புதிய வலைத் தொடர்
பையன் அம்மாவிடம் கேட்கிறான்: “இந்த விலங்குக்கு ஏனம்மா கழுத்து இவ்வளவு நீளமா இருக்குது?“ தாய் பதிலளிக்கிறார்: “பாலைவனத்துல புதர்களுக்குள்ள கழுத்தை நீட்டி இலை தழைகளைக் கடித்துச் சாப்பிடறதுக்கு வசதியா இப்படி இருக்குதுடா செல்லம்.”
தொடர்ந்து அவன் வினவுகிறான்: “இதோட கண்ணு முன்னாடி எதுக்கும்மா ஏதோ உறை போட்ட மாதிரி சதை தொங்குது?” தாய் விடையளிக்கிறார்: “அதுவாடா கண்ணா, பாலைவனத்துல எப்பவும் காத்துல சூடான மணல் பறந்துக்கிட்டே இருக்கும்ல… அது கண்ணுக்குள்ள போகாமத் தடுக்கிறதுக்குத்தான் இப்படி தடை போட்டிருக்கு.”
“சரி, இதோட கால் அடிப்பக்கத்தைப் பாருங்கம்மா, மத்த விலங்குகளைப் போல இல்லாம கவுத்துப் போட்ட தோசைக்கல்லு மாதிரி, நல்லாவே இல்லையே…” “இல்லடா தங்கம், பாலைவனத்துல எங்க பார்த்தாலும் மணல் தரைதானே, அதுல கால் புதையாம இருக்கிறதுக்கு இதுதான் உதவுது.”
“இந்த மான், குதிரை மாதிரி விலங்குக்கெல்லாம் முதுகு நேரா அழகா இருக்குதுல்ல, இதுக்கு என்னமோ பானையைக் கவுத்து வச்ச மாதிரி கூம்பியிருக்குது பாருங்கம்மா.” “பட்டூ, அதுக்குள்ளதான் தண்ணீர் சேமிக்கிற அறை இருக்குது. பாலைவனத்துல எல்லா இடத்துலேயும் தண்ணீர் கிடைக்காதுல்ல, அப்ப இதுக்குள்ள இருக்கிற தண்ணீரையே பயன்படுத்திக்கிடும்.”
“ஓ, பாலைவனத்துல வாழுறதுக்கு ஏத்த மாதிரிதான் இதோட உடம்பு இப்படியெல்லாம் இருக்குது, அப்படித்தானே அம்மா?“ “ஆமா. சரியா புரிஞ்சிக்கிட்டியே என் புத்திசாலிக் கண்ணு,” என்று, மகனின் கேள்விகளுக்கு சரியாக பதில் சொன்ன மகிழ்ச்சியோடு தலையை வருடினார். ஆனால், அடுத்ததாக அவனிடமிருந்து வந்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதவராக அதிர்ந்துபோய்த் திகைத்தார்.
சிறுவன் கேட்டான்: “அப்படின்னா இதை ஏம்மா இங்க வச்சிருக்காங்க?” அவர்கள் பேசிக்கொண்டிருந்தது ஒட்டகத்தைப் பற்றி. அது வைக்கப்பட்டிருந்த இடம் உயிரியல் பூங்கா என்று நாசூக்காகப் பெயர் மாற்றப்பட்ட மிருகக்காட்சி சாலை.
பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கில நகைச்சுவைத் தொகுப்பொன்றில் படித்த இந்தக் குட்டிக் கதையை, அண்மையில் ஓடிடி (ஜியோ ஹாட்ஸ்டார்) தளத்தில் வெளியாகியுள்ள “சிரய்யா” என்ற வலைத்தொடர் நினைவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒட்டகம் போலவே, ஆகாயத்தில் பறப்பதற்கான சிறகுகள் இருந்தும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் கிளிகளுக்கு அவற்றால் பயனில்லை. எவ்வளவு பெரியதாக இருந்தாலும், உரிய நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் கிடைத்தாலும், இனிய வார்த்தைகளால் கொஞ்சப்பட்டாலும் கூண்டு கூண்டுதானே? வாய் இருந்தும் பேச அனுமதிக்கப்படாத, கண் இருந்தும் சுற்றிலும் பார்க்கும் சுதந்திரம் ஏற்கப்படாத, கை இருந்தும் உயர்த்த விடப்படாத, தலை இருந்தும் “வேண்டாம்” என்று மறுத்து இடம் வலமாக அசைக்க முடியாத
பெண்கள் அந்த ஒட்டகத்தையும் கிளியையும் போன்றவர்கள்தானே?
“சிரய்யா” என்றால் இந்தியில் “பறவை” என்று நேரடிப் பொருள். உருவகப் பொருளாக “சிறகடிப்பு” என்றும் கொள்ளலாம். தனக்கு நாட்டமோ, மனநிலையோ, உடன்பாடோ இல்லாத செயல்களுக்கு – உடலுறவு உள்பட – வல்லடியாகக் கட்டாயப்படுத்தப்படும் பெண் “வேண்டாம்” என்றோ, “முடியாது” என்றோ மறுக்கிற சுதந்திரச் சிறகடிப்பு பற்றிப் பேசுகிறது 6 அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொடர்.
மும்பை நகரில் ஒரு உயர் நடுத்தரக் குடும்பம். வீட்டின் தலைவர் சுகுமார் பிரம்மர் ஒரு கவிஞர், இதிகாச விளக்கமளிப்பவர். அந்தக் கதைகளில் வரும் பெண்களின் ஆளுமையைப் பற்றி வகுப்பெடுப்பவர். அவருடைய மூத்த மகன் வினய் குமார். அவனுக்கு மனைவியாய், வீட்டின் மூத்த மருமகளாய் வருபவள் கம்லேஷ். “புருசன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு கண்ணே” என்று சமூகம் என்னவெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறதோ அதையெல்லாம் கடைப்பிடிக்கிறவள். கணவனின் தம்பி அருண். அவனைத் தன் மகன் போலக் கருதி அன்பையும் கவனிப்பையும் செலுத்தி வளர்க்கிறாள் கம்லேஷ்.
மண வயதை அடைகிறவனுக்கு எனக் குடும்பமே சேர்ந்து பார்த்து முடிவு செய்கிறவள் பூஜா. புதிய சிந்தனைகளோடும் ஈடுபாடுகளோடும் வளர்ந்தவள். எந்த அளவுக்கு என்றால், திருமணம் முடிவான பிறகு ஒரு நாள் ஆட்டோவில் செல்லும் கம்லேஷ், சாலையோரத்தில் நடந்துகொண்டிருக்கிற ஆர்ப்பாட்டத்தில் பூஜாவும் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். திருநர், தற்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமைகளுக்கான போராட்டம் அது (திருநர் உரிமைகளை மறுக்கும் புதிய சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நேரத்தில் பொருத்தமான காட்சிதான்!).
திருமண நாளின் முதலிரவில், உடல் நலத்திலும், மன நிலையிலும் தயாராக இல்லாத பூஜாவைப் படுக்கையில் சாய்த்து வலுக்கட்டாயமாகத் திரும்பத் திரும்ப உறவுகொள்கிறான் அருண். காலையில் மொட்டை மாடியில் தனியாகக் கண்ணீர் மல்க நிற்கும் பூஜாவை நெருங்கி, நடந்தது என்னவென்று கேட்கிறாள் மூத்தவள். தனது ஒப்புதல் இல்லாமல் கட்டாயப்படுத்தி, “என்னை அவன் ரேப் செய்துவிட்டான்” என்கிறாள் இளையவள்.
இதைக் கூடவா ஒரு பெண் பிரச்சினையாக்குவாள் என்று நினைக்கும் கம்லேஷ் சினத்தோடு கன்னத்தில் அறைகிறாள். தாய் வீட்டுக்குச் செல்லும் பூஜாவைப் பெற்றோர் புரிந்துகொள்ளாமல் திருப்பி அனுப்புகிறார்கள். தேனிலவுக்குப் போனால் எல்லாம் சரியாகிவிடும் என்று பிரம்மர் குடும்பத்தினர் அதற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அதுவோ அவளுக்கு இம்சை நிலவாகிறது. அதைத் தவிர்ப்பதற்குச் சொல்லும் காரணத்தை உண்மையாக்குவதற்காகத் தனக்குத் தானே ரத்தக் காயம் ஏற்படுத்திக்கொள்கிறவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள்.
மருத்துவர் தெரிவிக்கும் அதிர்ச்சித் தகவலும், அதைத் தொடர்ந்து பெண்ணுரிமை இயக்கத்தினர் உள்பட பலரிடம் விசாரித்தறியும் உண்மைகளுமாகச் சேர்ந்து கம்லேஷ் புதுப் பரிணாமம் எடுக்கிறாள். எந்த அளவுக்கு என்றால், அருணைச் சிறையில் தள்ள முடிவு செய்கிறாள்.
அவள் அப்படிப் புதுப்பிறவி எடுத்ததில், “குற்றத்தைச் செய்பவன் மட்டுமல்ல, அதை வேடிக்கை பார்க்கிறவர்கள், பொருட்படுத்தாமல் விடுகிறவர்கள், கண்டிக்காமல் மௌனமாக இருப்பவர்கள் எல்லோருமே குற்றத்தின் பங்காளிகள்தான்” என்ற கருத்துக்கும் பங்கிருக்கிறது. ‘மகாபாரதம்‘ கதையிலிருந்து முன்னொரு நாள் அதை அவளுக்கு எடுத்துக் கூறியவர் மாமனார்தான். இப்போதோ, கவிதைகளில் முற்போக்காகக் காட்டிக்கொண்டு, கடைந்தெடுத்த ஆண் மையக் கலாச்சாரத்தின் உச்சத்தில் நிற்கிறார்! பழமையில் நின்ற மருமகள் புதுமைப் பெண்ணாவதும், முற்போக்காகப் பேசிய மாமனார் பிற்போக்குவாதிதான் என்று வெளிப்படுவதும் விறுவிறுப்புச் சேர்க்கின்ற திருப்பங்கள்.
அடுத்தடுத்து என்ன நடக்கிறதென்ற கதையைச் சொல்லப் போவதில்லை. அதைச் சொல்வது, தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் ஒளிபரப்பாகிற இந்த இந்தி வலைத் தொடரை வீட்டில் அமர்ந்து பார்க்கிற ஆர்வத்தைக் குறைத்துவிடக்கூடும்.
செய்தி படிப்பது உள்ளிட்ட மனைவியின் புதிய ஆர்வங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கும் வினய், திருமண நாளிலிருந்தே அவளிடம் “ஐ லவ் யூ” சொல்லக் கூச்சப்பட்டு எல்லோரின் பரிகாசத்துக்கு உள்ளளாகிறான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அதைத் தானாக முன்வந்து சொல்கிறான். அவன் அப்படிச் சொல்கிற சூழல் உணர்ச்சிகரமானது.
பாலியல் வன்கொடுமைக்குக் கடும் தண்டனைகள் அளிக்கும் சட்டங்கள் இருப்பினும், மண உறவு சார்ந்த அத்துமீறல் ஒரு வல்லுறவுக் குற்றம் என்று இந்தியச் சட்டம் வரையறுக்கவில்லை. கொடுமைகளை அனுபவிக்கும் பல பெண்கள் நீதிமன்றத்தை நாடாமல் இருப்பதற்குக் காரணம், குடும்ப கௌரவத்தைக் காக்க வேண்டும் என்ற கெடுபிடிகள் மட்டுமல்ல, சட்டம் துணை செய்யாது என்பதும்தான். இதை எடுத்துக் காட்டுகிற முதல் இந்திய வலைத் தொடராக ‘சிரய்யா’ வந்திருக்கிறது.
நேரடியாகச் சட்டம் இல்லை என்ற நிலையில், நிச்சயமாகக் கைது செய்ய இட்டுச் செல்லக்கூடிய வரதட்சனை தடைச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குப் போடலாம் என்று வழி சொல்கிறார் கம்லேஷ்சின் தாத்தாவான மூத்த வழக்குரைஞர். பூஜா அதற்குத் தயாராக இருக்கிறபோது, நேர் வழியில்தான் இதைக் கையாள வேண்டும் என்று கம்லேஷ் உறுதியாக நிற்பது பெண்மைக்கு மரியாதை.
மருமகள்கள் அடங்கிப் போவதைப் பார்த்து, “உங்களுக்குச் சட்டத்தின் உதவி இல்லையென்றால் என்ன? அதை விட வலிமையான ஆயுதம் இருக்கிறது. அதுதான் உங்கள் குரல்,” என்று உசுப்பிவிடுகிறார் பாட்டி. தன் காலத்தில் சாத்தியமில்லாமல் போனது இப்போதாவது நடப்பாகட்டும் என்ற எண்ணத்துடன் இப்படிக் கைகாட்டுகிற பாட்டியைப் படம் பார்க்கிற எல்லாப் பெண்களுக்கும் பிடித்துப் போகும். அவர் எதிர்பார்த்தபடி இருவரும் வாய் திறக்கிறார்கள், சிறகை விரிக்கிறார்கள்.
குடும்ப விழாவில் கூடியிருக்கும் பெண்களும் ஆண்களும் பிரம்மர் பேச்சைக் கேட்டுக் கலைந்து செல்ல எழுகிறார்கள். அப்போது கம்லேஷ் மற்றொரு குரலாயுதத்தைச் சுழற்றுகிறாள். “என் சம்மதம் இல்லாமல் கணவன் என்னைத் தொட்டதேயில்லை என்று மனசாட்சியோடு சொல்லக்கூடிய பெண்கள் மட்டும் இங்கேயிருந்து வெளியேறுங்கள்,” என்கிறாள்.
கம்லேஷ் பாத்திரத்தில் திவ்யா தத்தா, பூஜாவாக பிரசன்னா பிஷ்த் இருவர் நடிப்பும் கைகுலுக்கிப் பாராட்டத் தக்கது. சஞ்ஜய் மிஸ்ரா (பிரம்மர்), ஃபைசல் ரஷீத் (வினய் குமார்), சித்தார்த் ஷா (அருண்) ஆகியோர் பங்களிப்பும் கச்சிதம்.
26 முதல் 39 நிமிடங்கள் வரையில் ஓடுகிற ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு கலையாக்கமாகச் சுவைப்பதற்கும், கருத்தாக்கமாகச் சிந்திப்பதற்கும் ஏற்ற வகையில் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஷஷாந்த் ஷா. கதையை எழுதியிருப்பவர் சௌம்யாபிரதா ரக்ஸித். சுபங்கர் பார் ஒளிப்பதிவு, ராஜ நாராயன் தேவ் இசையமைப்பு, அஸீம் சின்ஹா படத்தொகுப்பு ஆகியவை சேர்ந்து கொள்ள, தயாரிப்பாளர்கள் ஸ்ரீகாந்த் மோதா, மஹேந்திரா சோனி இருவரும் இந்தச் சிறகடிப்புக்கான ஆகாய வெளியை விரித்திருக்கிறார்கள்.
பழைய பாதையிலிருந்து விலகும் நேற்றைய தலைமுறை, புதிய பாதையமைக்கும் இன்றைய தலைமுறை, புதுப் பாதையில் நடைபோடப் போகும் நாளைய தலைமுறை – இந்தக் கூட்டணியின் அணிவகுப்பில் நம்பிக்கைச் செய்தியோடு தொடர் நிறைவடைகிறது.

No comments:
Post a Comment