Sunday, 7 June 2009

தேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்



தேர்தல் முடிவுகளில் தெளிவான பாடங்கள்

உலகம் உற்றுக் கவனிக்க இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, யாருக்கு எந்த இடம் என்பதில் சில இழுபறிப் பேரங்களுக்குப் பிறகு, மன்மோகன் சிங் தலைமையில் ஐமுகூ அரசு மீண்டும் பதவியேற்றுவிட்டது. 1991க்குப் பிறகு மீண்டும் 200க்கு மேற்பட்ட இடங்கள் கிடைத்ததில், தட்டிக் கேட்க ஆளில்லாத தம்பி சண்டப்பிரசண்டனாக காங்கிரஸ் மக்களின் தீர்ப்பு தனது பொருளாதாரக் கொள்கைகளின் மீதான மதிப்பு என்ற மிதப்பில் பொதுத்துறை நிறுவனங்களைக் காவு கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கலாம். கீழே விழுந்தால் என்ன, மீசையில் மண் ஒட்டவில்லையே என்று பாஜக அடுத்த தேர்தலுக்கு ராமனுக்குத் துணையாக வேறு சாமி யாரையாவது இழுத்துக்கொள்ளலாமா என்று திட்டமிடக்கூடும். தங்களுக்குக் கிடைத்த பின்னடைவு மக்கள் மீதான தாக்குதல்களாக மாறுமே என்ற கவலையுடன், மக்களிடையே உண்மைகளை இன்னும் வலுவாகக் கொண்டுசெல்வது எப்படி என்ற ஆய்வில் இடதுசாரி கட்சிகள் ஈடுபடும்.

கட்சிகளின் மதிப்பீடுகளைத் தாண்டி மக்களவைத் தேர்தல் முடிவுகள் சில முக்கியமான செய்திகளைத் தெரிவிக்கின்றன. வாக்காளர்களின் தேர்வைப் பெருமளவுக்கு சரியாகக் காட்டக்கூடிய தேர்தல் முறை இங்கே இல்லை; பதிவான வாக்குகளில் அதிக எண்ணிக்கையில் எந்தக் கட்சிக்கு எத்தனை தடவைகள் பொத்தான்கள் அழுத்தப்படுகின்ற என்பதை வைத்தே இங்கே வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. 100 வாக்காளர்களில் 70 பேர்தான் தங்களது கைவிரலில் மைவைத்துக்கொள்ள முன்வருகிறார்கள் என்றால், அந்த எழுபதில் 20, 15, 10 என மற்றவர்களுக்குப் பிரிகிறபோது, மீதியுள்ள 25 வாக்குகளைப் பெறுகிறவர் வெற்றிபெற்றுவிட முடிகிறது. இது முழுமையான ஜனநாயகப் பிரதிபலிப்பாக இல்லை என்பதால்தான் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் சீர்திருத்தம் பற்றி, ஜனநாயகத்தில் உண்மையான அக்கறை உள்ள சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தத் தேர்தல் முறையிலேயே பெரும்பாலான மக்கள் தங்களது அரசியல் பங்கேற்பைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களின் அரசியல் பங்கேற்பு முக்கியமானது என்ற கோணத்தில் முதலில் இது ஒரு ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு. இந்தப் பங்கேற்பு உணர்வு யாருக்கு சாதகமாக இருக்கிறது என்பது வேறு விவகாரம், வேறு விவாதம்.

சுமார் 41கோடியே 70 லட்சம் வாக்காளர்கள் (58.4 சதவீதம்) வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு ஆரோக்கியமான அளவேயாகும். மாநில வாரியாகப் பார்த்தால் மேற்கு வங்கம் (81.3) முதலிடத்திலும் கேரளம் (73.3) இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு (73) மூன்றாவது இடத்திலும், ஆந்திரா (72.6) நான்காவது இடத்திலும் உள்ளன. குறைவாகப் பதிவாகியிருப்பது ஜம்மு-காஷ்மீர் (39.7) - அங்கேயும் சென்ற தேர்தலைவிட 4.5 சதவீதம் அதிக வாக்குப் பதிவு நடந்துள்ளது. சென்ற தேர்தலைவிட 0.4 சதவீதம் முதல் (உ.பி.), 13.4 சதவீதம் வரை (பீகார்) வாக்குப் பதிவு குறைந்துவிட்ட மாநிலங்களும் உண்டு.

2009 மக்களவைத் தேர்தலில் இந்தியா எப்படி வாக்களித்தது என்பதை ஆய்வு செய்த ‘லோக்நிதி’ என்ற குழு வெளியிட்டுள்ள கருத்துக்கள் சிந்தனைக்குரியவை. வளரும் சமூகங்கள் ஆய்வு மையம் (சென்டர் ஃபார் தி ஸ்டடி ஆஃப் டெவலப்பிங் சொசைட்டீஸ்) இந்த ஆய்வை மேற்கொண்டது. பல்கலைக் கழக நிதிமான்யக் குழு (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆய்வு மன்றம் (ஐசிஎஸ்எஸ்ஆர்) ஆகிய இரண்டு உயர்கல்வி அமைப்புகளும் நாடு தழுவிய இந்த ஆய்வுக்கு நிதி அளித்துள்ளன. ‘தி ஹிண்டு’ நாளிதழ் (மே 26) இந்த ஆய்வினை ஒரு சிறப்பிதழாகவே வெளியிட்டுள்ளது.

இத்தேர்தல் முடிவுகள் மாநிலக் கட்சிகளுக்கு மாறாக தேசியக் கட்சிகளுக்கு சாதகமாகவே அமைந்துள்ளது என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இனி இந்தியாவில் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சி முறைதான் என்கிற அளவுக்கு சிலர் பேசுகிறார்கள். ஆனால் 2004ம் ஆண்டுத் தேர்தல் காங்கிரஸ், பாஜக இரண்டு தேசிய கட்சிகளுக்கும் சேர்த்து 283 இடங்களை அளித்தது. இந்த ஆண்டுத் தேர்தல் 322 இடங்களைத் தந்திருக்கிறது. இப்படி 39 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தாலும் இவ்விரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்குகள் 1.3 சதவீதம் குறைந்திருக்கிறது. இடதுசாரி கட்சிகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் தேசிய கட்சிகளுக்கு மொத்தம் 2 இடங்கள் கூடுதலாகக் கிடைத்திருந்தாலும் வாக்குகளில் 2 சதவீதம் குறைந்திருக்கிறது.

அதே நேரத்தில் மாநிலக் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் விகிதாச்சாரம் நிலையாக இருந்துவந்துள்ளது. முந்தைய மூன்று மக்களவைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் முறையே 29.3, 29.3, 29.2 சதவீத வாக்குகளைப் பெற்றன. இந்த முறை மீண்டும் 29.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. ஆகவே, மாநிலக் கட்சிகளின் பங்களிப்பு முடிந்துவிட்டதாகக் கணிப்பது அவசரக்குடுக்கைத்தனமேயாகும். லோக்நிதி குழுவினர் சந்தித்த மக்களில் 70 சதவீதம் பேர், தங்களது முன்னுரிமை மாநில நலன்கள்தான் என்று கூறியுள்ளனர். மாநில உரிமைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியாது, அதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதே இதன் பொருள். இதை தேசியக் கட்சியான காங்கிரஸ் புரிந்துகொண்டு ஆட்சியை நடத்துமா?

பிரச்சாரங்கள் தொடங்கிய சில வாரங்களில் மக்கள் மேற்கொண்ட முடிவுதான் தேர்தல் முடிவாக வெளிப்பட்டதாகவும் சொல்வதற்கில்லை. தொடர்ச்சியான ஒரு அரசியல் ஆய்வு மக்களிடையே அவர்களுடைய சிந்தனைக்கேற்ப இருந்துவந்திருக்கிறது, அதையே வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதே உண்மை.

ஐமுகூ அரசின் செயல்பாட்டைக் கவனித்து வந்த மக்கள், முந்தைய பாஜக ஆட்சியைவிட இது மேல் என்ற எண்ணத்திலேயே வாக்களித்திருக்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு, அத்துமீற விடாமல் இடதுசாரிகள் அணை போட முடிந்ததால்தான் என்பது வாக்களித்தவர்களுக்கு வேண்டுமானால் முழுமையாகப் போய்ச் சேராமல் இருக்கலாம், ஆனால் அதற்கான அறுவடையைப் பெற்றுள்ள காங்கிரஸ் தலைமை உணர்ந்து செயல்படவேண்டும். மன்மோகன் சிங் மறுபடி ஆட்சி அமைத்த உடனேயே வால்மார்ட் வந்து புகுகிறதே! பெட்ரோல் விலைக்கட்டுப்பாடு முற்றிலுமாக அகற்றப்படும் என்கிறார்களே!

குறிப்பிடவேண்டிய அம்சம், கடந்த காலங்களைப் போலல்லாமல் இந்த முறை, சாதியக் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகும் என்று ஆய்வுக்குழு கூறுகிறது. இதன் பொருள் அரசியலில் களத்தில் இனிமேல் சாதி என்பதற்கு இடமில்லை என்பதல்ல. மாறாக, சாதி நலன்களோடு மக்கள் பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளில் அக்கறை காட்டுகிறார்கள் என்பதே.

பாஜக-வைப் பொறுத்தவரையில் ரத்தத்தை மசகு எண்ணெயாக்கி ஓட்டப்பட்ட ரதயாத்திரைப் புகழ் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்று அறிவித்தது பெரும்பகுதி மக்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைவிட, பாதிப் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிதான் பிரதமர் என்று அவிழ்த்துவிட்டார்கள். மக்கள் நடுநடுங்கிவிட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட பிரச்சாரச் சறுக்கல்கள் மட்டுமே பாஜக நிராகரிக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் அல்ல.

“காங்கிரசுக்கு நாடு முழுவதும் சாதக அலை வீசிவிடவில்லை; அதே நேரத்தில் பாஜக-வுக்கு நாடு முழுவதும் எதிர்மறை அலை வீசியிருக்கிறது,” என்று லோக்நிதி குழு கூறுகிறது. 1989ல் தேசிய அரசியல் களத்தில் இறங்கியபின் முதல் முறையாக மிகக்குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இக்கட்சிக்குக் கிடைத்துள்ள 18.8 சதவீத வாக்குகள் கடந்த தேர்தலில் கிடைத்ததை விட 3.4 சதவீதம் குறைவாகும். 1998க்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பாஜக வாக்கு வங்கி சுருங்கியுள்ளது,” என்று ஆய்வுக் குழு சுட்டிக்காட்டுகிறது. பாஜக-வுக்கு மையமான ஆதரவு சக்தியாக இருப்பது உயர்சாதி இந்துக்கள்தான். அவர்களது முன்னுரிமைத் தேர்வாக தொடர்ந்து பாஜகதான் இருக்கிறது என்றாலும், இந்த முறை அந்த ஆதரவுத் தளமும் சுருங்கியிருக்கிறது. முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரிடையே இக்கட்சிக்கு ஆதரவு அதிகரித்துவந்தது நின்றுவிட்டது. நகர்ப்புற நடுத்தர மக்கள் வாக்குகளும் பாஜகவுக்கு கணிசமாகக் குறைந்துவிட்டது.

“பிரச்சார உத்தியை மாற்றுவதில் அதிகம் கவனம் செலுத்தாமல், தனது ஒட்டுமொத்த அரசியல் திசைவழி பற்றியே பாஜக மிகுதியாக ஆராய வேண்டும்,” என்று ஆய்வுக் குழு கூறுகிறது. ஆர்எஸ்எஸ் இந்துத்துவா ஆதிக்க நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் அவதாரமாகிய பாஜக அப்படியெல்லாம் தனது திசைவழியை ஆராயத் துணியுமா என்ன?

காங்கிரஸ் கட்சிக்கு, 1999ல் கிடைத்த வாக்குகளுக்கு சமமாக மொத்தம் 28.6 சதவீதம் வாக்குகள் இம்முறை கிடைத்துள்ளன (அப்போது ஆட்சியமைத்தது என்னவோ பாஜக கூட்டணிதான்). 1999ல் அக்கட்சிக்கு கிடைத்த ஒவ்வொரு சதவீத வாக்கும் 4 இடங்களைக் கொடுத்தது; 2004ல் 5.5 இடங்களைக் கொடுத்தது. இந்தத் தேர்தலில் 7.2 இடங்களைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் மாநில வாரியாக காங்கிரசுக்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் ஒரே சீராக இல்லை என்றும் ஆய்வு குறிப்பிடுகிறது.

உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு ஒரு ‘மறுஉயிர்ப்பு’ நிகழ்ந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்பின் அடித்தட்டில் உள்ள மக்களிடையே அக்கட்சி ஒரு பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை. சில மாநிலங்களில் பாஜக-வை காங்கிரசால் பின்னுக்குத் தள்ளமுடியவில்லை. மேலும் சில மாநிலங்களில் கூட்டாளிக் கட்சிகளை விஞ்ச முடியவில்லை. எனவே அக்கட்சி இன்னும் உச்சத்துக்குப் போய்விடவில்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது.

முந்தைய மக்களவையில் 61 உறுப்பினர்களைப் பெற்றிருந்த இடதுசாரிகள் இம்முறை 24 உறுப்பினர்களையே அனுப்ப முடிந்திருக்கிறது. மேற்கு வங்கம், கேரளம் இரு மாநிலங்களிலும் அரசியல் உள்ளடக்கம், கட்சி அமைப்பு, பிரச்சனைகளின் தன்மை ஆகியவை மாறுபட்டவை. ஆயினும் இரு மாநிலங்களிலும் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கடுமையானதாகவே இருக்கிறது. தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் கூட்டாளிக் கட்சிகளும் சிறப்பாக செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அந்த ஆய்வு, “சராசரி விதி அடுத்த தேர்தலில் இந்த பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும்,” என்று கணிக்கிறது.

“இடதுசாரிகளுக்கு வாக்களித்தவர்கள், இந்திய - அமெரிக்க அணுசக்தி உடன்பாடு நம் நாட்டை அமெரிக்காவுக்குக் கட்டுப்பட்டதாக்கிவிடும் என்று நம்புகிறார்கள்” என்றும் லோக் நிதி குழுவினர் கூறியுள்ளனர். பெரும்பகுதி மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்த பெரும் முயற்சி தேவை என்பதையே இது காட்டுகிறது. இக்கருத்தை வலுப்படுத்துவது போல், “இடதுசாரிகள் முன்னுள்ள சவால் என்னவெனில், தாங்கள் வலுவாக உள்ள பகுதிகளைத் தாண்டி தங்களது இருப்பை விரிவு படுத்துவதுதான்,” என்று ஆய்வுக் குழு கூறியுள்ளது.

இந்த மதிப்பீடுகள் மத்திய ஆளும் கூட்டணிக்கான அரசியல் பொறுப்பை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளின் பொறுப்பையும் வலியுறுத்துகின்றன. அதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்து வருங்கால அரசியல் நிகழ்வுப் போக்குகள் தீர்மானிக்கப்படும்.