Tuesday, 31 December 2024

நல்ல புத்தகம் கெட்ட புத்தகம்

 “புத்தகம் படிக்கிறது நல்ல பழக்கந்தான். ஆனா, புத்தகம் படிச்சாலே புரட்சிங்கிற மாதிரி பேசுறதைத்தான் புரிஞ்சிக்க முடியலை. புத்தகம்னு ஏதை வேணும்னாலும் படிச்சுக்கிட்டு இருக்க முடியுமா?”


“ஏன் இப்படிக் கேட்கிறீங்க?”


“இல்லை, நல்ல புத்தகத்தைப் படிச்சாதானே நல்ல மாற்றம் வரும்? மோசமான புத்தகமும் வருதுல்ல? அதைப் படிச்சா நாமளும் மோசமாயிடுவோம் மத்தவங்களுக்கும் மோசம் பண்ணிடுவோம்ல?”


“அதென்னமோ உண்மைதான்.”


“சரி, எது நல்ல புத்தகம், எது கெட்ட புத்தகம்னு எப்படித் தெரியும்? நீங்க சொல்றதுதான் நல்ல புத்தகம்னு அதை மட்டும் படிச்சா போதுமா? இதை யாரு முடிவு செய்யுறது?”


“நிச்சயமா நீங்கதான் முடிவு செய்யணும்.”


“எப்படி அதை முடிவு செய்யுறது?”


“எந்தப் புத்தகத்தையும் படிங்க. உங்களுக்கே அது புரிஞ்சிடும்.”


Friday, 27 December 2024

அரசியல் விவாதத்திற்குள் நகரும் சினிமா




‘விடுதலை–2’ படத்தில் சில வசனங்கள் மௌனமாக்கப்பட்டிருக்கின்றன. அதன் பிறகும் கூட “ஏ” சான்றிதழ் அளித்திருப்பது பரவலாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் கை விரல் நகங்கள் இக்காலத்தில் இப்படிக் கிழிக்கும் என்றால், பெருமாள் வாத்தியார் காலத்தில் அவரை மௌனமாக்குவதற்கு என்னவெல்லாம் செய்திருக்கும்? அவர் கைது செய்யப்பட்ட செய்திகளை வெளியிடுவது தொடர்பாகப் பத்திரிகை நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க உயர்மட்டத்தில் முடிவு செய்யும் காட்சிகள் அந்த நகங்களின் கூர்மையைக் காட்டுகின்றன.


இன்றைய அரசியல், சமூக, சந்தை நிலைமைகளில் சினிமாவில் கம்யூனிசக் கருத்துகளைப் பேசுவதற்கே ஒரு கலைத்துணிவு வேண்டும். அதிலேயும், புரட்சி என்ற இலக்குத் திட்டத்தை நோக்கிச் செல்வதில் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இடையே நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கிற, எந்தப் பாதை சரியான பாதை என்ற நடைமுறைத் திட்டம் தொடர்பான மோதலைப் பேசுவதற்கு ஒரு கொள்கைத்தெளிவு வேண்டும். அந்தத் துணிவு, தெளிவு இரண்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். ஒரு சினிமாவுக்குள் அரசியல் விவாதம் வருவது வழக்கமானதுதான். அரசியல் விவாதத்திற்குள்ளேயே ஒரு சினிமா நகர்வது அரிதானது.

படத்தின் முதல் பாகம் குறிப்பிட்ட இடமும் காலமும் சார்ந்த கதையைக் கொண்டிருந்தது (பொன்பரப்பி, சதிவேலை, பழங்குடி மக்கள்). இரண்டாம் பாகம் வேறு காலப் பகுதிகளுக்கும் இடச் சூழல்களுக்கும் விரிவடைகிறது (கீழத்தஞ்சை, சாதிய வன்மம், கூலி மறுப்பு, நில ஆக்கிரமிப்பு). படைப்பாளியின் புனைவுச் சுதந்திரம் அவ்வாறு விரிவுபடுத்த வழி செய்திருக்கிறது. இதன் காரணமாக, இது அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்துக் காலகட்டத்திற்குமான படமாகிறது.

மக்களுக்காகப் போராடிய கம்யூனிஸ்ட்டுகள் நாட்கணக்கில், மாதக்கணக்கில் சிறைகளில் அடைக்கப்பட்டபோதெல்லாம் அங்கே ஒரு மார்க்சிய அரசியல் பள்ளியைத் தொடங்கிவிடுவார்கள். அவர்களின் கட்டுப்பாடு, வேலைப் பிரிவினை, மரியாதை, நெஞ்சுரம், மற்றவர்களுடன் இணக்கம ஆகியவற்றைப் பார்த்துச் சிறையதிகாரிகளும் காவலர்களும் ஈர்க்கப்பட்டு மதிப்பளித்த அத்தியாயங்கள் உண்டு. மறியல் போராட்டங்களில் கைது செய்யப்பட்டு ஒரு நாள் காவலில் வைக்கப்பட்டிருக்கும்போது கூட, போராட்டக் கோரிக்கையையே தலைப்பாக்கி அணி பிரிந்து பட்டிமன்றம் நடத்துவார்கள். “ஏதாவது அத்து மீறினால்தான் எதிர்ப்பார்கள், உள்ளேயே போராடுவார்கள். நாங்கள் சரியாக நடந்துகொண்டால் ஒத்துழைப்புத் தருவதில் இவர்களைப் போல யாரும் வர மாட்டார்கள்,” என்று காவல்துறையினர் கூறுவதைக் கேட்கலாம்.

படத்தில், கைது செய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்படும் வாத்தியார் காட்டுக்குள் பாதை காட்டுவதோடு, காவலர்களுக்குத் தனது பாதை பற்றி வகுப்பு எடுப்பது போலப் பேசுகிறார், வர்க்கப் பாகுபாட்டை விளக்குகிறார். இது கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு வியப்பளிக்கும் சித்தரிப்பல்ல.

கட்சி அலுவலகத்தில் இருதரப்பு உரிமைகளை மதிக்கிற உறுதியேற்போடு நடைபெறும் இணையேற்பு நிகழ்வு உள்ளிட்ட சித்தரிப்புகள் வளரும் தலைமுறைகளின் மனதில் பதியமாகும்.
மிகப் பெரும்பாலான காட்சிகளில் வருவதால் அல்ல, வாத்தியாரின் இயல்புகளை உள்வாங்கிக்கொண்ட நடிப்பால் விஜய் சேதுபதி படத்தைத் தன் தோள்களில் தாங்கியிருக்கிறார். காவல் அதிகாரியின் முன் தரையில் உட்கார வைக்கப்பட்டிருப்பவரின் அந்த அம்மண அரியாசனம் அரங்கம் நிறைந்த கைத்தட்டல் பெறுகிறது. அது அந்தச் சுயமரியாதைக்கான அங்கீகாரம்.

இளைய ராஜா பின்னணி இசையும், வேல்ராஜ் ஒளிப்பதிவும் இயக்குநர் கற்பனையை உயிர்ப்புறச் செய்திருக்கின்றன. சூரி, கௌதம் வாசுதேவன் மேனன், ராஜீவ் மேனன், மஞ்சு வாரியர், கிஷோர், பாலாஜி சக்தி வேல், (மறைந்த) மனோ பாலா உள்ளிட்டோர் பங்களிப்பு வலுச் சேர்த்திருக்கிறது.

இதையெல்லாம் நேர்த்தியாகச் செய்திருக்கலாமே என்று எண்ண வைக்கிற இடங்கள் இருக்கின்றன, அல்லது இல்லாமல் போயிருக்கின்றன. சர்க்கரை ஆலை முதலாளியின் மகள் மகாலட்சுமி தோழர்களோடு சேர்ந்துகொள்வது, இப்படிப்பட்ட செல்வச் செழிப்பான, மேல்தட்டுக் குடும்பங்களில் பிறந்து இயக்கத்திற்கு வந்தவர்களை அடையாளப்படுத்துகிறது என்றாலும், கதையோட்டத்தில் அது என்ன பங்களிக்கிறது? தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிற கதாபாத்திரம் பிறகு நாயகனின் காதல்மிகு இணையராக, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறவராகச் சுருக்கப்பட்டுவிட்டது ஏன்?

முதல் பாகத்தில் காவலர் குமரேசனைக் காதலித்து, காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, வாத்தியாரை அவன் கைது செய்யும் நடவடிக்கைக்குத் தூண்டுதலாகும் தமிழரசி என்ன ஆனார்? ஒரு காட்சியில் வருகிறார் என்றாலும் அது முன்கதைப் பகுதியாக அல்லவா இருக்கிறது?

முந்தைய பாகத்தில் எளிய மக்கள் மீதான காவல்துறையின் சித்திரவதை தருகிற வலியுணர்வை, இதில் பண்ணையின் ஒடுக்குமுறை வன்மம் தரத் தவறுகிறது, ஒட்ட வைத்தது போல இருக்கிறது – இந்த எண்ணம் எனக்கு மட்டும்தான் ஏற்பட்டதா? தற்போதைய நிகழ்வுகளும் முன்பு நடந்தவைகளுமான மாறி மாறி வருகிற காட்சிகளின் வேகம், ஊன்றிக் கவனித்து ஒன்றுவதைத் தடுக்கிறதா?

அரசியல் பாதை என்ற தளத்தில் படம் பதிவு செய்திருக்கிற செய்திகளும் கருத்துகளும் (எனது கண்ணோட்டப்படி) முற்றிலும் சரியாக இருக்கின்றன. ஆனால் திரைப்பட அனுபவம் என்ற தளத்தில் (எனது கண்ணோட்டப்படி) தாக்கம் ஏற்படுத்துவதில் முதல் பாகத்தோடு இணையாமல் பின்தங்குகிறது. வெகு மக்கள் இயக்கத்திலிருந்து விலகி ஆயுதம் ஏந்திய குழுவாக மாறியது, தங்களுக்குத்தான் பேரிழப்புகளை ஏற்படுத்தியது என்ற வேதனையுடன் அதிலிருந்து மாற முடிவெடுக்கிறார் வாத்தியார். தியாகங்களில் தோய்ந்திருந்த போதிலும் கூட, அது மக்களுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது, இலட்சியத்தை அடைவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்ற புரிதலுக்கும் அவர் வந்திருப்பார் – அதை இன்னும் வெளிப்படையாகக் கூறியிருக்க வேண்டும்.

நாசி நரம்புகளை வதைக்கும் வணிக மசாலாக்களுக்கு இடையே அவ்வப்போது நல்ல காற்று போல மாற்றுச் சிந்தனைகளோடு வருகிற சில படங்கள், மக்களை நெருங்கும் கலையாக்கத்தில் அடையாளம் பெறுவதில்லை. ஆயினும் புதியவர்களை ஊக்குவிப்பதற்காகக் குறைபாடுகள் சுட்டிக்காட்டாமல் விடப்படுவதுண்டு. ஆனால், முதிர்ச்சியுள்ள ஒரு முன்னோடிக் கலைஞரான வெற்றிமாறனிடம் உரிமையோடு முன்வைக்கலாம். இத்தகைய ஆக்கங்கள் பெரும் வெற்றியடைய வேண்டுமென்ற பெருவிருப்பமே இந்தப் பகிர்வு.

ஓடிடி மேடைக்கு வருகிறபோது, நீக்கப்பட்ட பல காட்சிகளை இணைத்து வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. அப்போது மேற்படி கேள்விகளுக்கு விடையும், படத்திற்கொரு முழுமையும் கிடைக்கின்றனவா என்று பார்க்கலாம். தொலைக்காட்சியின் பெரிய திரையில் படத்தைப் பார்க்க விரும்பி வீட்டுக்கு வரக்கூடிய நண்பர்களோடு அமர்ந்து திரும்பத் திரும்பப் படத்தைப் பார்ப்பேன். எப்படியானாலும், அவர்களுடன், கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுப் பருவத்தில் வந்திருக்கிற ‘விடுதலை–2’ இயக்கப் பாதைகள் குறித்து நான் பேசுவதை எளிதாக்கியிருப்பது உண்மை.

Thursday, 26 December 2024

என் ஜோல்னாப் பையில்...

தமிழ்நாட்டு ஆன்மீகச் சுற்றுலாத் திட்டம் ஒன்றில் பணம் கட்டி வந்த நண்பன் குடும்பத்துடன் புறப்பட்டான். தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதை அவன் தெரிவித்தபோது, அவனுடைய மகள் குறுக்கிட்டாள்.


“அங்க்கிள், நாங்க எங்கேயெல்லாம் போறோம் தெரியுமா?.....” எனக் கேட்டாள். சென்னையின் பார்த்தசாரதி, கபாலீஸ்வரர் கோவில்களில் தொடங்கி தஞ்சைப் பெரிய கோவில் வரை புகழ்பெற்ற கோவில்களை பரவசத்தோடு பட்டியலிட்டாள். வேளாங்கன்னி ஆலயமும், நாகூர் தர்காவும் கூடப் பட்டியலில் இருந்தன. “நீங்களும் எங்ககூட வர்றீங்களான்னு அப்பா கேட்டப்ப ஒத்துக்கிட்டிருக்கலாம்ல,” என்றாள்.

“மகளே, பக்தியா வராட்டியும் பயணமா வரத்தான் ஆசைப்படுவேன். ஆனா என்னோட நிலைமைதான் உங்கப்பனுக்கும் தெரியும், உனக்கும் தெரியுமே. மகிழ்ச்சியா, பாதுகாப்பா போயிட்டு வாங்க. அந்த சாமிகளையெல்லாம் நான் ரொம்பவும் விசாரிச்சேன்னு சொல்லிடு, ஓகேயா?”

“நீங்களும் உங்க ஜோக்கும்… சரி அங்க்கிள் பை.”

பத்து நாள் சுற்றுலா முடிந்து திரும்பிய மறுநாள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதப் பலகாரங்களையும், ஏதோவொரு ஊரில் வாங்கிய சணல் ஜோல்னாப் பையையும் கொண்டுவந்து கொடுத்தாள். “நீங்களும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்.”

“அடுத்த முறை வர்றேம்பா. அது சரி, சாமிகளை நான் விசாரிச்சதா சொல்லச் சொன்னேனே, சொன்னியா?” சிரித்துவிட்டுக் கிளம்புவாள் என்று நினைத்தேன்.

சிரித்தாள். “சொன்னேன் அங்க்கிள்.”

“அவங்க என்ன சொன்னாங்க?”

“அந்த ஆளை இழுத்துட்டு வந்திருக்க வேண்டியதுதானேன்னு சொன்னாங்க.”

Saturday, 21 December 2024

வரலாறு, அரசியல், வாழ்க்கையோடு ஒரு திரைப்படம்


 

தி சில்ரன்ஸ் ட்ரெய்ன்



டத்தை ஒரு காட்சியிலிருந்து தொடங்கி விரித்துச் சென்று ஒரு காட்சியோடு முடித்துவிட்டார்கள். ஆனால் அதைப் பற்றி எழுதுவதை எங்கிருந்து தொடங்குவதென்று தோன்றவில்லை. அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திய படம்தான் “தி சில்ரன்ஸ் ட்ரெய்ன்”.

‘இல் ட்ரெனோ டெய் பாம்பினி’ என்ற இந்த இத்தாலியப் படத்தை அதே பெயரில் வயோலா ஆர்டோன் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு கிறிஸ்டினா கோமேசினி இயக்கியிருக்கிறார். இவ்வாண்டின் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படம் ஆங்கிலக் குரல் பதிவோடும் துணையுரையோடும் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தில் அந்த ரயில் குழந்தைகளை வட இத்தாலியின் மோடேனா நகரத்திற்குக் கொண்டு செல்கிறது. படம் நம்மை 1940களின் இரண்டாம் உலகக் போர் முடிவுக்குப் பிந்தைய ஒரு சூழலுக்குக் கொண்டு செல்கிறது.

போர் முடிந்த பிறகும் சில நாட்களுக்கு இத்தாலியில் நேசப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தது. 1946ல் அப்படியொரு தாக்குதலின்போது, நேப்பிள்ஸ் நகரில், பாசிச ஆட்சியின் பரிசான வறுமையின் பிடியில் சிக்கியிருக்கிற ஒற்றைத் தாய் அன்டோனீட்டா. விளையாட்டுத்தனமாக ஒளிந்துகொண்டிருக்கும் மகனைத் தேடுகிறபோது, தெருவின் மறுபுறம் குண்டு வெடிக்கிறது. புகை மண்டலத்திற்கு ஊடாகவும் சிதறியோடும் மக்களுக்கு இடையேயும் மகனைக் கண்டுபிடிக்கிறாள். தகர்ந்த கட்டடச் சுவர்களோடு அந்தத் தெரு அன்றைய நிலைமையை உணர வைக்கிறது.

ஏழைக் குழந்தைகளை, நிலைமை சீரடைகிற வரையில், வட இத்தாலியில் பாதுகாப்பாக உள்ள குடும்பங்களின் பொறுப்பில் ஒப்படைத்துப் பேணுவதற்கு ஏற்பாடு செய்கிறது இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி. அதற்காக ‘ட்ரேனி டெல்லா ஃபெலிசிட்டா’ (மகிழ்ச்சி ரயில்கள்) என்ற திட்டம் உருவாக்கப்படுகிறது.அன்டோனீட்டாவின் மகன் அமேரிகோ அம்மாவை விட்டுப் போக மறுக்கிறான்.

ஊரில் சமைத்துச் சாப்பிடுவதற்கு எலிகளைத் தவிர வேறு விலங்குகள் இல்லாத நிலையில், அவனும் நண்பனுமாக பெருச்சாளிகளைப் பிடித்து வண்ணம் பூசி வெள்ளையெலி என்று விற்கிறார்கள். மழையில் அந்த வண்ணம் கரைந்துவிட மாட்டிக்கொள்கிறார்கள். வேறு வழியின்றி பயணத்திற்குச் சம்மதிக்கிறான்.

அன்டோனீட்டா, ஏற்கெனவே மணமானவனான காதலனுடன் நெருங்கிப் பழகுவதைப் பார்த்ததும் கூட அமேரிகோவின் சம்மதத்திற்கு ஒரு காரணம்தான். போரும் சர்வாதிகாரமும் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டிப்போடுகின்றன! இன்றைய போர்களோடும் நவீன பாசிசத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ரயில் நிலையத்தில் ஒரு முதிய பெண், “குழந்தைகளே போகாதீர்கள். பெற்றோர்களே குழநதைகளை அனுப்பாதீர்கள். கம்யூனிஸ்ட்டுகளின் திட்டம் குழந்தைகளை சைபீரியாவுக்குக் கடத்துவதுதான். அங்கே மனிதக் கறி உண்பவர்கள் அவர்களைக் கொன்று சுட்டுச் சாப்பிடுவார்கள்,” என்று கு அச்சுறுத்துகிறாள். எல்லோரும் அதைக் கேட்டுத் திரும்பிச் செல்ல முயல்கிறபோது கம்யூனிஸ்ட் தோழர்கள் தடுக்கிறார்கள். போரின் விளைவாகக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதை எடுத்துக்கூறுகிறார்கள். வடக்கில் அவர்கள் அன்போடு பராமரிக்கப்படுவதற்கும், குறிப்பிட்ட காலத்தில் நலமுடன் திரும்பி அழைத்து வருவதற்கும் உறுதியளிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட அவதூறுகளாலும், அச்சுறுத்தல்களாலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அப்புறப்படுத்தச் சுரண்டல் சக்திகள் அன்றிலிருந்து இன்று வரையில் முயன்றுகொண்டே இருக்கிறார்களே! அதை அப்பாவிகள் உண்மையென்று நம்புகிறார்களே! இதனை நம் நினைவு ரயில் சட்டெனக் கடக்கச் செய்கிற காட்சி இது.



மோடேனா நகரில் வந்திறங்கும் குழந்தைகள் தத்துப் பெற்றோர்களுடன் செல்கிறார்கள். கடைசியில் அமேரிகோவை அழைத்துச் செல்கிறாள், போரில் காதலனை இழந்து வாழ்பவளான டேர்னா. அவள் இத்தாலியில் ஜெர்மன் ஆக்கிரமிப்பையும் முசோலினியின் பாசிச ஆட்சியையும் எதிர்த்து நடந்த இயக்கத்தில் பங்கேற்றவள்.

அமேரிகோவை அவள் தன் அண்ணன் அல்சைட் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறாள். வயலின் இசைக்கத் தெரிந்தவனான அல்சைட், அமேரிகோவுக்கு அதைக் கற்றுத் தருகிறான். இதைக் கண்டு அவனது மகன் லூசியோ பொறாமைப்படுகிறான். ஆயினும், பள்ளியில் சக மாணவர்கள் அமேரிகோவைத் தெற்கிலிருந்து வந்தவன் என்று அவமதிக்கிறபோது அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஆனால், “நீ தெற்கிலிருந்து வந்தவன்தானே,” என்று சொல்லிக்காட்டவும் செய்கிறான். இன்னொரு நாள், அமேரிகோவின் அம்மாவைப் பற்றி அவன் கேலியாகப் பேச அவர்களுக்குள் சண்டை மூள்கிறது.

அடுப்பில் ரொட்டிகளைச் சுட்டு எடுத்து வைக்கிற வேலைக்காக அமேரிகோவை வீட்டுக்குள் அழைக்கிறார்கள். அவனுக்கு அந்தக் கிழவி சொன்னது நினைவுக்கு வர வெளியே ஓடி மரங்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறான். தேடி வரும் டேர்னா, வயலில் விதைத்திருக்கிற கோதுமை தங்க வண்ணத்தில் விளைந்ததும் அவன் தனது ஊருக்குப் போகலாம் என்கிறாள்.

ஒருவன் திமிரோடு டேர்னாவை இழிவுபடுத்துவதைக் காண்கிறான் அமேரிகோ. அன்று இரவு, தனது அம்மாவாக இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார் என்று சொல்கிறான். டேர்னா கண்ணீர் விடுகிறாள்.

அவனைப் போலவே மோடேனாவுக்கு வந்தவளான ரோசானா ஊருக்குத் திரும்ப வேண்டுமென்று ஏங்கி யாருடனும் பேசாமல் இருக்கிறாள். தண்டவாளத்தின் வழியாகக் போனால் ஊரை அடையலாம் என்று லூசியோ கூற அவளும் போய்விடுகிறாள். லூசியோ பதறிப்போய் அமேரிகோவோடு சேர்ந்து அவளைத் தேடிப் போகிறான். தண்டவாளத்துக்கு அருகில் அவள், எலும்புக்கூடு ஒன்றின் அருகில் உட்கார்ந்திருக்கிறாள். யாருடைய எலும்புக்கூடு அது? ரயிலில் அடிபட்டு இறந்தவரா, போரில் சுடப்பட்டு மாண்டவரா? விடை கிடைக்காத வினா நமக்குள் முளைக்கிறது. அவ்வப்போது சண்டையும் சமாதானமுமாகக் குழந்தைகளின் உலகம் அழகாக இருக்கிறது.

கோதுமை விளைந்து அறுவடைக் காலம் வருகிறது. டேர்னா தன் வாக்குறுதிப்படி அமேரிகோவை ரயிலில் ஊருக்குத் திருப்பி அனுப்புகிறான். அல்சைட் தனக்கு அன்பளிப்பாகக் கொடுத்த வயலினையும் அவன் எடுத்துச் செல்கிறான். நேப்பிள்ஸ் வீட்டில் அன்டோனீட்டா அவனை முன்போல நடத்தவில்லை.

வடக்கிலுள்ள தத்துப் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்குக் கடிதங்கள் வருகின்றன. டேர்னாவிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் தனக்குக் கடிதம் எதுவும் வராத நிலையில் அவன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்று விசாரிக்கிறான். அங்கே அவன் பெயருக்குக் கடிதங்கள் வந்திருப்பதையும், அம்மா அவற்றை எடுத்துவந்து தராமல் இருந்துவிட்டதையும் தெரிந்துகொள்கிறான்.

வீட்டிற்கு வந்து வயலினைத் தேடுகிறான். குடும்பச் செலவுகளுக்காக அதை அடகு வைத்துவிட்டதைக் கூறுகிறாள் அம்மா. வெறுத்துப் போனவனாக அவன் யாரிடமும் சொல்லாமல் ரயிலேறி மோடேனாவுக்கே போகிறான். அவனைப் பிரிந்த வாட்டத்தோடு இருக்கும் டேர்னாவின் குடும்பத்தோடு இணைகிறான்.

கால ரயில் 48 ஆண்டுகளைக் கடக்கிறது. இப்போது அமேரிகோ ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞர். இசைக்குழு இயக்குநர். நிகழ்ச்சிக்காக மேடையில் சக கலைஞர்கள் காத்திருக்கிறார்கள், அமேரிகோ தயாராகிறபோது ஒரு தகவல் வருகிறது. நேப்பிள்ஸ் நகரில் அம்மா இறந்துவிட்டார் என்று. அந்தச் சோகத்துடனேயே நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்துவிட்டு, ரயிலில் ஊருக்கு வருகிறார். வெறுமையாக இருக்கும் வீட்டிற்குள் சுற்றி வருகிறபோது அவருக்கோர் அதிர்ச்சி. அந்த நொடியில் அவரது துயரமும் அம்மாவைப் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்ட குற்றவுணர்வும் நம்மையும் தொற்றிக்கொள்வது உண்மையான அனுபவம். அப்போது ஒலிக்கிற பின்னணிக்குரல் முக்கியமானதொரு முன்கதையைச் சொல்கிறது.


இரு வேறு கால ரயில்களில் பயணிக்கிறோம். சிறுவன் அமேரிகோவாக கிறிஸ்டியன் செர்வோன், வளர்ந்த கலைஞராக ஸ்டெஃபானா அக்கோர்ஸி, பெற்ற அம்மாவாக செரீனா ரோஸி, வளர்த்த அம்மாவாக பார்பரா ரோஞ்சி உள்ளிட்ட நடிப்புக் கலைஞ்ர்கள் நம்மோடு பயணிக்கிறார்கள். இயக்குநரோடு இணைந்து ஒளிப்பதிவாளர் இட்டாலோ பெட்ரிக்கியோன், இசையமைப்பாளர் நிக்கோலா பயோவனி, தொகுப்பாளர்கள் பாட்ரிசியோ மாரோன், எஸ்மெரால்டா காலாப்ரீயா ஆகியோர் ரயிலைச் செலுத்துகிறார்கள்.



போர், அடக்குமுறை ஆட்சி, வறுமை, மீறியெழும் முனைப்பு, அதிலே இணையும் மனிதம் என்று எத்தனை பின்னணிகள்! எத்தனை செய்திகள்! எத்தனை உணர்வுகள்! அத்தனையும் சேர்ந்து சிறந்ததொரு சினிமாவாக மனத் தண்டவாளத்தில் தடதடக்கின்றன!

===============

‘மின்னம்பலம்’ இணைய ஏட்டில் எனது கட்டுரை (20 டிசம்பர் 2024).

படங்களில் இயக்குநரும், நாவலாசியரும்.

Tuesday, 17 December 2024

வெளியே நிறுத்த முடியாத ஓர் இசைக் கருத்து




சையின் இனிமையையும் வலிமையையும் போலவே உணர வைத்ததோர் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். செய்தியாக வாசித்ததிலிருந்து கிடைத்த அனுபவம் அது.

ஏதேதோ வழிகளில் மறிக்க நடந்த முயற்சிகள் மக்கள் ஆதரவாலும் நீதிமன்றத் தீர்ப்பாலும் முறியடிக்கப்பட்டு, பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி நினைவு சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டுவிட்டது. ஒரு பக்கம் ஈடுபாட்டோடு பாடிக்கொண்டே, இன்னொரு பக்கம் இசை மேடைகளில் நாராசமாகக் குந்தியிருக்கும் சாதியம் பற்றித் துணிவோடு பேசியும் எழுதியும் வருபவர் அவர். அதற்காகத்தான் வழி மறிப்பு வேலைகள் நடந்தன என்பது, எந்த வகையில் மறுத்தாலும், மறைக்க முடியாத உண்மை. தடுக்க முயன்றவர்களிடம் காணாத பக்குவ முதிர்ச்சியை, விருது வழங்கல் நிகழ்வில் அதைப் பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் இசை தொடர்பாக மட்டும் பேசியவரிடம் காண முடிந்தது.

வழக்கை எதிர்கொண்டு, தீர்ப்பின் கம்பீரத்துடன் விருதினை வழங்கியது சென்னையின் மியூசிக் அகடமி. ஒரிசா மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் விருதினை அளித்தார். அகடமி அரங்கில் கடந்த ஞாயிறன்று (டிச.15) நடைபெற்ற விருது நிகழ்வில் கிருஷ்ணா நிகழ்த்திய தலைமையுரை இசை பற்றிய, குறிப்பாக இந்திய இசை பற்றிய, இன்னும் குறிப்பாக கர்நாடக இசை பற்றிய ஆய்வறிக்கையாகவே இருந்தது எனலாம்.




இசையுலகத்திற்கு இந்திய மண் வழங்கிய மகத்தான கொடை ‘ராகம்’ என்கிறார் கிருஷ்ணா. முன்முடிவுகளோடு முடங்கிப் போகாத ஆய்வாளர்களும் இதர இசைஞர்களும் என்ன சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. இனிமேல் தெரிய வரலாம். மனதை மூடிக்கொள்ளாத உரையாடல்கள் நலமானவை.

நுட்பங்கள் பற்றி ஏதும் அறியாத, அதற்கான சொல்லாடல்களில் பயிற்சியில்லாத, இசையின் இனிமையைத் துய்க்கிற எளியோன் நான். அந்த வகையிலேயே கூட என் மனதில் பல நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிற ஒரு கேள்விக்கு அவருடைய உரையில் பதில் கிடைத்தது. தமிழ் உள்பட இந்திய மொழிகளில் வருகிற பாடல்கள் (என்னைப் பொறுத்தவரையில் திரைப்படப் பாடல்கள்) ஒவ்வொன்றிலும் மாறுபட்ட ராகம் அல்லது மெட்டு இருப்பதை உணரலாம். ஆனால், மேற்கத்திய இசையில், எப்போதாவது கேட்க வாய்ப்பமைகிற பிற இசை முறைகளில், அப்படிப்பட்ட மாறுபட்ட ராக அனுபவத்தைப் பெற முடிவதில்லை.

அந்த இசையமைப்புகள் நிச்சயமாக ஒன்றிப்போய்த் தாளமிட வைக்கின்றன, அறையிலும் ஆடச் செய்கின்றன. ஆயினும் மாறுபட்ட மெட்டுகளின் அலைகளில் ஏறி இறங்குகிற உணர்வு வாய்த்ததில்லை. பாடப்படும் வேகத்தில், இசைக் கருவிகளின் சேர்க்கையில், இசைக் குறிப்புகளின் வரிசையில் வெவ்வேறு சுவை விளைகிறது. ஆனால் ராக மாறுபாடுகளோடு, மெட்டுகளின் லயத்தோடு செவிகளை ஈர்க்கிற இசையமைப்புகள் அரிதாகவே வருகின்றன. (அண்மைக்கால தமிழ் திரைப்படப் பாடல்கள் அப்படித்தான் வருகின்றனவோ என்ற ஐயமும் எனக்கு உண்டு.)

இது ஏன் என்ற கேள்வியைத்தான் மனதுக்குள் பல முறை கேட்டுவந்திருக்கிறேன். ராகம் என்பதே இந்திய/கர்நாடக இசையின் கொடைதான் என்று கிருஷ்ணா கூறியிருப்பது என் கேள்விக்கான பதில்தான்.

அவருடைய உரையில் சொல்லிக்காட்ட வேண்டிய மற்றொரு முக்கியமான, மிக முக்கியமான கருத்து இருக்கிறது. கர்நாடக இசையை மென்மேலும் வளர்த்தெடுக்க, யாரையும் வெளியே நிறுத்தாத களமாக்கிட வேண்டும் என்கிறார். அவரே கூறியிருப்பது போல, “அனைவரையும் உள்ளடக்கிய” என்று சொல்லவில்லை, “யாரையும் வெளியே நிறுத்தாத” என்று எதிர்மறையாகச் சொல்வதன் மூலம் பாகுபாடுகளைத் தகர்த்த இந்திய/கர்நாடக இசையை நேர்மறையாக உயர்த்திப் பிடிக்கிறார்.

“சமூக, பண்பாட்டு, பொருளாதார நிலை எதுவானாலும் ஒவ்வொரு தனி மனிதரும் கர்நாடக இசைக்கான உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்,” என்ற தன் பேரவாவை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தச் சூழல் இரவோடு இரவாக ஏற்பட்டுவிடாது என ஒப்புக்கொண்டு, “நமது முன்முடிவுகளாக இருக்கிற கருத்துகளைக் கைவிட்டு, சொகுசான கட்டமைப்புகளிலிருந்து வெளியேறி, உறுதியான தொடர்ச்சியான முயற்சிகள் தேவை. அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால், சில தலைமுறைகளிலேயே சமுதாயத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவுகளிலிருந்து பல நட்சத்திரங்கள் உருவெடுப்பதற்குத் திட்டவட்டமான வாய்ப்பு இருக்கிறது,” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அந்த மனசுதான்…

Wednesday, 11 December 2024

குழந்தையைத் தூக்கி நிற்கும் குழந்தைத்தாய்!


 


பதினேழு வயது – பள்ளிப் படிப்பை முடித்துக் கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கத் தயாராகிற வயது. விளையாட்டு, கலை என்று தன்னை முன்னிறுத்திக் காட்டுகிற வயது. ஆனால் அவளுடைய கையில் ஒரு இரண்டு வயதுக் குழந்தை. அது அவள் பெற்ற குழந்தை. அப்படியானால் பதினைந்து வயதிலேயே குழந்தை பிறந்திருக்கிறது. எப்போது திருமணம் நடைபெற்றிருக்கும்?

 நமது நாட்டில் குழந்தைத் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆயினும், அவ்வப்போது எங்காவது குழந்தைத் திருமணம் பற்றிய தகவலறிந்து, சமூக நலத்துறை அலுவலர்கள் காவல்துறை உதவியுடன் தடுத்து நிறுத்திய செய்திகள் வருகின்றன. தகவல் தெரியாமல் எத்தனை குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன?

 2030ம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக ஒழிப்பது என்று ஐக்கிய நாடுகள் பன்னாட்டுக் குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இன்னும் ஐந்து ஆண்டுகளே இருக்கும் நிலையில், அந்த இலக்கை நோக்கிச் செல்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்றாலும், வேகம் குறைந்து வருவது நம்பிக்கை தருவதாக இல்லை.

 குழந்தைத் திருமணம் என்று இரு பாலருக்கும் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் மணமேடையில் அமர வைக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் பெண் குழந்தைகள்தான். தாங்களும் குழந்தையாக இருக்கிற ஆண்களுடன் சேர்த்து வைக்கப்படுகிறவர்களை விட, வயதான ஆண்களுக்குக் கட்டிவைக்கப்படும் பெண் குழந்தைகள்தான் மிக அதிகம். (“கட்டி வைக்கப்படும்” என்ற வார்த்தைகள் எவ்வளவு பொருத்தம்!).

 குழந்தைக்குக் குழந்தை

 உலகில் குழந்தைப் பருவத்திலேயே மணமகளாகிறவர்களில் மூன்று பேர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்தான். இந்திய இளம் பெண்களில் 4 பேருக்கு ஒருவர் (23 சதவீதம்) சட்டம் அனுமதிக்கிற 18 வயதை அடைவதற்கு முன்பாகவே மணமுடிக்கப்பட்டவர்கள்தான். மிக அதிகமாகக் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதில் முதலிடத்தில் இருப்பது உத்தரப் பிரதேச மாநிலம். அதைத் தொடந்து பீகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம்  ஆகிய மாநிலங்கள் வரிசை கட்டுகின்றன. இந்த மாநிலங்களில் சராசரியாக 40 சதவீத இளம்பெண்கள் 18வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு முன் திருமணநாளைச் சந்தித்தவர்கள். இவர்களில் பெரும்பாலோர், தங்களின் குழந்தைகளுக்குப் பிறந்தநாள் கொண்டாடுகிறவர்கள்.

 குறிப்பிடத்தக்க விழிப்புணர்வு இயக்கங்களைச் சந்தித்துள்ள தமிழ்நாடு குறைந்த அளவிலேயே குழந்தைத் திருமணங்களைக் கண்டிருக்கிறது. இந்தக் குறைந்த அளவே கூட, இளம் பெண்களில் 16.3 சதவீதமாக இருக்கிறது. 12.8 சதவீதத்தினர் 18 வயதுக்கு முனபே கர்ப்பம் அடைந்தவர்களாவர் (2019–2021 தேசிய குடும்ப ஆரோக்கிய ஆய்வறிக்கை). 2019ம் ஆண்டில் தமிழகத்தில் 46 குழந்தைகளுக்குத் திருமணம் நடந்திருக்கிறது,  2021ல் அந்த எண்ணிக்கை 169 ஆக அதிகரித்திருக்கிறது.

 இதர தெற்காசிய நாடுகளை விட இந்தியாவில் இதைத் தடுப்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆயினும், தெரிந்தும் தெரியாமலும் குழந்தைத் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. 15 வயதுக்குக் கீழ் திருமணம் செய்து வைக்கப்படுகிற குழந்தைகள் 5 சதவீதம். 18 வயதுக்குள் மணமாகிற குழந்தைகள் 23 சதவீதம். ஒன்றிய அரசும், மாநில அரசுகளும், இயக்கங்களும் நிறையச் செய்தாக வேண்டியிருக்கிறது.

 இது உலகளாவிய பிரச்சினை. குழந்தைகளின் உலகம் குழந்தைகளுக்கானதாக இல்லை என்கிற பிரச்சினை. குழந்தைப் பருவத் திருமணம், கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் விளையாட்டுகளோடு, கல்வி, உடல் நலம், எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றையும் கலைத்துப் போட்டிருக்கிறது.

 கொலம்பியா, இராக் செய்திகள்

 இந்த நவம்பரில், லத்தீன் அமெரிக்காவின் கொலம்பியா குடியரசு நாட்டில் சட்ட வேலியில் இருந்துவந்த ஓட்டை அடைக்கப்பட்டு,  குழந்தைத் திருமணத்திற்குத் தடைவிதிக்கும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. 17 ஆண்டுகளாக அங்கே நடந்து  வந்த இயக்கங்களின் வெற்றி இது. இந்தச் செய்தி எல்லா நாடுகளும் இதைப் பின்பற்றட்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதே வேளையில் வேறொரு செய்தி, எத்தனை நாடுகள் இதைப் பின்பற்றுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

 இராக் நாட்டின் அரசு தயாரித்துள்ள புதிய சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் ஏற்கப்பட்டு சட்டமாக அறிவிக்கப்படுமானால், 9 வயதுப் பெண் குழந்தைக்குத் திருமணம் செய்துவைக்கலாம். ஆம், 9 வயது! தற்போதுள்ள சட்டப்படி 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாது. அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று 15 வயதுக்குக் குறைந்தவர்களுக்குத் திருமணம் செய்யலாம்.

 “இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் திருமணங்கள் தொடர்பான அதிகாரம் அரசுத் தலைமையிடமிருந்து மதத் தலைமைக்கு மாற்றப்பட்டுவிடும். தற்போதுள்ள சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சம உரிமைகள் மறுக்கப்படும். பெண்களின் மண முறிவு உரிமையும் வாரிசுரிமையும் பறிக்கப்பட்டுவிடும்,” என்று அங்கே இதை எதிர்த்துக் களம் காண்கிற மனித உரிமைப் போராளிகள் கூறுகிறார்கள். பெண் குழந்தைகள் பாலியல் வன்முறைகளுக்கு எளிதில் இரையாக்கப்படுவார்கள், உடல் சார்ந்த பிற துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்படுவார்கள், அவர்களது கல்வியும் வேலைவாய்ப்பும் புறக்கணிக்கப்படும் என்ற கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.

 சட்டம் செல்லுபடியாகாத நாடுகளில்

 சட்டத்தின் ஆட்சி நடைபெறாத, அதாவது அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் உள்ள நாடுகளில் குழந்தைத் திருமணங்கள் மிகுதியாக நடைபெறுகின்றன என்று ‘சேவ் தி சில்ரன்’ (குழந்தைகளைக் காப்போம்) என்ற அமைப்பின் “உலக சிறுமிப் பருவ அறிக்கை – 2024” தெரிவிக்கிறது. இத்தகைய நாடுகளில் சுமார் 3 கோடியே 20 லட்சம் சிறுமிகள் “கட்டுப்பாடற்ற–குழந்தைத் திருமணக் கொதிநிலையில் வாழும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்,” என்கிறது அந்த அறிக்கை.

 ஈரான் நாட்டின் திருமணச் சட்டத்தின்படி பெண்களுக்கான மண வயது 13, ஆண்களுக்கு 15. ஆயினும், தந்தையின் அனுமதியோடு இதற்கும் குறைந்த வயதில் மண உறவை ஏற்படுத்தலாம்.

 ஆப்பிரிக்கக் கண்டத்தில், சட்டத்தின் கட்டுப்பாடு இல்லாத 10 நாடுகளில், 8 நாடுகள் மோசமான நிலையில் இருக்கின்றன என்கிறது ‘குழந்தைகளைக் காப்போம்’ அறிக்கை. இவற்றில்  மைய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் பெண் குழந்தைகள் நிலைமை மிக மோசம். இப்படிப்பட்ட நாடுகளில் ஒவ்வொரு 30 நொடிக்கும் ஒரு பெண் குழந்தைக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

 நான்கு ஆண்டுகளுக்கு முன் உலகில் 57 நாடுகளில் சட்டத்தின் ஆட்சி இல்லாத நிலைமை இருந்தது. அப்படிப்பட்ட நாடுகளின்  எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துவிட்டது என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு அமைப்பு (ஓஇசிடீ) தனது 2022ம் ஆண்டறிக்கையில் தெரிவிக்கிறது. இவ்வாறு அதிகரித்ததால் 17 கோடி பெண் குழந்தைகளுக்குப் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. கட்டாயத் திருமண வீதமும் அதிகரித்திருக்கிறது. இந்த நாடுகளின் பெண்களில் 4 பேருக்கு ஒருவர், 18 வயதுக்கு முன்பே தாயாகிவிடுகிறார்.

 பொந்துகளில் மணமாலை

 அரசுக் கட்டுப்பாடு இருக்கிற பல நாடுகளில் திருமணச் சட்டங்களில் விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்தப் பொந்துகளில் நுழைந்து, குழந்தைகளுக்கு, ஆகப் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கு, மணமாலை சூட்டப்படுகிறது. 

 ஆப்பிரிக்காவுக்கு அப்பால், இந்தியாவைப் போலவே பங்களாதேஷ் உள்ளிட்ட சில தெற்காசிய நாடுகளிலும், யேமன் உள்ளிட்ட மையக் கிழக்கு நாடுகளிலும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. தெற்காசிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தை மணமகள்கள் இருக்கிறார்கள். சுமார் 29 கோடிப் பேருக்கு, 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. உலகில், அதிகமான எண்ணிக்கையில்  18 வயதுக்குக் குறைந்த பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்படுகிற நாடுகளில் பாகிஸ்தான் 6வது இடத்தில் இருக்கிறது என ‘ஐக்கிய நாடுகள் – பெண்கள்’ அமைப்பு தெரிவிக்கிறது. இலங்கையில் 10 சதவீதப் பெண் குழந்தைகள் 18 வயதைத் தொடுவதற்கு முன் மணமகன் கையைப் பிடிக்கிறார்கள்.

 சீனாவில், சட்ட நடவடிக்கைகள், கல்வி, பெரியவர்களுக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைத் திருமணம் வெகுவாகக் குறைந்துள்ளது. 20–24 வயதுப் பெண்களில் 15 வயதுக்குக் கீழ் திருமணமானவர்கள் 10 லட்சம் (கிட்டத்தட்ட 0 சதவீதம்). இதே வயதுப் பிரிவுப் பெண்களில்  18 வயதுக்குக் கீழ் மணம் முடிக்கப்பட்டவர்கள் 3 கோடியே 67 லட்சம் (3 சதவீதம்). இதை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றன.

 கியூபாவின் பெண்களில் 29 சதவீதம் பேர் 18 வயதுக்குள்ளாகவும், 5 சதவீதம் பேர் 15 வயதுக்குள்ளாகவும் திருமணம் முடிந்தவர்களாக இருக்கிறார்கள். 2021ல் கியூப அரசு தாக்கல் செய்த அறிக்கையில், 18 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்குத் திருமணம் நடந்த நிகழ்வுகள் 918 என தெரிவிக்கப்பட்டிருககிறது. “மக்களிடையே இன்னமும் நீடிக்கிற ஆணாதிக்கக் கலாச்சார நடைமுறைகளை மாற்றுவதற்கும், விதிவிலக்கே இல்லாமல் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்வதைத் தடுப்பதற்குமான சட்டப்பூர்வ நடவடிக்கைகளும், பண்பாட்டுத் தள அணுகுமுறைகளும் மிகவும் தேவைப்படுகின்றன,” என்று உயர்மட்ட அரசியல் அமைப்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

 அமெரிக்காவில் 2000–2018 ஆண்டுகளுக்கிடையே 18 வயதை அடையாத சுமார் 3 லட்சம் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாகவே திருமணம் நடந்திருக்கிறது. 50 மாநிலங்களாக உள்ள இந்த நாட்டின் 13 மாநிலங்களில்தான் 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மைய அரசின் சட்டத்திலேயே கூட இதை அனுமதிக்கும் பிரிவுகள் இருக்கின்றன.

 போர்களும் மோதல்களும்

 போர்களாலும் கலவரங்களாலும்  பாதிக்கப்படுகிற நாடுகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதியும், குடும்ப இயலாமையின் காரணமாகவும் அவர்களுக்குத் திருமணம் முடித்து அனுப்பிவைக்கிற வழக்கம் முன்னுக்கு வந்துவிடுகிறது. வறுமை, குழந்தைகளின் உடல்நலம் குறித்த அறிவின்மை, குறிப்பாகப் பெண் குழந்தைகளின் உடல் சார்ந்த வளர்ச்சிகள் பற்றிய புரிதலின்மை, கல்வி உரிமையைப் பெறுவதற்குக்கூட கையைவிட்டுப் பெரும் தொகையைச் செலவிட்டாக வேண்டிய நிலைமை ஆகிய பின்னணிகள் குழந்தைத் திருமணத்திற்கான காரணங்களாகத் தொடர்கின்றன. பல சமூகங்களில் நிலவுகிற பழைய நம்பிக்கைகளும் குழந்தைப் பருவத்தை மறுக்கும் திருமண உறவுகளுக்கு இட்டுச்செல்கின்றன. “எங்கள் குடும்பங்களில் சின்ன  வயதிலேயே கல்யாணத்தை முடித்துவிடுவோம்,” என்று பெருமையோடும், இப்போது நாட்டின் சட்டப்படி அது முடியவில்லையே என்ற பொருமலோடும் பேசுகிறவர்களைப் பார்க்க முடியும்.

 ஆளுநர் அருளுரை

 அரசமைப்பு சாசனத்தையும் அதன் சட்டங்களையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி. ஆனால் அவரே, சென்னை கிண்டியில் சென்ற ஆண்டு நடந்த பீகார் மாநில மாணவர்களுடனான உரையாடல் நிகழ்வில், “நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தைத் திருமணம். அப்போது எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை எனக்கு அவர் அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்கபலமாக இருந்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்,” என்று பேசினார்.

 தனக்குக் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடைபெற்றதை விமர்சனப்பூர்வமாகச் சொல்லி இன்று அப்படியெல்லாம் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பேசியிருந்தால் வரவேற்கலாம். ஆனால் அவரோ, “குடும்பத்தினர் நம் பக்கம இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்,” என்று அதை நியாயப்படுத்தியது கண்டனத்திற்கு உள்ளானது.  குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்ததாகச் சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது வழக்கு பாய்ந்தது. அதே கடலூர் மாவட்டத்தில் இதே போல் குழந்தைத் திருமணம் செய்து வைத்ததற்காக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 2 வழக்குகள் மட்டுமே தீட்சிதர் குடும்பங்கள் தொடர்பானவை. ஆனால் ஆளுநர், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது ஏன் என்று கேட்டார், ஏதோ குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறி வைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் பிரச்சினையைத் திசைதிருப்பவும் முயன்றார். இதற்கும் தமிழகத்தில் பரவலாக எதிர்ப்புக் கிளம்பியது.

 வரலாற்றுத் தடம்

 உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்படிப் பேசுகிறபோது, பொதுச் சமூகத்தில் இதை ஆதரிக்கிறவர்கள் ஊக்கம் பெறுவார்கள். குழந்தைத் திருமணத்திற்குத் தடை விதிக்கும் சட்டம், நாட்டின் விடுதலைக்கு முன்பே, 1929ம் ஆண்டிலேயே கொண்டுவரப்பட்டுவிட்டது.  அப்போது கூட, மதத்தில் தலையிடுகிறது பிரிட்டிஷ் ஆட்சி என்று முகம் சுளித்த தலைவர்கள் இருந்தார்கள். டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகள் சட்டத்தை வரவேற்றார்கள். ராஜஸ்தானின் ராய் சாஹிப் ஹாபிலாஸ் சார்தா முன்மொழிந்த இந்தச் சட்டம், அப்போது சார்தா சட்டம் என்று சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டு, பேச்சு வழக்கில் சாரதா சட்டம் என்று பெயர் பெற்றது வரலாறு. பெண்களுக்கான திருமண வயது 14 என்றும், ஆண்களுக்கான வயது 18 என்றும் அந்தச் சட்டத்தில் இருந்தது, அதைக்கூட ஏற்க முடியாமல், “பெண்கள் பூப்படைவதற்கு முன் திருமணம் முடிக்க வேண்டும் என்று எங்கள் மதம் சொல்கிறது,” என்று அன்றைய சில தேசிய இயக்கத் தலைவர்களே வாதிட்டதும், அதையெல்லாம் மீறி சட்டம் நடைமுறைக்கு வந்ததும், விடுதலைக்குப் பிறகு 1978ல் பெண்ணின் திருமண வயது 18 என்றும் ஆணின் வயது 21 என்றும் உயர்த்தப்பட்டதும், பெரும்பாலான இந்திய மக்கள் அதை ஏற்றுக்கொண்டதும் அந்த வரலாற்றின் தொடர்ச்சி.

 அறியாப் பருவம், திருமணச் சடங்குகள் ஏற்படுத்துகிற ஒரு கவர்ச்சி, திருமண வாழ்வு பற்றிய கற்பனை, பரிசுப் பொருள்கள் மீதான ஆசை, மனைவி என்றாகிறபோது கிடைக்கிற வேறு சில மரியாதைகள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு பெண் குழந்தைகள் திருமணத்திற்கு உடன்படுகிறார்கள். “இப்போது திருமணம் வேண்டாம், படிக்கிறேன்,” என்று சொல்லக்கூடிய பல பெண் குழந்தைகள் மிரட்டலுக்கும் கெடுபிடிகளுக்கும் உட்படுத்தப்பட்டு கல்யாணச் சடங்கிற்கு இழுத்துவரப்படுகிறார்கள். திருமணத்தால் புகுத்தப்படும் வலுக்கட்டாய உடலுறவும், வீட்டு வேலைகளும் அவர்களின் உடல்நிலை சீர்குலைவதற்கு இட்டுச் செல்கிறது.

 குழந்தைப் பருவத்தில் திருமணமாகி வளர்கிற பெண்கள் தங்கள் உடல் மீதான தங்கள் உரிமையை இழக்கிறார்கள். அவமதிப்பு உள்ளிட்ட ஆயுட்காலத்திற்கும் தொடர்கிற துயரங்களை எதிர்கொள்கிறார்கள். அந்த வயதிலேயே அவர்களும் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றுக்கொள்கிறபோது மிச்சமிருக்கிற கனவுகளையும் தொலைக்கிறார்கள். இவர்களின் உடல்நலத்தை மீட்பதற்காகச் செய்கிற மருத்துவச் செலவுகள் குடும்பங்களுக்கும்  நாட்டிற்கும் பொருளாதாரச் சுமையாகின்றன. எதிர்காலத் தலைவர்களும் கலைஞர்களும் அறிவியலாளர்களும் துளிரிலேயே பட்டுப்போகிறார்கள். ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு!

 இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் பெண்ணையே குற்றவாளியாக்குகிறது சமூகம். வேறு சடங்குகளைச் செய்து துன்பங்களைத் துரத்திவிடலாம் என்று நம்புகிறது குடும்பம். துரத்தப்பட வேண்டியது தொற்று நோயாகத் தொடர்கிற குழந்தைத் திருமணமும், அதைப் போற்றுகிற கண்மூடிப் பழக்கங்களுமே அல்லவா?


[‘மகளிர் சிந்தனை’ டிசம்பர், 2024 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை]

Sunday, 1 December 2024

கண்படுமே பிறர் கண்படுமே என்று வெளியே வராதிருக்கலாமா?





வெளியே தொலைக் கட்டுப்பாட்டில் இயங்கும் நுழைவாயில் கதவு முதல், உள்ளே தானாகத் திறந்து மூடும் கழிப்பறைத் தொட்டி மூடி வரையில் நவீனங்களின் அத்தனை வரவுகளோடும் அந்தப் புது வீடு கட்டப்பட்டிருக்கிறது. வாசலுக்கு நேராகத் தெருவில் வெள்ளைப் பூசணி உடைந்து கிடக்கிறது. வெளியே பார்க்கிறவர்களின் கண்பட்டுவிடக் கூடாதாம். ஆனால் வண்டிகளை ஒடித்து வளைத்து ஓட்டுகிறவர்களும், கால்களைக் கூடுதலாக எட்டுவைத்து நடக்கிறவர்களும் வீட்டைத் திரும்பிப் பார்த்தபடிதான் கடக்கிறார்கள்.


ஆப்பிள் போல் முகமும், பலாச்சுளை கள் போல உதடு களும், கன்றுக்குட்டியினுடையது போன்று விழிகளுமாக இருக்கும் குழந்தையின் கன்னத்தில் வண்டுதான் உட்கார்ந்திருக்கிறதோ என ஒரு கரும் புள்ளி. வருகிறவர்கள் போகிறவர்களின் கண்பட்டுவிடக் கூடாதாம். கரும்புள்ளியே ஒரு கவர்ச்சியாக அமைய, மிக அதிக மானவர்கள் குழந்தையைக் கவனித்தபடி தான் கடக்கிறார்கள்.

புதிய வண்டிகளில் தொங்கவிடுவதற்காக எலுமிச்சைகளும் குட்டித் தேங்காய்களும் மஞ்சள்களும் மிளகாய்களும் கிளிஞ்சல்களும் கறுப்பு, மஞ்சள் கயிறுகளில் கட்டிக் கடைகளில் தொங்குகின்றன. சாலையோர தள்ளுவண்டி இட்லிக் கடையில் “கண்ணைப் பார் சிரி” அட்டை மாட்டப்பட்டிருக்கிறது. நகைக்கடையில் கழுதைப் படம் வைக்கப்பட்டிருக்கிறது. வாசல் கதவுக்கு மேலே எலுமிச்சையோ, வேப்பிலையோ, மிளகாயோ தொங்குகிற வீடுகளைப் பார்க்க முடிகிறது. “கண்ணேறு கழிப்பதில்” இந்தப் பொருள்கள் ஆற்றல் மிக்கவை என்று நம்பப்படுகிறது.

மதங்களின் சடங்காக

அழகான ஒப்பனையுடன் வெளியே புறப்படுகிறவர்களுக்கு யாருடைய கண் ணும் பட்டுவிடக் கூடாதென்று “திருஷ்டி” சுற்றிப்போடுவதை இந்து மதம் சார்ந்த பல குடும்பங்களில் பார்க்கலாம். வரன் பார்க்க, தேர்வு எழுத, புதிய வேலையில் சேர என்று கிளம்புகிறபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கையில் உப்பெடுத்துச் சுற்றி அதில் மூன்று முறை தூ தூ தூ என்று துப்பச் சொல்லி அனுப்பி வைப்பார்கள்.

கிறிஸ்துவ மக்களில் பலர் சிலுவையில் அறையப்பட்ட இயேசு உருவமோ, சிலுவை மட்டுமோ தொங்குகிற சங்கிலியை அணிந்திருப்பார்கள். கர்த்தர் மீதான பக்திக்காக அல்லாமல், சூனியக் கண் பார்வை பற்றிய பயத்திற்காகவும் அவர்கள் அந்தச் சங்கிலிகளை அணிகிறார்கள். பைபிள் பழைய ஏற்பாட்டில் கண்ணேறு விலக்கலுக்கான பிரார்த்தனைகள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கையில் வெள்ளைக் கயிறைப் பிடித்துக்கொண்டு பிரார்த்தனை செய்கிற நடைமுறையும் உண்டு. “கர்த்தராகிய எம் பிதாவே! பொல்லாக் கண்களால் உண்டாகும் தீங்குகளிலிருந்து உம்முடைய படைப்பை விடுவிப்பீராக, உம்முடைய ஊழியரைக் காப்பீ ராக,” என விண்ணப்பம் விடுப்பார்கள்.

இஸ்லாமிய மக்களிடையே தீவினையைத் தடுக்க வீட்டில் குரான் ஓதுகிற பழக்கம் இருக்கிறது. யாராவது பாராட்டினால் “இது அல்லா வழங்கியது, உங்கள் பாராட்டும் அல்லாவையே சேர வேண்டியது,” என்ற பொருளில் “மாஷா அல்லா” என்று கூறுவார்கள். பாராட்டின் பின்னணியில் பொறாமை இருக்குமானால் அதன் தீய விளைவைத் தடுத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இது பின்பற்றப்படுகிறது. கண் வைத்தவர் இன்னார்தான் என்று கருதப்படுகிறவர்களைத் தண்ணீரில் கைகழுவச் செய்து, அந்தத் தண்ணீரை பாதிக்கப்பட்டவர் மீது ஊற்றினால் கேடு அகன்றுவிடும் என்ற நம்பிக்கை சில நாடுகளில் இருக்கிறது. “மார்க்கத்தில் இப்படிப்பட்ட போதனைகள் இல்லை. ஆனால், பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்தைத் தழுவியவர்களிடையே முந்தைய பழக்கங்கள் தொடர்கின்றன. மார்க்கம் சார்ந்ததாக இல்லாமல், வாழ்கிற வட்டாரத்தின் பண்பாடு சார்ந்ததாகவும் இத்தகைய சில நடைமுறைகள் இருக்கின்றன,” என்கிறார் இஸ்லாமிய ஆய்வாளரான ஒரு நண்பர்.

பௌத்தத்தில் கண்ணேறு நம்பிக்கைகள் இல்லை. ஆனால் சில வட்டா ரங்களில், தீய சக்திகளைத் தடுப்பதற்காக வீடுகளில் உப்பு நீர் தெளிக்கிறார்கள். அறைகளில் உப்பு நீர்க் கிண்ணங்களை வைக்கிறார்கள். கரண முத்திரை, சில மந்திரச் சொற்கள் உள்ளிட்ட பழக்கங்களும் இருக்கின்றன.

கண்ணேறு விளைவுகளைத் தடுப்பதற்கென்றே கண் போன்ற வில்லைகளைப் பொருத்திக்கொள்வது எகிப்தில் நெடுங்காலமாக இருந்து வருகிறது. அந்த வட்டாரம் சார்ந்த பிற சமூகங்களிலும் இந்தக் கண் வில்லைகள் புழக்கத்தில் இருக்கின்றன.

எப்படி வந்தது?

அழுக்காறு கொள்கிற குணம் பொதுவாகப் பலருக்கும் இருக்கிறது. தனக்குக் கிடைக்காத ஒன்று (சொத்து, பதவி…) கிடைக்கப் பெற்ற மற்றொருவர் மீதும் இயல்பாக ஒரு பொறாமை உணர்வு ஏற்படுகிறது. இதே போல, ஒரு பெரிய ஆதா யம் தனக்குக் கிடைக்கிறபோது, மற்றவர்களுக்கும் தன்னைப் பார்த்துப் பொறாமை ஏற்படத்தானே செய்யும் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஏதோவொரு காலத்தில், இப்படி ஒரு வர் மற்றொருவரின் செல்வத்தைப் பார்த்துப் பொறாமையோடு, “இது உனக்கு நிலைக்காது,” என்று சாபம் கொடுத்தி ருக்கக் கூடும். செல்வத்தை அடைந்தவரின் பொறுப்பின்மை, தவறான செயல், கூட இருந்தவர்களின் குழிபறிப்பு போன்ற கார ணங்களால் அவர் அதை இழந்திருக்கக் கூடும். ஆனால், “அந்த ஆளுடைய கெட்ட பார்வைதான் இதற்குக் காரணம்,” என்று உடனிருந்தவர்கள் சொல்லியிருப்பார்கள்.

பொறாமைப் பார்வைக்கு சூனியக் கண் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். அதை முறியடிப்பதற்கான மந்திரங்களும் சடங்கு களும் உருவாக்கப்பட்டிருக்கும். பூசை செய்யப்பட்ட தகடு, மந்திரிக்கப்பட்ட தாயத்து இன்ன பிற பொருள்கள் காப்புகளாக வழங்கப்பட்டன. அதை அணிந்துகொண்டவர் தனது உழைப்பால், அல்லது பிற வாய்ப்புகளால், இழந்த செல்வத்தை மீட்டிருப்பார். தாயத்து மகிமை மீதான நம்பிக்கை மேலும் கெட்டிப்பட்டிருக்கும். வருமுன் காப்பதற்காக முன்கூட்டியே காப்புக் கட்டிவிட்டால் கண்ணேறு பின்னேறிவிடும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டி ருக்கும்.

பொறாமைக்காரர்களின் கண் பட்டு விடுமோ என்ற அச்சத்தையும் அதை முன்கூட்டியே முறியடிக்க வேண்டும் என்ற ஆசையையும் பயன்படுத்திக் காப்பு வகையறா வணிகம் அமோகமாக வளர்ந்தி ருக்கிறது. வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் அறிவியலும் தொழில்நுட்பங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்படுகிற இன்றைய ஏஐ நூற்றாண்டிலேயே காப்புப் பொருள்களை எங்கும் பார்க்க முடிகிறது. முந்தைய நூற்றாண்டுகளில் எந்த அள வுக்கு இருந்திருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளலாம்.

பாரெங்கும் பரவிய பழக்கம்

கண்ணேறு கழிப்பு உலகம் முழுவ துமே இந்தக் காலத்திலும் வலுவாக ஊன்றி யிருக்கிறது. இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத சமூகங்களைத் தவிர, மற்ற எல்லாச் சமயங்களிலும், பல்வேறு நாடு களின் கலாச்சாரங்களிலும் தீக்கண் அச்சமும், தடுப்பு மந்திரங்களும் ஊறி வந்தி ருக்கின்றன. தொன்மைக் கால இந்திய நாடுகள், பண்டைய கிரேக்கம், ரோமா னியப் பேரரசு, மையக் கிழக்கு வட்டாரங்கள், மையக் கடல் சார் பகுதிகள், தெற்காசியா என எல்லாச் சமூகங்களிலும் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், பசு போன்ற கால்நடைகளுக்கும் கண்ணேறு விழுந்தால் கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கை பல நாடுகளில் இருக்கிறது.

அந்தக் கால கிரீஸ் நாட்டில் கொடுங்கண் பார்வையால் உடல் நலமும் மன நலமும் சீர்கெடும் என்று நம்பினார்கள். குறிப்பாக நீல விழிகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்துமென நம்பினார்கள். அதைச் செயலிழக்க வைப்பதற்கு, நீலத்திற்கு நீலமே கவசமென நீல வண்ண மணிகளை உடலில் கட்டிக் கொண்டார்களாம். காலப்போக்கில் அவை நகைகளாகவும் உருவாகின.

ரோமானிய சமூகத்தில், மற்றவர்களின் வயிற்றெரிச்சலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க, மந்திரிக்கப்பட்ட பட்டைகளைக் கையில் கட்டிக்கொண்டார்களாம். மையக் கிழக்கு நாடுகளில், இஸ்லாமிய மக்களிடை யேயும் யூத மக்களிடையேயும் “நஜார்” எனப்படும் பொறாமைக் கண் நம்பிக்கை இருக்கிறது. அதை வெல்வதற்கு, பச்சை, நீல மணிகளைக் கட்டிக்கொள்வார்கள். உலோகத்தில் கண் போலச் செய்து அதில் இந்த மணிகளைப் பதித்துக்கொள்வார்கள்.

பல நாடுகளில் கெட்ட கண்ணின் வீரியத்தை அடக்குவதற்காகத் தரையிலோ எதிரிலோ மூன்றுமுறை எச்சில் துப்புகிற பழக்கம் இருக்கிறது. ஆண்கள் துப்பினால் ஆண்கள் மீதான கெடுபார்வையும், பெண்கள் துப்பினால் பெண்கள் மீதான கெடுபார்வையும் ஓடிவிடும் என்று துப்புகி றார்கள்.

பாசிட்டிவ் நெகட்டிவ்

“நம்முடைய பார்வைக்கு பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி ரெண்டும் உண்டு. ஒருத்தர் பொறாமையோட பார்க்கி றப்ப அவரோட நெகட்டிவ் எனர்ஜி ஒரு வைப்ரேஷனாகப் பரவும். அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதை விஞ்ஞானிகளே கன்ஃபார்ம் பண்ணியிருக்காங்க தெரியுமா,” என்று உறவினர்களின் கல கலப்பான ஒரு கூடுகையில் கூறிக்கொண்டிருந்தார் ஒரு விருந்தினர். “புரஃபசர், எந்த நாட்டு விஞ்ஞானிகள் எப்ப நடத்துன ஆராய்ச்சியிலே இதை உறுதிப்படுத்தி னாங்க, கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் சொல்லுங்களேன்,” என்று கேட்டேன். திருதிருவென விழித்தவரை மற்றவர்கள் பேச்சை மாற்றிக் காப்பாற்றினார்கள்.

ஒரு நண்பரின் புதுமனை புகுவிழாவுக்குக் குழுவாகச் சென்றிருந்தோம். இப்படியான நம்பிக்கைகள் மிகுந்திருந்த குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னை அவற்றிலிருந்து விடுவித்துக்கொண்டவர் அவர். பூசணித் தடங்கல் இல்லாமல் நடந்து உள்ளே சென்றவர்களை வரவேற்றவர் ஒவ்வொரு அறையாக இட்டுச் சென்று காட்டினார். வீடு சுற்றல் முடிந்ததும் மைய அறையில் அமர்ந்து காஃபியைச் சுவைத்தபடி சுற்றிப் பார்த்தோம். சுவரில் பெரிய மீசையும், உருண்ட கண்களும், தலையில் கொம்புகளும் கொண்ட கருஞ்சிவப்புச் சுடுமண் சிற்ப முகம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. நாங்கள் அதைக் கவனிப்பதைக் கவனித்த நண்பர், “பில்டிங் கான்ட்ராக்டர் இதை அவராவே வாங்கிட்டு வந்து வெளியே முன் சுவர்ல ஃபிக்ஸ் பண்ணப் போனார். அதெல்லாம் வேணாம்னுட்டேன். ஆனா இந்த ஆர்ட் ஒர்க் அழகா இருக்கே, அதனால இங்கே மாட்டிட்டேன்,” என்று கூறினார். கடவுள் சிற்பங்களின் கலை வேலைப்பாடுகளை ரசிக்கிறவர்களான எங்களுக்கு அவருடைய ரசனை புரிந்தது.

ஆழமான நம்பிக்கை இல்லாவிட்டாலும், எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கையாக இதைச் செய்கிறவர்களும் உண்டு. உண்மையாகவே கண்களுக்குக் கெட்ட சக்தி இருந்து அதனால் பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாதல்லவா!

“மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ!
பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச்
செய்துண்டேன் உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்;
கறிவண்ணம் இங்கு கண்டேன்!”

–புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் வரிகளை விடவா ஒரு காப்பு வேண்டும்?

முதலில் குறிப்பிட்ட சில நாடுகளின் பழங்காலப் பழக்கங்கள் பற்றித் தெரிவிக்கும் ‘கண்ணேறு மூலங்கள்: ஒரு தொன்மை நம்பிக்கையின் மீது ஒரு பார்வை’ (தி ஆரிஜின்ஸ் ஆஃப் தி ஈவில் ஐ: எ கிளான்ஸ் இன்ட்டூ அன் ஏன்சியன்ட் பிலீஃப்) என்ற ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குறுங்கட்டுரை யைப் படித்தபோது இந்தச் சிந்தனைகள் விரிந்தன. “இன்றைக்குக் கைவளைகளாக, கழுத்து ஆரங்களாக, சாவிச் சங்கிலிகளாக என ஒரு நாகரிகப் பொருளாகவும் கண்ணேறுக் காப்பு காணப்படுகிறது – ஆனால் இதன் வேர்கள் உலக அள வில் கலாச்சார மரபுகளோடு பின்னியிருக்கின்றன. நீங்கள் இதன் சக்தியை நம்பினாலும் சரி, இதன் அழகை ரசித்தாலும் சரி, தாயத்துகள் கண்ணேறு அதிர்வுகளை முறியடிப்பதற்கென்று நிலைத்திருக்கத்தான் போகின்றன,” என்று முடிகிறது அந்தக் கட்டுரை.

பொருளாதார ஏற்றத்தாழ்வு கடுமையாக இருக்கும் சமு தாயங்களில் கண்ணேறு அச்சங்களும், தடுப்பு நடவடிக்கைகளும் மிகுதியாக இருக்கின்றன என்று (உண்மையாகவே நடந்த) ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்கப் பல்கலைக் கழக ஆய்வாளர் போரிஸ் கெர்ஷ்மான் அந்த ஆராய்ச்சி யை நடத்தி, ‘கண்ணேறு நம்பிக்கையின் பொருளாதார மூலங்கள்’ என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

உடைமைச் சமுதாயம் நிலைத்திருக்கிற வரையில், அது உருவாக்கிய அச்சங்களும் அழுக்காறுகளும் தொடர்கிற வரையில், தாயத்துகளும் மந்திரத் தகடுகளும் கறுப்புக் கயிறுகளும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். இந்த நம்பிக்கைகளிலிருந்து விடுவித்துக்கொண்டதால் இவற்றின் பிடிகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள் மாற்றுப் பாதைகளைக் காட்டுவதும் தொடர்ந்துகொண்டிருக்கும்.

[‘தீக்கதிர்’ நாளேட்டின் (ஞாயிறு, டிசம்பர் 1) ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை]