Monday, 20 January 2025

அந்தக்காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி இந்தக்காலத்தில் இருக்கிறார்களா?


“என்னதான் சொல்லுங்க, அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி இந்தக் காலத்தில கிடையாது. நீங்க அந்தக் காலத்திலேயும் பார்த்திருக்கீங்க, இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளையும் பார்க்கிறீங்க. நான் சொல்றதை நீங்க ஒப்புக்கிடுவீங்கன்னு நினைக்கிறேன்.”


காலை நடை நண்பர், பூங்காவில் சந்தித்துக்கொண்டபோது ஊரிலிருந்து வந்திருக்கும் தனது உறவினரை அறிமுகப்படுத்தி, என்னைப் பற்றியும் அவரிடம் சொன்னார். “சார்கிட்ட நீ எதைப் பத்தியும் தயங்காமப் பேசலாம்.”

கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது. அந்தப் புதியவர்தான் மேற்படிக் கேள்வியை சட்டென்று கேட்டார். பெருமை பின்வாங்கியது. அவர் இப்படிக் கேட்டது நண்பருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியதை முகம் காட்டியது. இருந்தாலும், என்னதான் சொல்கிறேன் என்ற எதிர்பார்ப்புடன் அவரும், பூங்கா உரையாடலில் வழக்கமாகச் சேர்ந்துகொள்ளும் அன்பரும் கவனித்தார்கள்.

“இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் பத்திக்கூட என்ன தெரியும்?”

“இல்லை சார், அந்தக் காலத்திலே எவ்வளவு அற்புதமான தலைவர்கள் இருந்தாங்க! அவங்களோட போராட்டங்களைப் பத்தியும் தியாகங்களைப் பத்தியும் தெரியும்.”

“அவங்களைப் பத்தி எப்படித் தெரிஞ்சுக்கிட்டீங்க?”

“அவங்க பயோகிராபி புக்ஸ் படிச்சிருக்கேன். சீனியர் ஜெனரேசன் ஆட்கள் சொல்றதைக் கேட்டிருக்கேன்…”

““புத்தகங்கள்ல படிச்சிருக்கீங்கன்னு கேட்கிறது உண்மையாவே மகிழ்ச்சியா இருக்கு. இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தி என்ன தெரிஞ்சி வச்சிருக்கீங்க?”

“தெரியலையே...”

“தெரியாமலே அவங்களைப் போல இவங்க இல்லைன்னு எப்படிச் சொல்றீங்க?”

“... … …”

“அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகளைப் போல இந்தக் காலத்துல இல்லைன்னு சொல்றது ஒரு ஃபேஷன், ஒரு டாக்டிக்ஸ்… ஒண்ணு, கம்யூனிஸ்ட் இயக்கமே மோசம், அந்நியத் தத்துவம், வன்முறைக்காரங்க அப்படி இப்படின்னு பிரச்சாரம் பண்ணுவாங்க. அதை முழுசா ஏத்துக்க முடியாதவங்ககிட்ட இப்படி அந்தக் காலத்து ஆள்களைப் போல இப்ப இல்லைன்னு சொல்லுவாங்க. எப்படியாவது கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தி ஒரு தப்பான எண்ணத்தை ஏற்படுத்துறதுதான் அந்தப் பிரச்சாரத்தோட நோக்கம். அதை உங்களை மாதிரி உள்ளவங்களும் நம்புறீங்களே சார்…”

“அப்படியில்லை சார். இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் ஜென்யூனா இருக்காங்களா? அவங்களை மாதிரிப் போராடுறாங்களா? தியாகம் பண்றாங்களா?”

“கம்யூனிஸ்ட்டுகள்னா போராடுவாங்க, தியாகங்களுக்குத் தயாரா இருப்பாங்கன்னு புரிஞ்சு வச்சிருக்கிறது நல்லதுதான். இந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் பத்தியும் நாளைக்குப் புத்தகங்கள் வரும். ஜூனியர் ஜெனரேசன் ஆள்கள் சொல்வாங்க. இவங்க என்ன போராட்டங்கள்லாம் நடத்தியிருக்காங்க, மக்களுக்கு என்ன பலனெல்லாம் கிடைச்சிருக்கு, ஆனா இவங்க எதையெல்லாம் இழந்திருக்காங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கிடுவீங்க. இப்பவும் ஓட்டுப் போடுறாங்களோ இல்லையோ, பிரச்சினை ஏதாச்சும் தீராம இருந்தா இந்தக் கம்யூனிஸ்ட்டுக்காரங்க என்னதாம்பா செய்றாங்கன்னு கேட்டுட்டு, உள்ளூர்த் தோழர்கள்ட்டதானே வர்றாங்க?”

சில தோழர்கள் தொடர்பான செய்திகளை, அந்த நேரத்தில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொன்னேன். ஓரிரு தகவல்களை ஏற்கெனவே கேள்விப்பட்டிருப்பதாகவும் மற்ற நிகழ்வுகளை இப்போதுதான் கேள்விப்படுவதாகவும் தெரிவித்தார்.

“உங்களுக்கு இன்னொரு உண்மையையும் சொல்லட்டுமா? அந்தக் காலத்துக் கம்யூனிஸ்ட்டுகள் பத்தியும் அன்னிக்கு இதே மாதிரிதான் பேசுனாங்க. அவங்களுக்கு முந்தியிருந்த கம்யூனிஸ்ட்டுகள் மாதிரி அவங்க இல்லைன்னு சொன்னாங்க. அந்த முதல் தலைமுறை கம்யூனிஸ்ட்டுகளைப் பத்தியுமே கூட, உலக அளவில் புகழ்பெற்ற மத்த நாட்டுக்காரங்க மாதிரி இல்லைன்னு பேசுனாங்க. கம்யூனிஸ்ட்டுகள் எல்லாக் காலத்திலேயே இதையெல்லாம் கேட்டுக்கிட்டு மக்களுக்காக உழைச்சிக்கிட்டேதான் இருக்காங்க.”

“... … … ”

“சார் சொல்றதைக் கவனிக்கலையா? மொபைலை நோண்டிக்கிட்டிருக்கியே?" உறவினரிடம் நண்பர் இப்போது கேட்டார்.

“கவனிச்சுக்கிட்டுதான் இருந்தேன். சார், உங்க கான்டாக்ட் நம்பர் சொல்லுங்க… போட்டு வச்சிக்கிடுறேன்.”

மறுபடியும் பெருமை முன்னுக்கு வந்து சேர்ந்துகொண்டது.


No comments: