ஓடிடி மேடையில் உலக சினிமா:
மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையைப் பேசும் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் அவ்வப்போது வந்திருக்கின்றன. அவற்றில் ஒரு மாற்றுப் படம் ‘கோடா’ (ஆங்கிலம், 2021). பல்வேறு விருதுகளை வசப்படுத்தியுள்ள இந்தப் படம், ஒரு மகளின் கதை வழியாக மாற்றுத் திறனாளிகளின் உலகத்திற்குள் கொண்டுசெல்கிறது.
‘சைல்ட் ஆஃப் டெஃப் அடல்ட்ஸ்’ (செவி கேளாப் பெரியவர்களின் குழந்தை) என்ற சொற்களின் முதல் எழுத்துகளிலிருந்து உருவாகிப் புழக்கத்தில் இருக்கும் பதம் ‘கோடா’. இன்னொரு புறம், கோடா என்றால் இசைக் கோர்ப்புக்கான நிறைவுச் சேர்ப்பு என்று பொருள்.
ரூபி ரோஸி அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் க்ளவ்செஸ்டர் என்ற கடலோர மீன்பிடி நகரைச் சேர்ந்தவள். நடுக்கடல் சென்று மீன்பிடிப்பில் ஈடுபடும் தகப்பன் ஃபிராங்க், தாய் ஜாக்கி, அண்ணன் லியோ மூவருமே காது கேளாதவர்கள். ஆகவே வாய் பேசவும் இயலாதவர்கள். அன்றாட வாழ்விலும் தொழிலிலும் மற்றவர்களோடு பேச்சு நடத்துவது, பேரம் பேசுவது, மருத்துவர் ஆலோசனை கோருவது அனைத்திலும் அவர்களுடைய குரலாக ஒலிப்பவள் 17 வயது ரோஸிதான்.
தொழிலுக்கு அப்பால், அவளுக்குள் பாட்டுப் பாடுவதில் ஒரு காதல் இருக்கிறது. பாடிக்கொண்டேதான் வேலைகளைச் செய்வாள் – பெற்றோரையும் உடன் பிறந்தவனையும் தவிர மற்றவர்களுக்குத்தான் அது கேட்கும். பள்ளிக்கூடப் பாடகர் குழுவில் இணைகிறாள். அங்கே குடும்பத்தினரின் இயலாமையைச் சொல்லிக்காட்டி அவமதிக்கிறார்கள். சோர்வடைகிறவளுக்கு ஊக்கமாக அமைகிறார் அன்பும் கறாருமான இசையாசிரியர் பெர்னார்டோ.
அவளுக்குக் குழுவில் மற்றொரு பாடகன் மைல்ஸ் உறுதுணையாக இருக்கிறான். இருவரையும், இணைப் பாடகர்களாக வளர்த்து முக்கிய இசைப் போட்டியில் பங்கேற்கச் செய்யவும், பெரிய இசைக் கல்லூரியில் சேர்க்கவும் பெர்னார்டோ தீவிரமாக முயல்கிறார்.
இசையின் மீதும் மைல்ஸ் மீதும் ஏற்படும் ஈர்ப்பால் ஒருநாள் குளத்தில் நீந்திக் களிக்கிற நிலையில், அவள் இல்லாமல் மீன்பிடிப்புக்குச் செல்லும் ஃபிராங்க்கும் ஜாக்கியும் லியோவும் நடுக்கடலில் காவல்படையின் எச்சரிக்கையைப் புரிந்துகொள்ள முடியாதவர்களாகச் சிக்கிக்கொள்கிறார்கள். மொழிபெயர்க்க ஆளின்றி நடவடிக்கைக்கு உள்ளாகிறவர்களைப் போராடி மீட்கிறாள் ரோஸி.
அந்த நிகழ்வு, தன் இசைக் கனவுக்குத் தாழ் போட்டுவிட்டு அவர்களுக்குத் துணையாகவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் தூண்டுகிறது. இந்நேரத்தில் பெருமைக்குரிய இசைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு வருகிறது. ஆசிரியரும் காதலனும் அதை ஏற்க வலியுறுத்துகிறார்கள். பெற்றோர், தங்களுடைய கடந்த காலக் கசப்புகளின் நினைவுகளோடு, அவள் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடுமே என்று கலங்குகிறார்கள்.
இந்த நிலைமையில் கோடாவின் இசைக் கோர்ப்பு இறுதிச் சேர்ப்பு என்னவாகும் என்ற பதைப்பையும் பரிவையும் பார்வையாளர்களின் நெஞ்சங்களில் பதியமிடுகிறார் இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான சியான் ஹெடர்.
தங்களுடைய வாழ்வில் இசையல்ல, ஒலியே இல்லாதவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் புரிந்துகொள்கிறவள் ரோஸி. நண்பனை வீட்டுக்கு அழைத்து வருகிறாள். அங்கே பெற்றோரின் அறைக்கு உள்ளேயிருந்து வருகிற, அவர்களால் கேட்க முடியாத, கட்டில் ஓசையைக் கொண்டு நடப்பதைப் புரிந்துகொண்டு அவள் அந்தச் சூழலைக் கையாளுவதையும், அவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பதையும் வெறும் பாலியல் ரசனையெனத் தள்ளிவிட முடியாது.
‘தி ஃபெமில் பேலியர்’ என்ற பிரெஞ்சுப் படத்தின் கருவை எடுத்துக்கொண்டு அமெரிக்க மீன்பிடிக் குடும்பத்தின் கதையாக உருவமைத்ததில் சிறப்பான வெற்றியடைந்திருக்கிறார் ஹெடர். அந்த வெற்றி அவ்வாண்டின் சிறந்த தழுவல் படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது. ரோஸியின் தாயாக நடித்த ட்ராய் கோட்ஸுர் சிறந்த துணை நடிப்புக் கலைஞர் விருது பெற்றார். அவர் உட்பட, செவி மாற்றுத்திறனாளிகளாக மார்லி மாட்லின், டேனியல் டூரண்ட் ஆகியோரைத் தேர்வு செய்து, அவர்களின் வாழ்வியலை உண்மையாகவும் கலைநேர்த்தியோடும் திரைக்குக் கொண்டுவந்ததற்காகவும் ஹெடர் பல திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றார். 2016இல், இவரது முதல் படமாக வந்த ‘டல்லூலா’ என்ற படமும் ஆதரவற்ற மூன்று பெண்களிடையே உருவாகும் உறவு பற்றிப் பேசி கவனம் பெற்றது.
‘அவங்க உன்னைப் பார்த்துச் சிரிக்கிறாங்கன்னா அவங்கதான் தப்புப் பண்றாங்க,” என்று தகப்பனும், “நான் பிறந்ததிலிருந்தே என்னைக் கேலி செய்கிறவங்களைத்தான் பார்த்துட்டு வர்றேன், அந்த நிலைமை உனக்கும் வரக்கூடாது,” என்று தாயும், “நம்ம குடும்பத்தில் உனக்கு மட்டும்தான் காது கேட்குது. நீ ஒருபோதும் தனிமையை உணர மாட்டாய், ஆனால் நாங்கள் தனிமையில் இருப்போம்,” என்று அண்ணனும் சொல்கிறார்கள். சைகை மொழியில் அவர்களும், பேச்சாகவே இசை ஆசிரியரும் நிகழ்த்தும் உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கின்றன.
போட்டிக்காக வந்த இடத்தில், வேறு யாரும் அனுமதிக்கப்படாத அரங்கில், எப்படியோ பெற்றோரும் சகோதரனும் நுழைந்து பால்கனியில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிடுகிறாள் ரோஸி. அவர்களுக்கும் புரியும் விதத்தில் தன் பாட்டை சைகை கலந்து அவள் பாடுகிற காட்சியில் அந்தப் பாடலின் கவித்துவம் பிரதிபலிக்கிறது.
மீன்பிடிப்புத் தொழிலில் பெரிய கார்ப்பரேட்டுகளின் மோசடிகளைப் புரிந்துகொள்ளும் பிராங்க், அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து அனைவரும் பயன்பெறக்கூடிய கூட்டுறவு சங்கம் ஒன்றைத் தொடங்குகிறான். இத்தகைய சித்தரிப்புகள், ஆப்பிள் ஓடிடி தளத்தின் வழியாக, ‘கோடா’ கதைக் களத்திற்கு நம்மை மேலும் நெருக்கமாக்குகின்றன.
[0]
‘செம்மலர்’ டிசம்பர் 2025 இதழில் எனது பதிவு
No comments:
Post a Comment