Monday, 21 April 2025

ஸ்டார் சங்கிலி


“வளர்ந்துக்கிட்டு இருக்கிற ஸ்டேஜ் இது. இப்பவே இந்த மாதிரிப் பேசுறான்னா இண்டஸ்ட்ரீல ஒழிச்சுக் கட்டிடுவாங்க.”

 

“மூணு படம்தான் வந்திருக்கு. மூணும் நல்லாப் போச்சுன்னாலும் டைரக்டர்களோட ட்ரீட்மென்ட்தான் காரணம். இவன்  என்னமோ தன்னோட முகத்துக்காகத்தான் ஓடிச்சுங்கிற மாதிரிப் பேசுறான்.”

 

“இவம் முகத்துக்காகத்தான் ஓடிச்சுன்னே இருக்கட்டுமே… ஆனா ஒரு பணிவு, தன்னடக்கம் வேணும்ல? அதுலேயும் முக்கியமா சீனியர் ஆர்ட்டிஸ்ட், லீடிங் ஸ்டார் பத்திப் பேசுறப்ப ஒரு மரியாதை இருக்கணும்ல? அவங்கெல்லாம் ஆரம்பத்துல எப்படி இருந்தாங்க, எப்படி வளர்ந்தாங்கன்னு தெரிஞ்சிக்கிடணும்.”

 

“இந்தக் கால தலைமுறை வெளியேதான் இப்படி இருக்காங்கன்னு பார்த்தா உள்ள வந்ததுக்கப்புறமாவது மாற வேண்டாமா?”

 

வளசரவாக்கம், ஜானகி நகரில் சினிமா, டிவி சீரியல், வெப் சீரிஸ் படப்பிடிப்புகளுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படுகிற பெரிய வீடு அது. குடியிருக்க விட்டிருந்தால் எவ்வளவு வசதியானவர்களானாலும்  கால்வாசித் தொகை கூட வாடகையாக வராது. தயாரிப்பாளருக்கோ, ஸ்டூடியோ செட்டுகளுக்குக் கொடுப்பதில் கால்வாசியை இந்த வீடுகளுக்குக் கொடுத்தால் போதும். மற்ற  நாட்களில் மூடியே இருக்கும், செக்யூரிட்டி மட்டும் தனியாக வந்து போவார்.

 

அன்றைக்கு ஷூட்டிங்  வேலைகள் நடந்துகொண்டிருந்த அந்தப் பெரிய வீட்டுக்கு உள்ளே ஹாலில் சூரியனையும் மிஞ்சும் ஒளி பாய்ந்திருந்தது. தரையில் நீண்டு நெளிந்து கிடந்த கேபிள்கள். கேமரா ட்ராலியும் விளக்குகளும் அடுத்த ஷாட்டுக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தன. வெளியே தெருவின் அகலமான பகுதியின் ஓரத்தில் ஜெனரேட்டர் வேன் இரைந்துகொண்டிருந்தது. அதன் பின்னால் பிராப்பர்ட்டீஸ் வேன் அமைதியாகத் திறந்திருந்தது.

 

அதை இடைஞ்சலாகப் பார்க்காமலிருக்க மற்ற வீடுகளில் வசிக்கிறவர்களும் (எல்லாமே இரைச்சல்கள் ஊடுறுவ முடியாத வீடுகள்), தெருவில் நடமாடுகிறவர்களும் பழகிவிட்டிருக்கிறார்கள். என்ன படம், நடிகர் நடிகை யார் என்று ஆர்வத்துடன் நின்று பார்க்கிறவர்கள் கூட மிகக்குறைவுதான்.

 

துணைக் கலைஞர்கள் தயாராகிக்கொண்டிருந்தார்கள். உதவி இயக்குநர்கள் அவர்களுக்கு எங்கே நிற்க வேண்டும், எந்தப் பக்கம் திரும்ப வேண்டும் என்று விளக்கி, பேச வேண்டிய வசனத்தையும் காட்ட வேண்டிய உணர்ச்சியையும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவருக்கும் ஜன்னலுக்கும் இடைப்பட்ட இடத்தில் ஓங்கியிருந்த மரத்தின் நிழலில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலியில் கால்களை நீட்டி, முதுகைச் சரித்து உட்கார்ந்திருந்தான் யுகமாறன். அவனுக்குக் காட்சி விளக்கம் கூறிக்கொண்டிருந்தாள் இணை இயக்குநர் மலர்விழி. அவள் இப்போது சொல்வதைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தான். ஆனாலும், அவள் ஏற்கெனவே சொல்லியிருந்த, அவனைப் பற்றிய சிலரது பேச்சுகள் எதிரொலித்தன.

 

“சாதாரணமா, இயல்பாத்தான் நான் பேசினேன். அதை வைச்சு இப்படி பாலிடிக்ஸ் பண்ணுவாங்கன்னு நான் நினைக்கவே இல்லை மலர்.”

 

அவனுடைய குரலில் தொணித்தது ஆதங்கமா, அச்சமா, இனிமேல் கவனமாகப் பேச வேண்டுமென்ற எச்சரிக்கையா என்று மலர்விழிக்கு உடனடியாகப் புரியவில்லை. ஊடகக் கலை பட்டதாரியான அவளுக்குத் திரைப்படங்கள் தொடர்பாக இருந்த புரிதலும், மாறுபட்ட படங்களைப் பார்த்து உள்வாங்கிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் ஆர்வமும் யுக மாறனுக்குப் பிடிக்கும். தன்னைத் தனித்து வைத்துக்கொள்ளாமல் உதவி இயக்குநர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள், லைட் பாய் உள்ளிட்ட தொழிலாளர்களுடன் இயல்பாகப் பழகுவது அவளுக்கும் பிடிக்கும்.

 

“அதையே நினைச்சுக்கிட்டிருக்காதீங்க சார். இப்படி முதுகுக்குப் பின்னால பேசுறவங்க எல்லாக் காலத்திலேயும் இருப்பாங்க. எல்லா ஃபீல்டுலேயும் இருப்பாங்க. நான் சினிமாவுக்கு வந்ததைப் பத்திக்கூட பேசியிருக்காங்க. ரிலேட்டிவ்ஸ் பேசியிருக்காங்க, ஃபீல்டுல இருக்கிறவங்களும் பேசியிருக்காங்க. சுண்டிவிட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான். கொஞ்சம் கவனமாவும் இருங்க… மனசுல படுறதையெல்லாம் அப்படியே பேசணுங்கிறதில்லை.”

 

‘பல வருசம் அனுபவம் இருக்கிறவ மாதிரி பேசுறாளே’ என்று ரசித்து  மதிப்போடு எடுத்துக்கொண்டு மௌனமாகத் தலையசைத்தான்.

 

‘இவரே நாளைக்குப் பெரிய ஸ்டாராயிட்டா இப்படியெல்லாம் பேச முடியுமா’ என்று நினைத்துக்கொண்டு ஸ்கிரிப்டின் அடுத்த பக்கத்தைப் புரட்டினாள்.

 

                                               ••••••••••••••••

 

யுகமாறன் பேசியது பற்றிய பேச்சுகளுக்கு சென்ற ஞாயிற்றுக் கிழமையின் ‘நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்’ நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிதான் தொடக்கம். முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்துள்ள இயக்குநர் தினேஷ் நடராஜ், முதல் படத்திலேயே பெரிய ஸ்டாருடன் இணை சேர்ந்து நடித்த இனியா இருவருக்கும் நடுவில் உட்கார வைக்கப்பட்டிருந்தான். மாறி மாறிப் பகிர்ந்துகொண்ட முன்கதைகளுக்குப்  பிறகு, தொகுப்பாளர் மாதேஷ் அதைக் கேட்காமல் இருந்திருக்கலாமோ என்று இப்போது நினைக்கிற கேள்வியை அப்போது கேட்டுவிட்டான்.

 

“ஆக்‘ஷன் ஹீரோ, ரொமான்டிக் ஹீரோ, டிஃபரென்ட் கேரக்டர்ஸ் என்று எப்பவும் எல்லாருக்கும் முன்னோடியா இருக்கிற நம்ம ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் சாருண் பாபு சார் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க யுவமாறன் சார்?”

 

“அதான் நீங்களே சொல்லிட்டீங்களே மாதேஷ். அவர் நம்ம சினிமாவுக்குக் கிடைச்ச அருமையான வெர்ஸடைல் ஆர்ட்டிஸ்ட்.”

 

“சூப்பர். அவர் உங்களுக்கு எப்படி இன்ஸ்பிரேஷன்? வேற யாரெல்லாம் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காங்க?”

 

“கேரக்டர்களை புரிஞ்சிக்கிட்டு நடிக்கிற எல்லாரையுமே ஒரு ஆக்டரா எனக்குப் பிடிக்கும். ஹீரோவா, ஹீரோயினா இல்லாம மத்த கேரக்டர்கள்ல வர்றவுங்கள்லேயும் அட்டகாசமா பண்றவங்க இருக்காங்க, அவங்களையும் எனக்குப் பிடிக்கும். மத்தபடி இன்னார்தான் இன்ஸ்பிரேஷன்னு யாரையும் சொல்ல மாட்டேன்.”

 

“உங்க ரெண்டாவது படத்துல ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் சாருண் பாபு சாரோடு முரண்பட்டு, அப்புறம் திருந்துற தம்பியா நடிச்சீங்க. அதைப் பத்திச் சொல்லுங்க.”

 

“அவர் படத்துல அப்படியொரு கேரக்டர்ல வந்தது எல்லாரையும் கவனிக்க வச்சுதுங்கிறது உண்மைதான்.”

 

“அது ஒரு எக்ஸைட்டிங் எக்ஸ்பீரியன்ஸா இருந்திருக்கும். அவர் மாதிரிச் செய்யணும்னு ஆசைப்பட்டிருப்பீங்கதானே?”

 

“இல்ல. அப்படியெல்லாம் ஆசைப்படல.”

 

“அப்படியா? அவர் மாதிரி பெர்ஃபார்ம் பண்ணனும்னு எல்லாருமே விரும்புவாங்க…”

 

“மத்தவங்களப் பத்தி எனக்குத் தெரியாது. நான் ஏன் இன்னொருத்தர் மாதிரி செய்யணும்? அவரை விடச் சிறப்பா செய்யக்கூடாதா? அவரை விட சாதாரணமாக்கூட செய்யலாம். எதுக்காக அவரைப் போலவே செய்யணும்.”

 

அன்று சாருண் பாபு பிறந்தநாள். அதையொட்டி திரும்பத் திரும்ப இப்படிக் கேட்டுக்கொண்டிருந்த மாதேஷ் நிகழ்ச்சியின் மற்ற இரண்டு விருந்தினர்களின் பக்கம் இதே போன்ற கேள்விகளோடு திரும்பினான். அப்போது அவனுக்கும் கூட இது பெரிய சர்ச்சையைக் கிளப்பும் என்றோ, ஆளுக்காள் யுக மாறனைச் சாடுவார்கள் என்றோ தோன்றவில்லை. நிர்வாகத்தினர் என்னவோ அவனைத் தட்டிக்கொடுத்தார்கள்.

 

ஒரு முக்கிய விவகாரமாக உடனே இதைத் தனது இணையப் பதிப்பில் வெளியிட்டது ஒரு பத்திரிகை. “சாருண் போல நடிக்க விரும்பவில்லை – தம்பியாக நடித்தவரின் பரபரப்பு பேட்டி,” என்ற தலைப்பு  எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தியது. “நாட்டில்   எவ்வளவோ பிரச்சினை இருக்க இதைப் போய் பெரிதுபடுத்துகிறார்களே,” என்ற எதிர்வினைகளும் பதிவு செய்யப்பட்டன என்றாலும், அடுத்தடுத்துப் பல ஊடகங்கள் அந்தப் பேட்டியின் யூ டியூப் இணைப்போடு, தங்களுடைய தலைப்புத் திறனையும் வெளிப்படுத்தின. ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா பதிவுகளில் மாறனைக் கிழித்துக்  காணிக்கையாக்கிக் குவித்தனர் சாருண் பாபு ரசிகர் – கம் – நற்பணி மன்றத்தினர். அவருடைய போட்டி நட்சத்திரப் பேராண்மையின் ரசிகர் – கம் – மக்கள் பணி மன்றத்தினர் தங்களுடைய மொபைல்களில் யுக மாறன் சொன்னதில் என்ன தப்பு என்று தட்டிவிட்டனர்.

 

சினிமா வட்டாரத்தைச் சேர்ந்தவர்களே பேசியபோதுதான் அவன் கவலைப்படத் தொடங்கினான். ஒரு திறமைசாலி வளர்ந்துவிட்டால் தங்களுடைய பாதை தடைப்பட்டுவிடும் என்று ஆதாரமே இல்லாமல் எப்போதுமே பயந்துகொண்டிருப்பவர்கள் பேசியதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடைய நலனில் அக்கறை உள்ளவர்களும் நிதானமாகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டாமா என்று கேட்டார்கள். நிதானமாகப் பேசுவதன் பொருள், ஆமாம் சாருண் தனக்குப் பெரியதொரு ஈர்ப்பு என்று பாசாங்காகவாவது ஒப்புக்கொள்வது என்று அவனுக்குப் புரியவே செய்தது.

 

மலர்விழியின் இதமான சொற்கள் தந்த ஊக்கத்துடன், அவனுக்கே உரிய உற்சாகத்துடன் கேமரா முன்னால் போய் நின்றான். இயக்குநர் “பெர்ஃபெக்ட்” என்று கட்டை விரல் காட்டியதைப் பெற்றுக்கொண்டான். பேக் அப் அறிவித்ததும் புறப்பட்டவனிடம், “சார், உங்களுக்கு சாருண் பாபு ஆஃபீஸ்லேயிருந்து கால் வந்தது. கான்டாக்ட் பண்ணுவீங்களாம்,” என்று தகவல் தெரிவித்தாள். அவள் முகத்திலும் குரலிலும் சற்றே கவலையின் சாயல் படர்ந்திருந்தது.

 

                                               ••••••••••••••••••

 

மீடியாக்களுக்கு அவர்களே தகவல் சொல்லியிருப்பார்களா அல்லது இத்தகைய நகர்வுகளை மோப்பம் பிடிப்பதில் பயிற்சி பெற்றவர்களால் பரவியதா? சாருண் பாபு பங்களாவுக்கு யுக மாறன் போனபோது, கோட்டை நுழைவாயில் போன்ற இரும்புக் கதவுக்கு முன்னால் கேமராக்களும் மைக்குகளும் பேனாக்களும் தயாராகக் காத்திருந்தன. முன்கதைச் சுருக்கத்துக்காக முண்டியடித்தவர்களைத் தவிர்த்துத் தாண்டி, செக்யூரிட்டிகள் கதவைத் திறந்துவிட உள்ளே சென்றான்.

 

மூத்த அனுபவசாலிகள் பொறுமையாகக் காத்திருக்க, அவன் பின்னாலேயே சென்று தாங்களும் நுழைய முயன்ற இளைய ஊடகத்தினரைக் காவலர்கள், அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் ஆணையின்படி, முரட்டுத்தனத்தைக் காட்டிவிடாமல் பக்குவமாக வெளியேற்றிக் கதவை மூடினார்கள்.

 

“ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் அழைத்ததால் வந்த யுக மாறன் இப்போது பங்களாவுக்குள் போயிருக்கிறார். என்ன நடந்ததென்று அறிய தொடர்ந்து கவனிப்போம் நேயர்களே. ஸ்டே டியூன்ட்,” என்று சிலர் அப்போதே நேரடி ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டார்கள். பங்களாவின் வளாகச் சுவரையும் மரங்களையும் தெருவையும் மற்ற ஊடகங்களின் கேமராக்களையும் காட்டிக்கொண்டிருந்தார்கள்.

 

                                        •••••••••••••••••••

 

பெரிய தடபுடல்களோ கெடுபிடிகளோ இல்லை. ஒரு செயலாளர் அவனை ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சாருண் வரும் வரையில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று நினைத்ததற்கு மாறாக அவர் மையமான சோஃபாவில் உட்கார்ந்திருந்தார். அவர் சொல்லாமலே செயலாளர் பக்கவாட்டில் இருந்த மற்றொரு சோஃபாவில் உட்கார வைத்தார்.

 

“கோயில் மண்டபத்திலே ஃபைனல் டே  ஷூட்டிங் வச்சிருந்தாங்களே, அதுக்கப்புறம் இப்பதான் மீட் பண்றோம் இல்லையா?” அவரே பேச்சைத் தொடங்கினார்.

 

“யெஸ் சார்.” குரலில் கொஞ்சம் படபடப்பு, நிறைய எதிர்பார்ப்பு.

 

“நல்லா சாய்ஞ்சு உட்கார்ந்துக்குங்க மாறன்.” அவர் இப்படிச் சொன்னபோதுதான் சோஃபா விளிம்பில் உட்கார்ந்திருப்பதை அவன் உணர்ந்தான். வழக்கமான நாளாக, இயல்பான சந்திப்பாக இருந்திருந்தால் அவனே வசதியாகச் சாய்ந்துதான் உட்கார்ந்திருப்பான்.

 

காஃபி வந்தது. அவருடைய மனைவியின் நேரடிப் பார்வையில் தயாரித்து வழங்கப்படும் காஃபியின் மணம், சுவை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய பிரமுகர்கள் அது பற்றி வியந்து கூறிய துணுக்குச் செய்திகளைப் படித்திருக்கிறான். அதெல்லாம் உண்மைதான் என்று நாக்கின் சுவை மொட்டுகள் உறுதிப்படுத்தின. கொஞ்சமாக இருந்த படபடப்பு தணிந்தது.

 

“எல்லா மீடியாவுலேயும் உங்க ரியால்டி ஷோ இன்டர்வியூதான் வைரலா போய்க்கிட்டிருக்கு போல.”

 

“சார், அது வந்து… நான் கேஸ்யுவலா அப்ப மனசுல தோணினதைத்தான் சொன்னேன். இன்டென்ஷன் எதுவும் கிடையாது.”

 

“ஐ அண்டர்ஸ்டேண்ட். நீங்க அப்படிச் சொன்னதில எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை நீங்க இன்சல்ட் பண்ணிட்டதா நான் நினைக்கவும் இல்லை.”

 

“தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச் சார்.”

 

“ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு இந்தத் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ரொம்ப அவசியம்னுதான் நான் நினைக்கிறேன். மத்தவங்க  என்ன சொல்றாங்க, எப்படி கிரிட்டிசைஸ் பண்றாங்கன்னு யோசிக்காதீங்க. உங்க வயசுல நானும் அப்படித்தான் இருந்தேன். தைரியமா பேசினேன். இந்த இடத்துக்கு வர்றதுக்கு அது ஒண்ணும் தடையா இல்லை.”

 

“தேங்க் யூ, தேங்க் யூ வெரி மச் சார்.”

 

“பல மாதிரி கிரிட்சிசம் வந்துக்கிட்டு இருக்கு. அதுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. இதை கிளியர் பண்றதுக்குத்தான் உங்களை வரச்சொன்னேன்.”

 

செயலாளர் ஒரு கறுப்பு பிளாஸ்டிக் உறையிலிருந்து எடுத்த கையடக்கமான பெட்டியை சாருணிடம் கொடுத்தார். அதிலிருந்து ஒரு  பொருளை எடுத்த சாருண் அதை மாறனின் வலது கை மணிக்கட்டில் மாட்டிவிட்டார். அது ஒரு ஒல்லியான தங்கச்  சங்கிலி.

 

“ஓகே, இன்னிக்கு ஷெட்யூலுக்கு நான் ரெடியாகுறேன்,” என்று கூறிவிட்டு, அவனுடைய தோளில் தட்டியவாறு எழுந்தார் சாருண்.

 

                                              •••••••••••••••••

 

திகைப்பு கலந்த அதிர்ச்சி முகத்தோடு வெளியே வந்தவனை கேமராக்களும் மைக்குகளும் பேனாக்களும் சூழ்ந்துகொண்டன. “ஸ்டார் ஆஃப் ஸ்டார்ஸ் சாருண் பாபுவை பார்த்தீங்களா? என்ன நடந்துச்சு? சார் என்ன சொன்னார்?”

 

மணிக்கட்டுச் சங்கிலியை உயர்த்திக் காட்டினான். அப்படியே ஒன்றுவிடாமல் சொன்னான்.

 

“நம்பர் ஒன் நட்சத்திரத்தின் பெருந்தன்மை. வளரும் கலைஞரை ஊக்குவித்த பேரன்பு. பேட்டிக்குப் பரிசாகக் கொடுத்த பிரேஸ்லெட். யுக மாறன் நெகிழ்ச்சி…” அங்கேயிருந்தே வீடியோ பதிவுகளும், மாறனின் பேட்டியும் செய்திகளாக இணையத்தில் ஏறின.

“இதுதான் சாருண் பாபு. தங்கக் கையால் குட்டு அல்ல, தங்கச் சங்கிலியே வாங்கியிருக்கிறார் யுக மாறன்….” பல பத்திரிகைகளின் டிஜிட்டல் பதிப்புகளிலும், யூ டியூப், இன்ஸ்டா, எக்ஸ், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், டெலிகிராம் தொடர்பிகளிலும் எதிர்வினைகள் இன்றும் தொடர்கின்றன.

 

                                          •••••••••••••••••••

 

“நல்லா சொல்லியிருக்கீங்க சார்,” என்றாள் மலர்விழி.

 

“அப்படித்தான சொல்லச் சொன்னாங்க,” என்றான் யுக மாறன்.

 

காயம் எதுவும் வெளியே தெரியாமல் விழுந்த அடிகளும், குத்திக் கிழித்துக் காயப்படுத்திய வார்த்தைகளும் அவள் எடுத்துக்கூறிய அடுத்த வசனத்தைக் கேட்டு மனதில் வாங்கிக்கொள்வதற்கு இடையூறு செய்துகொண்டுதான் இருந்தன.

[0][0][0]



                     இலங்கையிலிருந்து சிறுகதைகளுக்கென்றே மாதந்தோறும்                                     வெளியாவது ‘சிறுகதை மஞ்சரி’. அதன் 56ஆவது (ஏப்ரல் 2025)                                 இதழில் வந்துள்ள எனது கதை இது.

Saturday, 12 April 2025

பின்னால் இருப்பதே பெண்ணின் பெருமையா?

 


“வெற்றிபெற்ற ஒவ்வோர் ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்.” எப்போது, எங்கே, யாரிடமிருந்து தோன்றியது என்று தெரியாமலே உலகம் முழுவதும் பரவியிருக்கும் “பழமொழி” இது. வாழ்க்கையில் பெண்ணின் இடம் ஆணுக்கு உதவியாக இருப்பது மட்டும்தானா என்ற கேள்விகள் பெண்ணுரிமை இயக்கங்களில் இருந்து சென்ற நூற்றாண்டில் புறப்பட்டது. “தோல்வியடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பின்னால் ஓர் ஆண் இருக்கிறான்” எனும் “எதிர்–மொழி” கிளம்பியது. பாலின சமத்துவச் சிந்தனை மேலோங்கி வருவதன் பயனாக இப்போது பெருமளவுக்கு அந்தப் பழமொழி பதுங்கிவிட்டது. ஆனாலும், அவ்வப்போது பதுங்கு குழியிலிருந்து  எட்டிப்பார்க்கும். சாதனையாளர்கள் சிலர் தங்களின் வாழ்விணையர்களின் ஒத்துழைப்பைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு பொது நிகழ்வுகளில் இப்படிக் கூறவே செய்கிறார்கள்.  அல்லது அவர்களின் இணையர்களை மேடைக்கு அழைக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இப்படிக் கூறுகிறார்கள்.

 

இன்னொருபுறம், பல குடும்பங்களில், ஆண் எதிர்கொள்ள நேரிடும் கடுமையான கடுமையான சூழ்நிலைகளைத் திறமையாகக் கையாளுவதற்கும் இக்கட்டிலிருந்து விடுபடுவதற்கும் பெண்ணின் அறிவும் அனுபவமும் வழிகாட்டுகின்றன. தனிப்பட்ட உணர்ச்சிப் பிரச்சினைகளில், சொந்தபந்தங்கள் தொடர்பான சிக்கல்களில், ஏன் ஆணின் தொழில் சார்ந்த சவால்களில் கூட  பெண் கைகொடுக்கிறாள். அவள் தாயாக இருக்கலாம், தாரமாக இருக்கலாம், சகோதரியாக இருக்கலாம், காதலியாகவும் இருக்கலாம். “வியாபாரத்தில் நெருக்கடி ஏற்படுகிறபோதெல்லாம் எங்கள் அம்மா நிதானமா யோசனை சொல்வார், அதன்படி செய்தால் நிலைமை சீராகிவிடும்,” என்று கூறுகிறவர்களைக் காணலாம். “எப்படித்தான் அம்மாவுக்கு வியாபார நுணுக்கமெல்லாம் தெரிகிறதோ,” என்று வியந்து தெய்வமாக வணங்குகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் முன்னரங்கிற்கு வருவார்களானால் எத்தகைய சாகசங்களை நிகழ்த்துவார்கள்! ஒட்டுமொத்த சமுதாயம் எப்படியெல்லாம் பயனடையும்!

அவளுக்கென்று வரும்போது…

ஆனால் அந்தப் பெண்களே எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்று வருகிறபோது அவற்றின் தீவிரம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று தள்ளுபடி செய்யப்படுகிறது. தன் பிரச்சனையைத் தானே தீர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்படுகிறது. ஆணின் சுமையில் பாதியையும் தன்னுடைய சுமையை முழுதாகவும் சுமக்கும் சமநிலையற்ற பாதையில் நடப்பது இயல்பாக்கப்படுகிறது.

 

அந்தப் பாதையில் நடப்பதற்கான பயிற்சி சிறுமிகளாக விளையாடும் பருவத்திலேயே தொடங்கிவிடுகிறது. குடும்பத்தின் மூலமாக சமூகம் சிறுமிகளை மற்றவர்கள் பற்றி அக்கறைப்படுகிறவர்களாக இருப்பதற்குத் தயார்ப்படுத்துகிறது. விளையாட்டுப் பொம்மைகளைப் பராமரிப்பது முதல், பெரியவர்களை மதிப்பது வரையில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடு செயல்பட அறிவுறுத்துகிறது. தனது சொந்த ஆசைகளையும் ஏக்கங்களையும் கோபங்களையும் கட்டுபபடுத்திக்கொண்டு, மற்றவர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பவளாக ஒவ்வொரு பெண்ணையும் வார்க்கிறது. உடன் பிறந்தவன் முதல், உடன் வாழப்போகிறவன் வரையில் ஆணின் உணர்வுகளைப் பக்குவமாகக் கையாள்வதற்கான நிதானத்தைப் புகட்டுகிறது. மற்றவர்களை மதித்துப் பக்குவமாகக் கையாள்வது ஆண்களுக்கும் தேவைப்படுகிற பண்புதான். ஆனால் பெண்களுக்கு மட்டுமே உரியவையாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, சிறுவயதிலிருந்தே, ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருப்பதற்கான பயிற்சி பெற்றவளாக, அதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளும் “பக்குவம்” உடையவளாக வளர்கிறாள்.

அழகிய காட்சிதான், ஆனால்…

உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, தனது பொம்மைக்கு வலிக்கும் என்று அதை மெதுவாக எடுத்து வைத்த சிறுமியைக் கண்டேன். சிறிது நேரத்தில்  தொட்டிலில் படுத்திருந்த தம்பிப்பாப்பா அழத் தொடங்கியதும் அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அறைக்குள் சுற்றி வந்தாள். பையன் அழுகையை நிறுத்திக்கொண்டு சிரிக்கத் தொடங்கினான். இசைக் கருவிகளை விட இனிமையான அந்தச் சிரிப்பாலியைச் சுவைத்தேன். “தம்பி அழுதான்னா போதும், ஓடிப்போய் தூக்கி வெச்சிக்கிடுவா, அப்பா ஆஃபீசில் இருந்து வர்றப்ப சாக்லெட் வாங்கிட்டு வந்திருக்காரான்னு பாக்கெட்டுல கையை விட்டுத் தேடுவா. ஆனா அவரு மூட் அவுட் ஆகி வந்தாருன்னா தொந்தரவு பண்ண மாட்டா. அவரு அவ மடியிலே தலை வச்சிக்கிடுவாரு,” என்று அம்மாவும் மற்றவர்களும் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அவள் வெட்கத்தோடு சிரித்தாள்.

 

குடும்பத் தோட்டத்தின் ஓர்  அழகான காட்சி இது என்பதை மறுப்பதற்கில்லை. இதே போல் அந்தத் தம்பிப்பாப்பா வளர்க்கப்படுவானா என்ற கேள்வி மனதில் உதிப்பதைத் தவிர்க்கவும் முடியவில்லை.

 

தம்பிப்பாப்பாக்களை சாதிக்கப் பிறந்தவர்களாகப் பார்த்து, சாதிப்பதற்காக சாத்தியமான எல்லா வகைகளிலும் ஊக்குவிக்கிறது சமூகம். அப்படி அவர்கள் சாதிப்பதற்கு அம்மா, அக்கா, தங்கை, அத்தை என அத்தனை பேரும் துணையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது அதே சமூகம். குடும்பப் பெண்ணின் இலக்கணங்களில் ஒன்றாக இது வகுக்கப்பட்டிருக்க, ஒரு மனைவியாகப் பொறுப்பேற்கிறபோது  தன்னியல்பாகவே கணவனின் வெற்றிக்குப் பின்னால் இருப்பவளாகிறாள்.

 

இந்த நடைமுறையின் இன்னொரு பக்கமாக, பெண்கள் தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே, தனிப்பட்ட முறையில் கையாள்வதற்கும், தீர்த்துக்கொள்வதற்கும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். “எங்க அக்கா எந்தப் பிரச்சினைன்னாலும் அதை மத்தவங்ககிட்ட கொண்டுபோக மாட்டா, அவளே தீர்த்துக்கிடுவா,” என்று அந்தப் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. அக்கா என்கிற இடத்தில் பெண்ணின் எந்த உறவு நிலையையும் பொருத்திக்கொள்ளலாம். இந்தப் பயிற்சி, “சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு பொண்ணே” என்று அறிவுரைகளிலிருந்து மட்டுமே கிடைப்பதல்ல. பெண்ணின்பிரச்சினையில் பங்கேற்கவும் துணை நிற்கவும் தீர்வு காணவும் ஆண்கள் யாரும் வரமாட்டார்கள் என்ற நடப்பு நிலைமையிலிருந்தும் கிடைக்கிறது.

பணித்தலங்களிலும்

இந்தக் குடும்பப் பயிற்சி, பெண்கள் வேலைக்குச் செல்லும் இடங்களிலும் தொடர்வதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விதிவிலக்கான சில அலுவலகங்கள், நிறுவனங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களிலும் சக ஆண்களுக்கு ஆதரவாக மட்டுமே இருக்கிறார்கள் பெண்கள். வளாகத்திற்கு உள்ளேயே உயர் பதவிக்கும், தலைமைத் தகுதிக்குமான போட்டி என்று வருகிறபோது, தாங்களும் களத்தில் நிற்பவர்களாக இல்லாமல், மோதிடும் ஆண்களின் “பின்னால்” நிற்க வேண்டியவர்களாகவே பெண்களின் அலுவலகச் சூழல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

 

வேலை முடிந்து வீடு திரும்பியதும், குழந்தைகளையும் பெரியவர்களையும் கவனித்துக்கொள்வது உட்பட அத்தனை சுமைகளையும் “முன்னால்” நின்று சுமப்பவர்களாக, “அந்நியன்” திரைப்படக் கதாநாயகன் போல “ஸ்பிளிட் பெர்சனாலிட்டி” ஆகிவிடுவார்கள்.

 

பொது மேடைகளில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் ஆண்களுக்கு அணிவிப்பதற்கான பொன்னாடைகளைத் தாம்பாளங்களில் வைத்து பட்டுப் புடவை கட்டி நளினமாக நடந்து வந்து, அணிவிக்கிற ஆண்களிடம் நீட்டுகிற ”பொறுப்பு” மட்டும்தானே வெகுகாலமாகப் பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது? இடதுசாரி இயக்கங்களும் அவை சார்ந்த அமைப்புகளும்தான் இந்த ஏற்றத்தாழ்வை விரைவிலேயே புரிந்துகொண்டு, பெண்களும் சிறப்பு விருந்தினர்களாக, மேடையில் தலைமை தாங்குவோராகப் பங்கேற்கச் செய்கிற மாற்றத்தைக் கொண்டுவந்தன. அவற்றிலேயே கூட பல இடங்களில் இந்த மாற்றம் தேவைப்படுகின்றது என்கிறபோது, பிற இயக்கங்கள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

 

இவையெல்லாம் கூட, குடும்பத்தோடு இருந்தாலும், கூட்டத்தில் கலந்திருந்தாலும் தனிமையை உணர்கிற மனநலச் சிக்கல்களுக்கு இட்டுச் செல்கின்றன. ஆனால் மாணவர்களாக, தொழிலாளர்களாக, அதிகாரிகளாக, தலைவர்களாக ஆண்களின் தனிமை உணர்வு பற்றிப் பேசப்படும் அளவுக்குப் பெண்களின் நிலைமைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றனவா? தனிமை என்கிறபோது, கொரோனா காலம் நினைவுக்கு வருகிறது. அப்போது, தனிமைப்படுத்திக்கொண்டும், வீட்டிலேயே இருந்துகொண்டும் பணியாற்ற வேண்டியிருந்த ஆண்களின் மனச்சிக்கல் பற்றியும், அதன் விளைவாக அவர்கள் எதிர்கொண்ட மன உளைச்சல்கள் பற்றியும் நிறையப் பேசப்பட்டன, எழுதப்பட்டன. அதே காலக்கட்டத்தில் பெண்களின் துயரங்கள் பற்றிய பதிவுகள்  குறைவாகவே வந்தன.  அந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், வீட்டிலேயே ஆண்கள் இருக்க நேர்ந்த கட்டாயத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன.

 

இவ்வாறு மற்றவர்களின், முக்கியமாக ஆண்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால் இருந்து தீர்வு காண்கிற இடத்தில் வைக்கப்படுவதே கூட பெண்களின் மனச்சிக்கல்கள் அதிகரிப்பதற்கு இட்டுச்செல்கிறது.

மன முடிச்சு

கே. பாலச்சந்தர் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில் கதாநாயகன் தன் சேட்டைகளை உடன் பணியாற்றுகிற ஒரு மூத்த ஊழியரிடம் தினமும்  சொல்வான். அதையெல்லாம் கேட்டுக் கேட்டு ஒரு கட்டத்தில் அவர் மனநோயாளி போலப் புலம்பத் தொடங்குவார் அது நகைச்சுவைக் காட்சியாகக் கடந்து போனது. ஆனால், வீடுகளில் ஆண்களின் சிக்கல்களை அவிழ்த்து அவிழ்த்தே மனச்சிக்கல் முடிச்சுகளில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் ஏராளம். இந்தத் துயரங்களை அவர்கள் வெளியே பேசினாலோ, ஆறுதலான அரவணைப்புகளுக்கு மாறாக, “இவளுக்கு இதே வேலையாப் போச்சு,” என்ற விமர்சன அடிகள்தான் விழும்.

 

இப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பதை எடுத்துச் சொன்னால் குடும்ப இணக்கத்தையும் அமைதியையும் குலைப்பதாகப் பாய்வார்கள். சில பெண்களின் மூலமாகவே கூட அந்தக் குற்றச்சாட்டுகள் கூற வைக்கப்படும். ஆனால், குடும்ப நலன் கருதியே, புறக்கணிப்புகள் இல்லாத நல்லிணக்கத்தை வளர்க்கவே, சமத்துவமே அழகு என்ற உண்மையை உணர்த்தவே இத்தகைய  பகிர்வுகள்.

 

இது தொடர்பாக வெளியான ஒரு கட்டுரையை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்கிற வாய்ப்புக் கிடைத்தது. அதில் நிலைமையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும் மதிக்கவும் பொறுப்போடு துணையிருக்கவும் சிறுவயதிலிருந்தே ஆணுக்குக் கற்பிக்க வேண்டும்  என்றார் ஒருவர். வீட்டிலும் பள்ளியிலும் அந்தக் கற்பிப்பு நடைபெற வேண்டும் என்றார் அவர். “பொண்ணா லட்சணமா பொறுப்பா நடந்துக்க” என்ற வசனம் மறக்கப்பட வேண்டும், பெண்ணின் உடல் சார்ந்த உரிமைகள் குறித்த புரிதல் அனைத்து மட்டங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மற்றொரு பங்கேற்பாளர் கூறினார். பெண்களின் பிரச்சனைகள் என்று ஒதுக்காமல் குடும்பத்தின், சமூகத்தின் பிரச்சனைகள் என்று தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றார் இன்னொருவர்.  பெண்களின் பணிச்சுமைகளை, பரிவுணர்வின் அடிப்படையில் அல்லாமல் சமவுணர்வின் அடிப்படையில் பகிர்ந்துகொள்ள ஆண்களைப் பழக்க வேண்டும், தனது வெற்றிக்குப் பின்னால் இருப்பவளாகவே பெண்ணை வைத்திருப்பது குறித்த சுயவிமர்சனப் பார்வை ஆணுக்குள் பதியமிடப்பட வேண்டும் என்ற ஆலோகனைகளும் முன்வைக்கப்பட்டன. இவற்றைக் கூறியவர்களில் ஆண்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்ணா, பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆணா என்ற பட்டிமன்றங்கள் தேவையில்லை.  இருவரது வெற்றிக்கும் இருவரும் இருக்கிறார்கள் –பின்னாலோ முன்னாலோ இல்லை, சமமாக என்ற நிலையை உலகம் நிலைப்படுத்தட்டும். அந்த உலகம் அழகாக இருக்கும்.

[O]

மகளிர் சிந்தனைஏப்ரல் 2025 இதழில் எனது கட்டுரை


Friday, 4 April 2025

அனோரா: ஒரு பாலியல் தொழிலாளியும் ‘அலிகார்ச்’ அற்பனும்

 ஓடிடி மேடையில் உலக சினிமா

 


னைத்து நாட்டு திரைப்படக் கலைஞர்கள், ரசிகர்களால்  எதிர்பார்க்கப்படுவது ஹாலிவுட் திரையுலகின் ‘ஆஸ்கர் விருதுகள்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் ‘அகாடமி விருதுகள்’.  97வது ஆஸ்கர் விழா இந்த மார்ச் 2 அன்று நடந்தது.சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, பெண் நடிகர் ஆகிய ஐந்து விருதுகளை வென்ற ‘அனோரா’ உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அலெக்ஸ் கோகோ, சமந்தா குவான் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள சீன் பேக்கர் படத்தை இயக்கியுமிருக்கிறார். மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட பேக்கர், கடந்த கால, நிகழ்கால, எதிர்காலப் பாலியல் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரிட்டிஷ் அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இப்படத்தின் கதை ஒரு பாலியல் தொழில் பெண் பற்றியதுதான்.

அமெரிக்காவில் ரஷ்ய மக்கள் வாழும் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்த 23 வயது அனோரா ஆடையவிழ்ப்பு நடன – பாலியல் தொழில் விடுதியில் வேலை செய்கிறாள்.. தனது மொழி தெரிந்தவள் வேண்டுமென்று கேட்டு வருகிறான் வான்யா என்ற 21 வயது ரஷ்ய இளைஞன். மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவனான அவன் கேளிக்கை விடுதிகளில் பொழுதைக் கழிப்பவன். ஒரு வாரத்திற்கு 15,000 டாலர் பேரம் பேசி அவனுடைய மாளிகைக்குச் செல்கிறாள் அனோரா.  பின்னர் இருவரும் நெருக்கமாகிறார்கள். நெவேடா நகரத்தின் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.

ரஷ்யாவில் இருக்கும் வான்யாவின்  பெற்றோர் நிகோலாய்–கலினா திருமணத்தை எதிர்க்கின்றனர். பணபலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள ‘அலிகார்ச்’ எனும் கும்பலைச் சேர்ந்த குடும்பம் அவர்களுடையது (அலிகார்ச் என்பது சோவியத் யூனியன் தகர்ந்து ஆட்சிமுறை மாறியபோது அரசின் சொத்துகளைக் கைப்பற்றி அரண்மனை வாழ்க்கை வாழ்கிற கும்பலுக்கான அடையாளம்).

நியூயார்க்கில் இருக்கும் வான்யாவின் ஞானத்தந்தை டோரோஸ், தனது அடியாட்களான கார்னிக், இகோர் இருவரையும் வான்யாவின் மாளிகைக்கு  அனுப்புகிறான். வான்யா ஓடிப் போகிறான். அனோராவை அவமானப்படுத்தும் அடியாட்கள், வான்யா அமெரிக்காவில் நிலையாகக் குடியிருக்க ‘கிரீன் கார்டு’ பெறுவதற்காகத்தான் அவளை மணந்துகொண்டான் என்றெல்லாம் கூறி அவள் மனதைக் கலைக்க முயல்கிறார்கள். அவள் இருவரையும் தாக்கிக் காயப்படுத்துகிறாள் அவர்கள் அவளை அடக்குகிறார்கள். அவளுடைய திருமண மோதிரத்தைப் பறித்துக்கொள்ளும் டோரோஸ், அவளாக விலகிக்கொள்வதற்கு 10,000 டாலர் தருவதாகக் கூறுகிறான். “வான்யாவும் நானும் காதலிக்கிறோம்,” என்கிறாள் அவள். அவனை அவளுடைய முன்னாள் விடுதியில் கண்டுபிடிக்கிறார்கள்.

திருமணம் நெவேடாவில் பதிவாகியிருப்பதால் அது செல்லாது என்று தன்னால் அறிவிக்க முடியாது என நியூயார்க் நீதிமன்றம் கூறிவிடுகிறது. போதையிலும்,  ரஷ்யாவிலிருந்து வந்துவிட்ட பெற்றோரின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் வான்யா அனோராவைக் கைவிடுகிறான். முதுகெலும்பற்ற அவனையும் அவனுடைய பெற்றோரையும் திட்டுகிற அனோரா வழக்குத் தொடுக்கப் போவதாகக் கூறுகிறாள். “உன்னிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் வழக்குக்கே செலவு செய்ய வைத்துவிடுவேன்,” என்று கலினா ஆணவமாகப் பேசுகிறாள்.  வேறு வழியின்றி அனோரா விலகல் ஆவணத்தில் கையெழுத்திடுகிறாள். அவளிடம் வான்யா மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிறான் அடியாளான இகோர். தன் மகன் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்கிறாள் கலினா. 

அனோராவின் உடைமைகளையும், டோரோஸ் கொடுத்த பணத்தையும் ஒப்படைக்கிறான் இகோர். “மாளிகைக்கு நீ முதலில் வந்தபோது நான் போராடாமல் இருந்திருந்தால் என்னை நீ வன்புணர்ந்திருப்பாய்,” என்று அவள் குற்றம் சாட்ட, அவன் மறுக்கிறான். அவளுடைய வீட்டுக்குக் காரில் அழைத்துச் செல்கிறபோது திருமண மோதிரத்தைத் திருப்பித் தருகிறான். ஏமாற்றம், கோபம் ஆற்றாமை என உணர்ச்சிச் சுழலில் இருக்கும் அனோரா அவனிடம் பாலியலாக நெருங்குகிறாள். பின்னர், அவனுடைய மார்பில் சாய்ந்து அழுகிறாள். உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக, அவளிடம் அடிபட்டிருந்தாலும், அவன் அவளை அணைத்துக்கொள்கிறான்.

பாலியல் விடுதியின் தொடக்கக் காட்சிகள் அதிர வைக்கக்கூடும். அடுத்தடுத்து வரும் திருப்பங்களுக்கு அந்த அதிர்ச்சி தேவைப்படுகிறது. விடுதிச் சூழலை பெருமளவுக்குத் துல்லியத்துடன், அந்தப் பெண்களின் காய வடுக்கள், இயல்பான நடத்தை உட்பட பேக்கர் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார். “எங்களை வைத்துப் பல படங்கள் வந்திருக்கின்றன, விருதுகளும் பெற்றிருக்கின்றன. ஆனால் விருது மேடையில் முதல் முறையாக எங்களுக்கு நன்றி தெரிவித்தவர் பேக்கர்தான்,” என்று பாலியல் தொழிலாளிகள் நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்கள்.

தற்காலிக வசதிகள் வாய்த்தாலும் இவர்களின் வாழ்க்கை எளிதில் மாறிவிடுவதில்லை, பணக்காரக் கும்பல்களின் புத்தியும் போய்விடுவதில்லை என்று திரைமொழியில் சொல்லப்படுகிறது. அனோராவின் அவலம், வான்யாவின் துரோகம் இவற்றோடு, அடியாளானாலும் அரண்மனைக் குடும்பம் அல்லாத எளியவனுக்குள் இருக்கும் நேயத்தைக் காட்டியிருப்பதில் ஒரு வர்க்கப் பார்வையும் வெளிப்படுகிறது.

அனோராவாக மிக்கே மேடிசன் சிறந்த நடிகைக்கான விருது பெற்றதன் பொருத்தத்தை நிறுவியிருக்கிறார். வான்யாவாக மார்க் ஐடெல்ஷ்டைன், ஒளிப்பதிவாளர் ட்ரூ டேனியல்ஸ், இசையமைப்பாளர் மேத்யூ ஹீரான் ஸ்மித் உள்ளிட்ட கலைஞர்களும் இணைந்து, படத்தைத் தொகுத்தும் அளித்திருக்கிற சீன் பேக்கரின் புனைவுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது. 

[0]

நன்றி: செம்மலர் ஏப்ரல் 2025 இதழ்


Wednesday, 2 April 2025

நாடு முழுவதும் விவாதிக்கப்பட்ட மதுரை மாநாட்டுக்கான விவாதம்




“என்ன சார், மதுரைக்குப் போகலையா நீங்க? உங்க கட்சி ஆல் இண்டியா மாநாட்டுக்குப் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்…”

காலை நடையின் வழக்கமான கடைசிக் கட்டமான பூங்கா அமர்வில் நண்பர் கேட்டார்.

“வெளியூர்ப் பயணமெல்லாம் இப்ப சாத்தியமில்லையே. சென்னைக்குள்ளேயே நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு இப்பதான் போக ஆரம்பிச்சிருக்கேன். மாநாடு எப்படி போய்க்கிட்டு இருக்குதுன்னு இங்கேயிருந்தே கவனிப்பேன்…”

“அது என்ன…? டிராஃப்ட் பொலிடிக்கல் ரிசொல்யூசன்… அதுக்கு யார் வேணும்னாலும் திருத்தம் சொல்லலாம்னு சொல்றாங்களே…”

“ஆமா. கட்சியோட முக்கியமான செயல்பாடு அது. நடப்பு அரசியல் நிலைமையையும் சமுதாய நிலைமையையும் எப்படி கணிக்கிறது, அதுக்கேத்த மாதிரி என்ன அணுகுமுறையை வகுக்கிறது… இதிலேயெல்லாம் கட்சிக் கிளைகளில் இருக்கிற எல்லா உறுப்பினர்களும் பங்களிக்கிற ஏற்பாடு. பொதுவெளியிலே வெளியிடுறதால கட்சிக்கு வெளியே இருக்கிறவங்களும் கருத்துகளை அனுப்பலாம். நீங்க கூட அனுப்பலாம். எந்தத் தேதிக்குள்ள அனுப்பணும்னு கூட அறிவிச்சிருந்தாங்களே...”

”அதையெல்லாம் என்ன செய்வீங்க?”

“வந்திருக்கிற ஆலோசனைகள், திருத்தங்களை அதுக்குன்னே அமைக்கப்பட்டிருக்கிற குழு தொகுத்துக் கொடுக்கும். மாநாட்டிலே பிரதிநிதிகளா கலந்துக்கிடுறவங்க அதையெல்லாம் விவாதிப்பாங்க. அரசியல் தீர்மான முன்வரைவிலே எதையெல்லாம் அப்படியே வைச்சிக்கலாம், எதையெல்லாம் மாத்தலாம்னு பேசுவாங்க. பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் நிறைவேறும். அடுத்த மாநாடு வரையில் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் இருக்கும். கம்யூனிஸ்ட் இயக்கங்களோட தனித்துவம்னு இதைச் சொல்லலாம்.”

“நீங்க உங்களோட கருத்துகளை எழுதி அனுப்பிட்டீங்களா?”

“ஓ… அனுப்பிட்டேன். நான் இருக்கிற கிளையிலே நடந்த விவாதத்திலேயும் பங்கெடுத்துக்கிட்டேன்.”

“இன்னிக்கு இருக்கிற கவர்மென்ட்டை எப்படிச் சொல்றது… பாசிசமா, நியோ பாசிசமான்னு ஒரு விவாதம் ஓடிச்சே. அது பத்தி உங்க ரீயாக்சன் எதையும் நான் பார்க்கலையே?”

“கிளையிலே சொல்லியிருக்கேன்… ”

“இல்லை, நிறைய இன்டெலெக்சுவல்ஸ் அதை கிரிட்டிசைஸ் பண்ணி எழுதியிருக்காங்க… அதுக்கெல்லாம் பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.”

“ஒரு கட்சியோட மாநாட்டிலே விவாதிச்சு முடிவெடுக்கப்போற ஒரு நிலைப்பாடு பத்தி நாடு முழுக்க இப்படியொரு விவாதம் வந்தது எனக்குத் தெரிஞ்சு, அண்மைக் காலத்திலே இதுதான் முதல் முறை. இது ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையா? இப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் வரும்னு தெரிஞ்சுதானே கட்சி அதைப் பொதுவிலே வெளியிட்டுச்சு? சரியா சொல்லணும்னா, அப்படி வரட்டும்னுதான் வெளியிட்டுச்சு. அது நடந்திருக்கு. இப்ப அதையெல்லாம் வைச்சு மாநாட்டிலே விவாதிக்கிறது நடக்கும்.“

“இது தேவையில்லாத கான்ட்ரவெர்ஸியோன்னு நினைக்கிறேன். லெஃப்டிஸ்ட் வியூ உள்ளவங்க கூட கடுமையா ரியாக்ட் பண்ணியிருக்காங்க. சில பேரு சிபிஎம் பிரச்சினையை சாஃப்டாக்குது, காம்ப்ரமைஸ் பண்ணுதுன்னுலாம் எழுதுறாங்க. சோசியல் மீடியாவுலேயும், மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுலேயும் பார்த்தேன்…“

“சார், ஒரு விசயம் புரிஞ்சிக்கிடுங்க. இந்தியாவிலே கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கினதிலிருந்தே இப்படி நடந்துக்கிட்டு வருது. இந்த நாட்டு ஆளும் வர்க்கத்தை, அரசியல் நிலையை, சமுதாய அடிப்படையை எப்படிப் புரிஞ்சிக்கிடுறது, எப்படி வகைப்படுத்துறது... இப்படி ஆழமான விவாதங்களும் கருத்து மோதல்களும் நடந்திருக்கு. இப்ப நடக்கிறது ஒண்ணும் புதுசு இல்லை. ஒரு முக்கிய முடிவெடுக்கிறப்ப, இப்படிப்பட்ட கருத்து மோதல்கள் இல்லாட்டி எப்படி? என்ன சில பேர் கருத்து வேறுபாடுங்கிற தளத்திலே நின்னு நிதானமா வாதம் செய்திருக்காங்க. சில பேரு இதைச் சாக்கா வைச்சுக்கிட்டு கட்சியைத் தாக்குறாங்க. கடந்த காலத்திலே ஜாதிக்கட்சின்னு பேசலையா என்ன? இப்ப அதை வேற மாதிரி சொல்லி வேற கலர் பூசுறாங்க. எப்பவும் போல இப்பவும் அதையெல்லாம் உதறிட்டு, தப்பான முடிவுகளை மாத்திக்கிட்டு. சரியான முடிவுகளோட போய்க்கிட்டே இருப்போம்.“

“எல்லாரும் கேட்கிறதைத்தான் இப்ப நானும் கேட்கிறேன்….”

–குறுக்கிட்டார் எப்போதும் உடன் வந்தாலும் அரிதாகவே பேசுகிற நண்பர்.

“இவ்வளவு பெர்ஃபெக்டா தீர்மானிச்சு எல்லாம் பண்றீங்க… ஆனா கட்சி இன்னும் பெரிய அளவுக்கு வளரலையே… ஏன் சார்? தப்பான முடிவுகள் எடுத்ததாலதான்னு சொல்லலாமா?”

“சரியான முடிவுகளோட செயல்படுறதுக்கும், முன்னேறுறதுக்கும், வளர்றதுக்கும் என்னவெல்லாம் தடையா இருக்குதுன்னும் சொல்லியிருக்கோமே… அந்த நிலைமைகளுக்கு ஏத்த மாதிரி அனுசரிச்சிக்கிட்டுப் போறதா அணுகுமுறையை மாத்தியிருந்தா அதுதான் சமரசம். அப்படியெல்லாம் சமரசம் பண்ணிக்கிடாம இயங்குறோம் பாருங்க, அது எங்க சாகசம்.”

“விட்டுக்கொடுக்க மாட்டீங்களே…”

“விட்டுக்கொடுக்கிறது, கொடுக்காம இருக்கிறதுங்கிற பிரச்சினையே இல்லை. நீங்க சொன்ன கோணத்திலேயும் மாநாட்டுப் பிரதிநிதிகள் விவாதிப்பாங்கன்னு நான் சொன்னதிலிருந்தே புரிஞ்சிக்கிடலாமே… குறைபாடுகள் என்னங்கிறது பத்தியும் விவாதிப்பாங்க. அதெல்லாம் இருக்கட்டும். உங்க கருத்து என்னன்னு சொல்லுங்களேன்…”

“ஹஹஹா… உங்க மாநாட்டு முடிவு வரட்டும் சார், சொல்றேன். சரி, பார்க்குல நம்ம சிட்டிங் டைம் முடிஞ்சிருச்சு. புறப்படுவோம். முக்கியமான விசயம் பேசினோம், அதனால டீக்கடை விசிட்டோட முடிச்சுக்குவோம். அதுக்கு முன்னாடி நீங்க இப்ப கடைசியா என்ன சொல்றீங்க?”

“இன்னிக்கு ஆரம்பிக்கிற மாநாட்டைத் தலைமைப் பொறுப்புகள்ல இருந்து நடத்திக்கொடுக்கிறவங்க, எல்லா மாநிலங்கள்லயிருந்தும் பிரதிநிதிகளா வந்திருக்கிறவங்க, பார்வையாளர்களாக் கலந்துக்கிட்டு கவனிக்கப் போறவங்க, பொது நிகழ்ச்சிகள்ல ஆதரவாப் பங்கெடுக்கிறவங்க, மதுரைக்கு இன்னொரு பெருமைன்னு மாநாட்டை நல்லா நடத்த உழைச்சிக்கிட்டு இருக்கிறவங்க, தொண்டர்களா பணி செய்யப் போயிருக்கிறவங்க, நாடு முழுக்க விவாதிச்ச விசயங்களோட மாநாட்டிலே பேசுவாங்கன்னு எதிர்பார்ப்போடு பிரதிநிநிதிகளை அனுப்பி வைச்சிருக்கிறவங்க, மாநாட்டையொட்டி பல ஊர்கள்லேயும் பலவிதமான பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்துனவங்க, ஆறாந்தேதி நடக்கப்போற பேரணியிலே நடைபோடப் புறப்படுறவங்க, கருத்து வேறுபாடுகளைக் கட்சி மேல இருக்கிற அக்கறையால வெளிப்படுத்தியிருக்கிறவங்க… அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்னு சொல்றேன்.”

Monday, 24 March 2025

கடலில் விழுந்த விண் ஓடக்கூடு, தெறிக்கும் கேள்வித் துளிகள்






சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தில் புளுகிய டிரம்ப், களமிறங்கிய எலான் மஸ்க்! நாசாவில் தனியார் ஆதிக்கம்?


லகம் முழுதும் மக்கள் மனங்களில் ஒரு பதற்றத்தைப் பதித்து, நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அறிவியல் நிகழ்வு சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் இருவரது விண்வெளிப் பயணம். சென்ற ஆண்டு ஜூன் 5 அன்று விண்ணில் பாய்ந்து, அவர்கள் சென்ற  விண் ஓடத்தில் ஹீலியம் கசிந்து, பிற தொழில்நுட்பக் கோளாறுகளும் சேர்ந்து, அனைத்து நாட்டு விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இணைந்து, எப்போது திரும்புகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து, இறுதியில் வேறொரு விண் ஓடத்தில் திரும்பி வந்து, இந்த மார்ச் 18 அன்று வெற்றிகரமாகக் கடலிறங்கினார்கள்.


இந்த 286 நாள் அனுபவம் ஆராய்ச்சி உலகத்திற்குப் பயனுள்ள பல தகவல்களைப் பெற்றுத் தரும். அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுகிறவர்கள், ஆண்டவன் செயல் என நம்புகிறவர்கள் எல்லோருமே  மகிழ்ந்தார்கள், நிம்மதியடைந்தார்கள். அதிலும் இந்தியாவில், இங்கேயிருந்து சென்ற குடும்பத்தின் வாரிசு சுனிதா என்பதால் கொண்டாட்ட உணர்வு கூடுதலாக இருந்தது.


‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்களின் ஒட்டுமொத்த இயக்கத்தில் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண் ஓடத்தில் சுனிதா, வில்மோர் இருவரும் புறப்பட்டது முதல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண் ஓடத்தின் டிராகன் கூடு அவர்களுடன் ஃபுளோரிடா கடலில் விழுந்தது வரையில் தேதி வாரியாக  செய்தித் தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. ஆகவே அவற்றை இங்கு மறுபடியும் பகிர வேண்டியதில்லை. டிராகன் கூடு “ஸ்ப்ளாஷ்டவுன்” ஆனபோது பல மடங்கு வேகத்தில் தெறித்த கடல்நீர் (அப்படித் தெறிக்கும் என்பதால்தான் இந்தப் பெயர்) போல, பல வினாக்களும் விடைகளும் தெறிக்கின்றன. அதன் சில துளிகளைப் பிடித்துவைக்கலாம்.

சிக்கிக்கொண்டார்களா?

முதல் துளி, எல்லோருடைய பதற்றத்தையும தணியவைத்துத் திரும்பி வந்தது 58 வயது சுனிதா வில்லியம்ஸ் மட்டுமல்ல. 61 வயது புச் வில்மோர் கூடத்தான். அவர்களுடன், ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் பணி செய்துகொண்டிருந்த அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோரும், அவர்களது பணிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் அதே விண் ஓடத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள். அப்படி நால்வரும் திரும்பி வரும் வகையில் நாசா வல்லுநர்கள் புதிய திட்டத்தை வடிவமைத்திருந்தார்கள். குழுவின் கேப்டன் என்பதால் சுனிதா பெயர் முன்னிலைக்கு வருவது இயல்பு. ஆனால், அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்க்கும் நலம்நாடிகளுக்கும் ஏற்பட்ட அதே பதற்றமும் கவலையும் புச் வில்மோர் சார்ந்தோருக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா?


ஆனால், விவரம் அறிந்தவர்கள் அப்படிப் பதற்றமும் கவலையும் அடைந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அறிவியல் தளத்தில் இயங்குகிறவர்கள் வெகு இயல்பாகவே செய்திகளைக் கவனித்து வந்தார்கள். ஏனென்றால், பெரும்பாலோர் நம்ப வைக்கப்பட்டது போல, எட்டு நாள் திட்டமாக மட்டுமே சென்றிருந்த சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனரில் விபத்தாக ஏற்பட்ட கோளாறுகளைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொள்ளவில்லை. தினசரிச் செய்தித் தலைப்புகளில் நரம்பு துடிக்க வைக்கப்பட்டது போல அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கிறார் அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞான் பிரசார் சபா மூத்த அறிவியலாளருமான தா.வீ. வெங்கடேஸ்வரன் (நியூஸ் 18 நேர்காணல்).


நாசா நிர்வாகமும் அந்த இருவரும் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்றோ, அவர்களை மீட்பதில் சிரமம் இருக்கிறது என்றோ அறிவிக்கவில்லை. அடுத்தடுத்து சில தேதிகளை முடிவு செய்து, தவிர்க்கவியலாத இயற்கையான சூழல் உள்ளிட்ட காரணங்களால் அதைத் தள்ளிப்போட்டு வந்தார்களேயன்றி அவர்களைக் கைவிட்டுவிடவில்லை.


மாறாக, “இருக்கிறதுதான் இருக்கிறீர்கள், கூடுதலாக அங்கேயே இருந்து ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருங்கள் என்று உற்சாகத்துடன் ஈடுபடுவதற்கான வேலையைத்தான் அளித்தார்கள். இரண்டாவது முறையாகச் சென்றிருந்த 58 வயது சுனிதா, 61 வயது வில்மோர் இருவருமே, இத்தனை வயதுக்கு மேல் இப்படியொரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கப் போவதில்லை என்ற புரிதலோடும், ஆராய்ச்சியாளர்களுக்கே உரிய உற்சாகத்தோடும், கால நீட்டிப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவ்வாறு அங்கே தங்க வைத்திருக்க முடியாது – அதற்கான விண்வெளிச் சட்ட விதிகள் இருக்கின்றன,” என்கிறார் தா.வீ.வெ.

அங்கிருந்தே பேட்டி

பொதுவாக ஆறு மாத கால ஆராய்ச்சிக்கு என்று அனுப்பப்படும் குழுக்களைப் போலவே இவர்களும் அங்கே ஏற்கெனவே இருந்த அமெரிக்க–ரஷ்ய ஆராய்ச்சியாளர்களோடு இயல்பாகத் தங்கியிருந்தார்கள். அழைத்துப் போவதற்கு அடுத்த வண்டி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்காமல், தங்களின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். “நாசாவால் கைவிடப்பட்டுவிட்டதாக நாங்கள் உணரவில்லை, இங்கே சிக்கிக்கொண்டுவிட்டதாகவும் நினைக்கவில்லை. இயல்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் கவலைப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். கவலைப்பட வேண்டியதில்லை,” என்று இடையில் விண்வெளி நிலையத்திலிருந்தே பேட்டி கொடுத்தார் சுனிதா.


அது ஏதோ நம் ஊரின் அரசு வானொலி, தொலைக்காட்சியில் சில விவசாயிகள் தோன்றி, “அரசாங்கம் கொண்டு வந்த திட்டத்தால எங்க வயல்ல இப்ப நேரடியா தங்கம் வைரம் வெள்ளி அறுவடை செய்றோமுங்க,” என்று “தாங்களாகவே” முன்வந்து பேட்டி கொடுப்பார்களே, அதைப் போன்றதல்ல. கடந்த பிப்ரவரி 7 அன்று சிபீஎஸ்நியூஸ் (CBSNEWS) தொலைக்காட்சியின் செய்தியாளர் வில்லியம் ஹார்வுட் கேட்ட கேள்விக்கு சுனிதா கூறிய பதில் இது. இணையத்தின் தகவல் தேடல் தளங்களில் அந்தப் பேட்டி காணொளியாகவே கிடைக்கிறது.


பிறகு ஏன் “சிக்கிக்கொண்டுவிட்டார்கள்” என்ற எண்ணம் எங்கும் பரவியது? தானாக எதுவும் நடக்காதல்லவா – அந்த எண்ணம் பரப்பப்பட்டது. அப்படிப் பரவட்டும் என்றே முதலில் தூவிவிட்டவர் டொனால்ட் டிரம்ப்! இரண்டு ஆராய்ச்சியாளர்களும் விண்வெளி நிலையத்தில் இணைந்தபோது, அமெரிக்காவில் அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்போது டிரம்ப், “நமது அருமையான இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டு வருவதற்கு ஜோ பைடன் அரசு எதுவும் செய்யவில்லை. நான் தேர்ந்தெடுககப்பட்டால், என் நண்பரும் விண்வெளிப் பயணங்களை நடத்துகிறவருமான எலான் மஸ்க் வசம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பேன். அவர் அவர்களை மீட்பார்,” என்று போகிற இடமெல்லாம் பேசினார்.


‘எக்ஸ்’ தகவல் பகிர்வுத் தளத்தின் முதலாளி எலான் மஸ்க்கும், தன் பங்கிற்கு, விண்வெளிச் சந்தையிலும் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்று புரிந்துகொண்டவராக, டிரம்ப்பின் புளுகுக்கு ஆதரவாகப் பேசினார். “எங்கள் டிராகனை அனுப்பி சுனிதாவையும் வில்மோரையும் மீட்டு வருவேன்,” என்று முழங்கினார். இதையெல்லாம் எதிர்த்துப் பேசுவதற்கான வலிமையும் தெளிவும் இல்லாதவராக ஜோ பைடன் இருந்ததும் இது பரவுவதற்குத் தோதாக அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தது. இப்படியாக இவர்கள், பைடனைத் தாக்குவதற்காக, அறிவியலாளர்களை மட்டுமல்லாமல், அறிவியலையே அவமானப்படுத்தினார்கள்.


“சிக்கிக்கொண்டார்கள்” என்று செய்தி பரப்புவதில் ஒரு ”கிக்” இருக்கிறது என்று பல ஊடக நிறுவனங்கள் இதையே ஊதிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே கூறியது போல, இந்தியாவில் (முன்பு கமலா ஹாரிஸ் விசயத்தில் மிகைப் பாசத்தோடு யாகமெல்லாம் நடத்தப்பட்டது போல) அந்த ‘கிக்’ வணிகம் நன்றாக எடுபட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில ஊடகங்கள் மட்டுமே நாசா என்ன சொல்கிறது என்று, உணர்ச்சிவசப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு வந்தன.

நாசாவில் தனியார்

தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். மறுபடி வெள்ளை மாளிகைக்குள் புகுந்தார். அந்த வேகத்தோடு, தன் வாக்குறுதிப்படி இருவரையும் மீட்பதற்காக விண்வெளிக்கு அனுப்புவதற்குத் தனியார் நிறுவன ஓடங்களைப் பயன்படுத்தலாம் என்று நாசாவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். எலான் மஸ்க்கின் ஓடம் தேர்வு செய்யப்பட்டது (வேறு யாரும் போட்டியிடுவதற்கான “வெளி” இருந்ததா என்று தெரியவில்லை). இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துகொள்வது நல்லது – நாசா வளாகத்தில் தனியார் நுழைவு புதிதல்ல. அமெரிக்கச் சூழலில் அது வியப்புக்கு உரியதும் அல்ல. நிறுவனத்திற்கான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரித்துக் கொடுப்பது, பல பணிகளை ஏற்றுச் செய்வது என சிறிதும் பெரிதுமாகப் பல தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கின்றன. 


சுனிதா, மோர் இருவரும் இந்த முறை விண்வெளிக்குச் சென்றதே கூட,  விமானத் தயாரிப்பாளர்களான போயிங் நிறுவனம், எதிர்கால விண்வெளிப் போக்குவரத்து வணிகத்துக்காக வடிவமைத்த ஸ்டார்லைனர் விண் ஓடத்தின் திறனைச் சோதிப்பதற்காகத்தான். ஆம், தனியார் நிறுவனத்தின் தயாரிப்பை இயக்கிப் பார்ப்பதற்குத் தனது இரண்டு அறிவியலாளர்களை அனுப்பியது நாசா. அதில் இருந்த முக்கியமான கோளாறுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் போயிங் நிறுவனத்திற்கு நாசாவிடமிருந்தும் சுனிதா, மோர் ஆகியோரிடமிருந்தும் பெரியதொரு உதவி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


ராக்கெட் லேப், ப்ளூ ஆரிஜின், வர்ஜின் கேலக்டிக், ஏர் பஸ், லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ரோப் க்ரூமன் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் செயற்கைக் கோள் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல் உள்பட விண்வெளிச் சந்தையில் ஈடுபட்டிருக்கின்றன. இவர்களில் போயிங் கொஞ்சம் முன்னால் இருக்கிறது. தற்போதைய “மீட்பு” சாகசம் மூலமாக ஸ்பேஸ் எக்ஸ் முன்னுக்கு வந்திருக்கிறது. ஆகவே, நாசா வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன.

அறிவியல் என்னாகும்?

இப்போது பல்வேறு மட்டங்களிலும் கவலையோடு புருவங்களைஉயர்த்தி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. தளவாடங்கள் தயாரிப்பு, விண் ஓடங்கள் வடிவமைப்பு, ஆராய்ச்சிக் கூடம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொண்டால் கேடில்லை, விண்வெளி ஓடங்களை இயக்குவது, விண்வெளி நிலையத்தையே நிறுவி நிர்வகிப்பது என்றெல்லாம் தனியார் நிறுவனங்கள் புகுந்துவிடுமானால்  எதிர்கால விண்வெளி அறிவியலின் நிலைமை என்ன ஆகும்?


தற்போதுள்ள அனைத்து நாட்டு விண்வெளி நிலையம் பெயருக்கேற்ப அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானதாகும். 1998ஆம் ஆண்டில் அதனைக் கட்டியமைத்ததில் அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இரு நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. வேறு பல நாடுகளின் பங்களிப்பும் உண்டு. ஆயினும் உலகத்திற்குப் பொதுவானதாக அது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ‘இஸ்ரோ’ நேரடியாக அதன் கட்டுமானத்தில் பங்களிக்கவில்லை என்றாலும், விண்வெளி ஆராய்ச்சிகளில் கூட்டுச் சேர்ந்து பங்கேற்று வருகிறது. அந்த நிலையத்தைப் பயன்படுத்துவதிலும் கூட, ஒரு பகுதியில் அமெரிக்க அரசின் சட்டங்களும் இன்னொரு பகுதியில் ரஷ்யச் சட்டங்களும் நடைமுறையில் இருக்கும். அங்கே என்ன நடந்தாலும் இந்த நாடுகளுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.


பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில், தாழ்வான சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையத்தின் செயல்பாடு அடுத்த ஐந்தாண்டுகளில் முடிவுக்கு வரப்போகிறது. அதில் உள்ள தொழில்நுட்பங்கள் பழையதாகிவிட்டதால் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகின்றன. ஆகவே, காலாவதியாகப் போகிற இந்த நிலையத்தின் செயல்பாட்டை, 2030ஆம் ஆண்டில் நிறுத்திவிடுவதென்று நாசா, ரோஸ்கோஸ்மோஸ் இரு நிர்வாகங்களும் முடிவு  செய்திருக்கின்றன. அதனை பசிபிக் பெருங்கடலில் விழ வைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அல்லது அப்படியே விண்வெளியில் நொறுங்கிப்போக விடப்படலாம். விண்குப்பைகள் குறித்த கவலைகள் இருப்பதால் அதை என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


புதிய விண்வெளி நிலையம் முன்போலக் கூட்டு முயற்சியில் கட்டப்படுமா என்று இரு தரப்பிலிருந்தும் தகவல் எதுவும் இல்லை. ஆனால் தனித்தனியே தங்களது சொந்த நிலையங்களைக் கட்டுவது குறித்து நாசா, ரோஸ்கோஸ்மோஸ் இரண்டுமே திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதில்  அமெரிக்க–ரஷ்ய அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்ற பின்னணியும் இருக்கிறது.


விண்வெளி நிலையத்திற்காகப் பெருமளவில் முதலீடு செய்ய முன்பு தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலையில் அரசுகளின் நிதியளிப்போடு 27 ஆண்டுகளுக்கு முன் ஐஎஸ்எஸ் கட்டப்பட்டது. அதன் காலம் முடிந்த பிறகு தங்களின் நிலையங்களைக் கட்டுவதற்கு விண்வெளி கார்ப்பரேட்டுகள் தயாராக இருக்கிறார்கள்.  நாசாவைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து புதிய நிலையத்தைக் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் முனைப்புக் காட்டி வருகிறது. ஆக்ஸியம் ஸ்பேஸ், நானோராக்ஸ் இவற்றுடன் ஏற்கெனவே பார்த்த ப்ளூ ஆரிஜின், நார்த்ராப் க்ருமன் ஆகிய நிறுவனங்களும் போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

குளங்களை ஆக்கிரமித்தது போல

உலக நாடுகளுக்கெல்லாம் –ஏன் நம் பேரண்டத்திற்கே பொதுவான– விண்வெளி, இங்கே ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்த  நிறுவனங்களின் வளாகங்களைப் போல, தனியார் துண்டு விரிக்கும் சந்தைக் களமாக மாறுமானால் அந்த நிர்வாகங்கள் எந்த நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படும்? அவற்றின் சொந்தச் சட்டங்கள்தானே நடைமுறைப்படுத்தப்படும்? விண்ணில் குவியும்  குப்பைகள் பற்றிக் கவலைப்படுவார்களா? உலக அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகள் என்னாகும்? அவர்கள் எலான் மஸ்க்குகளின் வணிக இலக்குகளுக்குச் செயல்திட்டம் வகுக்கிறவர்களாக மாற்றப்பட்டுவிட மாட்டார்களா?


அரசு சார்ந்த நிறுவனங்களின் பயணம் அறிவியல் கண்டுபிடிப்புகளை நோக்கியதாக இருக்க, தனியார் நிலையங்கள் ஏற்பாடு செய்யும் விண்வெளிப் பயணங்களின் நோக்கம் (விண்வெளிச் சுற்றுலா நெடுந்தொலைவுக் கனவாகிவிடாது என்றாலும்) வணிகமயமாக்குவதாக மட்டும்தானே இருக்கும்? அப்படியொரு நிலைமை தலைதூக்குமானால், விண்வெளி அறிவியலே ஒரு கட்டத்தில் ‘ஸ்ப்ளாஷ்டவுன்’ ஆகிவிடாதா? அக்கறையுள்ள அறிவியலாளர்கள் அதை மீட்பதற்கு முயல்வார்கள்தான், அது பெரும் போராட்டமாக அல்லவா இருக்கும்?


இன்னொரு முக்கியமான கேள்வி –  நிலையங்களிலும் அங்கே செல்கிற விண் ஓடங்களிலும் மோசமான விபத்துகள் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம் – அப்போது யார் பொறுப்பேற்பார்கள்? ஸ்டார்லைனர் பிரச்சினைக்குப் பிறகு, யாருக்காக சுனிதாவும் வில்மோரும் அங்கே போனார்களோ அந்த போயிங் நிர்வாகம் பெறுப்பேற்கவில்லை. நாசா வல்லுநர்கள்தான் அவர்களைக் கொண்டுவந்தார்கள்.


ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா கார் நிறுவனங்களின் தொழிலாளர்கள் பாதுகாப்பு, மோசமான பணிச்சூழல், அதிக வேலை நேரம், பங்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் அதிரடிகள், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என மாற்றிய பிறகு செய்த மாற்றங்கள், தொழிற்சாலைகளில் கட்டுப்படுத்தப்படாத கரிமவாயு வெளியேற்றத்தால் சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்குப் பங்களிப்பு ஆகிய பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எலான் மஸ்க் மேல் உண்டு. இதற்கே பொறுப்பேற்காதவர், விண்வெளி விபரீதங்களுக்குப் பொறுப்புத்துறப்பு அறிவிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?


‘ஸ்ப்ளாஷ்டவுன்’ தெறிப்பு நீர் முகத்தை உதறிக்கொள்ள வைக்கிறது.

•••••••••••••••


(‘விகடன்’ இணையப் பதிப்பில் மார்ச் 23, 2025இல் வெளியாகியுள்ள எனது கட்டுரை)








Sunday, 16 March 2025

ஒரு படைப்பாளியின் கதைப் பெண்டிருக்காக கலங்கிய அரங்கம்


 
காலத்தில் கரைந்து போகாமல் காலமாகி நிற்கிற ஒருவரை நினைவுகூரும்  கூடுகைகளில் அவர் சந்தித்த சோதனைகளையும், வென்று காட்டிய சாதனைகளையும் பகிர்ந்திடும்போது பேசுகிறவர்களும் கேட்கிறவர்களும் உணர்ச்சிவசப்படுவது புதிதல்ல. ஒரு படைப்பாளியை நினைவுகூர்வதற்கான அந்தக் கூடுகையிலும் உரையாளர்கள், அவையினர் இரு தரப்பினரும் நெகிழ்ந்தார்கள். அவருடைய வாழ்க்கைத் தடங்களால் அப்படி உணர்ச்சிமயமாகவில்லை, மாறாக, அவருடைய எழுத்தாக்கங்களைச் சொன்னபோது, கதை மாந்தர்களை எடுத்துக்காட்டியபோது அரங்கத்தினரும், தாங்கள் சந்தித்த மனிதர்கள் பற்றிய நினைவுகள் கிளர்தப்பட்டவர்களாக ஆழ்ந்த உணர்வில் மூழ்கி எழுந்தார்கள்.


எழுத்தாளரும், மக்களுக்கான பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்றவருமான பா. செயப்பிரகாசம் நினைவு கருத்தரங்கில் இந்த மாறுபட்ட அனுபவம் வாய்த்தது. சமூகப் போராளி எளியோரின் வழக்குரைஞர் பி.வி. பக்தவச்சலம் அறக்கட்டளை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு இணைந்து அந்தக் கருத்தரங்கத்தை சனிக்கிழமையன்று (மார்ச் 15), சென்னையின் ‘இக்சா’ வளாகச் சிறு கூடத்தில் நடத்தின,


பா.செ‘யின் படைப்புலகம் சார்ந்தே உரைத் தலைப்புகள். அவரது அல்புனைவுகளில் பெண்ணியம் மற்றும் சமூகப் பங்களிப்புகள் பற்றிப் பேசினார், இதே தலைப்பு தனக்கும் பொருந்தக் கூடியவரான கமலாலயன். சில பதிவுகளைப் பகிர்ந்தபோது சில மணித்துளிகள் தொடர்ந்து பேச இயலாமல் உறைந்தார். குறிப்பாக, இந்தித் திணிப்புக்கு எதிராக 1960களில் ஏற்பட்ட எழுச்சியில் ஒரு தளநாயகராகவே பா.செ. பங்களித்தது பற்றிச் சொல்லி வந்தவர், தமிழக வரலாற்றின் அந்த மகத்தான அத்தியாயம் இலக்கியப் புனைவுகளில் கொண்டுவரப்படவில்லை என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டபோது அடுத்த சொற்களுக்காகத் தவித்தார். தனது தொழிற்சாலை அனுபவங்கள், உயரரிகாரியின் எச்சரிக்கை, தொழிலாளர் போராட்டத்தில் முன்னின்றவர்கள் பழிவாங்கப்பட்டது குறித்த நினைவுகளையும் பா.செ. கட்டுரைகள் கிளறிவிட்டதைத் தெரிவித்து, அத்தகைய பல போராட்டங்கள் புனைவுகளாக்கப்படாமல் இருப்பதன் வேதனையை ஒரு படைப்பாளிக்கே உரிய உறுத்தலுணர்வுடன் வெளிப்படுத்தினார்.




பா.செ. புனைவுகளில் நடமாடும் பெண் பாத்திரங்களை அறிமுகப்படுத்திப் பேசினார், உண்மை வாழ்க்கையின் அத்தகைய மனிதர்களைத் தேடும் உந்துதலை இளம் எழுத்தாளர்களுக்கு எப்போதும் வழங்குகிறவரான ச. தமிழ்ச்செல்வன். பா.செ. வாழ்க்கையோடு கலந்த பாட்டியும் அம்மாவும் கரிசல் கிராமங்களின் உயிரோட்டமான பெண்களும் அவருடைய சிறுகதைகளில் வாழ்ந்துகொண்டிருப்பதை எடுத்துக்காட்டினார். அவர்களின் பாடுகளையும் வலிகளையும் அழுகைகளையும் எவ்வளவு துல்லியமாகக் கவனித்து உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார் என்று சொல்லிவந்தவர், ஒரு கதையில் சித்தரிக்கப்படும் அவலச் சூழலைப் பகிர்ந்தபோது கண்ணீர் முட்டிக்கொள்ள, பேச்சைத் தொடர முடியாமல் தடுமாறினார். தண்ணீர் எடுத்துக்கொடுக்கப்பட்ட பிறகு, அதைப் பருகிவிட்டு, மனதை ஆற்றிக்கொண்டு, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு உரையைத் தொடர்ந்தார். நம் வீடுகளில், பக்கத்து வீடுகளில், தெருக்களில், ஊர்களில் இப்படிப்பட்ட பெண்களைப் பார்த்திருக்கிறோமே, இதே போலக் கவனித்திருக்கிறோமா என்ற குறுகுறுப்பை அவையினருக்குக் கடத்தினார் என்றால் மிகையில்லை.


சங்கத்தின் மாவட்டச் செயலாளர், நாடகக் கலைஞர் அசோக் சிங் நினைவுரையாற்றினார். பா.செ. வாழ்க்கையின்நினைவுக் குறிப்புகளாக அல்லாமல், பா.செ.பேச விரும்பிய பண்பாட்டுத் தளப் போக்குகளை நினைவில் கொண்டு புதிய கண்ணோட்டத்தில் விவாதிக்க வேண்டிய சிந்தனையை முன்வைத்தார். மொழி உள்பட எந்தவொரு பண்பாட்டு அடையாளத்தையும் நாம் எதிர்க்கவில்லை, ஆதிக்கத்தைத்தான் கேள்விக்கு உட்படுத்துகிறோம் என்றார். 


வரவேற்புரையோடு, தேர்ந்தெடுத்த தலைப்புகளின் முக்கியத்துவம் பற்றிய கருத்துரையாகவும் சுருக்கமாக வழங்கினார் மூத்த பத்திரிகையாளர் மயிலை பாலு. இந்தத் தலைப்புகளைத் தேர்வு செய்ததே அவர்தான் என்று தெரியவந்தது. தலைப்புகளை மட்டுமல்ல, யாரிடம் அவற்றை ஒப்படைக்கலாம் என்று தேர்வு செய்ததிலும் அவருடைய அனுபவமும் அக்கறையும் பொதிந்திருக்கின்றன.





நன்றி நவில வந்த அறக்கட்டளைப் பொறுப்பாளர்களில் ஒருவருரான வழக்குரைஞர் அஜிதா, எழுத்தாளர், களச் செயல்பாட்டாளர் என்பதற்கெல்லாம் முன்பாக பா.செ. தனது மாமா என்று தெரிவித்தார். பற்பல வாழ்க்கை நிலைகளுக்கு மாறினாலும் வர்க்க அடிப்படையில் எளிய மக்களின் பக்கம் நிற்பதில் ஒருபோதும் மாறாமல் நின்றார். அவரது கதாபாத்திரத் தேர்வுகளும் மொழிப்போராட்டம் புனைவாக்கப்படாதது பற்றிய மனக்குறையும் சேர்ந்து, பணியும் பணியில் சந்திக்கும் மக்களும் சார்ந்த எழுத்தாக்கங்களில் இனி தானும் ஈடுபடும் உறுதியை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்தினார்.


எண்ணிய எண்ணியாங்கு எய்தலாகும் என்ற நம்பிக்கையோடு அரங்கில் ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தார் முற்போக்குச் சிந்தனையாளர், மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன். 


மானுட மாண்பும் வர்க்க உணர்வும் வேறு வேறு அல்ல,  ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று உணர்த்திய நிகழ்வு எனப் பதிவு செய்ய வேண்டுமென்ற எண்ணம் அங்கிருந்து விடைபெறும்போதே உதித்திருந்தது.