Monday, 1 September 2025

59 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கே?அரை டஜன் கல்வி அமைச்சர்கள் என்ன செய்தார்கள்?

 



நாடு முழுவதும் மாணவர்கள் சேர்க்கை லட்சக்கணக்கில் குறைந்துவரும் நிலையில், பிறப்பு விகிதம் குறைவதால்தான் மாணவர் சேர்க்கை சரிந்திருக்கிறது என்று அரசு கூறும் காரணம் அதிர்ச்சியளிக்கிறது.

ஒரே ஆண்டில் 34 லட்சம் மாணவர்கள்!

"இந்தியாவின் ஒட்டுமொத்தப் பள்ளி மாணவர் சேர்க்கை, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 24.68 கோடியாக (2024–25 கல்வி ஆண்டு) குறைந்துள்ளது. குறிப்பாக, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளில் மாணவர் சேர்க்கை 34 லட்சம் குறைந்துள்ளது."

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்குச் சொல்லப்படும் காரணம் திகைப்பை ஏற்படுத்துகிறது. அந்தக் காரணத்தோடு தொடர்புபடுத்தப்படும் நடவடிக்கை ஒரு எச்சரிக்கையை விடுக்கிறது.  அதை எதிர்கொள்வதற்கு முன்மொழியப்படும் வழிமுறையோ விவாதத்திற்கு இழுக்கிறது. இப்படி நான்கு வித எதிர்வினைகளை அந்தச் செய்தி ஏற்படுத்துகிறது.

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் அமைப்பு (யுடீஐஎஸ்இ) அறிக்கைதான், மாணவர் சேர்க்கை சரிந்திருப்பது தொடர்பான தகவலைத் தெரிவித்திருக்கிறது. அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், இதர வகையான பள்ளிகள் அனைத்திலுமே மாணவர் சேர்க்கை குறைந்திருக்கிறது. 2024–25 கல்வியாண்டில்  மொத்தம் 24.68 கோடி மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள்.

அதற்கு முந்தைய 2023–24 கல்வியாண்டில் சேர்க்கப்பட்டவர்கள் 24.8 கோடிப் பேர். 2022–23இல்  இந்த எண்ணிக்கை  25.23 கோடியாக இருந்தது  (‘தி பிரிண்ட்’, ஆகஸ்ட் 28). 6–10 வயதுப் பிரிவினருக்கான 1 முதல் 5 வரையுள்ள வகுப்புகளில் 2023–24ஆம் ஆண்டில் 10.78 கோடி குழந்தைகள் சேர்க்கப்பட்டிருந்தார்கள். அதற்கடுத்த ஆண்டில் சேர்க்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10.44 கோடி.  அதாவது ஒரே ஆண்டில் 34 லட்சம் குறைந்திருக்கிறது.

பிறப்பு விகிதம் சரிவது காரணமா?


பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்ததற்குக் காரணம் நாடு முழுவதும் பிறப்பு விகிதம் சரிந்ததுதான் என்று கல்வித்துறை உயரதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படி எளிதான ஒரு காரணத்தைக் காட்டிவிட முடியுமா? குழந்தைகளின் பிறப்பு விகிதம், இறப்பு நிலவரம், வாழ்க்கைச் சூழல், இவற்றோடு ஒன்றிய–மாநில அரசாங்கங்கள் செய்யத் தவறிய ஏற்பாடுகள் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை இது.


இந்தியாவில் ‘மொத்த கருவுறுதல் விகிதம்’ (டிஎஃப்ஆர்)  கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வந்திருக்கிறது. இதனால் மாற்றீடு அளவு கீழிறங்கியிருக்கிறது. இந்த விவகாரக்ளை  விசாரித்தால்தான் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதோடு சேர்த்து அதை முடிச்சுப் போடுவது குறித்துப் பேச முடியும்.
“டிஎஃப்ஆர்” என்பது ஒரு பெண் தன் வாழ்நாளில் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்வார் என்பதைக் குறிக்கும் அளவீடாகும்.  “மாற்றீடு அளவு” என்பது ஒரு தலைமுறைக்கு ஈடாக அடுத்த தலைமுறை உருவாவதைக் குறிப்பது.


பெற்றோர் இருவருக்கு  ஈடாகக் குழந்தைகள் இருவர் என்பது ஒரு சமநிலை அளவு. எனினும், மதிப்பிடும்  வசதிக்காக  இந்த அளவை 2.1 என்று வைத்துக்கொள்வது வழக்கம். அந்தக் கூடுதல் 0.1 எதைக் குறிக்கிறது? குழந்தைப் பருவம் முடிவதற்குள் இறக்க நேரிட்டால்,  மாற்றீடு அளவை ஈடு செய்வதற்காக அந்த 0.1.


ஒரு நாட்டின் மாற்றீடு அளவு  2.1க்குக் கீழே இறங்குகிறது என்றால், தலைமுறையை ஈடு செய்யப் போதுமான எண்ணிக்கையில் குழந்தைகள் பிறக்கவில்லை என்று பொருள். இந்தியாவில் இந்த மாற்றீடு அளவு 2021ஆம் ஆண்டில் 1.91 ஆகச் சரிந்தது. 

இளைஞர்கள் எண்ணிக்கை குறையும்!

இந்தியாவின் மாற்றீடு அளவு கீழிறங்கியிருப்பது, ஒரு முக்கியமான மக்கள் அமைப்பியல் (டெமாக்ரஃபி)  மாற்றத்தைக் குறிக்கிறது. கடந்த கால மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களின் தாக்கம், உடல்நலம், சமூக மேம்பாட்டு நிலவரம் போன்றவற்றோடு சம்பந்தப்பட்டது நிகழ்ச்சிப்போக்கு இது. இந்த நிலை எதிர்காலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கலாம்.


கடந்த ஜூலையில் நடந்த ‘நிதி ஆயோக்’ ஆட்சிமன்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, வருங்காலத்தில் முதியோர் மக்கள்தொகை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய  சிக்கல்களை எதிர்கொள்ள மாநிலங்கள் மக்கள் அமைப்பியலைக்  கையாளுவதற்கான திட்டங்களை மேற்கொள்ளக் கேட்டுக்கொண்டார். அதன் எதிரொலி போல, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்ட நாட்டில், இப்போது  கூடுதலாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 


இங்கே, சட்டென ஒரு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய  மக்கள்தொகை, மக்கள் அமைப்பியல் என்ற பதங்களின் பொருள்களைப் புரிந்துகொள்வோம். ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் வாழும்  மக்களின் மொத்த எண்ணிக்கையைக் குறிப்பது மக்கள்தொகை (பாப்புலேசன்).  அதே மக்களின் பாலின அடையாளங்கள், வயதுப் பிரிவுகள், பிறப்பு–இறப்பு விகிதங்கள், கல்வி நிலைகள், மணமானவர்களா என்பன உள்ளிட்ட தகவல்களைக் கொண்டது மக்கள் அமைப்பியல் (டெமாக்ரஃபி).  ஒரு வகுப்பறையில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 'மக்கள்தொகை'. அவர்களின் பாலினம், வயது, வேறு எந்தப் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள் என்ற விவரங்கள் 'மக்கள் அமைப்பியல்'. 

மோகன் பகவத் நோக்கம் என்ன?

இதனிடையே, அரசமைப்பு சாசனத்தின் 82ஆவது பிரிவில் 2001இல் செய்யப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி, 2026க்குப் பின் நடைபெறும் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முன்பு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய மாநிலங்களிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறையக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்ற எச்சரிக்கைக் குரல் எழுகிறது. 


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் பெரும் வெற்றி அடைந்துள்ளன. ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தங்கள் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். “இது சமூகச் சீர்திருத்தங்களைச் சிறப்பாகச் செய்ததற்காகக் கிடைக்கும் தண்டனை,” என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.


ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இதே போல் கூறியிருக்கிறார். குடும்பங்களில் கூடுதல் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிப்பது பற்றி மாநில அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில், ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அண்மையில் பேசினார்.


சங் பரிவாரத் தலைவர்கள் அவ்வப்போது இதைக் கூறி வந்திருக்கிறார்கள். அவர்கள் இப்படிச் சொல்வதற்கு  வேறு நோக்கம் இருக்கிறது.


எவ்வாறாயினும், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளக் கூறுவது பகுத்தறிவுக்கும், முன்னேற்றகரமான சமூகச் சிந்தனைகளுக்கும் ஏற்றதுதானா?

பெண்களின் வாழ்விலும் சுமை!

கூடுதலாகக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் சாதிக்காரர்களின் எண்ணிக்கையும் மதம் சார்ந்த மக்கள்தொகையும் அதிகரிக்கலாம்.  மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை நிலைப்படுத்தலாம். ஆனால், குடும்பத்தின் சுமை? குறிப்பாகப் பெண்ணின் வயிற்றிலும் வாழ்விலும் ஏற்றப்படும் சுமை? அளவாகக் கருவுறுவது பெண்களின் உடல்நலத்தைப் பேணுவதில் பங்காற்றுகிறது. பெண்ணின் பொதுவெளி நடமாட்டத்திற்கும் சமூகத் தொடர்புக்கும் அடிப்படையாகிறது.


இவற்றை மறுப்பதற்கான வாய்ப்பாக மக்கள் அமைப்பியல் மாற்றமும், பள்ளிச் சேர்க்கைச் சரிவும் பயன்பட்டுவிடக்கூடாது. தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படக்கூடிய அரசியல் பிரச்சினைகளை அரசியலாகத்தான் எதிர்கொண்டு தீர்க்க வேண்டும், எத்தனை குழந்தைகள் என்பதைத் தம்பதிகளின், குறிப்பபாகப் பெண்களின் முடிவுக்கே விட்டுவிட வேண்டும். அதுவே நாகரிக சமூக அணுகுமுறையாக இருக்கும்.


சரி, இந்த நிலைமைகளுக்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிலவரங்களுக்கும் என்ன தொடர்பு? ‘2025ஆம் ஆண்டு வாக்கில் பள்ளிச் சேர்க்கை மதிப்பீடும் போக்குகளும்’ என்ற தலைப்பில்  தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) ஆய்வறிக்கை ஒன்றை 2022இல் வெளியிட்டது. அதில், “6 -10  வயதுப் பிரிவினர் எண்ணிக்கை குறைந்திருப்பதால் 2025 வாக்கில் பள்ளிகளில் அனைத்து மட்டங்களிலும் மாணவர் சேர்க்கை குறையும்,” என்ற முன்கணிப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

59 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கே?

ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் யுடீஐஎஸ்இ அறிக்கையில் உள்ள மற்றொரு தகவல், இதை முழுக்க முழுக்க மக்கள் அமைப்பியல் மாற்றத்தோடு தொடர்புபடுத்திவிட முடியுமா என்று யோசிக்கச் செய்கிறது. ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும், அரசுப் பள்ளிகளில்தான் அதிகமான எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்கிறது அந்தத் தகவல்.


நாடு முழுதும் அரசுப் பள்ளிகளில் 12.75 கோடியாக இருந்த மாணவர் சேர்க்கை  சென்ற ஆண்டில் 12.16 கோடியாக  – சுமார் 59 லட்சம் பேர் – குறைந்துள்ளது. இதற்கு மாறாக, தனியார் பள்ளிகளில் 9 கோடியாக இருந்த மாணவர் சேர்க்கை 9.59 கோடியாக அதிகரித்துள்ளது. இது, அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்க வேண்டிய அந்த 59 லட்சம் பேர் எங்கே அனுப்பப்பட்டிருக்கிறார்கள் என்று காட்டவில்லையா? அவர்களை அனுப்பியது பெற்றோர்கள் மட்டும்தானா?


பீகார், மேற்குவங்கம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் ஆகிய நான்கும், மாணவர் சேர்க்கை குறைந்திருக்கும் மாநிலங்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. ஆந்திரம் (2.80 லட்சம்), கேரளம் (1.18 லட்சம்), தமிழ்நாடு (48 ஆயிரம்), கர்நாடகம் (14 ஆயிரம்) ஆகிய தென் மாநிலங்களிலும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்திருக்கிறது.


நாடு முழுதும் இந்த நிலைமை பரவியிருப்பதற்கு என்ன காரணம்? குழந்தைகள் பிறப்பு குறைந்தது உள்ளிட்ட மக்கள் அமைப்பியல் மாற்றமே காரணம் என்று ஒன்றிய கல்வித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், அந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? கட்டாயப்படுத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள், ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்யும் தம்பதிகள், அதற்கு அடிப்படையான பொருளாதாரக் காரணிகள் என்றெல்லாம் இருக்கின்றன. இணையர் இருவருமே வேலைக்குச் செல்கிறார்கள் என்றால், இன்னொரு குழந்தையைத் தவிர்க்கும் முடிவுக்கு அவர்கள் வருவது இயல்பானது.

பள்ளிக்கு வருவதே பெரும் சவால்!

மிக முக்கியமாக, கணிசமான மக்கள் புலம்பெயர்ந்து வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். யுடீஐஎஸ்இ அறிக்கை கூட, மக்கள்தொகையில் ஏற்பட்ட மாற்றம் என்று கூறவில்லை, மக்கள் அமைப்பியல் மாற்றம் என்றே சொல்கிறது.  இந்த அமைப்பியல் மாற்றத்தில் முக்கியமான  பங்களிப்பது மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நிலை.


“புலம் பெயர்கிறவர்களில் வேலை வாய்ப்புகளுக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்கிற தொழிலாளர் குடும்பங்கள்தான் அதிகம். அவர்கள் ஒரு பகுதியில் குடியேறிய பிறகு, பல நாட்கள் கழித்துதான்  குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். தொடர்ந்து படிக்க வைப்பது அவர்களுக்குப் பெரிய போராட்டம்தான்.  பள்ளிச் சேர்க்கை குறைவதில் பழங்குடிகள், தலித்துகள் உள்ளிட்ட விளிம்பு நிலை சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. பல்வேறு சமூக, பொருளாதாரக் காரணங்களால் அவர்கள் பள்ளிகளுக்கு வருவது சவாலாகவே இருக்கிறது,” என்கிறார் சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். கண்ணன்.


“கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை சமூக அடிப்படையில் பின்னுக்குத் தள்ளப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு ஒதுக்க வேண்டும். எத்தனை தனியார் பள்ளிகளில் இது நேர்மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற கண்காணிப்போ, நடவடிக்கையோ இல்லை. குழந்தைகளின் உடல்நலம் சார்ந்த அங்கன்வாடி போன்ற திட்டங்களையும் தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய சூழல்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேரும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன,” என்றும் கண்ணன் கூறுகிறார். 

அறிவிப்பாரா அன்பில் மகேஸ்?

“டெமாக்ரஃபிதான் காரணம் என்றால், அரசுப் பள்ளிகளில் ஏற்படும் வீழ்ச்சி தனியார் பள்ளிகளிலும் பிரதிபலிக்க வேண்டும் அல்லவா?,” என்ற வினவுகிறார் பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜே. கிருஷ்ணமூர்த்தி. “இப்போதும், இதற்கு முன்பும் ஆட்சியாளர்கள் தனியார் பள்ளிகளை ஊக்குவித்ததோடு, அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்தும் வந்திருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாதது, போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாதது போன்ற நிலைமைகளை மாற்ற முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. ஒரு பகுதியில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டும் இருக்கிறது என்றால், அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டியது எந்தப்  பள்ளி?,” என்றும் அவர் கேட்கிறார்.  


“தனியாரிலும் குறைந்த நிதியில் நடத்தப்படும் சிறிய பள்ளிகள்,  நடுத்தரமான பள்ளிகள், பெரும் முதலீடுகளுடன் நடத்தப்படும் பள்ளி நிறுவனங்கள் என்ற மூன்று அடுக்குகள் இருக்கின்றன. தடபுடலான விளம்பரங்கள், பேருந்து வசதி, உள் கட்டுமானங்கள், ஆசிரியர்கள் என்று இயங்கும்  நிறுவனங்கள் சிறிய, நடுத்தரப் பள்ளிகளை விழுங்குகின்றன. அந்தப் பள்ளிகளில் சேர்த்தால்தான் பிள்ளைகள் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்றப்பட்ட பெற்றோர்  தங்கள் வருவாயில் பெரும் பகுதியை ஒதுக்கி அங்கே சேர்க்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் அதே கட்டமைப்புகள் இருக்கின்றன என்ற நம்பிக்கை நாடு முழுவதுமே ஏற்படுத்தப்படவில்லை. யுடீஐஎஸ்இ அறிக்கை இதைத்தான் உறுதிப்படுத்துகிறது,” என்றும் ஜே.கே. விமர்சிக்கிறார்.  தமிழ்நாட்டில் குழந்தைகள் வரவில்லை என்று 207 அரசுப் பள்ளிகள் அண்மையில் மூடப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


தமிழகத்தில் மக்கள் தொகை குறைவு, கரோனா காலத்திய இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாணவர் சேர்க்கை குறைந்து, பள்ளிகளை மூடும் நிலை ஏற்பட்டதாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருக்கிறார். அந்த 207 பள்ளிகளில் அடிப்படை வசதிகள் எப்படி இருந்தன, ஆசிரியர்கள் எத்தனை பேர் இருந்தார்கள் என்ற விவரங்களை அன்பில் மகேஸ் தெரிவிப்பாரா?

அரை டஜன் அமைச்சர்கள் செய்ததென்ன?

நமது சொத்து என்ற எண்ணத்தோடு பள்ளிகளை நாடுகிற உரிமையும், அவற்றைப் பாதுகாக்கிற உறுதிப்பாடும் சமுதாயத்தில் வளர்வது கல்விக்கு ஆரோக்கியம். அந்த உணர்வு பள்ளிகளை அரசாங்கம் நடத்துகிறபோதுதான், எந்தத் தனியார் நிறுவனமும் போட்டிக்கு வர முடியாது என்கிற அளவுக்குப் பராமரிக்கிறபோதுதான் ஏற்படும். இடையிடையே சில உயரதிகாரிகள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்கிற செய்திகள் வருவதுண்டு. அவர்கள் மீது மரியாதை ஏற்படுமே தவிர, மக்கள் மனங்களில் நம்பிக்கை ஏற்பட்டுவிடாது.


இங்கே ஒரு முக்கியமான காட்சியை அங்கீகரித்தாக வேண்டும். பல அரசுப் பள்ளிகள் உண்மையாகவே மிகச் சிறப்பாக, அவற்றில் குழந்தைகளைச்  சேர்ப்பதற்கு யாருடைய சிபாரிசையாவது நாடுகிற அளவுக்குச் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது? அதை ஆராய முடியாதா? அதையே அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த முடியாதா? முடியும். அரசியல் உறுதி இருந்தால் செய்ய முடியும்.

சாதாரணப் பள்ளிகள், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்ற பாகுபாடுகள் இல்லாமல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிறப்பான உள்கட்டமைப்புகள் இருக்கின்றன, போதுமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள், உள்ளூர் சமூக அங்கீகாரமும் அரவணைப்பும் சிடைக்கின்றன என்ற நிலையை அரசுகள் உறுதிப்படுத்துவதே அந்த அரசியல் உறுதி. அப்போது, குழந்தை பிறப்பு விகிதமோ, மக்கள் அமைப்பியலோ சாக்காக வராது. அதிகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தத் தேவையிராது. 

இத்தகைய ஒரு நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவதற்கு முந்தைய பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில், மாஃபா பாண்டியராஜன், வைகைச்செல்வன், செங்கோட்டையன் உள்ளிட்ட அரை டஜனுக்கும் அதிகமான பள்ளிக்கல்வி அமைச்சர்களும், கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வி அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஸும் செய்தது என்ன? நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை லட்சக்கணக்கில் குறைவதைத் தடுக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் ஒன்றிய அரசு என்ன செய்கிறது?


அனைவருக்கும் தரமான, சமமான கல்வியில் அக்கறையும், அர்ப்பணிப்பும் உள்ள அமைப்புகள் நாடு முழுதும் இருக்கின்றன. அவர்களின் கருத்துகளையும் வழிகாட்டல்களையும் கேட்டுத் திரட்டுவதைக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாகக் கைக்கொள்வதற்கு மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதற்கு, மாநிலங்களிடமிருந்து கல்விப் பொறுப்பைக் கடத்த முயலும ஒன்றிய அரசு வழி விட வேண்டும்.

[0]

-விகடன் ப்ளஸ் செப்டம்பர் 1, 2025 பதிப்பில் எனது கட்டுரை



No comments: