Sunday, 31 May 2026

வள்ளுவரை ஆடையின்றி நிறுத்த முடியுமா?


காலை நடையில் பூங்கா நிழலில்…

“கொஞ்ச நாளா அடங்கியிருந்துச்சு. இப்ப மறுபடி பிரச்சினை கிளப்புறாங்களே…?” –காலை நடை நேர நிறைவில் வழக்கமாக அமரும் இருக்கையை அடைந்ததும் ஆதங்கத்தோடு நண்பர் கேட்டார்.


“என்னென்னமோ பிரச்சினைகளைக் கிளப்புறாங்க, நீங்க எதைச் சொல்றீங்க?” புதியது கேட்கும் ஆர்வத்தோடு நான் கேட்டேன்.


“கவர்னர்  ஆஃபீசுல திருவள்ளுவர் காவி டிரஸ்ஸில் இருக்கிற மாதிரி பேனர் வெச்சிருந்திருக்காங்க. போதாக்குறைக்கு நெத்தியில பட்டை வேற. இதுக்கு முன்னாடியும் ரவி பீரியட்ல நடந்துச்சு, இப்பவும் நடக்குது.” கைப்பேசித் திரையில் செய்தியைக் காட்டியபடி சொன்னார் நண்பர்.


“மதச்சார்பு வரிகளையும் சேர்த்து வந்தே மாதரம் பாடுறதுக்கு, ஒன்றிய அரசாங்கத்தோட சுற்றறிக்கையைக் காரணம் காட்டினாங்க. வள்ளுவருக்கு காவி உடை மாட்டி விடணுன்னும் மேலேயிருந்து ஆணை வந்துச்சான்னு தெரியலை…”


“இல்லை. இது இப்பத்திய கவர்னரே எடுத்த முடிவுதான் போல இருக்கு. எல்லாக் காலத்துக்கும் பொதுவான வள்ளுவர் ஒரு சனாதனிதான்னு அவர் பேசினதா ஒரு நியூஸ் வருது பாருங்க.” –அதற்குள் தன்னுடைய கைப்பேசித் திரையையும் உயிர்ப்பித்த மற்றொரு நண்பர் அதையும் காட்டினார்.

“சார், உங்களுக்கே தெரியும், நான் ஹிண்டுதான். ஹிண்டுவா இருக்கிறதுல பெருமைப்படுறவன்தான். ஆனா இப்படியெல்லாம் செய்றதை என்னால ஏத்துக்க முடியலை. இப்படியெல்லாம் செஞ்சு எல்லா ஹிண்டூஸ் பத்தியும் தப்பான கருத்தை ஏற்படுத்துறாங்க.”


“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவிச்சிருக்காரு. வேற பல தலைவர்களும் விமர்சனம் பண்ணியிருக்காங்க. ஆனா சீஃப் மினிஸ்டர் விஜய் கம்முனு இருக்காரே…”


“அமைச்சர் அருண்ராஜ் இப்படியெல்லாம் திருவள்ளுவரைக் களங்கப்படுத்தாதீங்கன்னு பதிவு போட்டிருக்கிறாரு, நல்ல விசயம். ஆனா, இது அவரோட சொந்தக் கருத்துங்கிற மாதிரி போயிடக் கூடாது. முதலமைச்சரே சொன்னால் அதிகாரப்பூர்வமாவும் இருக்கும். அவங்க கட்சிக்கு மரியாதையாவும் இருக்கும்.”


“அவங்க ஆட்சிக்கும் கம்பீரமா இருக்கும். ஆனா, அதைப் பத்தியெல்லாம் அவரு கேர் பண்றாரான்னே தெரியலையலையே...”

“இன்னும் இது மாதிரி நிறைய வரத்தானே போகுது. அப்ப என்ன  செய்றாருன்னு பார்க்கலாம். ஆனா ஒண்ணு…”


“முழுசா சொல்லி முடிங்க சார். என்னாது அது?”


“வள்ளுவரோட அங்கிக்கு வேற வண்ணம் பூசுறதும் சரி, அதைக் கண்டுக்காம விடுறதும் சரி, ரெண்டுமே அவரை ஆடையே இல்லாம நிறுத்துற வேலைதான். ஆனா, திருக்குறளே அவருக்கு வலுவான  அங்கிதான்றதை மறந்துடுறாங்க.”


அந்தக் கணத்தில் கவ்விய மௌனம், வழக்கமான தேநீர்க்கடையை அடைந்து டீ, காஃபி என்று கேட்கிற வரையில் நீடித்தது.


Friday, 15 May 2026

சுருக் செய்திகள் நறுக் கருத்துகள்



“காங்கிரஸ், அதிமுக பிரிவினரின் பதவிக் கோரிக்கைகளால் விஜய் அமைச்சரவை அமைப்பதில் தாமதம்

-அரசியல் மரியாதையைத் தந்த கட்சிகளுக்கு அப்பால்  புதுசா அவங்களா வந்து ஆதரிக்கிறவங்களுக்கு நன்றி மட்டும்தான், பதவிப் பசிக்கெல்லாம் இரை போட மாட்டோம்னு அறிவிக்கிற நேர்மையை ஜனநாயகன்ட்ட காணோமே! சரி, அந்தச் செய்திக்குப் பக்கத்துல இருக்கிற தலைப்பையும் வாசியுங்க...

“அமைச்சரவை அமைப்பதில் தாமதத்தால் குடிமைத் திட்டங்கள் முடக்கம்”

-நேர்மையா அப்படி அறிவிச்சிருந்தாருன்னா இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்காதுல்ல... இப்ப பாருங்க, அமைச்சர் பதவி கேட்கிறவங்க எந்தத் துறை வேணும்னும் நெருக்கடி கொடுப்பாங்கல்ல...  எப்படியோ மக்களுக்கு வர வேண்டிய திட்டங்கள் ரொம்ப நாள் முடங்காம இருந்தா சரி... அடுத்த செய்தி?

“ஊழலை ஒழிக்கக முதலமைச்சர் மூன்று மாத காலம் கெடு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா"

-வாங்குறதெல்லாம் அதுக்குள்ள வாங்கி முடிச்சுக்குங்கன்னு சொல்றதா ஆகிடக் கூடாது!அடுத்தது?

பாலின சமத்துவம் என்பது மத உரிமைகளுக்குக் கிடையாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்"

-பெண்களைப் பின்னால் தள்ளி ஆண்களுக்கு முன்னுரிமை அளிக்கிற பாலினப் பாகுபாட்டுக்கு அடைக்கலம் தர்றதே மத ஏற்பாடுகள்தான். மத நம்பிக்கைகள்ல தலையிட முடியலைன்னு சொன்னா புரிஞ்சிக்கிடலாம். தலையிட மாட்டோம்னு சொன்னா, இந்த அநீதிக்கு அரசாங்கமும் அடைக்கலம் கொடுக்குதுன்னுதான் அர்த்தம். உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்புச் சொல்லுதுன்னு பார்ப்போம்....

“10 நாள் புதிர் விலகியது: கேரள முதலமைச்சர் பொறுப்புக்கு சதீசன் தேர்வு”

-முந்தைய கம்யூனிஸ்ட் கட்சி அரசுகள் கொண்டுவந்த பல அரசியல் பண்பாடுகளையும் நடைமுறைகளையும் காங்கிரஸ் அரசுகள் குலைக்க முயன்றதில்லை. இவரும் அப்படியே தொடர்கிறாரான்னு பார்ப்போம்”

[0]

-காலை நடை நிறைவின் பூங்கா உரையாடலில், ஒரு நண்பர் பத்திரிகைச் செய்திகளின் தலைப்புகளை மட்டும் வாசிக்க வாசிக்க, நான் உடனுக்குடன் வெளிப்படுத்திய கருத்துத் தெறிப்புகள் இவை. புனைவுப்படம்: ஜெமினி ஏஐ

Thursday, 14 May 2026

பஞ்ச், நாக் விளையாட்டு


 


“சேஞ்ச் இருக்கும்னு சொன்னாங்க, எக்ஸ்சேஞ்ச் இருக்குமோன்னு மக்கள் சந்தேகப்படுறாங்க.”

“இது குதிரை வேகத்தில் ஓடுற அரசு,  குதிரை பேரத்தில் ஈடுபடுற அரசு அல்ல.”

நம்பிக்கை வாக்கெடுப்பு உரைகளில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பஞ்ச் (டயலாக் அல்ல), முதலமைச்சர் விஜய் நாக் (அவுட் அல்ல) இரண்டும் இந்தச் சட்டமன்றத்தில் விறுவிறுப்புச் சுவைகளுக்குப் பஞ்சமிருக்காது என்று காட்டுகின்றன. நம் கவலை இப்படி அதிரடியும் எதிரடியுமாகப் போய்விடக் கூடாது என்பதே.

மக்கள் மொத்தமாகத் தூக்கி ஆட்சிப் பொறுப்பை தவெக–விடம் தந்துவிடவில்லைதான். ஆனால் மக்களுக்காக வாதாடும் எதிர்க்கட்சிப் பொறுப்பை திமுக–விடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அரசு என்ன செய்தாலும் எதிர்ப்பதே கொள்கையென முந்தைய ஆட்சியின் எதிரணி செயல்பட்டது போல அல்லாமல், மக்களின் வலியுணர்ந்து, ஆள்வோரின் அத்துமீறல்களைத் தோலுரித்துக் காட்டும் பொறுப்பு அது.

கம்யூனிஸ்ட்டுகளும் விசிக, இயூமுலீ கட்சியினரும், அரசு அமைப்பதற்காக அளித்த நெருக்கடி நேர ஆதரவு, அரசின் தவறுகளுக்கான ஏற்பாக இருக்காது என்று அறிவித்திருக்கிறார்கள். போராடுவது அவர்களுக்குப் புதிதல்ல.

அதிமுக–விடம் இதைச் சொல்லிப் பயனில்லை.  அவர்கள் மக்கள் நலனுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பவர்களாக இருப்பார்கள் என்று நம்புவதற்குமில்லை. அவர்களுக்குள்ளான அடிதடியில் ஏற்படும் சட்டைக் கிழிசல்களைத் தைப்பதற்கே நேரம் போதாது.

இது சிறுபான்மை அரசுதான் என்று ஒப்புக்கொண்டு அறிவித்த நேர்மை, சிறுபான்மை மக்களுக்கான அரசு என்ற  சொல் விளையாட்டாக மட்டும் கடந்துவிடுவதற்கு விஜய் அமைச்சரவை இடமளிக்கக்கூடாது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்பதை நிறுவிக்காட்டுவது, அவர்களைத் தாக்குகிற பெரும்பான்மை மதவாத அரசியல் நடவடிக்கைகளை உறுதியாகக் கை மறித்துத் தடுப்பதில் இருக்கிறது. பெரும்பான்மைச் சமயம் சார்ந்த மக்களுக்கும் பாதகமான ஆணைகளையும் சட்டங்களையும் அதே போல் தடுப்பதில் இருக்கிறது.

சின்ன விமர்சனம் கூடச் செய்ய மாட்டோம் என்ற, பதவியேற்புக்கு முந்தைய நாட்களின் உத்தி தற்காலிகமானதாகவே இருக்கட்டும். இல்லையேல், முதலமைச்சரைச் சுற்றியுள்ளவர்கள் யாருக்கோ பிரதிநிதிகள்தான் என்று சமூகவியலாளர்கள் விடுத்த எச்சரிக்கை உண்மையாகிவிடும்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரும் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியது நன்று. நாடு முழுவதுமே முன்பிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை மீட்டமைக்க வலியுறுத்தும் குரலும் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒலிக்க வேண்டும். அதுதான், அனிதாவுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்தியதற்கு நியாயம் செய்வதாக இருக்கும்.

மறுபடி சொல்கிறேன், கூட இருக்கிற பொருளாதாரப் புலிகள் சொல்வதைக் கேட்டு அரசாங்கம் கடன் வாங்குவது பற்றிய குழப்பங்களில் மூழ்காதீர்கள். வாங்கிய கடன்கள் மாநிலத்தின் பொருளாதாரக் கட்டமைப்புக்கு உதவின என்று புரிந்துகொள்ளுங்கள். முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டு வருவதால்தான் தமிழ்நாட்டுக்குத்  தொடர்ந்து கடன்கள் கிடைத்தன என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

35 சதவீத வாக்குகள் பெற்ற எங்களை, 75 சதவீத மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விமர்சிப்பதா என்ற சொத்தை வாதம் கைதட்டல் பெற்றுத் தரலாம், கைகொடுக்காது. ஒரே ஒரு சதவீத வாக்குகள் பெற்றவர்கள் கூட அரசை விமர்சிக்க முழு உரிமையும் தகுதியும் பெற்றவர்கள்தான்.

அத்தகைய விமர்சன உரிமையோடுதான், உங்கள் ஆட்சி அமைவதற்கு ஆதரவளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அரசுப் பதவியில் ஜோதிடர் நியமிக்கப்பட்டதற்கு உடனடியாகக் கண்டனம் வெளியிட்டது. சட்டமன்றத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் ராஜகுருவை வீட்டோடு நிறுத்திக்கொள்ளச் சொன்னார். மற்ற சிலரும் அறிவியல் மனப்பான்மைக்கு எதிரான இந்தச் செயலைச் சுட்டிக்காட்டி விமர்சித்தார்கள். வெளியே சமூக ஊடகங்களிலும் மீம்ஸ்கள் வைரலாகின.

அதற்கெல்லாம் மதிப்பளித்து, நியமித்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் அவரை அனுப்பி வைத்தது பாராட்டுக்கு உரியது. இது எதிர்க்கட்சிகளுக்கு முதல் வெற்றிதான் என்றாலும் உங்களுக்குத் தோல்வி என்று நினைத்து மனம் மருள வேண்டாம். நியமனத்தை விலக்க மறுத்திருந்தால்தான் தோல்வியாகியிருக்கும். பகுத்தறிந்து முடிவெடுப்பவராகக் கட்ட முயலும் பிம்பத்தைக் கலைப்பதாகியிருக்கும்.


உங்களுக்குக் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையிலும், தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய கேட்டினைத் தடுக்கும் வகையிலும் ஆதரவளிக்க முன் வந்த இயக்கங்கள் சுயநலமின்றி முன்வைக்கும் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வாருங்கள். அவர்களின் ஆதரவால் உங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்.

திமுக எதிர்ப்பு என்பதை ஏதோ புனிதமான கொள்கை போலக் காட்டிக்கொண்டு அப்பட்டமான ஆசைகளோடு “ஆதரிப்போர்” வரிசையில் எழுந்துநின்றவர்களுடனான சகவாசத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.

அரசியல் அக்கறை இல்லாதவர்கள் என்று கருதப்பட்ட கணிசமான மக்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை உங்களின் பக்கம் ஈர்த்ததன் மூலம் அரசியல் களத்திற்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் எதிர்கால சமூக–அரசியல் வளர்ச்சிக்கு அது தளம் அமைத்துத் தரக்கூடும். இடதுசாரிகளும் மற்ற மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் சரியான வழிமுறைகளோடு அவர்களை அணுகும்போது அது புதிய நம்பிக்கை வெளிச்சங்களைப் பாய்ச்சும்.



Friday, 8 May 2026

டீ பிரேக்


 

அதுவும் இதுவும் இரண்டுமே

விளைவதும் வருவதும்

தோட்டங்களில் இருந்துதான். ,

ஒன்று விதைகளாய்

இன்னொன்று இலைகளாய்.


எங்கே எப்போது

எப்படி கண்டறியப்பட்டன?

உலாவும் கதைகள் விதவிதமாய் 

இரண்டையும் விட சுவைசுவையாய்!


சென்ற இடமெல்லாம்

கருஞ்சிவப்பிலும் கடுங்கசப்பிலுமே

நாவோடு உறவாடுகின்றன.


இங்கே மட்டும்

கள்ளிச்சொட்டுப் பாலும்

கருப்பட்டியோ கரும்புச் சர்க்கரையோ

கலந்துவிட்டதைப் பேசுவதே கூட

தனிக்கதைதான் தனிச்சுவைதான்.

அளவான தூளில்

கச்சிதமான கலவையில்

சரியான சூட்டிலா இருக்கிறது

பானங்களின் சுவை?


நட்டநடுச் சாலையில்

சந்திக்க நேர்ந்தாலும்

“வாங்க டீ, காஃபி

சாப்பிட்டுப் போவோம்”

அன்பும் கலந்த அந்தப்

பகிர்வில் அல்லவா!  


இங்கே கூடுதலாய்

எளியோர் தோழமையென

டீ கிளாஸ்

மேட்டினர் சகவாசமென

காஃபி கப்

அடையாளமானதைப் பேசினால்

கிடைக்குமொரு பண்பாட்டு வரலாறு.


கலப்பே இல்லாத உயர்தர காஃபி

கணக்கான சதவீத சிக்கரி காஃபி

கனமிகு மணத்தோடு அடர்ந்த டீ

கணப்பொழுது விழிப்புக்கு சாதா டீ


தொலைக்காட்சி நிகழ்ச்சி

எதற்காகவோ அதற்காகவும்

கொஞ்சம் விடப்படும் இடைவெளிகளில்

செய்திகளுக்காகப் புரட்ட வைக்கும்

நாளேடுகளின் முதல் பக்கங்களில்

நட்சத்திரங்கள் பரிந்துரைக்கும் விளம்பரங்கள்


பசுமை போர்த்திய செடிகளை

கைபடாத நவீன எந்திரங்களை

தயாரிப்பின் உலகத் தரங்களை

விரிவாய்க் காட்டிச் சொல்கின்றன


அவைகள் அல்லது அவர்கள்

சுருக்கியும் சொல்ல மறந்தது

இலைகளையும் விதைகளையும்

பார்த்துப் பார்த்து

பறித்துப் பறித்து

கொண்டுவந்து சேர்த்திடும்

உழைப்பாளிகளின் கைகளை.


[0][0][0]


அரசியல்கள அதிர்வுகளுக்கிடையே கூடிய ஓர் இணையத்தள (சிங்காரவேலர்-ஜீவா-நாவா முப்பெரும் பள்ளிகள்) கருத்தரங்கம்-கலந்துரையாடல் தொடக்கத்தில் அன்பரொருவர், “என்ன டீ, காஃபி எதுவும் கிடையாதா” என்று விளையாட்டாய்க் கேட்க, பேச்சுகளுக்கு நடுவே அங்கேயே நான் தயாரித்து நிகழ்ச்சியின் நிறைவில் பரிமாறிய கவிதை. 



Tuesday, 5 May 2026

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தத் தேரவு அல்ல, ஆனால்...


 

“வாக்கு எண்ணிக்கையின் இந்தத் தொடக்கச் சுற்றில் வருகிற முன்னிலை நிலவரத் தகவல்களை வைத்து இப்படியேதான் கடைசி வரை இருக்கும் என்று சொல்ல முடியாது. கொஞ்சமும் எதிர்பாராத தலைகீழ் மாற்றம் கூட ஏற்படக்கூடும்.”

நேற்று (மே 4) காலை இணையவழி நேர்காணலில் எனது கருத்தை இப்படித்தான் தொடங்கினேன். அப்படியேதான் நடந்திருக்கிறது. அடுத்தடுத்த உரையாடல்களில் கூறியவற்றின் சாரம்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம்தான். வரவேற்கத் தக்க மாற்றம்தானா என்று இப்போது சோதிடம் கணிக்க முடியாது. அது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவுவதற்குத் தேவையான இடங்களை முழுமையாகப் பெற முடியாத நிலையில், விஜய் எப்படி ஆட்சியை அமைக்கப் போகிறார், அதை எப்படி நடத்திச் செல்கிறார் என்பதைப் பொறுத்திருக்கிறது. மக்கள் மனம் மகிழத் தக்கதாக ஆட்சி இருக்குமானால் அதை வரவேற்பதில் எந்த மனத் தடையும் எனக்கில்லை.

ஆகவே, இவரால் அடிப்படை மாற்றங்கள் எதையும் செய்துவிட முடியாது, இந்த ஆட்சியால் பெருங்கேடுகளைச் சந்திக்க நேரிடும், ஒன்றிய ஆட்சியாளர்களின் கெடுபிடிகளுக்குப் பணிந்துவிடுவார், பெரிய அதிகாரத்திடம் சரணாகதி அடைந்துவிடுவார்….. என்றெல்லாம், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் களமிறங்கிய முதல் தேர்தலிலேயே இந்த இடத்தை நிறுவியிருப்பவரை, இந்தத் தகுதியை அளித்த மக்களை, குறிப்பாக இளம் தலைமுறையினரை, நான் சபிக்க மாட்டேன். ஏற்கெனவே இருந்து வருகிற அமைப்புகளின் மீதும் அவர்களது செயல்பாடுகளின் மீதும் ஏற்பட்டுள்ள ஒவ்வாமையைத்தான் அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள்.

ஆனால், ஆட்சியைக் கூர்ந்து கவனியுங்கள், அவர் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும், தப்பாக இருந்தாலும் கவலையில்லை என்ற மனநிலையிலிருந்து விடுபடுங்கள். நம்பகமான, ஆக்கப்பூர்வமான மாற்றம்தான் என்று எல்லோரும் ஏற்கிற ஆட்சியாக அமைவதை நீங்களும் சேர்ந்து உறுதிப்படுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஆனாலும், அதிமுக–வையும், அதை முன்னால் நிறுத்திப் பின்னாலிருந்து ஊடுருவ முயன்ற பாஜக–வையும் இந்த மக்கள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். இலக்கு என்னவென்றே தெளிவில்லாமல் உணர்ச்சிகரப் பேச்சை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் சீமான் கட்சியை நான்காவது முனை என்று கூடச் சொல்ல முடியாமல் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதற்காக மகிழ்ச்சியையும் நன்றியையும் கூடத் தெரிவிக்கிறேன்.

முழு மனதுடன் வரவேற்கத் தக்கதாக அமைவதென்றால், மத நல்லிணக்கம், மாநில தன்னாட்சி, மொழி உரிமை, சமூகநீதி, கல்வி நியாயம் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாண்புகளைப் பாதுகாத்து வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்த மாண்புகள் மீது அமிலம் ஊற்றும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்.

திமுக–வைத் தாக்கிப் பேசிய அளவுக்கு, விஜய் மேற்கொண்ட பரப்புரைகளிலோ இவற்றைப் பற்றி சன்னமாகக்கூட குரலெழுப்பவில்லை. கொள்கை எதிரியை வரவிடுவோமா என்று மேலோட்டமாகக் கேட்பார், கூட்டத்தினர் ஆரவாரமாக மாட்டோம் என்பார்கள். அத்தோடு சரி. இந்த அவதானிப்பிலிருந்தே இதை அவரிடமும் அவரைக் கொண்டாடுகிற மக்களிடமும் முன்வைக்கிறேன்.

ஏனென்றால், கிட்டத்தட்ட மொத்த வாக்காளர்களில் 65 சதவீதத்தினரின் முடிவுக்கு மாறாக உங்களுடைய 35 சதவீதம் இந்தத் தேர்வைச் செய்திருக்கிறது. அது மட்டுமல்ல, மொத்தமுள்ள 234இல் 108 இடங்களில்தான் தவெக வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையான 126 தொகுதிகளில் தோல்வியடைந்திருக்கிறது.

ஆகவே, ஏதோ இது தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்தமான பெரும்பான்மைத் தீர்ப்பு என்று யாரும் கூற முடியாது. விஜய்க்கே கூட அந்த மயக்கம் ஏற்பட்டுவிடக் கூடாது.

இது நம் நாட்டுத் தேர்தல் முறையில் இருக்கிற பெரும் ஊனத்தின் விளைவு. அனைத்துத் தொகுதி மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஊனம் அது. இடதுசாரிகளும் வேறு கட்சிகளும் மட்டுமே தேர்தல் முறையில் அடிப்படைச் சீர்திருத்தம் தேவையென்று கோரி வருகின்றன.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம், கறாரான பெரும்பான்மை ஏற்படாத நிலையில் குறைந்த வாக்குகள் பெறுவோரைக் கழித்துவிட்டு முதல் இரண்டு மூன்று இடங்களுக்கு வருகிறவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிற மறுவாக்குப் பதிவு முறை, தேர்ந்தெடுக்கப்படுகிறவர் சரியாகச் செயல்படவில்லை என்றால் திரும்பப் பெறும் உரிமை போன்ற அந்தச் சீர்திருத்தங்களை தவெக–வும் வலியுறுத்துமானால் அது ஜனநாயகத்தை உண்மையான வலிமை உள்ளதாக்க உதவும்.

தேர்தல் முறை தொடர்பான எல்லா விவாதங்களிலும் இந்தச் சீர்திருத்தங்களை நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன் – ஏதோ இப்போது தவெக இந்த மாதிரியான வெற்றியைப் பெற்றிருப்பதற்காகச் சொல்லவில்லை.

வெற்றி வாய்ப்பை இழந்த, தமிழக நலனில் அக்கறை கொண்ட கட்சிகளைப் பொறுத்தமட்டில்,  இப்படிப்பட்ட தோல்விகள் அவர்களுக்குப் புதிதல்ல. கவர்ச்சிக்கு இரையாகிவிட்ட தற்குறிகளின் தவறு என்றெல்லாம் தங்களைத் தாங்களே சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். அதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன்

முக்கியமாக, மக்களிடம், இளையோரிடம் எப்படி நெருங்குவது, அவர்களின் மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது என்று ஆராய வேண்டும். மக்கள் சந்திப்பு என்பது ஊருக்கு ஊர் கூட்டம் போட்டு, அங்கே வரக்கூடிய உறுப்பினர்களிடமும் ஆதரவாளர்களிடமும் உரையாற்றிவிட்டுப் போவதல்ல. அந்தப் புரிதலோடு சம்பிரதாய மக்கள் சந்திப்பாக இல்லாமல், உயிர்ப்புள்ள மக்கள் உறவாக உருவாக்கி வளர்க்க வேண்டும், வளர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

குறிப்பாக, பரபரப்புகளில் அயர்ந்துவிடாமல், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த இயக்கப் பணிகளில் ஈடுபடுவதை வழக்கம் போல இயல்பாகத் தொடர்கிற கம்யூனிஸ்ட்டுகளிடம் உரிமையோடு எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் என்றைக்குமே மக்களுக்கு உத்தரவாதமான, நம்பகமான அரசியல்–சமுதாய சக்தி நீங்கள்.

வெற்றி பெற்று, ஆளுங்கட்சியாகப் பதவியேற்கப் போகிறவர்களுக்கும், எதிர்க்கட்சியாகப் பொறுப்பேற்கப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்.