Sunday, 16 April 2017

காதலாகவும் கடமையாகவும் மொழி அக்கறை


(ஏப்ரல் 14 அன்று சென்னையில் நடைபெற்ற ‘தீக்கதிர்’ பதிப்புகளின் ஆசிரியர் குழு தோழர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் நான் அளித்த கட்டுரை)

ப்ரல் 13ம் தேதிய ‘தினத்தந்தி’ எண்மப் பதிப்பில் வந்துள்ள செய்தியில் இந்த வரிகள் உள்ளன: “...இந்தப் புத்தகத்தை ஒரு தனியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது....” “இந்தப் புத்தகத்தைப் பல பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது...”

“இந்தப் புத்தகத்தைத் தனியார் பதிப்பகம் வெளியிட்டுள்ளது,” என்றோ, “இந்தப் புத்தகம் தனியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது,” என்றோதான் இருக்க வேண்டும். அதே போல், “இந்தப் புத்தகம் பல பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது...” என்றோ, “இந்தப் புத்தகத்தைப் பல பள்ளிகள் பாடமாக வைத்துள்ளன...” என்றோதான் இருக்க வேண்டும். (‘தினத்தந்தி’ அச்சுப் பதிப்பில் இந்தப் பத்தியே இல்லை, ஆகவே பிழையும் இல்லை!)

பொதுவாகத் தமிழில் செயப்பாட்டுவினை பெரிய அளவுக்குப் புழக்கத்தில் இல்லை, செய்வினைதான் இருக்கிறது. ஆகவே, “அவரால் அந்த உரை நிகழ்த்தப்பட்டது,” என்பதற்கு மாறாக, “அவர் அந்த உரையை நிகழ்த்தினார்,” என்று எழுதுவது அழகு. “காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரால் ஈஸ்வரி கன்னத்தில் அறைந்து தாக்கப்பட்டார்,” என்று குறிப்பான சூழல்களில் செயற்பாட்டு வினையைப் பயன்படுத்துவது வாக்கியத்திற்குக் கனம் சேர்க்கும்.

ஒருமையில் தொடங்கி, பன்மையில் முடிப்பது பரவலாகச் செய்யப்படுகிற ஒரு பிழை.
“பல மருத்துவமனைகள் இந்தக் கருவியை வைத்துள்ளது,” என்று எழுதுகிறார்கள். நாமும் அதைத் திருத்தாமல் வெளியிடுகிறோம். “பல மருத்துவமனைகள் இந்தக் கருவியை வைத்துள்ளன,” என்று எழுத வேண்டும். கருவி    ஒருமை என்பதால் “வைத்துள்ளது” என்று எழுதுவதே சரி என்று நினைத்துக்கொள்கிறார்கள். இங்கே “மருத்துவமனைகள்” என்ற சொல்தான் எழுவாய். அந்த எழுவாய் பன்மையாக இருக்கிறபோது, வினைச்சொல்லும் பன்மையில்தான் இருக்க வேண்டும்.

“பல மருத்துவமனைகளில் இந்தக் கருவி இருக்கிறது,” என்று எழுதலாம். இங்கே “இந்தக் கருவி” என்பதே எழுவாய். ஒருவேளை “இந்தக் கருவிகள்” என்று இருக்குமானால், “பல மருத்துவமனைகளில் இந்தக் கருவிகள் இருக்கின்றன,” என்று எழுத வேண்டும். ஒரே ஒரு மருத்துவமனை குறித்துதான் எழுதுகிறோம் என்றால், “அந்த மருத்துவமனை இந்தக் கருவியை/கருவிகளை வைத்துள்ளது,” என்று எழுத வேண்டும்.

“மற்றும்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது மிக அதிகமாக இருக்கிறது. ஆங்கிலத்தில் யனே என்ற சொல் தாராளமாக வரும். தமிழ் நடையில் அவ்வாறு இல்லை. “வண்ணக்கதிரில் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் இடம்பெறுகின்றன,” என்று வராது. தமிழில் “உம்” என்ற இணைப்புச் சொல்லே வரும். “வண்ணக்கதிரில் கட்டுரைகளும் கவிதைகளும் இடம் பெறுகின்றன,” என்றே வர வேண்டும். “வண்ணக்கதிரில் கட்டுரைகள், கதைகள் இடம்பெறுகின்றன,” என்றும் நடுவில் காற்புள்ளியிட்டு எழுதலாம்.

புதிய பெயர்கள், வழக்கமாகக் கையாளப்படாத சொற்கள் வருகிறபோது “ஆகியோர்” அல்லது “ஆகிய” என்று சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, “செச்சன்யா அதிபர் ரம்ஜான் கெடிரோவும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினும்” என்று வெளிநாட்டுப் பெயர்களை எழுதுகிறபோது “ரம்ஜான் கெடிரோவ், விளாதிமிர் புட்டின் ஆகியோர்...,” என்று எழுதுவது நல்லது. குறிப்பிட்ட செய்தி அல்லது கட்டுரையில் இப்பெயர்கள் ஒரு முறை குறிப்பிட்ட பிறகு மறுபடியும் வருமானால், “புட்டினும் கெடிரோவும்” என்று குறிப்பிடலாம்.

ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள பொருட்கள் அல்லது ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ள ஆட்கள் பற்றி எழுதிவிட்டு, முற்றிலும் புதிய ஒரு பொருள் அல்லது ஆளையும் சேர்த்துச் சொல்கிற இடத்தில் ‘மற்றும்’ பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக “அங்கே மருத்துவர்கள் முத்துக்குமரன், இளையபாரதி, பிரமிளா, மணியரசி, செவிலியர்கள் லட்சுமி, வினாயகம், பிலோமினா மற்றும் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜேக்கப் லாரன்ஸ் ஆகியோர் வந்திருந்தனர்,” எனலாம். ஒரு நிறுவனத்தின் பெயரில் ‘அண்ட்’ என்ற ஆங்கிலச் சொல் வரக்கூடும். அப்போது அதை ‘மற்றும்’ என மொழியாக்கம் செய்வதில் தவறில்லை.

சில பேர் “உம்” என்றும் போட்டுவிட்டு, “மற்றும்” என்றும் சேர்த்து எழுதுகிறார்கள். “பிரதமர் மோடியும் மற்றும் முதலமைச்சர் பழனிசாமியும்” என்று எழுதுவது அபத்தம்.

இதே போல் ‘அல்லது’ என்ற சொற்பயன்பாடும், அதற்கு மாற்றாக ‘...ஓ’ என ஓகாரம் போட்டு முடிப்பதும் சரியாகப் கையாளப்படுவதில்லை. தமிழில் ‘அல்லது’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவதில்லை. “மாலதி அல்லது மேரி பங்கேற்கக்கூடும்” என்று எழுதுவதற்கு மாறாக, “மாலதியோ, மேரியோ பங்கேற்கக்கூடும்” என்று எழுதுவது நன்றாக இருக்கும்.
சிலர் “மாலதியோ அல்லது மேரியோ” என்று எழுதுவதும் தேவையற்றது.

இன்னமும் பலர் புரிந்துகொள்ளாமலிருப்பது மேற்கோள் குறிகளைக் கையாளுவது குறித்தானதாகும்.

சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில், நாங்கள் இந்தப் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார் -என்று செய்தியாளர்களிடமிருந்து வருகிறது என்றால், அதைத் திருத்தாமல் அப்படியே வெளியிடுகிறோம்.

சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில், “நாங்கள் இந்தப் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார் என மேற்கோள் குறிகளிட்டுத் திருத்தியே வெளியிட வேண்டும்.

மேற்கோள் குறிகள் இடுகிறபோது கவனிக்க வேண்டியது: சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில் என்று எழுதிய பிறகு காற்புள்ளி (கமா) இட வேண்டும். அதற்குப் பிறகுதான் தொடக்க மேற்கோள் குறி இட வேண்டும். அதே போல், ...இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுதிய பின் காற்புள்ளி இட்டு, அதன் பிறகே முடிப்பு மேற்கோள் குறி இட வேண்டும்.
எடுத்துக்காட்டு: சங்கத் தலைவர் இது பற்றிக் கூறுகையில், “நாங்கள் இந்தப் பிரச்சனையில் தொடர்ந்து தலையிட்டு வருகிறோம். அதிகாரிகளிடம் பல முறை புகார் செய்திருக்கிறோம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

அடுத்து பெருமளவுக்கு நிகழ்கிற பிழை, கேள்விக்குறி அல்லது வியப்புக்குறியோடு வாக்கியம் முடிந்துவிடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், அந்தக் குறிகளுக்குப் பிறகும் அதே வாக்கியத்தைத் தொடர்வதாகும்.
எடுத்துக்காட்டு:
அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்களா? என்று கேட்ட தலைவர் அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள்! என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஒரு கேள்விக்குறி அல்லது வியப்புக்குறி வருகிறது என்றால் அத்துடன் அந்த வாக்கியம் முடிந்துவிடுகிறது. அதன் பிறகு ‘என்று’ என வரக்கூடாது. அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்களா என்று தலைவர் கேட்டார். அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள் என்று சொல்லிவிட்டுப் போனார்.
-இப்படி எழுதுவதே சரி.

“அவர்கள் ஒப்புக்கொண்டுவிட்டார்களா,” என்று தலைவர் கேட்டார். “அப்படி ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்களை வழிக்குக் கொண்டுவாருங்கள்,” என்று சொல்லிவிட்டுப் போனார்.
-இப்படி மேற்கோள் குறியிட்டு எழுதினால் இன்னும் சிறப்பு.

எங்கே ஒற்றை மேற்கோள் குறி, எங்கே இரட்டை மேற்கோள் குறி இட வேண்டும்? பத்திரிகைப் பெயர், புத்தகப் பெயர், நிறுவனப் பெயர், குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய பொருள் ஆகியவற்றுக்கு ஒற்றை மேற்கோள் குறி இட வேண்டும்.  எடுத்துக்காட்டு: ‘தீக்கதிர்’,  ‘தி இந்து’, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’, ‘இந்தியாவில் சாதிகள்’, ‘பெண் ஏன் அடிமையானாள்’, ‘காலந்தோறும் பிராமணியம்’.

ஒருவரது பேச்சைக் குறிப்பிடுகிறபோது இரட்டை மேற்கோள் குறி பயன்படுத்த வேண்டும். “எங்கள் மாநிலத்தில்  தொடக்கப்பள்ளி முதல்  இளநிலைப் பட்டப்படிப்பு வரையில் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது,” என்று திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் தெரிவித்தார்.

கட்டுரைக்குள் ஒருவரது மனதில் என்ன நினைத்தார் என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கும். அப்போது அந்த நினைப்பை, ஒற்றை மேற்கோள் குறிகளுக்கிடையே எழுத வேண்டும்: மாணிக் சர்க்கார் இப்படிப் பேசிக்கொண்டிருந்தபோது, ‘நமது மாநிலத்தில் இந்த நிலைமை வராதா’ என்ற எண்ணம் அவையோருக்கு ஏற்பட்டது.

வாக்கியங்களில் அறிவித்தார், தெரிவித்தார், கூறினார், சொன்னார், பேசினார் என்ற சொற்களைப் பயன்படுத்துவதிலும் புரிதல் தேவை. ஒரு அறிவிப்பை அறிவிக்கலாம் (புதிய திட்டத்தை அறிவித்தார்), ஒரு தகவலைத் தெரிவிக்கலாம் (திட்டம் நாளை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்), ஒரு கருத்தைக் கூறலாம் (அரசின் பாராமுகத்தால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறினார்), ஒன்றை உறுதிபடச் சொல்லலாம் (நான் வருவது நிச்சயம் என்று சொன்னார்), ஒரு உரையாகப் பேசலாம் (“...இல்லையேல் இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பேசினார்.)

கால நிலைக் குழப்பம் எழுத்தின் தரத்தைக் கீழிறக்கக்கூடியது. எடுத்துக்காட்டாக “பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 தொழிலாளிகள் இறந்துள்ளனர்...” என்று எழுதப்படுகிறது. “உள்ளனர்” என்றால் உயிரோடு இருக்கிறார்கள் என்றுதானே பொருள்? இறந்த பிறகு எப்படி “இருக்க” முடியும்? ஆகவே, “...விபத்தில் 6 தொழிலாளிகள் இறந்தனர்,” என்றே எழுத வேண்டும்.
அதே போல், இறந்துவிட்ட ஒருவரைப் பற்றிய செய்தியில் நிகழ்காலக் குறிப்பு வருவது தவறு. “மர்மமான முறையில் இறந்த பெண் கல்குவாரியில் வேலை செய்து வருகிறார்,” என்று எழுதுகிறார்கள். இறந்த பிறகு எப்படி ஏதோவொரு இடத்தில் வேலை செய்து வர முடியும் என்பது மர்மமாகிவிடும். ஆகவே, “மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் கல்குவாரியில் வேலை செய்து வந்தவர்,” என்றே எழுதுதல் வேண்டும்.

சந்திப் பிழைகள், ஒற்றுப் பிழைகள் அடிக்கடி நேர்பவை. “அவரை வர சொன்னார்கள்,” “வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது,” “பட்ட படிப்பு” என்றெல்லாம் வருவதை, “அவரை வரச் சொன்னார்கள்,” “வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்பட்டது,” “பட்டப் படிப்பு” என்றெல்லாம் திருத்துவதற்கே மெய்ப்புத் திருத்துவதில் பாதி நேரம் போய்விடுகிது.

சிலர், வம்பே வேண்டாம் என்று அநியாயத்துக்கு, “...என்றுச் சொன்னார்கள்,” “நிலைமைச் சீர்குலைந்துவிடுமே என்றுப் பார்க்கிறேன்,” என்று எழுதுகிறார்கள். “...என்று சொன்னார்கள்,” “நிலைமை சீர்குலைந்துவிடுமே என்று பார்க்கிறேன்” என்றுதான் எழுத வேண்டும்.

பொருள் மயக்கம் தருகிற வாக்கியங்கள் இப்போதும் எழுதப்படுகின்றன. “வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி அருகில் திறக்கப்பட்ட மதுக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உறுதியளித்தார்,” என்பது அப்படியான ஒரு வாக்கியம்தான். போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி அருகில் மதுக்கடை திறக்கப்பட்டதா அல்லது கடையை மூடுவது குறித்து உறுதியளிக்கப்பட்டதா? குழப்பத்திற்கிடமில்லாமல், “பள்ளி அருகில் திறக்கப்பட்ட மதுக்கடையை, வாலிபர் சங்கத்தின் தலைமையில் போராடிய மக்களின் கோரிக்கையை ஏற்று மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உறுதியளித்தார்,” என எழுதுகிறபோது, சொல்ல வருகிற செய்தி சரியாகப் போய்ச்சேரும்.

வினியோகம், நேரிடை என்றெல்லாம் எழுதப்படுவதை நிறுத்தி விநியோகம், நேரடி என்று எழுதுதல் எழுத்தை நேர்த்தியாக்கும்.

“கருணை கொலை” என்று எழுதுவதற்கும் “கருணைக் கொலை” என்று எழுதுவதற்கும் வேறுபாடு உண்டு. கருணை கொலை என்றால் மனதில் இருந்த கருணையைக் கொன்றுவிட்டதாகப் பொருள். கருணைக் கொலை என்றால், ‘மெர்சி கில்லிங்’ என்று குறிப்பிடப்படுகிற, நோயாளி துடிப்பதை சகித்துக்கொள்ள முடியாததால் அவரைச் சாக விடுவது என்று பொருள்.

“அரசு கல்லூரி தொடங்க வேண்டும்,” என்றால், குறிப்பிட்ட பகுதியில் அரசாங்கம் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதாகும். அது தனியார் கல்லூரியாகவும் இருக்கலாம். ஆனால், “அரசுக் கல்லூரி” தொடங்க வேண்டும் என்றால், அது அரசாங்கம் நடத்துகிற கல்லூரியாகவே இருக்க வேண்டும் என்ற பொருள் தரும்.

ஒரு மாநாடு நடக்கிறது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிக் குறிப்பிடுகிறபோது ஒரு முக்கியமான பொருள் மயக்கம் ஏற்படுகிறது. “மாவட்டத்தில் அரசுக் கல்லூரி திறக்கப்பட வேண்டும். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும். விளையாட்டு மைதானங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன,” என்று எழுதப்படுகிறது. இதன் பொருள், அந்த மாநாடே இந்தக் கோரிக்கைகளைச் செயல்படுத்திவிட்டது என்பதாகிறதல்லவா?

மாவட்டத்தில் அரசுக் கல்லூரி திறக்கப்பட வேண்டும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும், விளையாட்டு மைதானங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. -இவ்வாறு எழுதுவதே சரியான பொருள் தரும்.

இதிலேயும் சுட, அந்த “வேண்டும்” என்ற சொல் மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? மாவட்டத்தில் அரசுக் கல்லூரி திறக்கப்படுதல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்படுதல், விளையாட்டு மைதானங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. -இப்படி எழுதினால் அது நேர்த்தியாகவும் இருக்கும். ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களின்
கோரிக்கைகள் பற்றி எழுதும்போதும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஊடகத்துறையில் என்னென்ன வளர்ச்சிகள், மாற்றங்கள் ஏற்பட்டாலும், செய்தி வெளியீட்டிற்கும் கருத்து வெளிப்பாட்டிற்கும் மொழி இன்றியமையாதது, சொல்லாட்சி அடிப்படையானது. “உயிர் தமிழுக்கு,” என்பதான,  உணர்ச்சிப்பூர்வமான மொழிவெறியோ பக்தியோ தேவையில்லை. ஆனால் அறிவுப்பூர்வமான பற்றும் காதலும் தேவை. அன்றாடம் சொற்களோடும் வாக்கியங்களோடும்தான் நம் பயணம் என்பதால் அவற்றை நேசத்தோடு நாடுவோமானால், மொழி நம்மைப் பாசத்தோடு அணைத்துக்கொள்ளும். அந்த அரவணைப்பின் சுகமே தனி!

“வரப்புயர நீருயரும்” என்பது போல் வாசிப்பு உயர உயர சொற்களைக் கையாளுகிற திறன் உயரும். மக்களிடையே மாற்று அரசியல் சிந்தனைகளைக் கொண்டுசெல்வதில், பத்திரிகைக் களத்தில் செயல்படுவோராக நாம் அந்தத் திறனை, ஒரு இயக்கக் கடமையாகவும் வளர்த்துக்கொள்வோமாக.

No comments: