Friday, 27 March 2026

ஏதோ நிர்ப்பந்தத்தால் போர் நிற்கலாம், ஆனால்...

         காலை நடையில் பூங்கா நிழலில்


“என்ன சார் அநியாயமா இருக்கு? ஈரானோட ஆயில் ஃபீல்டுகளை அமெரிக்கா நேரடியா கேப்ச்சர் பண்ணணும், இல்லாட்டி மறைமுகமா அதுக்கு ஃபேவரபிளா இருக்கிற கவர்மென்டா மாத்தணும்கிறதுதான் டிரம்ப்போட எய்ம்னு அப்பட்டமா தெரியுதே...”

காலை நடைப் பயிற்சி முடிந்து பூங்கா மர நிழல் அமர்வில் இவ்வாறு சொன்னார் நண்பர். (ஏற்கெனவே அந்த சிமென்ட் பெஞ்ச்சில் உட்கார்ந்திருந்த இளைஞர்கள் எங்களைக் கண்டதும் அவர்களாகவே எழுந்து கொண்டார்கள். நாள்தோறும் நாங்கள் அதில் மாநாடு நடத்துவதைக் கவனித்திருப்பார்கள் போல. இந்தக் கால இளைய தலைமுறையினருக்கு மூத்தவர்கள் மீது மரியாதையே இல்லை எனறு யாரும் பேசாதீர்கள்.)

‘அவரே தொடர்ந்தார். “நேத்து டிவி சானல்ஸ்ல ஈரான் வார் நியூஸ் கவனிச்சேன். பேப்பர்லேயும் விரிவா போட்டிருந்தாங்க. ரெண்டு டீப்பான ஆர்ட்டிக்கிள்ஸ் படிச்சேன். டிரம்ப் எந்த அளவுக்குப் போறாருன்னு புரிஞ்சது.”

பூங்கா பெஞ்ச் அமர்வின் மற்ற நீதிபதிகளும் அவரவர் படித்த, கேட்ட தகவல்களைப் பதற்றத்தோடு பகிர்ந்தார்கள். இது உலகப்போராக மாறுமோ என்ற கவலையை வெளிப்படுத்தினார்கள். உலக அளவில் வரக்கூடிய நிர்ப்பந்தங்களால் அப்படிப்பட்ட நிலைமை தடுக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையையும் (விருப்பத்தையும்) தெரிவித்தார்கள்.

பேசுபொருள் இதுதான் என்று காதில் விழுந்ததால், வேறு சிலரும் நடையை நிறுத்திவிட்டுச் சூழ்ந்துகொண்டார்கள்.

“இவ்வளவு நேரம் நாமதான் பேசிக்கிட்டிருக்கோம். சார் எதுவுமே சொல்லலையே...”

“சார் எதுவும் சொல்லலை.. ஆனா அவர் முகத்துல ஒரு சிரிப்பு இருக்குதே... சார் நாங்க இதையெல்லாம் பேசுறதப் பார்த்தா உங்களுக்கு ஹியூமரஸ்ஸா இருக்கா?”

“அய்யய்போ... நீங்க இதையெல்லாம் பேசணுங்கிறதுதான எப்பவுமே என்னோட விருப்பம்...”

“அப்ப ஏன் அந்தச் சிரிப்பு?”

“இல்லை.. ஈரானை எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு அழிச்சிட்டுதான் ஓய்வேன்கிற மாதிரி டிரம்ப் அறிவிக்கிறாரு. ஈரான் எதிர் நடவடிக்கை எடுக்குது. ஆனாலும், நம்ம ஊருல கேஸ் சிலிண்டர் நெருக்கடி ஏற்பட்டதுக்கு ஈரான் அரசாங்கம்தான் காரணம்னு குற்றம் சொல்றோம்.. ஈரானுடைய பிடிவாதத்தாலேயும் நடவடிக்கையாலேயும்தான் இங்கே பெட்ரோல் பங்க்குகள்ல நீள நீளமாக வரிசை நிக்கிதுன்னு புலம்புறோம்... அதை நினைச்சேன். அந்த வேதனைச் சிரிப்பை முகம் காட்டிக்கொடுத்திருச்சு போல.”

சில நொடி மௌனம் காற்றோடு கலந்து வீசியது. ஒருவர் அதை முறித்தார்.

“கேஸ் தட்டுப்பாடு மட்டுமில்லை சார், விலையெல்லாம் எகிறிக்கிட்டுப் போகுது. ஆட்டோ, கேப், பைக் டாக்ஸிக்கெவ்லாம் தட்டுப்பாட்டைக் காட்டி கட்டணத்தை ஏத்துறாங்க...“

“இது முடிவுக்கு வருமா? எப்ப வரும்? எப்படி வரும்?”

“முதல்ல சொன்னீங்கள்ல, அது மாதிரி உலக அளவுல வரக்கூடிய நிர்ப்பந்தத்துனால போர் நின்னுடும்னுதான் நினைகிறேன். அதுக்குள்ள எல்லாத் தரப்புக்கும் பெரிய இழப்புகள் ஏற்படும். ஆனா...”

“ஆனான்னு இழுக்கிறீங்க?”

“ஏதோ நிர்ப்பந்தங்களால போர் நிற்கும். ஆனா எந்த நிர்ப்பந்தத்தாலேயும், ஏறுன விலைகளும் கட்டணங்களும் இறங்காது.”

நிகழ்ச்சி நிரலின் நிறைவுக் கட்டமான தேநீர்க் கடையில் வழக்கமான விலைதான் கேட்டார்கள். இவர்களும் திடீரென்று ஏற்றிவிடக்கூடாதென்ற நினைப்புடன் பருகிய காஃபி, டீ சூடு அதிகமாக இருந்தது.

[0]
முகநூல் (மார்ச் 27இ 2026) பதிவு

Wednesday, 25 March 2026

திருநர் சட்டம்: இனி என்ன செய்யலாம் என்றால்…

காலை நடையில் பூங்கா நிழலில்




“டிரான்ஸ்ஜெண்டர் லா அமெண்ட்மென்ட் பத்தி நேத்து மின்னம்பலத்துல உங்க கட்டுரையைப் படிச்சேன்… தமிழ்ல இந்த இஸ்யூ பத்தி வந்த முதல் கட்டுரை அதுதான்னு நினைக்கிறேன். நல்லாப் பண்ணியிருக்கீங்க. இன்ட்ரெஸ்ட்டிங்காவும் இருக்குது.”

காலை நடை நேர நண்பரிடமிருந்து அரிதாகத்தான் இப்படிப்பட்ட பாராட்டு கிடைக்கும்.

“நீங்க அதைப் படிச்சதுக்கும், பாராட்டுறதுக்கும் நன்றி. ஏதாவது விமர்சனம் இருந்தாலும் சொல்லுங்க.”

“அந்த மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல. சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. ஆனா, சொன்ன அளவுல கரெக்ட்டா இருக்கு.”

“இந்தப் புரிதல்தான் வேணும். எப்பவுமே ஒரு கருத்தைப் பத்திப் பேசுறோம், இல்லாட்டி எழுதுறோம்னா எல்லாத்தையும் சொல்லிட முடியாது. பல தகவல்கள் நமக்குத் தெரியாததாக் கூட இருக்கும். இருந்தாலும் சொல்லியிருக்கிற வரைக்கும் சரியா வந்திருக்கான்னுதான் பார்க்கணும். சரியா இல்லைன்னு நினைச்சா அதைத் தயங்காம வெளிப்படுத்தணும். சில பேரைப் பார்த்தீங்கன்னா, நாம சொல்லாம விட்ட தகவல்களைச் சொல்வாங்க, குறிப்பிடத் தவறிய ஆட்களைப் பத்திச் சொல்வாங்க. அதையெல்லாம் சொல்லியிருக்க வேணாமான்னு கேட்பாங்க. இது ஒரு கலாச்சாரமாவே இருக்குது. எனக்குத் தெரிஞ்சதெல்லாம் உங்களுக்கும் தெரிஞ்சிருக்கணுங்கிற கட்டாயமுமில்லை. அப்படி எதிர்பார்க்கவும் கூடாதுல்ல…”

“என்ன சார், யாரோ அந்த மாதிரி கேட்டு உங்களைச் சீண்டியிருக்காங்க போல இருக்கே?”

பூங்கா மர நிழல் உரையாடலில் கலந்துகொள்ளும் இன்னொரு நண்பரின் கேள்வி.

“குறிப்பா யாரையும் சொல்லலை. ஆனா அடிக்கடி யார்ட்டயிருந்தாவது இப்படிப்பட்ட எதிர்வினை வந்துக்கிட்டுதான் இருக்கு.“

“நேத்து ஈவ்னிங் டிராஸ்ஜெண்டர் ஆக்ட் அமெண்ட்மென்ட் பில்லுக்குக் கண்டனம் தெரிவிச்சும் அதை வித்ட்ரா பண்ணக் கோரியும் பெரம்பூர்ல ஒரு கருத்தரங்கம் நடந்துச்சு போலயே…”

“ஆமா. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அதை நடத்துனாங்க. அதுல் நானும் ஒரு பார்வையாளராக் கலந்துக்கிட்டேன். அந்த மக்கள் உணர்ச்சிப் பூர்வமாவும், கூர்மையாவும் பேசினாங்க. சங்கத் தலைவர்களும் மறுக்க முடியாத வாதங்களை முன்வைச்சுப் பேசினாங்க.”

“நீங்க பேசலையா?”

“நிறைவுரை முடிஞ்சதும் நான் ஒரு ஆலாசனையை வேண்டுகோளா முன்வைச்சேன்.”

“ஆனா, அந்த பில்தான் பார்லிமென்ட்டுல பாஸாயிடுச்சே?”

“ஆமா. அந்தக் கூட்டம் நடந்துக்கிட்டிருக்கப்பவே இந்தச் செய்தியும் வந்துருச்சு. மேடையிலேயே அறிவிச்சாங்க. அதையும் சேர்த்துதான் என்னோட வேண்டுகோளைச் சொன்னேன்.“

“என்ன வேண்டுகோள் சார்?”


அதாவது, ‘சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் உள்ள உயர்ந்த இடம் நாடாளுமன்றம்தான். ஆனா அதை விட உயர்வானது ஒன்று இருக்கிறது. அதுதான் இந்திய அரசமைப்பு சாசனம். அதிலே உறுதிப்படுத்தியிருக்கிற தனி மனித உரிமையையும் கண்ணியத்தையும் இந்தப் புதுச் சட்டம் மறுக்கிறது. ஏற்கெனவே 2014இல் உச்சநீதிமன்றம் நால்சா வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கும் வழிகாட்டலுக்கும் முரணாக இது வந்திருக்க்கிறது. அதனால், அரசமைப்பு சாசன அடிப்படையில் இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி திருநர் அமைப்புகள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடுக்க வேண்டும். அந்த வழக்கில் தமுஎகச தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.‘ இந்த ஆலோசனையைத்தான் வேண்டுகோளா வைச்சேன்.

“நல்லது சார். பார்லிமென்ட்டைத்தான் நாம பெருசா நம்பியிருக்கோம். ஆனா எப்படி இந்த மாதிரி சட்டத்தையெல்லாம் கொண்டு வர முடியுது?”

அமைதியாகக் கவனித்துக்கொண்டிருந்த, அவ்வப்போது எங்களோடு கலந்துகொள்கிற மூன்றாவது நண்பர் கேட்டார். ஆம், அவர் ஒரு மூன்றாம் பாலினத்தவர்.

“நம்ம நாட்டைப் பொறுத்தவரையில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவங்களோட மனசாட்சிப்படி வாக்களிக்கிற உரிமையெல்லாம் கிடையாது. அவங்களோட கட்சித் தலைமை, சபையில இருக்கிற கட்சிக் கொறடா மூலம் என்ன ஆணையிடுதோ அதன்படிதான் வாக்களிக்க முடியும். கொறடான்னா தெரியும்ல, சவுக்கு! இங்கிலீஷ்ல விப். அதுவும் சவுக்குதான். அதை மீறி வாக்களிச்சாங்கன்னா கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும். மோசமான சட்டம் அது. அதனால, பாஜக தலைமையும் அவங்களோட அணியில இருக்கிற கட்சிகளோட தலைவர்களும் சொன்னபடி சட்ட முன்வரைவுக்கு ஆதரவாத்தான் வாக்களிச்சிருப்பாங்க. ஒரு முன்வரைவோ, தீர்மானமோ வர்றப்பவே அது நிறைவேறுமா நிறைவேறாதான்னு எல்லாரும் முன்கூட்டியே கணிச்சிடலாம்.“

“இந்தச் சட்டத்தைப் பொறுத்தவரைக்கும், கட்சித் தலைவருங்க சொல்லாட்டடாலும் இதுக்கு ஆதரவாத்தான் வாக்களிச்சிருப்பாங்க. அவங்க புத்தியிலே இந்த மாதிரி பிற்போக்கான சிந்தனைகள்தானே ஊறிக் கெடக்கு.”

திருநர் நண்பரின் சீற்றச் சொற்கள் வழக்கமான தேநீர்க் கடைக் கூடுகை முடிந்து கலையும் வரையில் எங்களை மௌனமாக்கியிருந்தது.


[0]
முகநூல் பதிவு
படங்கள்: லக்சயா மன்னார்

Thursday, 19 March 2026

‘ஈரானிடம் ஏற்கெனவே தோற்றுவிட்டது அமெரிக்கா!’ போர் அரசியல் ஆய்வாளரின் அதிரடி அறிவிப்பு

 



“அவர்களிடம் மறுகட்டுமானம் செய்து கொள்வதற்கு எதுவுமே மிஞ்சியிருக் காது.” ஈரான் மீது நீசப் போர் தொடுத்தி ருக்கிற டொனால்டு டிரம்ப் இவ்வாறு அறிவித்திருக்கி றார். ஈரானின் அணு ஆயுத வல்லமையை அழிப்பதே நோக்கம் என்று தொடக்கத்தில் கூறியவர், இப்போது இவ்வாறு கூறுவதன் பொருள் அந்நாட்டின் வாழ்வா தாரக் கட்டமைப்புகளை முற்றாகத் தகர்ப்பதே என எவரும் புரிந்துகொள்ளலாம்.

ஈரான் பத்தாண்டு காலம் பின்னுக்குத் தள்ளப் படும், கற்காலத்திற்குத் திரும்பிச் செல்லும், இதுவே கடைசிச் சந்தர்ப்பம்… இவையெல்லாம் அவருடைய போர்க்கூச்சல்கள்.  ஈரானிடமிருந்து மற்ற நாடுகள்  ஒரு துளி எண்ணெய் வாங்கினாலும் கடுமையான வரி விதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அப்பட்டமாக உலகத்தையே மிரட்டியிருக்கிறார்.

உண்மையில் இவையெல்லாம், தெருச் சண்டையில் தோற்றுக்கொண்டிருப்பவனின் ஆத்திரக் கூப்பாடுகளைப் போன்றவையே. இதை உறுதிப்படுத்துவதாக, “அமெரிக்கா ஏற்கெனவே போரில் தோற்றுவிட்டது,” என்ற வாதத்தை முன்வைத்திருக்கிறார் பிரவீன் சஹானி. இந்திய ராணுவத்தில் பீரங்கிப்படைத் தளபதியாக பணியாற்றி, முன்னணி நாளேடுகளில் பாதுகாப்புத் துறைச் செய்தி யாளராக எழுதி வந்தவர் தற்போது ‘ஃபோர்ஸ்’ (படை)  என்ற பத்திரிகையை நடத்துகிறவரான சஹானி போர்  அரசியல் தொடர்பான அலசல்களைச் செய்து வருகிறார்.

பழையதும் புதியதும்

இந்த மார்ச் 10இல் அவர் வெளியிட்ட காணொலிப் பதிவில், தொழில்நுட்பமும் இலக்குத் திட்டமும் சார்ந்த  மாற்றங்களை அடிப்படையாகக் கொண்ட கருத்து களைக் கூறியிருக்கிறார்.


அமெரிக்கா இன்னும் பழைய காலத்துப் பெரிய ஆயுதங்களையே நம்பியி ருக்கிறது.  ஈரானோ தனது போர்த்திறனை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையில் வளர்த்துக் கொண்டுள்ளது,” என்று அவர் கருதுகிறார். மத்திய கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்க அரசின் தலையீடுகள் நெடுங்காலமாகத் தொடரும் கதை. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் ஒரு தீராப் பகை. அணுகுண்டுகள் தயாரிக் கப்படுவதாகக் கூறிக்கொண்டாலும், மூல நோக்கம் என்னவோ எண்ணெய் வள ஆக்கிரமிப்புதான்.

டிரம்ப்பின் சவடால்களையும் கள நிலவரத்தையும் அலசியுள்ள பிரவீன் சஹானி பின்வரும் அவதானிப்புகளைப் பகிர்ந்திருக்கிறார்: அமெரிக்கா இன்னும் இரண்டாம் உலகப்போர் காலத்தின், பனிப்போர் யுகத்தின் ‘இயங்கு ஆற்றல்’ (கைனடிக் எனர்ஜி)) அடிப்படையிலான போர்முறையையே நம்பியிருக்கிறது. பெரிய போர் விமானங்களாலும் விமானந்தாங்கிக் கப்பல்களாலும் ஏவுகணைகளாலும்  தாக்குவதே இயங்கு ஆற்றல் முறை.

ஈரான், சீனா போன்ற நாடுகளோ தகவல் – நுண்ணறிவு அடிப்படையிலான நவீன போர் முறைக்கு மாறிவிட்டன. ஈரான் சிறு சிறு தாக்குதல்கள் என்ற வியூகத்தை விரிவாகக் கையாளுகிறது. அமெரிக்காவிடம் இருப்பது போன்ற பெரிய விமானப் படைகள் இல்லையென்றா லும், அதி நவீன ஆயுதப் பறவைகளும் (ட்ரோன்கள்), ஏவுகணைகளும் கொண்ட தொழில்நுட்பங்கள் உள்ளன. கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்புகளை, மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் ஈரான் ட்ரோன்கள் முறியடிக்கக் கூடியவை.

பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் பெரிய கப்பல்களை ஈரானின் சிறிய வேகப்படகுகளால் எளிதில்  செயலிழக்கச் செய்ய முடியும்.

உடன்பாட்டுப் பிடிமானம்

ஈரான் தனித்து விடப்படவில்லை. சீனாவுடன் செய்து கொண்டுள்ள 25 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பிடிமானம் இருக்கிறது. சீனாவின் ஏஐ, இணைய வழிப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) ஆகியவை  பின்பலமாக உள்ளன. இந்த ஆற்றல் அமெரிக்காவின் தகவல் தொடர்பு வலையமைப்புகளைச் சிதைக்கக் கூடியது. அப்போது அமெரிக்கப் படைகளால் தங்களது நவீன ஆயுதங்களை  ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முடியாமல் போகும்.

ஈரான் தனது சொந்த மண்ணில் போர் புரிகிறது. அமெரிக்கா பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவி லிருந்து படைகளையும் தளவாடங்களையும் கொண்டு வர வேண்டும். அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அமைந்துள்ள (சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட) நாடுகளைக் குறிவைத்து ஈரான்  தனது ஏவுகணைகளைத்  திருப்புமானால் அந்த அரசுகள் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதை மறுபரிசீலனை செய்யத் தொடங்கும். ஈரான் ஒரு பெரிய நிலப்பரப்பையும் வலிமையான ராணுவத்தையும் கொண்டிருப்பதால், டிரம்ப் ஒருபோதும் வெற்றியை முழுமைப்படுத்த முடியாது.

அமெரிக்காவின் பழைய காலத்துப்  படைபலம், ஈரா னின் புதிய காலத்துப் போர்த்திறனுக்கு முன்னால் எடுபடாது என்ற கணிப்புக்கு வருகிறார் சஹானி.

இந்த வாதம் எடுபடுமா?

ஈரான் அரசின் உச்சத் தலைவர் ஆயதுல்லா சையது  அலி ஹொசைனி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன், பேரப் பிள்ளைகள், உயர்நிலை அதிகாரிகள் கடந்த பிப்ரவரியில் அமெரிக்க–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டனர். இந்தியாவுக்கு வந்து திரும்பிக்கொண்டிருந்த ஈரானின் ராணு வக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி மூழ்கடித்தது. உள்நாட்டில் அரசை எதிர்த்துப் பல இயக்கங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்கா ஏற்கெனவே தோற்றுவிட்டது என்ற வாதம் எடுபடுமா?

ஈரானின் உயர்மட்டத் தலைவர்களையும் தளபதிகளையும் துல்லியமாகத் தாக்கி அழித்ததால் அரசியல் தலைமையை வலுவிழக்கச் செய்துவிட்டதாக அமெரிக்கத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சஹானியும் வேறு பல கருத்தாளர்களும் சொல்வது போல, ஈரான் வலுவிழந்திருப்பதாகத் தோன்றினாலும், அவர்கள் கட்டமைத்திருக்கிற நவீன போர்முறை அழிந்துவிடவில்லை. எதிரியின் வேட்டைக்குத் தாக்குப் பிடித்து வாழும் வேட்கை வற்றிவிடவில்லை.  புதிய தலைவராக, காயங்களுடன் தப்பிய காமேனி யின் மகன் செய்யது மொஜ்தபா ஹொசைனி காமேனி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவருக்கு ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது. வாரிசு முறையில் நியமிக்கப் படுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளபோதிலும், போர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அது ஏற்கப்பட்டிருக்கிறது.


வரலாற்று அத்தியாயம் 


இங்கே  கொஞ்சம் வரலாற்றுப் பக்கத்தைப் பார்க்கலாம். 1953இல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டி ருந்தவரான பிரதமர் முகமது மொசாதேக் அமெ ரிக்க, பிரிட்டன் உளவுப் படைகளால் நீக்கப்பட்டார்.  அப்போது மன்னராக இருந்தவரும் ஷா என்று அழைக்கப்பட்டவருமான முகமது ரெசா பஹ்லவி  கையில் முழு அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது.

மொசாதேக் ஆட்சி கவிழ்க்கப்பட்டது ஏனென்றால், வெனிசுலா போன்ற கதைதான். அவர் ஈரானின் எண்ணெய் வயல்களையும் நிறுவனங்களையும் அரசு டைமையாக்குவதில் ஈடுபட்டார். அவற்றைத் தங்கள் பிடியில் வைத்திருந்த அமெரிக்க, பிரிட்டிஷ் நிறுவனங்க ளுக்கு அந்த நடவடிக்கைகள் ஆத்திரமூட்டின. முழுமையான மக்களாட்சியை நிறுவுவதற்கும் அவர் முயன்றதால் வெறுப்பிலிருந்த ஷா அமெரிக்க சதிகளுக்கு உடந்தையாக இருந்தார். 

இந்த அதிரடிகள் ஈரானிய மக்களுக்கு ஆழமான அரசியல் காயத்தை ஏற்படுத்தின. அது 1979இல் மாபெரும் கிளர்ச்சிக்குத் தலையாய காரணமாக அமைந்தது. இஸ்லாமியப் புரட்சியாக நடந்ததில் அமெரிக்காவின் ஜிம்மி கார்ட்டர் அரசு ஆதரவுடனான மன்னராட்சி தூக்கி எறியப்பட்டாலும், மத குருவின் உச்சத் தலைமையும், நாடாளுமன்றமும் இணைந்த ஆட்சி முறை நிறுவப்பட்டது. உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுப்பது மத வல்லுநர்கள் குழு.


அக்குழுவில் இடம்பெறத் தகுதியுள்ளவர்களை உச்சத் தலைவரே முடிவு செய்வார், எனினும் குழுவை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். 


வெற்றிகரமான பின்வாங்கல்கள்


ஆக, டிரம்ப்பின் லட்சியம்  அவர் கூறுவது போல  அணு ஆயுதங்களை ஒழிப்பதல்ல, எண்ணெய் வயல்களைக் கைப்பற்றுவதுதான்.


இன்று இந்தியா உள்பட பல நாடுகளிலும் ஏற்பட்டிருக்கிற பெட்ரோல், டீசல், எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முழுமுதற் காரணம் டிரம்ப்பின் அடாவடிதான். “நாங்கள் சரணடைவோம் என்று டிரம்ப் நினைப்பது வெறுங்கனவு, போர் நிறுத்தத்திற்கோ பேச்சு வார்த்தைக்கோ இடமில்லை, அமெரிக்காவுக்குத் துணைபோகாத வரையில் அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது” என்று ஈரான் தலை வர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் தோல்வி என்றால், இன்றைய சூழலில் அது பிற நாடுகளின் அரசியல் தன்னாளுமைக்கு வெற்றி என்றே பொருள். “போரில் வென்றுவிட்டோம்,” என்கிறார் டிரம்ப். இதற்கு முன்பும், வெற்றி வெற்றி என்று கூவிக்கொண்டே அமெரிக்காவின் பராக்கிரமப் படைகள் பின்வாங்கிய அத்தியாயங்கள் உண்டு. 

வியட்நாம் எல்லையிலிருந்து 18 ஆண்டுகளுக்குப் பின் 1973இல் பின்வாங்கினர் (அப்போது அமெரிக்க அரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன்). இராக்கில் நுழைந்து 8 ஆண்டு கள் இருந்தவர்கள் 2011இல் நாடு திரும்பினர் (பாரக் ஒபாமா). ஆப்கானிஸ்தானில் புகுந்திருந்தவர்கள் 2021இல் மூட்டையைக் கட்டினர் (ஜோ பைடன்). 

உள்நாட்டில் மனித உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட நிலைமைகளுக்கு எதிரான குமுறல்கள் இருக்கின்றனதான். சில குழுக்களுக்கு டிரம்ப் அரசின் கரிசனமும் உண்டு. தன்னெழுச்சியாகப் போராடுகிறவர்கள் தற்போதைய போர்ச்சூழலில் ஒருமைப்பாட்டு உணர்வோடு அமெரிக்க–இஸ்ரேல் கூட்டுக் கயமையை எதிர்க்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிப் போக்குகள் தெளிவுபடுத்துகிற உண்மை –  அமெரிக்காவிக்குத் தற்காலிக முன்னேற்றம் போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது; ஆனால் இலக்குச் சண்டையில் டிரம்ப் தோற்றுவிட்டார். தனது அராஜகங்களுக்கு அமெரிக்க மக்களின் ஆதரவையே கூட அவரால் உறுதிப்படுத்த முடியாது.

[0]

தீக்கதிர் நாளேட்டில் (மார்ச் 19, 2026) எனது கட்டுரை

 நா




Sunday, 15 March 2026

OBC இடஒதுக்கீடும் OCR ஓட்டமும்: கிரீமி லேயர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கூறுவதென்ன?

 👉இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; அது சமூகப் பிரதிநிதித்துவத்திற்கான திட்டம்; எனவே, ஓர் அலுவலரின் சமூக நிலைக்கான அடையாளம் அவர் பெறுகிற சம்பளத்தில் இல்லை என்பது வெறும் தீர்ப்பல்ல. கை தட்டி வரவேற்கத்தக்க நீதி!



ழக்கமான ஒரு தடகளத் தடையோட்டப் போட்டியில் (அப்ஸ்டகிள் ரேஸ்) குறிப்பிட்ட மைதானம், குறிப்பிட்ட தொலைவு, குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் உயரத்திலும் தாண்டு தடைகள் என இருக்கும். இன்னொரு வகையான “தடைக் கள ஓட்டப் போட்டி” ஒன்று இருக்கிறது. அதில், இப்படி வரையறுக்கப்பட்ட தடைகளுக்கு மாறாக எதிர்பாராத சவால்கள் எதிர்ப்படும். ஊருக்கு வெளியே ஓடும் ஆறு, அதைக் கடந்ததும் காடு, சேறும் சகதியுமான தரை, கற்கள் நிறைந்த பாதை, உயரமான சுவர், குறுகலான பொந்து… இப்படியாக.

 

கால் பாதங்களையும் முட்டிகளையும் பதம் பார்த்துவிடக்கூடிய அந்த ஓட்டத்துக்குப் பெயர் அப்ஸ்டகிள் கோர்ஸ் ரேசிங் (ஓ.சி.ஆர்). சமூகநீதியை நிலைநாட்டும் போராட்டம் அத்தகைய ஒரு தொடர் ஓ.சி.ஆர் போலவே நடக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனத்தில் பட்டியல் சாதிகளையும் பழங்குடிகளையும் சேர்ந்தோருக்குக் கல்வி நிலையங்களிலும் அரசுப் பணிகளிலும் 22 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் சேர்க்கப்பட்டபோதே ஒரு பகுதியினர் முதல் தடையைப் போட்டார்கள். அந்தத் தடைக்கு “தகுதி” என்று பெயர் சூட்டப்பட்டது.

நேரடியாக இந்த மக்களுக்கான கல்வியையும் வேலையையும் மறுக்க முடியாது என்பதால், தகுதியையும் திறமையையும் இட ஒதுக்கீடு கீழே இறக்கிவிடும் என்றார்கள். கால வரம்பின்றி நீட்டித்தால், சாதி அடிப்படையிலான பிளவுகள் மேலோங்கிவிடும் என்றார்கள். என்னவோ, சமுதாயம் அது வரையில் ”ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே” என்று பாடிக்கொண்டிருந்தது போல! உண்மையிலேயே அப்படிக் கவலைப்பட்டவர்களும் இருந்தார்கள். அரசமைப்பு சாசன வரைவுக்குழுத் தலைவர் அம்பேத்கர் அளித்த ஆணித்தரமான விளக்கங்களுக்குப் பிறகு சட்டம் ஏற்கப்பட்டது.



 OBC மக்களின் கோரிக்கை!

இந்தியச் சமுதாய வெளியில் இவ்விரு பிரிவினரும் அல்லாத, சாதிக் கோபுரத்தின் மேல் அடுக்குகளிலும் இல்லாத, இடைநிலையில் நிறுத்தப்பட்டவர்களான, “ஓ.பி.சி” எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோரும் இந்த உரிமையைக் கோரினார்கள். தமிழ்நாட்டில், விடுதலைக்கு முன்பே 1920-களிலேயே நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை (கம்யூனல் ஜி.ஓ) இதற்கொரு வலுவான முன்னுரையை எழுதியது.

விடுதலைக்குப் பின், 1970-ல் திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு. கருணாநிதி அமைத்த சட்டநாதன் குழு மற்றொரு மைல்கல் ஆனது. பீகார் (1971), கர்நாடகம் (1972) ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்ட குழுக்களும் இதில் பங்களித்தன. தேசிய அளவில், 1979-ல் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி அரசு, பீகாரைச் சேர்ந்த சமூக–அரசியல் செயல்பாட்டாளர் பீ.பி. மண்டல் தலைமையிலான ஆணையத்தை அமைத்தது. 1980-ல் அந்த ஆணையம் தனது அறிக்கையைப் பிரதமர் இந்திரா காந்தியிடம் ஒப்படைத்தது. முன்னதாக 1953-ம் ஆண்டிலேயே காகா காலேல்கர் ஆணையம் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக்குப் பரிந்துரைத்திருந்தது.

ஆயினும், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டால் மக்கள் ஒற்றுமை பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தாலும், ஒரு பகுதியினரின் எதிர்ப்பாலும் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு அதைச் செயல்படுத்த முன்வரவில்லை. மண்டல் ஆணையத்தின் அறிக்கையும் பத்தாண்டுக் காலம் அப்படியே அலமாரியிலிருந்தது. 1990-ல் வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு அந்த அறிக்கையை வெளியே எடுத்தது. அரசாங்க வேலைகளில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தது. அதைத் தொடர்ந்துதான், அந்த அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க விலக்கிக்கொள்ள முடிவு செய்தது.

2006-ல் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஐ.ஐ.டி., ஐ.டி.ஐ உள்ளிட்ட உயர் கல்வி வளாகங்களில் ஓ.பி.சி இட ஒதுக்கீட்டிற்குச் சட்டம் நிறைவேற்றியது. அதன் மூலம் கல்வியிலும் சமூக நீதிக்கான ஏற்பாடு முழுமையடைந்தது.

 


 ஓட்டத் தடைகள்!

மண்டல் ஆணையத்தின் இவ்விரு பரிந்துரைகளும் பயன்பாட்டுக்கு வந்தது இணக்கமான பாதையில் அல்ல. அரசியல் களத்தில் கடுமையான தாக்குதல்கள், ‘எருமை மாட்டின் மேல் உட்கார்ந்து செல்கிறவனுக்கு டாக்டர் பட்டம்’ என்பது போன்ற கொச்சையான விமர்சனங்கள், தீக்குளிப்பும் கலந்த கலவரங்கள் என்ற நிலவரங்களையெல்லாம் கடக்க வேண்டியிருந்தது.

‘ஓ.சி.ஆர் ஓட்டம்’!
ஓட்டத்தைத் தடுப்பதாகக் குறுக்கே போடப்பட்ட மற்றொரு பாறைதான் ‘கிரீமி லேயர்’! இந்தச் சமூகங்களிலேயே பொருளாதார நிலையில் வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் விதி. பால் கொதித்து அடங்கியபின் மேலாக ஆடை மிதக்கும் அல்லவா, அதுதான் கிரீமி லேயர். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் பாலாடை போல மேல் நிலையில் இருப்போரைக் குறிப்பதாக இந்தச் சொல்லாடல் வந்தது.

வி.பி.சிங் அரசு கொண்டுவந்த சட்டத்தில் இந்தப் பாலாடை விதி இல்லை. ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையே எதிர்த்து இந்திரா சாவ்னி என்ற வழக்குரைஞர் உச்ச நீதிமன்றம் சென்றார். வேறு சிலரும் நீதிமன்றத்தை நாடினார்கள் என்றாலும், அவர் பெயராலேயே அந்த வழக்கு அடையாளம் பெற்றுவிட்டது. நீதிபதிகள் 1992-ல் அளித்த தீர்ப்பில்தான் “கிரீமி லேயர்” விதி செய்ய ஆணையிட்டார்கள்.

வந்தது பாலாடை விதி!

நீதிபதிகள் எம்.என்.வெங்கடாசலையா, ஏ.எம். அஹமதி, பி.பி. ஜீவன் ரெட்டி, கே.என். சிங், எஸ். ரத்தினவேல் பாண்டியன், டி.கே. முகர்ஜி, ஏ.எம். ரே, கே.டி. காந்தா, ஆர்.எம். சகாய் ஆகியோர் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வு வரலாற்றில் இடம்பெற்ற அந்தத் தீர்ப்பை அளித்தது. இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று அந்த அமர்வு உறுதிப்படுத்தியது. அதே வேளையில், மொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மேல் போகக்கூடாது என்று வரையறுத்தது. பொருளாதாரத்தில் மேல் நிலைக்கு வந்தவர்களை இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கிவைக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். (தமிழ்நாட்டவரான நீதிபதி ரத்தினவேல் பாண்டியன், சாதியக் கட்டமைப்பு பற்றியும், சமூக நீதி குறித்தும் அளித்த அறிக்கை சிறப்பு வாய்ந்தது.)

உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஓ.பி.சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் மேல் தட்டினரை விலக்கிவைக்க 1993-ல் பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய காங்கிரஸ் அரசு அலுவல் குறிப்பாணை ஒன்றை வெளியிட்டது. 2004-ல் மன்மோகன் சிங் அரசு வெளியிட்ட ஒரு விளக்கக் கடிதம், பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை ஊழியர்களின் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களது பிள்ளைகள் கிரீமி லேயர் அடுக்கில் வருகிறார்களா இல்லையா என்று தீர்மானிக்க வழிகாட்டியது. ரூ. 8 லட்சம் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.



தீர்ப்பல்ல, நீதி!

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் மனுக்களை எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம். மார்ச் 11 அன்று முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா, தீபங்கர் தத்தா, மனோஜ் மிஸ்ரா, கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு கூறியுள்ள கருத்து இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களுக்கும், வருமான அடிப்படையிலேயே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்று வாதிடுவோருக்கும் ஒரு உரத்த பாடமாக ஒலிக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல; அது சமூகப் பிரதிநிதித்துவத்திற்கான திட்டம்; எனவே, ஓர் அலுவலரின் சமூக நிலைக்கான அடையாளம் அவர் பெறுகிற சம்பளத்தில் இல்லை என்பது வெறும் தீர்ப்பல்ல. கை தட்டி வரவேற்கத்தக்க நீதி. ஒருவர் கிரீமி லேயர் தட்டில் வருவாரா மாட்டாரா என்று தீர்மானிப்பதற்கு அவருடைய பெற்றோரின் பதவி நிலையும் பணிப் பிரிவுமே முதன்மையான அளவுகோல் என்றும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதை எளிமையாகப் புரிந்துகொள்ள – ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்கிற ஒருவரது சம்பளம், வேறொரு பொதுத்துறை நிறுவனத்தில் அவரைப் போலவே உதவியாளராக இருப்பவரின் சம்பளத்தை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும். அதற்காக அவருடைய சமூக நிலையோ பதவி நிலையோ உயர்ந்துவிட்டதாகக் கூற இயலாது. அப்போது, அவருடைய பிள்ளைக்கு இட ஒதுக்கீட்டு வாய்ப்பைக் கோரும் உரிமை உண்டு.

ரூ.8 லட்சம் வருமான வரம்பைக் கணக்கிடும்போது, பெற்றோரின் சம்பளத்தையோ, அவர்கள் விவசாயிகளாக இருப்பார்களானால் அந்த வருமானத்தையோ அதில் சேர்க்கக் கூடாது. வணிகம், வாடகை போன்ற இதர வழிகளில் வரும் வருமானத்தைத்தான் கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பு கூறுகிறது.

தடை நீக்கத்தின் முக்கியத்துவம்!
இதன் மூலம் ஓ.பி.சி பிரிவுகளைச் சேர்ந்தோர் அரசுப் பணிகளில் சேர்வதற்கு இருந்து வந்த ஓ.சி.ஆர் தடை அகற்றப்படுகிறது. நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுப் பணியிடங்கள் காலியாக இருப்பது பற்றிய தகவல்கள், அந்தத் தடை அகற்றப்படுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

 

2025 ஜூலை நிலவரப்படி, மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டும் ஓ.பி.சி பிரிவினருக்கான கற்பித்தல் பணிகளில் 1,491 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம்) 164 இடங்களும், இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐ.ஐ.டி) கணிசமான எண்ணிக்கையிலான இடங்களும் நிரப்பப்படாமல் இருந்தன.

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி பிரிவினருக்கான பேராசிரியர் பணியிடங்கள் 80 சதவிகிதம் காலியாக இருப்பதைப் பல ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இது தகுதியான விண்ணப்பதாரர்கள் இருந்தும், கிரீமி லேயர் உள்ளிட்ட தடைகளால் அவர்களுக்குக் கதவு மூடப்பட்டிருப்பதையே குறிக்கிறது.



 

 பல லட்சம் தேங்குநிலைக் காலியிடங்கள் நிரப்பப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால், இன்றும் பல ஒன்றிய துறைகளில் ஆயிரக்கணக்கான ஓ.பி.சி பணியிடங்கள் காலியாகவே விடப்பட்டுள்ளன. இந்த நிலைமையை மாற்றுவதிலும், ஓ.பி.சி பணியிடங்களில் அவர்கள் நியமிக்கப்படுவதிலும், அவர்களது உழைப்பு நாட்டுக்குப் போய்ச் சேர்வதிலும் ஒன்றிய ஆட்சியாளர்கள் அக்கறை காட்டியதில்லை. அந்த இடங்கள் காலியாகவே இருப்பதால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவை பாதிக்கப்படுகிறது என்ற கவலையும் இருந்ததில்லை.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்புக்குப் பிறகாவது அந்த அக்கறையும் கவலையும் ஏற்படுகிறதா என்று பார்ப்போம். எது வரையில் என்றால்… அந்த எதிர்பார்ப்போடுதான், சமூகநீதிப் போராட்டப் பயணத்தில் தனித்தடம் பதித்திருக்கும் தமிழ்நாட்டின் சார்பில், முதலமைச்சர் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.

‘ஓ.பி.சி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி’ என்றும், “சிவில் சர்வீஸ் போன்ற தேர்வுகளில் தகுதி பெற்றும், வருமான வரம்பு போன்ற காரணங்களால் இடங்களை இழந்த ஓ.பி.சி தேர்வாளர்களுக்கு, ஒன்றிய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கித் தந்து, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரிசெய்ய வேண்டும்” என்றும், “இந்தத் தீர்ப்பை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு, ஒன்றிய அரசு தனது நிர்வாகக் கட்டமைப்பை அரசமைப்பு சாசனத்தின் சமத்துவ நெறிமுறைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்,” என்றும் முதலமைச்சர் முன்மொழிந்திருப்பவை அவ்வண்ணமே வழிமொழியத் தக்கவை.

இதை விவாதிக்கிறபோது, “இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சாதி அடிப்படையில் தகுதியைப் பின்னுக்குத் தள்ளி வாய்ப்பளித்துக்கொண்டே இருப்பது” என்ற குரலும் ஒலிக்கிறது. தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் ஆகியோருக்கான தகுதி மறுக்கப்பட்டதே சாதி அடிப்படையில்தான். இனி அந்த அநீதி தொடராது என்ற புள்ளியைச் சந்திக்கிற வரையில் இது தொடரத்தான் வேண்டும்.

[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் (மார்ச் 14, 2026) வந்துள்ள எனது கட்டுரை

 

 


Saturday, 7 March 2026

பாரம்பரியச் சங்கிலியை அறுக்க முயலும் பாலிவுட் படங்கள்


ன்றைய பாலிவுட் திரையுலகம் பற்றிய ஒரு விமர்சனக் குறிப்பைக் கண்டபோது, திரைப்படங்களின் வழியே “தயாரிக்கப்படும்” பொதுக் கருத்து பற்றிய சிந்தனை விரிகிறது, அது ஒரு கவலையைத் தருகிறது.

குறிப்பாக அண்மை ஆண்டுகளில் வெளியான ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ’ , ‘தி கேரளா ஸ்டோரி’ ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ ஆகிய படங்களை விசாரணைக்கு உட்படுத்தும் திறனாய்வாளர்கள் அவை கலைப் படைப்பாளிகளின் இயற்கையான வெளிப்பாடாக இல்லை, உள்நோக்கம் கொண்ட செயற்கையான தயாரிப்புகளாகவே இருக்கின்றன என்கிறார்கள். அப்படிப்பட்ட தயாரிப்புகளுக்கு வரி விலக்கு, அதிகார பீடங்களின் அங்கீகாரம் ஆகியவை திரைப்படத் துறையை ஆளுங்கட்சியின் ஒரு பிரச்சார அணியாக மாற்றுகின்றன என்று விமர்சிக்கிறார்கள்.

சமூக நிகழ்வுகளால் மனக்குளத்தில் உண்டாகும் அலைகள் கலை–இலக்கியமாகப் பரிணமிக்கிறபோது அரசியல் பேசுவது புதிதல்ல.  அன்றைய இதிகாசங்கள் அரசியலையும் பேசுவதால்தான் இன்றைக்கும் துணை வருகின்றன. நாவல்கள், நாடகங்கள் உள்ளிட்ட ஆக்கங்களில் அரசியல் அக்கறை இருந்து வந்திருக்கிறது. பொதுவாக அவை அந்தந்தக் காலத்தின் அரசுகளைச் சாடியிருக்கின்றன. ஆள்வோரின் அத்துமீறல்களால் ஏற்படும் சமுதாய பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. தமிழ் மண்ணில் அரசர்களை எள்ளி நகையாடும் தெருக்கூத்துகள் ஊர் ஊராய்ச் சென்றிருக்கின்றன.

பாரம்பரியத்துக்குக் கைவிலங்கு

ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக மாறுவதை, ஒரு குழந்தை சாலைச் சந்திப்புகளில் கையேந்தி வருவதை ஒரு கதை சித்தரிக்கிறது என்றால், அதில் மக்களுக்கு வறுமையை வழங்கும் அரசாங்க அநீதியை விமர்சிக்கும் படைப்புலகப் பாரம்பரியம் இருக்கிறது. ஆனால்,  கார்ப்பரேட் விசுவாச, மதவாத அரசியலுக்குச் சாதகமாகக் கதை–திரைக்கதை எழுதப்படுமானால் அந்தப் பாரம்பரியத்துக்கு விலங்கிடப்படுகிறது.

விடுதலைப் போராட்டக் காலத்தில், கல்கி எழுதி பி.என். ராவ் இயக்கத்தில் வெளியான ‘தியாக பூமி’ திரைப்படம், தலித் மக்களைக் கோவிலுக்குள் இட்டுச் செல்லும் ஒரு சாம்பு சாஸ்திரியின் கதையோடு, தேசிய இயக்கத்தில் பங்கேற்கச் செல்லும் அவரது மகளின் கதையையும் சொன்னது. பிரிட்டிஷ் அரசு தடை விதிக்கிற அளவுக்கு அன்றைய அரசியல் களத்தில் அந்தப் படம் பங்களித்தது. அதே ஆண்டில் எச்.எம். ரெட்டி இயக்கத்தில் பி.யு. சின்னப்பா நடித்த ‘மாத்ரு பூமி’ (தாய் மண்) வெளியானது. ஒரு கற்பனை நாட்டின் அரியாசனத்தைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்கிற படைத் தளபதியை நாயகன் முறியடிக்கிற ஒரு “சரித்திரக் கதை” என்றாலும், விடுதலைப் போராட்டத்தோடு ஒருமைப்படும் உரையாடல்கள் இடம்பெற்றன. தமிழில் முதல்முறையாக “வந்தே மாதரம்” பாடல் ஒலித்தது அந்தப் படத்தில்தான். அந்நாளின் எழுப்பப்பட்ட விடுதலை முழக்கமாகவே அது ஒலித்தது, இந்நாளில் புகட்டப்படும் மத மோக மந்திரமாக அல்ல.

இவ்விரண்டுக்கும் முன்னோடியாக 1933இல் ஏ. நாராயணன் தயாரித்து இயக்கிய ‘தேச பக்தி’ வெளியானது. சுதந்திரத்தின் லட்சியம் சமூக சீர்திருத்தங்களோடு இணைய வேண்டுமென்ற காந்தியச் சிந்தகனைகளை முன்வைத்தது. கதாபாத்திரங்களைக் கதராடைகளோடு உலாவவிட்டதே கூட பிரிட்டிஷ் ஆட்சிக்கு சவால் விடுப்பதாக அமைந்தது.

பராசக்தி அதிர்வு

விடுதலைக்குப் பின், குறிப்பாக திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் திரைப்படத்தைத் தங்களின் அரசியல், சமூகச் சிந்தனைகளைப் பரப்புவதற்கான ஊடகமாகக் கையாண்டார்கள். இளவரசன்–இளவரசி–எதிரி மன்னன் கதைகளிலேயே அன்றைய காங்கிரஸ் ஆட்சியைச் சாடும் வசனங்களை வைத்தார்கள். 1952இல் ஏவிஎம் உதவியோடு ஏ. பெருமாள் தயாரித்த  ‘பராசக்தி’ தடை முயற்சிகளை முறியடித்து, கலைஞர் கருணாநிதியின் கூர்மையான உரையாடல்களோடு அரசியலையும் சமூக நிலைமையையும் கூண்டில் நிறுத்தியது. “கோயில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்பதற்காக,” என நெருப்பு நாக்குடன் நீதிமன்றத்தில் வாதாடுகிற இளைஞனாக சிவாஜி கணேசன், பிற்காலத்தில் அரசியல் களத்திலும் செயல்பட்ட எஸ்.எஸ். ராஜேந்திரன் உள்ளிட்டோர் அந்தப் படத்தின் வாயிலாகத்தான் தமிழ் சினிமாவுக்கு வநதார்கள்.

அந்தப் படத்திற்குத் தமிழக மக்கள் அளித்த வரவேற்பு, அது போல மேலும் பல படங்கள் வருவதற்குத் தூண்டுதலாக அமைந்தது. 1962இல் கலைஞரின் திரைக்கதை– உரையாடலில் ‘சிலப்பதிகாரம்’ காப்பியத்தைக் கொஞ்சம் மாற்றிச் சொன்ன ‘பூம்புகார்,’ பாண்டிய அரசியின் காற்சிலம்பைக் களவாடியது பொற்கொல்லர் அல்ல, ஒரு மந்திரி என்பதாகச் சித்தரித்ததில் நுட்பமான அரசியல் விமர்சனம் இருந்தது.

எம்.ஜி.ஆர். தன் படங்களில் நேரடி அரசியல் பேசியதில்லை. ஆனால் ‘நாடோடி மன்னன்’,எங்க வீட்டுப் பிள்ளை,’ ‘நம்நாடு’ போன்ற படங்களில் நுட்பமான முறையிலும், தனக்கான ஒரு நல்ல தலைவர் தோற்றத்தை உருவாக்கும் வகையிலும் படக்கதைகளை எழுத வைத்தார். பிற்காலத்திய ‘முகமது பின் துக்ளக்’,  ‘தண்ணீர் தண்ணீர்’ என ஆகப் பெரும்பாலான படங்கள் மக்களின் விமர்சனக் குரலை எதிரொலித்தன.

நடப்பாண்டுத் தொடக்கத்தில், ரெட் ஜெயன்ட் வெளியீடாக, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, சுதா கொங்கரா இயக்கத்தில் வந்த ‘பராசக்தி’, பழைய பெயரோடு அறுபதாண்டுகள் பழைய காலத்திற்கும் பயணப்பட்டது. 1960களில் இந்தித் திணிப்பை எதிர்த்துக் களம் கண்ட மாணவர்களின் எழுச்சியையும் அதை ஒடுக்குவதற்கு ஏவிவிடப்பட்ட  முயற்சியையும், அது முறியடிக்கப்பட்ட காட்சியையும் காட்டுகிறது. அத்துடன், வேறு பல மொழிகள் பேசுகிற மாணவர்களும் இணைந்து போராடியதாக ஒரு புனைவையும் சேர்த்து, இன்றளவும் தொடர்கிற மொழித்திணிப்பு அடாவடிகளை வெற்றிகொள்ள, அதை எதிர்கொள்ளும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஒன்றுபட்ட இயக்கமாக எழ வேண்டும் என்ற கருத்தையும் நுட்பமாக முன்வைக்கிறது. அந்நாளைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சிக்கும் இந்தப் படத்தை இந்நாளைய பாஜக ஏன் பெரிய அளவுக்குப் பேசவில்லை என்பதிலும் ஓர் அரசியல் நுட்பம் இருக்கத்தானே செய்கிறது!

மதத்தில் தோய்ந்த வெறுப்பரசியல் குறித்து, 1990களின் பின்புலத்தில் பேசிடும் ‘சிறை’ இந்தப் பயணத்தின் தொடர் கண்ணிதான். சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்து சென்ற ஆண்டு டிசம்பரில் திரையரங்குகளுக்கு வந்த இந்தப் படம், ஒரு காதல் கதை வழியாக, சிறுபான்மை மதத்தினர் மீது பின்னப்படும் பகைமைப் பிம்பத்தை உரித்துக் காட்டுகிறது.

சங்கிலிக் கண்ணிகள்

கோலிவுட்டுக்கு நிகராக, பாலிவுட் பங்காகப் பல படங்கள் வந்திருக்கின்றன. 2014இல் அமீர்கான் தயாரித்து நடித்த, ராஜ்குமார் ஹிராணி இயக்கிய ‘பி.கே.’ ஆன்மீகம் வணிகமாக்கப்படுவதையும், மத நம்பிக்கைகள் ஆதிக்கச் சூதுகளுக்குக் கடத்தப்படுவதையும் நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து கவனப்படுத்தியது.

2018இல் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வந்த ‘முல்க்’, இந்திய தேசம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் சொந்தமானது அல்ல என்று நீதிமன்றம் நீதி வழங்குகிற (வெறும் தீர்ப்பு அல்ல) காட்சியோடு நல்லிணக்க மாண்பை உயர்த்திப் பிடித்தது. இந்தியாவின் பிற மொழிகளில் வந்த படங்களிலும் இந்தப் பாரம்பரிய சங்கிலித் தொடர் இருக்கிறது.

மத வெறி, சாதி ஆணவம், ஆணாதிக்க வன்மம், உழைப்புச் சுரண்டல் என வகை வகையாகப் பிணைக்கப்பட்டுள்ள அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்பட வேண்டியவை. அந்தப் புரட்சிகரப் பணியில் இதுவரை  பல படங்கள் பங்களித்திருக்கின்றன. இந்தக் கலைப் பாரம்பரியச் சங்கிலியை அறுப்பதற்காக இன்று சில படங்கள் புறப்பட்டிருக்கின்றன.

குண்டாந்தடியும் பரப்புரையும்

“சர்வாதிகாரத்துக்கு குண்டாந்தடி எப்படியோ, அப்படியே ஜனநாயகத்துக்குப் பரப்புரை,” என்றார் தத்துவ அறிஞர் நோம் சோம்ஸ்கி. பெரு ஊடக நிறுவன விமர்சகர் எட்வர்ட் எஸ். ஹெர்மன் என்பாருடன் இணைந்து அவர் எழுதிய “ஒப்புதல் தயாரிப்பு: வெகுமக்கள் ஊடகங்களின் அரசியல் பொருளாதாரம்” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். ஒட்டுமொத்த அதிகாரமும் ஒற்றை மையத்தில் குவிந்திருக்கிற அமைப்பில் மாற்றுக் கருத்துகளை ஒடுக்குவதற்கு வன்முறைகள் ஏவப்படுகின்றன. அதிகாரப் பரவல் இருக்கிற ஜனநாயக அமைப்பில் அவ்வாறு ஒடுக்குவதற்குப் பரப்புரை ஏற்பாடுகள் கையாளப்படுகின்றன. அதெல்லாம் நியாயம்தான் என்று, மிகைப்படுத்தப்படும் சித்தரிப்புகளால் உண்மையென பொதுமக்களை நம்பவைப்பதுதான் பொது ஒப்புதல் தயாரிப்பின் நோக்கம்.

சமத்துவக் கோட்பாட்டாளர்களும், சமூகநீதிப் போராளிகளும், நல்லிணக்க மாண்புக் காவலர்களும் தங்களின் அந்தச் சிந்தனைகளை கலை–இலக்கியம் எனும் ஊடக வாகனத்தில் ஏற்றி மக்களிடையே அனுப்புகிறார்கள். செல்கிறார்கள். இந்த நெறிகளை அவமதிக்கிறவர்களோ அந்த வாகனச் சக்கரத்தின் அச்சை முறிப்பதில் இறங்குகிறார்கள்.

இருட்டடிக்கும் “ஃபைல்ஸ்”

அச்சு முறிப்பே ஒரு சங்கிலியாகுமானால், அதன் தொடக்க நிலைக் கண்ணிகளில் ஒன்றுதான் ‘தி காஷ்மீரி ஃபைல்ஸ்’. 2022இல், விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய, அவரும் வேறு சிலருமாகச் சேர்ந்து தயாரித்த இந்தப் படம், கடந்த காலங்களில் வலதுசாரிகள் காஷ்மீர் குறித்து உருவாக்கிய பிம்பத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, காஷ்மீர் பண்டிட் பிரிவினர் முஸ்லிம் ஆட்சியாளர்களாலும் சமூகத்தாலும் ஒடுககப்பட்டார்கள், வெளியேற்றப்பட்டார்கள் என்ற பரப்புரைக்கு உதவக்கூடிய புனைவுகளை  உண்மைத் தகவல்கள் போலச் சித்தரிக்கிறது. வரலாற்றின் ஒரு மூலையை மட்டும் காட்டிவிட்டு மொத்தக் கட்டடத்தையும் இருட்டடிக்கிற வேலை.

“ஒரு சினிமாவாக இந்தப் படம் நகைப்புக்கு உரியதாக இருக்கிறது, இடையறாத மதவாதத்தில் அச்சமூட்டுகிறது,” என்று ‘தி வயர்’ தளத்தில்,  திரை விமர்சகர் தனுல் தாக்கூர் எழுதினார் (2022 மார்ச் 20). “காஷ்மீரி ஃபைல்ஸ் பண்டிட்டுகளைப் பரப்புரைக்காகப் பயன்படுத்துகிறது, முஸ்லிம்கள் மீது வெறுப்பைப் பொழிகிறது,” என்றும் அந்தத் தளம் கூறியது.

இதன் இயக்குநருக்கு நேரடியாக அரசியல் தொடர்பு இல்லையாம். ஒன்றிய அரசால் இவர் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் உறுப்பினராகவும், இந்திய கலாச்சார உறவுகள் மன்றத்தின் பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

விஷத்துக்கு விருது

2023இல் வந்தது ‘தி கேரளா ஸ்டோரி’. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கிய இந்தப் படம், கேரளத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத மாற்றத்திற்காக இந்துப் பெண்களைக் காதலித்து மணந்துகொள்கிறார்கள் என்ற, நச்சுப் பரப்புரைக்குக் கதையாக உயிரூட்ட முயல்கிறது. ‘லவ் ஜிஹாத்’ ஏற்பாட்டில் 32,000 இந்துப் பெண்கள் மதம் மாற்றப்பட்டார்கள் என்று அந்தப் படம் அப்பட்டமாகப் பொய் சொன்னது. வலுவான எதிர்ப்பைத் தொடர்ந்து, 3 பேர் என்று மாற்றப்பட்டது. கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின், நடுநிலையாளர்களின் கடுமையான கண்டனத்துக்கு உள்ளான அந்தப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அளிக்கப்பட்டன.

2024இல் தீரஜ் சர்னா இயக்கி, விக்ராந்த் மாசி நடித்து, மூன்று பேர் கூட்டுத் தயாரிப்பில் வந்தது ‘தி சபர்மதி எக்ஸ்பிரஸ்’. 2004இல் குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிந்ததையும், அதன் மீதான ஊடக விசாரணையையும் மையமாகக் கொண்ட கதை. சிறப்பு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் ஆயுள் சிறையாக மாற்றப்பட்டு, இப்போதும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கிறது வழக்கு. “பிரச்சார ரயிலில் ஏறியிருக்கிறார் விக்ராந்த் மாசி” என்று ‘தி ஹிண்டு’ விமர்சனம் குறிப்பிடுகிறது. 

இந்தப் படங்களை பிரதமர் நரேந்திர மோடி உட்பட உயர் மட்டத் தலைவர்களும், சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்தோரும் பாராட்டி மகிழ்ந்துள்ளனர். அவர்களின் செயல்திட்டத்திற்கு உற்ற கலைத் துறைத் துணையாக வரும்போது பாராட்ட மாட்டார்களா என்ன? நாடு ழுமுவதும் கட்டமைக்க முயல்கிற வெறுப்பரசியலுக்கு ஆதரவாக மக்களின் பொது மூளையில் அரிமானத்தை ஏற்படுத்த முயலும்போது மகிழ்ந்திட மாட்டார்களா என்ன?

இந்திய சினிமா வழியாக, மக்களின் ஒருமைப்பாட்டுப் பண்பாட்டைப் பாதுகாப்பது இன்றைய தேவை. வெள்ளைத் திரையில் பல வண்ணங்களைக் காட்டுவதல்ல, சமுதாயத்தின் பல வண்ணங்கள் சிதைவின்றிப் பிரதிபலிக்கச் செய்வது சினிமா. செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஒப்புதலைத் தகர்த்து, நல்லிணக்கப் பாரம்பரியச் சங்கிலியை வலுப்படுத்துவது திரைக் கலைஞர்கள், திறனாய்வாளர்கள், அரசியல்–சமூக அக்கறையாளர்கள், ரசிகத் திரளாகிய

அந்திமழை மார்ச் 2026 இதழில் எனது கட்டுரை


Thursday, 5 March 2026

தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் மார்க்சியத்தின் கொடை



சென்னை கன்னிமாரா நூலக நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை நிறுவப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் கம்பீரமாக நிற்கிற அந்தச் சிலையைப் பார்ப்பவர்களுக்கு, அவர் எப்படி உலகெங்கும் உழைப்புச் சுரண்டல்களோ, வர்க்க வேறுபாடுகளோ, மத ஆதிக்கங்களோ, சாதி வன்மங்களோ இல்லாத சமத்துவ சமுதாயத்தைப் படைப்பதற்கு அறிவியல்பூர்வமான வழியமைத்தார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்ட மாற்றம் நிகழ்வது சிலருக்கு மிரட்சியாக இருக்கிறது. எதையாவது கண்டு மிரள்கிறவர்கள் குய்யோ முய்யோ என்று புலம்பிப் பதுங்குவார்கள். அதைப்போல அந்தச் சிலர் மார்க்ஸ்சுக்கு எதற்காக இங்கே சிலை, அவர் தமிழ்நாட்டுக்கு என்ன செய்துவிட்டார் என்று புலம்பினார்கள்.


மிழ்நாட்டின் விவசாயக் களத்தில் உழைத்தவர்கள் துண்டை இடுப்பில்தான் கட்டிக்கொள்ள வேண்டும், ஆண்டையர் எதிரே வந்தால் அந்தத் துண்டு கக்கத்திற்குப் போய்விட வேண்டும் என்ற பண்ணையடிமை நிலைமை இருந்தது. அதே துண்டு இன்று கம்பீரமாகத் தோளில் வீற்றிருக்கச் செய்தவர் மார்க்ஸ். உலகின் மற்ற பல நாடுகளைப் போல, ஆலையடிமைகளாக இருந்த தொழிலாளர்களுக்கு வேலை நேரம் உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தியவர் மார்க்ஸ். மொழிவழி மாநிலங்களாக அமைக்க செங்கொடி இயக்கம் வலியுறுத்தியதன் மூலம் தமிழ்நாடெனும் அடையாளம் பெற்றிடப் பாதையமைத்தவர் மார்க்ஸ். நாட்டின் விடுதலை இயக்கத்தை, கம்யூனிஸ்ட்டுகள் மூலம் முழுச் சுதந்திரமே லட்சியம் என முழங்க வைத்து, தமிழ்நாட்டு மக்களுக்கும் அதை அனுபவமாக்கியவர் மார்க்ஸ்.


ஒரு நாடு, அதில் ஒரு மாநிலம் தனது வரலாற்றை அரசியல், இலக்கியம், பொருளாதாரம், மக்கள் வாழ்நிலை, மாற்றங்களுக்கான இயக்கம் ஆகியவற்றால்தான் எழுதுகிறது. அதை எழுதுவதில் மார்க்சியத்தின் அறிவார்ந்த பங்களிப்புகள் இருக்கின்றன. அண்மையில் இணையவழியில் ‘எம்இஎல்எஸ்’ (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் ஸ்டாலின்) என்ற குழு நடத்திய ‘மார்க்சியமும் தமிழும்’ என்ற உரையரங்கத்தின் பின்னூட்டமாகச் சிந்தனைகள் விரிந்தன.


இலக்கியச் சுவடிகளில்


மார்க்சிய வருகைக்கு முன், தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் பக்தியைப் புகட்டுவதாக, மன்னர்களின் சாகசத்தைப் போற்றுவதாக, ரசனை சார்ந்ததாகவே அணுகப்பட்டன. மார்க்சிய வெளிச்சம் பாய்ந்த பிறகுதான் இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு என்ற பார்வை வலுப்பெற்றது. படைப்பாளிக்கும் சமூகத்திற்குமான தொடர்பில் புத்தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு படைப்பு, அது உருவான காலத்தின் மக்கள் வாழ்க்கையை, பொருளாதார நிலைமையை, வர்க்கச் சூழலை எந்தக் கோணத்தில் அணுகுகிறது, எவ்வாறு வெளிப்படுத்துகிறது என ஆய்வு செய்யும் முறை முன்னுக்கு வந்தது.

அரசுகள் பேரரசுகளானதையும், அதற்காக நடந்த போர்களையுமே வரலாறாகச் சொல்லிக்கொண்டிருந்த போக்கைத் தடுத்து, எளிய மக்களின் வாழ்வியலை மையப்பொருளாக வாசிக்க வைத்தது மார்க்சியம்.  சிங்காரவேலர் தொடங்கி, ஜீவா, நா. வானமாமலை, தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே. கண்ணன், கைலாசபதி, கே. முத்தையா, ஜெயகாந்தன் என பலரும்  மார்க்சிய நோக்கில் இலக்கியங்களை மறுவாசிப்பு செய்வதை அறிமுகப்படுத்தினார்கள். நா. வானமாமலை தொடங்கிய 'ஆராய்ச்சி', இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தாமரை’, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘செம்மலர்’ ஆகியவற்றின் பங்களிப்பு தலையாயது.


அரசியல் அணுகுமுறைகளில் மாறுபட்டாலும் மக்கள் சார் இலக்கிய ஆக்கங்களை வெளியிட்ட ‘மன ஓசை’,‘நிழல்’,  ‘புதிய கலாச்சாரம்’, ‘புதிய ஜனநாயகம்’ உள்ளிட்ட ஏடுகளின் பணியும் குறிப்பிடப்பட வேண்டியது. இடதுசாரி சிந்தனையாளர் விஜய பாஸ்கரன் தொடங்கிய ‘சரஸ்வதி’, டி. செல்வராஜ் முயற்சியில் வந்த ‘சாந்தி’ ஆகியவையும், அவை போன்ற பல சிற்றிதழ்களும் இந்த அணியில் இணைகின்றன. தமிழில் தொடங்கப்பட்ட, இன்றும் தொடர்கிற, இப்போதும் புதிதாகப் பூக்கிற சிற்றிதழ்களில் பெரும்பாலானவை மார்க்சிய கண்ணோட்டம் கொண்டவையே என்றால் மிகையில்லை.


முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே தமிழ் இலக்கியத்தில் 'முற்போக்கு' என்ற சொல் வேரூன்றத் தொடங்கிவிட்டது. அத்துடன் இணைந்ததாக, மிகைப் புனைவைத் தாண்டி, பாடுபடும் மக்களின் பசியையும் போராட்டத்தையும் அவர்கள் எதிர்கொண்ட சாதிய ஒடுக்குமுறைகளையும், பெண்கள் எதிர்த்து நின்ற ஆணாதிக்க அடக்குமுறைகளையும், நடுத்தர வர்க்க மக்களின் நொறுங்கிய கனவுகளையும் அப்படியே எழுத்தில் கொண்டு வந்தார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அழகுகளையும் பதிவு செய்தார்கள். இவ்வகை ஆக்கங்கள் “மெய்நடப்பியல் இலக்கியம்” – அதாவது “யதார்த்த இலக்கியம்” – என்றே பெயர் பெற்றன. கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் இப்படிப்பட்ட உள்ளடக்கங்களோடு எழுதுகிற வளர்ச்சியும் ஏற்பட்டது. 


மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்களின் தமிழில் சமத்துவக் கருத்துகளைத் திரைப்படப் பாடல்களின் வழியாக வழங்கினார். வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன், கி. ராஜநாராயணன், கு. சின்னப்ப பாரதி, தொடர்ந்து பங்களித்துக்கொண்டிருக்கும் பொன்னீலன், அருணன், ந. முத்துமோகன், ச. தமிழ்ச்செல்வன், சு. வெங்கடேசன், இரா. காமராசு, ஆதவன் தீட்சண்யா போன்ற படைப்பாளிகள் மார்க்சியச் சிந்தனைகளை நாவல்களிலும் சிறுகதைகளிலும் திறனாய்வுகளிலும் கையாண்டுள்ளனர். இடச்சுருக்கம் கருதியே இந்த அளவில் பெயர்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது. இன்றைய  இளம் எழுத்தாளர்கள் பலரும் இந்தப் பணிகளைத் தொடர்கிறார்கள்.


சமூகப் போராட்டத்தில் 




மொழியை ஒரு போராட்டக் கருவியாகவும் மாற்றிய மார்க்சியம் தமிழின் பெருமையை மேலும் ஒளிரச் செய்தது எனலாம். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாதர், மாணவர், இளைஞர், மாணவர் சங்கங்கள், எழுத்தாளர், கலைஞர், அறிவியல் ஆர்வலர் இயக்கங்களின் மேடைகளிலும் களங்களிலும் வெளியீடுகளிலும் தமிழ் மிக எளிய, அதே சமயம் மேலும் வீரியமிக்க வடிவத்தைப் பெற்றது. அது, சமூக மாற்றத்திற்கான கருவியாக மொழி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுப்படுத்தியது. 


தமிழகத்தின் சாதியக் கட்டமைப்பையும் நிலவுடைமைத்துவ உறவுகளையும் மார்க்சியக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்கிறவர்கள் சமூக நீதிக்கான உரையாடல்களுக்குக் கோட்பாட்டு வலிமையளிக்கிறார்கள். பாலின சமத்துவச் சிந்தனைகளை, மறு உற்பத்தி உரிமை போன்ற அடிப்படையான பெண்ணியக் கருத்தாக்கங்களைத் தமிழ் மக்களிடம் கொண்டுசென்றதில் கே.பி. ஜானகியம்மாள், பாப்பா உமாநாத், எழுத்தாளர் லட்சுமி உள்ளிட்டோரின் பங்கு தலையாயது. இன்று வாசுகி, பாலபாரதி, சுகந்தி, வ. கீதா, அம்பை, மங்கை உள்ளிட்டோரும் ஏராளமான இளந்தலைமுறையினரும் அரும்பணியாற்றி வருகிறார்கள். 


சொற்கொடை


மார்க்சிய இயக்கம் தத்துவத்தோடு இணைந்ததாக செறிவான ஒரு கலைச்சொல் களஞ்சியத்தையும் தமிழுக்கு வழங்கியுள்ளது. முன்பு குறைவாகவே புழக்கத்தில் இருந்த அல்லது வேறு பொருள்களில் கையாளப்பட்ட சொற்களை, புதிய அரசியல் – சமூக – பொருளாதாரப் பின்புலத்தில் மார்க்சியம் வடிவமைத்தது. 


“தோழர்” என்ற சொல் தமிழுக்குப் புதிதல்ல. சங்க இலக்கியங்களில் விளிக்கப்படுவதுதான். ஆனால், அதற்கொரு கம்பீரத்தை ஏற்றி, அரவணைப்பு, போராட்டத் துணை நம்பிக்கை, பாலினப் பாகுபாடற்ற அரவணைப்பு, பதவிநிலை ஏற்றத்தாழ்வற்ற மரியாதையை ஊட்டியது மார்க்சிய இயக்கம்.


மார்க்சியத்தின் அடிப்படை பொருளாதாரம் என்பதால், உற்பத்தி முறைகள் சார்ந்த பல சொற்கள் புத்துருவம் கொண்டன. “வர்க்கம்” என்ற வார்த்தை முன்பு வகைப்படுத்துவதற்காகவும், கணிதக் குறியீடாகவுமே பயன்படுத்தப்பட்டது. மார்க்சிய இயக்கம் கரம் உயர்த்தியதைத் தொடர்ந்து உழைப்பு, உடைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகவே பொருள் பெற்றது. சுரண்டல் வர்க்கம், உழைக்கும் வர்க்கம், பாட்டாளி வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்ற கூட்டுச் சொற்கள் இணைந்தன. உலகச் சந்தை ஆக்கிரமிப்பு இணைந்த அரசியல் ஆதிக்க அரசுகளுக்கு ஏகாதிபத்தியம் என்ற பெயரைச் சூட்டியது தமிழின் மார்க்சியம்.



தொழிலாளரிடமிருந்து களவாடப்படுவதால் உண்டாகும் உண்மையான லாபத்தைக் குறிக்கும் “உபரி மதிப்பு” என்ற சொல்லாடல் உருவானது. மார்க்சிய சொல்லாடல்களைத் தமிழ்ப்படுத்திய “உற்பத்தி உறவுகள்”, “பொருள்முதல்வாதம்” என்ற சொல்லாடல்களும், மார்க்சியத்தின் அறிவியல் கண்ணோட்டத்துடன் நிலைபெற்றன. “இயக்கவியல் பொருள்முதல்வாதம்”, “வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” என்ற சொல்லாக்கங்கள் புதிய பொருள் விளக்கம் அளிக்கின்றன. திசைச் சொற்களை ஏற்கும் தமிழின் பண்புக்கு ஏற்ப ஜிந்தாபாத், ஒர்க்கர்ஸ் யூனிட்டி, லால் சலாம் ஆகியவற்றையும் மார்க்சிய இயக்கம் கையாளுகிறது.


கலை–இலக்கியத்தில்


கலை, இலக்கியத் துறையில் புதிய விமர்சன முறைகளை உருவாக்க இவை உதவின. மார்ச்சிய விமர்சனம், மார்க்சியக் கண்ணோட்டம் என்ற ஆய்வு முறைகள் தமிழுக்கு வளம் சேர்த்தன. “முற்போக்கு” என்ற சொல் தொன்றுதொட்டு இருப்பதுதான். மார்க்சியம் அதற்குத் தனித்துவமான பொருளைக் கூட்டியது. இதிகாசங்களையும் புராணங்களையும் மதம் சார்ந்த இலக்கியங்களையும் மறுவாசிப்பு செய்வதை ஒரு பண்பாட்டுத் தள இயக்கமாகவே மேற்கொண்டிருப்பது மார்க்கியம்.


நாடகம், திரைப்படம் ஆகிய கலைச் சித்தரிப்புகளிலும் மார்க்சியக் கருத்துகள் ஆளுமை செலுத்துகின்றன. கம்யூனிஸ்ட்டுகளே உருவாக்கக்கூடியவை ஒருபுறமிருக்க, பொழுதுபோக்குக்காகவும், வணிக நோக்கத்துடனும் தயாரிக்கப்படுவனவற்றிலும் நாயகப் பாத்திரங்கள் சமத்துவம், பொதுவுடைமை என்றெல்லாம் பேச வேண்டியிருக்கிறதே!  


சமூக அமைப்பு தொடர்பான “அடிக்கட்டுமானம்”, “மேல்கட்டுமானம்”, “அந்நியமாதல்” என்ற சொற்கள் கலந்தன. உள்ளூர், உள்நாடு, உலக நாடுகள் என எங்கும் நியாயத்துக்காகவும் நீதிக்காகவும் திரள்கின்ற போராளிகளுடன் வெளிப்படுத்துகிற “ஒருமைப்பாடு” ஒரு  சொல்லாடலாக மட்டுமல்லாமல் உழைப்பாளி வர்க்கப் பண்பாடாகவும் வேரூன்றியிருக்கிறது.


மார்க்சிய இயக்கத்தால் தமிழ் கூறும் நல்லுலகில் பரவியது. புரட்சிக்கான நேர்மையையும் அர்ப்பணிப்பையும் கண்டதால் தமிழ்நாடு என்ற பெயருக்காகப் பசமுதாய மாற்றம் தானாக ஏற்பட்டுவிடுமா? “புரட்சி” நடந்தாக வேண்டும். செங்கொடிகளின் கீழ் உரக்க ஒலிக்கும் “புரட்சி ஓங்குக” என்ற முழக்கம் மாட்டினிப் போராட்டம் மேற்கொண்ட சங்கரலிங்கனார், தன் மறைவுக்குப் பின் உடலைக் கம்யூனிஸ்ட்டுகளிடம்தான் ஒப்படைக்கக் கேட்டுக்கொண்டார்.


இன்றைக்கும் தமிழ் உரிமை பாதுகாப்புக்காகவும், ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்தும், மாநில சுயாட்சியை உயர்த்திப் பிடித்தும் போராடுகிறவர்களோடு மார்க்சியர்கள் தோள் சேர்ந்து நிற்கிறார்கள். தமிழ் செழிப்பதற்குத் தமிழர்கள் செழித்திருக்க வேண்டும் என்ற தெளிந்த பார்வையோடு மக்களுக்கான இயக்கங்களை மேற்கொள்கிறார்கள்.


இதர உள்ளடக்கங்களோடு மொழி மேம்பாட்டுக்கான நூல்களை வெளியிடுவதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாரதி புத்தகாலயம் ஆகியவையும் கீழைக்காற்று, விடியல் உள்ளிட்ட இதர இடதுசாரி இயக்கங்கள் சார்ந்த பதிப்பகங்களும், அலைகள், எதிர், பனுவல், பரிசல், முரண், புலன் இன்னபிற, சிவப்புச் சிந்தனையாளர்களால் நடத்தப்படும் பல வெளியீட்டகங்களும் மொழி வளர்ச்சி, தமிழ்நாடு மாநில உரிமைகள் தொடர்பான முக்கியமான நூல்களை வெளியிட்டுப் பங்காற்றி வருகின்றன.


ஆசான்கள் சொன்னது


மார்க்சியம் மொழியை ஒரு தொடர்புக்கான ஊடகமாக மட்டும் கருதாமல், சமூக விளைச்சலாகவும் பார்க்கிறது. மனித உழைப்பிலிருந்தே மொழி உருவானது என்கிறது. கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் இருவரும் எழுதிய “ஜெர்மன் தத்துவம்” என்ற நூலில் உள்ள சிறப்பான கருத்து இது: "உணர்வைப் போலவே பழமையானது மொழி; பிற மனிதர்களுக்காக இருக்கிற நடைமுறை சார்ந்த ஓர் உணர்வு மொழி;   அந்த ஒரே காரணத்தினால் உண்மையில் அது தனிப்பட்ட முறையில் எனக்காகவும் இருக்கிறது."


இந்தப் புரிதலோடு மார்க்சிய இயக்கம், உணர்வு வெளிப்பாட்டுக்கான மொழியை உணர்ச்சிப்பூர்வமாக உயர்த்தித் தொழுவதில்லை, வெறும் கருவியாகக் கீழிறக்கிப் புறக்கணிப்பதுமில்லை. தமிழும் தமிழ் மண்ணும் மார்க்சியத்தோடு கொண்டுள்ள உறவின் குருதிக் கதகதப்புக்கு இதுவே காரணம்.

[0]

செம்மலர் மார்ச் 2026 இதழில் எனது கட்டுரை