Friday 6 August 2021
பார்த்த படத்தை மறுபடி பார்க்க, படித்த கதையை மீண்டும் படிக்க விரும்புவதன் உளவியல்
ஏற்கெனவே நாமறிந்த ஒரு நிகழ்வு பற்றி ஒருவர் பேசுகிறபோது, “தெரிஞ்ச கதையையே சொல்றியே…” என்று அலுத்துக்கொள்வோம். “பார்த்த படத்தையே மறுபடி பார்க்கிற மாதிரி இருக்கு,” என்று சலித்துக்கொள்வோம். ஆனால் ஒரு கதை வாசிப்பில் கவிதை முகர்வில், ஓவிய நுழைவில், நாடக அமர்வில், திரைப்படப் பார்வையில் மறுபடி மறுபடி ஈடுபடுகிறபோது இந்த அலுப்போ சலிப்போ ஏற்படுவதில்லை. கலை இலக்கியப் படைப்புகளுக்குள் திரும்பத் திரும்பப் பயணிக்கிற அனுபவம் எந்த அளவுக்குத் தனித்துவமானதோ, அதே அளவுக்கு எல்லோருக்குமே பொதுவானதும் கூட.
அரசரின் ஐயத்தைத் தீர்க்கும் செய்யுளோடு வருகிறவர்க்கு ஆயிரம பொற்காசுகள் என்ற முரசறிவிப்பைக் கேட்டதிலிருந்து தருமியாகிய நாகேஷ் புலம்பித் தள்ளுவது, ஆலய மண்டபத்தில் அவர் முன் வருகிற சிவனாகிய சிவாஜி கணேசன் பாடலொன்றைத் தருவது, சிவனின் தகுதியை உறுதிப்படுத்த தருமி அங்கேயே ஒரு நுழைவுத் தேர்வு நடத்துவது, “ஆமா, பரிசு கொடுத்தால் நான் வாங்கிக்கொள்கிறேன், வேறு ஏதாவது கொடுத்தால்…” என்று பம்முவது, அரண்மனையில் பாட்டின் பொருள் கேட்கும் நக்கீரனிடம் “அரசருக்கே பொருள் விளங்கிவிட்டது, உமக்கு என்னய்யா வேண்டும்” என்று திணருவது, “எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்கேற்பப் பரிசைக் குறைத்துக்கொண்டு தரலாமே” என்று கோருவது, “என்ன குற்றம் கண்டீர்” என்று சினத்தோடு கேட்கும் சிவனிடம் நக்கீரன், “புலவருக்குப் பொய்யுரை தேவையில்லை,” என்று சுட்டுவது, “யாராக இருந்தாலும் கூந்தல் மணம் செயற்கையானதுதான்,” என்று இயற்கை உண்மையை வலியுறுத்துவது, “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று புலமைத் துணிவோடு நிமிர்வது, அதன் முன் குனிந்துபோய் நக்கீரனைச் சுட்டெரிகிற சிவன் பின்னர் “நின் தமிழோடு விளையாடவே யாம் வந்தோம்,” என்று சமாதானம் சொல்வது….
‘திருவிளையாடல்’ திரைப்படத்தை பக்திப் பரவசத்தோடு பார்த்தவர்களைத் தாண்டி, இந்தக் காட்சியின் உரையாடல், நடிப்பு, நகைச்சுவை, இலக்கிய-அறிவியல் வாதம் ஆகிய நயங்களுக்காக நாத்திகர்களும் பல முறை ரசித்துச் சிரித்திருப்பார்கள்! படத்தின் இந்தக் காட்சி மட்டுமே தனி ஒலிப்பதிவு வட்டாக வெளியிடப்பட்டு பல்லாயிரக்கணக்கில் விற்பனையானது.
திரையரங்கில் அருகிலிருப்பவர் கதையோட்டத்தைச் சொல்ல முயன்றால் நமக்கான புத்துணர்வைக் கெடுக்கிறாரே என்று தடைபோடுகிறோம். ஆனால் சில படங்களை மறுமறுமறுபடி பார்ப்பதற்கு நமக்கு நாமே தடை போட்டுக்கொள்வதில்லை, மனதில் நன்கு பதிவான கதையோட்டத்தோடு ஒன்றிப்போகிறோம். ஒரு படத்தில் அடுத்து இந்தத் திருப்பம்தான் நிகழப்போகிறது, இப்படியொரு வசனம் வரப்போகிறது என்று நன்றாகத் தெரிந்தும் விருப்பம் குன்றாமல் ரசிக்கிறோம். நாவலின் கதைமாந்தர்கள் இப்படியிப்படியெல்லாம் மாறுவார்கள் என்று நன்றாகத் தெரிந்தும் மறுபடி எடுத்து வாசிக்கிறோம். முன்பே அறிந்த கவிதையின் முத்தாய்ப்பில் சோர்விலாமல் மூழ்கி எழுகிறோம். ஓவியத்துள், அதிலும் நவீன ஓவியத்துள் மறுமறுமறுபடி நுழைகிறபோது புதிய பயணச் சுகம் பெறுகிறோம்.
அன்றாடம் சாப்பிடுகிற உணவுதான் என்றாலும் அடுத்தநாளும் அதுவே பரிமாறப்படுகிறபோது நாசியும் நாக்கும் வயிறும் மனமும் ஆர்வத்தோடு தயாராகிவிடுவது போன்ற இந்த அனுபவம் பற்றி யோசித்தால் அதுவும் சுவையாக இருக்கிறது. ஏன் சில கலை இலக்கிய ஆக்கங்களைத் திரும்பத்திரும்ப ரசிக்கிறோம்? இந்தக் கேள்விக்கு விடை தேடும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உளவியலும் சமூகவியலும் மானுடவியலும் சார்ந்த அந்த ஆய்வுலகம் இந்த ரசனை பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது. ‘ஸ்டார்ஸ் இன்ஸைடர்’ என்ற இணையத்தளத்தில் இத்தகைய ஆய்வுகள் முன்வைக்கும் கருத்துகள் ஒரு நழுவுபடத் தொகுப்பாகவே தரப்பட்டுள்ளன. அந்தத் தொகுப்போடு நமது சொந்த அனுபவங்களையும் கிளறிவிட்டோமானால் புதிய சிந்தனைகளும் ஊறுகின்றன.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக உளவியல் துறை பேராசிரியர் நீல் பர்ட்டன் இது தொடர்பாக ‘ஹஃப்போஸ்ட்’ இணைய ஏட்டிற்கு அளித்த பேட்டியில், “நமது அன்றாட வாழ்க்கை அயர்வூட்டுவதாக, பல நேரங்களில் அபத்தமானதாகவும் கூட இருக்கிறது. கடந்தகால நினைவு நமக்கு மிகவும் தேவைப்படுகிற சூழலையும் தொலைநோக்கையும் திசைவழியையும் அளிக்கிறது. நம் வாழ்க்கை இப்போது தோன்றுவது போன்றதல்ல என்று நினைவூட்டி நம்பிக்கையளிக்கிறது,” என்று கூறுகிறார்.
“தற்காலச் சூழலில் ஆறுதலுக்கான ஒரு வடிவமாகப் பழைய நினைவைப் பயன்படுத்திக்கொள்கிற ஒரு வழிதான் ஒரு கலைப் படைப்பைத் திரும்பவும் பார்ப்பது,” என்கிறார், ‘ஹெவன் அண்ட் ஹெல்: தி சைக்காலஜி ஆஃப் எமோஷன்ஸ்’ (சொர்க்கமும் நரகமும்: உணர்ச்சிகளின் உளவியல்) என்ற ஆய்வு நூலை எழுதியிருப்பவரான பர்ட்டன்.
மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ள வாழ்க்கையில் எப்போதுமே அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு பதைப்பு மனசுக்குள் பதுங்கிக்கொள்கிறது. அடுத்து என்ன நடக்க வேண்டும், அது எப்படி நடக்க வேண்டும் என்ற நியாயமான ஆசைகள் எல்லோருக்கும் இருக்கும் என்றாலும் அதுதான் நடக்கும், அப்படித்தான் நடக்கும் என்ற நிச்சயம் எவருக்குமே இருக்காது. கணித்தபடியே நிகழாது என்பதுதானே வாழ்க்கையின் ஈர்ப்புவிசையே?
பதைப்புத் தணிப்பு
ஏற்கெனவே படித்த ஒரு கதையை மறுபடி படிக்கிறபோது, பார்த்த ஒரு திரைப்படத்தை மறுபடி பார்க்கிறபோது அடுத்து நிகழப்போவதை அறிந்துவைத்திருக்கிறோம். அப்படியே நிகழ்கிறபோது உண்மை வாழ்க்கையினால் மனசுக்குள் பதுங்கியிருக்கும் பதைப்பைத் தணித்துக்கொள்கிறோம். இதை நாம் திட்டமிட்டுச் செய்யாமலிருக்கலாம், ஆயினும் இதனையொரு சுய சிகிச்சையாக நாமறியாமலே மேற்கொள்கிறோம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். குடும்பத்தில் ஒரு நெருக்கடி, தொழிலில் ஒரு பிரச்சினை, நட்பில் ஒரு விரிசல், காதலில் ஒரு சிக்கல், படிப்பில் ஒரு தேக்கம் என்ற சூழல்களில் முன்பே பார்த்திருக்கிற ஒரு சினிமாவையே ஆகப் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறோம். அதிலும், முந்தைய படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் மட்டுமே தனித் தனித் தொகுப்புகளாக யூ டியூப் தளத்தில் கிடைப்பதால் அதிலே ஒன்றை கிளிக் செய்துவிட்டு நாற்காலியில் சாய்ந்துகொண்டு, “பாடி ஸ்ட்ராங்கு, பேஸ்மென்டு வீக்கு” முன்பே பல முறை சிரித்த இடங்களுக்காகக் காத்திருக்கிறோம்.
சிறுவயது முதலே கேட்டு வந்திருக்கிற இதிகாச, புராண, பக்தி இலக்கிய, குரான் தொடர்பான, விவிலியம் சார்ந்த, இன்னபிற பிரிவுகளின் கதைகளை அந்தந்தச் சமயம் சார்ந்தவர்கள் என்றைக்குமே கேட்கத் தயாராக இருக்கிறார்கள். இதன் உளவியலும் அடிப்படையில் தற்காலச் சவால்களிலிருந்து தற்காலிகமாகவேனும் தப்பித்துக்கொள்வதாகவே இருக்கக்கூடும்.
“ஒரு சினிமாவை அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை மறுபடியும் பார்ப்பது மக்களுக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது,” என்கிறார் ஊடகத்துறை உளவியல் ஆய்வாளர் பமீலா ரூட்லெட்ஜ். அமெரிக்காவின் ஃபீல்டிங் கிராஜூவேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர் பல்வேறு முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிலும், நாடகக்குழுக்களிலும், பிற ஊடகங்களிலும் உளவியல் ஆலோசனைகள் வழங்குகிறவர். “ஒரு நகைச்சுவைக் காட்சியைப் பார்க்கிறபோது நீங்கள் மனம்விட்டுச் சிரிக்கிறீர்கள். ஒரு காதல் படத்தைப் பார்க்கிறபோது ஒரு மயக்கநிலையை அடைகிறீர்கள்… இதே போல மற்ற வகையான அனுபவங்களும் அமைகின்றன,” என்று அவர் கூறுவது கவனத்தில் கொள்ளத்தக்கதே. இதுவும் தற்போதைய சூழலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறும் மனநிலையோடு இணைகிறது எனலாம்.
குறிப்பாக, சர்வாதிகாரிகள், உலகச் சந்தை ஆக்கிரமிப்பாளர்களின் நாடுபிடிக்கிற வெறியால் ஏற்படாத, ஆனால் இவர்களது ஆதிக்கவாத அரசியலால் தீவிரமாகியிருக்கிற உலகப்போர் போன்ற இன்றைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலில், வீடுகளில் முடங்க நேர்ந்திருக்கிற மக்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சிகளிலும் இணையத் தளங்களிலும் பழைய திரைப்படங்களின் வழியாகவே அந்த முடக்கத்தை நீவிவிட்டுக்கொள்கிறார்கள். என்னதான் ஓடிடி மேடைகளில் சில புதிய திரைப்படங்கள் வந்தாலும், முன்பு தங்கள் மனம் கவர்ந்த படஙகளையே தேடுகிறார்கள். புதுப்படங்களில் தங்களுக்குப் பிடித்துப்போகிறவற்றை மட்டும் மறுபடி மறுபடி பார்க்கிறார்கள். இல்லையேல் இருக்கவே இருக்கின்றன யூ டியூப் காணொளித் தளத்தில் உலாவரும் நகைச்சுவைக் காட்சிகள். இந்த வகை மறுபார்வை, பெருந்தொற்றுக்கால மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் துணை செய்கின்றன.
திரைப்படத்தை மறுபடி பார்ப்பது அதன் கதை தொடர்பான பழைய நினைவுக்குள் மட்டுமல்ல, அதை முதல் முறையாக யாரோடு பார்த்தோம் என்ற அனுபவத்திற்குள்ளேயும் இட்டுச் செல்கிறது, அவநம்பிக்கை தரும் செய்திகளே வந்து தாக்கிக்கொண்டிருக்கிற குழப்பமான உலகச் சூழலில் பழைய படத்தின் கதையோட்டம் நமக்கு நன்றாகத் தெரியும் என்பதால் வாழ்க்கை ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுக்கோப்புடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, தன் வரலாற்றைக் கலையோடு சேர்ந்து திரும்பிப்பார்ப்பது எதிர்காலம் பற்றிய ஆக்கப்பூர்வமான எண்ணங்களை உருவாக்குகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். நேற்றைய வரலாற்றிலிருந்துதான் இன்றைய பரிணாமம் நிகழ்ந்தது. இன்றைய வாழ்க்கையிலிருந்துதான் நாளைய பரிணாமம் நிகழும். இந்த இயக்கவியல் பற்றி அறிந்திராதவர்களிள் அனுபவமாகவும் மாற்றுகிற ரசவாதம் கலை-இலக்கியத்துக்கே உரியது. அதற்கொரு சான்றாக இந்தப் பழைய கதை ஈடுபாட்டைச் சொல்லலாம்.
அவ்வப்போது கவ்விக்கொள்கிற தனிமை உணர்வின்போது கலையும் இலக்கியமும் துணையாகின்றன. அதிலேயே, ஒரு புதிய சினிமாவை விட, ஒரு புதிய நாவலை விட பழைய படமும் பழைய புத்தகமும் நாம் தனிமையில் இல்லை, சக மனிதர்களோடு இருக்கிறோம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன. அவற்றில் உலாவுகிற கதைமாந்தர்கள் ஏற்கெனவே நமக்கு அறிமுகமானவர்களாக இருக்கிறார்கள் அல்லவா?
மாறாமையில் நாட்டம்
இதில் ஒரு எதிர்மறைக் கோணமும் இருக்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்றாலும் கூட, பலர் பொதுவாக மாற்றங்களை விட, மாறாத நிலைமைகளையே விரும்புகிறார்கள். வறுமையின் அவலத்தில், கொடுநோயின் துயரத்தில் தவிப்போர் அந்த நிலைமைகள் மாற வேண்டும் என்று ஏங்கலாம். மற்றபடி, தற்போதுள்ள நிலைமையே நீடிக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். எப்படி இருக்குமோ என்ற உறுதியற்ற புதிய மாற்றத்தைவிட, எப்படி இருந்தது என்று உறுதியாகத் தெரிகிற பழைய நிலைமையே மேல் என்ற மனப்போக்கிலிருந்து வருகிற. அந்த விருப்பத்தைப் பழைய படக்காட்சிகள் ஈடு செய்கின்றனவாம்.
மாற்றத்திற்குத் தயாராக இல்லாத மனநிலை சமூக முன்னேற்றத்திற்குத் துணை வராமல் பின்தங்கிவிடக்கூடும். அடிப்படை மாற்றங்களுக்கான இயக்கங்களில் மக்களின் பெருந்திரள் பங்கேற்புகள் ஏன் அரிதாகவே நிகழ்கின்றன என்ற கேள்விக்கான விடை இதிலேயும் இருக்கிறதோ என்னவோ.
ஏற்கெனவே நன்கு அறிமுகமான, பழக்கமான சூழலில் இருக்கவே பலரும் விரும்புகிறார்கள். அதிலே ஒரு பாதுகாப்பையும் வசதியையும் உணர்கிறார்கள். பழைய படங்களைப் பார்க்கிற அனுபவம் இந்தப் பாதுகாப்பையும் வசதியையும் தருகிறது என்ற ஒரு கோணமும் முன்வைக்கப்படுகிறது. “ஏதோவொன்று நமக்குப் பிடித்துப்போவதற்குகான ஒரு காரணம் அது முன்பே நமக்குப் பழக்கமானதாக இருப்பதுதான்,” என்று எழுதுகிறார் ‘தி அட்லான்டிக்’ பத்திரிகையின் முன்னணிக் கட்டுரையாளரான டெரேக் தாம்ஸன். நமக்குப் பிடித்தமானதை மேலும் மேலும் கவனிக்கிறோம் என்பதோடு, மேலும் மேலும் கவனிக்கக் கவனிக்க, அது நமக்கு மேலும் மேலும் பிடித்துப்போகிறது. ஒருவரோடு அதிக நேரம் செலவிடுகிறபோது அவர் நமக்கு நெருக்கமானவராகிவிடுவது போன்றதுதான் இது என்று இந்த உளவியல் கோணத்திற்கு விளக்கமளிக்கிறவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த காலத்தை வண்ணமயமானதாகவும் வாசம் மிக்கதாகவும் கருதுகிற மனப்பான்மை பொதுவாகவே இருக்கிறது. பழைய படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பிடித்துப்போவதற்கு இந்த மனப்பான்மையும் ஒரு காரணம் என்கிறார்கள் உளவியலாளர்கள். “அந்தக் காலம் போல வராதுப்பா” என்று இழந்த காலத்தையே நினைத்துக்கொண்டு இருக்கும் காலத்தை நழுவவிடுகிறவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்த மனப்பான்மையோடு இருப்பவர்களில் ஒரு பகுதியினர், பழம்பெருமையை நிலைநாட்டுவதாகச் சொல்லி வீசப்படுகிற சாதிய மதவாத இனமோக வலைகளில் சிக்கத்தானே செய்கிறார்கள்.
“பார்த்த காட்சிகளைத் திரும்பவும் பார்ப்பது ஓரளவு வரையில் நல்லதுதான். ஆனால், கடந்தகாலத்திற்காக நிகழ்காலத்திலிருந்து முற்றிலுமாக ஒதுங்குவதும், கடந்தகாலம் பற்றிய ஒரு மயக்கநிலைக்குச் செல்வதும்தான் ஆபத்தானது. திரைப்படங்களோ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ பொழுதுபோக்கோடு நிற்பதில்லை. அவை நமது மனநிலை, மாண்புகள், அக்கறைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டுகிற கூறுகளாகவும் இருக்கின்றன. பழைய ஆக்கங்களிலேயே மூழ்குகிற ஒவ்வொரு நேரத்திலும் நாம் ஒரு புதிய அனுபவத்திற்கான கதவை அடைத்துவிடுகிறோம். அத்துடன், ஏற்கெனவே இருந்துவருகிற அதே மனநிலை, மாண்புகள், அக்கறைகள் ஆகியவற்றில் நம்மை மேலும் இறுக்கமாகப் பொறுத்திக்கொள்கிறோம்,” என்ற எச்சரிக்கையும் ஒலிக்கிறது. அந்த மனநிலையும் மாண்புகளும் அக்கறைகளும் முற்போக்கான, அனைவரையும் நேசிக்கிற, சமமாக மதிக்கிற, சமத்துவத்தை நோக்கிய திசையில் இருக்குமானால் அவற்றில் நம்மை இறுக்கமாகப் பொறுத்திக்கொள்வது இனியதுதான். நேர்மாறாக இருந்துவிட்டால்?
அறிவியல்பூர்வமாக அணுகுகிறவர்களுக்கு, பழைய படம் அல்லது பழைய நாவல் அனுபவங்கள், தற்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவுகின்றன. சொந்த வாழ்க்கையின் தற்கால நிகழ்வுகள் போன்ற நிலைமைகளில் அந்தக் கதைகளின் மனிதர்கள் எப்படிச் செயல்பட்டார்கள் என்று உரசிப் பார்க்கவும், அதிலிருந்து நிகழ்காலத்தைக் கையாளவும் கற்பிக்கின்றன என, மறுபார்வைகளின் ஆக்கமான தாக்கங்கள் பற்றிய நன்னம்பிக்கையும் பகிரப்படுகிறது.
“மறு திரையிடல்களின் அறிவியல்: நாம் மறுபடி மறுபடி நமக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது அல்லது பாடலைக் கேட்பது ஏன்” என்ற தலைப்பிலேயே ஆராய்ந்தவர்களான கிறிஸ்டெல் அன்டோனியா ரஸ்ஸெல், சிட்னி லெவி இருவரது ஆய்வறிக்கை ‘சயின்ஸ் டெய்லி’ பத்திரிகையில் வெளியானது. அதில் அவர்கள், “ஒரே நிகழ்வில் மறுபடியும் ஈடுபடுவது அனுபவத்தைச் சீர்ப்படுத்திக்கொள்ள வைக்கிறது. அவ்வாறு ஈடுபடுகிறவர்கள் தாங்கள் தேர்வு செய்த கலையாக்கங்களில் துய்த்து மகிழ்ந்ததையும், புரிந்துகொண்டதையும் கருத்தில் கொள்கிறார்கள். பழைய நினைவுகளைப் புதிய தொலைநோக்குகளோடு இணைத்துப் பார்க்கிறபோது ஒருவகை வாழ்வியல் மெய்மைநிலை குறித்த தெளிவு பிறக்கிறது” என்ற ஒரு கருத்தை முன்மொழிந்திருக்கிறார்கள்.
முழுமையான உணர்வு
தமிழில் படைப்புலகின் கவிதை, கதை, திரைப்படம், உளவியலோடும் இணைந்த சித்த மருத்துவம் ஆகிய தளங்களில் தடம் பதித்திருப்பவரான கவிஞர் குட்டி ரேவதி, ”அறிமுகமான ஒரு படைப்பில் மறுபடியும் பயணிக்கிறபோது ஒரு முழுமையான உணர்வு கிட்டுகிறது. கதைக்களம், கலைஞர்களின் பங்களிப்பு, இயக்குநரின் சித்தரிப்பு, ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட கலைக்கூறுகள் எல்லாமாகச் சேர்ந்து நமக்கு ஏற்படுகிற ஈடுபாட்டிலிருந்து கிடைக்கிற அந்த முழுமையுணர்வுக்காகவே, யார் யாருக்கு என்ன நடக்கப்போகிறது, எங்கே திரும்பப் போகிறது, எப்படி முடியப்போகிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தாலும் நமக்குப் பிடித்தமான ஒரு படத்தை மறுபடி மறுபடி பார்க்க விரும்புகிறோம். அதே போல் ஒரு படைப்பாளியின் மூலம் நம்மோடு பழகிவிட்ட மனிதர்கள், வாழ்க்கைச் சூழல்கள், சமூக நிலைமைகள், இலக்கிய நயங்கள் எல்லாமாகச் சேர்ந்து ஏற்படுகிற ஈடுபாட்டிலிருந்து ஒரு முழுமையுணர்வு கிடைக்கிறது. அதற்காகவே அந்தப் படைப்பை மறுபடி மறுபடி படிக்க விரும்புகிறோம்,” என்கிறார்.
“நெஞ்சம் மறப்பதில்லை பாட்டை ஒருவர் அதே சுரம், அதே லயம், அதே போன்ற இசைப்பின்னணி எல்லாவற்றோடும் சிறப்பாகவே பாடுவார். அதை ரசிப்போம் என்றாலும், மூலப் பாடலைக் கேட்கிறபோதுதான் அந்த முழுமையான உணர்வு கிடைக்கிறது. இலக்கியத்தில் பஷீர் படைப்புகளை மறுபடி வாசிக்கிறபோது அந்த முழுமைத்தன்மையை உணர்கிறேன். அதே போல் பேறு பல படைப்புகளும் ஈர்க்கின்றன. காதல், தாயன்பு, அண்ணன் தங்கை பாசம் போன்றவை வாழ்க்கையில் முழுமையாக அமைவதில்லை. அவற்றை ஒரு படைப்பு நேர்த்தியாக அமைத்துக் காட்டுகிறபோது கரைந்துபோகிறோம். அப்படிக் கரைந்துபோவதற்கான வாய்ப்பையும் இது தருகிறது,” என்றும் அவர் கூறுகிறார்.
சொந்த வாழ்க்கையில் காண முடியாத வாய்ப்புகளைப் படைப்புகளுக்குள் கண்டு, அந்தக் கணத்தின் உணர்வாக அதை அமைத்துக்கொள்கிற வேட்கையும் இதில் பொதிந்திருக்கக்கூடும். பார்த்த படங்களும் படித்த கதைகளும் கேட்ட பாட்டுகளும் லயித்த ஓவியங்களும் அந்த வாய்ப்புகளுக்கான கணங்களை உறுதிப்படுத்தி வழங்குகின்றன.
இலக்கியத்தில் மறுவாசிப்பு, மறுபடி வாசிப்பு இரண்டும் ஒன்றல்ல. ஆனால் மறுபடியும் வாசிக்கிறபோது அதை மறுவாசிப்பாகவும் வளர்த்துக்கொள்ள முடியும், புதிய புரிதல்களுக்கு வர முடியும். அதே போல் ஒரு திரைப்படத்தை மறுபடி பார்க்கிறபோது அதைப்பற்றிய மறுபார்வைக்கும் செல்ல முடியும். கலை இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சமூக மேம்பாட்டிற்கும் மறுபடி வாசித்தல், மறுவாசிப்பில் ஈடுபடுதல், மறுபடி பார்த்தல், மறு பார்வையில் ஈடுபடுதல் இவை பங்களித்துக்கொண்டிருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment