நடிப்பு, நடனம், பாட்டு, இசை, ஓவியம், சிற்பம், எழுத்து, ஒளிப்பதிவு, சொற்பொழிவு, கதைசொல்லல், நையாண்டிச் சித்திரம், ஏஐ காணொளி...
ஏதோவொரு கலைத்திறன் பெற்றவராய் மக்களை நேசிக்கும் கலைஞரா நீங்கள்? உங்களுக்காக இந்த வேண்டுகோள்:
முதல் இந்திய பண்பாட்டு மாநாடு
---------------பிரகடனம்----------------
பிலிப்பைன்ஸ் முதல் இந்தியா வரை, இஸ்ரேல் முதல் அமெரிக்கா, சிலி வரை என உலகம் முழுவதும் இருண்ட நச்சு சக்திகள் வலிமை பெற்று வருகின்ற சூழலில், மானுட விழுமியங்கள், அன்பு, கருணை, பரிவு, நீதி, சமத்துவம், நல்லிணக்கத்திற்காக; மக்களிடையேயும் நாடுகளிடையேயும் அமைதிக்காக; பூமியின் மீதும் அது தாங்குகிற எல்லாவற்றின் மீதுமான மரியாதைக்காக ஒரு கூட்டு அறைகூவலை விடுக்க வேண்டிய கடமை கலைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த இலக்கை நோக்கி, ஜனநாயகப் பண்பும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட மதச்சார்பற்ற பண்பாட்டுக் களச் செயல்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து, கேரள மாநிலம் கொச்சியில் 2025 டிசம்பர் 20 முதல் 22 வரை முதலாவது இந்தியப் பண்பாட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர்.
இந்தப் பண்பாட்டு மாநாடு இவற்றை உறுதிப்படுத்துகிறது:
மதச்சார்பின்மைக் கொள்கை:
உலகின் பல பகுதிகளைப் போலவே இந்தியாவிலும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பும் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. மக்களை அவர்களது பாலினம், மதம், சாதி, நிறம், இனம், மொழி, தேசியம் மற்றும் பாலியல் தெரிவுகளின் அடிப்படையில் 'வேற்றவர்களாக்குதலுக்கு' எதிராக இந்தப் பண்பாட்டு மாநாடு உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்கிறது.
அமைதிக் கொள்கை:
பாலஸ்தீனம், சாஹேல் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போன்ற தொலைதூர இடங்களில் வன்முறையும் பேரழிவும் தாண்டவமாடுகின்றன. இந்தியாவிலும் கூட வன்மத்திலும் போரிலும் தாகம் கொண்ட சக்திகள் உள்ளன. போரும் வன்முறையும் எதற்கும் தீர்வாகாது என்பதையும், போர் இரு தரப்பிலும் உள்ள ஏழை மக்களையே அதிகம் பாதிக்கிறது என்பதையும், சிக்கலான பிரச்சினைகளுக்கு முதிர்ச்சியான தீர்வு முயற்சிகள் தேவை என்பதையும் இந்தப் பண்பாட்டு காங்கிரஸ் பறைசாற்றுகிறது.
சுதந்திரக் கொள்கை:
சர்வாதிகார அரசுகளும் பெருநிறுவனங்களும் வலதுசாரி அமைப்புகளும் பல்வேறு வகையான தணிக்கைக் கெடுபிடிகள் மூலம் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்களின் குரல்வளையை நசுக்க முயல்கின்றன. பல சந்தர்ப்பங்களில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிரான கருத்தைக் கொண்டிருப்பதே கூட சிறைவாசத்துக்கு அல்லது அதைவிட மோசமான விளைவுகளுக்கு இட்டுச்செல்கிறது. சுதந்திரமாகச் சிந்திக்கவும் படைக்கவும், அச்சமின்றி எதார்த்தத்தை ஆராய்ந்து வெளிப்படுத்தவும், மக்களிடம் தடையின்றிச் சென்றடையவும் கலைஞர்களுக்குள்ள உரிமையை இந்தப் பண்பாட்டு மாநாடு உறுதிப்படுத்துகிறது. கலையும் இலக்கியமும் சுதந்திரத்தின் பன்னெடுங்கால வெளிப்பாடுகள்; அவை என்றும் அவ்வாறே இருக்க வேண்டும்.
மரியாதைக் கொள்கை:
பருவநிலை மாற்றம், வெப்பநிலை அதிகரிப்பு, அழிவை எதிர்கொள்ளும் இயற்கையமைப்பு என்ற சூழலில், “பூமியின் கனிகள் நம் அனைவருக்கும் சொந்தம், பூமியோ எவருக்கும் சொந்தமானதல்ல” என்பதை வலியுறுத்துவது முன்னெப்போதையும் விட இன்று அவசியமாகிறது. அனைத்து உயிரினங்களின் நலனுக்காக இயற்கையை மதிப்பது அல்லது செல்வந்தர்களின் நலனுக்காக இயற்கையை பேராசைவெறியோடு சுரண்டுவது – இந்த இரண்டில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பண்பாட்டு மாநாடு, சுரண்டலுக்கும் அழிவுக்கும் மாறாக மரியாதையையும் சகவாழ்வையும் தேர்வு செய்கிறது.
இந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் வெளியீடுகளைக் கொண்டு வருதல், கருத்தரங்குகள் மற்றும் திருவிழாக்களை நடத்துதல், பண்பாட்டுச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான முன்முயற்சிகளை இந்தப் பண்பாட்டுப் பேரவை மேற்கொள்ளும்.
மாநில, மாவட்ட, நகர , கிராம அளவிலான மாநாடுகளை ஒருங்கிணைக்குமாறு கலைஞர்கள், அறிஞர்கள், பண்பாட்டுத்தளச் செயல்பாட்டாளர்களுக்கு இந்தியப் பண்பாட்டு மாநாடு அழைப்பு விடுக்கிறது. இந்தப் பண்பாட்டு மாநாடுகள், இப்பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கொள்கைகளை மக்களிடையே பரப்பிடவும், இருண்ட சக்திகளை வீழ்த்துவதற்குப் பண்பாட்டுச் செயல்பாட்டாளர்களைத் தயார்படுத்திடவும் முயலும்.
இந்த உலகத்தை அனைத்து உயிரினங்களுக்குமான, பூமிக்குமே கூட, ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்காக – மனித சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், மதச்சார்பின்மை, அமைதி, நல்லிணக்கம், மரியாதை ஆகிய கொள்கைகளை உறுதிப்படுத்தவும், நிலைநிறுத்தவும், மீட்டெடுக்கவும் மறுசீரமைக்கவும் ஒன்றிணையுமாறு இந்தியக் குடிமக்களுக்கும் உலக மக்கள் அனைவருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.
[0][0][0][0][0]
இந்த முதலாவது பண்பாட்டு மாநாட்டை ‘புரட்சிகர பண்பாட்டு இயக்கம்’ நடத்தியது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கிவைத்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முற்போக்குப் படைப்பாளிகள், கலைஞர்கள் பங்கேற்றார்கள். அனைத்துக் கலைஞர்களுக்கும் ஓர் அறைகூவலாக வெளியிடப்பட்ட இந்தப் பிரகடனத்தைத் தமிழில் தருவதில் இந்த இயக்கத்தில் பங்கேற்கும் உணர்வு எனக்கு...
No comments:
Post a Comment