“நீங்கள் எங்களைப் பாராட்ட வேண்டி யதில்லை; எங்களைத் திட்டியாவது பேசியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அல்லவா? அது போதும் எங்களுக்கு!” ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் இப்படிச் சொன்னார்.தங்களைப் பற்றி மற்றவர்கள் ஆக் கப்பூர்வமாக இல்லாவிட்டாலும் எதிர் மறையாகவாவது பேசியாக வேண்டும் என்ற சூழலை ஏற்படுத்துவது பாசிசவாதிகளுடைய ஒரு உத்தி. அதுவே ஒரு வகையான பிரச் சாரமாகிவிடும், அதன் மூலம் தங்களைப் பற் றியே மக்கள் நினைத்துக்கொண்டிருக்கிற கட்டாயம் ஏற்படும் என்கிற “மூளைச்சாயம்” ஏற்றுகிற உத்தி.
அது அவர்களின் உரிமை
திருவாளர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி ஆர்எஸ்எஸ் பரிவாரம் கிளப்பிவிடுகிற தூசு தும்பட்டைகள் இப்படியொரு விளம்பரத்துக்கு உதவுவ தாக இவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். தெருவுக்குள் திருடன் நுழைவதை அறிந்த ஒருவர் எல் லோரையும் எச்சரிப்பதற்காக “திருடன் திருடன்” என்று உரக்கக் குரல் எழுப்புவதை அந்தத் திருடன் தனக்கான விளம்பரம் என்று நினைத்துக்கொண்டால் அப்படி நினைப்பதற்கு அவனுக்கு உள்ள உரிமையை யார் தடுக்க முடியும்?அப்படி எச்சரிக்கிற குரல்தான் பிரதமர் நாற்காலிக்கான ஆர்எஸ்எஸ் வேட்பாளர் நரேந்திர மோடியும், அவரது பாஜக-வும் சிறுபான்மை மக்களின் நலன்களுக்கு எதி ரானவர்கள் என்ற உண்மையை ஒலிப்பது. அவர் 13 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தில், முஸ்லிம் களும், கிறிஸ்துவர்களும் அவரை மனமு வந்து ஆதரிக்கிறார்கள் என்ற பிரச்சாரத்தின் பொய்மைகளை மதவெறிக்கு எதிரானவர்கள் எடுத்துரைத்து வருகிறார்கள்.
மோடி முத லமைச்சர் பதவியில் அமர்ந்த அடுத்த ஆண்டி லேயே அரங்கேற்றப்பட்ட படுகொலைகள் மூலமாக முஸ்லிம் மக்களும், பரவலாக நடத்தப் பட்ட வன்முறைத் தாக்குதல்கள் மூலமாக கிறிஸ்துவ மக்களும் இன்று வரையில் எதிர்க்குரல் எழுப்ப முடியாதவர்களாக அடக்கி வைக்கப்பட்டிருப்பதன் மீது வெளிச்சம் பாய்ச்சி வருகிறார்கள். படுகொலைகளைத் தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் தங்களது சொந்த கிராமங்களுக்குத் திரும்பிச் செல்ல அஞ்சுவது, முஸ்லிம் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்குகிற கல்வி உதவி நிதியை மோடி அரசு முடக்கிவைத்திருப்பது என பல்வேறு சான்றுகளையும் முன்வைத்து வருகிறார்கள்.
சிறுபான்மை மக்கள் மிகுதியாக வாழும் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் கூறி வருகிறார்கள். பல முஸ்லிம் இளைஞர்கள் வேலை தேடிப் போகிறபோது தங்களது உண் மைப் பெயர்களை மறைத்து முன்னா, குட்டு என்பன போன்ற பொதுவான பெயர்களில் பதிவு செய்துகொள்ள வேண்டிய நிலைமை இருப்பதையும் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.இப்படியாக, நாட்டின் சிறுபான்மை மக்கள் ஒன்று இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது குடிமக்களுக்கான உரிமையைக் கூட கோராதவர்களாக ஒடுங்கியிருக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை நடைமுறைப்படுத்திக் காட்டிக்கொண்டிருப்பது மோடி அரசு.
ஆகவேதான், இவர்கள் ஒரேயடியாகப் பட்டாசு வெடிக்கிற குஜராத் வளர்ச்சிப் புள்ளி விவரங்களை விட மேம்பட்ட முறையில் செயல்பட்டுள்ள, பாஜக-வே ஆட்சி செய்கிற மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்களை விட்டுவிட்டு, மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக தலைவர்கள் முடிவெடுக்க ஆணையிட்டது ஆர்எஸ்எஸ் பீடம்.
இன்னொரு உண்மை
ஆனால் இன்னொரு உண்மையையும் உரக்கச் சொல்லியாக வேண்டும்: சிறுபான்மை மக்களுக்கு இவர்கள் எந்த அளவுக்கு எதிரிகளோ அதில் கொஞ்சமும் குறையாத அளவுக்குப் பெரும்பான்மை மக்களுக்கும் எதிரிகள்தான்.பொதுவாக பாஜக பற்றி விமர்சிக்கிறபோது, “தேர்தல் ஆதாயத்துக்காக இந்து மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்துகிறார்கள்,” என்று கூறப்படுவதுண்டு. இது பாஜக பற்றிய ஒரு மேலோட்டமான புரிதலே. ஏனென்றால், தேர்தல் ஆதாயத்துக்காக மதஉணர்வுகளைப் பயன்படுத்தத் தயங் காத கட்சி காங்கிரஸ். அதே போல் வேறுபல கட்சிகளும் இடத்திற்கும் நேரத் திற்கும் ஏற்ப மதவாதத்தையும் சாதிய வாதத்தையும் பயன்படுத்திக்கொள்ளக் கூச்சப்படுவதில்லை.
ஆனால் பாஜக அப்படியல்ல. அரசியல் ஆதாயத்துக்காக மதத்தைப் பயன்படுத்துகிற கட்சியல்ல அது... மாறாக மத ஆதிக்கத்துக்காக அரசியலைப் பயன்படுத்துகிற கட்சி அது! உடனடி அரசியல் ஆதாயத்துக்காக மதச்சார் பின்மையையும் பயன்படுத்துகிற கட்சி அது! அந்த வகையில் அது ஒரு மாறுபட்ட கட்சி தான்!அடிப்படையில் ஒரு இந்து நாடாக இந்தியாவை அறிவிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் லட்சியம். அந்த ஒற்றை மத ஆதிக்கத்தை நோக்கி நகர்வதற்கான ஒரு அரசியல் ஏற்பாடுதான் பாஜக.
அவர்களிடம் பேசிப்பாருங்கள், “இந்து என்று நாங்கள் மத அடிப்படையில் சொல்லவில்லை. அமெரிக்க மக்களை எப்படி அமெரிக்கர்கள் என்று சொல்கிறோமோ அதே போல இந்தியக் குடிமக்கள் அனைவருமே இந்துக்கள் என்றஅர்த்தத்தில்தான் சொல்கிறோம்” என்றுவிளக்கம் சொல்வார்கள். இந்தியக் குடிமக்கள்தான் தங்களை இந்தியர்கள் என்றுபெருமிதத்தோடு சொல்லிக்கொள்கிறார்களே, பிறகு ஏன் இந்து என்று அடையாளப் படுத்துகிறீர்கள் என்று கேட்டால், “நீங்க ளெல்லாம் போலி மதச்சார்பின்மைவாதிகள்” என்று சபிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
பசுக்களின் பெயரால்...
பாஜக தனது கொள்கைகளில் ஒன் றாக பசுவதைத் தடைச்சட்டம் பற்றிச் சொல்கிறது. பசுக்கள் இந்துக்களின் புனித வழி பாட்டுச் சின்னம் என்பார்கள். இப்படிச் சொல்வதன் மூலம் மாட்டு இறைச்சித் தொழிலில் ஈடுபடும் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான உணர்வுகளை விசிறிவிடுவார்கள். அதே வேளையில், மாட்டுக்கறி உண்கிற தலித் மக்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களின் உணவுப் பழக்கத்தையும் தாக்குகிறார்கள்.
அவர்களை எல்லாம் இந்துக்கள் என்றுதான் இவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். மாட்டுக் கறி உண்பது அதன் ஊட்டச்சத்து அடிப் படையில் மட்டுமல்ல, பொருளாதார அடிப் படையிலும் கட்டுப்படியாகிற ஒன்று. அதை நிறுத்திவிட்டால் அத்தனை பேருக்கும் காய்கறிகளும் மற்ற கறிகளும் வழங்க ஏதாவது திட்டம் வைத்திருக்கிறதா பாஜக? இந்து மக்களில் ஒரு பகுதியினரின் நம்பிக்கை யையும் உணவுப் பழக்கத்தையும் மற்றவர்கள் மீது திணிப்பது ஒரு பண்பாட்டு ஆதிக்கமே.பண்பாட்டு ஆதிக்கம் உணவோடு மட்டும் நிற்கவில்லை. பாஜக தனது அடிப் படை லட்சியங்களில் ஒன்றாக ‘பொது சமூகச் சட்டம்’ என்பதை அறிவித்திருக்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு நாட் டில் வாழ்கிற எல்லா மக்களுக்கும் ஒரேமாதிரியான, சீரான சமூகச் சட்டம் கொண்டுவருவது நியாயம்தானே என்று நினைக்கத் தோன்றும். இவர்கள் சொல்கிற பொது சமூகச் சட்டம் என்பதே மற்ற சமயங்களின் தனிப்பட்ட அடையாளங்களை மூர்க்கத் தனமாக அழிப்பதற்காகத்தான்.பொது சமூகச் சட்டம் என்பது மதங் களுக்கிடையேயானதாக மட்டும் இருக்க முடியாது. இந்து மதத்திற்கு உள்ளேயே கூட எண்ணற்ற சமூகப் பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு சமூகத்திற்கும் தனிப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, ஆடை அணிவதிலேயே கூட அந்த மாறுபாடுகளைப் பார்க்க முடியும். வேட்டி கட்டுவதிலேயே கூட தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கும் வட மாநில இந்துக்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. இதில் எதைப் பொதுவாக்கச் சொல்வார்கள்? வட மாநில ஆண்கள் தட்டைச்சுற்றாக வேட்டிகட்ட வேண்டும் என்பார்களா? அல்லது தமிழ்நாட்டு ஆண்கள் பஞ்சகச்சம் கட்ட வேண்டும் என்பார்களா?பெண்களின் சேலை மாராப்பில் கூட வேறுபாடு இருக்கிறது. தென் மாநிலங்களில் இடது பக்கமாக மாராப்பு அமைகிறது என்றால் வட மாநிலங்களில் வலது பக்க மாராப்புதான். இதில் எதைப் பொதுவாக்கச் சொல்வார்கள்?நரேந்திர மோடி ஒரு கூட்டத்தில், ஒரு சமூகம் பெண்களின் முகங்களை மறைத்து புர்கா போட்டுவிடுகிறது என்று மறைமுகமாக முஸ்லிம் மக்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.
ஆனால், வட மாநிலங்களில் இந்து சமயத்தைச் சேர்ந்த பெருவாரியான சமூகங்களில் பெண்கள் முகங்களை சேலை முந்தானையால் மறைத்துக்கொண்டு நடமாடுகிற பழக்கம் இருக்கிறதே. பொது சமூகச் சட்டம் என்ற பெயரில் அந்தப் பெண்களின் முக்காட்டை அகற்றச் சொல்லப்போகிறார்களா அல்லது இந்தப் பெண்களின் முகங்களை மறைக்கச் சொல்லப்போகிறார்களா?
சமூகநீதி எதிரிகள்
மூகநீதி எதிரிகள்சாதிப் பாகுபாட்டைப் படிப்படியாக ஒழித்துக்கட்டுகிற நோக்கத்தோடு, நெடிய போராட்டங்களின் பலனாகக் கொண்டு வரப்பட்ட சமூக நீதி ஏற்பாடுதான் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இட ஒதுக்கீடு கொள்கை. பெரும்பான்மை மதமாகிய இந்து சமயத்திலேயே பெரும்பான்மையினராக உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் சமுதாய ஏணியில் ஓரிரு படிகளாவது மேலே ஏறுவதற்கு இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.
ஆனால், வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங் கிடுவதற்கான மண்டல ஆணையத்தின் பரிந்துரையைச் செயல்படுத்த ஆணை யிடப்பட்டபோது, அதை எதிர்த்து நாடு முழுவதும் கலவரத் தீயை மூட்டியவர்கள் இவர்கள். தகுதிக்கே வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனக்கூறி, இந்த மக்கள் தகுதி பெறுவதற்கான இட ஒதுக்கீடு வாசல்களை அடைக்கத் துடிக்கிறவர்கள் இவர்கள்.எப்படிப்பட்ட தகுதிகளோடு யார் புறப் பட்டாலும் அவர்களுக்கான வழிகளை அடைப்பவை, மத்திய அரசு மக்கள் மீது திணிக்கிற பொருளாதாரக் கொள்கைகள்.
உள்நாட்டுத் தொழிலாளர் நலன்களையும் உரிமைகளையும் தட்டிப்பறிக்கிற சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சிறு- நடுத்தரத் தொழில்களை அழித்து உள் நாட்டு-வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் கொழுப்பதற்கான திட்டங்கள், சில்லரை, வர்த்தகர்களைத் தெருவில் நிறுத்தும் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதிகள், உழைப்பாளி மக்களின் வியர்வைத் துளிகளால் திரண்ட ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தை சூதாட்டப்பணமாக மாற்றுகிற ஏற்பாடுகள் உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸ் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து வந் திருப்பவர்கள் இவர்கள். தங்களது ஆறாண்டு ஆட்சிக்காலத்திலேயே மக்களுக்குப் பகையான இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் வீர்யத்தோடு செயல்பட்டுக் காட்டியவர்கள் இவர்கள்.
இக்கொள்கைகளால் மிகச் சிலரான பெரும் முதலாளிகள், மேல் நிலை நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே ஆதாயங்களை அனுபவிக் கிறார்கள். நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கை நிலையோ வேலையின்மை, கடன் பளு, தொழில் அழிவு, தொடர முடியாத கல்வி என்று சின்னாபின்னமாகிறது. அந்தப் பெரும்பகுதி மக்களில் பெரும்பாலோர் இந்துக்களே அல்லவா?ஆகவே, உண்மையான மதச்சார்பின்மை என்று போலியாகச் சொல்லிக்கொண்டு வருகிற இந்தக் கூட்டம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரிகளே. அந்தப் பெரும் பான்மை மக்கள் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக மதவெறி உணர்வுகளைக் கிளறிவிடவும் தயங்காத இந்த சங் அடியார் கூட்டம் தனிமைப்பட்டாக வேண்டும். அது நடக்க வேண்டுமானால் இவர்களைப் பற்றிய உண்மைகள் அம்பலப்பட்டாக வேண்டும்.
(‘தீக்கதிர்’ 6-11-2013 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)
No comments:
Post a Comment