ஓடிடி மேடையில் உலக
சினிமா
கரைகளைக் கடப்பன கலைகள். கண்டங்களைத் தாண்டுபவர்கள் கலைஞர்கள். ஜெர்மானியரான விம் வெண்டர்ஸ், ஜப்பானில் உருவாக்கிய படம் ‘பெர்ஃபெக்ட் டேய்ஸ்’.
டோக்கியோ பகுதியில் அசைவுகளற்ற அன்றாட வாழ்க்கைக்குள்
நிறைவைக் கண்டுபிடித்து வாழ்கிற ஹிராயமா, பொதுக்கழிப்பறைத் தொழிலாளி. தனக்கு ஒதுக்கப்பட்ட
கழிப்பறைகளின் தரைகளையும் சுவர்களையும் கழிப்புக் கிண்ணங்களையும் கழுவித் துடைத்து
நறுமணத் திரவம் தெளித்துச் செல்கிறவன். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவனுக்கு
::மூன்று துணைகள் –இசை, புத்தகம், கேமரா. மரக்கிளைகளின்
இலையிடுக்குகளில் ஊடுறுவும் பரிதிக்கதிர்களைப் படமெடுப்பது பிடித்தமான ஈடுபாடு.
தங்கை மகள் நிகோ பெற்றோருடன் கோபித்துக்கொண்டு
இவனுடைய வீட்டுக்கு வந்து தங்குகிறாள். அதிரடி இசை உள்ளிட்ட சிறுமியின் ரசனைகளும் வேகங்களும்
இவனுடைய ரசனைகளுக்கு நேர்மாறானவை. ஆயினும், அலுத்துக்கொள்ளாமல் அவற்றை ரசிக்கிறான்.
இவனோடு கழிப்பறைகளுக்குச் செல்கிற நிகோ, குழந்தைக்குரிய ஆர்வத்துடன் தரையைத் தூய்மைப்படுத்துகிறாள்.
பிறரது வாழ்க்கைமுறைகளை மதிக்கக் கற்பதன் மதிப்பை எடுத்துக்காட்டுகின்றன இக்காட்சிகள்.
சக தொழிலாளி டகாஷி. அவனுடைய காதலி அயா.
அவன் ஹிராயமாவின் பாடல் ஒலிப்பேழைகளில் ஒன்றை
ரகசியமாக எடுத்து அயாவின் பையில் போட்டுவிடுகிறான். மற்ற கேசட்டுகளை விற்றால் காசு
வருமே என்கிறான், இவன் மறுத்துவிட்டு அவளுடன் ஊர் சுற்றுவதற்குப் பணம் கொடுக்கிறான்.மறுநாள்
ஒலிப்பேழையைக் கொண்டுவந்து ஒப்படைக்கும் அயா, அதைக் கடைசியாக ஒருமுறை இயக்கக் கேட்டுக்கொள்கிறாள்.
இசை முடிந்ததும் கன்னத்தில் ஒரு முத்தம் பரிசளிக்கிறாள். ஹிராயமா நெகிழ்ச்சியடைகிறான்.
காதலர்கள் ஊரைவிட்டே ஓடிப்போகிறார்கள். தற்காலிகமாக அவனுடைய வேலையையும்
இவனே செய்ய வேண்டியதாகிறது. ஹிராயமாவின் பரபரப்பற்ற நாளுக்கும், காதலர்களின் விறுவிறுப்பான
நாளுக்குமான முரணில் மனிதர்களின் பன்முகக் கூறுகள் புலப்படுகின்றன.
ஒரு சுவையான காட்சித் தொடர்: ஒரு கழிப்பறையின் சன்னலில் வைக்கப்பட்டிருக்கும் காகிதத்தில் யாரோ
என்னவோ எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்துப் புன்னகையோடு ஹிராயமா பதிலெழுதி வைக்கிறான். காகிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? கவிதை,
இயற்கை வர்ணனை அரசியல் கிண்டல் எதுவாகவுமிருக்கலாம். நேரில் சந்திக்காதவர்களுக்கிடையே
இப்படியொரு தொடர்பு உருவாவதில், உலகில் பலரும் அப்படிப்பட்ட தொடர்புகளில்தானே இருக்கிறோம்
என்ற சிந்தனை தொற்றுகிறது.
மகளைத் தேடி வரும் தாய் – பணக்கார மேல்தட்டுக்காரி – அண்ணனைத் தன்னுடைய
குடும்பத்துடன் இணைந்து வாழ அழைக்கிறாள். இவனோ தனக்குப் பிடித்துப்போன வேலையைத் தொடர
விரும்புவதாகக் கூறிவிடுகிறான். கடைசி மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருக்கும் தந்தையை,
இப்போது வெகுவாக மாறிவிட்டவரைப் பார்க்கவாவது வரக்கூடாதா எனக்கேட்க மறுத்துவிட்டு அவளை
அணைத்து நிகோவுடன் அனுப்பிவைக்கிறான். அவர்கள் போனபின் கலங்கியழுகிறான்.
ஹிராயமாவின் குளத்தில் கல்லெறிகிறது
மற்றுமொரு நிகழ்வு. வழக்கமான உணவகத்திற்குச் செல்கிறவன், உள்ளறையில் கடை உரிமையாளரான
பெண்ணும் ஒரு புதிய ஆணும் கட்டியணைத்து நிற்பதைப் பார்க்கிறான். நாசூக்காகத் திரும்பிவிடுகிறான்.
இவனைத் தேடிவரும் அந்த மனிதன்,. தான் அவளுடைய முன்னாள் கணவன் என்கிறான். தனது புற்று
நோய் முற்றிவிட்ட நிலையில் அவளிடம் மன்னிப்புக் கோர வந்ததாகக் கூறுகிறான். உயிர்வாழ்வின்
அருமை பற்றிய உணர்வு, தந்தையைப் போய்ப் பார்க்க மறுத்த ஹிராயமா மூலமாக நமக்குள் ஊறுகிறது.
அவன் மீது பரிவு கொள்கிறான் ஹிராயமா இருவரும் சாலையில் சிறிது நேரம் நிழலை நிழலால் பிடிக்கும்
சிறார் ஆட்டத்தை விளையாடுகிறார்கள். கைவிடப்பட்டுவிடவில்லை என்று அவனுக்கும், யாரையும்
கைவிடக்கூடாது என்று இவனுக்கும் எண்ணங்கள்
ஏற்படுவதாக நாம் எடுத்துக்கொள்கிறோம்.
கிடைத்த வாழ்க்கையைக் கேள்வியின்றி ஏற்று அமைதியாக அடங்கிப்போகச் சொல்கிறானா ஹிராயமா? அப்படியான
பொதுப் போதனை ஏதுமில்லை. பலவகை மனிதர்களின் வழியாக உலகத்தின் அழகு இப்படியான பன்மைத்துவத்தில்
பொதிந்திருப்பதைப் பேசியிருக்கிறார் வெண்டர்ஸ்.
நவீன தொழில்நுட்பங்கள், கலை வேலைப்பாடுகளுடன்,
மெல்லிய இசை ஒலித்திருக்க உட்கார்ந்து சாப்பிடலாம் போன்ற தூய்மையுடன் காணப்படுகின்றன
பொதுக்கழிப்பறைகள். உலகநாடுகள் கவனிக்க வைத்த
‘டோக்கியோ டாய்லட் திட்டம்’ பற்றிப் படித்தது நினைவிலாடுகிறது. மரியாதையான ஊதியம்
உள்ளிட்ட மாற்று வழிமுறைகள் கையாளப்படுமானால் இந்த வேலையின் மீது ஏற்றப்பட்டிருக்கும்
அகச்சுழிப்பு தூய்மைப்படுத்தப்படும். அந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசாமலே இவ்வாறு சிந்திக்க
வைக்கிறார் இயக்குநர். (இத்தனைக்கும், கோவிட் பெருந்தொற்று ஓய்ந்ததும், ஜப்பானிலிருந்து
இயக்குநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, கழிப்பறைத் திட்டம் பற்றிய குறும்படங்கள் எடுத்துத்தரக்
கேட்டுக்கொள்ளப்பட்டது. அவரோ முழு நீளக் கதைப்படமாக உருவாக்கிவிட்டார்.)
ஜப்பானில் அண்மைக் காலம் வரையில் இந்தப் பணியில், குறிப்பிட்ட சில சமூகத்தினர்தான் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்த நிலைமை இப்போது வெகுவாக மாறிவருகிறது. அதைப் பற்றியும் பேசாமலே பேச வைக்கிறது படம். ஹிராயமாவாக நடித்த கோஜி யகூஷோ கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்றார். டகாஷியாக எமோட்டோ, அயாவாக யமாடா, நிகோவாக நகானா உள்ளிட்டோர் கதையாடு கலந்துவிடுகிறார்கள். இயக்குநருடன் சேர்ந்து டகுமா டகாசாகி கதையை எழுதியிருக்கிறார். ஃபிரான்ஸ் லூஸ்டிக் ஒளிப்பதிவு செய்ததை நேர்த்தியாகத் தொகுத்தவர் டோனி ஃபிரோஷ்ஹாமர். மூபி ஓடிடி தளத்தில் இவர்கள் எல்லோரையும் சந்திக்கலாம்.
***********
-‘செம்மலர்’ மார்ச் 2025 இதழில் வந்துள்ள எனது கட்டுரை
No comments:
Post a Comment