Saturday, 3 January 2026

`அரசியல்' செய்வோருக்கு அகாதமியில் என்ன வேலை - படைப்பாளியின் பேனாவைப் பறிப்பது நியாயம்தானா?


              

இன்னும் மூன்று ஆண்டுகளில் பவள விழாவைக் கொண்டாடவிருக்கும் சாகித்ய அகாதமி, மிகப்பெரிய தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. இறுதிப்படுத்தப்பட்ட விருதாளர்கள் பட்டியலை வெளியிடாமல், கடைசி நிமிடத்தில் தடுத்திருக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இப்படி ஒரு சம்பவம் சாகித்திய அகாடமியின் வரலாற்றிலேயே நிகழ்ந்ததில்லை.


இலக்கியப் படைப்புகள் சார்ந்த பங்களிப்புகளுக்கான இந்தியாவின் ஓர் உயரிய அங்கீகாரமாக மதிக்கப்படுவது சாஹித்திய அகாதமி விருது. கடந்த காலங்களில் அந்த விருது யாருக்கு என அறிவிக்கப்பட்டபோது விமர்சனம் எழுந்ததுண்டு. 'அவருடைய படைப்பு தகுதி வாய்ந்ததல்ல... அரசியல் காரணங்களுக்கான தேர்வு' என்று எழுத்தாக்கம் தொடர்பான சர்ச்சைகளாக அவை இருக்கும்.

இந்த முறை முற்றிலும் மாறுபட்ட பிரச்னை. விருதுகளை அறிவிக்கவிடாமல் நிறுத்திவிட்டார்கள். அவ்வாறு நிறுத்திவைத்திருப்பது ஒன்றிய கலாசார அமைச்சகம். இறுதிப்படுத்தப்பட்ட விருதாளர்கள் பட்டியலை அரசாங்கம் கடைசி நிமிடத்தில் தடுத்தது, தேசிய அளவிலான இலக்கியக் கழகமாகிய சாகித்ய அகாதமியின் வரலாற்றில் இதுவே முதல் முறை. நாடு முழுவதும் எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் கடும் கண்டனத்தை இந்த நடவடிக்கை பெற்றிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் இந்த விருதுகளைப் பெற்றவர்களில் சிலரும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்தச் செய்திகள், அகாதமியின் தொடக்க ஆண்டுகளில் வந்த அறிவிப்பு ஒன்றை நினைவூட்டுன்றன.

அரசாங்கத்தின் எல்லை!

சாஹித்திய அகாதமி அமைப்பிற்கு அரசாங்கம் நிதி வழங்கும். ஆனால், அதன் செயல்பாடுகளில் தலையிடாது. அகாதமி யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் அரசாங்கம் தலையிடாது – இவ்வாறு அறிவித்தவர் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. அகாதமியின் முதல் தலைவரும் அவர்தான்.

1954 மார்ச் 12 அன்று இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. அவரே ஒரு எழுத்தாளர், வாசகர் என்ற முறையில் அகாதமி உறுப்பினர்கள் அவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். 1963-ல் மறுபடியும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1964-ல் காலமாகிவிட, அடுத்த தலைவராக குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, குடியரசுத் தலைவரான டாக்டர் ஜாகிர் உசேன் அகாதமியின் தலைவருமானார்.

அன்றைய சூழலில், அமைப்பிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்க நேருவின் தலைமை பயன்பட்டது என்ற கருத்து உண்டு. அவருக்கும், ராதாகிருஷ்ணனனுக்கும், ஜாகிர் உசேனுக்கும் விடுதலைப் போராட்டம், தத்துவ ஆய்வு, இலக்கிய ஈடுபாடு என்ற அடையாளங்களும் இருந்தன. இருந்த போதிலும், அப்போதே விமர்சனங்களும் வந்தன. நேருவின் நெருங்கிய நண்பரும் அரசியல் செயல்பாட்டாளருமான ஆச்சார்ய ஜே.பி. கிருபளானி, இப்படி பிரதமர் எல்லா இடங்களிலும் இருப்பது பிற அறிஞர்கள் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தத் தடையாகிவிடும் என்று கூறினார்.

                                                    சாகித்ய அகாதமி விருது

நையாண்டி அரசியல் எழுத்துகளுக்காக புகழ் பெற்றவரான, நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங், அரசியல்வாதிகள் அகாதமி தலைவர்களாவது அரசு சார்பு எழுத்துகள்தான் வர வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதாகிவிடும் என்று எச்சரித்தார். இலக்கியவாதி அதிகாரத்தின் மடியிலமர்ந்து கவிதை எழுதுபவரல்ல; அதிகாரத்தின் கண்களைப் பார்த்து கேள்வி கேட்பவர் என்றார் குஷ்வந்த் சிங். வேறு பல எழுத்தாளர்களும் தங்கள் ஏற்பின்மையை வெளிப்படுத்தினார்கள்.

துணிச்சலான அறிக்கை

அப்போதுதான் நேரு, “அகாதமி கூட்டங்களுக்கு நான் பிரதமராக வர மாட்டேன், எழுத்தாளர் என்ற முறையிலேயே வருவேன்,” என்று பதிலளித்தார். ஆயினும், விமர்சனங்கள் தொடர்ந்தன. நேருவைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, சிறந்த ஓவியரும் அணு ஆற்றல் அறிவியலாளருமான டாக்டர் ஹோமிபாபா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, சாகித்ய அகாதமி, சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாதமி ஆகிய மூன்று அமைப்புகளின் செயல்பாடுகளையும் ஆராய்ந்து அறிக்கையளித்தது.

அரசியல் பதவிகளில் இருப்பவர்கள் இந்த அமைப்புகளுக்குத் தலைமை தாங்குவதைத் தவிர்ப்பது இலக்கியச் சுதந்திரத்திற்கு நல்லது என்ற கருத்தை குழு தனது அறிக்கையில் முன்வைத்தது. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் தலைமையிடத்திற்கு அரசாங்கத்தார் வரக்கூடாது என்று பரிந்துரைத்தது.


                                                    லால்பகதூர் சாஸ்திரி


இந்தப் பரிந்துரை ஏற்கப்பட்டதன் அடிப்படையில், ஜாகிர் உசேனுக்குப் பிறகு, அரசுப் பொறுப்புகளில் இருப்பவர்கள் அகாதமி பொறுப்பேற்பது தவிர்க்கப்பட்டு வருகிறது. அகாதமியின் தன்னாட்சி அதிகாரம் இவ்வாறு தக்கவைக்கப்பட்டு வந்துள்ளது.

மொழியியலாளர் டாக்டர் சுநிதி குமார் சாட்டர்ஜி (1969–77), குஜராத்தி கவிஞர் உமாசங்கர் ஜோஷி (1978–82), கன்னட எழுத்தாளர் வி.கே. கோகாக் (1983–87), இலக்கியத் திறனாய்வாளர் பி.என். தத் (1988–92), கன்னட இலக்கியப் படைப்பாளி யு.ஆர். அனந்தமூர்த்தி (1993–97), ஒடியா கவிஞர் ரமாகாந்த ரத் (1998–2003), உருது அறிஞர், விமர்சகர் கோபி சந்த் நாரங் (2004–08), வங்காளக் கவிஞர், நாவலாசிரியர் சுனில் கங்கோபாத்யாய (2008–12), இந்தி எழுத்தாளர் விஸ்வநாத் பிரசாத் திவாரி (2013–18), கன்னட நாடகவியலாளர் சந்திரசேகர கம்பார் (2019–23) ஆகியோர் அகாதமி தலைவர்களாகப் பணியாற்றியுள்ளனர். தற்போது இந்தி எழுத்தாளர் மாதவ் கௌஷிக் தலைவராக உள்ளார்.

தமிழர், பெண்கள், இல்லையா?

அகாதமிக்கு இதுவரையில் தமிழ்ப் படைப்பாளி எவரும் தலைவராகக் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. அதேபோல, அதலைவர் பொறுப்பிற்கு பெண் ஒருவர் கூட கொண்டுவரப்பட்டதில்லை. இவை தொடர்பான தேசிய, மாநில, இலக்கிய, பாலின அரசியல்கள் தனியாக எழுதப்பட வேண்டியவை. இப்போது முன்னுக்கு வந்துள்ள விருது விவகாரத்தை இங்கே விவாதிப்போம்.


அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளுடன், ராஜஸ்தானி, ஆங்கிலம் ஆகியவற்றுக்குமாக 24 மொழிகளின் எழுத்தாளர்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒவ்வொரு மொழிக்குமான தேர்வுக் குழுவினர், ஒவ்வொருவரைத் தேர்வு செய்து, 24 பேர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 18 அன்று பிற்பகல் 3 மணிக்கு, அதனை வெளியிடுவதற்கான செய்தியாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அன்று காலைதான் அகாதமியின் செயற்குழு கூடி இறுதிப்பட்டியலை அங்கீகரித்திருந்தது. அகாதமியின் ரவீந்திர பவன் அரங்கிற்குச் செய்தியாளர்கள் வரத்தொடங்கியிருந்தார்கள். கூட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, செயற்குழு அலுவலர் ஒருவர் வந்து நடைமுறை நுணுக்கங்கள் காரணத்திற்காக பட்டியல் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.

இது செய்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், அங்கிருந்த செயற்குழு உறுப்பினர்களுக்கே கூட அதிர்ச்சியளித்தது. நமக்கே தெரியாமல் என்ன நடைமுறை நுணுக்கப் பிரச்னை ஏற்பட்டிருக்கும் என்று அவர்கள் திகைத்தார்கள். செய்தியாளர்கள் கூட்டம் மறுநாள் நடத்தப்படும் என்று அகாதமி அலுவலர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை.


கஜேந்திரசிங் ஷெகாவத்

அறிக்கையைப் பறித்த அமைச்சகம்
சில உறுப்பினர்கள் தங்கள் ஏற்பின்மையை வெளிப்படுத்தினார்கள். உண்மையில், பட்டியல் அறிவிப்பு தள்ளிவைக்கப்படவில்லை, மாறாகப் பட்டியலே நிறுத்திவைக்கப்பட்டுவிட்டது – கறாராகச் சொல்வதென்றால், பட்டியல் செல்லாததாக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது. ஒன்றிய கலாசார அமைச்சகம் தலையிட்ட பின்னணியில்தான் இதெல்லாம் நடந்திருக்கின்றன என்பதும் தெரியவந்தது.


கலாசார அமைச்சராக இருப்பவர் கஜேந்திர சிங் ஷெகாவத் – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர். எதிர்ப்பலைகள் பரவியதைத் தொடர்ந்து, அகாதமிக்கும் அமைச்சகத்துக்கும் இடையே சென்ற ஆண்டு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அறிக்கை வெளியீடு தடுக்கப்பட்டதாக அமைச்சக அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

நிர்வாகச் சீர்திருத்தங்ளுக்காகவும், அகாதமியின் மேம்பட்ட செயல்பாட்டுக்காகவுமே அந்த ஒப்பந்தம் என்பதாகவும் கூறினர். அகாதமி தலைவர் இதுவொரு நிர்வாக நடைமுறை, அவ்வளவுதான் என்று சொன்னார். அகாதமி வழங்கும் முதன்மை விருது (பரிசு ரூ.1,00,000), பால புரஸ்கார் விருது (ரூ.50,000), மொழிபெயர்ப்பு விருது (ரூ.50,000) ஆகிய தொகைகள், குழுக் கூட்டங்களுடன் அகாதமி ஏற்பாடு செய்யும் உரையரங்குகள், வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பு, அலுவலர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களுக்குமான நிதியை அமைச்சகம்தான் வழங்குகிறது.

அந்தச் சாக்கில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. நிர்வாக மேம்பாடு என்ற சாக்கில், விருதுகள் யாருக்கென முடிவு செய்கிற அதிகாரத்தை ஒன்றிய அரசு கைப்பற்றுகிறது என்று, இந்த நடவடிக்கையைக் கண்டிக்கிற எல்லோரும் கூறுகிறார்கள். 

அகாதமி தயாரித்திருந்த பட்டியலில் தமிழ்நாட்டின் மூத்த எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான ச. தமிழ்ச்செல்வன் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. எப்போதோ கிடைத்திருக்க வேண்டியது இப்போதாவது வருகிறதே என்ற வரவேற்போடு அவருக்கு வாழ்த்துச் சொல்ல சக படைப்பாளிகள் தயாராகிக்கொண்டிருந்தபோதுதான், “ஒப்பந்தம்” குறுக்கிட்டிருக்கிறது.


ஏற்கெனவே விருது பெற்றவர்களான வண்ணதாசன், இமையம், யூமா வாசுகி, யெஸ். பாலபாரதி, விஷ்ணுபுரம் சரவணன், ஆய்வாளர்கள் ஆர். பாலகிருஷ்ணன், வெங்கடேஷ் ஆத்ரேயா, படைப்பாளிகள் பெருமாள் முருகன், ஷங்கர்ராம சுப்பிரமணியன், மாலதி மைத்ரி, ஆதவன் தீட்சண்யா, தமயந்தி, பவா செல்லத்துரை, உதயசங்கர், கலைச் செயல்பாட்டாளர்கள் ரோகிணி, மங்கை, கவின் மலர்... பத்திரிகையாளர்கள் திருமாவேலன், விஜயசங்கர், கவிஞர்கள் பழனி பாரதி, சக்தி ஜோதி, திரைப்பட இயக்குநர்கள் வசந்த பாலன், அஜயன் பாலா, மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் பேராசிரியர் மார்க்ஸ், பாலமுருகன், பதிப்பாளர்கள் ஒளிவண்ணன், ஆழி செந்தில்நாதன் உள்ளிட்ட 236 பேர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

.

                                                ச. தமிழ்ச்செல்வன்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் து.ரவிக்குமார் உட்படப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.


ஏன் கடைசி நிமிடம்?

இது தொடர்பாக எழுகிற சில கேள்விகளை இங்கே பகிர்ந்திட எண்ணுகிறேன். அகாதமியின் தன்னாட்சியைத் தட்டிப் பறிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தற்போதைய தலைவரும் மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது சரிதானா? இது அநீதியானது என்று கையெழுத்திட மறுத்திருக்க வேண்டும், தங்கள் ஒவ்வாமையை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பதவியில் இருக்கிற காலத்தில் இதையெல்லாம் வெளிப்படையாக எதிர்க்கப் பலரும் முன்வருவதில்லை. அதே நிலையில் இவர்களும் இருந்தார்கள் போலும். அப்படியொரு ஒப்பந்தம் இருக்கிறது என்றால், எப்போதிருந்து அது செயல்பாட்டுக்கு வருகிறது எனற முடிவும் இருந்திருக்கும் அல்லவா?

அமைச்சகம் அதை முன்பே தெரிவித்து, அகாதமி செயற்குழு தேர்வு முடிவுகளைத் தானாக வெளியிடக்கூடாது, தன்னிடம் காட்டி ஒப்புதல் பெற்றுதான் அறிவிக்க வேண்டும் என்று கட்டுப்படுத்தியிருக்கலாமே? அந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்காமல், கடைசி நிமிட அதிர்ச்சி நாடகத்தை அரங்கேற்றியது ஏன்?

                                                    ரகுராம் ராஜன்

ஆக, மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக எடுக்கப்பட்டுள்ள நிர்வாக நடவடிக்கைக்கு வேறு உள்நோக்கம் இருப்பது தெளிவாகிறது. மத்திய அதிகாரக் ‘குவிப்பு மோகம் கொண்ட ஆட்சியாளர்களுக்கு, “தன்னாட்சி” என்றாலே அலர்ஜியாக இருக்கிறது. மாநில தன்னாட்சி என ஒலித்தாலே காதுகளை மூடிக்கொள்கிறார்கள். தன்னாட்சி என்றால் அது தனியாட்சி என்று அவர்களாக நினைத்துக்கொண்டு மருள்கிறார்கள். கூட்டாட்சியின் வலிமையே மாநிலங்களின் தன்னாட்சியில்தான் இருக்கிறது, நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் மாநிலத் தன்னாட்சி உரிமை ஓர் அடித்தளம் என்ற கோட்பாட்டு உணமையைக் காண மறுக்கிறார்கள்.

இதே ஒவ்வாமைதான் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள், செயலாக்க முகமைகள் ஆகியவற்றின் மீதும் செலுத்தப்படுகிறது. கடந்த 11 ஆண்டுக்காலத்தில் திட்டக் குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என மாற்றப்பட்டது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டி அதன் ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் ஆகியோர் பதவி விலகினார்கள். புலனாய்வு அமைப்புகள் ஆட்சியாளர் நோக்கத்திற்கு ஏற்ப ஏவப்படுகின்றன, செயலாக்கத் துறை அரசியல் கணக்குகளுக்காகச் செயல்படுத்தப்படுகிறது, தேர்தல் ஆணையமே கூட அதற்காக ஆணையிடுவதாகிவிடடது, இந்திய வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் தலைவராக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி நியமனம், அறிவியலை மக்களிடம் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞான் பிரசார் அமைப்பு கலைப்பு… இப்படி பல எடுத்துக்காட்டுகள் எதிர்க்கட்சிகளாலும் சமூக அக்கறையாளர்களாலும் குறிப்பிடப்படுகின்றன.


ஆக, தற்போது எழுகிற கண்டனக் குரல், விருதின் கௌரவம், வழங்கப்படும் பரிசுத் தொகை தொடர்பானதல்ல. நாட்டின் ஒருமைப்பாடு, மொழிகளின் மரியாதை, மாநிலங்களின் உரிமை, அமைப்புகளின் தன்னாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கானது. மாநில அளவிலேயே படைப்பாளிகளை அங்கீகரிக்கிற அகாதமி அமைப்புகளைஏற்படுத்த வேண்டும் என்ற கருத்துகளாகவும் இது பரிணமிக்கிறது. இதற்கு, கேரளம் ஏற்கெனவே முன்னுதாரணம் படைத்திருக்கிறது. மாநில அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றாலும், மக்கள் பணத்தில் நாடு தழுவிய அமைப்பாக இயங்கும் சாகித்ய அகாதமியை மீட்பது முக்கியம்.

அகாதமியின் சுதந்திரம் அமைச்சகத்தின் அதிகாரமாக்கப்படுவதில் வேறொரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. யாருக்கு விருது என முடிவு செய்வது, எதைப் பற்றி எழுதியவருக்கு என்று தீர்மானிப்பதாக மாறும். இவர்களது ஒற்றை ஆதிக்கக் கொள்கை, மதச்சார்பு ஆகியவற்றுக்கு ஆதரவான எழுத்துகளுக்கும், அவற்றை எழுதுகிறவர்களுக்குமே அங்கீகாரம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படும். அவ்வாறு ஏற்படாமல் தடுக்க, நாடு முழுவதும், அனைத்து மொழிகளிலும் இந்த எதிர்ப்பு உரக்க ஒலிக்க வேண்டும். படைப்பாளிகள் மட்டுமல்லாமல், வாசகர்களின் உணர்வாகவும் அது வெளிப்பட வேண்டும்!

                                    [0]

-விகடன் ப்ளஸ் எண்மப் பதிப்பில் (ஜனவரி 3) எனது கட்டுரை

 


No comments: