Saturday, 1 February 2025

செயற்கை நுண்ணறிவு: கலை-இலக்கியம் என்னாகும்?



றிவியலாளர்கள் குழு ஒன்று பல ஆண்டுகளாக உழைத்து ஒரு  செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தை உருவாக்கியது.  தானாகவே சிந்தித்துச் செயல்படக்கூடியதாக உருவெடுத்திருந்த அதைப் பார்த்து அவர்களின நெஞ்சங்கள் பெருமிதத்தால் விம்மின. உலகின் பல்வேறு சிக்கல்களுக்கு அது தீர்வு சொன்னது. அவற்றை அறிக்கைகளாக வெளியிட அவர்களின் புகழ் பரவியது.

 

சில மாதங்களில் அது யாருக்கும் கட்டுப்படாமல் செயல்படத் தொடங்கியது. அதனால் பெரும் சீர்குலைவுகள் ஏற்படுமென அஞ்சினார்கள். .அரசாங்கம் அதை அழித்துவிட ஆணையிட்டது. தங்களின்  அரிய கண்டுபிடிப்பை அழிக்க மனம் வரமல் அவர்கள் அதை ஒரு விண்ணூர்தியில் வைத்துப் பேரண்டத்தில் வேறு எங்கேயாவது போய்க்கொள் என்று அனுப்பினார்கள். சில ஆண்டுகள் கழித்து வேறோர் ஆய்வுக்காக விண்ணில் செலுத்திய செயற்கைக் கோளிலிருந்து காணொளிப் பதிவுகள் வந்தன. அவற்றை  ஆராய்ந்தபோது, வேறொரு பால்வெளி மண்டலத்தின் கோளில் இயந்திரத்தின் நடமாட்டம் தெரிந்தது.

 

ஆர்வத்துடிப்புடன் பல நாடுகளின் அறிவியலாளர்கள் சேர்ந்து  அந்தக் கோளுக்கே சென்றார்கள். இயந்திரம் அவர்களை  “வருக என்னைப் படைத்தவர்களே,” என்று வரவேற்றது. அது  அங்கே ஒரு செயற்கை நுண்ணறிவுச் சமூகத்தையே உருவாக்கியிருந்ததைக் கண்டார்கள்.

 

ஆனால், இயந்திரம்  பூமியையே கைப்பற்றி, மனிதர்களை  அடிமைப்படுத்தி, அரசுகளை ஒழித்துக்கட்டி, தனது சமூகத்தின் ஆதிக்கத்தை நிறுவுவதற்குத் திட்டமிட்டிருந்ததைக் கண்டுபிடித்தார்கள்.  உலகத்திற்கு இதைத் தெரியப்படுத்தினார்கள். அரசுகள் கூடி விவாதித்து, இயந்திரச் சமூகத்தைத் தாக்கி  அழிததுவிட ஆணையிட்டன. ஆபத்தில்லாத புதிய இயந்திரத்தைத் தயாரித்துக்கொள்ளலாம் என்று ஆறுதல்படுத்திக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரானது அறிவியலாளர் படை. அங்கே மூண்ட போரில் சிலர் உயிரிழந்தார்கள். சில இயந்திரங்கள் நொறுங்கின. தலைமை இயந்திரத்தை அழிக்க முடியவில்லை.  இயந்திரத்தால் அவர்களையும் வெல்ல முடியவில்லை.

 

பூமியிலிருந்து புதிய ஆலோசனைகள் பறந்தன. அறிவியலாளர்களுக்கும் இயந்திரத்திற்கும் இணக்கமான உடன்பாடு ஏற்பட்டது. பூமிக்குத் திரும்பிய அறிவியலாளர்கள்  வரலாற்று நாயகர்களாக வரவேற்கப்பட்டார்கள்.  மறுநாளிலிருந்தே, பூமியின்  பருவநிலை மாற்றங்கள், உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், தொற்றக்கூடிய புதிய நோய்கள் உட்பட இயந்திரச் சமூகம் கண்டறிந்த தகவல்கள் வரலாயின. செயற்கை நுண்ணறிவை மென்மேலும் கூர் தீட்டி ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திடும் வகையில் அறிவியலாளர்கள் வடிவமைத்த தரவுகள் அங்கே செல்லலாயின. இயற்கை அறிவோடு பூமியின் மனிதச் சமூகமும், செயற்கை நுண்ணறிவோடு அந்தக் கோளின் இயந்திரச் சமூகமும் நட்புறவைப் பேண, பேரண்டத்தின் அழகு கூடியது.

 

கதையின் கதை

 

இது ஒரு  கணினியின் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் உருவாக்கிய ஒரு நீண்ட ஆங்கிலச் சிறுகதையின் சுருக்கம்!  “அறிவியலாளர்கள், செயற்கை நுண்ணறிவு, சுயமாகச் சிந்தித்தல், ஆபத்து, அழிக்க ஆணை, வேறு கோளில் செயல்பாடு, இயந்திரச் சமூகம், ரகசியத் திட்டம், போர், உடன்பாடு….”  என்ற சில சொற்களை மட்டும்  உள்ளீடாகச் செலுத்த, நொடிகளில்  சுவையான விரிவான சிறுகதை கணினித் திரைக்கு வந்துவிட்டது. இதைச் செய்து பார்த்தவர் இணையத்தில் கதையை வெளியிட்டிருக்கிறார்.

 

ஏஐ (ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்) எனப்படும் இந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதற்கான சைகிட் லேர்ன், டென்சார்ஃபுளோ, கூகுள் எம்எல் கிட், உரையாடலுக்கான சேட்ஜிபிடி, ஜெமினி, மேட்டா ஏஐ, பார்ட், ஹக்கிங்சேட், உரைகளைத் தயாரிப்பதற்கான ஜாஸ்பர், காப்பி.ஏஐ, எனிவெர்ட், சைடர், ஆங்கில இலக்கணம் சரிபார்ப்பதற்கான கிராமர்லி, வெர்டுடியூன், புரோரைட்டிங் எய்டு, காணொளித் தயாரிப்புக்கான டிஸ்கிரிப்ட், ரன்வே, ஒண்டர்ஷேர் என பலவகைப் பயன்பாடுகளுக்கு உதவும் ஏஐ கருவிகள் வந்திருக்கின்றன. தொழில்களிலும் அரசுப் பணிகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தைக் கையாளுவதற்கான பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. நம் கணினிகளிலும் கைப்பேசிகளிலும் சில ஏஐ செயலிகள் இலவசமாகவே வருகின்றன. இணையவழிக் கூட்டத்திற்கான ஜூம் திரையைத் திறந்தால், உரையாடல்களைத் தொகுப்பது உள்ளிட்ட பணிகளைச்  செய்யக்கூடிய ஏஐ சுட்டி சேர்க்கப்பட்டிருக்கிறது.

 

இந்தச் செயற்கை நுண்ணறிவுதான் என்ன? இதுவொரு கணினி அறிவியல் களம். மனிதரின் நுண்ணறிவையும் சிக்கல் தீர்ப்புத் திறனையும் படியெடுக்கிற மென்பொருளாக்கத்தில் இது முனைப்புச் செலுத்துகிறது. தரவுகளைப் பகுத்தாய்வு செய்தல், முடிவுகளுக்குச் செல்லுதல், அன்றாடம் அறிந்துகொள்வதிலிருந்து மென்மேலும் கற்றுக்கொள்ளுதல், எழுத்தாகவோ ஒலியாகவோ மொழியைப் புரிந்துகொள்ளுதல் எனப் பல நுணுக்கமான செயல்பாடுகளை ஏஐ மேற்கொள்கிறது. பல்வேறு துறைகளில் மனிதர்களுக்குக் கடினமானவையாக இருக்கக்கூடிய சிக்கல்களைத் தீர்க்கக்கூடியதாக இருக்கிறது.




 கணினி மூலமாக ஏற்கெனவே ஏற்றப்பட்டுள்ள தரவுகளை அலசி, பொருத்தமான முடிவுக்குப் போகிறது ஏஐ. இவ்வாறு தரவுகளை ஏற்றுவதும், அலசுவதற்கு ஆணையிடுவதும், முடிவுகளைப் பயன்படுத்துவதும் மனிதர்கள்தான். ஆனால் மனிதர்களால் கற்பனை  செய்யவும் முடியாத வேகத்தில், துல்லியமாக ஏஐ செய்துவிடுகிறது. ஏற்கெனவே கூகுள், மைக்ரோசாஃப்ட் எட்ஜ், ஃபயர் ஃபாக்ஸ், லிங்க்டுஇன், ஸ்நாப்சாட், விக்கிபீடியா போன்ற தரவுத் தளங்களில் தகவல்களைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பிட்ட  அரசியல் நிகழ்வு, ஏதோவொரு செய்தி, ஒரு திரைப்படம், அறிவியல் கண்டுபிடிப்பு, தலைவர்களின் வாழ்க்கை, அறிஞர்களின் மேற்கோள்கள்,  மருந்துகளின் பயன்பாடு, நடந்துகொண்டிருக்கிற விளையாட்டுப் போட்டிகளின் நிலவரம், அவரவர் தொழில்  சார்ந்த விவரம் என்று ஏராளமான தகவல்களைக் கோரிப் பெறுகிறோம். நமது வாகனத்தில் கூகுள் மேப் வழி காட்டுகிறது.

 

மேற்படி தரவுத் தளங்கள் பகுத்துப் பார்த்து முடிவுக்கு வருவதில்லை. நம்முடன் விவாதிப்பதில்லை. ஏஐ அதையெல்லாம் செய்கிறது. அதையெல்லாம் செய்யும்படி வல்லுநர்களால்  நிரல்வழிப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சேட்ஜிபிடி, கூகுளின் ஜெமினி, வாட்ஸ்ஆப், முகநூலில் வருகிற மேட்டா ஏஐ இவையெல்லாம் தகவல் தருவதோடு  நம் கருத்து என்ன என்று வினவுகின்றன. தம்முடைய கருத்தையும் கூறுகின்றன. சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்முடன் உரையாடுகின்றன – நமது மொழியிலும்.

 

மிகைப் புகட்டல்கள்

 

“இதையெல்லாம் ஏஐ சுயமாகச் செய்யவில்லை. இணையத்தில் லட்சக்கணக்கான தரவுகளை மனிதர்கள் பதிவேற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவற்றை வகை பிரித்துத் தொகுப்பதும் நுண்ணறிவுத் துறை உழைப்பாளிகள்தான். அந்தத் தரவுகளிலிருந்துதான் ஏஐ செயல்படுகிறது. ஆகவே இதில் மனித இயற்கைக்கு மாறான செயற்கையும் இல்லை, இயந்திரம் தானாகவே யோசித்துச் செய்வதான நுண்ணறிவும் இல்லை. ஆனால் நுண்ணறிவு இயந்திரங்களும் இயந்திர மனிதர்களும் வீர சாகசங்கள் செய்வதாகவும், அழிவு வேலைகளில் ஈடுபடுவதாகவும் ‘மேட்ரிக்ஸ்’ போன்ற திரைப்படங்களும் கதைகளும் மிகையான எண்ணங்களைப் பரப்பியிருக்கின்றன. ஏஐ வருகையால் உலகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கைகளும், உலகமே முடங்கிவிடும் என்ற  அச்சங்களும் மிதமிஞ்சிப் புகட்டப்படுகின்றன,”  என்கிறார் அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தின் மூத்த அறிவியலாளருமான த.வீ. வெங்கடேஸ்வரன்.

 

இந்த ஏஐ  ஏற்கெனவே மருத்துவம், அறிவியல் ஆய்வு, வானிலை, சுற்றுச் சூழல், வரலாறு, வணிகம், முதலீடு, நிதிச் சந்தை, ஊடகம் எனப் பல துறைகளில் பயன்பாட்டிற்கு  வந்துவிட்டது. மருத்துவத்தில் எடுத்துக்கொண்டால், ஒரு நோயாளிக்கு நடத்தப்பட்ட சோதனைகளின் விவரங்களை உட்செலுத்தினால், நோயின் நிலவரத்தைத் துல்லியமாக எடுத்துக்கூறும். பல மருந்துகளை ஒப்பிட்டுப் பார்த்து, சரியான மருந்தைப் பரிந்துரைக்கும். வணிகத்துறையில் சந்தை நிலவரத்தைக் கண்காணித்துக் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா  என்று கூறிவிடும்.

 

கலை இலக்கியத்தில்

 

நானும், வாட்ஸ்ஆப்  செயலியின் மேட்டா ஏஐ அறைக்குள் நுழைந்து ஆங்கிலத்தில் ஒரு துணுக்குக் கதையை அனுப்பி அதைக்  கவிதையாக்க முடியுமா  என்று கேட்டேன். ஆங்கிலச் செய்யுள் மரபுப்படி அமைந்த, நான்கு பத்திகள் கொண்ட கவிதை ஒன்று வந்தது. தொடர்ந்து, “இது சரியாக இருக்கிறதா, ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா,” என்ற விசாரிப்பும் வந்தது. “கடைசிப் பத்தி இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் என்று  பழைய பாணியில் இருக்கிறது. அதை வாசகரின் கணிப்புக்கே விட்டுவிட்டு, மூன்றாவது பத்தியோடு முடிப்பது நன்றாக இருக்கும்,”  என்று பதிலனுப்பினேன். “படைப்பாக்கத்தில் வாசகரையும் பங்காளியாக்குவது சிறப்பான யோசனை. இதோ திருத்தி அனுப்புகிறேன்,” என்று சொன்ன மேட்டா ஏஐ  அடுத்த நொடித்துளியில் மூன்று பத்திகள் கொண்ட கவிதையைக் கணினித் திரையில் காட்டியது.

 

“சில தகவல்களை உட்செலுத்தி, இத்தனை சொற்களில், இத்தனை பத்திகளில் கட்டுரை வேண்டும் என்று கேட்டால் அடுத்த  நொடியில் முழுக் கட்டுரையை ஏஐ கொடுத்துவிடும்.  குறிப்பிட்ட எழுத்தாளரின் நடையில் வேண்டுமென்று கேட்டால், அவருடைய நடையிலேயே தந்துவிடும். நாங்கள் “நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து’’ என்ற புரட்சிக்கவி பாரதிதாசன் கவிதையை உட்செலுத்தி, அதன் பொருள் தெரியுமா என்று கேட்டோம். “நிலாவை ஒப்பிடும் அற்புதமான உவமையோடு காதலியை வர்ணித்திருக்கிறார் கவிஞர்,” என்று பதிலளித்தது. அதை மனுஷ்யபுத்திரன் கவிநடைக்கு மாற்ற முடியுமா என்று கேட்டோம். அதே போல மாற்றப்பட்ட கவிதை வந்தது. அதை அவரிடமே காட்டினோம், அவர் ஆச்சரியப்பட்டார். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொன்னபோது அதையும் செய்தது. கீட்ஸ், ஷெல்லி நடைகளில் அதை மாற்ற முடியுமா  என்றபோது அப்படியே மாற்றித் தந்தது,”  என்று தனது அனுபவத்தைப் பகிர்கிறார், ஏஐ பயன்பாடு குறித்துத் தமிழ் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர்களில் முக்கியமானவரான எழுத்தாளர், பதிப்பாளர் ஒளிவண்ணன்.

 

படைப்பாக்கத்தில் ஏஐ உதவிகரமாக இருக்குமேயன்றி, மனிதர்களின் படைப்பாற்றலுக்கு அது மாற்றாக முடியாது என்ற கருத்தை நண்பர்கள் தெரிவித்தார்கள். எனக்கே கூட, “ஏஐ உருவாக்கிய கவிதை மூன்றாவது பத்தியோடு முடிந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை  நமக்குத்தானே  வந்தது, ஏஐ அதைத் தானாகச் செய்யவில்லையே, கவிதையாக அது தந்தாலும் கவித்துவம் நம் கையில்தான் இருக்கிறது,”  என்ற எண்ணம் ஏற்பட்டது.

 

ஏஐ தொடர்பான ஒரு கட்டுரையில், “ஊட்டப்படும் தகவல்களிலிருந்து மட்டுமல்லாமல், நடத்தப்படும் உரையாடல்களிலிருந்தும் ஏஐ தன்னை வளர்த்துக்கொண்டே இருக்கிறது,” என்று படித்தது நினைவுக்கு வருகிறது. இதன் தொடர்ச்சியாக,  கலையிலும் இலக்கியத்திலும் ஏஐ எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற சிந்தனை படர்கிறது.

 

மாற்றத்தின் நடுக்கட்டத்தில்

 

“எதிர்காலத்தில், மனிதர்கள் உருவாக்குவதை விடவும் சிறந்த ஆக்கங்களை ஏஐ  வழங்குகிறதா என மதிப்பிட வேண்டிய தேவை ஏற்படலாம். ஏஐ செயல்முறைகள் நமது படைப்புத் திறனில் மாற்றங்களை  விளைவிக்கும் நிலைக்கு நெருக்கமாக இருக்கின்றன. கலைக்களத்தில்  இதனைப் பயன்படுத்தும் நடைமுறை வாய்ப்புகள் பெரிதாக  உள்ளன. சமூக, பண்பாட்டு மாற்றத்தின் நடுக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கலையாக்கத்திலும் படைப்பாக்கத்திலும் நிகழும் அசைவுகள் அந்த மாற்றத்தின் அறிகுறிகளே.” -இவ்வாறு, ‘நுண்கலைகளில் செயற்கை நுண்ணறிவு: அனுபவப்பூர்வ ஆராய்ச்சியின் முறையான மதிப்பாய்வு’ என்ற ஆய்வறிக்கை கூறுகிறது.

 

“கவிதையில் ஏராளமான வரிகளை உருவாக்கும் திறனுடன், கற்பனைச்  சித்தரிப்பிலும் திறமை வாய்ந்த எழுத்தாளராகிக் கொண்டிருக்கிறது ஏஐ. ஒரு கதையின் வளர்ச்சிப் போக்கில் இப்படியிப்படிக் கொண்டுபோகலாம் என்றும்,  கதாபாத்திரங்களின் குண இயல்புகளை இவ்வாறு வடிவமைக்கலாம் என்றும் எழுத்தாளர்களுக்கு ஏஐ ஆலோசனை கூற முடியும். கதைக்கு முற்றிலும் மாறுபட்ட முடிவைத் தருவதிலும் ஏஐ உதவ  முடியும். மூலப்படிகளைப் படைப்பாளி வாசித்துப் பார்ப்பதில் ஒரு நட்பு விமர்சகராக உடன் அமர்கிறது ஏஐ,” என்கிறார் ஒரு கட்டுரையாளர்.

“உலகின் பல மொழிகளில் வரக்கூடிய இலக்கியங்களை நமது மொழியில் படிக்கவும், நமது படைப்புகளை மற்ற மொழிகளுக்குக் கொண்டுசெல்லவும் ஏஐ உதவும் என்பதில் மறுப்பதற்கில்லை,” என்கிறார் வெங்கடேஸ்வரன்.

 

இந்தக் கட்டுரையைத் தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே வாட்ஸ்அப் வழியாக ஒரு ஓவியத் தொகுப்பு வந்தது. 125 ஆண்டுகளுக்கு முன் ரவி வர்மா வரைந்த, 60 ஆண்டுகளுக்கு முன் காலண்டர்கள் மூலம் வீடுகளுக்கு வந்த, புகழ்பெற்ற ஓவியங்கள் அவை. முகப்பு அம்புக்குறியைச் சொடுக்கியவுடன், அந்த ஓவியங்களின் மனிதர்கள் நடமாடத் தொடங்குகிறார்கள்! அன்னப்பறவை சிறகு விரித்துப் பறக்கிறது! மரம் அசைகிறது! ஏஐ வழங்கும் கலை விருந்து!

 

கலைஞர்கள் இத்தகைய மாற்றங்களை ஏற்றுக்கொள்வதிலும் கையாளுவதிலும் முன்னோடிகளாக இருந்து  வந்திருக்கிறார்கள்.  பல எழுத்தாளர்கள் தாங்களே கணினியில் தட்டச்சு செய்கிறார்கள். குரல் தட்டச்சு, கையெழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். ஓவியர்கள் விசைப் பலகையையும் அந்தச் சுண்டெலியையும் தூரிகைகளாக்கி வண்ண விளையாட்டுகளை நிகழ்த்துகிறார்கள்.

 

அதே வேளையில், சக கலைஞர்களுக்கும், சமுதாயத்திற்கும் ஏற்படக்கூடிய பாதகங்கள் பற்றிய கவலையையும் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். “அதிகமான பாதிப்புக்கு உள்ளாவது எழுத்துத் துறையும், திரைப்படத் துறையும்தான். முழுநேரத் தொழிலாக இவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்,” என்கிறார் ஒளிவண்ணன்.

 

சென்ற ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர்கள், தங்கள் துறையில் ஏஐ நுழைக்கப்படுவதை எதிர்த்துத்  தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்திய செய்தி உலகின் கவனத்தைப் பெற்றது. அவர்களது வேலைப் பாதுகாப்பிற்கான உடன்பாடு கையெழுத்தான பிறகே போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

 

“சினிமாவின்  கலையமைப்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் ஏஐ நுழைக்கப்படுகிறபோது, இத்தனை காலமும் இவற்றைச் செய்துவந்தவர்கள் வெளியே வீசப்படுகிறார்கள். காட்சிக்கான பின்புல வண்ணங்களைத் தீட்டுகிற வேலையைச் செய்கிறவர்களைக் கலைஞர்கள் என்று சொல்வதில்லை. அதற்காக, சினிமாவில் அவர்களுக்கு இருந்துவந்த இடம் பறிக்கப்படுகிறபோது படைப்புக் கலைஞர்கள் கவலைப்படாமல் இருக்க முடியுமா,” என்று வெங்கடேஸ்வரன் கேட்கிறார்.

 

சினிமாவில் நாயக நடிகரின் இளவயதுத் தோற்றத்தை ஏஐ மூலம் உருவாக்கி உலாவ விடுகிறார்கள். மறைந்த நடிகர்களை மறுபடியும் வரவழைத்துப் பேச வைக்கிறார்கள். நினைவில் வாழும் பாடகர்களின் குரலில் புதிய பாடல்களை ஒலிக்கச் செய்கிறார்கள். இவை ரசனைக்கான முயற்சிகளாக வியப்பளிக்கின்றன. ஆனால், இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிற  துணை நடிகர்கள், புதிய பாடகர்களின் கண்களில் எதிர்காலம் பற்றிய கலக்கம் தெரிகிறதே.

 

“ஏஐ சம  வாய்ப்புகளையோ சமூகநீதியையோ ஏற்படுத்திவிடாது. உதாரணமாக, கூகுளில் இமேஜஸ் பிரிவுக்குச் சென்று, ‘மக்கள்‘ என்று தட்டினால் அமெரிக்கர்கள்,  வெள்ளையர்களின் படங்கள்தான் வரிசையாக வரும். நீங்கள் குறிப்பிட்டுக் கேட்டால்தான் மற்ற நாடுகளின் மக்களும் மற்ற இனத்தவர்களும் வருவார்கள். இது ஏஐ-யின் தவறு அல்ல. அந்த அளவுக்குப் பெரும்பாலான தகவல்களும் படங்களும் இணையத் தொடர்புகளை இயக்குகிறவர்களால் பதிவேற்றப்பட்டிருக்கின்றன,” என்றார் வெங்கடேஸ்வரன்.

 

ஆம். எனது கைப்பேசியில் ஏஐ கருவியைத் திறந்து, “மரத்தை ஒரு பெண் கட்டியணைத்திருப்பது போல ஓவியம் தருக,” என்று தட்டினேன். வந்த ஓவியம் அழகாக இருந்தது. ஆனால் அதில் இருந்தது ஒரு வெள்ளைக்காரப் பெண். இந்தியப் பெண்ணாக இருக்கட்டும் என்று சொன்ன பிறகுதான் மாற்றப்பட்ட ஓவியம் வந்தது.

 

பதிப்புத் துறையில் உள்ள ஒரு நண்பர் இப்போதெல்லாம் தனது வெளியீடுகளுக்கான அட்டைப் படங்களை ஏஐ உதவியுடன் தானே வடிவமைக்கிறார். அந்த வடிவமைப்புகள் அழகாகவும் பொருட்பொதிவோடும் இருக்கின்றன. ஆனால், இதுவரையில் அவருக்கு அட்டைப் படங்களை வரைந்து கொடுத்து வந்த ஓவியரின் நிலைமை? “சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனால் என் போன்ற சிறிய பதிப்பாளர்களுக்கு விரைவாகவும், கூடுதல் செலவில்லாமலும் வேலையை முடிக்க இது பேருதவியாக இருக்கிறதே…,” என்றார் நண்பர்.

 

பாதிக்கப்படுவோரின் குரலுக்குச் செவி மடுப்பது என்றால், அவர்களுக்கான வேலை வாய்ப்புகளைப்  பாதுகாப்பதாக மட்டும் இருக்க முடியாது. அவர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்திற்கான  வாசல்களைத் திறந்துவிடுவதாகவும்  இருக்க வேண்டும். பள்ளிகளில் ஏஐ பயிற்சி இதற்கொரு முன்முயற்சியாகக் கூடும்.

 

அழகியலும் சமூக நோக்கமும்

 

ஆனால், தொழில் நிலைமை, வேலை வாய்ப்பு ஆகிய பிரச்சினைகளைத் தாண்டி, மனித ஈடுபாடு இல்லாமல், ஒரு இயந்திரமே படைப்புகளைத் தரமுடியும் என்றால்  அழகியலும், சமூக நோக்கமும் என்னவாகும் என்ற கேள்வி மேலோங்குகிறது. சமுதாய நிலைமைகளை, மனிதர்களின் குதூகலங்களை, துயரங்களை இயந்திரத்தால் தன்னுடைய அனுபவமாக உணர்ந்து படைக்க முடியுமா? முடியுமானால் அதன்  வர்க்க/அரசியல் துலாக்கோல் யார் பக்கம் சாய்ந்திருக்கும்?

 

எழுதுவதிலும் கலை  வடிப்பதிலும் செயற்கை நுண்ணறிவு தலையிடும் என்றால் எழுத்தாளர்களும் கலைஞர்களும் என்ன ஆவார்கள் என்ற கவலையில் நியாயம் இருக்கிறது. ஆனால், ஆய்வுகள் தெரிவிப்பது போல, இது அவர்களுக்கு ஒரு நல்ல துணையாகவும் அமையும். தேடல் பரப்பு விரிவடைவதால், அவர்களின் பளு குறைந்து, கற்பனையில் நீந்துவதற்குக் கூடுதல் நேரம் கிடைக்கும். அது படைப்பை மேலும் நேர்த்தியுள்ளதாக்க உதவும்.

 

“புகைப்படக் கலை அறிமுகமானபோது, இது கலையின் முடிவு  என்று பல ஓவியர்கள்  சொன்னார்கள். ஆனால், அது ஓவியத்திற்கான ஊடகமாகவும் மாறியது. யதார்த்தமான காட்சிச் சித்தரிப்புகளோடு நின்று போயிருந்த ஓவியம்  விடுவிக்கப்பட்டு, எண்ணங்களை  வெளிப்படுத்தும் கலையாக, நவீன ஓவிய இயக்கமாகவே வளர்ந்தது,” என்று சுட்டிக்காட்டுகிறார் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆய்வாளர் ஜிவ் எப்ஸ்டெய்ன்.

 

நான் என்ற ஆணவம்?

 

“படைப்பை நாம்தானே தீர்மானிக்கிறோம் என்று அலட்சியமாக இருந்துவிட முடியாது. தானாகவே படைப்பில் தலையிடுகிற வேலையையும்  ஏஐ செய்கிறது. தேர்ந்தெடுத்த தமிழ்ச் சிறுகதைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு ஏஐ உதவியைப் பயன்படுத்தினோம். விந்தன் எழுதிய ஒரு கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துப் பார்த்தேன். அதில், விமானத்தில் பயணம் செய்கிற ஒரு பெண் தனது வாசனைத் திரவக் குப்பியை எடுத்துப் பயன்படுத்துகிறபோது அது பக்கத்தில் அமர்ந்திருக்கிற பெண்ணின் கண்ணில் பட்டுக் காயம்
ஏற்படுகிறது என்று இருந்தது. எனக்குச் சந்தேகம் ஏற்பட்டதால் மூலக் கதையை எடுத்துப் படித்தேன். அதில், அந்தப் பெண் திரும்பி உட்காரும்போது விரல் நகம் பட்டுக் கீறிவிடுவதால் காயம் ஏற்படுவதாக எழுதியிருந்தார் விந்தன். நமக்குக் கோபம் வருமா இல்லையா? கோபத்துடன் என்ன இப்படி என்று விசாரித்தபோது, ‘நகம் கீறிவிட்டது என்பது பொருத்தமாக இல்லை, அதனால் நான் மாற்றிவிட்டேன்,’ என்று ஏஐ பதில் சொன்னது. அந்தப்  பதிலில் ‘நான்’ என்ற ஆணவம் இருப்பதாக எனக்குப் பட்டது. இப்போதே இப்படியென்றால் எதிர்காலத்தில் ஏஐ வளர வளரப்  படைப்புகளின் நிலை என்னவாகும் என்ற கவலையும் ஏற்பட்டது,” என்றார் ஒளிவண்ணன்.

 

ஓரு கதையையோ கவிதையையோ குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் நடைக்கு மாற்ற முடியும் என்றால், சும்மா ஒரு பரிசோதனைக்காக அப்படிச் செய்து பார்த்து ரசித்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கப் போகிறவர்களால் சிக்கலில்லை.  ஆனால், உள்நோக்கத்தோடு மோசமான உள்ளடக்கத்துடன் எழுத வைத்து வெளியிட்டால் அவர் மீது உள்ள மரியாதை என்னாகும்? ஏஐ கருவியைப் பயன்படுத்தி ஒரு போலியான படத்தையோ படைப்பையோ தயாரித்துப் பரப்ப முடியும். ஏஐ கருவியைப் பயன்படுத்தி அதன் போலித்தனத்தைக் கண்டுபிடிக்கவும் முடியும்.

 

படைப்பாக்கத்தில் செயற்கை நுண்ணறிவைக் கையாள்வது குறித்து தனிப்பட்ட முறையில் கருத்துப் பரிமாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. அமைப்பாக விவாதிக்க வேண்டிய புதிய பொறுப்பு கலை இலக்கிய இயக்கங்களுக்கு வந்திருக்கிறது. என்னதான் நடக்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறபோதே, நாம் கேட்பதைக் கொடுக்கிற ‘உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு’ (ஜிஏஐ) தொழில்நுட்பத்திலிருநது, எந்தச் சூழலுக்கு எது தேவை என்று கணித்து அதைக் கொடுக்கிற ‘செயற்கைப் பொது நுண்ணறிவு’ (ஏஜிஐ) என்ற தொழில்நுட்பம் உருவாகியிருக்கிறது.

 

அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கானவை. அவற்றை யார் உடைமையாக்குகிறார்கள் என்பதே தாக்கங்களைத் தீர்மானிக்கிறது. உலக அளவில், தற்போதைய நிலையில், மேற்கத்திய, உலகச் சந்தை ஆதிக்க சக்திகளின் கையில் இது இருக்கிறது. இந்தியாவில் கார்ப்பரேட் ஆதிக்கத்திற்கான சேவைகள் பொதுச் சமூகத்தின் மேல் கட்டமைக்கப்படுகின்றன. நுட்பமான சாதியப் பின்னலில் மேல்தட்டினரின்  நடைமுறைகளே தொன்மையான கலாச்சாரமாக முன்வைக்கப்படுகின்றன. ஏஐ கருவியிடம் “இந்தியக் குடும்பத்தின் அழகு” என்ற பொருளில் ஓவியம் கேட்டபோது, ஒரு மாளிகையின் நடுக்கூடத்தில் அமர்ந்துள்ள மேல்தட்டுக் குடும்பம்தான் ஓவியமாக வந்தது.

 

நம் கண் முன்பாக, ஏஐ பயன்படுத்தத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற இரு  பிரிவுகளாக உலக சமுதாயம் அணிபிரிந்து வருகிறது.  கலை இலக்கியத்தில் ஏஐ ஒரு கருவியாகப் பயன்படும், ஆனால் அதனிடம் படைப்பின் கருத்தாக்கத்தை விட்டுவிட்டால் பதம் பார்த்துவிடும். உலகில் அடிப்படையான மாற்றங்களை நிகழ்த்துவதற்கான இயக்கத்தோடு, மனிதநேயமும் சமத்துவ லட்சியமும் கொண்ட உழைப்பாளி வர்க்கத்தின் ஆளுமை நிலைநாட்டப்படுவதோடு ஏஐ கேள்விகளும் இணைகின்றன. கலை இலக்கியம் பாதுகாக்கப்படுவதும் இத்தோடு தொடர்புள்ளதுதான். அதை நோக்கிச் செல்கையில் இந்த அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கைவசப்படுத்தித்  துணையாக்கிக்கொள்வதா, அல்லது பயணத்தில் இணையாமல் தனிமைப்படுவதா? O


-‘செம்மலர்’ பிப்ரவரி 2025 இதழில் எனது கட்டுரை



No comments: