ஆலயங்கள்
முதல் நாடகங்கள் வரையில் எங்கும் சாதியம் மிகக் கடினமாகப் புரையோடியிருந்த காலம் இருந்தது.
ஆலயத் தேர்கள் சேரிக்குள் நுழைந்ததில்லை, நாடகக் கொட்டகைகளுக்குள் சேரி மக்கள் நுழைந்ததில்லை
– நுழைய விடப்பட்டதில்லை. அவர்களுடைய குடியிருப்புப் பகுதிகளுக்கே வந்த கூத்துக் கலைஞர்கள்தான்
நாடக விருந்தளித்தார்கள்.
இப்படியிருந்த தமிழ் மண்ணின்
கலைக்களத்தில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியது சினிமா. அனைத்து சமூக மக்களும் ஒரே கூடத்தில் அமர்ந்து படம்
பார்க்கிற சூழல் ஏற்பட்டது ஒரு மகத்தான மாற்றம். அனைத்துத் தரப்பினரும் அரங்கிற்கு
வந்தால்தான் வெற்றிபெற முடியுமென்ற வணிகத்தோடு இணைந்த கலையாக்கமாக இருந்தது மட்டுமே
இதற்குக் காரணமல்ல. நாட்டின் விடுதலைப் போராட்டத்தோடு இணைந்ததாக இங்கே பிராமணர் அல்லாதோர்
இயக்கம், சுயமரியாதை இயக்கம், ஆதி திராவிடர் இயக்கம், பொதுவுடைமை இயக்கம். ஒரு பகுதி
தேசிய இயக்கம் ஆகியவை ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்தும் திரையரங்குகள் இவ்வாறு உருவெடுத்தன.
திரையரங்குகள் கொண்டுவந்த இந்த மாற்றம் திரைப்படங்களில் உடனடியாகப் பிரதிபலித்துவிடவில்லை.
தொடக்கத்தில் மேடை நாடகங்களும் புராணக் கதைகளுமே படமாக்கப்பட்டன. ஆகவே அந்தப் படங்களின்
கதாபாத்திரங்கள் சாதியக் கோபுரத்தின் மேல் தட்டுகளில் தங்களை வைத்துக்கொண்ட பிரிவுகளைச்
சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அவர்களுடைய பிரச்சினைகள்தான் பேசப்பட்டன. மற்ற பிரிவுகளைச்
சேர்ந்த மக்கள் அன்றைய படங்களில் முக்கியத்துவமற்ற துணைப் பாத்திரங்களாகவே சித்தரிக்கப்பட்டார்கள்.
நந்தனார்கள்
பக்திக் கதைகளில் ஒன்றாக மக்களிடையே பரவியிருந்த நந்தனார்
வரலாற்றைத் திரைக்குக் கொண்டுவரும் முயற்சிகளும் தொடங்கின. 19ஆம் நூற்றாண்டில் கோபாலகிருஷ்ண
பாரதியார் எழுதிய கதை நாடக மேடைகளிலும் வலம் வந்துகொண்டிருந்தது. அடுத்த நூற்றாண்டின்
முற்பகுதியில், ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் அறிமுகமாகாததால் மௌனப்படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த காலத்தில், 1923இல் ஒரு ‘நந்தனார்’ வந்தது. படச்சுருளில் ஒளியோடு ஒலியும்
பதிவாகி பேசும் படங்கள் வரத்தொடங்கிய பிறகு, 1930இல் கதாபாத்திரங்கள் வாய்திறந்து பேசிய
‘நந்தனார்’ வந்தது. 1935இல் ‘பக்த நந்தனார்’ வந்தது – அதில், தன் தனித்துவமான குரலால்
தமிழ் மக்களைச் சுண்டியிழுத்தவரான கே.பி. சுந்தராம்பாள் நந்தனாராக நடித்திருந்தார்.
இந்தப் படங்கள் ஓரளவுக்குத்தான் வணிக வெற்றியைப் பெற்றன. 1942இல், திரை வணிக நுட்பங்கள்
அறிந்தவரும் பத்திரிகையாளருமான எஸ்.எஸ். வாசன் தனது ஜெமினி நிறுவனத்திற்காகத் தயாரித்த,
எம்.எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா உள்ளிட்டோர் நடித்த, முருகதாஸ் என்ற
முத்துசாமி ஐயர் இயக்கிய ‘நந்தனார்’ மிகப்
பெரிய வெற்றியை ஈட்டியது.
ஒதுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவரான சிவபத்தர் நந்தன், கிராம மக்களுடன் தஞ்சையின் திருப்புன்கூர் கோவிலுக்குச் செல்கிறார்.
கோவிலையும் கூட அவர்கள் தரிசிக்கவிடாமல் நந்தி
சிலை மறைக்கிறது. அவரது பத்தியைக் கண்டு சிவன் ஆணையிட நந்தி விலகிக்கொள்ளும் அதிசயம் நடக்கிறது. ஊர் திரும்பும்
நந்தன் தொடர்ந்து நிலவுடைமையாளரான வேதியரின் நிலத்தில் உழைக்கிறார். ஒருநாள் சிதம்பரம்
கோவிலுக்குச் செல்ல அனுமதி கேட்க, அவரை அனுப்ப மனமில்லாத வேதியர், 40 ஏக்கர் நிலத்தில்
பயிர் செய்த பிறகுதான் போக முடியும் என்ற கடுமையான நிபந்தனையை விதிக்கிறார். வயலில்
நிற்கும் நந்தன் தன்னால் எப்படி முடியும்
திகைத்துப்போய், சிவன் பெருமையைப் பாடியபடியே மயங்கி விழுகிறார். சிவனின் அருளால் அந்த
ஒரே இரவில் 40 ஏக்கரிலும் பயிர் விளைகிறது. நந்தனின் பக்திச் சிறப்பை அறியும் வேதியர்
அவருடைய காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறார். சிதம்பரத்தில், அவர் நெருப்பைக் கடந்து
தனது பறையர் நிலையை நீக்கி புனித உடல் பெற்றால்தான் கோவிலுக்குள் நுழைய முடியும் என்று
பிராமணப் பூசாரிகளில் சிலர் தடுக்கிறார்கள். சிவனைத் துதித்தபடி நெருப்பில் இறங்கி,
புனிதச் சாம்பல் பூசப்பட்ட உடலோடு வெளியே வரும் நந்தனாரை இறைவன் தன்னோடு ஐக்கியப்படுத்திக்கொள்கிறார்.
ஒரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு
இருந்த தடைகளைச் சித்தரித்தாலும், இன்னொரு பக்கம், சிவபக்தியின் காரணமாக, கருப்பசாமி
கோயில் விழாவில் ஆடுகள் பலியிடப்படுவது தவறு என்று பரப்புரை செய்து சேரி மக்களை நந்தன்
மாற்றுவது போன்ற காட்சிகளும் இருந்தன. பறையர் அடையாளத்துடனேயே நந்தனால் இறைவனை அடைய
முடியவில்லை. பறையர் எழுச்சியாக அல்லாமல் பக்தியின் முதிர்ச்சியாகப் படம் முடிந்தது.
இருப்பினும், ஒரு பழைய கதையைச் சார்ந்து தீண்டாமை பற்றி ஏதோவொரு கோணத்தில் பேசிய படமாக
அது அமைந்தது. (நாடகங்களாலும் திரைப்படங்களாலும் தமிழகத்தில் பரவியிருக்கிற நந்தனார்
கதை உண்மையான வரலாறல்ல, நந்தனுக்கு அப்படிப்பட்ட கொடுமைகள் செய்யப்படவில்லை, கோபாலகிருஷ்ண
பாரதியார் உண்மைக் கதையை மாற்றிவிட்டார் என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.)
புறப்பட்ட புதிய
கதைகள்
பக்தியிலிருந்து மாறுபட்ட சில புதிய முயற்சிகளும் சிறிய அளவில் தொடங்கின.
1939ல் வெளியான ‘தியாகபூமி’ அப்படிப்பட்டதுதான். அதுவும் எஸ்.எஸ். வாசன் தயார்த்ததுதான். கல்கி எழுதி, கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் பாபனாசம்
சிவன், எஸ்.டீ. சுப்புலட்சுமி நடித்திருந்தார்கள். மையப் பாத்திரமான சாம்பு சாஸ்திரி,
புயலால் பாதிக்கப்பட்ட சேரி மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பார். ஆச்சாரமான குடும்பத்தைச்
சேர்ந்தவர் இப்படிச் செய்து புனிதத்தைக் கெடுப்பதா என்று சக பிராமணர்கள் அவரை சமூகத்திலிருந்து
விலக்கி வைப்பார்கள். கதை பிறகு அவரது மகளின் வாழ்க்கை, அவளுக்குத் துரோகமிழைக்கும்
கணவன் மனம் திருந்துவது, இருவருமாக தேசிய இயக்கத்தில் இணைவது என்றெல்லாம் போகும், இறுதியில் சாஸ்திரி தனது பேத்தியுடன்
சேரிக்குத் திரும்பிச் செல்வதாக முடியும். மையக் கருவாக சாதிப் பாகுபாட்டை எடுத்துக்கொள்ளவில்லை
என்றாலும், ஒரு முக்கிய நிகழ்வாக அதை முன்வைத்த வகையில், சாதிப் பிரச்சினையை அப்போதே
தொட்டுக்காட்டிய தமிழ்ப் படமாக இது அடையாளம் பெற்றது.
வளர்ந்து வந்த திராவிட இயக்கம் சார்ந்த பலர் திரைப்படத் துறைக்கு வந்தார்கள்.
அவர்களுடைய படங்கள் இயக்கம் முன்வைத்த சமூக சமத்துவம் உள்ளிட்ட கருத்துகளைக் கொண்டிருந்தன.
அண்ணா முதலியோரின் கைவண்ணம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. கலைஞர் கருணாநிதி எழுத்தில்,
சிவாஜி கணேசன் அறிமுகமான, நேரடியாக சமூக விமர்சனம் செய்த ‘பராசக்தி’ படம் அரசியலாக
ஒரு திருப்புமுனை. ஆயினும், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்தோர் தயாரித்த பல படங்கள்
சாதிப் பிரச்சினைகளை ஆழமாக வெளிப்படுத்தத் தவறின.
1956இல் லீனா செட்டியார் தயாரிப்பில், டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான
‘மதுரை வீரன்’ படம், ஒரு பகுதி மக்களால் குலசாமியாக வணங்கப்படுகிறவனைப் பற்றிக் காலங்காலமாக
வழங்கிவரும் நாட்டுப்புறக் கதையை எடுத்துக்கொண்டது. ஆனால், சாதியைக் கடந்து காதலித்த
குற்றத்திற்காக மாறு கை மாறு கால் வெட்டப்பட்ட மூலக் கதையைப் படத்தில் அடியோடு மாற்றியிருந்தார்கள்.
படக்கதையின்படி ஒரு மன்னரின் மகன்தான் அவன், ஆனால் அரசுக்கு ஆகாத குழந்தை
என்ற சோதிடரின் எச்சரிக்கையால் காட்டில் விடப்பட்டு, செருப்பு தைக்கிற குடும்பத்தால்
வளர்க்கப்படுகிறான், இளவரசி பொம்மியைக் காதலித்து சதிகளை மீறி கைப்பிடிக்கிறான், பிறகு
ஒரு தளபதியாக மன்னர் திருமலை நாயக்கர் அரண்மனையில் நுழைகிறான், நாட்டிய மங்கை வெள்ளையம்மாவுடன்
சேர்ந்து எதிரிகளை வீழ்த்துகிறான், பொறாமைக்கார அமைச்சர்கள் பொய்யாகப் போட்டுக்கொடுக்க,
அவனுக்குத் தண்டனை அளிக்கிறார் மன்னர். ஒரு கையும் காலும் வெட்டப்பட்ட நிலையிலும் கூட்டத்தில்
பதுங்கியிருந்த ஒரு திருடனைக் கண்டுபிடித்து அவனைக் கொன்றுவிட்டு, கடமையைச் செய்த மனநிறைவோடு
தன்னைத்தானே கழுத்தை வெட்டி உயிரிழக்கிறான் வீரன், அவனோடு தங்களையும் மாய்த்துக்கொள்ளும்
பொம்மியும் வெள்ளையம்மாவும் அவனோடு சொர்க்கத்தில் இணைகிறார்கள். புழங்கிவரும் கதை இப்படி
மாற்றப்பட்டாலும், தங்களுடைய தலைவனாக இருந்தவனைப் பற்றிய படம் என்று, குறிப்பாக அருந்ததியர்
மக்கள் கொண்டாடினார்கள். தாழ்த்தப்பட்ட மக்களிடையே
எம்ஜிஆர் செல்வாக்கும், அவர் மூலம் திமுக செல்வாக்கும் வளர்வதற்கு அந்தப் படம் ஒரு
முக்கியக் காரணமாக அமைந்தது.
போற்றிய படங்கள்
இப்படி அப்போதொன்றும்
இப்போதொன்றுமாக சில படங்கள் வந்தன என்றாலும், பேசும்பட ஒலிப்பதிவு நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும்
சமுதாய முன்னேற்றத்தைத் தடுக்கும் வலிமையான சுவரான சாதியம் பற்றிப் பேசுவதைப் பொறுத்த
வரையில் தமிழ் சினிமா மௌனப் படமாகவே இருந்து வந்தது. எப்போதேனும் வந்த சில மாறுபட்ட
படங்களும் மேலோட்டமாகவே சாதிப் பிரச்சினைகளை அணுகின.
சிவாஜி கணேசன்,ஜெயலலிதா
நடிக்க மாதவன் இயக்கிய ‘பட்டிக்காடா பட்டனமா’, விஜய்காந்த், சுகன்யா நடித்து ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் வந்த ‘சின்ன கவுண்டர்’, அதே இயக்குநரிடமிருந்து ரஜினிகாந்த்,
மீனா நடித்து வெளியான ‘எஜமான்’, விஜயகுமார், குஷ்பு நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார்
இயக்கியிருந்த ‘நாட்டாமை’ உள்ளிட்ட சில குறிப்பிடத்தக்க படங்கள், குறிப்பிட்ட இடைநிலைச்
சாதிகளைச் சேர்ந்த நாயகர்களின் பெருமைகளைப் போற்றின. அவர்களின் நியாயமான செயல்களால்
பிற சாதி மக்களும் அவர்களை வணங்குவார்கள். ‘எஜமான்’ படத்தில் ஊர்தலைவர் வானவராயன் நடந்துசெல்லும்
பாதையில் அவர் காலடி பட்ட மண்ணை எடுத்து எளிய மக்கள் நெற்றியில் பூசிக்கொள்வார்கள்.
கிராமத்துக் கதை என்ற பெயரில் இப்படிப்பட்ட படங்கள் நிலவுடைமைத்துவப் பெருமையை நிலைநாட்டவே முயன்றன.
கமல்ஹாசன் தயாரித்து
நடித்த, அவருடன் சிவாஜி கணேசன், ரேவதி, நாசர் நடித்த, பரதன் இயக்கத்தில், படைப்பு என்ற
வகையில் பலவகையான பாராட்டுகளுக்கும் உரியதாக ‘தேவர் மகன்’ வந்தது. ஆனால், ஊரின் பெரிய
மனிதரான பெரியசாமித் தேவர், அவரை அவமானப்படுத்தும் அவரது சாதியைச் சேர்ந்தவனான மாயத்தேவன்,
தந்தையின் பெருமையை மீட்கும் மகன் சக்திவேல் என்ற கதைப்பாட்டையில் பிற பிரிவுகளின்
மக்களை விசுவாசிகளாக மட்டுமே சித்தரித்தது.
பிராமணக் குடும்பத்தவரான வாலி எழுதி, தலித் குடும்பம் சார்ந்தவரான இளையராஜா இசையமைத்த
“போற்றிப் பாடடி பொண்ணே” பாட்டு குறிப்பிட்ட சமூகத்தினரது நிகழ்வுகளில் அவர்களது தேசியகீதம்
போல ஒலிக்கிறது.
சேரன் இயக்கத்தில்,
ஹென்றி தயாரித்த ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் பார்த்திபன், மீனா, விஜயகுமார் நடித்திருந்தார்கள்.
தலித் இளைஞனான பாரதி, தேவர் சாதியைச் சேர்ந்தவரும் நிலவுடைமையாளருமான வெள்ளைச்சாமியிடம்
வேலை செய்கிறான். அவரது மகள் கண்ணம்மாவுக்கு
அவன் மீது காதல் மலர்கிறது. ஆனால் பெரியவர்
மீதான விசுவாசத்தால் அவன், அவளை விரும்பினாலும் கூட, ஒதுங்குகிறான். சாதி வேறுபாடு
பார்க்காதவரான பெரியவர், அவள் யாரையோ காதலிக்கிறாள் என்று கண்டுபிடிக்கிறார். அவள்
தற்கொலை செய்துகொள்ள, சிதையில் பாரதி குதித்து தன்னையே எரித்துக்கொள்கிறான். அவனைத்தான் கண்ணம்மா காதலித்தாள்
என்று அப்போதுதான் தெரியவருகிறது. சாதி வேலி தாண்டிய காதல் எதிர்கொள்ளும் சவாலைச் சொல்ல
வந்த படம், சமூக நிலவரங்களுக்குள் ஆழமாக இறங்காததுடன், விசுவாசத்தையே முன்வைத்தது.
ஒரு பஞ்சாயத்தில் தன் சாதியைச் சேர்ந்தவனுக்கே தண்டனையளிக்கும் பெரியவரைக் கும்பிட்டு
நன்றி தெரிவிப்பவர்களாகவே சேரி மக்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
படித்து வாங்கிய பட்டமா?
தமிழ் சினிமாவின் கலை வெளிப்பாட்டில் புதுப்பாதை போட்டவர்களில் முக்கியமானவரான பாரதி ராஜா இயக்கி சத்யராஜ், அமலா, சாருஹாசன் நடித்த படம் ‘வேதம் புதிது‘.
பாலுத் தேவர் – பேச்சி இவர்களது மகனான சங்கரபாண்டி, புரோகிதரான
நீலகண்ட சாஸ்திரியின் மகள் வைதேகி இருவரும் காதலிக்கிறார்கள். சாஸ்திரி மகளை தன் சாதிக்காரனுகே
திருமணம் செய்துவைக்க முயல்கிறார். தப்பித்துவிடும் வைதேகி, தான் இறந்துவிட்டதாக நம்பவைத்துவிட்டு
ஒரு வன அலுவலரிடம் அடைக்கலமாகிறாள்.. ஒரு சிற்றருவியில் சங்கரபாண்டியைச் சந்திக்கும்
சாஸ்திரி தன் மகளின் சாவுக்கு அவன்தான் காரணமெனக் குற்றம் சாட்டுகிறார். தவறி விழுந்துவிடும்
சங்கரபாண்டியைக் காப்பாற்ற முயல்கையில் அவரும் விழுந்துவிட சாதி கடந்து இருவரும் சடலங்களாக
இணைகிறார்கள். வைதேகியின் தம்பி சங்கரன் உறவினர்களால் புறக்கணிக்கப்படுகிறான். அவனுக்கு
பாலுத் தேவர் அடைக்கலம் அளிக்கிறார். இப்படியாகப் பின்னப்படும் கதையில், பாலுத்தேவரிடன்
சங்கரன், ”பாலுங்கிறது உங்க அம்மா அப்பா வச்ச பேரு,. தேவர்ங்கிறது படிச்சு வாங்கின
பட்டமா” என்று கேட்பான். இறுதியில் அவனும் தன் சாதி அடையாளமான பூணூலைக் கழற்றி எறிவான்.
பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை என்றாலும் ஒரு குலுக்கலை ஏற்படுத்திய படம் இது.
பாரதிராஜாவிடமிருந்து
புறப்பட்டவரான மணிவண்ணன், தனது ‘அமைதிப்படை’ படத்தில், “அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது
கொலம்பஸ்னு சொல்ற, இந்த சாதிக் கருமாந்திரத்தை எவன் கண்டுபிடிச்சான்,” என்று கேட்க
வைத்திருந்தார்.. ‘ஆண்டான் அடிமை’, ‘முதல் வசந்தம்’, ‘தோழர் பாண்டியன்’, ‘வீரப்பதக்கம்’
ஆகிய படங்களில் தலித் பிரச்சினை உள்ளிட்ட சாதிச் சிக்கல்கள் பற்றிப் பேசியிருந்தார்.
2014ல் வந்த ‘ஜீவா’ படத்தின் மூலம், கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக்கொண்டு, சாதிப்பாடு
எப்படி ஒரு திறமையாளனின் கனவைப் பொசுக்குகிறது என்று காட்டியிருப்பார் இயக்குநர் சுசீந்திரன்.
சூப்பர் ஸ்டார்கள் பேசுகிறபோது
கதை வழியாக சாதிப்
பிரச்சினையைப் பேசுவதில் பெரிய அசைவு ஏற்படாதா என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு,
இதோ வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது பா. ரஞ்சித்
வருகை. அவருடைய முதல் படமான, தினேஷ் முதலியோர் நடித்திருந்த ‘அட்டக் கத்தி’
(2012), சாதிப் பாகுபாடுகள் பற்றி விவாதிக்கவில்லை என்றாலும், சென்னையின் ஒரு புறநகர்ப்
பகுதியில் வாழும் தலித் குடும்பங்களைக் கதாபாத்திரங்களாகக் காட்டியிருந்தது. 2014இல் கார்த்தி நடிப்பில் வந்த ‘மெட்ராஸ்’, வட
சென்னையின் ஒரு குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளும்
அரசியல்வாதிகளால் மூட்டிவிடப்படும் மோதல்களைக் காட்டியது. அத்துடன், அம்பேத்கர் சொன்னது
போல், தடைகளை மீறி முன்னேறுவதற்குக் கல்வி தேவை என்ற செய்தியையும் அழகாகச் சொன்னது.
தலித் கதை என்றால் அவலங்களும் துயரங்களுமாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? ரஜினிகாந்த்
நாயகப் பாத்திரத்தில் நடித்த ‘கபாலி’ (2016), அவருடைய ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில்
விறுவிறுப்பும் சாகசங்களுமாக, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வென்றவனின் கதையைச்
சொன்னது.
தொலைக்காட்சி விவாதம்
ஒன்றில் அந்தப் படம் பற்றியே ஒரு கேள்வி வந்தது. உடன் பங்கேற்றவர், ரஜினிகாந்த்தை வைத்து,
வழக்கமான மசாலாப் படமாக எடுத்து தலித் பிரச்சினையைப் பேசிவிட முடியுமா என்று கேட்டார்.
கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கிற ஒரு நடிகரின் மூலம் தலித்துகள் நிலைமை பற்றிய
சில செய்திகள் சொல்ல வைக்கப்படுகிறபோது, அத்தனை கோடிப் பேரிடம் அந்தச் செய்திகள் போகின்றன,
அது முக்கியமானது என்று நான் என் கருத்தைக் கூறினேன். அந்தக் கருத்து சரிதான் என்ற
உறுதிப்படுத்தியது அடுத்து ரஜினியே நடித்து
2018ல் வந்த ‘காலா’. நில உரிமையோடு தலித் மக்களின் முழு விடுதலை லட்சியம் இணைந்திருப்பதையும்
சொல்லிச் சென்றது.
2021ஆம் ஆண்டில் ஆர்யா,
பசுபதி, துஷாரா நடித்து வெளியான ‘சார்பட்டடா பரம்பரை’, 1975இன் அவசரநிலை ஆட்சிக்காலப்
பின்னணியில், அன்றைய வடசென்னையின் குத்துச்சண்டைப் போட்டிக் களத்திற்கு அழைத்துச் சென்றது.
தலித் இளைஞனான கபிலன் புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் மீறி வெல்கிறான். திமுக
உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோரை உலாவவிட்ட அந்தப் படம், அவசரநிலை ஆட்சியை எதிர்த்துச்
சிறைக்கும் சென்ற மார்க்சிஸ்ட்டுகளை மருந்துக்கும் காட்டவில்லை. ஆயினும் “இனிமே நம்ம
காலம்தான்” என்று தலித் உரிமைக் களத்தில் நிற்போருக்கு நம்பிக்கை அளித்தது உண்மை.
2022இல் துஷாரா, காளிதாஸ் ஜெயராம், கலையரசன் நடிப்புப் பஙகேற்புடன் வந்த ‘ஒரு நட்சத்திரம்
நகர்கிறது’ படம் கதை, கலை இரண்டிலுமே மிகவும் மாறுபட்ட அனுபவத்தைத் தந்தது, மாறாத சாதியம்
பற்றிய விமர்சனத்தையும் முன்வைத்தது. பலருக்குள்ளும் ஊறியிருக்கிற ஆண்ட பரம்பரைப் பெருமையைச்
சிதறடித்தது. கூடவே தற்பாலின ஈர்ப்பாளர்களின் உளவியலை கண்ணியமான முறையில் புரிந்துகொள்ளக்
கோரியது.
2024இல் விக்ரம், பசுபதி
உள்ளிட்டோரின் பங்களிப்போடு வந்த ‘தங்கலான்’, கோலார் தங்கவயலைக் களமாக்கி, அங்கே தங்கம்
கிடைப்பதைக் கண்டுபிடித்தவர்களே தலித்துகள்தான் என்று நெஞ்சுயர்த்தச் செய்தது. அதனூடாக,
தலித்துகளுக்குப் பூணூல் போட்டுவிட்டுக் கலகம் செய்த ராமானுஜரின் முயற்சியைத் தொட்டுக்காட்டி,
அது பலனளிக்கவில்லையே என்று யோசிக்க வைத்தது. சாதிபேத விதிகளை எதிர்த்துக் கிளம்பிய
புத்த இயக்கத்தின் மீது ஆதிக்கவாதிகளுக்கு இருந்த ஆத்திரத்தை, தலை வெட்டப்பட்ட புத்தர்
சிலை மூலமாக உணர்த்தியது.
அடையாளங்களாக
ரஞ்சித் திறந்துவிட்ட
பாதையில் இன்று குறிப்பிடத்தக்க அடையாளம் பெற்றுவிட்ட இயக்குநர்கள், தமிழ் சினிமாவுக்கும்
புதிய அடையாளம் சேர்த்து வருகிறார்கள். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக்
கொண்டு, கலைப்புலி தானு தயாரிப்பில், தனுஷ் உள்ளிட்டோரின் நடிப்புடன் வெற்றிமாறன் உருவாக்கிய
‘அசுரன்’, அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தில், ஒரு எளிய விவசாயத் தொழிலாளியை பணக்காரத்
திமிரோடு சாதி வெறியும் இணைந்து குற்றவாளியாக்கிச் சிறைக்கு அனுப்பிய சூழலைப் படம்
பிடித்துக் காட்டியது. 2023, 2024 இரு ஆண்டுகளிலும் விஜய் சேதுபதி, சூரி பங்கேற்பில்,
இரண்டு பாகங்களாக வந்த ‘விடுதலை’ சாதி ஒடுக்குமுறைக்கும் உழைப்புச் சுரண்டலுக்கும்
எதிராகக் களமிறங்கிய கம்யூனிஸ்ட்டுகள் பற்றியும், அணுகுமுறைகள் தொடர்பான விவாதங்கள்
பற்றியும் ரசிகர்களுக்குப் புதிய சிந்தனைகளைக் கொடுத்திருக்கிறது.
ரஞ்சித்தின் நீலம்
புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர்,
ஆனந்தி நடித்து 2018இல் வெளியான அந்தப் படம், சாதி ஆணவத்தின் அருவருப்பை அம்பலப்படுத்தியது.
கல்வியின் தேவையைச் சொல்லி, தனிப்பட்ட பழிவாங்கல், வன்முறை என்ற பாதைக்குப் போகாமல்
கவித்துவமான மனிதத்துவத்தை உயர்த்திப் பிடித்தது. 2021இல், தனுஷ், நட்ராஜ், சரவணன்
நடிப்பில் வந்த அவரது ‘கர்ணன்’, இந்த மக்கள் வன்முறைப் பாதைக்குப் போகிற நிலை எப்படி
யாரால் ஏற்பட்டது என்று காட்டுகிறது. ஊரில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என்ற நியாயமான
கோரிக்கை புறக்கணிக்கப்படுவது, காவல்துறை அதிகாரிகளிடையே புரையோடிய சாதி என பல கூறுகள்
நேர்த்தியான கலைப் பின்னலாகவும் முன்வைக்கப்பட்டன. 2024ல் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு
நடித்திருந்த மாமன்னன் படம், அரசியல் களத்தில் தலித் மக்களின் கொடி ஊன்றப்படுவதை, நம்
ஊரில் நடந்த நிகழ்வுகள் போல உணர வைத்தது.
2021இல் ஞானவேல் இயக்கிய,
சூர்யா, மணிகண்டன் நடித்த படம் ‘ஜெய்பீம்’. ஒரு திருட்டுக் குற்றம், ஒரு பழங்குடி சமூகத்தைச்
சேர்ந்த ஒருவனின் மீது, அவன் அந்தச் சமூகத்தவன் என்பதாலேயே சுமத்தப்படுவதை வெளிச்சப்படுத்தியது..
விசாரணைக்காகக் கொண்டுசெல்லப்பட்டவனுக்கு என்ன ஆனது என்று வழக்குரைஞர் சந்துரு விசாரிக்கப் புறப்பட, தெரியவரும் உண்மைகள்
உறைய வைக்கின்றன, உறைந்து கெட்டிப்பட்டிருக்கும்
அமைப்பைத் தகர்க்கப் புறப்பட்டிருப்போரோடு இணைந்திடத் தூண்டுகின்றன.
2022இல் தீபக் இயக்கத்தில்
ரோஹிணி, தமிழரசன், ஸ்ரத்தா உள்ளிட்டோரின் நடிப்பில் வந்தது ‘விட்னஸ்’.
ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் கழிவறைத் தொட்டியில், அடைப்பை நீக்குவதற்காக
இறக்கிவிடப்பட்ட இளைஞர், நச்சுவாயுத் தாக்குதலில்
உயிரிழக்கிறார். தாய் இந்திராணியின் உறுதியான போராட்டத்தின் விளைவாக, இந்தப் பணியில்
ஏன் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே இறக்கிவிடப்படுகிறார்கள் என்ற கேள்வி முன்னுக்கு
வருகிறது. நீதிமன்ற விசாரணைக்கும் போகிறது. நவீன நாடகக் காட்சி போன்ற கடைசிச் சித்தரிப்பு
சமுதாயத்தில் பெரும் சவாலாக இருக்கும் அரசியல்வாதி – தொழிலதிபர் – அதிகாரி கூட்டு பற்றிய
உண்மையையும் யோசிக்க வைத்தது.
அடுத்தடுத்து இவ்வகையான
படங்கள் இத்தனை வந்திருக்கின்றனவா என்ற வியப்புக் குறி நிமிர்கிறது. ஆனால், ஓராண்டில் சராசரியாக வரும்
படங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகிறபோது, இத்தனை படங்கள்தான் வந்திருக்கின்றனவா என்ற
வினாக்குறியாக வளைகிறது.தமிழ் சினிமா வளர்ச்சியின் முற்பகுதியில் அதற்குப் பங்களித்த
இயக்கங்கள் போல, இன்றைய இயக்கங்களும் தலித் எழுச்சியும் ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.
ஆம், அரசியல்–பண்பாட்டுக் களம் கலை–இலக்கியத்திற்குப் பங்களிக்கிறது, அதற்குக் கைமாறாக
கலை–இலக்கியம் அரசியல்–பண்பாட்டுக் களத்திற்குப் பங்களிக்கிறது. மாறுபட்ட பல்வேறு கதைக்கருக்களைத்
தேர்வு செய்யாமல் பழைய தடங்களிலேயே தமிழ் சினிமாவை ஓட்டிக்கொண்டு போக முடியாது என்ற
சூழல் உருவாகியிருப்பது நன்னிலை. இது தொடரும், விரியும் என்ற நம்பிக்கையைத் தருகிற
இந்தப் படைப்பாளிகள் பெற்றிருப்பது முன்னிலை.
*************
-தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வரும் ‘அணையா வெண்மணி’ மார்ச் 2025 இதழில் எனது கட்டுரை.
No comments:
Post a Comment