Friday, 10 January 2025

அவன் பொண்டாட்டி முகத்தையே, அவள் புருசன் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார்களா?




“ஏம்பா, நான் என்ன வீட்டுல பொண்டாட்டி மொகத்தையேவா உத்துப் பார்த்துக்கிட்டிருப்பேன்? புள்ளைகளோட கொஞ்சி விளையாட மாட்டேனா? எல்லாருமா வெளிய எங்கேயாச்சும் போயிட்டு வர மாட்டோமா? ஃபிரெண்ட்ஸ் கூட எதையாச்சும் டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்க மாட்டேனா?”


“அதானே, நான் என்ன வீட்டுல புருசன் மொகத்தையேவா உத்துப் பார்த்துக்கிட்டிருப்பேன்? பசங்களுக்குக் கதை சொல்லி, அவங்க சொல்ற கதையெல்லாம் கேட்க மாட்டேனா? ஏதாச்சும் புக் படிக்க மாட்டேனா? நானும் எழுதலாம்னு உட்கார மாட்டேனா? மீட்டிங் எதுனா போயி புதுசா தெரிஞ்சுக்கிட மாட்டேனா?”

“பொண்டாட்டி மொகத்தைப் பார்க்கக்கூடாது, புள்ளைகளோட கொஞ்சி விளையாடக்கூடாது, எல்லாருமா வெளிய எங்கேயும் போகக்கூடாது, ஃபிரெண்ட்ஸ் கூட எதையும் டிஸ்கஸ் பண்ணி முடிவெடுக்ககூடாதுன்னுதானே இப்படிச் சொல்ற?”

“புருசன் மொகத்தைப் பார்க்கூடாது, பசங்களுக்குக் கதை சொல்லி, அவங்க சொல்ற கதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கக் கூடாது, எந்த புக்கும் படிக்கக் கூடாது, நானும் எழுத உட்கார்ந்துடக் கூடாது, மீட்டிங் எதுனா போயி புதுசா தெரிஞ்சிக்கிடக் கூடாதுன்னுதானே இப்படிச் சொல்ற?”

ஊழியர்கள் ஞாயிற்றுக் கிழமை உட்பட வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிற எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன் அதைச் சொன்னதோடு போயிருந்தால் அதைப் பற்றி மட்டுமே (முன்பு இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி 70 மணி நேரமென்று பேசியபோது வந்த எதிர்வினைகள் போல) எல்லாரும் விவாதிப்பார்கள்.

கூடவே அவர், “வீட்டில் மனைவி முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? மனைவி கணவனின் முகத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பாளா,” என்று கேட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அதைப் படிக்கிற இணையர் இருவர் என்ன பேசிக்கொள்வார்கள் என்று கற்பனை செய்தேன்.

No comments: