“நூறாண்டு காலம் வாழ்க” என்று நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்களின் பிறந்தநாளில் வாழ்த்துகிறோம். அதற்கு மேல் அவர்களும் நாமும் வாழ்ந்திருக்க விரும்புகிறோம் என்றாலும் “நூறாயுசு” என்பதே மிக மிக அரியதொரு வாய்ப்பாகவே அமைகிறது. அவ்வாறு நூறாண்டு தொடுகிறவர்களை அருஞ்சாதனை புரிந்தவர்களாகப் போற்றுகிறோம். நோய்நொடியின்றி இருக்கிறார்கள், செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் வியப்பும் பெருமையுமாய்த் தகவலைப் பகிர்ந்துகொள்கிறோம். அவ்வாறு நூறைப் பிடித்தவர்கள் தலைமைத் தகுதிகளோடு இருப்பவர்களென்றால் அதை ஒரு விழாவாகவே கொண்டாடுகிறோம்.
பூமியின் வயதோடு, பேரண்டத்தின் ஆயுளோடு ஒப்பிட்டால் நூறாண்டு என்பதே, சன்னல் வழி பாயும் ஒளிக் கீற்றில் தென்படும் துகள் போன்றதுதான். அந்தத் துகளளவு வாழ்க்கையைக்கூட முழுமையாக வாழ முடியாமல் போகிறவர்களின் கதைகளே உலகில் நிரம்பியிருக்கின்றன. “ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற பழமொழி அந்தத் துகள் வாழ்வும் முழுதாய்க் கிடைத்துவிடுவதில்லை என்பதை ஏற்கும் மனத்துணிவை வளர்த்துக்கொள்வதற்காக மட்டும் சொல்லப்படுவதல்ல. கிடைத்த இந்த வாழ்க்கையைப் பொருளுள்ளதாக அமைத்துக்கொள்வதற்காகவும் சொல்லப்படுகிறது. வாழ்வின் பொருள் செல்வமாகிய பொருளைக் குவிப்பதில் இல்லை. பிறந்ததன் நோக்கம் வாழ்வது. வாழ்வதன் முழுமை பிறர்க்கென இயங்குவது. அப்படி “பிறர்க்கென” இயங்குவதைத் தன் வீட்டாரைத் தாண்டி, தன் குழுவினரைத் தாண்டி, ஊராருக்காக, நாட்டோருக்காக, உலக மாந்தருக்காக என்று விரித்துக்கொள்கிறவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள். பின்பற்றப்பட வேண்டியவர்களாகிறார்கள்.
தன்னையும் தன் வட்டத்தையும் கடந்து பிறர்க்கென வாழ்ந்தவர்களில் மிகப் பலரும் நூறாயுசு காணாதவர்களே. அவர்கள் காலமான பின்பும், தொடரும் ஆண்டுகளில், அவர்களது பிறந்தநாளின் நூற்றாண்டு வருகிறபோது எழுச்சி உணர்வோடு கொண்டாடப்படுகிறது. ஒருவர் இறக்கிறபோது “காலமானார்” என்ற சொல்லால் பொதுவாகக் குறிப்பிடுகிறோம் என்றாலும், இந்தச் சொல் எல்லோருக்கும் பொருந்தாது. தான் வாழ்ந்த காலத்தை ஒரு அடையாளமாக்கி மறைகிறவர்களுக்குத்தான் இந்தச் சொல் பொருந்தும். கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொண்டு, எதிர்கால மாற்றங்களுக்கான லட்சியத்தை மனதில் நிரப்பிக்கொண்டு நிகழ்காலத்தை அமைத்துக்கொண்டவர்கள்தான் தங்கள் காலத்தை அடையாளமாக்குகிறவர்கள். அப்படிப்பட்டவர்களின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது ஒரு பெருமையாக இருக்கலாம். அதை விடவும் பெருமைக்குரியது, அவர்கள் எந்த லட்சியங்களுக்காகத் தங்களது காலத்தை அர்ப்பணித்துக்கொண்டார்களோ அந்த லட்சியங்கள் ஈடேற நம் காலத்தை ஒப்படைத்துக்கொள்வதே. அப்படி ஒப்படைத்துக்கொள்வதன் மூலம் நம் காலத்தையும் அடையாளமாக்குகிறோம். இது ஒரு தொடர் பயணம்.
மானுட வரலாற்றில் தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தை ஒரு கால அடையாளமாக்கியவர்களின் கதைகளைப் பார்த்தால் ஒரு ஒற்றுமை இருப்பதைக் காணலாம். தங்களுடைய காலத்தில் சமுதாயத்தின் நிலைமை எப்படி இருந்தது என்தைக் கண்டு அவர்களுக்கு ஏற்பட்ட வேதனை, அதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்பட்ட அறச்சீற்றம், அதை மாற்ற வேண்டும் என்று அவர்களுக்கு ஏற்பட்ட போராட்ட முனைப்பு -இவற்றில்தான் அந்த ஒற்றுமை. ஒவ்வொருவரும் சிந்தித்த மாற்று வழி மாறுபட்டதாக இருக்கலாம். ஒவ்வொருவரும் நடத்திய போராட்ட வழி வேறுபட்டதாக இருக்கலாம். அம்பேத்கர் முன்வைத்த மாற்றும் பெரியார் முன்வைத்த மாற்றும் வேறு வேறு. காந்தியின் போராட்டமும் பகத்சிங்கின் போராட்டமும் வேறு வேறு. தங்களுடைய மதத்தின் பிற்போக்குப் போதனைகளில் சினம் கொண்டு, ஆனால் மதத்தின் எல்லைகளுக்குள் நின்றுகொண்டே சீர்திருத்தங்களுக்காகப் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். தங்களை மதத்தின் பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு, மக்களை விடுவிக்கப் போராடுகிறவர்கள் இருக்கிறார்கள். பொதுவான மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் உடனடித் தீர்வுகளுக்காகப் போராடுகிறார்கள். மார்க்சிய அறிவியலை உள்வாங்கிக்கொண்ட போராளிகள் அடிப்படை மாற்றங்களுக்காகக் களமிறங்கியிருக்கிறார்கள்.
வட்டாரத்திற்கு வட்டாரம், நாட்டுக்கு நாடு, சமூகத்திற்கு சமூகம் இந்த வேறுபாடுகள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திற்குமான முன்னுரிமைத் தேவைகளில் மாறுபாடுகள் இருந்து வந்துள்ளன. இந்திய எடுத்துக்காட்டையே பார்த்தோமானால், பொதுவான அரசியல் விடுதலைப் போராட்டம் வேறு, தலித் மக்களின் விடுதலைப் போராட்டம் வேறு. எந்தச் சமூகமானாலும் பாலின சமத்துவத்திற்காகப் பெண்கள் நடத்துகிற போராட்டம் தனித்துவமானது.
போராட்டங்கள் மாறுபட்டாலும் அவற்றின் அடிப்படையான அறச்சீற்றம் மாறுபடவில்லை. இன்று நாம் காண்கிற, அனுபவித்துக்கொண்டிருக்கிற பல மாற்றங்களுக்குக் காரணம் அந்த முன்னோடிகளின் அறச்சீற்றங்களும் போராட்டங்களும்தான். இதைச் சொல்கிறபோதுதான், நிகழ வேண்டிய பல மாற்றங்கள் இன்னும் நிகழவில்லையே, ஏன் என்ற கேள்வி எழுகிறது. இக்கேள்விக்கு ஒரு பதில் - மாற்றங்களை விரும்பாத, சமுதாயம் இப்படியே உழைப்புச் சுரண்டல்களோடும், ஏற்றத்தாழ்வுளோடும், பாகுபாடுகளோடும், அறியாமைகளோடும், மூட நம்பிக்கைகளோடும், பிற்போக்குத்தனங்களோடும் மாறாமல் நீடித்திருக்க வேண்டும் என விரும்புகிற சக்திகள் தடைச்சுவர்களை எழுப்பிக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பதில் முக்கியமானது. மாற்றங்களுக்கான போராட்ட வரலாறுகளின் முன்னுரைகளாக அமைந்தவர்களின் பொதுத்தன்மை என்று பார்த்தோமே, அந்த அறச்சீற்றம் இன்று இல்லை அல்லது மிகக் குறைவாக இருக்கிறது.
அண்மையில் சென்னையைத் தாக்கிய வர்தா புயலின் பாதிப்பில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளில் ஒன்று. ஒரு நாளில் மின் விநியோகம் சீராகிவிடும் என்று அரசு கூறுகிறது. ஆனால், நான்கு நாட்களாகியும் நிலைமை மாறவில்லை. மின்சாரம் இல்லாததால் வீடுகளில் வெளிச்சம் இல்லை, மின்விசிறிக் காற்றும் இல்லை என்பவை மட்டுமே பிரச்சனையல்ல. நீர்த்தொட்டியை நிரப்ப முடியாததால் சமையலுக்கோ குளிக்கவோ கழிப்பறைத் தேவைக்கோ தண்ணீர் இல்லை. விலைகொடுத்தே பாட்டில்களிலும் கேன்களிலும் தண்ணீர் வாங்கிவைக்க வேண்டியிருக்கிறது. சமையலுக்கு மிக்ஸி இயக்க முடியவில்லை. பாதுகாப்பாக மருந்துகளை வைப்பதற்கு ஃபிரிட்ஜ் பயன்படுத்த முடியவில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும் முடியாமல் மொபைல் போன்களை சார்ஜ் பண்ணமுடியவில்லை... ஐந்தாம் நாளில் பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் இறங்குகிறார்கள்... அதிகாரிகள் வந்தார்களா, வாக்குறுதி அளித்தார்களா, வாக்குறுதிப்படி மின்னிணைப்பு வழங்கினார்களா என்பதெல்லாம் வேறு விவகாரம்.
தங்களுடைய அன்றாடக் கட்டாயத் தேவைகளில் ஒன்று மறுக்கப்படுகிறபோது இப்படி ஆவேசத்தோடு குடும்பம் குடும்பமாகவே கூட போராட்டக் களத்திற்கு வருகிற மக்கள், எல்லோரையுமே கைவிடுகிற, பல சொந்த வேலைகளை விட்டுவிட்டு மணிக்கணக்கில் ஏடிஎம் கூண்டுகள் முன்பாக நின்று புலம்ப வைத்துவிட்ட மோடி அரசின் பணப்பறிமுதல் நடவடிக்கையை எதிர்த்து, அதே பகுதியில் நடைபெறுகிற போராட்டத்திற்கு வரவில்லை. ஏன்? முதலில் குறிப்பிட்ட மின் தடை எதிர்ப்புப் போராட்டத்திற்குக் கூட, அந்தப் பகுதி மக்கள் எல்லோரும் வருவதாககக் கூற முடியாது, ஒரு பகுதியினர்தான் வருகிறார்கள். இந்தப் போராட்டத்திற்கோ அந்த அளவுக்குக் கூட வருவதில்லை. ஏன்?
கல்வியை வணிகச் சரக்காக மாற்றுகிற, கல்வி உரிமைச் சட்டத்தை கேலிப்பொருளாக்குகிற நடவடிக்கைகள், வாயைக் கட்டி வயிற்றைக் காட்டி சேமித்த பணத்தையெல்லாம் பறித்துக்கொள்கிற தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளிவிடும் ஏற்பாடுகள், நிர்வாகங்கள் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் வெளியேற்றுவதற்கு சாதகமாக மாற்றப்படும் கொள்கைகள், விவசாயிகளைப் பூச்சிமருந்து குடிக்கவைக்கும் புறக்கணிப்புகள், சமூக நீதியை ஒழித்துக்கட்டும் தனியார்மயமாக்கல் சூழ்ச்சிகள்... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த அநீதிகளை எதிர்த்து மக்கள் அறச்சீற்றம் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியவில்லையே!
போராட்டத்திற்கு வருவதில்லை என்பது மட்டுமல்ல, அந்தப் போராட்டங்களைப் பரிகசிக்கவும் செய்கிறார்களே! பெட்ரோல் - டீசல் விலை உயர்வை எதிர்த்து ஒரு போராட்டம், அது சிறை செல்ல வாய்ப்பிருக்கிற மறியல் போராட்டம் கூட அல்ல, அனுமதி பெற்று குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நடக்கிற கோரிக்கை முழக்கப் போராட்டம்தான் - அதற்கு, அந்த விலை உயர்வால் பாதிக்கப்படுகிற மக்கள் வருவதில்லை. “இவர்கள் போராடுவதால் மட்டும் விலை குறைந்துவிடப் போகிறதாக்கும்” என்று பேசியபடி ஒதுங்கிச் செல்கிறார்கள்.
மக்களுக்காக, சமுதாய மாற்றத்திற்காகப் போராடுவதற்கென்றே தங்களை ஒப்படைத்துக்கொண்ட கம்யூனிஸ்ட்டுகளைப் பார்த்து, “நீங்கள் சொல்கிற புரட்சி எப்போது வெடிக்கும்” என்று கேட்கிறார்கள். அப்படிக் கேட்கிறவர்கள் மேற்படி “பாதுகாப்பான” ஆர்ப்பாட்டத்திற்குக்கூட வராதவர்களாக இருக்கிறார்கள். மக்கள் மனநிலை இதுதான் என்றால் புரட்சி எப்படி வெடிக்கும்? யாருக்காகப் போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றனவோ அந்த மக்கள் பங்கேற்காமல் வெற்றி எப்படிக் கிடைக்கும்?
இந்தியாவின் தனித்துவமான சமூக இழிவு சாதியம். அந்த சாதியக் கட்டமைப்பின் அடித்தட்டுக்குத் தள்ளப்பட்டு அழுத்தப்படுகிற தலித் மக்களின் உரிமைகளுக்காக ஒரு போராட்டம் நடக்கிறது. அந்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்த கட்சி அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களன்றி, தலித் சமூகத்தினரே கூடத் திரண்டு வருவதில்லை.
சாதியத்துடன் இணைகோடாக இருப்பது பெண்ணடிமைத்தனம். பெண்களின் சம உரிமைகளுக்காக ஒரு போராட்டம் நடக்கிறது. அது ஏதோ சம்பந்தப்பட்ட மாதர் அமைப்பின் தலையெழுத்து என்பது போல பெரும்பாலான பெண்கள், வீட்டிலும் பொதுவெளியிலும் அவமதிப்புகளை எதிர்கொள்ளும் பெண்கள் அந்தப் போராட்டத்தில் அணிவகுப்பதில்லை.
சாதி ஆணவக் கொலைகள் முதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுவது வரையில், யாரால் தடுக்க முடியும் என்று சவால் விட்டு மூர்க்கத்தனமாக நிகழ்த்தப்படும் அநீதிகளைக் கண் முன்பாகக் கண்டும், பெரும்பகுதி மக்கள் ஏன் கொந்தளிக்கவில்லை? அவர்களின் அறச்சீற்றத்தை அடகு பிடித்து வைத்திருப்பது எது?
பல முனைகளிலிருந்து இக்கேள்விகளுக்கான விடைகள் வருகின்றன. ஒரு சில முக்கியமான முனைகளைப் பார்ப்போம்.
எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளியிருப்பது அதே சாதியமும் மத உணர்வும்தான். சாதி, மத வரப்புகளைத் தாண்டி வருவதற்குப் பெரும்பகுதி மக்கள் தயாராக இல்லை என்பது, மாற்றங்களுக்காகப் போராடுகிற சக்திகளுக்கு மிகப்பெரிய சவால். அடுத்து, தங்கள் சமூகத்திலிருந்தோ அல்லது தங்களது சமூகத்தின் ஆதரவுடனோ ஒரு தலைவர் அவதரித்து தங்களை நல்லபடி வைத்திருப்பார் என்ற, தனிமனித வழிபாட்டுக் கலாச்சாரம். அரசியல் அதிகாரத்திற்கு வந்துவிடுகிற அப்படிப்பட்ட தனி மனிதர்கள் வீசுகிற இலவசங்களும் சலுகைகளும் போதும், அவற்றால் தங்கள் வாழ்க்கை முன்னேறிவிடும் என்ற கனவிலேயே, வழிபாட்டுத் துதிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மதம் என்று வருகிறபோது, அது மக்களைப் பிரித்துவைக்கிறது என்பது மட்டுமல்ல, கடவுள் தீர்மானித்தபடியே நல்லது கெட்டது எல்லாம் நடக்கிறது என்ற வலுவான எண்ணத்தை மனங்களில் விதைத்து, போராட்ட இயற்கையான போராட்ட உணர்வையே மழுங்கடித்து விடுகிறது. அவர்களுடைய மதத்திற்காக - அதாவது அந்தந்த மதத்தின் கடவுளுக்காக - வீறுகொண்டு எழுந்து போராடுவார்களேயல்லாமல், வேறு பொதுப்போராட்டங்களுக்குத் திரள மாட்டார்கள். உலகத்தையே படைத்து எல்லா உயிர்களையும் உருவாக்கி எது எது எப்படி நிகழ வேண்டும என்று முன்கூட்டியே திட்டமிட்டு இயக்குகிற சக்தி என்று நம்பப்படுகிற கடவுளுக்காகக் கலவரங்களில் ஈடுபடுவதன் மூலம், அந்தக் கடவுளை விடவும் தங்களைப் பெரிய ஆளாக்கிக்கொள்கிறோம், கடவுளை மட்டம் தட்டுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை. புராணங்களிலும் வேதநூல்களிலும் மறைகளிலும் சொல்லப்படுகிற கடவுள்களும் மகிமைகளும் காலண்டரில் இடம்பெறாத ஏதோவொரு காலத்தில் நிகழ்ந்ததாகவே இருக்கின்றன, அதற்குப் பிறகு இன்று வரையில் அப்படிப்பட்ட அருளவதாரங்களோ திருவிளையாடல்களோ நிகழவில்லையே ஏன் என்று சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்திக்கவிடாமல் நம்பிக்கையிலும் அச்சத்திலும் மூளையைப் புதைத்துவைப்பதில் சமயக் கோட்பாடுகளும் கதைகளும் சடங்குகளும் வெற்றிபெற்றிருக்கின்றன.
அந்த வெற்றி ஆளும் வர்க்கங்களுக்குத் தோதாக இருக்கிறது. முன்பு பண்ணைச் சமுதாய அமைப்பில் ஆட்சியாளர்களான மன்னர்களுக்கும், பெரும் நிலவுடைமையாளர்களுக்கும் அவர்களுடைய சுரண்டல் தங்குதடையின்றித் தொடர்வதற்கு மக்களின் சிந்தனை இவ்வாறு முடக்கப்படுவது தேவைப்பட்டது. “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...” என்பது போன்ற தத்துவங்கள் மக்கள் கிளர்ந்தெழுவதை முளையிலேயே கிள்ளி எறிகிற வேலையைச் செய்தன. மக்கள் இவ்வாறு கொந்தளிப்பு அடங்கிப்போனவர்களாக வார்க்கப்பட்டிருப்பது இன்றைய உலகளாவிய சுரண்டல் சக்திகளாகிய, ஏகாதிபத்தியத்தின் இன்றைய பரிணாமமாகிய கார்ப்பரேட் குழுமங்கள் - அவர்களைப் பாதுகாக்கும் அரசுகள் கூட்டணிக்கு மிகமிகத் தோதாக இருக்கிறது.
மனிதகுல வளர்ச்சிக்கு அடிப்படையானது எதையும் ஏன் என்று கேள்வி கேட்கிற இயற்கையான குணம்தான். சமுதாய மாற்றத்திற்கு அடிப்படையானது, அப்படிக் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து தட்டிக் கேட்கிற குணம்தான். கேள்வி கேட்பதும் தட்டிக் கேட்பதுமே அரசியல் உணர்வு.
அந்த அரசியல் உணர்வு அழிக்கப்படுவது - அதாவது கேள்வி கேட்காத, தட்டிக் கேட்காத தலைமுறைகளாக வார்க்கப்படுவது - உலகச் சந்தை தாதாக்களுக்குத் தேவைப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்படுவதும், அதற்கேற்ப அரசு தொழிலாளர் உரிமைச் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வதும் தற்செயலானதல்ல. சங்கம் சேர்வதைத் தடுப்பதற்கென்றே இன்று கான்டிராக்ட் தொழிலாளர்களாகவே நியமிக்கப்படுகிறார்கள். ஒரு பெரும் நிறுவனத்தில் ஒரு கான்டிராக்ட் தொழிலாளிக்கு எவ்வளவு ஊதியம் வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.
ஆனால் ஒப்பந்தக் காலம் முடிந்ததும் அவரது வேலை தொடருமா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இத்தகைய நிலையில் சங்கமாகச் சேர்ந்து குரல் கொடுக்க அந்தத் தொழிலாளி முன்வருவார் என்று எப்படி எதிர்பார்க்க?
ஒரு ஊழியர் நிர்வாகத்திடம் சென்று, “எனக்கு வேலைச்சூழல் சரியில்லை... எனக்கு இந்த வசதி இல்லை... எனக்கு இந்தத் தேவை நிறைவேறவில்லை...” என்று புகார் செய்ய அனுமதிக்கப்படுவார். அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதே தொழிலாளி நிர்வாகத்திடம் சென்று, “எங்களுக்கு வேலைச்சூழல் சரியில்லை... எங்களுக்கு இந்த வசதி இல்லை... எங்களுக்கு இந்தத் தேவை நிறைவேறவில்லை...” என்று புகார் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார். “எனக்கு” என்று கோருகிற தனித் தொழிலாளி, “எங்களுக்கு” என்று பேசுவாரானால் அவர் சங்க உணர்வு பெறுகிறார் என்று பொருள். அந்த உணர்வு துளிர்க்கிற விடுகிறபோதே நிர்வாகத்தின் பூட்ஸ் கால்கள் அதை நசுக்கிவிடும். நிர்வாகத்தால் முடியவில்லை என்றால் அரசாங்கத்தின் பூட்ஸ் கால் படைகள் அனுப்பி வைக்கப்படும். இன்றைய உலகமய, தனியார்மய, தாராளமய காலகட்டத்தில் இதுவே எங்கும் நீக்கமற நிகழ்கிறது.
ஒரு மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவோரும் சரி, இன்னொரு மதத்தின் பெயரால் எதிர் வன்முறைகளில் ஈடுபடுவோரும் சரி, இந்த சுரண்டல் அநீதிகளைத் தட்டிக்கேட்பதில்லை. ஒரு சாதியின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுவோர், இன்னொரு சாதியின் பெயரால் எதிர் வன்முறைகளில் ஈடுபடுவோர் ஆகியோரும் இந்த அரசியல் உணர்வை அழிப்பதில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். மதத்திற்காக, சாதிக்காக என வாதாடுகிறவர்கள் அடிப்படை மனித உரிமைகளை, பாலின சமத்துவத்தை, கருத்துச் சுதந்திரத்தை மதிக்காதவர்களாக இருப்பது தற்செயலானதல்ல.
மக்கள் சிந்தனைகளில் தாக்கம் செலுத்தும் வல்லமை வாய்ந்த ஊடகங்களும் இக்கைங்கரியத்தில் பங்களிக்கின்றன. ஒரு காலகட்டத்தில் ஊடகங்கள் விடுதலைப் போராட்டங்களின் அங்கமாகத் திகழ்ந்த வரலாறு உண்டு. விடுதலை இயக்கத் தலைவர்கள் பத்திரிகை நடத்துகிறவர்களாக, பத்திரிகைகளில் எழுதுகிறவர்களாக இருந்தார்கள். இன்றோ, ஊடக நிர்வாகங்கள் கார்ப்பரேட் கட்டமைப்பின் அங்கமாகிவிட்டன. கார்ப்பரேட் தாதாக்களின் நவீன சுரண்டல்களை நியாயப்படுத்துகிற வாதங்களும் எழுத்துகளுமே பெரும்பாலான ஊடகங்களில் ஆக்கிரமிக்கின்றன. நடுநிலை ஒப்பனை கலைந்துவிடலாகாது என்பதற்காக சில மாற்றுச் சிந்தனைகளுக்குப் போனால் போகிறதென்று அளவோடு இடமளிப்பார்கள் - அவ்வளவுதான். அந்த ஒப்பனைக்காகச் செய்கிற வேலைகளில் ஒன்றுதான் இடதுசாரி தலைவர்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவது. அது எப்படி இருக்கும் என்றால், கம்யூனிஸ்ட் தலைவர்கள் எளிமையாக இருப்பது, பேருந்துகளில் பயணிப்பது, தெருவோரக்கடையில் இயல்பாகத் தேநீர் பருகுவது, சாதாரண இருசக்கர வண்டியில் செல்வது, வாடகை வீட்டில் குடியிருப்பது போன்ற “சுவையான” தகவல்களைப் படத்துடன் வெளியிடுவார்கள். அவர்களது எளிமை, நேர்மை, தியாகம் பற்றியெல்லாம் கூடச் சொல்வார்கள். ஆனால், மறந்தும் அவர்கள் மக்களுக்கு என்ன சொல்கிறார்கள், குறிப்பிட்ட நடவடிக்கையை எதிர்ப்பதற்கு அவர்கள் என்ன காரணங்களைக் கூறுகிறார்கள் என்பதையெல்லாம் வெளியிடுவதில்லை. அல்லது மேலோட்டமாகவே வெளியிடுவார்கள். போராட்டங்களுக்குப் பொதுமக்கள் திரண்டு வராமல் போவதற்கு இது மட்டுமே காரணமல்ல என்றாலும், ஊடகங்களின் இந்த உத்தியும் முக்கியமான காரணம்தான்.
பணம் மட்டுமே (அது ரொக்க உருவமாக வந்தாலும் சரி, அருவமான டிஜிட்டல் பணமாக இருந்தாலும் சரி) வாழ்க்கையின் ஒரே லட்சியமாக மாற்றப்பட்டிருக்கிறது. பணம் இருந்தால் மட்டுமே வயிறாரச் சாப்பிட முடியும், மழை-வெயிலில் பாதுகாப்பான கூரையின் கீழ் வசிக்க முடியும், குழந்தைகளைப் படிக்க வைக்க முடியும், பெரியவர்களுக்கு மருத்துவ சிகிச்சையளிக்க முடியும் என்ற கட்டாய வாழ்க்கை திணிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சுயநலம் மனங்களுக்குள் புகுத்தப்படுகிறது. அடிமைத்தனமாக அடங்கிப்போவது முதல், சட்டப்படி செய்ய வேண்டிய கடமைக்குக் கூட லஞ்சம் பெறுவது வரையில் மனசாட்சியை மறைப்பது அந்தப் புகுத்தப்பட்ட சுயநலம்தான். போராட்டம் அது இது என்று போனால், கிடைத்திருக்கிற வாய்ப்புகளும் பறிக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சத்தில் ஒதுங்கிப்போகிற போக்கு இப்படித்தான் பரவியிருக்கிறது.
சுதந்திரச் சந்தை என்ற போர்வையில் சுதந்திரத்தை ஒடுக்குகிற உலகமயச் சுரண்டல்கள், அதற்கு விசுவாசமாகத் தொண்டாற்றுகிற கடவுள் கதைகள், விசிறிவிடப்படும் மதவாதங்கள், விரிசல் விழாமல் பாதுகாக்கப்படும் சாதிய உணர்வுகள், நவீன வேடம் தரிக்கும் சோதிடப் பொய்கள், வளைக்கப்படும் சட்டங்கள்... இப்படி எல்லாவற்றின் கலவையில்தான் மக்களின் அறச்சீற்றம் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கான்கிரீட் கலவையில் சிக்கிய செடியைப் போல் மக்களின் கொந்தளிப்பு உணர்வு சிறையிடப்பட்டிருக்கிறது.
விதையிலிருந்து தலைநீட்டும் துளிருக்கு சற்றே இடம் கிடைத்தால் அதன் வேர்கள் கான்கிரீட் சுவர்களிலும் விரிசலை ஏற்படுத்தும். மக்களின் அறச்சீற்றம், கொந்தளிப்பு உணர்வு வேர் விடுவதற்கு இடம் ஏற்படுத்தித் தருகிற வரலாற்றுப் பொறுப்பு மாற்றங்களுக்கான இயக்கங்களின் தோள்களில் ஏற்றப்பட்டிருக்கிறது. அந்த வரலாறு நிகழும் என்ற நம்பிக்கைச் செய்தியை உள்ளூரில், நாட்டில், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேர்விட்டுக்கொண்டிருக்கிற சிறு சிறு மக்கள் போராட்டங்கள் உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. முன்னத்தி ஏர்களின் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுகையில் இந்தச் செய்தியை சமுதாய வயலில் ஊன்றுவோம்.
(‘வீதி’ ஜனவரி 2017 இதழில் வந்துள்ள எனது கட்டுரை, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முன் எழுதப்பட்டது)
No comments:
Post a Comment