வினாத்தாள் கசிவுகள் வெறும் குற்றச் செயல்கள் மட்டுமல்ல, அவை நம் நாட்டின் கல்வி நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையைச் சீரழிக்கும் செயல். லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பு, பெற்றோரின் கனவு, சமூகத்தின் எதிர்காலம் ஆகியவற்றை ஒரே தேர்வு முறையின் மீது குவித்துவைத்திருக்கும்போது, அந்த முறையின் ஒவ்வொரு குறைபாடும் தேசியப் பிரச்னையாகவும் மாறுகிறது.
அதனால்தான், நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளில் தொடர்ச்சியாக வெளிப்பட்ட முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள், நிர்வாகக் குளறுபடிகள் வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக அல்லாமல், கல்விக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கும் பிரச்னைகளாகவும் மாறியிருக்கின்றன.
இதற்கு எதிராக மாணவர்களும், இளைஞர்களும் முன்னெடுத்த போராட்டத்துக்கு அடிபணிந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, தேர்வு முறையை ஆய்வு செய்து சீர்திருத்தப் பரிந்துரைகளை வழங்க நந்தன் நீல்கேனி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இன்னொரு புறம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனைகள் அளிக்க வகைசெய்யும் சட்ட முன்வரைவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நந்தன் நீல்கேனி இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முன்னணிப் பெயர். தற்போது இயல்பானதாகிவிட்ட யுபிஐ பணப் பரிமாற்றம், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் போன்ற நடைமுறைகளைச் செயல்படுத்த அரசுக்கு வழிகாட்டல்கள் வழங்கியவர். தேசத்தின் மக்களை வெறும் அடையாள எண்களாக்கி, அதைப் பெறுவதற்கு அலையவிடும் ஆதார் அட்டைக்கு ஆலோசனை கூறியவரும் இவர்தான். முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் குழுமத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.
அவர் தலைமையிலான குழு அரசுக்கு என்ன ஆலோசனைகளை வழங்கப் போகிறதோ? பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்படுகிற சம்பிரதாயம் பின்பற்றப்படலாம். எப்படியானாலும், மாணவர்கள் மன உளைச்சலின்றித் தேர்வுகளைச் சந்திக்க உதவிடும் வகையில் அந்தக் குழுவுக்கு சில ஆலோசனைகளை முன்வைக்கலாம்.
முதல் அங்கீகாரம்
இந்திய உயர்கல்விக் களமும், நாட்டின் வருங்காலத்தைக் கட்டவிருக்கும் மாணவ சமூகமும் நிகழ்காலத்தில் ஒரு தீவிரமான நம்பிக்கையின்மைச் சூழலை எதிர்கொண்டிருப்பதை முதலில் குழு அங்கீகரிக்க வேண்டும். தேசிய அளவிலான தேர்வுகளை நடத்திக்கொடுப்பதற்காக அமைக்கப்பட்டது ‘தேசிய தேர்வு முகமை’ (என்டிஏ). அனைத்துவகை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’, பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான ‘நெட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை என்டிஏ நடத்துகிறது. இந்தத் தேர்வுகளில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவுகள், நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள், தேர்வு முறையின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன.
‘நீட்’ தேர்வே கல்லூரிகளையும் பல்கலைகளையும் தாண்டி தனியார் பயிற்சிக் கூடங்கள் (கோச்சிங் சென்டர்) கோடிக்கணக்கில் அமோக வசூல் நடத்தும் ஏற்பாடாகத்தான் இருக்கிறது என்று மாணவர்–இளைஞர் சங்கங்களின் தலைவர்களும் கல்வி அக்கறையாளர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒன்றிய கல்வியமைச்சகத்தின் உயர்கல்வித்துறை “கட்டுப்பாட்டில்” செயல்படும் தன்னாட்சி நிறுவனமான தேசிய தேர்வு முகமைக்கு, வினாத்தாள் அச்சிடுதல் உள்ளிட்ட முக்கியமான பல பணிகளை மேற்கொள்ளத் தனியார் “சேவைகள்” பெருமளவுக்குத் தேவைப்படுகின்றன. சொந்தமான ஊழியர்கள் இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் வெளியார் நியமனங்களையே சார்ந்திருக்கிறது. ஆகவே என்டிஏ கட்டமைப்பிலேயே முறைகேடுகள் நுழைவதற்கான எலிவளைகள் இருக்கின்றன. இதையும் நீல்கேனி குழு ஒப்புக்கொள்ள வேண்டும், அரசுக்குச் சுட்டிக்காட்டவும் வேண்டும்.
ஒரே கட்டத் தேர்வு ஏன்?
கோடிக்கணக்கான மாணவர்கள், தொடக்கப் பள்ளியிலும் மேல்நிலைப் பள்ளியிலுமாக 12 ஆண்டுகள் ஒவ்வொரு வகுப்பாகப் பல கட்டங்களில் படித்து உள்வாங்கியிருக்கும் உயிரியல் அறிவை, 3 மணி 20 நிமிட நேரத்தில் ஒரே கட்டமாக வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடை முறை இப்போது இருக்கிறது. மருத்துவ அறிவியல் தேர்வுக்கான இந்த அறிவியல்பூர்வமற்ற நடைமுறை மாணவர்களுக்குப் பெரும் மன அழுத்தத்தையே ஏற்படுத்துகிறது. நிர்வாக அடிப்படையிலும் அது தேவையற்ற நெருக்கடியைத் தருகிறது.
இதனை மாற்றி, முதல்நிலைத் தேர்வு (ப்ரீலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெய்ன்ஸ்) என இரண்டு கட்டங்களாகப் பிரிப்பது மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். நிர்வாகப் பணிகளும் இலகுவாகும். மாணவர்களின் அடிப்படைத் தகுதியை அளவிடுவதாக முதல்நிலைத் தேர்வு, அவர்கள் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று மதிப்பிடுவதாக முதன்மைத் தேர்வு.
ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கை எப்படி கூட்டாட்சி மாண்புக்கு எதிரானது என்று விமர்சிக்கப்படுகிறதோ, அதே போல் ஒரே நாடு, ஒரே தேர்வு என்பதும் அனைத்து அதிகாரங்களையும் ஒரே அமைப்பிடம், அதுவும் தனியார் நிறுவனங்களைச் சார்ந்திருக்கிற அமைப்பிடம் குவிப்பதற்கே வழி செய்கிறது. அது கல்வி மேம்பாட்டுக்கு ஆபத்தானது. இதைத் தற்போதைய நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு சிறிய புள்ளியில் ஏற்படும் தவறு, நாடு முழுவதையும் பாதிக்கும் நிலையை அனுமதிக்கக்கூடாது என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மாணவர் மனங்களில் சுமையேற்றப்படுவது ஒருபுறமிருக்க, நாட்டின் அரசமைப்பு சார்ந்த கூர்மையான நிலைமை ஒன்றும் இருக்கிறது. உயர்கல்வி வழங்குவதிலும் அதற்காக மாணவர்களைத் தயார்ப்படுத்துவதிலும் மாநிலங்களின் கல்வித்துறைகளுக்கு உள்ள தகுதியை நீட், நெட் இரண்டும் கேள்விக்கு உட்படுததுகின்றன.
எடுத்துக்காட்டாக, இந்தியாவின் ஒரு சிறப்பான மருத்துவ சுற்றுலாத் தலமாகத் தமிழ்நாடு அடையாளம் பெற்றிருக்கிறது. பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழ்நாட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் இரண்டிலுமே பணியாற்றும் மருத்துவர்கள் இந்த வளர்ச்சியில் பங்களித்திருக்கிறார்கள். பல நாடுகளின் மருத்துவமனைகளில் இங்கிருந்து படித்துச் சென்றவர்கள் பணியாற்றுகிறார்கள்.
இவர்கள் கடந்த பத்தாண்டுகளில் நீட் எழுதித் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் அல்ல. அதற்கு முன் மாநில உயர்கல்வித்துறை நடத்திய நுழைவுத் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றவர்கள்தான். தமிழ்நாட்டில் 2007இல் அன்றைய முதலமைச்சர் கலைஞர், நுழைவுத் தேர்வையே விலக்கி, 12ஆம் வகுப்புத் தேர்ச்சியின் அடிப்படையில் மருத்துவம் பயிலலாம் என்று கொண்டுவந்த நடைமுறையில் பயின்றவர்கள்தான். மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற நிலைமைகள் இருந்திருக்கக்கூடும்.
ஆக, மாநிலங்களின் கல்வித்துறைப் பணியையும் தேர்வுத் தகுதியையும் அவமதிக்கிறது நீட். ஆகவே உயர்கல்வி, மாணவர் சேர்க்கை இரண்டிலுமே மாநில அரசுகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் உரிய தன்னாட்சியையும் அதிகாரத்தையும் மீட்டளிப்பதாக நீல்கேனி குழுவின் பரிந்துரைகள் அமைய வேண்டும். ஒன்றிய-மாநில கூட்டாட்சிக் கோட்பாட்டு மேன்மைக்கு ஏற்ப தேர்வு முறைகளைப் பரவலாக்குவதற்குப் பரிந்துரைக்க வேண்டும்.
தேசிய முகமைக்குத் தேவை தன்னாட்சி
என்டிஏ ஒரு அமைச்சகத்தின் கீழுள்ள முகமையாக அல்லாமல், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) போன்ற தன்னாட்சி அமைப்பாக தரம் உயர்த்தப்பட வேண்டும். அரசியல் தலையீடுகள் தவிர்க்கப்பட்ட, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தடுக்கப்பட்ட, தன்னாளுமை உள்ள அதே வேளையில் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்ட நிர்வாகக் கட்டமைப்பாக மாற்றப்பட வேண்டும்.
போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பல தனியார் மையங்களை வாடகைக்கு எடுத்துத்தான் நீட், நெட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இது முறைகேடுகளுக்கு உத்தரவாதமான வசதியாகிறது. இதற்கு மாற்றாக, நாடு முழுவதும் நவீன தொழில்நுட்ப வசதிகள் அனைத்தும் கொண்ட அரசாங்கம் சார்ந்த நிலையான தேர்வு மைய உட்கட்டமைப்புகளை உருவாக்கப் பரிந்துரைக்க வேண்டும்.
தொழில்நுட்பப் பாதுகாப்பு
நீல்கேனியின் தொழில்முறை அனுபவத்துக்கு இங்கேதான் மிக முக்கியமான வேலை இருக்கிறது. வினாத்தாள் உருவாக்கம், விநியோகம், விடைத்தாள்கள் பெறல், மதிப்பீடு என எல்லாப் படிகளிலும் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யும் கட்டமைப்பை உருவாக்கியாக வேண்டும். வினாத்தாள் கசிய முடியாத குறியாக்கம் (என்கிரிப்ஷன்), கைரேகை உள்ளிட்ட உயிரியல் அளவை (பயோமெட்ரிக்) வருகைப்பதிவு, தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்தின் வழியே சாத்தியப்படுத்த வேண்டும். எத்தனை பாதுகாப்பான தொழில்நுட்பமானாலும், அதை உடைக்கத் தெரிந்த கில்லாடிகள் வருவார்கள்தான். மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் போல சந்தேகம் தொடரும்தான். நீல்கேனி இதையும் ஆராய்ந்து நம்பகமான தடுப்பணைகளுக்கு வழி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக, தில்லி ஐஐடி மேனாள் இயக்குநர் வி. ராம்கோபால் ராவ் எழுதியுள்ள கட்டுரை (டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஜூலை 28), வாசகர்கள் மட்டுமின்றி நீல்கேனி குழுவின் கவனத்திற்கும் உரியது. கல்வி உரிமைக்காக இயங்கிடும் களச்செயல்பாட்டாளர்களும் பல்வேறு ஆலோசனைகளைத் தெரிக்கிறார்கள். மாணவர் அமைப்புகளும் இதில் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைக்கின்றன. நேர்முகக் கூட்டங்களாக, தனிப்பட்ட சந்திப்புகளாக, இணையவழி ஆவணங்களாக அவற்றையெல்லாம் கோரிப் பெறுவதற்கு திட்டமிட்ட முயற்சிகளை மேற்கொள்வது ஆலோசனைக் குழுவின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும்.
நிச்சய வழி
இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே, ஒரு வகையில் ‘நீட்’, ‘நெட்’ தேர்வுகள் இனி நிலைத்துவிடுமோ என்ற கையறு நிலையிலிருந்தே முன்வைக்கப்படுகின்றன. அமைச்சர் பதவி விலகுதல், வழக்குகள் விலக்கப்படுதல், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ஆகிய கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டதில் கூட, நீட் நிலைப்பதற்குத் தடையில்லை என்ற ‘திருப்தி’ இருக்கக்கூடும்.
ஆனால். உண்மையிலேயே நிலையான, நிச்சயமான நீர்வு என்றால் – இந்தத் தேசிய நுழைவுத் தேர்வுகளை நிலையாக நீக்குவதுதான். மாநிலங்களின் கல்வித்துறைகளுடைய மாண்பையும், தேர்வுகளை நடத்தும் தகுதியையும் மாணவர்களது திறன் வளர்க்கும் ஆற்றலையும் அங்கீகரிப்பதுதான். ஒன்றியக் கையை விலக்கிக்கொண்டு, மாநிலக் கல்வித்துறைகளிடமே பொறுப்பை ஒப்படைப்பதுதான். கல்வியே மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்றப்படுவது மேலும் அருமையான வழி. போராட்டம் முழு வெற்றியடைவது அப்போதுதான்.
மாநிலங்களே தேர்வுகளை நடத்தியபோது மாணவர்களின் அலைச்சலும், முறைகேடு வாய்ப்புகளும் மிகுதியாக இருந்ததால்தான் நீட், நெட் தேர்வுகளைக் கொண்டுவர வேண்டியிருந்ததாகத்தானே ஒன்றிய அரசு கூறியது? பிறகு எப்படி மாநிலங்களிடமே விட முடியும் என்ற கேள்வி எழலாம். முறைகேடுகள் ஊடுருவ வழியின்றி மாநிலத் தேர்வுகள் அல்லது நேரடி மாணவர் சேர்க்கைகள் நடைபெறுவதற்கு ஏற்ற ஆலோசனைகளை நீல்கேனி குழு அளிக்கலாம். ஒன்றிய ஆட்சியாளர்கள் அதை ஏற்கச் செய்வதற்கான நாடுதழுவிய போராட்டம் தேவைப்படுலாம், உறதியாக அது வெற்றி பெறும்.
[0]
விகடன் ப்ளஸ் தளத்தில் எனது கட்டுரை
No comments:
Post a Comment