மதுரை:- இயக்கத்தை அடையாளம் கண்டு இணைந்துகொண்ட தொடக்க நாளொன்றில், “கட்டபொம்மன் சிலைக்குப் பக்கத்திலே ஸ்கூலுக்கு முன்னாடி இருக்கிற பிளாட்பாரத்துக்கு வந்துடுங்க. பஸ் ஸ்டாண்டு ஏரியாவுல மூணு மணியிலேயிருந்து இருட்டுற வரைக்கும் நிற்கிறோம்…” என்று சொல்லிவிட்டுப் போனார் கிளைச் செயலாளர். புரட்சிகரமாக ஏதோ செய்யப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பின் கிளச்சிகர உணர்வோடு அங்கே போனேன். தோழர்கள் சிலர் ஏற்கெனவே வந்திருந்தார்கள், சைக்கிள்களிலும், நகரப் பேருந்துகளிலும் பல தோழர்கள் வந்து சேர்ந்துகொண்டார்கள்.
எல்லோரின் கைகளிலும் பொறுப்பாளர்கள் இரண்டு பொருள்களைத் தந்தார்கள். ஒன்று தோளில் சாய்த்துப் பிடித்துக்கொள்ளக்கூடிய சிறிய அளவிலான மூங்கிலில் கட்டப்பட்டிருந்த செங்கொடி. இன்னொன்று, ஒரு பக்கம் கைப்பிடி பொருத்தப்பட்ட, முற்றிலும் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட, மூடியில் துளையிடப்பட்ட பெரிய அளவிலான தகர டப்பா. ஆம், உண்டியல்தான்.எனது கூச்சத்தைப் புரிந்துகொண்டவராக ஒரு தோழர் சொன்னார்: “இதுவும் புரட்சிப் பணிதான் தோழர். இதுல மூணு விசயம் நடக்கும். முதலாவதா, கூச்சம் உடைஞ்சு போகும்; நம்ம மண்டையில இது வரைக்கும் கௌரவம் அது இதுன்னு ஊட்டி வளர்த்து வைச்சிருக்கிற போலித்தனம் உதிரும். ரெண்டாவதா, நாம எதுக்காக வந்திருக்கிறோம், என்ன செய்யப் போறோம்கிறதை நம்மளைக் கடந்து போற ஒவ்வொருத்தர்கிட்டேயும் சொல்வோம். சில பேர்ட்ட கொஞ்சம் விரிவா பேசுற வாய்ப்பும் அமையும். மூணாவதா, அடுத்த வாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிற போராட்டச் செலவுக்கு நிதி கிடைக்கும்.”
கூச்சம் தொலைந்தது. கௌரவக் கட்டுமானம் தகர்ந்தது. மக்களிடம் பேசியதும், பெரும்பாலோர் ஒரூ ரூபாய் நாணயம் முதல் பத்து ரூபாய் நோட்டு வரையில் உண்டியலில் போட்டதும் கூடுதல் புரிதலையும் தெளிதலையும் ஏற்படுத்தின. வீரபாண்டிய கட்டபொம்மன், “இவய்ங்க செஞ்சு முடிப்பாய்ங்க” என்பது போல வாளையும் கேடயத்தையும் பிடித்துக்கொண்டு நின்றார்.
நிதி வசூல் முடிந்த பிறகு, உண்டியல்களைக் கட்சி அலுவலகத்தில் சேர்த்துவிட்டு டீக்கடைக்கு வந்தோம். சூடான டீ நாக்கின் வழியே வயிற்றுக்குள் இறங்கியது. பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்ட இயக்கங்களின் தேவைகளுக்காக, வசதியுள்ள தோழர்கள் கூட தங்களின் சொந்தப் பணத்திலிருந்து செலவிடக்கூடாது, அது தற்‘பெருமையையும், தான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டுமென்ற மனப்போக்கையும் வளர்த்துவிடும். அவர்களும் மற்ற தோழர்களோடு சேர்ந்து தெருவில் இறங்கி, உண்டியல் ஏந்தி, தொழிலாளர்கள், விவசாயிகள் உள்படப் பொதுமக்களிடமிருந்துதான் நிதி திரட்ட வேண்டும் என்ற கருத்து செவி வழியே மூளைக்குள் ஏறியது.
*******
சென்னை:- தந்தி தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்ச்சியில், கார்ப்பரேட்டுகளிடம் ஒன்றிய ஆளுங்கட்சியான பாஜக கோடிக் கணக்கில் நிதி பெற்றிருந்தது பற்றிய செய்தி அலசப்பட்டுக்கொண்டிருந்தது. என்னிடமிருந்த தகவல்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தினேன்.
”கார்ப்பரேட்டுகள் சும்மாவா அத்தனை கோடியைக் கொடுப்பார்கள்? அவர்களுக்கான பல தேவைகளை அரசு செய்துகொடுக்கும். இது ஒரு மறைமுக லஞ்சம்தான்…” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, “கம்யூனிஸ்ட்டுகள் பணம் வாங்குறதில்லையா,” என்று குறுக்கிட்டுக் கேட்டார் தொகுப்பாளர். “உங்க கட்சியும் டொனேஷன் வாங்கத்தானே செய்யுது,” என்றார்.
“யாரிடம் வாங்குறோம்,” என்று கேட்டேன்.
“ஏன், ரோட்டுல உண்டியல் குலுக்குறீங்கள்ல…”
“அது, மக்களிடம் வாங்குறது சார்.”
“யாரிடம் வாங்கினால் என்ன, பணம் வாங்குறீங்கதானே?”
“ஆமா, வாங்குறோம். கார்ப்பரேட்டுகள்ட்ட பணம் வாங்குறவங்க அவங்களுக்காகப் பேசுவாங்க. நாங்க மக்கள்ட்ட பணம் வாங்குறோம், மக்களுக்காகப் பேசுவோம்.”
சட்டென என்னை விட்டுவிட்டு அடுத்தவர் பக்கம் திரும்பினார் தொகுப்பாளர். ஆம், நம்ம பாண்டே சார்தான்.
மக்களிடம் நிதி பெற்று, மக்களுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கிற, மக்களுக்காக உதையும் வாங்குகிற, மக்களுக்கான போராட்டத்தில் சிறைக்கும் போகிற பெருமைக்குரிய உண்டியல் குலுக்கிகள் இன்று மாநாடு காண்கிறார்கள். செம்படைப் பேரணியோடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 24வது தமிழ்நாடு மாநில மாநாடு விழுப்புரத்தில் கூடுகிறது. தலைவர்கள், மாநாட்டுப் பிரதிநிதிகள், தொண்ட,ர்கள், அவர்களையெல்லாம் நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் அனுப்பிவைத்திருக்கும் மாநிலந்தழுவிய கிளைகளின் தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.
ரெட் சல்யூட்.