Monday, 10 February 2025

யார் யார் வாய்த் திட்டினும்...


 

என்ன, திடீர்னு ஞாபகம் வந்தது போல தினமும் திட்டுறாங்க அவரை?


எவரை?

இங்கே மட்டுமில்லாம வெளிநாட்டுல ஒரு கூட்டம் நடத்துறாங்க, அங்கேயும் போய் கலாட்டா பண்ணுறாங்க. அப்படி என்னதான் பண்ணிட்டாரு அவரு?

எவரு?

அவருதாங்க...

ஓ... அவரா, பிறப்பால யாரும் யாரையும் விட உசந்தவங்களோ தாழ்ந்தவங்களோ இல்லைன்னாரு... ஒதுக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவங்க சுயமரியாதையோட நிமிர்ந்து நிக்க வைச்சாரு... சாதி, மதம் பார்க்காம விருப்பப்படி வாழ்க்கை இணையைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை ஆதரிச்சாரு... பெண்கள் ஆண்களுக்கு அடிமையாகாம சமமா நடக்கறதுக்குப் பாதை போட்டாரு... சமுதாயம் தேங்கிப் போகாம பல சமூகத்து மூளையும் கலந்து தொழில், வணிகம், நிர்வாகம், திறமையில முன்னேறுறதுக்குக் காரணமானாரு... மூடத்தனமான நம்பிக்கைகளால மோசம் போறதைத் தடுத்தாரு... பகுத்தறிவோட எதையும் பார்க்குறதுக்குக் கத்துக்கொடுத்தாரு... ஒரு மொழி இன்னொரு மொழி பேசுற மக்கள் மேல வம்படியாத் திணிக்கப்படுறதை எதிர்த்தாரு... அரசாங்க அலுவலகங்கள்லேயும் பேங்க் மாதிரியான இடங்கள்லேயும் இன்னிக்குக் கோவில்லேயும் கறுப்பு முகத்துக்காரங்க நிறையா வர்றதுக்கு வழி செஞ்சாரு... சாமி கும்பிடறதும் கும்பிடாம இருக்கிறதும் அவங்கவங்க விருப்பம், ஆனா விருப்பமுள்ளவங்க ஆலயத்துக்குள்ள போயி வழிபடுறது உரிமைன்னு நிலைநாட்டினாரு... கடவுள் தன்னோட பெயரால அக்கிரமங்கள் நடக்கிறதைத் தடுக்க முடியாதது பத்தியும் யோசிக்க வச்சாரு...

எல்லாம் நல்லதுதானே செஞ்சிருக்காரு, அப்புறம் ஏன் அவரை இப்படித் தாக்குறாங்க?

நீ பாட்டுக்கு உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போகக்கூடாது, இப்படியெல்லாம் கேட்கணும்னுதான்.

••••••••••••••

நன்றி: கைத்தடி ஓவியத்தைக் கற்பனை செய்த அன்பருக்கு

No comments: