Saturday, 13 September 2025

ராஜஸ்தான் மதமாற்றத் தடைச் சட்டம்: யாருக்கெல்லாம் ஆபத்து? -Explamined




ராஜஸ்தான் மாநில பாஜக அரசாங்கத்தால் “சட்டவிரோத மதமாற்றத் தடுப்புச் சட்ட முன்வரைவு –2025” கடந்த செவ்வாயன்று (செப்டம்பர் 9) சட்டப்பேரவையில், காங்கிரஸ்  உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புடன், நிறைவேற்றப்பட்டது.  ஆளுநரால் ஏற்கப்பட்டு (ஏற்க மாட்டாரா என்ன?) சட்டமாக நடைமுறைக்கு வருமானால், யாரையேனும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றியதாகக் குற்றம் சாட்டப்படுகிற ஒருவருக்கு, நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு நிறுவப்படும் நிலையில், 7 முதல் 10 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும். குறைந்தது 5 லட்சம் ரூபாய் தண்டத் தொகையும் விதிக்கப்படும்.  


மதம் மாற்றப்படுகிறவர்  பெண்ணாகவோ, சிறாராகவோ, பட்டியல் சாதிகளையும் பழங்குடிகளையும் சேர்ந்தவராகவோ இருப்பாரானால், அவரை மதமாற்றம்  செய்தவருக்கு 20 ஆண்டுகள் வரையில் சிறைவாசமும், ரூ.10 லட்சம் வரையில் தண்டமும் அதிகரிக்கப்படும்.  வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது சட்டவிரோத அமைப்புகளிடமிருந்து பணம் வாங்கியிருந்தால் 10 முதல் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.20 லட்சம் தண்டம். ஒரு கூட்டமாக மதமாற்றம் நடந்திருந்தால், ஆயுள் சிறை, ரூ.25 லட்சம்  தண்டம்.

மதமாற்றமும் திருமணம் செல்லாது

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களின் திருமணம் தொடர்பானது. இருவரில் ஒருவர்  வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாக  குற்றச்சாட்டு நிறுவப்படுமானால், நீதிமன்றம் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவிக்க முடியும். அத்துடன்,  குற்றம் சாட்டப்பட்டவர்தான் அப்படிக் கட்டாயப்படுத்தியோ, பணம் கொடுத்தோ, வேலைவாய்ப்பு அல்லது வேறு ஆசைகள் காட்டியோ, பொய்யான தகவல்கள் சொல்லியோ திருமணம் நடக்கவில்லை, இரு தரப்பு ஒப்புதலின் அடிப்படையில்தான் நடந்தது  என்று நிறுவ வேண்டும்.


இப்படி ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றப்படுவதைக் கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கூறுகிற அந்தச் சட்ட முன்வரைவு, வேறு வகையான கட்டாய மதமாற்றத்தை ஏற்புக்குரிய செயலாக அங்கீகரிக்கிறது. அதாவது, பூர்வீக மதத்திற்கே திரும்புவது மதமாற்றம் ஆகாது. இதை “கர் வாபஸி” (தாய்வீடு திரும்புதல்) என்கிறார்கள்.


மதமாற்றத்திற்காக நடத்தப்படும் திருமணம் அல்லது திருமணத்திற்காகச் செய்யப்படும் மதமாற்றம் இரண்டுமே செல்லாது என்று அறிவிக்கப்படும் என்றும் அது கூறுகிறது. சட்ட முன்வரைவின் முந்தைய வடிவில், கட்டாயமாக மதம் மாற்றப்பட்டவரோ, அவரது ரத்தத் தொடர்பு உறவினரோதான் புகார் செய்ய வேண்டும் என்று இருந்தது.  தற்போதைய வடிவில், “உறவினர்கள் உட்பட எந்த நபரும்” என்று  மாற்றப்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது (தி பிரிண்ட், செப்.10). 


ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் இப்படியொரு சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றன.  “லவ் ஜிஹாத்” விவகாரங்களைக் கிளப்பியிருக்கின்றன. கடந்த ஜூலையில் விஎச்பி தலைவர் அலோக் குமார் மாநில முதலமைச்சர் பஜன் லால் ஷர்மாவைச் சந்தித்து இதை கொண்டுவர வலியுறுத்தினார்.


“ராஜஸ்தான் சட்டமன்றம் மாநிலத்தில் மத மாற்றத்திற்கு முடிவு கட்டும் ஒரு கறானரான சட்டத்தைக் கொடுக்கும் வேலையைச் செய்திருக்கிறது,” என்று மாநில உள்துறை அமைச்சர் ஜவஹர் சிங் பேதாம் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். மதமாற்ற விவகாரங்களை விசாரிப்பதற்கென்றே நீதித்துறை ஆணையம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முன்வைத்திருக்கின்றன. 

சட்டத்தை மாற்றிய ஜெயலலிதா

ஏற்கெனவே குஜராத், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், இமாசல பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இது போன்ற சட்டங்கள்  இருக்கின்றன. கர்நாடகத்தில் 2022இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கடுத்த ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது செயல்படுத்தப்படவில்லை, அது விலக்கிக்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் அரசு அறிவித்திருக்கிறது. வேறு நான்கு மாநிலங்களின் சட்ட முன்வரைவுகள் ஏற்கப்படவில்லை.


தமிழ்நாட்டில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2002இல் இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்தது. கண்டன அலைகளில் எதிர்நீச்சல் போட முடியாமலும், தேர்தல் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்ற நிலையிலும் 2004இல் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து, மதம் மாறும் உரிமையைப் பறிக்கும் சட்டத்தை அவர் விலக்கிக்கொண்டார்.


மதம் மாறலாமா, கூடாதா? மாறுவது அவமானமா? மாற்றுவது குற்றமா?  இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் நேரடியாக மதம் மாறுவதைத் தடை செய்யவில்லைதான். மாறுவதற்கு உதவுவதைத் தண்டனைக்கு உரியதாக அறிவிக்கவில்லைதான். அப்படி நேரடியாக அறிவிக்க முடியாததற்குக் காரணம் இந்திய அரசமைப்பு சாசனத்தின் வலிமை. ஆகவே, “ஆசை காட்டியோ, பணம் கொடுத்தோ, மோசடி செய்தோ மாற்றுவதைத் தடை செய்வதில் என்ன தவறு,” என்று நினைக்கும் வகையில் “கட்டாய” என்ற வார்த்தையை “மதமாற்ற” என்ற சொல்லுக்கு முன்னால் ஒட்டவைக்கிறார்கள்.


நடைமுறையில், வேறு மதத்தைத் தழுவியவரின் பெற்றோர், உடன் பிறந்தவர், உறவினர் என யாரேனும் புகார் செய்கிறபோது, கட்டாயப்படுத்தி மதம் மாற்றியதாகவே பதிவு செய்கிறார்கள், வழக்குத் தொடுக்கிறார்கள். தண்டனைக்கு வழி செய்கிறார்கள். ஒருவேளை நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்யுமானால் கூட, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டதும், சட்ட அலைச்சலில் பணத்தை இழந்ததும், அரிய காலத்தைப் பறிகொடுத்ததும் கடும் தண்டனையாக அமைந்துவிடுகிறது. அதன் மூலம், மற்றவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் – அடிப்படையான நோக்கமே அதுதான் என்று சட்டத்தை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தள்ளுபடி செய்த நாடாளுமன்றம்


மதம் மாற முடிவு செய்கிற ஒருவர், மாவட்ட ஆட்சியருக்குத் தெரியப்படுத்தி அனுமதி பெற வேண்டும் என்று ஒரு விதி சேர்க்கப்பட்டிருக்கிறது. இது, தனக்கான மதத்தைத் தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை மறுப்பதாக இருக்கிறது என்று மனித உரிமைக்காக வாதாடுவோர் விமர்சிக்கிறார்கள்.


இந்து மதத்துக்காக மட்டும் சொல்லவில்லையே, எந்த மதத்திலிருந்தும் மாற்றப்படுவதற்குத்தானே தடை என்றும் வாதிடலாம். ஆனால், பெரும்பாலும் இந்து மதத்திலிருந்து வேறு மதங்களை நாடுவதற்கு வரலாறு நெடுகிலுமான எதிர்ப்பின் தொடர்ச்சியே இது என்பது புரியாத புதிரல்ல.

மத மாற்றத் தடைச் சட்டக்  கோரிக்கையின் வயதைச் சொல்வது கடினம்.  நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியபோதே அதைச் சேர்ப்பதற்காக வைக்கப்பட்ட வாதங்கள் அரசமைப்பு சாசன சபையால் ஏற்கப்படவில்லை.பின்னர், சட்ட அமைப்பு சார்ந்து வலியுறுத்துகிற முதல் முயற்சி 1954ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் தனிப்பட்ட முயற்சியாக, “இந்திய மத மாற்றத் தடைச் சட்ட முன்வரைவு” ஒன்றைத் தாக்கல் செய்தார். மக்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றும் உரிமையை மட்டுமல்லாமல், அதை மாற்றிக்கொள்ளும் உரிமையையும் நாட்டின் உயிரோட்டப்   பண்புகளில் ஒன்றாக மதித்த நாடாளுமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.


ஆயினும், குறிப்பாக நாடு தழுவிய அளவில் ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், மாநிலங்களில் தமிழகத்தின்  இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் இதைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளன. இந்து மக்கள் மதம் மாறுவதால் சிறுபான்மை மதங்களின் மக்கள்தொகை அதிகரிக்கும், பின்னொரு யுகத்தில் இந்து மதம் சிறுபான்மையாகிவிடும் என்ற பரப்புரைத்து வந்துள்ளன. “லவ் ஜிஹாத்” போன்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் கொண்டே இருந்திருந்திருக்கின்றன.


சத்திஸ்கர் மாநிலத்தில கேரளத்தைச் சேர்ந்த இரண்டு கிறிஸ்துவக் கன்னித் துறவியர் மத மாற்றத்தில் ஈடுபட்டதாக பஜ்ரங் தள் அமைப்பினர் பிரச்சினை செய்தனர்.  இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது சத்திஸ்கர் உயர்நீதிமன்றம் அவர்களுக்குப் பினை விடுதலை அளித்திருக்கிறது என்றாலும், நல்லிணக்கம் செழித்த கேரளத்தில் கிறிஸ்துவர்களின் ஆதரவைத் திரட்ட முயன்று கொண்டிருக்கும் பாஜக–வுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகவும், சமாதான முயற்சிகளில் மாநில பாஜக தலைவர்கள் இறங்கியிருப்பதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன.

மதம் மாற எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு

ராஜஸ்தானிலோ, பாஜக எம்எல்ஏ கோபால்  சர்மா, காங்கிரஸ் கட்சியின் ரஃபீக் கான், அமின் காஜி இருவரையும் அவர்களுடைய மூல மதத்திற்குத் திரும்புமாறு அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடாவான ரஃபீக் கான், “எனது உணர்வுகளை சர்மா புண்படுத்துகிறார். எனது மூல மதம் நான் எந்த மதத்தில் பிறந்தேனோ அதுதான். கர் வாபஸி என்பது தாங்களாக விரும்பி மாறுகிறவர்களுக்குத்தான். மற்றவர்களை விடுங்கள், ஒரு எம்எல்ஏ–யையே மதம் மாறச் சொல்கிறார் என்றால், இவர்கள் கொண்டுவந்திருக்கிற சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கும் குற்றங்களை அவர் செய்கிறார் என்றுதான் அர்த்தம்,” என்று கூறியிருக்கிறார். “எதிர்காலத்தில் சட்டம் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்படும் என்பதையே சர்மாவின் பேச்சு காட்டுகிறது,” என்றும் கான் கூறியிருக்கிறார் (‘தி வயர், செப்.10).


குடிமக்களின் மத உரிமை குறித்துப் பேசுகிற இந்திய அரசமைப்பு சாசனத்தின் சட்ட உரை  25, ஒவ்வொருவரும் அவரது மனச்சான்றின்படி முடிவு செய்கிற, தேர்வு செய்த மதத்தை நம்புகிற, அவ்வாறு நம்பும் மதத்தைக் கடைப்பிடிக்கிற, அதைப் பரப்புகிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. மனச்சான்று என்கிறபோது  எந்த மதத்தையும் பின்பற்றாமலிருக்கும் சுதந்திரமும் உறுதியாகிறது.


பரப்புவதற்கான சுதந்திரம் என்றால் அதை வளர்ப்பதற்கும் அதை நோக்கி ஈர்ப்பதற்குமான சுதந்திரம்தான். அரசியல் கட்சியையோ, மனித நேயத்தையோ பரப்புவது போலத்தான். சாதியை யாரும் பரப்புவதில்லை, ஒரு சாதியில் வேறு சாதிக்காரர் இணைய முடியாது என்பதால்! 


முன்பு இந்து மதத்தில் இருந்து மதம் மாறிச் சென்றவர்களைத் திரும்ப அழைக்கும் கர் வாபஸி பரப்புரை இயக்கம் ஒன்று இங்கே தொடங்கப்பட்டது. 2014இல் ஆக்ரா நகரில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியாகவே நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 300 பேர் இந்து மதத்திற்குத் திரும்பினார்கள். வீட்டு மனை,  வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் அளித்தே அவர்கள் வரவழைக்கப்பட்டதாக விமர்சிக்கப்பட்டது. நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அதை மறுத்தார்கள்.


ஆயினும் அதற்குப் பிறகு அந்த இயக்கம் பெரிய அளவுக்குத் தொடரவில்லை. வேறு மதத்திற்குச் சென்றவர்கள் திரும்புகிறபோது, அவர்களின் முந்தைய சாதி எதுவோ அதிலேயே சேர்ப்பது இயலாது, அவர்களும் அதை ஏற்க மாட்டார்கள் என்ற சிக்கல் இருக்கிறது.

மூல காரணம்

வரலாற்றுப்பூர்வமாகக் கவனித்தால், இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்குப் பலர் மாறியதே கூட, சாதிப் பாகுபாடுகளிலிருந்தும் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடுவதற்காகத்தான். இந்தியாவிலேயே புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் உருவானதற்கே கூட அடிப்படையான காரணங்களில் ஒன்று சாதி வேற்றுமைகளும் தீண்டாமைக் கொடுமைகளும்தான்.  


இந்து மதத்திலேயே பல சீர்திருத்தவாதிகள் தோன்றி சாதியத்தை எதிர்த்திருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர் வர்ண ஏற்பாடு தொழில் அடிப்படையிலானதுதான் என்று கூறினாலும் சாதிப் பாகுபாட்டை விமர்சித்தார். 11ம் நூற்றாண்டில் ராமானுஜர், தாழ்ந்த சாதியினர் என்று ஒதுக்கப்பட்ட மக்களின் ஆலய நுழைவு உள்ளிட்ட உரிமைகளுக்காக வாதிட்டார். 12ஆம் நூற்றாண்டின் பசவண்ணா வீரசைவ இயக்கம் என்று தொடங்கினார். 19ஆம் நூற்றாண்டில் ஜோதிபா புலே பிராமணியத்திற்கு எதிராகவும் அனைவரது கல்வி உரிமைக்காகவும் இயக்கம் மேற்கொண்டார். மகாத்மா காந்தி, வர்ணாஸ்ரம அமைப்பை ஏற்றுக்கொண்டவராக, தீண்டாமைக்கு எதிராகவும் போராடினார். டாக்டர் அம்பேத்கர் மதத்திற்குள் இருந்தே போராடிப் பார்த்துவிட்டுதான் புத்தத்திற்கு மாறுவதை ஒரு இயக்கமாகவே மேற்கொண்டார்.


தமிழ் மண்ணில் சித்தர்கள் சாதியத்தைச் சாடினார்கள். கடவுளை அடைய இடைவழியாகப் புரோகிதமோ சடங்குகளோ தேவையில்லை என்ற பக்தி இயக்கம் இங்கிருந்துதான் புறப்பட்டது. 19ம் நூற்றாண்டின் வள்ளலார் சாதி எதிர்ப்பின் அடிப்படையில்தான் சமரச சுத்த சன்மார்க்க இயக்கத்தை உருவாக்கினார். இன்றைக்கும், இந்து மதத்தின் மீது பற்று இருந்தாலும், சாதி வன்மங்களை எதிர்க்கிறவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.


இப்போது, நாடுதழுவிய அளவில் மதமாற்றத் தடைச் சட்டம் தேவையெனக் கோருகிறவர்கள், விவாதங்களின்போது சாதிப் பாகுபாடுகளை ஏற்கவில்லை என்கிறார்கள். ஆனால் அனைத்துச் சாதியினரும் அர்ச்சராகலாம் என்பது உள்ளிட்ட சமூக மாற்றத்திற்கான முயற்சிகளையும், கலப்புத் திருமணங்களையும் ஆதரிப்பதில்லை. மதத்தை சாதி தூக்கிப் பிடிக்கிறதா, சாதியை மதம் காப்பாற்றுகிறதா என்ற வரலாற்றுக் கேள்வி இன்னமும் இறுதியான பதிலைக் கண்டுபிடிக்காமல்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது.

உரிமைகளைக் குறிவைக்கும் ஆயுதம்

மனித அடையாளத்துடன் மட்டுமே பிறந்து பூமிக்கு வருகிறது குழந்தை. ஆசீர்வதிப்பதன் பேரில் அதன் நெற்றியில் திருநீறாக, நாமமாக, தலையில் குல்லாவாக, கழுத்தில் சிலுவையாக இன்ன பிறவாக அந்தக் குழந்தை மதத்திற்குள் கொண்டுவரப்படுகிறது –அதாவது மதத்திற்கு மாற்றப்படுகிறது. அடிப்படையான இந்த மத மாற்றத்துக்கும் தடை கோரப்படுமா? பதினெட்டு வயதில் நாட்டையே ஆளும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் போல, தனிப்பட்ட வாழ்வில் தன் மதத்தையும் தேர்வு செய்கிற – அதாவது தனது கடவுளைத் தானே முடிவு செய்கிற –  உரிமையை உறுதிப்படுத்தத் தயாரா?


கடவுள் நம்பிக்கை என்பது ஆழமானது. அதை மாற்றிக்கொள்ள ஒருவர் முடிவு செய்வது சாதாரணமானதல்ல. சொல்லப்போனால், கடவுள் நம்பிக்கையே இல்லாத மதங்கள் கூட இருக்கின்றன. அந்த மதங்களுக்கும் மாறலாம், மதமே வேண்டாமென்றும் வாழலாம். இந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும் அங்கீகரிப்பதல்லவா உன்னதமான பண்பாடு?


அதை மறுத்து, கட்டாயப்படுத்தி மாற்றுகிறார்கள், அச்சுறுத்தி மாற்றுகிறார்கள், ஆசை காட்டி மாற்றுகிறார்கள், திருமணத்திற்காக மாற்றுகிறார்கள் என்பதெல்லாம் சொந்த பலவீனங்களை மறைக்கிற, சமத்துவத்தை நிராரிக்கிற கோட்பாட்டின் வெளிப்பாடுதான்.


அரிதாக இங்கும் அங்குமாக இப்படிப்பட்ட அத்துமீறல்கள் நடக்கின்றன என்ற உண்மையை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், அதை தற்போதுள்ள சட்டங்களைக் கொண்டே  கையாள முடியும்.


மாறாகத் தனிச்சட்டம் கோருவதிலும் கொண்டுவருவதிலும்  தன் மதத்தின் மீதான நம்பிக்கையின்மையே வெளிப்படுகிறது. இப்படிப்பட்டதொரு சட்டம் குடிமக்கள் ஒவ்வொரும் தன் மதத்தைத் தேர்வு செய்வதற்கும், அதைப் பரப்புவதற்கும் அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்தும் உரிமைகளைக் குறிவைக்கும் ஆயுதமாகவே கையில் எடுக்கப்படும் என்ற அச்சத்தைப் புறக்கணிப்பதற்கில்லை.

[0]

விகடன் ப்ளஸ் டிஜிட்டல் பதிப்பு (செப்டம்பர் 12, 2025)


No comments: