நாடகக் களம்
நிஜம் ஒன்று நிழல் ரெண்டு
மர்மம், குற்றச் செயல், விசாரணை, இறுதியில் புதிரவிழ்ப்பு ஆகியவை நாடக மேடைக்குப் புதிதல்ல. நாடக இயக்குநர் அகஸ்டோவுக்கும் புதிதல்ல. அகஸ்டோ ஒவ்வொரு புதிய நாடகத்திலும் இவற்றைக் கையாளுகையில் அதிலிருந்து கிடைக்கும் புதிர்ச்சுவையும் தொழில்நுட்பச் சுவையும் எப்போதும் குறைவதில்லை. கீதாஞ்சலி ராஜா தயாரிப்பில் அகஸ்டோ கிரியேஷன்ஸ் கலைஞர்கள் வழங்குகிற இந்த நாடகமும் அப்படித்தான்.கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவளாக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பவள் சங்கீதா. தனது உயிர்த்தம்பியைக் காதலித்து ஏமாற்றி அவனது தற்கொலைக்குக் காரணமான ஒரு பெண்ணைக் கொடூரமான முறையில் கொலை செய்தாள் என்பது அவள் மீதான வழக்கு. குற்றத்தை அவளும் ஒப்புக்கொள்கிறாள். ஆயினும் விரைவில் பணிஓய்வு பெறடவுள்ள சிறைக் கண்காணிப்பாளருக்கு அவளை எப்படியாவது மேல் முறையீடு செய்ய வைத்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவாவது குறைக்கச் செய்ய முடியுமா என்று முயல்கிறார். அதற்கும் மறுத்துவிடுகிறாள் அவள்.
சிறுவயதிலிருந்தே படிப்பு, பல்வேறு திறமைகள், தொழில் என எல்லாவற்றிலும் அசாதாரணமான வேகத்துடன் வளர்ந்த இளம் தொழிலதிபர் ஆனந்த்.அதே வேகம் மரணத்தை நோக்கியும் ஏற்படுகிறது - ஒரு உயிர்க் கொல்லி நோய் வடிவில். மருத்துவரின் தகவல் தரும் அதிர்ச்சியிலிருந்து மீளும் அவன் எஞ்சியுள்ள நாட்களை ஒரு பெரும் சவால் மிக்க சாதனையைச் செய்வதன் மூலம் கழிக்க முடிவு செய்கிறான். அப்படியொரு சவாலாக அவன் சங்கீதாவின் வழக்கை எடுத்துக் கொள்கிறான்.
இந்த இருவரது சந்திப்பைத் தொடர்ந்து, எப்படி முடியும் என்பதை ஊகிக்க முடிந்தாலும் அதை நோக்கி எப்படிச் செல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பைக் கடைசிவரையில் காப்பாற்றியிருக்கிறார்கள்.
மரணத்தைக் கண்டு அறிவாளியான ஆனந்த், அன்பு மயமான சங்கீதா இருவருமே அஞ்சவில்லை. ஆனால் இரண்டுக்கும் இடையே எத்தனை வேறுபாடு!
கைதேர்ந்த உளவுத்துறை வல்லுநருக்கு இணையாகச் சிந்தித்து உண்மைகளைக் கண்டுபிடிக்கும் மூளைத்திறனுள்ள ஆனந்துக்கு மூளைப் புற்று என்பது ஒரு சோகம். அதே போல், சங்கீதா ஒரு தாயைப் போல் பாசத்தைப் பொழிந்த தம்பிக்கு ஏற்படும் முடிவு மற்றொரு சோகம். அவனது காதலி மீது அவளுக்கு ஏற்படும் ஆத்திரம் இயற்கையானது. அந்தக் காதலி ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதும், அதன் பின்னணியில் எப்பேற்பட்ட சுயநல சக்திகள் வேலை செய்தன என்பதும் ஒரு துப்பறியும் நாவலின் நேர்த்தியுடன் சொல்லப்படுகின்றன.
கதையில் அந்தக் காதலியும், அவளைக் கடத்திச் செல்லும் எதிரியும் முக்கியமான பாத்திரங்கள். மேடைக்கு அந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டுவராமலே காதலியின் மென்மையையும், வில்லனின் வன்மையையும் பார்வையாளர்களுக்கு உணர்த்த முடியுமா? முடியுமெனக் காட்டியுள்ளார் இயக்குநர். நாடக மேடையின் வரம்புணர்ந்த நுட்பமான உத்திகள் அவை.
ஆழ்ந்த சமூகப் பிரச்சனைகளுக்குள் கதை நுழையவில்லை. முக்கிய எதிரி யார், அவனது கொலை வெறியின் நோக்கம் என்ன என்பது பல கதைகளில் சொல்லப்பட்டதே. நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு கடைசியில் விடுதலையாகி வரும் சங்கீதா என்ன நடந்தது என்ன என்று ஆனந்திடம் வினவுகிறாள். நீதிமன்ற விசாரணையிலேயே அந்த உண்மைகள் வெளிப்பட்டிருக்குமே! அவளுக்கு மட்டும் அதெல்லாம் தெரியாமல் போயிருக்குமா? பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்ட அக்காட்சியில் அந்த உண்மைகளை வேறுவகையில் வெளிப்படுத்தியிருக்கலாம்.அகஸ்டோவின் முந்தைய ஒரு நாடகத்தில் இதே போன்ற ஒரு சிறைக் கைதி, அவன் மீதும் ஒரு கொலைப் பழி, அவனை மீட்க முயலும் ஒரு பெண், அவன் மீது கொலைக்குற்றம் சாட்டப்படக் காரணமாக ஒரு காதலி...எனப் பார்த்ததாக நினைவு. கதைக்கரு ஒன்று, நாடகம் ரெண்டு!(?)
ஆனந்தாக கே. ராஜா, சங்கீதாவாக சௌந்தர்யா, தம்பியாக ஆதித்யா போட்டிபோட்டு நடிக்கிறார்கள். சிறையதிகாரியாக எஸ். கே. ஜெய்குமார், ஆனந்தின் நண்பனாக விஜய்சந்த், தந்தையாக ஆர்.கே.கோகுல்ராஜ், அவரது அரட்டை நண்பராக கே.எஸ். பழனி, மருத்துவராக போத்திலிங்கம் ஆகியோரது ஈடுபாட்டு நடிப்பும் ரசித்துக் காணத்தக்கது.பின்னணி இசை சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. ஒளி-நிழல் வேலைப்பாடுகள் காட்சிகளுக்கும் அவற்றின் உணர்வுகளுக்கும் ஒத்துழைக்கின்றன.இப்படிப்பட்ட உத்திகளால் நாடகம் துடிப்போடு அமைகிறது. இப்படிப்பட்ட வரவுகளால் நாடக உலகம் துடிப்போடு வாழ்கிறது.
-அ.குமரேசன்
2 comments:
நாடகம் எங்கே, எந்த ஊர்லே நடந்துச்சுன்னு சொல்லுங்க?
இன்னொரு விஷயம்.
கறுப்புலே வெள்ளை எழுத்துப் படிக்கும்போது கண்ணுக்குக் களைப்பைத் தருது.
இந்தக் கறுப்புப் பதிவுக்குக் காரணம் எதாவது இருக்கா?
நேரம் கிடைச்சால் நம்ம பதிவுக்கும் வந்துட்டுப்போங்க.
வலை உலகில் கலந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.
நாடகம் எங்கே, எந்த ஊர்லே நடந்துச்சுன்னு சொல்லுங்க?
இன்னொரு விஷயம்.
கறுப்புலே வெள்ளை எழுத்துப் படிக்கும்போது கண்ணுக்குக் களைப்பைத் தருது.
இந்தக் கறுப்புப் பதிவுக்குக் காரணம் எதாவது இருக்கா?
நேரம் கிடைச்சால் நம்ம பதிவுக்கும் வந்துட்டுப்போங்க.
வலை உலகில் கலந்ததுக்கு வாழ்த்து(க்)கள்.
போன பின்னூட்டம் நாந்தாங்க. அது ப்ரொஃபைல் காமிக்காதுன்னு இன்னொண்ணு போட்டுருக்கேன் :-))))
Post a Comment