Sunday 13 October 2024

அதற்குப் பிறகு என்ன நடக்கிறது?


காலங்காலமாக மனிதர்களைக் குடைந்து கொண்டிருக்கிற கேள்வி - “மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது?” தொன்மையான சித்தாந்தங்களிலிருந்து நவீன தத்துவங்கள் வரையில் இந்தக் கேள்விக்கான பதிலைத்தேடுவதில் தான் பிறந்தன எனலாம். அவற்றின் தொடர்ச்சியாக, எப்போதும் இருந்து வந்திருக்கிற “அனைத்தையும் படைத்தது யார்” என்ற விசாரணையோடு இணைத்து கடவுள் கற்பிதங்கள் உருவாக்கப்பட்டன. கடவுளைத் தொழுதால் மரணத்திற்குப் பின் மகிழ்ச்சிகரமான மறுவாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கைகள் ஊன்றப்பட்டன. தொழுவதற்கான வழிபாட்டுச்சடங்குகள் வகுக்கப்பட்டன. வாழ்க்கை நடைமுறைகளோடு இணைத்து, குழுக்களாக, கூட்டங்களாக, சமூகங்களாக, நிறுவனங்களாகக் கட்டமைக்கப்பட்டது. மதங்கள் பிறந்தன.

இறப்புக்குப் பிறகு மனிதர்கள் ஆவிகளாகச் சுற்று கிறார்கள், ஆசைகள் நிறைவேறாமல் அற்பாயுசில் இறக்கிறவர்கள் பேய்களாகிறார்கள். உடல் அழிந்தா லும் ஆன்மா அழியாமல் தன் நிறைவைத் தேடுகிறது, அந்தத் தேடலில் தன்னைப்படைத்துப்புவிக்கு அனுப்பி யபரம் பொருளைக் கண்டடைந்து சரணாகிறது…. என்று புகட்டப்பட்டது. சரணடைய முடியாத ஆன்மாக்கள் மறுபடி மறுபடி மனிதர்களாகப் பிறவியெடுக்கின்றன என்றும், ஐக்கிய மாகிற வரையில் பிறவிகள் தொடர்கின்றன என்றும் விளக்கமளிக்கப்பட்டது. மரணத்திற்குப்பிந்தைய நிலை பற்றிய பல்வேறு கோட்பாடுகள் இன்றளவும் சொல்லப்படுகின்றன. ‘ஸ்டார்ஸ் இன்சைடர்’ இணைய ஊடகமும், ‘விக்கிபீடியா’ போன்ற தரவுத்தளங்களும் தெரிவிக்கும் தகவல்கள் சுவையானவை.

கனவுக்கோட்பாடு

2400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன ஞானி ஜுவாங்ஸி என்ற ஜுவாங்ஜூ. அவர் ஒரு கனவு கண்டா ராம். அதில் ஒரு வண்ணத்துப்பூச்சி வந்ததாம். உறக்கம் கலைந்து எழுந்தவருக்கு ஒரு சந்தேகம் தொற்றிக் கொண்டது. “நமது கனவில் வண்ணத்துப்பூச்சி வந்ததா அல்லது வண்ணத்துப்பூச்சியின் கனவில் நாம் வந்தி ருக்கிறோமா” என்பதே அந்தச் சந்தேகம். அதை ஒரு தத்துவமாக வரித்துக்கொண்டு உருவாக்கப்பட்டது இந்தக்கோட்பாடு.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையே ஏன் ஒரு கனவாக இருக்கக்கூடாது என்ற கேள்வி இதில் முன் வைக்கப்படுகிறது. உங்களைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டால் கனவா இல்லையா என்று தெரிந்து விடுமே என்று சொல்லப்பட்ட போது, அப்படிக் கிள்ளு வதும் வலிப்பதும் விழிப்பதுமே கூட கனவின் ஒரு பகுதி யாக ஏன் இருக்கக்கூடாது என்று இந்தக் கோட்பாட்டா ளர்கள் கேட்கிறார்கள். நாம் இறக்கிற போது ஒரு குழப்பமான, ஆழமான, நீண்ட கனவிலிருந்து நாம் விழித்தெழுகிறோம் – அவ்வளவு தான் என்கிறார்கள்.

ரஸ்டாபேரியர் கோட்பாடு

1930களில் வட அமெரிக்கக் கண்டத்தின் ஜமைக்கா தீவுநாட்டில் உருவாக்கப்பட்ட ஸ்டாபேரி என்ற புதிய மதத்தின் தத்துவம் இது. அங்கே ஆதிக்கம் செலுத்தி வந்த பிரிட்டிஷ் கலாச்சாரத்திற்கு எதிராக இந்த மதத்தின் வழிகாட்டல்கள் போதிக்கப்பட்டன. எத்தி யோப்பியாவை ஆண்ட ஹெய்ல்செலஸ்சி என்ற மன்னனைக் கடவுளின் தூதராக ஏற்றுக் கொண்ட மதம் இது.

இவர்களது கோட்பாட்டின்படி, வாழ்க்கை நிலை யானது. கடவுள் (ஜா) வகுத்த நெறிகளை மீறுகிற வர்கள் தான் இறுதியான மரணத்தைச் சந்திக்கிறார்கள். கடவுள் காட்டிய வழியில் செல்கிறவர்கள் அருவ மான வடிவில் நிலைத்து வாழ்வார்கள். இந்தத் தத்து வத்தின் காரணமாக, இந்தச் சமூகத்தில் இறந்தவர் களுக்கான இறுதிச் சடங்குகளுக்கு மிகுந்த முக்கியத்து வம் அளிக்கப்படுவதில்லை. 

உருவகக் கோட்பாடு (சிமுலேசன்)

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறை பேராசிரியர் நிக்போஸ்ட்ரோம் என்பவர் 2001 இல் முன் வைத்த கோட்பாடு இது. கணினியில் ஒரு செயல்பாடு எப்படி முன்னரே நிரல் வழிப்படுத்தப்பட்ட தாக இருக்கிறதோ, அதே போல் மனித வாழ்க்கையும் ஒரு உயர்சக்தியால் திட்டமிடப்பட்டிருக்கிறது. வாழ்க்கை யின் அனைத்து நிகழ்வுகளும் இப்படி முன்கூட்டியே வரையறுக்கப்பட்டவைதான். மரணமும் அப்படித்தான் என்கிறது இந்தக் கோட்பாடு.

நீயாருடன் பேசுகிறாய், உனக்கு என்ன நடக்கிறது, எல்லோருமாய் எங்கே போகிறீர்கள் என்பதெல்லாமே பெரிய நிகழ்ச்சி நிரலின் கூறுகள்தான். கைப்பேசி விளை யாட்டுகள் போன்றவைதான் வாழ்க்கை நிகழ்வுகள். அதில் ஒரு கதாபாத்திரத்துடன் போட்டியிட்டு நீ வெற்றி பெற்றால் மகிழ்கிறாய், தோல்வியடைந்தால் அலுத்துக் கொள்கிறாய். ஆனால் உண்மையில் நீயாக வெற்றியோ தோல்வியோ அடையவில்லை. ஏற்கெனவே நிரல் வழிப்படுத்தப்பட்டிருக்கிற முறைகளில் ஒன்றைச் செய்கிறபோது வெற்றி என்றும், வேறொன்றைச் செய் கிறபோது தோல்வி என்றும் முடிவு வருகிறது. அப்ப டித்தான் மனித வாழ்க்கையும் வடிவமைக்கப்பட்டி ருக்கிறது. அந்தக் கதாபாத்திரங்களில் ஒன்றுதான் நீ என்கிறது இந்தக்கோட்பாடு. கணினி, விளையாட்டு, நிரல்வழி என்றெல்லாம் நவீனமாகக் கூறப்பட்டாலும் உண்மையில், மனித வாழ்க்கையின் தொடக்கமும் தொடர்ச்சியும் முடிவும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவை தான் என்ற தலை யெழுத்துக் கோட்பாட்டின் புதுப்பிக்கப்பட்ட வடிவமே இது என்று புரிந்து கொள்ளலாம்.

பரோவா கோட்பாடு

இன்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டை ஆண்ட துபரோவா மன்னர் பரம்பரை. அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கிறார்கள் என்றால் அது வாழ்க்கையின் முடிவல்ல, ஒரு புதிய வாழ்க்கைக்கான இடைக்கட்டம்தான் என்று அவர்கள் நம்பினார்கள். மரணமடைகிறவர்களின் “கா” (ஆன்மா) மறுபடியும் உடலைத் தேடிவரும் என்றும் நம்பினார்கள்.

அந்த நம்பிக்கையின் காரணமாக, மன்னர் குடும்பத்தினர் இறந்துவிட்டால், அவர்களது உடலைப் பதப்படுத்தி வைக்கத் தொடங்கினார்கள். “மம்மி” எனப்படும் அந்த உடல்களை பிரமிடுகளில் வைத்துப் பாது காத்தார்கள். இன்றைக்கு அந்த மம்மிகள் தொல்லியல் ஆராய்ச்சிகளுக்கும் திகிலூட்டும் சினிமாக் கதைகளுக்கும் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முடிவிலா வாழ்க்கை

வாழ்க்கை முடிவற்றது. ஒருவர் மரணிக்கிற போது, உடனே அவர் மறுபிறவி எடுக்கிறார் என்று போதிக்கிற கோட்பாடு இது. வேறு பல மதங்களில் உள்ள மறுபிறவிக் கோட்பாட்டிற்கும் இவர்களது நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இறக்கிறவர் வேறு புதிய மனிதராக மறுபிறவி எடுப்பதில்லை; மாறாக அதே மனிதராகப் புதுப்பிறவி எடுக்கி றார். ஆனால் முந்தைய பிறவியின் நினைவுகள் எது வுமே இல்லாமல் பிறக்கிறார்.

இதனால் குழந்தைப் பருவம் முதல் முதுமை வரையில் ஏற்கெனவே நடந்த அதேநிகழ்வுகளை அப்படியப்படியே மறுபடியும் அனு பவிக்கிறார். குறிப்பிட்ட ஒருமத அமைப்பாக இந்தக் கோட்பாடு பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் இதை நம்புகிறவர்கள் பல பகுதிகளில் பரவியிருக்கிறார்கள்

அண்டவெளி (காஸ்மிக்) உயிர்

நமது உணர்வுகள் உடலுக்குச் சொந்தமானவை அல்ல, மாறாக அவை இந்தப் பேரண்டத்திற்கு உரி யவை என்கிறது இந்தக்கோட்பாடு. அண்டத்திலிருந்து உடலுக்கு வந்தவை தான் உணர்வுகள், ஆகவே, இறப்புக்குப்பின் உடல் அழிந்தாலும் உணர்வுகள் அழியாமல் பேரண்டத்திற்குத் திரும்பி விடுகின்றன என்று இதில் நம்பிக்கை உள்ளவர்கள் கூறுகிறார்கள்.

நமது பேரண்டம் பற்றிய அறிவியல் புரிதலுக்கும் இந்தக்கோட்பாட்டிற்கும் தொடர்பு இல்லை. பல்வேறு மதங்களில் இதைப் போன்ற நம்பிக்கைகள் இருந்தா லும், இந்தக் கோட்பாடு தனி மதமாகப் பின் பற்றப்படவில்லை.

புலனுக்கெட்டாத வாழ்க்கை

பல நாடுகளிலும் இருக்கிற நம்பிக்கை இது. அதாவது இறப்புக்குப் பின் ஆவிகளோ ஆன்மாக்களோ வேறு எங்கேயும் போகாமல் இறப்புக்கு முன் வாழ்ந்த மனி தர்களுடனேயே தான் இருக்கின்றன. “மீடியம்” எனப்படும் தொடர்பாளர்கள் அல்லது தொடர்புக்கருவி களின் மூலம் புலனுக்கெட்டாத அந்த ஆவிகளுடன் பேச முடியும். சோழிகளை உருட்டிப்போடுவது, எழுத்துகள் உள்ள கட்டங்களில் டம்ளரை நகர வைப்பது போன்ற பல மீடியத் தொடர்பு வழிகள் இருக்கின்றன.

இதுவரையில் மீடியம்களில் “உண்மையான”(?) ஆவிகள் வந்து பேசியதில்லை. ஆனால் அப்படிப் பேசுவதாக பீதி சினிமாக்களும் சிரிப்பு சினிமாக்களும் மனிதர்களால் தயாரிக்கப்பட்டு வந்துகொண்டே இருக்கின்றன.

பாவ புண்ணிய மறுபிறவி

ஒரு பிறவியில் செய்த புண்ணியங்களுக்கும் பாவங்களுக்கும் ஏற்ப மறுபிறவி அமையும் எனக் கூறுகிறது இந்தக் கோட்பாடு. இந்து மதம் உள்ளிட்ட பல சமயங்களில் இந்த நம்பிக்கை இருக்கிறது. கதைகளின் வழியாகவும் சடங்குகள் மூலமாக வும் புகுத்தப்படுகிறது.

பள்ளிக் கூடத்து மாணவர்களிடையே பேசுகிற போது, முற்பிறவியில் பாவம் செய்தவர்கள் அதற்குத் தண்டனையாக அடுத்தபிறவியில் உடல் ஊனங்களுடன் பிறக்கிறார்கள் என்று ஒரு அவதாரப்புண்ணியவான் சொல்ல முடிந்ததல் லவா? இந்தப்பிறவியில் இப்படி மாற்றுத்திறனாளி களை அவமதிக்கிற பாவத்திற்கு மறுபிறவில் என்ன தண்டனை என்னவோ?

வெளியேற்றம்

மாபெரும் மனித உடலைப்போன்றது பேரண்டம். மனிதர்களும் மற்ற இனங்களும் உடலின் உயிரணுக்கள். உடலில் உயிரணு ஒன்று இறந்துவிட்டால் அது சீழாகவோ, சளியாகவோ, மலமாகவோ வெளியேற்றப்படுகிறது. அதே போலத்தான் ஒருவர் மாண்டுவிட்டால் வெளி யேற்றப்படுகிறார்.

அறிவியல் கருத்தோ என்று குழம்ப வைக்கிற, உயிரியல் செயல் முறைகளோடு இணைத்து உருவகப்படுத்துகிற இந்தக் கருத்தாக்கத்தை வெளியேற்றக் கோட்பாடு என்று குறிப்பிடு கிறார்கள். உடலிலிருந்து வெளியேற்றப்படும் உயி ரணுக்கள் கழிவறையையோ, குப்பைத்தொட்டி யையோ அடைகின்றன. அதேபோல், பேரண்டத்தி லிருந்து வெளியேற்றப்படுகிறவர்கள் வேறெங்கோ போய்ச் சேர்வார்கள் என்ற மயக்கத் தையும் இந்தக் கோட்பாடு ஏற்படுத்துகிறது.

தன்மையம்

எந்தவொரு நிகழ்வுப்போக்கிலும் தன்னை மட்டுமே மையப்படுத்திப்பார்க்கிறவர்கள் உண்டு. இந்தக்கோட்பாடு அப்படித் தன்னைத்தானே மையப்படுத்திக் கொள்வதைச் சார்ந்தது தான். இதன்படி, ஒருவருடைய பிறப்போடு தொடங்குகிற இந்தப் பேரண்டம், அவருடைய இறப்போடு முடிந்து போகிறது. அவரவர் உணர்வுகளும் அனு பவங்களும் நினைவுகளும் சார்ந்ததுதான் இந்தப் பேரண்டம். அவரவர் மரணத்திற்குப் பிறகு பேரண்டமும் மறைந்துபோகும். மற்ற மனி தர்களுக்கும் இதர உயிரினங்களுக்கும் பேரண்டம் இயங்கிக்கொண்டிருக்கும் என்றாலும், ஒருவர் இறப்பதோடு அவரது அனுபவம் முடிந்து போகிறது, அதனோடு சேர்ந்து பேரண்டமும் முடிந்து போகிறது.

அறிவியல் உலகம் இதை ஏற்கவில்லை, சமயத் தலைமைகளும் இதை அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே தன்னோடு சுருங்கிப்போயி ருக்கக்கூடிய, பல தனி மனிதர்களை இது ஈர்த்திரு க்கிறது. அவர்கள் தன்மையச் சிந்தனைகளோடு தனிமைப்பட்டிருக்கிறார்கள்.

சொர்க்கம் நரகம்

வாழும்போது நன்மை செய்கிறவர்கள் மறுமை யில் சொர்க்கத்திற்கும், தீமை செய்கிறவர்கள் நரகத்திற்கும் கொண்டு செல்லப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்து, கிறிஸ்துவம். இஸ்லாம் உள்பட பல சமயங்களில் பல வடிவங்களில் இருக்கிறது. வாழும் மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கா கவே இந்தப்போதனை என்று சொல்லப்படுகிறது. தனக்குத் தீங்கிழைத்த வரைப்பார்த்து, “நீ நரகத்துக்குத் தான் போவாய்,” என்று வயிறெரிந்து சாபம் கொடுப்பது பரவலாக இருக்கிறது. எப்படியானாலும், மரணத்திற்குப் பிறகு வேறொரு உலகத்தில் மற்றொரு வாழ்க்கை இருக்கிறது என்ற கருத்தாக்கம் வலியுறுத்தப்படுகிறது.

இவையன்றி மரிப்பிற்குப் பிந்தையநிலை குறித்துப் பேசுகிற வேறு பல கற்பிதங்களும் இருக்கின்றன. ‘நிகிலியம்’ என்ற கோட்பாடு. நமது இறப்பு நிகழ்வது இந்தப் பேரண்டத்தில் தான், இறப்புக்குப் பின் வேறொரு பேரண்டத்திற்குப் போய்விடுவோம் என்கிறது “பலவுலகக்கோட் பாடு”. உலகமே மனதின் கருத்தாக்கம் தான், இறந்துவிட்டதாக மனம் தான் நினைக்கிறது, உண்மையில் வாழ்க்கை தொடர்கிறது என்று “மாயை” கோட்பாடு சொல்கிறது. 

 உடல் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்வதே இறப்பு. மூளை, இதயம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் படிப்படியாகச் செயல்பாட்டை இழக்கிற நடைமுறை தான் மரணம் என்கிறது அறிவியல். உயிரணுக்களின் வளர்சிதை மாற்றம், உறுப்புகளின் வளர்ச்சி, இனப்பெருக்கம், வெளித்தூண்டலுக்கு வினையாற்றுதல், உடல்நிலை பராமரிப்பு, உடலமைப்பு பேணுதல், தகவமைத்துக்கொள்ளுதல் ஆகிய செயல்பாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு முறை தான் உயிர் என்றும் அறிவியல் தெளிவுபடுத்து கிறது. இந்தச் செயல்பாடுகள் ஓய்கிறபோது உடலியக்கம் நின்று போகிறது. உயிர் என்று தனியாக உடலில் எங்கும் இல்லை. மூச்சு நின்ற பிறகு உயிர் வேறு எங்காவது போவதற்கோ, திரும்பி வருவதற்கோ வாய்ப்பில்லை. உயிரின் பிரதிநிதியாக ஆவியோ, ஆன்மாவோ சுற்றி வருவதாகக் கூறப்படுவது கற்பனையே. 

அப்படியானால், இறப்புடன் எல்லாமே முடிந்துவிடுமா? மறுவாழ்வு என்பதே கிடையாதா? இருக்கிறது! உடல் தானம் செய்தால், மருத்துவ ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுவதன் மூலம் வாழலாம். இறந்தவரின் இதயம் சில மணி நேரம் துடித்துக்கொண்டுதான் இருக்கும், அதை உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறவருக்குப் பொருத்தினால் வாழலாம். கண்தானம், சிறுநீரக தானம் என உறுப்பு தானம் வழங்கி வாழலாம். சக மனிதர்களுக்காக, சமுதாயத்திற்காக, உலகத் திற்காக நம்மை ஒப்படைத்துக் கொண்டால் வாழ லாம். இவ்வுலக வாழ்க்கை உண்மையானது என்று புரிந்துகொண்டு இது வீணாகக்கடந்து போகவிடக் கூடாது என்ற உறுதியோடு இயங்கினால் மர ணத்திற்கு முன் வாழும் வாழ்க்கை பொருள் பொதிந்ததாகும். மரணத்திற்குப்பின் என்ன என்ற குழப்பம் கலைந்து போகும். 

-‘தீக்கதிர்‘ 13-10-2024 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை.

No comments: