முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன் – பெரும் எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்குச் சென்று, அதைவிடப் பெருமளவுக்கு நொந்துபோய் திரும்பிவந்த படங்களில் ஒன்றாகிவிட்டது தண்டகாரண்யம்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் செய்திகளாக வந்த, அப்படியே மறக்கடிக்கப்பட்டுவிட்ட, நக்சலைட் ஒழிப்புப் படை என்ற பெயரில் போலிப் பயிற்சி முகாம் நடத்தி அரசின் நலத்திட்ட நிதி கொள்ளையடிக்கப்பட்ட மோசடியை மையக் கதையாக்கியிருக்கிறார்கள். அந்த முகாம்களில் இருந்த நிலைமையைத் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
வனப் பாதுகாப்புச் சட்டத்தை மீறி பழங்குடி மக்கள் வஞ்சிக்கப்பட்டது, வனப் பொருட்கள் ஏல ஒப்பந்ததாரர், அதிகாரிகள் கள்ளக் கூட்டு வைத்திருந்தது ஆகியவையும் இணைக்கப்பட்டு திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அநீதிகள் பற்றி முதல் முறையாகத் தெரியவருகிறவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள்.
‘தண்டகாரண்ய’ காடுகளின் இருள் கவ்விய அடர்த்தியை அனுபவித்து உணர வைக்கிற அளவுக்கு ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார்கள். பழைய பாடல்களோடு இணைந்து அந்த உணர்வோடு கலந்திடச் செய்யும் பின்னணி இசையைச் சேர்த்திருக்கிறார்கள். பழங்குடி மக்களின் சடங்குமுறைகளோடு கூடிய வழிபாட்டை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
இவ்வளவும் இருந்தும், இவ்வளவு போதுமா ஒரு நல்ல சினிமாவுக்கு என்று கேட்கவும் வைத்திருக்கிறார்கள். ஒருவேளை நான்தான் கலையாக்கம் தொடர்பான கருத்துகளால் மரத்துப்போய்விட்டேனா என்று தெரியவில்லை – ஒரு காட்சி கூட மனதைத் தொடவில்லை.
தொடக்கத்திலிருந்தே நேர்த்தியற்ற முறையில் சித்தரித்திருக்கிறார்கள். கதை இப்படியிப்படித்தான் போகும் என்று ஊகிக்கிறோம், அவ்வாறு ஊகித்ததற்கு ஏமாற்றம் ஏற்படாமல் தந்திருக்கிறார்கள்.
சிவப்புச் சிந்தனையுடனான உரையாடல்கள் இருக்கின்றன – ஆனால், அந்த அரசியல் புரிதல் உள்ளவன் என்ற முறையில்தான் என்னிடம் வருகின்றனவே தவிர, இயல்பான திரை ரசிகன் என்ற முறையில் நெருங்கவைக்கத் தவறியிருக்கிறார்கள். பெண் கதாபாத்திரங்கள் முக்கியத்துவமின்றி உருவாக்கப்பட்டுள்ள விதத்தில் “நீலம்” தயாரிப்புகளில் இப்படியெல்லாம் இருக்காதே என்று கேட்கும்படி செய்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக நான், முற்போக்கான கதைப் படங்களை, குறிப்பாகச் சொல்வதானால் சிவப்புச் சிந்தனைகளைப் பகிரும் படங்களை விரும்பி வரவேற்கிறவர்களோடுதான் பேச விரும்புகிறேன். அப்படியான இடங்கள் ஒரு திரைப்படத்தில் இருக்கின்றன என்பதற்காக மட்டுமே அவற்றைச் சிறந்த படைப்புகள் என்று கொண்டாடுவதில் நியாயமிருக்கிறதா?
கருத்து நேர்மை எவ்வளவு முக்கியமோ அதற்குக் கொஞ்சமும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது கலை நேர்மை.
அது இல்லாத தயாரிப்புகள் என்று தெரிந்தும், “இத்தகைய படங்களை ஆதரிப்பது நமது கடமை” என்று கூறும்போது, உண்மையில் கலை நேர்த்தியுடன் உருவாக்கும் பொறுப்பிலிருந்து அவர்கள் கழற்றிவிடப்படுகிறார்கள். கடமைக்காகப் பார்க்க வேண்டும் என்று சொல்வதே, சம்பந்தப்பட்ட படம் மக்கள் விரும்பிப் பார்க்கத்தக்கதாக இல்லையென்று காட்டிக் கொடுப்பதாகிவிடுகிறது.
அண்மையில் வந்த ‘வீர வணக்கம்’ படமும் அப்படித்தான் இருந்தது. மனதில் எழுச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, கேரளத்தின் ஒரு முன்னோடி கம்யூனிஸ்ட் தலைவர் பி. கிருஷ்ணப்பிள்ளை வாழ்க்கைக் கதை அது. ஆனால், இயக்கம் சார்ந்தவர்களின் நினைவுகளையும் உணர்வுகளையும் வேண்டுமானால் கொஞ்சம் கிளறிவிட்டிருக்குமே தவிர, திரைக்கதையோ, காட்சியமைப்புகளோ கொஞ்சமும் உணர்வார்ந்த அனுபவத்தைத் தரவில்லை.
ஒரேயொரு ஆறுதல், அவருடைய காலத்தில் இயக்க மேடைகளில் பாடிய அம்மையார் தமது 97வது வயதில் அதே கதாபாத்திரத்தில், அந்த நாட்களை நினைவுகூர்கிறவராக வருகிறார். ஆனால் படத்தில், கிருஷ்ணப்பிள்ளையோடு சேர்ந்து மேடையேறிப் பாடுகிற இளவயதுத் தோழரைக் காட்டவே இல்லை.
அதே போல், கிருண்ணப்பிள்ளை, தங்கம்மா இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள். ஆனால், அதற்குப் பிறகு அந்த அம்மையார் என்ன ஆனார் என்றே படம் காட்டவில்லை. கிருஷ்ணப்பிள்ளையின் இறப்பு கூட ஏதோ பின்னணிச் செய்தியாகத்தான் சொல்லப்படுகிறது.
இப்படி புரட்சிகரமான, முற்போக்கான செய்திகள் உள்ள, ஆனால் கலையும் கலகலப்பும் கைவிடப்பட்ட பல படங்களைச் சொல்ல முடியும். கூட்டம் வராததால் அப்படிப்பட்ட படங்கள் திரையரங்குகளிலிருந்து தூக்கப்படும்போது, மாறுபட்ட படங்களை ஆதரிக்க மறுக்கிறார்கள் என்று மக்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. உண்மை என்னவென்றால், மக்களை நெருங்கவிடாத தயாரிப்புகளால், முற்போக்கான செய்தி சொல்லும் படங்களே ஓடாது, மசாலா படமாகவே எடுத்து நாலு காசு சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை மற்ற தயாரிப்பாளர்களுக்கு இவர்கள்தான் ஏற்படுத்துகிறார்கள்.
புரட்சிகர உள்ளடக்கமும் மக்களை ஈர்க்கும் திரைமொழியும் கொண்டு வெற்றி பெற்ற படங்கள் பல இருக்கின்றன. ஒரு ‘விடுதலை –பாகம் 1’ போல, ஒரு ‘சர்பட்டா பரம்பரை’ போல, ஒரு ‘கர்ணன்’ (2021) போல, ஒரு ‘அசுரன்’ போல…
ஆகவே முற்போக்காளர்களே, கலை இல்லையென்று தெரிந்தே, கடமைக்காக ஆதரிக்காதீர்கள். கடமைக்காக ஆதரிக்க வேண்டுகோள் விடுக்காதீர்கள். என்னைப் போன்றவர்களின் இப்படிப்பட்ட கலைக் கண்ணோட்ட விமர்சனங்கள்தான் நல்ல படங்களின் தோல்விக்குக் காரணம் என்று சொல்ல நினைக்கிறீர்கள் என்றால், அந்த எதிர்க்கருத்துச் சுதந்திரத்துக்குக் குறுக்கே நான் நிற்கப் போவதில்லை.
[0]
எனது முகநூல் பதிவு (செப்.25)
No comments:
Post a Comment