Sunday 2 June 2013

தமிழர்கள் எங்கேயிருந்து வந்தார்கள்?

புத்தக அறிமுகம்

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடி,” என்று மிகைப்பெருமை உணர்வோடு சொல்லப்படுவதுண்டு. அறிவியல்பூர்வமாகச் சிந்தித்தால் கல்லும் மண்ணும் தோன்றாமல் தமிழர் குடி எங்கே தோன்றியிருக்க முடியும், எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்ற கேள்வி எழும். தமிழர் இனம் தமிழகத்திலேயே தோன்றிய தொல்குடிதான் என்று சொல்வதற்காக இவ்வாறு மிகைபடக் குறிப்பிடுவதில் குறைகாணலாமா என்று சிலர் கேட்கிறார்கள். இன்று நாம் தமிழ் மண் என்று அடையாளப்படுத்துகிற இடங்களில் வாழ்கிற மக்களின் தொன்மைக்கால மூதாதையர்கள் முன்பு வேறு எங்கிருந்தோ வந்தவர்கள்தான் என்ற புரிதல் அறிவியல்பூர்வமானது. இதை ஒப்புக்கொள்கிறவர்களிடையே அந்தப் பூர்வீக இடம் எது என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஒரு பகுதியினர் தற்போதைய குமரிமுனைக்குத் தெற்கில் நீண்டதொரு நிலப்பகுதி இருந்ததாகக்கூறி அதற்கு லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்றெல்லாம் பெயர் சூட்டினர். அந்த நிலப்பரப்புகளைக் கடல்கொண்டுவிட்டதாகவும் கூறினர். ஆயினும் அந்தக் கருத்துகளில் இனப்பெருமை உணர்வுகள் இருந்த அளவுக்கு அறிவியல் அணுகுமுறைகள் இருந்ததில்லை.

அதே போல் சிந்துசமவெளி நாகரிகம் பற்றிய பேச்சுகளிலும் அங்கே திராவிடர்களின் தொன்மை அடையாளங்கள் இருப்பது பற்றி சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அதை வைத்து அக்காலத்திய தமிழ் மக்கள்தான் இங்கிருந்து அங்கே சென்று அந்த நாகரிகத்தைக் கட்டினார்கள், பின்னர் எதிரிகளின் தாக்குதலால் அழிந்தார்கள் என்று சொல்வோரும் உண்டு. அந்த முயற்சிகளும் ஊகங்களாக இருந்ததேயன்றி அறிவியல் கண்ணோட்டமாக வெளிப்பட்டதில்லை. பொதுவாகவே தமிழர் கதைகளைப் பதிவு செய்வதில் வரலாற்றுப் பார்வையும் அறிவியல் கண்ணோட்டமும் தவறவிடப்படுகின்றன என்ற விமர்சனங்கள் உண்டு. அந்தக் குறையை நீக்கும் வகையில் பொறியியலாளர் பா. பிரபாகரன் எழுதியுள்ள புத்தகம்தான் ‘குமரிக்காண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்.’

லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய கருத்தாக்கங்கள் பழங்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களைச் சார்ந்தே வலியுறுத்தப்படுகின்றன. வரலாற்று ஆதாரங்களோ அறிவியல் தடயங்களோ இல்லாத அந்தக் கருத்தாக்கங்கள் வெறும் கற்பனையே என்பதை அதே இலக்கியங்களின் துணையோடும், பகுத்தறிவு வாதத்தின் வலுவோடும் நிலைநாட்டுகிறார் பிரபாகரன்.
“... தமிழர்கள் தோன்றிய இடம் எது? இந்தக் காலகட்டம் வரையில் நம்மால் விடை சொல்ல முடியவில்லை. மீண்டும் முன்னேறிச்செல்ல முடியாத ஒருவழிப் பாதையில் வந்ததைப் போல் உணர்கிறோம். இதற்குக் காரணம் என்ன? இதுவரை நிகழ்ந்த அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம் தமிழர்களின் தாய்நாடு கடலில் மூழ்கியதாக நாம் நம்பியதுதான். கடல் சீற்றத்தால் ஏற்பட்ட ஒரு பேரழிவை நமது இலக்கியங்கள் கடல்கொண்டதாக உயர்வு நவிற்சியாகக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு அல்லாமல் தமிழர்களின் தாய்நாடு என்பது கடலுக்குள் மூழ்கவில்லை, மாறாக ஏதோ ஒரு காரணத்துக்காக மக்களால் கைவிடப்பட்ட இடம் என்று வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் ஒரு ஒளிக்கீற்று தென்படுகிறது,” என்கிறார்.

ஏற்கெனவே புத்தியில் அடைத்துவைத்திருக்கிற நம்பிக்கைகளை அகற்றினால் அந்த ஒளிக்கீற்று பெரும் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
அந்த வெளிச்சத்தில் பளிச்செனத் தெரிகிறது சுமேரியம். தற்போது இராக், ஈரான் என்று அழைக்கப்படுகிற, பைபிள் காலத்தில் பாபிலோனியா என்றும் அதற்கு முன்பு மெசபடோமியா என்றும் அழைக்கப்பட்ட பகுதிக்கு அதற்கும் முன்பாக இருந்த பெயர் சுமேரியம். உலகில் மனித உழைப்பு சார்ந்த இயக்கத்தில் நடைபெற்ற முதல் புரட்சி விவசாயப் புரட்சி. ஒரு கைப்பிடி விதை நெல்லைத் தூவினால் அது பெருங்குவியலாய் நெல்மணிகளைத் தரும் என்ற இயற்கை உண்மையைக் கண்டுபிடித்ததுதான் விவசாயப் புரட்சி. இனி உணவைத் தேடி காடுகாடாகச் செல்ல வேண்டியதில்லை, இருந்த இடத்திலேயே உணவை விளைவிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், அவ்வாறு இருந்துகொண்ட இடங்கள் ஊர்களாகவும் நகரங்களாகவும் வளர்ச்சியடைந்தன.

புவியில் விவசாயப் புரட்சி முதலில் நடந்த இடம் சுமேரியம். அதற்குக் காரணம் அங்கு பாயும் இரண்டு நதிகள். குறிப்பாகக் குறைவான வேகத்தில் பாயும்  யூபிரிடிஸ் நதி (தமிழ் இலக்கியத்தில் பஃறுளி ஆறு) கொண்டுவந்து கரையில் சேர்ந்த வளமான வண்டல் மண். இந்தப் பின்னணியில் அங்கு விவசாயப் புரட்சி நடந்தது பொ.யு.மு. 8000 ஆண்டு... (வரலாற்றுக்காலத்தை கி.மு., கி.பி. என்று குறிப்பதற்கு பதிலாக இன்று பொது யுகத்துக்கு முன், (பிஃபோர் காமன் எரா) பொது யுகம் (காமன் எரா) என்று வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதையொட்டி பிரபாகரனும் பொ.யு.மு, என்று குறிப்பிடுகிறார்.)

விவசாயப் புரட்சியின் இன்னொரு விளைவு, மனிதர்கள் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிந்தது, கிளைத்தொழில்கள் வளர்ந்தன. கலைகள் பிறந்தன. எழுத்து உருவானது. இலக்கியம் உருவெடுத்தது. தங்கள் எண்ணங்களையும் எண்ணற்ற தகவல்களையும் அவர்கள் களிமண் ஓடுகளில் எழுத்தாகப் பெருமிதத்துடன் பதித்து வைத்தார்கள். அன்றைய சுமேரிய மக்கள் உருவாக்கிய நகரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மன்னர்களின் தனித்தனி நாடுகளாக இருந்தன. அந்த நாடுகளுக்குள் போர்களும் நிகழ்ந்தன!

சிறப்பான நாகரிகத்தை அங்கே கட்டியவர்கள் பிறகு எதற்காக அந்த இடத்தைக் கைவிட்டு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதிக்கு வந்தார்கள்? அங்கே ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பு போன்ற ஒரு இயற்கைச் சீற்றம்தான் காரணம். அவர்கள் எதற்காக இங்கே வர வேண்டும்? நீண்டகாலமாவே சுமேரிய மக்களின் கனவுத் தலமாக இருந்து வந்த இடம் தில்முன். இயற்கை வளங்கள் கொழித்த, யானைத்தந்தங்கள் செழிப்பாகக் கிடைத்த, கதகதப்பும் குளுமையும் எழிலும் மிகுந்த இடம் அது. அங்கே சென்று வருவது என்பது சுமேரிய இலக்கியங்களில் பதிவாகியிருக்கிற சாதனைப் பயணம். அந்த தில்முன்தான் இன்றைய கேரளம் உள்ளிட்ட அன்றைய தமிழகம்!

தங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வளத்தையும் வழங்கக்கூடிய தமிழகத்தில் குடியேறக் கப்பல்களில் புறப்பட்டார்கள். கடல் வழி கப்பலில் வந்ததால் குறைவான பொருட்களையே கொண்டுவர முடிந்தது - இலக்கியச் சான்றுகளான ஓடுகள் உட்பட. இந்தத் தகவல்களுக்கு முன்பாக சுமேரியத்தில் எப்படி படகு செய்தலும் கப்பல் கட்டுதலும் வளர்ந்தன என்பதற்கான இயற்கை வளம் சார்ந்த செய்திகளை நூலாசிரியர் கொடுத்துவிடுவதால் தில்முன் பயணம் கற்பனையானது அல்ல என்ற உறுதி நமக்கு ஏற்படுகிறது.

ஒரு பகுதி மக்கள் தரைவழியாகவும் புறப்பட்டார்கள். அவர்கள் சென்றடைந்த இடம்தான் சிந்துசமவெளி. அங்கே குடியேறிய மக்களின் பண்பாட்டு அடையாளங்களுக்கும் தமிழகத்தில் குடியேறியவர்களுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பினும் அதைவிட மிகுதியான வேறுபாடுகள் இருப்பது ஏன்? கடல் வழி புறப்பட்டவர்கள் நேரடியாக இலக்கை வந்தடைந்தார்கள். தரைவழி புறப்பட்டவர்கள் இயல்பாகவே ஆங்காங்கே தங்கினார்கள். அப்படித் தங்கியது என்பது ஆண்டுக்கணக்கில், தலைமுறைக் கணக்கில் கூட நடந்திருக்கிறது. எனவே அந்தந்தப் பகுதிகளின் பண்பாட்டுத் தாக்கங்களோடு இறுதியில் இலக்கைச் சென்றடைந்தார்கள். சொல்லப்போனால் ஆரியர்கள் என்பவர்கள் கூட சுமேரியத்திலிருந்து வந்தவர்களே! திராவிடர், ஆரியர் இரு இனத்தாருக்கும் தாய்மடி ஒன்றேதான் என்பது ஒரு துணிச்சலான வாதம்.

இதையெல்லாம் உடலமைப்பு சார்ந்த மானுடவியல், புவியியல், மொழியியல், இலக்கியம், புராணக் கதைகள், வழிபாட்டு முறை ஒற்றுமைகள், கல்வெட்டுகள், கட்டடக் கலை, நடைமுறை எடுத்துக்காட்டுகள் என பல கோணங்களில் முன்வைத்து நிறுவியிருப்பது இந்நூலின் சிறப்பு. எளிய நடையில், ஒரு வரலாற்று நாவலுக்கான விறுவிறுப்போடு சொல்லியிருப்பது கூடுதல் சிறப்பு.

சுமேரியாவில் இருந்த ‘எரிது’ நகரம்தான் மூல ‘மதுரை!’ தனித்து இயங்க வல்லது என்ற பொருள்தரும் ‘தமி’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து வந்தது தமிழ் என்ற சொல்! இத்தகைய வாதங்கள் சுவையும் கனமும் சேர்க்கின்றன.

சில வாதங்களோடு சிலர் முரண்படலாம். ஆனால், அறிவியல்பூர்வமான தர்க்கவியல் பார்வையை எதிர்பார்ப்பவர்கள் அப்படிப்பட்ட உழைப்பின் பலனாய் இந்தப் புத்தகம் பூத்திருப்பதை மறுக்க மாட்டார்கள். துறைமுக அதிகாரியாய்ப் பணியாற்றிய அனுபவம் இந்த எந்திரவியல் பொறியியலாளரின் முயற்சிக்குத் துணைசெய்திருக்கிறது.

இனம் தொடர்பான மிகைப்பெருமை, தாழ்வு மனப்பான்மை இரண்டுமே முன்னேறும் கால்களுக்குத் தளை போடுகிறவைதான். அந்தத் தளைகளில் சிக்காமல் இருக்க இனத்தின் தொன்மை குறித்த உண்மை வரலாறு ஒவ்வொருவருக்கும் தெரிந்தாக வேண்டும். அதை நோக்கி நடைபோடத் துணை செய்யும் சிறிய ஒளிக்கீற்றுதான் இந்தப் புத்தகம்.

‘குமரிக்கண்டமா சுமேரியமா? - தமிழரின் தோற்றமும் பரவலும்’
-பா. பிரபாகரன்
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்,
177/103, முதல் தளம்,
அம்பாள் கட்டடம்,
லாயிட்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600 014
பக்கங்கள்: 176
விலை: ரூ.125

(‘தீக்கதிர்’ ஜூன் 2, 2013 இதழின் ‘புத்தக மேசை’ பகுதியில் வெளிவந்துள்ள, பா. பிரபாகரன் புத்தகத்திற்கு நான் எழுதியுள்ள அறிமுகக் கட்டுரை.)

1 comment:

ராமசாமி R said...

இப்புத்தகத்தை படித்தேன். நீங்கள் கூறிய அறிவியல் அணுகுமுறை மற்றும் தர்க்கவியல் பார்வை என்னையும் தொட்டன. இது போல மற்ற துறைகளிலும் புதிய (ஆராய்ச்சி) புத்தகங்கள் வர வேண்டும்.