Wednesday 13 February 2013

காதலுக்குச் சொந்தமானது இந்த உலகம்


அந்நாள் வாலன்டைன்களும்
இந்நாள் கிளாடியஸ்களும்

காதலுக்கும் அறிவியலுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அறிவியல் ஆராய்ச்சிகள் இரண்டு உண்மைகளை ஐயத்திற்கிடமின்றி நிலைநாட்டுகின்றன.

ஒன்று: நாம் வாழும் இந்த உலகம் உள்ளிட்ட நம் பேரண்டம் முழுக்க முழுக்கப் பொருளால் ஆனது என்ற உண்மை. பருப்பொருள் அல்லாத ஒளி உள்பட மாபெரும் மலைகள் வரையில், ஒரு செல் உயிரினம் தொடங்கி மனிதர்கள் வரையில் எல்லாம் அணு எனும் பொருளால் ஆனவையே. அந்த அணுக்கள் இன்னும் நுட்பமான அணுத்துகள் எனும் பொருளால் ஆனவை. ஹிக்ஸ் போஸாம் அணுத்துகள் ஆராய்ச்சியின் வெற்றி இந்த உண்மையை மேலும் வலுவாக எடுத்துரைக்கிறது.

இரண்டு: எந்த ஒரு பொருளின் வடிவமும் தன்மையும் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்றால் அதன் அணுக்களின் சேர்க்கையால். அணுக்களின் சேர்க்கை எப்படி வரையறுக்கப்படுகிறது என்றால் அணுத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்ப்பதால். அவற்றின் அடர்த்தி, சேர்மானம் இவற்றின் அடிப்படையிலேயே உயிருடன் இயங்கும் பொருள், இயங்காப் பொருள் அனைத்தும் கட்டப்படுகின்றன...

அணுத்துகள்கள் ஒன்றையொன்று ஈர்த்து இணைகின்றன, அதனால் உருவாகும் அணுக்கள் ஒன்றையொன்று ஈர்த்துச் சேர்கின்றன என்றால் என்ன அர்த்தம்? அவை காதலிக்கின்றன! ஆம் - மண், அந்த மண் சார்ந்து நீர், மண்ணும் நீரும் சார்ந்து தாவரங்கள்,  அந்தத் தாவரங்கள் சார்ந்து விலங்குகள், மண்ணும் நீரும் தாவரமும் விலங்கும் சார்ந்து நாம்! இப்படி இந்த பூமியும், இந்த பூமி சுற்றி வருகிற சூரியனும், பல ஆயிரம் கோடி சூரியன்கள் வலம் வருகிற பால் வெளி மண்டலங்களும், எத்தனையோ பால் வெளி மண்டலங்கள் சூழ்ந்த பேரண்டமும் எப்படி உருவாக முடிந்தது? எதனால் இயங்க முடிகிறது? காதலால்!

எந்த ஒரு உண்மையும் வெளியே தெரிய வராத வரையில் ரகசியமாகவே இருக்கிறது. அணு ரகசியங்களைக் கண்டறிந்ததன் மூலம் காதலையும் காதலுக்காகவும் உரத்து முழங்குகிறது அறிவியல். இந்தக் காதல் உறவை சிலர் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் அடிப்படையில் அறிவியலுக்கு எதிரிகள், இயற்கைக்கு எதிரிகள், நாகரிக சமுதாயத்திற்கு எதிரிகள், நாட்டின் அரசமைப்பு சாசனத்திற்கே எதிரிகள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

வரப்பும் வேலியும்
இந்தியாவின் பெருமைகள் என்று எதைஎதையோ முன்னிறுத்துகிறார்கள். ஆனால், இரண்டு அடிப்படையான சிறுமைகளின் மீது கட்டப்பட்டவையே அந்தப் பெருமைகள். சாதியமும் பெண்ணடிமையும்தான் அந்த இரு சிறுமைகள். சொல்லப்போனால் உழைப்புச் சுரண்டலோடு இணைந்த இந்த இரண்டையும் கெட்டிப்படுத்திப் பாதுகாப்பதுதான் மதத்தின் வேலை.
அவரவர் சாதி வேலிகளைத் தாண்டிவிடக்கூடாது,  பெண்கள் அவர்களுக்கான கூண்டுகளை விட்டு வெளியேறிவிடக்கூடாது என்று எத்தனையோ விதிகளும் சம்பிரதாயங்களும் கட்டுப்பாடுகளும் காலங்காலமாகத் தொடர்கின்றன. குறிப்பாக, மேல் சாதிகள் என்று சொல்லப்படுவோர், அவர்களைக் காட்டிலும் பின்னுக்குத் தள்ளப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களைக் காதலித்தால் அது சொந்த சாதிக்குச் செய்கிற துரோகம் என்று கரித்துக்கொட்டப்படுகிறது. இன்னும் குறிப்பாக, மேல் சாதிகள் என்று சொல்லிக்கொள்வோரைச் சேர்ந்த பெண்கள், தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களைக் காதலித்தால், அது சாதித் தூய்மையைக் கெடுக்கிற குற்றமாக வரிக்கப்படுகிறது.

இக்குற்றத்தை விசாரிக்க சட்டவிரோதக் கட்டப் பஞ்சாயத்துகள், காதல் இணைகளைப் பிரிக்கிற கொடூரத் தீர்ப்புகள், ஏற்க மறுத்தால் பழிவாங்கும் வன்முறைகள், அந்த வன்முறைகளை நியாயப்படுத்த அற்பத்தனமான குற்றச்சாட்டுகள்... இருபத்தோராம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற ஐயப்பாட்டை எழுப்புகிற வன்மங்கள் தொடர்கதையாகின்றன.

எல்லா ஆதிக்க சாதிகளும் இந்த ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றன என்றாலும், இன்று சில குறிப்பிட்ட சாதிகளைத் தளமாகக் கொண்ட தலைவர்கள் மூலமாக இந்த வன்மங்கள் வெளிப்படுகின்றன. அதிலும், தவறான அணுகுமுறைகளால் சொந்த அரசியல் செல்வாக்கு அரித்துப்போய்விட்டது என்று கண்கூடாகத் தெரிந்துவிட்ட நிலையில், மறுபடி அந்தச் செல்வாக்கைக் கட்டுவதற்கு அடிப்படைப் பிரச்சனைகளுக்காக மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதற்கு மாறாக, மக்கள் ஒன்றுபடுவதையே அடிப்படைப் பிரச்சனையாக்கி, அதை வளரவிடாமல் வேரில் வெந்நீர் ஊற்றுகிற நவீன மனு பக்தர்கள் வலம் வருகிறார்கள். அவர்களோடு, அனைத்து சமுதாயத் தலைவர்கள் என்ற பெயரில் மேலும் சில நவீன மனு பக்தர்கள் உலா வருகிறார்கள்.

மாற்றப்படும் அணித்திரட்சி
ஒரு காலகட்டத்தில் தமிழகத்தில் பிராமணிய ஆதிக்கத்திற்கு எதிராக ஒரு அணித்திரட்சி திராவிட இயக்கத்தாலும் பெரியார் போராட்டங்களாலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அது ஒரு வரலாற்றுத் தேவையாக உருவானது. முற்போக்கான பார்வை கொண்ட பிராமணர்களும் கூட அந்த இயக்கத்திற்கு ஆதரவாக நின்றார்கள். இன்று அரசியல் களம், அதிகாரத் தளம், கல்விக் கூடம், வழிபாட்டு ஆலயம் என எங்கும் அனைத்துச் சாதியினரும் தங்களுக்கான இடத்தை ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடிந்திருக்கிறது என்றால் இது அந்த வரலாற்றுப் போராட்டத்தின் பங்களிப்புதான்.

ஆனால் இன்று, தலித் மக்களுக்கு எதிரான அணித்திரட்சிக்கான முயற்சி திட்டமிட்டு நடைபெறுகிறது. இது வரலாற்றுத் தேவை அல்ல, வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளுகிற அப்பட்டமான ‘அடையாள அரசியல்.’ சிலரது குறுகிய ஆதாய நோக்கத்திற்காக, காதலிக்கிறவனின் கையை வெட்டு, காலை வெட்டு என்று காதலெனும் ‘காட்டை வெட்டி’ அழிக்கச் சொல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஜீன்ஸ், டி சர்ட், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு பிற சாதிப் பெண்களை மயக்குகிறார்கள் என்று கூறி பகை வளர்க்கிறார்கள். இவ்வாறு சொல்வதன் மூலம் வெறும் ஜீன்ஸ்சுக்கும் டி சர்ட்டுக்கும், கூலிங் கிளாஸ்சுக்கும் மயங்கிப்போகிறவர்கள் என தங்களது சொந்தச் சாதிப் பெண்களையே இழிவு படுத்துகிறார்கள். சாதியமும் பெண்ணிழிவும் பிரிக்க முடியாதவை என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

மாவட்டம் மாவட்டமாய் நடத்தப்படுகிற “அனைத்து சமுதாய” ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்கிற பல்வேறு சாதிகளின் தலைவர்கள், கூடவே அமர்ந்திருக்கிற மற்ற தலைவர்களது சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஜீன்ஸ் - டீ சர்ட் - கூலிங்கிளாஸ் அணிவதை ஏற்றுக்கொள்கிறார்களா என்பது தெரியவில்லை! இவர்களால் கிளப்பிவிடப்படும் காதல் விரோதச் சிந்தனைகளின் பிரதிபலிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் காதலர்கள் கொடூரமான முறையில் பிரிக்கப்படுவதும், பிரிக்க முடியாவிட்டால் கொல்லப்படுவதும் நிகழ்கின்றன.

இவர்கள் காதல் எதிர்ப்பின் உள்ளூர் வகையறா என்றால், நாடு முழுவதுமே இவர்களது குளோனிங் பதிப்புகள் காதலுக்கும் கலப்புத் திருமணத்திற்கும் எதிரான கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்புகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குப் புரிகிறது - காதல் மட்டுமே சாதி வரப்புகளை உடைக்கும், மத வேலிகளை தகர்க்கும் என்ற உண்மை.

அந்நாள் வாலன்டைன்
இந்தக் காதல் எதிர்ப்புச் சூழலில்தான் ‘வாலன்டைன் டே’ என கொண்டாடப்படுகிற பிப்ரவரி 14 முக்கியத்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் இந்த நாளுக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. புனித வாலன்டைன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் அன்றைய ரோம் நாட்டில் இயங்கிய ஒரு கிறிஸ்துவ தலைமைக் குரு (பிஷப்). அப்போது ரோமானியப் பேரரசின் கீழ் கிறிஸ்துவ சமயம் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகியிருந்தது. பேரரசர்களுக்கே உரிய லட்சணப்படி நாடுபிடிக்கும் பேராசையோடு இருந்த பேரரசன் இரண்டாம் கிளாடியஸ், தனது படை வீரர்கள் யாரும் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று தடை விதித்திருந்தான். திருமணம் செய்துகொண்டால் அவர்கள் குடும்பத்தின் நினைவாக இருப்பார்கள், போர்க்களத்தில் முனைப்புடன் செயல்பட மாட்டார்கள் என்று அவன் நம்பியதால் இந்தத் தடை. அப்போது வாலன்டைன், அந்த வீரர்களுக்கு ரகசியமாகத் திருமணம் செய்துவைத்தார். இதைக் கண்டுபிடித்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தான்.

சிறையில் அடைபட்டிருந்த நாட்களில், சிறை அதிகாரியின் மகளுக்கு ஒரு நோயின் தாக்கத்தில் பார்வை மங்கிப்போக, வாலன்டைன் தனக்குத் தெரிந்த மருத்துவ முறைகளில் சிகிச்சையளித்து மீண்டும் பார்வை கிடைக்கச் செய்தார் (அவர் இறையருளால் அந்த அதிசயத்தை நிகழ்த்தியதாகப் பின்னர் வந்த மதப்பிரச்சாரகர்கள் எழுதினார்கள் என்பது வேறு கதை). அரண்மனை ஆணைப்படி வாலன்டைன் கொலை மேடைக்கு இட்டுச்செல்லப்பட வேண்டிய நாள் வந்தது. அதற்கு முதல் நாள் அவர், அந்த சிறையதிகாரியின் மகளுக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பி, அதன் முடிவில் “உன் அன்பான வாலன்டைன்” என்று குறிப்பிட்டிருந்தாராம். அவரைப் பற்றிய ஆவணங்கள் பலவும் அதிகாரிகளால் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பிப்ரவரி 14 என்பது அவரை நினைவுகூர்ந்திடும் நாளாக அடையாளம் பெற்றது. அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அது காதல் ஆதரவுக்கான அடையாள தினமாக உலகம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது.

ரகசியத் திருமணம் செய்துவைத்த வாலன்டைன், ஏசுவின் அன்பைக் குறிப்பிடும் வகையில், ஆட்டுத் தோலில் சிறிய இதயம் போல வெட்டி, அதையும், மலர்க்கொத்தையும் மணமக்களுக்குப் பரிசளித்தாராம். அதுவே பின்னர் காதல் சின்னமாக இதய வடிவமும், காதலர் தினப் பரிசாக ரோஜா மலரும் வழங்குவது என்ற நடைமுறையாகப் பரிணமித்தது.

இந்நாள் கிளாடியஸ்கள்
இன்று வாலன்டைன் தினம் என்பது கிறி°துவர்களுக்கான தினம் அல்ல. சாதி மதம் கடந்த காதலர்களுக்கான தினம். தினம் தினம் அழகான, ஆரோக்கியமான காதல் பயிர் செழித்தோங்கிய காலம் வரவேண்டும் என்பதே ஆண்டில் ஒரு நாளை காதலர் தினமாகக் கொண்டாடுவதன் அடிப்படை. ஆனால், சாதி வரப்புகள் உடைபடக்கூடாது, மத வேலிகள் தகர்க்கப்படக் கூடாது என்று தடையாணை போடுகிற இன்றைய இரண்டாம் கிளாடியஸ்களாக சாதிய ஆதிக்கவாதிகளும் மதவெறியர்களும் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள். இது அந்நிய விழா, மதம் மாற்றுவதற்கான வலைவிரிப்பு, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுப்பொருள் வியாபாரத்திற்கான தந்திர ஏற்பாடு என்றெல்லாம், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு காதலர் தினத்தைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

அவர்கள் கொச்சைப்படுத்துவது உண்மையில் இயற்கைக் காதலைத்தான். ஆகவேதான், “வாலன்டைன் தினத்தன்று காதலர்கள் பொது இடத்தில் நடமாடினால் தாக்குவோம்” என்று ஒரு கும்பல் அறிவிக்கிறது. இன்னொரு கும்பல், ஒரு கையில் தாலிக்கயிறு, இன்னொரு கையில் ராக்கிக்கயிறு தூக்கிக்கொண்டு அலைகிறது. பொது இடத்திற்கு சேர்ந்து வருகிறவர்கள் ஒன்று கணவன்-மனைவியாக இருக்க வேண்டும் அல்லது அண்ணன்-தங்கையாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. ஆக இந்தக் கலாச்சார தாதாக்கள் காதலுக்கு மட்டுமல்ல, பாலின வேறுபாடற்ற நட்புக்கும் தோழமைக்கும் கூட எதிரிகள்தான்.

சாதி-மத அடையாள அரசியலின் நோக்கம் சமுதாய மாற்றமே கூடாது என்பதுதான். சாதி வரப்புகளைக் கெட்டிப்படுத்துவது, மத வேலிகளை வலுப்படுத்துவது இரண்டுமே உலகமய வேட்டைகளுக்கும் உள்நாட்டுத் தாராளமய சுரண்டல்களுக்கும் செய்கிற தொண்டூழியம்தான். ஆம் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் ஒரு முக்கியமான கூறுதான் சாதி வெறி ஒழிப்பு - மத வெறி எதிர்ப்பு - காதல் ஆதரவு முழக்கங்களும்.

தில்லியில் பாலியல் வன்முறைக்கு பலியான அந்த மாணவி, பெண்ணின் சுய தேர்வு உரிமையை மறுத்துக் கட்டாயப்படுத்தும் ஆணாதிக்க அமில வீச்சுக்கு பலியான காரைக்கால் விநோதினி, தருமபுரியில் வன்கொடுமைக்குக் காரணமாகக் கூறப்பட்ட திவ்யா - இளவரசன், நாடு முழுவதும் ஊடக வெளிச்சம் பெறாமலே பலியாகிக்கொண்டிருக்கிற காதலர்கள்... இவர்கள் அனைவரின் கதைகளும் உரக்கச் சொல்வது: காதல் வாழ வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்ற செய்தியைத்தான்.

இதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு என்ன அக்கறை என்று கேட்கிறார்கள் சிலர். கம்யூனிஸ்ட்டுகள் காதலிக்கிறார்களே - இயற்கையை, உலகத்தை, மக்களை!

No comments: