாக சாதி இருப்பதை நீதிமன்றங்கள் அங்கீகரிக்க வேண்டும்; சமூகநீதி நடவடிக்கைகளின் கட்டாயத் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டும்; நீதிமன்றம் தனது சொந்த சொற்களஞ்சியத்தை ஆராய்ந்து சமூகநீதிக்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் – ஆகியவை குறிப்பிடத்தக்க பரிந்துரைகளாகும்.
இந்தியாவின் சாதிய இறுக்கத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் நீதிமன்றச் சூழலில், உச்ச நீதிமன்றம் வெளிப்படையாகப் பதிவு செய்துள்ள அதன் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தின் சாதியக் கருத்தாக்கங்கள் பற்றிய அறிக்கை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. சனாதனத்துக்கு எதிரானவர் என்று நீதிமன்றத்துக்கு உள்ளேயே காலணி வீசப்பட்டவரான தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், பணி ஓய்வுக்கு முன், சாதியத்துக்கு எதிரான இந்த அறிக்கை அப்படியே நின்றுவிடக்கூடாது என்ற அக்கறையுடன், அதன் அடிப்படையில் அணுகுமுறைகளை மேற்கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
அரசியல், சமூகநீதி இயக்கங்களும் இதைக் கையில் எடுப்பார்கள், எடுக்க வேண்டும். நீதிக்களத்தில் ஏற்படக்கூடிய அசைவுகள் அடிப்படையான சமுதாய மாற்றத்திற்கு, சாதியப் பாறையில் உளிகளைப் பாய்ச்சுவதற்கு உதவியாக அமையும், அமைய வேண்டும்!
[0]
‘விகடன் ப்ளஸ்’ (நவ.25) பதிப்பில் எனது கட்டுரை
No comments:
Post a Comment