Sunday, 21 December 2025

மெய்யான மெடிட்டேஷன் எங்கே இருக்கிறதென்றால்...


தியானம் ஒரு மாயவித்தை போல. எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும் மருந்தாகப் பேசப்படுகிறது. எதுவுமே செய்யாமல், எதையுமே சிந்திக்காமல் மனதை ஒருநிலைப்படுத்துவது தியானம் என்கிறார்கள்.

யோகாவிலாவது உடல் உறுப்புகளை இயக்குவது சார்ந்த, வியர்வை சிந்தத் தேவையில்லாத ஒரு பயிற்சி முறை இருக்கிறது. ஆனால், தியானத்தில் என்ன இருக்கிறது? சிதறிய மனதை ஒரு புள்ளியில் குவியச் செய்வது தசைப் பயிற்சியை விடக் கடினமானதுதான்.

ஒருவர் தொடர்ந்து தியானிக்கும்போது மூளையில், பயம், பதற்றம் போன்ற உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் 'அமிக்டலா' என்ற பகுதி அமைதியடைவதையும், முடிவெடுக்கும் திறன் தொடர்பான 'ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ்' என்ற பகுதி வலிமையடைவதையும் எம்ஆர் ஸ்கேன் சோதனைகளால் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக சில செய்திகள் படித்திருக்கிறேன். இதில் அறிவியல் இருக்கிறதென்றால் ஏற்கத்தக்கதே.

ஓடிக்கொண்டிருக்கும் எந்திரத்தை சிறிது நேரம் நிறுத்திவைப்பது போல, உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வாறே உள்ளத்துக்கும் அமைதி தேவைப்படுகிறது என இதைப் புரிந்துகொள்ளலாம்தான். தியானம் ஒரு 'மன நலப் பராமரிப்பு' என்று இது பற்றிய ஒரு கலந்துரையாடலில் கூறப்பட்டது – அதை ஏற்கலாம்தான்.

எங்கே சிக்கலென்றால், "ஞானம் பிறக்கும்", "நோயே அண்டாது" என்றெல்லாம் சொல்வது மிகைப்படுத்தப்பட்ட மத போதனை போன்றதே. கண்மூடித்தனமாகப் பின்பற்ற வைப்பதே. இப்படி உட்கார்ந்துகொள்ள வேண்டும், கைகளை அப்படி வைத்துக்கொள்ள வேண்டும், கண்களை மூடிக்கொள்ள வேண்டும், அதிலும் கால்வாசிக் கண்ணை மட்டும் திறந்துகொள்ள வேண்டும், மூச்சை இப்படியப்படி இழுத்துவிட வேண்டும் என்றெல்லாம் சடங்குமயமாக்குவது மனிதரின் சுதந்திர மனதை நம்பிக்கைக்கு அடிமைப்படுத்துகிற கைங்கரியமே.

தனது கடமையில் கவனம் சிதறாமல் ஈடுபடுவதிலேயே ஒரு தியானம் இருக்கிறது. இதை நவீன உளவியலில் இயல்பான மன ஓட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், ஓவியம் வரையும் கலைஞர், துணியை நேர்த்தியாகத் தைக்கும் தொழிலாளி – இன்னுமுள இவர்களைப் போன்றோர் அனைவரும் ஒருவித ஆழ்ந்த தியான நிலையில்தான் இருக்கிறார்கள். அவரவர் இருக்கையிலேயே அமர்ந்தும், நின்றும், நடந்தவாறும், ஓடியவாறும். இதற்குத் தனியாக அமர வேண்டிய அவசியமில்லை. புற உலகிலிருந்து துண்டித்துக்கொள்ள வேண்டியதுமில்லை.

"மனதை எதையுமே நினைக்காமல் வெற்றிடமாக வைப்பது" ஒரு தவறான புரிதல். மனித மூளையின் இயற்கைத் தன்மையே சிந்திப்பதுதான். ரத்தம் ஓடிக்கொண்டிருப்பதற்காக இதயம் துடித்துக்கொண்டே இருப்பது போல், ஆக்சிஜனை உள்வாங்கி கார்பனை வெளியேற்றுவதற்காக நுரையீரல் சுவாசித்துக்கொண்டே இருப்பது போல், மூளை சிந்தித்துக் கொண்டேதான் இருக்கும். எதையுமே சிந்திக்காமல் இருக்க முடியுமா என்றும் சிந்தித்துக்கொண்டிருக்கும்!

எண்ணங்களை நிறுத்துவது அல்ல; எந்த எண்ணத்தோடு இணைந்துகொள்வது, எதை வேடிக்கை பார்ன்ப்பதோடு விடுவது என தேர்ந்தெடுக்கும் திறனை வளர்ப்பதே மெய்யான மெடிட்டேஷன்.

அது ஒரு குறிப்பிட்ட 'செயல்' அல்ல; அது ஒரு 'நிலை'. சம்பிரதாயச் சடங்குக்கு மாறாகத் தெளிவான கவனமிகு அக்கறையும் ஈடுபாடும் மேலானது. அரசியல் முதல் அன்றாட வாழ்க்கை வரையில் இது பொருந்தும். சடங்கு முறைகளில் சிக்கிக்கொள்ளாத சுதந்திர மனதுடன் சிறகடித்து உலக நேயம் வளர்த்திட–

உலக தியான தின (டிசம்பர் 21)வாழ்த்துகள்.

No comments: