சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தில் புளுகிய டிரம்ப், களமிறங்கிய எலான் மஸ்க்! நாசாவில் தனியார் ஆதிக்கம்?
உலகம் முழுதும் மக்கள் மனங்களில் ஒரு பதற்றத்தைப் பதித்து, நல்லபடியாக முடிய வேண்டுமே என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அறிவியல் நிகழ்வு சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர் இருவரது விண்வெளிப் பயணம். சென்ற ஆண்டு ஜூன் 5 அன்று விண்ணில் பாய்ந்து, அவர்கள் சென்ற விண் ஓடத்தில் ஹீலியம் கசிந்து, பிற தொழில்நுட்பக் கோளாறுகளும் சேர்ந்து, அனைத்து நாட்டு விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இணைந்து, எப்போது திரும்புகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்து, இறுதியில் வேறொரு விண் ஓடத்தில் திரும்பி வந்து, இந்த மார்ச் 18 அன்று வெற்றிகரமாகக் கடலிறங்கினார்கள்.
இந்த 286 நாள் அனுபவம் ஆராய்ச்சி உலகத்திற்குப் பயனுள்ள பல தகவல்களைப் பெற்றுத் தரும். அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுகிறவர்கள், ஆண்டவன் செயல் என நம்புகிறவர்கள் எல்லோருமே மகிழ்ந்தார்கள், நிம்மதியடைந்தார்கள். அதிலும் இந்தியாவில், இங்கேயிருந்து சென்ற குடும்பத்தின் வாரிசு சுனிதா என்பதால் கொண்டாட்ட உணர்வு கூடுதலாக இருந்தது.
‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர்களின் ஒட்டுமொத்த இயக்கத்தில் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண் ஓடத்தில் சுனிதா, வில்மோர் இருவரும் புறப்பட்டது முதல், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண் ஓடத்தின் டிராகன் கூடு அவர்களுடன் ஃபுளோரிடா கடலில் விழுந்தது வரையில் தேதி வாரியாக செய்தித் தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. ஆகவே அவற்றை இங்கு மறுபடியும் பகிர வேண்டியதில்லை. டிராகன் கூடு “ஸ்ப்ளாஷ்டவுன்” ஆனபோது பல மடங்கு வேகத்தில் தெறித்த கடல்நீர் (அப்படித் தெறிக்கும் என்பதால்தான் இந்தப் பெயர்) போல, பல வினாக்களும் விடைகளும் தெறிக்கின்றன. அதன் சில துளிகளைப் பிடித்துவைக்கலாம்.
சிக்கிக்கொண்டார்களா?
முதல் துளி, எல்லோருடைய பதற்றத்தையும தணியவைத்துத் திரும்பி வந்தது 58 வயது சுனிதா வில்லியம்ஸ் மட்டுமல்ல. 61 வயது புச் வில்மோர் கூடத்தான். அவர்களுடன், ஏற்கெனவே விண்வெளி நிலையத்தில் பணி செய்துகொண்டிருந்த அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோரும், அவர்களது பணிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் அதே விண் ஓடத்தில் திரும்பி வந்திருக்கிறார்கள். அப்படி நால்வரும் திரும்பி வரும் வகையில் நாசா வல்லுநர்கள் புதிய திட்டத்தை வடிவமைத்திருந்தார்கள். குழுவின் கேப்டன் என்பதால் சுனிதா பெயர் முன்னிலைக்கு வருவது இயல்பு. ஆனால், அவரது குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்க்கும் நலம்நாடிகளுக்கும் ஏற்பட்ட அதே பதற்றமும் கவலையும் புச் வில்மோர் சார்ந்தோருக்கும் ஏற்பட்டிருக்கும் அல்லவா?
ஆனால், விவரம் அறிந்தவர்கள் அப்படிப் பதற்றமும் கவலையும் அடைந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக அறிவியல் தளத்தில் இயங்குகிறவர்கள் வெகு இயல்பாகவே செய்திகளைக் கவனித்து வந்தார்கள். ஏனென்றால், பெரும்பாலோர் நம்ப வைக்கப்பட்டது போல, எட்டு நாள் திட்டமாக மட்டுமே சென்றிருந்த சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனரில் விபத்தாக ஏற்பட்ட கோளாறுகளைத் தொடர்ந்து விண்வெளி நிலையத்தில் சிக்கிக்கொள்ளவில்லை. தினசரிச் செய்தித் தலைப்புகளில் நரம்பு துடிக்க வைக்கப்பட்டது போல அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் தவித்துக்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கிறார் அறிவியல் எழுத்தாளரும் விஞ்ஞான் பிரசார் சபா மூத்த அறிவியலாளருமான தா.வீ. வெங்கடேஸ்வரன் (நியூஸ் 18 நேர்காணல்).
நாசா நிர்வாகமும் அந்த இருவரும் எதிர்பாராமல் சிக்கிக்கொண்டுவிட்டார்கள் என்றோ, அவர்களை மீட்பதில் சிரமம் இருக்கிறது என்றோ அறிவிக்கவில்லை. அடுத்தடுத்து சில தேதிகளை முடிவு செய்து, தவிர்க்கவியலாத இயற்கையான சூழல் உள்ளிட்ட காரணங்களால் அதைத் தள்ளிப்போட்டு வந்தார்களேயன்றி அவர்களைக் கைவிட்டுவிடவில்லை.
மாறாக, “இருக்கிறதுதான் இருக்கிறீர்கள், கூடுதலாக அங்கேயே இருந்து ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருங்கள் என்று உற்சாகத்துடன் ஈடுபடுவதற்கான வேலையைத்தான் அளித்தார்கள். இரண்டாவது முறையாகச் சென்றிருந்த 58 வயது சுனிதா, 61 வயது வில்மோர் இருவருமே, இத்தனை வயதுக்கு மேல் இப்படியொரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கப் போவதில்லை என்ற புரிதலோடும், ஆராய்ச்சியாளர்களுக்கே உரிய உற்சாகத்தோடும், கால நீட்டிப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவ்வாறு அங்கே தங்க வைத்திருக்க முடியாது – அதற்கான விண்வெளிச் சட்ட விதிகள் இருக்கின்றன,” என்கிறார் தா.வீ.வெ.
அங்கிருந்தே பேட்டி
பொதுவாக ஆறு மாத கால ஆராய்ச்சிக்கு என்று அனுப்பப்படும் குழுக்களைப் போலவே இவர்களும் அங்கே ஏற்கெனவே இருந்த அமெரிக்க–ரஷ்ய ஆராய்ச்சியாளர்களோடு இயல்பாகத் தங்கியிருந்தார்கள். அழைத்துப் போவதற்கு அடுத்த வண்டி எப்போது வரும் என்று காத்துக்கொண்டிருக்காமல், தங்களின் ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்கள். “நாசாவால் கைவிடப்பட்டுவிட்டதாக நாங்கள் உணரவில்லை, இங்கே சிக்கிக்கொண்டுவிட்டதாகவும் நினைக்கவில்லை. இயல்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் கவலைப்படுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். கவலைப்பட வேண்டியதில்லை,” என்று இடையில் விண்வெளி நிலையத்திலிருந்தே பேட்டி கொடுத்தார் சுனிதா.
அது ஏதோ நம் ஊரின் அரசு வானொலி, தொலைக்காட்சியில் சில விவசாயிகள் தோன்றி, “அரசாங்கம் கொண்டு வந்த திட்டத்தால எங்க வயல்ல இப்ப நேரடியா தங்கம் வைரம் வெள்ளி அறுவடை செய்றோமுங்க,” என்று “தாங்களாகவே” முன்வந்து பேட்டி கொடுப்பார்களே, அதைப் போன்றதல்ல. கடந்த பிப்ரவரி 7 அன்று சிபீஎஸ்நியூஸ் (CBSNEWS) தொலைக்காட்சியின் செய்தியாளர் வில்லியம் ஹார்வுட் கேட்ட கேள்விக்கு சுனிதா கூறிய பதில் இது. இணையத்தின் தகவல் தேடல் தளங்களில் அந்தப் பேட்டி காணொளியாகவே கிடைக்கிறது.
பிறகு ஏன் “சிக்கிக்கொண்டுவிட்டார்கள்” என்ற எண்ணம் எங்கும் பரவியது? தானாக எதுவும் நடக்காதல்லவா – அந்த எண்ணம் பரப்பப்பட்டது. அப்படிப் பரவட்டும் என்றே முதலில் தூவிவிட்டவர் டொனால்ட் டிரம்ப்! இரண்டு ஆராய்ச்சியாளர்களும் விண்வெளி நிலையத்தில் இணைந்தபோது, அமெரிக்காவில் அரசுத் தலைவர் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்போது டிரம்ப், “நமது அருமையான இரண்டு விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் விண்வெளி நிலையத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டு வருவதற்கு ஜோ பைடன் அரசு எதுவும் செய்யவில்லை. நான் தேர்ந்தெடுககப்பட்டால், என் நண்பரும் விண்வெளிப் பயணங்களை நடத்துகிறவருமான எலான் மஸ்க் வசம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பேன். அவர் அவர்களை மீட்பார்,” என்று போகிற இடமெல்லாம் பேசினார்.
‘எக்ஸ்’ தகவல் பகிர்வுத் தளத்தின் முதலாளி எலான் மஸ்க்கும், தன் பங்கிற்கு, விண்வெளிச் சந்தையிலும் தனது ஆதிக்கத்தை நிறுவிக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு என்று புரிந்துகொண்டவராக, டிரம்ப்பின் புளுகுக்கு ஆதரவாகப் பேசினார். “எங்கள் டிராகனை அனுப்பி சுனிதாவையும் வில்மோரையும் மீட்டு வருவேன்,” என்று முழங்கினார். இதையெல்லாம் எதிர்த்துப் பேசுவதற்கான வலிமையும் தெளிவும் இல்லாதவராக ஜோ பைடன் இருந்ததும் இது பரவுவதற்குத் தோதாக அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தது. இப்படியாக இவர்கள், பைடனைத் தாக்குவதற்காக, அறிவியலாளர்களை மட்டுமல்லாமல், அறிவியலையே அவமானப்படுத்தினார்கள்.
“சிக்கிக்கொண்டார்கள்” என்று செய்தி பரப்புவதில் ஒரு ”கிக்” இருக்கிறது என்று பல ஊடக நிறுவனங்கள் இதையே ஊதிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே கூறியது போல, இந்தியாவில் (முன்பு கமலா ஹாரிஸ் விசயத்தில் மிகைப் பாசத்தோடு யாகமெல்லாம் நடத்தப்பட்டது போல) அந்த ‘கிக்’ வணிகம் நன்றாக எடுபட்டது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில ஊடகங்கள் மட்டுமே நாசா என்ன சொல்கிறது என்று, உணர்ச்சிவசப்படுத்தாத தகவல்களை வெளியிட்டு வந்தன.
நாசாவில் தனியார்
தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். மறுபடி வெள்ளை மாளிகைக்குள் புகுந்தார். அந்த வேகத்தோடு, தன் வாக்குறுதிப்படி இருவரையும் மீட்பதற்காக விண்வெளிக்கு அனுப்புவதற்குத் தனியார் நிறுவன ஓடங்களைப் பயன்படுத்தலாம் என்று நாசாவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். எலான் மஸ்க்கின் ஓடம் தேர்வு செய்யப்பட்டது (வேறு யாரும் போட்டியிடுவதற்கான “வெளி” இருந்ததா என்று தெரியவில்லை). இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்துகொள்வது நல்லது – நாசா வளாகத்தில் தனியார் நுழைவு புதிதல்ல. அமெரிக்கச் சூழலில் அது வியப்புக்கு உரியதும் அல்ல. நிறுவனத்திற்கான இயந்திரங்களையும் கருவிகளையும் தயாரித்துக் கொடுப்பது, பல பணிகளை ஏற்றுச் செய்வது என சிறிதும் பெரிதுமாகப் பல தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே ஈடுபட்டிருக்கின்றன.
சுனிதா, மோர் இருவரும் இந்த முறை விண்வெளிக்குச் சென்றதே கூட, விமானத் தயாரிப்பாளர்களான போயிங் நிறுவனம், எதிர்கால விண்வெளிப் போக்குவரத்து வணிகத்துக்காக வடிவமைத்த ஸ்டார்லைனர் விண் ஓடத்தின் திறனைச் சோதிப்பதற்காகத்தான். ஆம், தனியார் நிறுவனத்தின் தயாரிப்பை இயக்கிப் பார்ப்பதற்குத் தனது இரண்டு அறிவியலாளர்களை அனுப்பியது நாசா. அதில் இருந்த முக்கியமான கோளாறுகளைக் கண்டுபிடித்ததன் மூலம் போயிங் நிறுவனத்திற்கு நாசாவிடமிருந்தும் சுனிதா, மோர் ஆகியோரிடமிருந்தும் பெரியதொரு உதவி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
ராக்கெட் லேப், ப்ளூ ஆரிஜின், வர்ஜின் கேலக்டிக், ஏர் பஸ், லாக்ஹீட் மார்ட்டின், நார்த்ரோப் க்ரூமன் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் செயற்கைக் கோள் தயாரிப்பு, ராக்கெட் ஏவுதல் உள்பட விண்வெளிச் சந்தையில் ஈடுபட்டிருக்கின்றன. இவர்களில் போயிங் கொஞ்சம் முன்னால் இருக்கிறது. தற்போதைய “மீட்பு” சாகசம் மூலமாக ஸ்பேஸ் எக்ஸ் முன்னுக்கு வந்திருக்கிறது. ஆகவே, நாசா வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன.
அறிவியல் என்னாகும்?
இப்போது பல்வேறு மட்டங்களிலும் கவலையோடு புருவங்களைஉயர்த்தி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. தளவாடங்கள் தயாரிப்பு, விண் ஓடங்கள் வடிவமைப்பு, ஆராய்ச்சிக் கூடம் ஆகியவற்றோடு நிறுத்திக்கொண்டால் கேடில்லை, விண்வெளி ஓடங்களை இயக்குவது, விண்வெளி நிலையத்தையே நிறுவி நிர்வகிப்பது என்றெல்லாம் தனியார் நிறுவனங்கள் புகுந்துவிடுமானால் எதிர்கால விண்வெளி அறிவியலின் நிலைமை என்ன ஆகும்?
தற்போதுள்ள அனைத்து நாட்டு விண்வெளி நிலையம் பெயருக்கேற்ப அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானதாகும். 1998ஆம் ஆண்டில் அதனைக் கட்டியமைத்ததில் அமெரிக்காவின் நாசா, ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இரு நிறுவனங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. வேறு பல நாடுகளின் பங்களிப்பும் உண்டு. ஆயினும் உலகத்திற்குப் பொதுவானதாக அது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் ‘இஸ்ரோ’ நேரடியாக அதன் கட்டுமானத்தில் பங்களிக்கவில்லை என்றாலும், விண்வெளி ஆராய்ச்சிகளில் கூட்டுச் சேர்ந்து பங்கேற்று வருகிறது. அந்த நிலையத்தைப் பயன்படுத்துவதிலும் கூட, ஒரு பகுதியில் அமெரிக்க அரசின் சட்டங்களும் இன்னொரு பகுதியில் ரஷ்யச் சட்டங்களும் நடைமுறையில் இருக்கும். அங்கே என்ன நடந்தாலும் இந்த நாடுகளுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில், தாழ்வான சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நிலையத்தின் செயல்பாடு அடுத்த ஐந்தாண்டுகளில் முடிவுக்கு வரப்போகிறது. அதில் உள்ள தொழில்நுட்பங்கள் பழையதாகிவிட்டதால் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகின்றன. ஆகவே, காலாவதியாகப் போகிற இந்த நிலையத்தின் செயல்பாட்டை, 2030ஆம் ஆண்டில் நிறுத்திவிடுவதென்று நாசா, ரோஸ்கோஸ்மோஸ் இரு நிர்வாகங்களும் முடிவு செய்திருக்கின்றன. அதனை பசிபிக் பெருங்கடலில் விழ வைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அல்லது அப்படியே விண்வெளியில் நொறுங்கிப்போக விடப்படலாம். விண்குப்பைகள் குறித்த கவலைகள் இருப்பதால் அதை என்ன செய்யப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
புதிய விண்வெளி நிலையம் முன்போலக் கூட்டு முயற்சியில் கட்டப்படுமா என்று இரு தரப்பிலிருந்தும் தகவல் எதுவும் இல்லை. ஆனால் தனித்தனியே தங்களது சொந்த நிலையங்களைக் கட்டுவது குறித்து நாசா, ரோஸ்கோஸ்மோஸ் இரண்டுமே திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதில் அமெரிக்க–ரஷ்ய அரசியல் உறவு இணக்கமாக இல்லை என்ற பின்னணியும் இருக்கிறது.
விண்வெளி நிலையத்திற்காகப் பெருமளவில் முதலீடு செய்ய முன்பு தனியார் நிறுவனங்கள் தயாராக இல்லாத நிலையில் அரசுகளின் நிதியளிப்போடு 27 ஆண்டுகளுக்கு முன் ஐஎஸ்எஸ் கட்டப்பட்டது. அதன் காலம் முடிந்த பிறகு தங்களின் நிலையங்களைக் கட்டுவதற்கு விண்வெளி கார்ப்பரேட்டுகள் தயாராக இருக்கிறார்கள். நாசாவைப் பொறுத்தவரையில் அப்படிப்பட்ட தனியார் நிறுவனங்களோடு சேர்ந்து புதிய நிலையத்தைக் கட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் முனைப்புக் காட்டி வருகிறது. ஆக்ஸியம் ஸ்பேஸ், நானோராக்ஸ் இவற்றுடன் ஏற்கெனவே பார்த்த ப்ளூ ஆரிஜின், நார்த்ராப் க்ருமன் ஆகிய நிறுவனங்களும் போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருக்கின்றன.
குளங்களை ஆக்கிரமித்தது போல
உலக நாடுகளுக்கெல்லாம் –ஏன் நம் பேரண்டத்திற்கே பொதுவான– விண்வெளி, இங்கே ஏரிகளையும் குளங்களையும் ஆக்கிரமித்த நிறுவனங்களின் வளாகங்களைப் போல, தனியார் துண்டு விரிக்கும் சந்தைக் களமாக மாறுமானால் அந்த நிர்வாகங்கள் எந்த நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்படும்? அவற்றின் சொந்தச் சட்டங்கள்தானே நடைமுறைப்படுத்தப்படும்? விண்ணில் குவியும் குப்பைகள் பற்றிக் கவலைப்படுவார்களா? உலக அறிவியலாளர்களின் ஆராய்ச்சிகள் என்னாகும்? அவர்கள் எலான் மஸ்க்குகளின் வணிக இலக்குகளுக்குச் செயல்திட்டம் வகுக்கிறவர்களாக மாற்றப்பட்டுவிட மாட்டார்களா?
அரசு சார்ந்த நிறுவனங்களின் பயணம் அறிவியல் கண்டுபிடிப்புகளை நோக்கியதாக இருக்க, தனியார் நிலையங்கள் ஏற்பாடு செய்யும் விண்வெளிப் பயணங்களின் நோக்கம் (விண்வெளிச் சுற்றுலா நெடுந்தொலைவுக் கனவாகிவிடாது என்றாலும்) வணிகமயமாக்குவதாக மட்டும்தானே இருக்கும்? அப்படியொரு நிலைமை தலைதூக்குமானால், விண்வெளி அறிவியலே ஒரு கட்டத்தில் ‘ஸ்ப்ளாஷ்டவுன்’ ஆகிவிடாதா? அக்கறையுள்ள அறிவியலாளர்கள் அதை மீட்பதற்கு முயல்வார்கள்தான், அது பெரும் போராட்டமாக அல்லவா இருக்கும்?
இன்னொரு முக்கியமான கேள்வி – நிலையங்களிலும் அங்கே செல்கிற விண் ஓடங்களிலும் மோசமான விபத்துகள் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம் – அப்போது யார் பொறுப்பேற்பார்கள்? ஸ்டார்லைனர் பிரச்சினைக்குப் பிறகு, யாருக்காக சுனிதாவும் வில்மோரும் அங்கே போனார்களோ அந்த போயிங் நிர்வாகம் பெறுப்பேற்கவில்லை. நாசா வல்லுநர்கள்தான் அவர்களைக் கொண்டுவந்தார்கள்.
ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா கார் நிறுவனங்களின் தொழிலாளர்கள் பாதுகாப்பு, மோசமான பணிச்சூழல், அதிக வேலை நேரம், பங்குச் சந்தையில் ஆரோக்கியமற்ற ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும் அதிரடிகள், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் என மாற்றிய பிறகு செய்த மாற்றங்கள், தொழிற்சாலைகளில் கட்டுப்படுத்தப்படாத கரிமவாயு வெளியேற்றத்தால் சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்குப் பங்களிப்பு ஆகிய பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எலான் மஸ்க் மேல் உண்டு. இதற்கே பொறுப்பேற்காதவர், விண்வெளி விபரீதங்களுக்குப் பொறுப்புத்துறப்பு அறிவிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
‘ஸ்ப்ளாஷ்டவுன்’ தெறிப்பு நீர் முகத்தை உதறிக்கொள்ள வைக்கிறது.
•••••••••••••••
(‘விகடன்’ இணையப் பதிப்பில் மார்ச் 23, 2025இல் வெளியாகியுள்ள எனது கட்டுரை)
No comments:
Post a Comment