Tuesday, 25 February 2025

மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் போராட்டம் இந்திய மக்களைக் காக்கும் பேரியக்கமே

 



லகப் படத்தில் இரண்டு பகுதிகள் திருத்தி வரையப்பட்டன. ஒன்று, கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது பங்களா தேஷ் ஆனது. முன்னாள் சோவியத் யூனியனில் முதலில் இணைந்த உக்ரைன் அதிலிருந்து உருவிக்கொண்டது – சோவியத் யூனியனே தகர்ந்து ரஷ்யா உள்ளிட்ட தனித்தனி நாடுகள் வரைபடத்தில் இடம்பெற்றன. உலக தாய்மொழி தினமாகிய பிப்ரவரி 21 அதிகாலையில், மும்மொழிக் கொள்கை விவகாரம் குறித்த  இக்கட்டுரையைத் தட்டச்சிட அமர்ந்திருக்கும்போது இந்த உலகப்பட மாற்றம்தான் நினைவுக்கு வருகிறது. காரணம், இரண்டு நாடுகளும் உருவெடுத்ததற்கு அடிப்படையானதொரு காரணமே மொழித் திணிப்புதான்.

 

வங்காள மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு பாகிஸ்தானில் ஆட்சி மொழியாக உருதுவைத் திணிக்க முயன்றது ராணுவ சர்வாதிகாரி யாஹ்யாகான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு. அதை எதிர்த்து நடந்த போராட்டம், மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூரம் இவையெல்லாம் விடுதலைப் போராகவும் பரிணமித்து 1971இல் பங்களாதேஷ் சுதந்திர நாடாகப் பிறந்தது. மாணவர்கள் உயிர்த் தியாகம் செய்த நாள்தான் உலக தாய்மொழி தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

 

சோசலிச முன்மாதிரியாகத் திகழ்ந்த சோவியத் யூனியனில் இணைந்து மக்கள் வாழ்நிலையில் சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றிருந்தது உக்ரைன். ஆனால், சோவியத் அரசு ரஷ்ய மொழியைத் திணித்தபோது அது தங்களின் பண்பாட்டு அடையாளங்களை அழித்துவிடும் என்று அஞ்சிய உக்ரைன் மக்கள் கொந்தளித்தார்கள். மற்ற பல நிலைமைகளும் சேர்ந்துகொள்ள, போராட்டங்கள் வெடித்தன. 1991 ஆகஸ்ட் 24 அன்று சுதந்திர உக்ரைன் பிறந்தது.

 

அமைதியாக இணக்கத்தோடு வாழ்கிற குடிமக்கள் என்ற குளத்தில் மொழித்திணிப்பு என்ற பாறாங்கல்லைப் போட்டால் அது சுனாமிப் பேரலையாக மாறும் என்ற வரலாற்று உண்மைக்கு இரண்டு அண்மைக்கால சாட்சியங்கள் இவை. அல்ஜீரியா, பிலிப்பைன்ஸ், மால்டா, டான்ஜானியா, செனகல் வேறு பல நாடுகளும் எடுத்துக்காட்டுகளாக இருக்கின்றன.

 

அமைச்சரின் நிபந்தனை

 

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டிற்கு, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான ரூ.2,152 கோடி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் அறிவித்தார். தேசியக் கல்விக் கொள்கை என்பது மொழி சார்ந்த கொள்கையையும் உள்ளடக்கியதாகும்.  முதலாவதாக அந்தந்த மாநில மொழி, இரண்டாவதாக ஆங்கிலம் அல்லது வேறு இந்திய மொழி, மூன்றாவதாக (இரண்டாவது மொழியாகத் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில்) ஆங்கிலம் அல்லது வேறு இந்திய மொழி என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இந்த மும்மொழிக் கொள்கையை ஏற்றால் மட்டுமே, தற்போது தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி வருகிற தமிழ்நாட்டிற்கு முறைப்படி வழங்க வேண்டிய நிதி “விடுவிக்கப்படும்“ என்று கூறியிருக்கிறார் அமைச்சர். இல்லையேல் அந்த நிதி அமைச்சகச் சிறையிலேயே வைக்கப்பட்டிருக்கும் என்றுதானே பொருள்?

 

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கூட, இதற்குத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். கல்வி உரிமைக் களத்தில் செயல்படுகிற பலரும் மும்மொழி என்ற முகமூடியோடு வருகிற இந்தித் திணிப்புக்குத் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை ஆதரவாளர்கள் தேசியக் கல்விக் கொள்கையில் மூன்றாவதாக ஒரு மொழி என்றுதான் இருக்கிறதேயன்றி இந்தி என்று குறிப்பாகக் கூறப்படவில்லை என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

 

நடைமுறையில் இந்தியைப் படித்தாக வேண்டிய கட்டாயச் சூழல்தான் ஏற்படுத்தப்படும். ஒன்றிய அரசின் புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டுவது, தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்திச் சொற்களும் அவற்றுக்கான தமிழ் விளக்கங்களும் எழுதிப் போடப்படுவது, இந்தியாவின் வேறு மொழிகளுக்கு இல்லாத ஏற்பாடாக இந்தி பிரச்சார சபா நடத்தப்படுவது, மைய அரசு சார்ந்த பொது நிகழ்வுகள் இந்தியிலேயே நடத்தப்படுவது, இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று உயரதிகாரிகள் அறிவிப்பது உள்ளிட்ட காட்சிகள் அந்தக் கட்டாயச் சூழலை உணர்த்துகின்றன. இந்தி படித்தால்தான் வட மாநிலங்களில் வேலை கிடைக்கும் என்ற போலியான தோற்றம் கட்டமைக்கப்படுகிறது.

 

அங்கே உண்டா தென்மொழி?

 

இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், இந்தியும் ஆங்கிலமும் போக மூன்றாவதாக சமஸ்கிருதம் அல்லது, அதனோடு தொடர்புள்ள வேறு ஏதோவொரு வட மாநில மொழியைக் கற்றுக் கொடுக்கிற ஏற்பாடுதானே இருக்கிறது? தமிழை விடுங்கள், வேறு தென் மாநில மொழி எதையாவது கற்றுத்தருகிற அமைப்பு இருக்கிறதா?  தென் மாநிலங்களின் குழந்தைகளின் மூளைகளில் மட்டும் சுமையை ஏற்றுவது, மக்களின் ஒருமைப்பாட்டை வளர்க்க உதவுமா? மும்மொழிக் கொள்கையின் நோக்கம் ஒருமைப்பாட்டை வளர்ப்பதும், பிற பகுதி மக்களின் பண்பாடுகளை அறிந்துகொள்ளச் செய்வதுமே என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது. தொடக்கத்தில் மொழித்திணிப்பால் சில நாடுகள் பிரிந்ததை நினைவுகூர்ந்து, இப்போது ஒருமைப்பாட்டுக்கு உதவுமா என்று கேட்டால், நாடு ஒன்றாக இருப்பதை எதிர்ப்பதாகக் கூறி திசை திருப்பப்படுகிறது. மகத்தான விடுதலைப் போராட்டத்தின் கனியாக விளைந்த இந்த நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்திலிருந்தே இந்தக் கவலைகள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

 

அவ்வப்போது சிலர், தேசிய மொழியான இந்தியைப் பயில மறுப்பது தேசப்பற்றுக்கு எதிரானது என்று கிளப்புவார்கள். இந்திய அரசமைப்பு சாசனத்தில் தேசிய மொழி என இந்தியோ வேறு மொழியோ குறிப்பிடப்படவில்லை. அது இந்தத் தேசத்தின் மொழிகளில் ஒன்றுதான். ஆனால், அதுவே தேசிய மொழி எனக் கூறி அதைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதா என்று தலைவர்கள் மட்டத்தில் உண்மைக்கு மாறான கருத்து கொட்டப்படுகிறது. அது. பரவிப் பரவி, இங்கேயிருந்து வேறு மாநிலங்களுக்குச் செல்கிற தமிழர்களை (இதர தென் மாநிலத்தவர்களையும்) அங்கே உள்ளவர்கள் இந்தியர்களாக இருந்துகொண்டு இந்தி தெரியாமலிருக்கிறீர்களே எனக்கேட்டு  ஒத்துழைக்க மறுக்கிறார்கள். அங்கெல்லாம் மொழிச் சுதந்திரம் பற்றிய  தெளிவோடு இருக்கிற மக்கள்தான் நம்பிக்கை அளிக்கிறார்கள். (தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பவர்கள் இருப்பது போல அந்த மாநிலங்களில் அதை ஏற்காதவர்களும் இருப்பார்களல்லவா?) 

 

போதாக்குறைக்கு, இந்தி வேண்டாம் என்று கூறும் தமிழ் நடிகர்கள் தங்களுடைய படங்களை இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடுவது ஏன் என்பது போன்ற அறிவார்ந்த கேள்விகளை, ஒன்றிய ஆளுங்கட்சியினர் கேட்கிறார்கள். இங்கே யாரும் இந்தியை வேண்டாம் என்று  சொல்லவில்லையே, கட்டாய இந்தித் திணிப்பைத்தானே வேண்டாமென்கிறார்கள் என்று திருப்பிக் கேட்கப்படுகிறது. பதில் வருவதில்லை, ஆனால் இந்தியை எதிர்ப்பவர்கள் இந்தியாவையே எதிர்ப்பவர்கள்தான் என்று பட்டை மாட்டிவிடுகிற கைங்கரியம் நடக்கிறது.

 

அரசியலல்ல, அறிவியல்

 

அரசியலுக்காக இந்தி வெறுப்பு பரப்பப்படுகிறது எனும் பரப்புரை இன்னொரு கைங்கரியம். அந்த மொழியின் மீது வெறுப்பு பரப்பப்பட்டிருக்குமானால் தமிழகத்தில் இந்தி பிரச்சார சபா தடையின்றிச் செயல்படுவதும் ஏராளமானோர் இந்தி பயில்வதும் சாத்தியமாகியிருக்குமா? அரசுப் பள்ளிகளிலேயே கூட, வட மாநிலத் தொழிலாளர்கள் வாழும் பகுதிகளில், அவர்களது குழந்தைகளுக்காக இந்தி கற்பிக்கப்படுகிற நேயம் தழைத்திருக்குமா? பல தனியார் பள்ளிகளில், தமிழையே புறக்கணித்துவிட்டு இந்தியும் ஆங்கிலமும் வேறொரு வெளிநாட்டு மொழியும் பயிற்றுவிக்கப்படுவது நடைமுறையாகியிருக்குமா?

 

இந்தியை எதிர்ப்பவர்களின் வீடுகளில் பிள்ளைகள் இந்தி படிக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக விமர்சிப்பார்கள். எத்தனை பேர் வீடுகளில் என்று தகவல் கேட்டால் பதுங்கிவிடுவார்கள். அத்துடன், இந்தித் திணிப்பை எதிர்க்கிறபோது, இளையவர்களின் மொழித் தேர்வுச் சுதந்திரத்திற்கு எதிரான கொள்கைத் திணிப்பைச் செய்யாதிருப்பது ஒரு ஜனநாயகப் பண்பாடு எனப் புரிந்துகொள்ள மறுப்பார்கள்..

 

இயல்பான விருப்பத்தில் யார் வேண்டுமானாலும் இந்தி பயிலட்டும். தமிழ்நாட்டுத் திரையரங்குகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி வருகிற இந்தி சினிமாக்களைப் பார்த்துவிட்டுக் கூட அந்த மொழியைக் கற்க ஆசை வரலாம். வேறு எந்த மொழியையும் படிக்க ஆர்வம் ஏற்படலாம்.  படிக்கட்டும்.

 

நாடு விடுதலையடைந்ததிலிருந்தே வட மாநிலங்களில் சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வாய்ப்பு வாசல்களும் திறக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆகவே, அந்த மாநிலங்களில், உலகத்தின் சன்னல் என்று ஜவஹர்லால் நேரு கூறிய  ஆங்கிலத்தைக் கற்பதற்கு முனைப்புக் காட்டப்படவில்லை. அது பன்முகத் திறன்களோடு அங்கே இளைய தலைமுறைகள் தலையெடுப்பதற்கேற்ற சூழலை உறுதிப்படுத்தவில்லை.  அந்த மாநிலங்களிலிருந்து நாள்தோறும் நிறையப் பேர் கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பணிகளுக்காகத் தென் மாநிலங்களுக்கும் புலம் பெயர்வது ஏனென்ற வினாவுக்கு, இந்த ஆங்கிலப் புறக்கணிப்பில் விடை இருக்கலாம். ஆனால், தமிழையும் ஆங்கிலத்தையும் அரசின் ஏற்பாட்டிலேயே பயின்ற தமிழக இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளுக்கும் செல்கிறார்கள். அதே போல், தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயின்றவர்கள் நிறையப் பேர் இருக்கிற தமிழகத்திற்கு, வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் முதலீட்டாளர்கள் விரும்பி வருகிறார்கள்.

 

எந்த நாடானாலும் மொழித்திணிப்பு நடவடிக்கைகள் இயல்பான முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை. அவரவர் மொழிக்கான சுதந்திரமும் பாதுகாப்புமே நிலையான வளர்ச்சிக்கு ஆதாரம். இது அரசியல் பார்வை அல்ல, அறிவியல் பார்வை. தாய்மொழி வழிக் கல்வி வளமாக இருக்கும் நாடுகளில் அறிவியல்–தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கியிருக்கிறது. வேறொரு மொழியின் மூலமாகவே கற்றறிய வேண்டுமென விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் நுகரப்பட்டாலும், அடிப்படையான அறிவியல் ஆய்வு பின்தங்கியிருக்கிறது. இது தற்செயலானதல்ல.

 

வரலாற்றுத் துளி

இந்த அறிவியல் பார்வை இல்லாமல் போனதால்தான் இந்தியாவில் இந்தித் திணிப்பு திரும்பத் திரும்ப தலைதூக்குகிறது. விடுதலைக்கு முன்பே, 1930களிலிருந்தே, அன்று நாட்டை ஆண்ட பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களாக இருந்த நாட்களிலேயே, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ராஜாஜி தலைமையில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி இந்தியைக் கட்டாய மொழியாக அறிவித்தது. அபபோதே மொழித்திணிப்பு தொடங்கிவிட்டது. அதைத் தடுத்து நிறுத்திய போராட்டங்களும் தொடங்கின. விடுதலைக்குப் பிறகும் 1948ல் அதே போன்ற முயற்சி எடுக்கப்பட்டு, போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. 1960களின் பிற்பகுதியில் மறுபடியும் அதே போல் திணிப்பு, மறுபடியும் மாநிலந்தழுவிய போராட்ட இயக்கம். மொழி உரிமைக்காகக் களம் கண்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்கள், தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட ஈகைத் தியாகிகள், சிறைகளில் அடைக்கப்பட்ட போராளிகள், தலைவர்களைத் தலையிட வைத்த மாணவர்கள் என்று நெடிய வரலாறு இருக்கிறது.

 

பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் அந்த வரலாற்றின் நாயகர்களாகத் தலையாயப் பங்களித்தார்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் பங்களித்தார்கள். ஏன், முதலமைச்சராக இருந்த காமராசர் உட்பட மொழித்திணிப்புக்கு உடன்படாத காங்கிரஸ் தலைவர்களும் இருந்தார்கள்.  சரியாகச் சொல்வதென்றால், மாணவர்கள் தன்னெழுச்சியாகத் தொடங்கிய போராட்டத்தை இந்தத் தலைவர்கள் முறைப்படுத்தினார்கள். அதனால்தான், 1967இல் தமிழகத்தில் திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்த பிறகும் கூட மாணவர்களின் போராட்டங்கள் தொடர்ந்தன. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, அரசாணையை விலக்கிக்கொண்டு, இந்தி பேசாத மக்கள் ஏற்கும் வரையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று உறுதியளித்த பிறகுதான் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

 

ஆம், அது அரசியல் நோக்கத்திற்காகத் தூண்டப்பட்ட போராட்டம் அல்ல. மாறாக, போராட்டத்தால் தூண்டப்பட்ட அரசியல் மாற்றம் அது. ஆனால், அரசியலுக்காக இந்தி எதிர்க்கப்படுகிறது என்று கூசாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், பெருவாரியான மக்களின் சுய அடையாளத்தை மறைக்கும் மொழித்திணிப்பில்தான் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. இன்றைய மைய ஆளுங்கட்சியின் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே தேர்வு, ஒரே அது, ஒரே இது என்ற ஒரேமயமாக்கல் சூழ்ச்சிகளின் ஒரு பகுதிதான் ஒரே மொழி என்ற கருத்தியல் பின்னப்படுவதும். இந்தித் திணிப்பு, இந்துத்துவத் திணிப்போடு இணைந்ததே என்று அரசின் மதச்சார்பின்மை மாண்பை உயர்த்திப் பிடிக்கிறவர்கள் எச்சரிக்கிறார்கள். சுதந்திரமான பரந்துபட்ட பன்முகச் சிந்தனைகள் உள்ளவர்களாகத் தலைமுறைகளை வளர்ப்பதற்கு மாறாக, ஒரே மாதிரியான, கார்ப்பரேட் பீடங்களுக்குக் கட்டுப்பட்ட, கேள்வி கேட்கத் துணியாதவர்களாக வார்க்கிற திட்டமாகவே தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டிருக்கிறது என்று கல்வியாளர்கள் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். அந்த வார்ப்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே மும்மொழிக் கொள்கையும்.

 

தமிழ்நாட்டு மக்கள் நடத்துகிற போராட்டம் ஒட்டுமொத்த நாட்டையும்  இப்படிப்பட்ட வார்ப்புச் சூதுகளிலிருந்து காப்பாற்றுகிற பேரியக்கமே.

*******

-'ஆனந்த விகடன்’ இணையப் பதிப்பில் (பிப்ரவரி.22, 2025) வெளியான எனது கட்டுரை. 

No comments: