Sunday 22 August 2010

மறுவாசிப்பில் கலகக்குரல்கள்

கேள்வியே கேட்கக்கூடாதவை என்று சொல்லப்படும் இதிகாசங்களையே இன்று கேள்விகளுக்கு உட்படுத்தும் மறுவாசிப்புகள் நடக்கின்றன. பக்தி இலக்கியங்கள் என்று அடையாளம் பெற்ற பாடல்களை அப்படிப்பட்ட மறுவாசிப்புக்கு எடுத்துக்கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில ஒருவரான வழக்கறிஞர் ச. செந்தில்நாதன். அந்தப் பாடல்களை மறுவாசிப்பு செய்திருக்கிறார் என்பதை விட, அவற்றின் படைப்பாளிகளான ஆன்மீகத் தலைவர்களையே மறுவாசிப்புக்கு உட்படுத்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

பொதுவாக மறுவாசிப்புகளில், இதிகாசங்களில் புனிதப்படுத்தப்படும் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மையில் எப்படி இருந்திருக்கும் என்பது ஆராயப்படும், ஏன் இப்படி இருந்திருக்கக்கூடாது என்ற புதிய கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படும். செந்தில்நாதனின் இந்தப் புத்தகம் அந்த ஆன்மீகத் தலைவர்களது செயல்களின் பின்னணியில் இருந்த சில முக்கியமான உண்மைகளை ஆராய்கிறது, அவ்வகையில் இதனை மறுவாசிப்பு என்பதாக அல்லாமல் ஒரு முதல் வாசிப்பு என்றே சொல்ல வேண்டும்.

அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரையிலான ஆன்மீகவாதிகளை, பிறவிப் பெருங்கடல் நீந்திப் பரம்பொருள் என்ற கற்பிதத்தோடு கலந்து கரைவதற்கு வழிகாட்டியவர்களாக மட்டுமே கருதுகிறார்கள் பெரும்பாலான இறைநம்பிக்கையாளர்கள். பகுத்தறிவாளர்களிலும் கூட பலர் இவர்களது இந்த ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு, பக்தியைப் பரப்பியவர்கள்தானே என்று எடுத்துக்கொண்டு இன்னொரு பக்கத்தைக் காண மறுக்கிறார்கள்.
ஆனால் எந்தவொரு மனிதரின் செயல்பாடுகளையும் அவரது காலத்தின் அரசியல் சமூக வரலாற்றோடு இணைத்துப் பார்ப்பதும், அன்றைய சூழலில் அவர் செய்ததில் நியாயம் இருந்ததா இல்லையா என்ற புரிதலுக்கு வருவதுமே மார்க்சியப் பார்வை. செந்தில்நாதன் அந்தத் தெளிவான கண்ணாடியை அணிந்துகொண்டுதான் இவர்களது அந்த இன்னொரு பக்கத்தைப் பார்த்திருக்கிறார். அப்படிப் பார்த்ததில் அவர்கள் தம் காலத்திய ஆதிக்கப்போக்குகளை எதிர்த்துக் குரல்கொடுத்தவர்கள் என்ற உண்மை நமக்குத் தெரியவருகிறது.
ஆதிக்கசக்திகளை எதிர்த்துப் போராடுவது என்பது அரசியல், ஆலயம், பொருளாதாரம், கல்வி, கலாச்சாரம் என சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் நடந்து வந்திருக்கிறது. அருணகிரி முதல் வள்ளலார் வரை அப்படி ஒரு போராட்டத்தையும் நடத்தியிருக்கிறார்கள். இரண்டு வகையான ஆதிக்கங்கள் அவர்களது எதிர்ப்பின் இலக்குகளாக இருந்தன. ஓன்று- சமய ஆதிக்கம், இன்னொன்று- மொழி ஆதிக்கம்.

இப்படிப்பட்ட கலகக்குரல் எழுப்பியர்களின் பின்னால் மக்கள் அணிதிரண்டு செல்லாமல் தடுக்க ஆதிக்கசக்திகள் பயன்படுத்திய ஒரு உத்தி - அவர்களது சிலைகளை ஆலயங்களுக்குள் வைத்துவிடுவது. இதனால் அவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனங்களில் பதியவைக்கப்பட்டது. அவர்கள் எதை எதிர்த்துப் போராடினார்கள் என்பது மறக்கடிக்கப்பட்டது. ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தை அவர்கள் ஆன்மீக எல்லைக்குள் நின்றேதான் நடத்தினார்கள். அதாவது இறை நம்பிக்கை என்ற வட்டத்தைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியவில்லை. அவர்கள் வலியுறுத்திய பக்தி மார்க்கம் பற்றிய மயக்கம் .ஏதுமின்றி, அவர்களது உரிமைக் கலகத்தை மட்டும் அடையாளப்படுத்தியிருக்கிறது இந்நூல்.

தமிழக வரலாற்றில் நடந்த சமயப் போராட்டங்களில் நாவல் பழக்கொட்டை போல மருந்தாகும் போராட்டங்களும் உண்டு..... பண்பாட்டுத்தளத்தில் மக்களை மயக்கி ஆளும் பேராற்றலால் சமயம் தொடர்ந்து ஆட்சி புரியும்போது அதன் வட்டத்துக்குள்ளே எழும் மாற்றுக் கருத்துக்களிடம் நாம் பாராமுகமாய் இருக்க முடியாது, என்று நூலாசிரியர் கூறுவது அவரது நோக்த்தைத் தெளிவுபடுத்திவிடுகிறது.
சமய ஆதிக்கம் என்பது இந்திய மண்ணில் சாதிக்கம்தான் என்பதைத் தெளிவுபடுத்திவிடுவதால், சமய ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்களை சாதிய மேலாதிக்கத்துக்கும் பாகுபாட்டிற்கும் எதிராகக் கிளர்ந்தவர்கள் என்ற புரிதலோடு தொடர்ந்து அணுக முடிகிறது,

தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் நடந்த சமயத் திணிப்பு முயற்சிகள், பின்னர் வந்த இஸ்லாமியர் ஆட்சி, நாயக்கர்களின் அரசு, மராத்தியர் ஆளுகை, நவாபுகள் அதிகாரம் என அன்றைய அரசியல் சூழல்கள் பற்றி தொடக்கக் கட்டுரைகள் விளக்கிவிடுகின்றன, பிற்காலத்தில் வந்த ஆங்கிலேயர் ஆட்சியும் தொட்டுக்காட்டப்படுகிறது. இந்த ஆட்சி மாற்றங்களோடு சேர்ந்து நடந்த சமூக மாற்றங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. இது புத்தகத்தின் மையமான விவாதத்திற்குள் எளிதாக இட்டுச்செல்கிறது.

சாதிக்கட்டுமானத்தில் பிராமணமே உயர்ந்த சாதி மற்றவை கீழ்ப்பட்ட சாதிகளே என்பதை மக்கள் ஏற்கச் செய்வதற்காக அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல், விதியின் பெயராலும் வர்ணாசிரம ஏற்பாட்டை மக்கள் ஏற்கும் படி செய்யப்பட்டது, வர்ணாசிரமத் திணிப்பில் ஏனைய சமூகங்கள் அடக்கப்பட்டதோடு, தமிழ் மொழியும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆலயங்களில் பூசை செய்யத் தகுதிவாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் முன்நிறுத்தப்பட்டது. அதுவே ஆண்டவனுக்குப் புரிகிற புனிதமான மொழி என்றும் புகுத்தப்பட்டதை செந்தில்நாதன் ஆதாரங்களோடு காட்டுகிறார். அந்த மொழி யாருக்குத் தெரியுமோ அவர்களே பூசை செய்யும் தகுதி வாய்ந்தவர்களாக ஒப்புக்கொள்ள வைக்கிற உத்திதானே இது?

அடக்குமுறை, திணிப்பு என்று வந்தாலே அதையெல்லாம் ஏற்க மறுத்துக் கலகம் செய்வது இயற்கையே. 15ம் நூற்றாண்டில் அப்படியொரு கலகத்தைச் செய்யப் புறப்பட்டவர்தான் அருணகிரி. வசதியான குடும்பத்தில் பிறந்து காம மோகத்துடன் உல்லாசமாகச் சுற்றிக் கொண்டிருந்தவர் அவர். அவரது போக்கு கண்டு வருந்திய அவரை வளர்த்தவரான தமக்கை ஆதி, உன் இச்சையைத் தணித்துக்கொள்ள என்னையே எடுத்துக்கொள், என்று சொல்ல, மனம் திருந்திய அருணகிரி ஆன்மீக வழியில் ஈடுபட்டு சித்திகள் பெற்றார். உடல் விட்டு உடல் பாயும் அருள் பெற்ற அவர், மன்னன் கேட்டுக்கொண்டதற்காக மண்ணில் விளையாத அரிய ஆற்றல் மிக்கதொரு பாரிஜாத மலரைக்கொண்டுவர திருவண்ணாமலை ஆலயக் கோபுரத்தில் தன் மனித உடலைவிட்டுவிட்டு ஒரு கிளியின் உடலில் புகுந்து வானுலகம் சென்றார். அவரது எதிரி மன்னனிடம் சென்று அருணகிரிநாதர் இறந்துவிட்டதாக நம்பவைத்து உடலை எரிக்கச் செய்ய, பின்னர் முருகனோடு ஐக்கியமானார்...

இப்படியான மகிமைக் கதைதான் பரவலாக எல்லோருக்கும் தெரியும், உண்மையில் அருணகிரிநாதர் செய்தது ஆலயத்தில் தமிழ் வழி வழிபாட்டை மீட்பதற்கான ஒரு இயக்கமே, அவரது காலத்தில் ஏற்கெனவே சைவத்தின் பெயரால் சிவன் முன்னிலைப்படுத்தப்பட்டு, தமிழ் மக்களின் முருகன் ஒரு ஒட்டுக் கடவுளாக மாற்றப்பட்டிருநதான். கந்தபுராணம் கட்டப்பட்டு, முருகனின் காதல் மனைவி வள்ளி இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு, தெய்வானை முக்கியத் துணையாக்கப்பட்டிருந்தாள். இதன் பின்னணியில் சமூக மேலாதிக்க நோக்கம் இருந்தது தெளிவு. ஆகவேதான் அருணகிரி நாதரின் பயணம், ஆதித்தமிழ் மக்களின் முருக வழிபாட்டை மீட்பதற்கான ஒரு இயக்கமாகவும் அமைகிறது.

இவ்வாறு அருணகிரி நாதரில் தொடங்கி தாயுமானவர், சித்தர்கள், குமரகுருபரர், சிவப்பிரகாசர், அண்ணாமலை ரெட்டியார் எனத் தொடர்ந்து, வள்ளலார் இயக்கம் வரையில் ஆராயப்பட்டிருக்கிறது. இந்தத் தொடர்ச்சியில் தமிழுரிமை, சமூக உரிமை ஆகிய உணர்வுகள் அழுத்தமாக இழையோடுவதைக் காண முடிகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது அசைவுகள் மிக்க சமூக மாற்றங்களின் பின்னணியில் எழுந்தது வள்ளலார் குரல். கிறிஸ்துவ சமயம் சார்ந்தவர்களோடு நட்புக் கொண்டிருந்த வள்ளலார் அதிலிருந்து உள்வாங்கிக்கொண்ட கருத்தாக்கங்களோடு சமயச் சீர்திருத்தத்தில் ஈடுபட்டார் என்ற தகவல் எந்த அளவுக்கு இந்த ஆய்வு வரலாற்றுப் பொருளியல் கண்ணோட்டத்தோடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அந்த சீர்திருத்த முயற்சிகளும், மதமாகிய பேய் பிடியாதிருக்க வரம் கேட்ட முற்போக்கு எண்ணமும்தான் சனாதன சமயவாதிகளின் ஆத்திரத்தைக் கிளறிவிட்டன. கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக என்ற அவரது பாடல் வரி அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் கொடுமையை எதிர்த்த அரசியல் வெளிப்பாடாகவும் இருந்ததை உணர முடிகிறது. கூடுவிட்டுக்கூடு பாய்ந்ததாகக் கூறப்படும் அருணகிரி நாதருக்கு உண்மையிலேயே என்ன நடந்தது என்பது ஒரு புதிர். வடலூரில் ஜோதியில் கலந்ததாகக் கூறப்படும் வள்ளலார் என்ன ஆனார் என்பதும் கண்டுபிடிக்கவே முடியாமல் போனது. ராமாயணத்திலாவது ராமன், தடையை மீறி வேதம் பயில முயன்ற சூத்திரன் சம்புகனை நேரில் சென்று கழுத்தைச் சீவிக் கொன்றான். இந்த அண்மைக்கால வரலாறுகளிலோ நியதிகளை மீறியது மட்டுமல்லாமல் அவற்றை எதிர்த்துப் பிரச்சாரமும் செய்தவர்கள் இப்படி உருத்தெரியாமலே அழிக்கப்பட்டிருக்கிறார்கள். வரலாற்றுத் தொடர்ச்சியில் ஆதிக்கசக்திகள் தங்களது மேலாண்மையைத் தக்கவைத்துக்கொள்ள, கடவுளை நம்பிக்கொண்டிராமல் தாங்களே நேரடியாகப் படுகொலை நடவடிக்கைகளில் இறங்கிய மூர்க்கமும் இழையோடுகிறது.

தமிழகத்தில் வைணவத்தின் நிலை குறித்தும் ஒரு கட்டுரை ஆராய்கிறது. சைவ சமயத்தில் நாயன்மார்கள் எப்படி பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தார்களோ அதே போல் வைணவத்தில் ஆழ்வார்களும் பல சாதிகளிலிருந்து புறப்பட்டதை அக்கட்டுரை தெரிவிக்கிறது. நந்தனுக்கு ஏற்பட்ட கதியைப் போலவே திருப்பாணாழ்வாருக்கு நேர்ந்த கதையையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 120 ஆண்டுகள் வாழ்ந்த ராமானுஜர் ஏன் நாடுவிட்டு நாடு செல்லவேண்டியதாயிற்று என்ற தகவல்கள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

ஒரு கேள்வி,,, இப்படி இவர்களது இன்னொரு அடையாளத்தைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்? இன்று இந்துத்துவவாத எதிர்ப்பிலும், அதன் மூலக்கூறாகிய சாதிய எதிர்ப்பிலும் ஈடுபடுகிறபோது இதெல்லாம் மேற்கத்திய சிந்தனை என்று கூறிப் புறந்தள்ளும் முயற்சி நடக்கிறது. மேற்கத்திய சிந்தனை என்று கூறுவது ஒரு மோசடி, இந்த மண்ணில் ஒரு நீண்ட போராட்டச் சங்கிலியும் அதன் கண்ணிகளும் இருந்து வருவதை அவர்களுக்கு உரத்துச் சொல்ல இத்தகைய ஆய்வுகள் பயன்படும். இந்த ஆன்மீகத் தலைவர்களது இன்னொரு பக்கத்தை மக்களுக்கு எடுத்துக்கூறுவது, ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் அந்த மக்களைத் திரட்டவும் பயன்படும்,
-அ. குமரேசன்

அருணகிரி நாதர் முதல் வள்ளலார் வரை - ஒரு மறுவாசிப்பு
ச. செந்தில்நாதன்
வெளியீடு:
புதுமைப் பித்தன் பதிப்பகம்,
ப.எண் 57, 53வது தெரு,
9வது அவென்யூ,
அசோக் நகர்,
சென்னை 600 083
பக்கங்கள்:152 விலை: ரூ.80-00

No comments: