Sunday, 27 September 2026

உலக வரைபடம் உருமாறும் கதை




உலக அளவில் தீர்க்கப்பட வேண்டிய பல தீவிரமான சிக்கல்கள் இருக்கிற நிலையில், உலக வரைபடத்தைத் திருத்துவது முக்கியமா? இப்படியொரு கேள்வியுடன் அமெரிக்க அரசு மட்டும்  ஒற்றையாக எதிர்த்து வாக்களிக்க, 6 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணிக்க, 22 நாடுகளின் பிரதிநிதிகள் ஆட்டத்திலேயே கலந்துகொள்ளாதிருக்க, 164 நாடுகள் ஒருமனதாக ஆதரிக்க ஐக்கிய நாடுகள் சபை புதிய உலக வரைபடத்தை ஏற்கும் தீர்மானத்தை செப்டம்பர் 4 அன்று நிறைவேற்றியுள்ளது.

உலக வரைபடத்தைப் பாட நூல்களிலும், சுற்றுலா நிறுவனங்களின் வரவேற்பறைகளிலும், பல அலுவலகங்களின் சுவர்களிலும், அனைத்து நாடுகளும் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் பார்த்திருப்போம். இத்தனை ஆண்டுகளாக அதில்தான் கண்டங்களையும் நாடுகளையும் தீவுகளையும் கடல்களையும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். வரைபடத்தில் தனது நாடு எங்கிருக்கிறது என்று காட்டத் தெரியாத ஒரு மாணவன்,  ஆசிரியரிடம் “என் நாட்டை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன்” என்று சொன்னதாக ஒரு நகைச்சுவைத் துணுக்கு உண்டு.

இன்றளவும் நடைமுறையில் இருக்கிற அந்த உலக வரைபடத்தின் வயது 457. ஃபிளாண்டர்ஸ் (தற்போது பெல்ஜியம் நாட்டின் ஒரு பகுதி) என்ற வட்டாரத்தைச் சேர்ந்த கணித அறிஞரும் வரைபட வல்லுநரும் பேரண்டவியல் ஆய்வாளருமான ஜெரார்டஸ் மெர்கேட்டர் 1569ஆம் ஆண்டில் இதை உருவாக்கினார். அன்றைய நிலையில் கப்பல் மாலுமிகள் தங்களின் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் நாடுகளின் தொலைவுகளை அறிவதற்கும் இது பயன்பட்டது. அதற்கு முன்பாகவும் சில அறிஞர்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டது உண்டு என்றாலும் இந்த வரைபடம்தான் பெருமளவுக்குத் துல்லியமாக அமைந்து, “மெர்கேட்டர் வரைபடம்” என்றே பெயர் பெற்றது.

கோளமும் தட்டையும்

 தட்டையாக இருப்பதாகக் கருதப்பட்ட பூமி உண்மையில் கோள வடிவமானது என்ற கருத்து இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே, பித்தாகரஸ், பிளேட்டோ உள்ளிட்ட கிரேக்க அறிஞர்களால் முன்வைக்கப்பட்டது. இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அரிஸ்டாட்டில் செயல்முறைச் சான்றுகளால் அதை நிறுவினார். மேலுமொரு நூற்றாண்டுக்குப் பிறகு, எகிப்தில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் எரடோஸ்தனீஸ்  95 விழுக்காடு துல்லியத்துடன் அதை நிலைநாட்டினார். ஆகாய விமானங்களும் செயற்கைக்கோள் படங்களும் பூமியின் கோள வடிவம் பற்றிய ஐயத்தை முற்றிலுமாகத் துடைத்துவிட்டன.

இந்த உண்மையின் அடிப்படையில்  பூமியின் கோளவடிவ மாதிரிகள் உருவாக்கப்பட்டு கண்டங்களும் நாடுகளும் வரையப்பட்டன. முப்பரிமாணக் கோள வடிவச் சித்தரிப்பை, இரட்டைப் பரிமாணமாக, சுவரிலோ தரையிலோ விரித்து வைத்துப் பார்க்கக்கூடிய வகையில், திரைகளிலும் தாள்களிலும் தட்டையாக வரைந்தபோது ஒரு சிக்கல் ஏற்பட்டது.

 மாறிய அளவுகள்

துருவப் பகுதிக்கு அருகில் உள்ள ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் அளவில் பெரிதாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகியவை  சிறியதாகவும் தோற்றமளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, உண்மையான நிலப்பரப்பில் ஆப்பிரிக்கா, கிரீன்லாந்தை விட 14 மடங்கு பெரியது. ஆனால் மெர்கேட்டர் வரைபடத்தில் இரண்டும் ஒரே அளவில் காட்சியளித்தன. பல தலைமுறைகளாகப் பாடப் புத்தகங்கள் வழியே பதிக்கப்பட்ட இந்த நிலப்பரப்புச் சித்தரிப்புப் பிழை, வடக்குலக நாடுகளே உலகின் மையமும் அதிகாரமும் கொண்டவை என்ற காலனிய மேலாதிக்கச் சிந்தனைக்கு (ஐரோப்பிய மையவாதம்) புவியியல் சார்ந்த உளவியல் அங்கீகாரத்தை ஏற்படுத்தியது.

 கோளத்தில் உள்ள வரைபடத்தைத் தட்டையாக மாற்றுகிறபோது அளவுகள் மாறுபடுவது தாலமி காலத்திலேயே கண்டறியப்பட்டது. அதைச் சரிசெய்ய அவர், கூம்புவடிவ அமைப்பில் வளைந்த கோடுகள் கொண்ட இரண்டு வரைபடங்களை அவர் அறிமுகப்படுத்தினார். அவரும், மெர்கேட்டர் உள்ளிட்ட வரைபடக் கலைஞர்களும் தங்களின் அனுபவ அறிவின் அடிப்படையில் இதை உணர்ந்திருந்தார்கள். கணித அடிப்படையில், தவிர்க்க இயலாத இந்த மாறுபாட்டை 1827ஆம் ஆண்டில் நிறுவிக் காட்டியவர், ஜெர்மனியைச் சேர்ந்த கணிதவியலாளர் கார்ல் ஃபிரீட்ரிச் காஸ். ஒரு கோளத்தின் மேற்பரப்பை,  அளவுமாறுபாடின்றித் தட்டையான தளமாக  மாற்றுவது கணித அடிப்படையில் சாத்தியமே இல்லை என்றார் அவர்.

 கால்–பீட்டர்ஸ்

 இத்தனை காலமாக இந்த வரைபடமே புழக்கத்தில் இருந்துவரும் நிலையில், நிலமும் நீருமாக உள்ள புவிப்பரப்புகள் சரியான அளவில் காட்டப்பட வேண்டும் என்ற சமூக அறிவியல் கருத்தை ஜெர்மனியின் வரலாற்று ஆய்வாளர் ஆர்னோ பீட்டர்ஸ், சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் முன்வைத்தார். மெர்கேட்டர் வரைபடம் ஐரோப்பிய மையவாதத்தை வளர்ப்பதாகவும், மூன்றாம் உலக நாடுகளைக் குறுகியதாகக் காட்டுவதாகவும் சாடிய பீட்டர்ஸ்,  உண்மையான அளவுகளைச் சித்தரிக்கும்  வரைபடத்தை 1973-இல் வெளியிட்டார். அதற்கு 120 ஆண்டுகள் முன்பாக ஸ்காட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் கால் அதே போன்ற வரைபடத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் புதிய வடிவத்துக்கு கால்–பீட்டர்ஸ் வரைபடம் என்ற பெயர் சூட்டப்பட்டது.


அதன் தொடர்ச்சியாக, ஸ்லோவேனியா நாட்டின் போஜான் சாவ்ரிச், அமெரிக்கரான
டாம் பேட்டர்சன், ஸ்விட்சர்லாந்தின், பெர்ன்ஹார்ட் ஜெனி ஆகியோர் 2018இல் “சமத்துவ பூமி” (ஈக்வல் எர்த்) வரைபடத்தை உருவாக்கினார்கள்.

 அரசியல் ஏற்பு

 இவர்களின் இந்தத் தொழில்முறை முயற்சியைப் பின்னர், ஆப்பிரிக்க ஒன்றியம் போன்ற பல்வேறு நாடுகளின் கூட்டமைப்புகள் ஏற்றுக்கொண்டன. அந்த ஏற்பு அரசியல் வடிவமெடுத்தது.  ஐ.நா. சபையில் டோகோ நாடும் ஆப்பிரிக்க ஒன்றியமும் இணைந்து  தீர்மானத்தை முன்வரைத்தன. இந்த செப்டம்பர் 4 அன்று நடந்த வாக்கெடுப்பில், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா, கியூபா, வியட்நாம், லாவோஸ், வடகொரியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. உக்ரைன், செர்பியா, எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா ஆகிய 6 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. 22 நாடுகளின் பிரதிநிதிகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

 193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா. சபையில் அமெரிக்கா மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தது. 6 நாடுகள் புறக்கணித்ததிலும், 22 நாடுகளில் வர முடியாமல் போன பிரதிநிதிகள் தவிர்த்து மற்றவர்கள் கலந்துகொள்ளாததிலும் அமெரிக்க அரசுடன் உரசிக்கொள்ள வேண்டாம் என்ற அனுசரிப்பு உத்தியும் இருக்கிறது. ஆயினும் புவியியல் உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேறியது.

 நாட்டாமைக்கு சவால்

 தீர்க்கப்பட வேண்டிய உலகளாவிய பல முக்கியப் பிரச்சினைகள் இருக்கிறபோது வரைபட மாற்றம் ரொம்ப முக்கியமா என்று அமெரிக்க அரசின் தூதர் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கூறினார். ஆனால், உளவியல் அடிப்படையில் மற்ற எந்த நாட்டையும் விட தன்னை ஆதிக்கம் செலுத்தும்  நிலையில் வைத்துகொள்ளும் வரைபட வாய்ப்பை இழக்க அமெரிக்க அரசு விரும்பாததே எதிர்ப்புக்குக் காரணம். உலக அரசியல் வல்லுநர்கள் இதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 பழைய வரைபடத்தால் கிடைத்துவந்த குறியீட்டு அதிகாரமும், மையப் புள்ளியாகக் காட்டும்  பிம்பமும் கைநழுவுவதை அமெரிக்க அரசால் எளிதில் ஏற்க முடியவில்லை. ஆப்பிரிக்க நாடுகள், புவியின் தென்பகுதி நாடுகள் ஆகியவற்றின் குரல் வலுப்பெறுவதையும், வரலாற்றுச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதையும் அமெரிக்கா தனது தனி நாட்டாமைக்கு விடுக்கப்படும் சவாலாகவே பார்க்கிறது.

 இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுடைய முக்கியத்துவம் குறைத்துக் காட்டப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்று நடவடிக்கையாக இதை ஆதரித்தன. நாடுகளின் சமத்துவத்தை  நோக்கிச் செல்வதில் புதிய வரைபடம் பங்களிக்கும் என்ற அணுகுமுறையோடு ஐந்து சோசலிச நாடுகளும் ஆதரித்துள்ளன.

 எப்போது நடைமுறையாகும்?

 இப்போது தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றாலும், கண்டங்களையும் நாடுகளையும் சரியான அளவுகளில் காட்டும் புதிய “சமத்துவ பூமி” வரைபடம் உடனடியாக நடைமுறைக்கு வந்துவிடாது. ஏனெனில், உலக நாடுகளின் அரசுகள் கட்டாயமாகச் செயல்படுத்தியாக வேண்டிய விதிகளின் கீழ் இது வரவில்லை. மேலும், பள்ளிப் பாடங்கள், பல்கலைக் கழக நூல்கள், அரசாங்க நிர்வாகங்கள், வணிக மையங்கள் ஆகியவற்றிலும், நவீன டிஜிட்டல் ஏற்பாடுகளிலும் திருத்தப்பட்ட வரைபடத்தைப் படிப்படியாகத்தான் சேர்க்க முடியும். உலக சமுதாயம் உளவியலாக ஏற்பதற்கும் சிறிது காலம் பிடிக்கும். எப்படியும் 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகக்கூடும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 உலக வரைபடம் வெறும் கோடுகளும் வண்ணங்களும் அல்ல. மனித சமுதாயம் உலகத்தைப் பார்க்கும் கண்ணோட்டத்தின் பிரதிபலிப்பே அது. காலனியக் கட்டமைப்புக்கு சாதகமாகவும் அமைந்த காட்சிப் பிழையைத் திருத்தி, அனைத்து நாடுகளுக்கும் உரிய உண்மையான புவியியல் இடத்தை வழங்குகிற 'ஈக்வல் எர்த்' வரைபடம், உலக உறவுகளின் சம நிலையை நோக்கி முக்கியமானதொரு அடியை எடுத்துவைக்கிறது.

[0]

-‘தீக்கதிர்’ நாளேட்டின் ஞாயிறு (செப்டம்பர் 27, 2026) ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் எனது கட்டுரை

Tuesday, 15 September 2026

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் போட்டி - யாருக்குச் சாதகம் என்றால்...

 இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்தது கொள்கை உடன்பாட்டுக் கூட்டின் அடிப்படையில் அல்ல. அன்றைய சூழலைப் பயன்படுத்திக்கொண்டு ஆளுநர் ஆட்சியின் பெயரால் குடியரசுத் தலைவர் ஆட்சியின் வழியாக ஒன்றிய ஆளுங்கட்சியின் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன்தான் அந்த ஆதரவு அளிக்கப்பட்டது. 

இப்போதும் அதே நிலைப்பாடுதான். ஆகவேதான் ஆட்சியிலும் பங்கேற்கவில்லை, தவெக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியிலும் கம்யூனிஸ்ட்டுகள் இணையவில்லை.

மதச்சார்பற்ற சமூகநீதி கூட்டணி என்று உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஒன்றிய அரசின் நிலைப்பாடுகளுக்கு மாறான சில கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் தவெக அரசு எடுத்திருக்கிறது – அது வரவேற்கத்தக்கதே. ஆனால்,  மதவாத அரசியலுக்கு எதிராக வலுவான குரல் தவெக தலைவரான முதலமைச்சரிடமிருந்து ஒலிக்கவில்லை, அடுத்த மட்டத் தலைவர்களிடமிருந்தும் ஒலிக்கவில்லையே?

சமூகநீதி நல்ல லட்சியம்தான் – ஆனால் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் தேவையென்று கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கோரி வந்திருக்கின்றன. முந்தைய ஆட்சிகளும் அதை ஏற்கவில்லை, இந்த அரசும் அதை ஏற்பதாக அறிவிக்கவில்லையே? சமூகநீதியை நோக்கிய ஒரு வழியாகிய இடஒதுக்கீடு கொள்கை பற்றிய ஆவணத்தில் பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் விடுபட்டதற்குக் கடும் கண்டனம் எழுந்தபிறகு, தார்மீகப் பொறுப்பேற்பதாக அமைச்சர் சொன்னதோடு விட்டுவிட்டார்களே? இந்தக் கூட்டணியில் இணைவதற்கான வலுவான தளம் அமையவில்லை.

ஒன்றிய அரசு திணித்திருக்கிற நீட் தேர்வு வேண்டாம் என்பதே தனது நிலைப்பாடு என்று தவெக கூறுகிறது. அந்த நீட் தேர்வை எதிர்த்து நடந்த போராட்டங்களைக் காவல்துறை மூலம் ஒடுக்க முயன்றதைப் பார்த்தோம். நேற்று கூட, விவசாயிகள் போராட்டத்தின்போது, வெயிலுக்காகப் பந்தல் போட முயன்றதைக் காவல்துறையினர் தடுத்துவிட்டார்கள், விவசாயிகள் கீற்றுகளைத் தலைக்கு மேல் பிடித்தபடி போராட்டம் நடத்தியதை ‘புதிய தலைமுறை’ செய்தியில் காட்டினீர்கள். எந்த நம்பிக்கையில் கூட்டணியில் இணைவது?

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல்கள் இயல்பாக வந்ததல்ல. எப்படிப்பட்ட நிலைமைகளில் இடைத்தேர்தல் வரும் என்று நமக்குத் தெரியும். செயற்கையாக அந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சில நாட்களிலேயே பதவி விலகி தவெகவில் சேர்ந்ததால்தான் இந்த இடைத்தேர்தல். அவர்களையே மறுபடி வேட்பாளர்களாக நிறுத்தியிருப்பதில் என்ன அரசியல் அறம் இருக்கிறது?

ஒருவேளை அவர்கள் வெற்றிபெற்றால், அடுத்தடுத்த இடைத்தேர்களிலும் கட்சி மாறி வந்தவர்களை நிறுத்தி அவர்களும் வெற்றிபெற்றால், பெரும்பான்மை பலத்திற்கு இடதுசாரிகள் உள்பட மற்ற கட்சிகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்று கூட தவெக தலைமை நினைக்கலாம்.

இடைத் தேர்தலில் போட்டி என்பதே இந்த அரசின் மீதான ஒரு விமர்சனம்தான். இந்த முடிவு யாருக்குச் சாதகம் என்ற கோணத்தில் பார்க்க வேண்டியதில்லை. சட்டமன்றத்தில் ஏற்கெனவே நான்கு கம்யூனிஸ்ட்டுகள் இருக்கிறார்கள் – அவர்கள் என்ன பேசுகிறார்கள், யாருக்காகப் பேசுகிறார்கள் என்று மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மற்றவர்கள்  லாவணியும்  பாட்டுப்போட்டியும் நடத்திக்கொண்டிருப்பதை மக்கள் கவனிக்கிறார்கள். ஆகவே இடதுசாரிகளின் இந்த முடிவு மக்களுக்குத்தான் சாதகம்.

சட்டமன்றத்தில் இடதுசாரிகள் குரல் மேலும் வலுவாக ஒலிப்பது இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே நன்மையளிக்கும். மக்களின், உழைப்பாளிகளின், தலித்துகளின், பெண்களின், நலிவுற்றோரின் குரலாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஒலிப்பார்கள்.

அந்த நோக்கத்துடன்தான் இடைத்தேர்தலில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த வாய்ப்பை தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளின் மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தவெக ஆட்சியமைத்தபோது இருந்த  “ஃபிரெஷ்”  நிலைமை இப்போது இல்லை. ஆண்டுக்கணக்கில் அல்ல, நாட்கணக்கில்தான் ஆகியிருக்கிறது என்றாலும் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை.

எடுத்துக்காட்டாக மின்வெட்டு – தமிழ்நாட்டில் மின்வெட்டே இல்லை, எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக அப்படிச் சொல்கின்றன என்கிறார் ஒரு அமைச்சர். அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனே, அதிகாரிகள் சரியான தகவல்களை அமைச்சர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதிகாரிகளை அரசு ஆள்கிறதா அல்லது அரசை அதிகாரிகள் ஆள்கிறார்களா என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழல்களில்தான் இடதுசாரிக் கட்சிகள், முதலில் சொன்ன காரணத்திற்காக இந்த ஆட்சியை ஆதரித்துக்கொண்டே இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன. தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுவிட்ட நிலைப்பாடு இது – இதில் அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது?

ஆட்சி தொடர வேண்டுமா வேண்டாமா என்று தீர்மானிக்கிற தேர்தல் அல்ல இது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களுடைய கண்ணோட்டங்களையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

தொகுதி நிலவரங்களின் சதவீதக் கணக்குகளைத் தாண்டி இரண்டு கருத்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது வரையில் தமிழகத்திலும் நாடுதழுவிய அளவிலும் நிலவிய அரசியல், சமூகச் சூழல்களைப் பொறுத்து கூட்டணிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. அந்த அரசியல், சமூகத் தேவைகள் நிறைவேறின என்றாலும், கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கான போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்திவந்தார்கள் என்ற போதிலும்,  கம்யூனிஸ்ட்டுகளின் தனித்துவம் பின்தங்கிவிட்டது என்ற தோற்றமும் ஏற்பட்டது. இப்போது அந்தத் தோற்றத்தை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல்.

அடுத்து – முன்னெப்போதையும்  விட இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது மக்களின் பார்வை அதிகரித்திருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகளின் அணுகுமுறைகளையும் செயல்பாடுகளையும் மக்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். இதனை இடதுசாரிக் கட்சிகள் தக்க முறையில் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அரசியல், சமூகக் கண்ணோட்டங்களைக் கொண்டுசெல்வார்கள்.

–‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் ‘நேர்படப்பேசு’ (செப்டம்பர் 15) விவாதத்தில் நான் கூறியவை. சக பத்திரிகையாளர்கள் பிரியன், சுபேர், சுவாமிநாதன் உடன் பங்கேற்க ஒருங்கிணைத்தவர் விஜயன்.


Thursday, 10 September 2026

‘தீக்கதிர்’ செய்தியும் எதிர்வினைகளும்


                                காலை நடையில் பூங்கா நிழலில்


“உங்க தீக்கதிர் பேப்பர்ல வந்த நியூஸ் பத்தி ஃபேஸ்புக்குலேயும் மத்த சோசியல் மீடியாவிலேயும் கடுமையா அட்டாக் பண்ணி எழுதிக்கிட்டிருக்காங்க, நீங்க எதுவும் சொல்லலையே?”


“அசெம்பிளியில் சீஃப் மினிஸ்டர் விஜய் பதிலுரைச் செய்தியையும், அதுக்குத் தரப்பட்டிருந்த தலைப்பையும்தான் நண்பர் கேட்கிறார்.,. உங்களோட பதிலுரையைச் சொல்லுங்க சார்!”


“அதை ஸ்ட்ராங்கா கிரிட்டிசைஸ் பண்றவங்கள்ல இவங்க கட்சிக்காரங்களும் இருக்காங்க… அவங்களுக்கும் மௌனம்தான் பதிலா சார்? இல்லாட்டி இந்த இஷ்யூ அதுவாவே பழசாகி மறைஞ்சுபோயிடும்னு கண்டுக்காம இருக்கீங்களா?”


காலை நடை நேரத்தின் கடைசிக்கட்ட பூங்கா இருக்கை உரையாடலில் மூன்று நண்பர்கள் முன்வைத்த கேள்விகள் இவை. அந்த உரையாடலை அப்படியே தராமல், அவர்களுக்கு நான் சொன்ன பதில்களின் சுருக்கத்தை இங்கே பகிர்கிறேன்:


“அது இவ்வளவு பெரிய பிரச்சினையாகும் என்று நான் அப்போது கணிக்கத் தவறிவிட்டேன். ஒரு முக்கியமான கட்டுரையை முடித்து அனுப்ப வேண்டிய கட்டாயத்திலும் இருந்தேன். ஆகவேதான் அப்போதே என்னுடைய கருத்தைச் சொல்லவில்லை.


தீக்கதிர் அலுவலகத்தின் கட்டமைப்போடு தொடர்புடைய பணிச் சூழல், இயக்க ஈடுபாடு உள்ள ஆனால் இதழியல் பயிற்சி பெறாத ஊழியர்கள் உள்ளிட்ட நிலைமைகளை, அந்த நிலைமைகளோடு சேர்ந்திருந்தவன் என்ற முறையில் நன்கு அறிவேன். 


வேலை சார்ந்த நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன. மற்ற பத்திரிகைகளில் இரவு 11 மணி வரையில் வரக்கூடிய செய்திகளைக் கூடச் சேர்த்துவிடுவார்கள். தீக்கதிரிலோ இரவு 8 மணிக்கு மேல் வருகிற செய்தி எதுவானாலும், அது எவ்வளவு முக்கியமானதானாலும், சேர்க்க முடியாது. அப்படிச் சேர்க்க முயன்றால் பதிப்புகள் அச்சிடப்படும் ஊர்களைத் தவிர வேறு எங்கும் பத்திரிகை போய்ச் சேராது.


சில நேரங்களில் பொறுப்புத் தோழர்கள், இயக்கம் சார்ந்த வேறு பணிகளுக்காகச் செல்ல வேண்டியதாகிவிடும். உடல்நலக் குறைவு போன்ற காரணமும் ஏற்படக்கூடும்.


அப்படிப்பட்ட நேரங்களில், இருக்கிற மற்ற தோழர்கள்தான் செய்திகளை இறுதிப்படுத்தி, தலைப்புகள், துணைத் தலைப்புகள் தந்து அச்சுக்கு அனுப்புவார்கள். அதனால் விபத்தாகப் பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அபாயநிலைமைகளுக்கு உட்பட்டது என்று சில விளம்பரங்கள் வருமே, அப்படித்தான் இதழியல் பணி.   அரசியல் இயக்கத்தின் பத்திரிகைக்கு, அதிலும் கம்யூனிஸ்ட் இயக்கப் பத்திரிகைக்கு, அந்த அபாயநிலைமை கொஞ்சம் அதிகம்.


இந்தப் பின்னணிகளில்தான், திங்கள் கிழமை சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பதிலுரையில் பதில்களே இல்லை என்று சிபிஐ(எம்) செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கை செவ்வாய்க்கிழமை காலையில் இடம்பெறாமல், புதன்கிழமை இதழில் முதல் பக்கத்திலேயே பெரிய அளவில் வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை வாங்காதவர்கள் இணையப் பதிப்புகளில் அதைப் பார்க்க முடியும்.


இதையெல்லாம் சொல்லி அந்தச் செய்தியையும் தலைப்பையும் நியாயப்படுத்தவில்லை. அரசியல் தெளிவோடு அவற்றைச் சரியான முறையில் “எடிட்” செய்திருக்க வேண்டும்தான். தோழமையோடு அதைச் சுட்டிக்காட்டுவது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட.


ஆனால், இப்படி நடந்துவிட்டதற்கு அரசியல் நோக்கம் கற்பிப்பதை ஏற்பதற்கில்லை. அப்படியொரு நோக்கம் இருக்குமோ என்ற ஐயத்தோடு சிலர் இப்படி எழுதுகிறார்கள். சிலர் அவர்களுக்கான அரசியல் உள்நோக்கத்தோடு பரப்புகிறார்கள். இன்னும் சிலர் சொந்தக் கோபதாபத்தோடும் செய்கிறார்கள். வேறு சிலர் “நம்ம பத்திரிகையிலே இப்படி வரலாமா” என்ற நியாயமான ஆதங்கத்தைப் பகிர்கிறாரகள்.  


கட்சிக்கு வெளியே இருப்பவர்கள் எழுதுகிறார்கள், உள்ளே இருப்பவர்களும் எழுதுகிறார்கள், வெளியே போனவர்களும் எழுதுகிறார்கள். அவர்களுடைய மற்ற பல பங்களிப்புகள் சிறப்பானவை. அதற்காக, இப்படிப்பட்ட வெளிப்பாடுகளும் சிறப்பானவையாகவோ, நல்ல எடுத்துக்காட்டுகளாகவோ இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இது எனக்கும் பொருந்தும்தான்…


அதே வேளையில், விஜய் அப்படிப் பேசிய நாளிலேயே உடனுக்குடன் பல தோழர்களும், நான் உட்பட, அதை அவரவர் நடையில் கடுமையாகவும் நகைச்சுவையாகவும் எதிர்க் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறோம். ‘டயலாக் தமிழ்’ காணொளித் தளத்தில் எனது நேர்காணல் அன்று இரவே வந்தது. ‘ஒய் மேன்’ தளத்தில் ஊடகவியலாளர் கவின் மலரும் நானும் உரையாடியதன் ஒளிப்பதிவு மறுநாள் பதிவேற்றப்பட்டது. இப்படி வேறு பல தோழர்களும் செய்திருக்கிறார்கள். 


தீக்கதிர் சந்திக்கும் கடினமான சவால்கள் பற்றியும், குறிப்பிட்ட  செய்திக்கு உள்நோக்கம் கட்டப்படுவது பற்றியும் தோழர் இ.பா. சிந்தன் பொறுப்போடு ஒரு பதிவைச் செய்திருக்கிறார். அந்தச் செய்தியை விமர்சிக்கிறவர்கள் கம்யூனிஸ்ட் எதிரிகள் என்றும் விலைபோனவர்கள் என்றும் சில தோழர்கள் சாடுவதையும் அவர் தனது பதிவில் தள்ளுபடி செய்திருக்கிறார். படித்துப் பாருங்கள். இப்படியான பக்குவங்கள்தான் இயக்கத்தின் அடையாளங்கள்.


அப்புறம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் –  அந்தக் குறிப்பிட்ட செய்தி வந்த மறுநாளே அது தொடர்பான ஆசிரியர் குழு தோழர்களுடன்,  தீக்கதிர் அமைப்புக்கான கட்சித் தலைமை பேசியிருக்கும், கடுமையாக விமர்சித்திருக்கும், எவ்வாறு சரியான அரசியல் புரிதலோடு செயல்படுவது என்று வழிகாட்டியிருக்கும். அரசியல் இயக்க ஏடு என்பதால் இதுவும் அங்கே நடக்கும்.”


–பேசி முடிக்கிற வரையில் கலைந்து போகாமல் கவனிக்கிற பண்பாட்டை வெளிப்படுத்தினார்கள் நண்பர்கள். தேநீர்க்கடையை அடைந்ததும், இன்றைய பேச்சைத் தொடங்கி வைத்தவர், “சார் இன்னிக்கு மட்டும் காஃபியில சுகர் போட்டுக்கோங்க,” என்றார்.


[0]

முகநூல் பதிவு (10 செப்டம்பர் 2026)

 


Monday, 31 August 2026

கம்யூனிஸ்ட்டுகள் சிரிக்க வைக்க மாட்டார்களா?


                            காலை நடையில் பூங்கா நிழலில்


“கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஹியூமர் சென்ஸே கிடையதா? எப்ப பார்த்தாலும் ஏதாச்சும் சீரியஸ்சான இஷ்யூஸ் பத்தியே பேசுறாங்க, போராட்டம் நடத்துறாங்கன்னுதான் நினைச்சிக்கிட்டு இருந்தேன்...”


“ஏங்க? மக்கள் எப்பவும் சிரிச்சி மகிழ்ச்சியா இருக்குறதுருக்குதான் கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கிறாங்க. எவ்வளவு கூட்டம் கூடியிருந்தாலும் அத்தனை பேரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிற தோழர்கள் பேச்செல்லாம் கேட்டதில்லையா? கலை இலக்கிய இரவு மேடைகள்ல நன்மாறன் பேசிக் கேட்டிருக்கீங்களா? இப்ப மதுக்கூர் இராமலிங்கம் மாதிரியான தோழர்கள் பேசுறதைக் கேட்டுப் பாருங்க... கம்யூனிஸ்ட் இயக்கத்தை இங்கே கட்டி வளர்த்த மூத்த தலைவர்கள்ல ஒருத்தர் இஎம்எஸ். அவரைப் பேட்டி கண்ட ஒரு இங்கிலீஷ் பத்திரிகை நிருபர், ‘நீங்க எப்பவுமே இப்படித்தான் திக்குவீங்களா’ன்னு கேட்டாரு. அதுக்கு இஎம்எஸ், ‘இல்லையில்லை, பேசும்போது மட்டும்தான் திக்குவேன்’னு சொன்னாரு. அதைக் கேட்டு அந்த நிருபர் வாய்விட்டு சிரிச்சாரு, பத்திரிகையிலே பேட்டிக்கு நடுவிலே இதைக் கட்டம் கட்டிப் போட்டிருந்தாங்க. இப்படி நிறையப் பேர் இருக்காங்க. ஆனா என்னன்னா, கம்யூனிஸ்ட்டுகள்  சொல்ற ஜோக் பெண்களையோ திருநர்களையோ மாற்றுத் திறனாளிகளையோ ஒதுக்கப்பட்ட மக்களையோ ஏழைபாழைகளையோ மட்டந்தட்டுறதா இருக்காது.”


“சார், இதை நீங்க சொல்லணும்கிறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். நான் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜோக்கடிக்கத் தெரியாதுன்னுதான் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன், பட் அன்னிக்கு நாம பேசிக்கிட்டிருந்தப்ப, தலைமுறைகள் மாற்றத்தைப் பற்றி இவரு (அருகிலிருந்தவர்) கேட்டாரு, அதுக்கு நீங்க சொன்ன பதிலைக் கேட்டப்புறம் அந்த நினைப்பை மாத்திக்கிட்டேன்...’’


“ஒரு நிகழ்வைச் சொல்லட்டுமா? தீக்கதிர் சென்னைப் பதிப்பு தொடங்குனப்ப என்னை இங்கே மாத்துனாங்க. அப்ப மதுரை அலுவலகத்திலே நடந்த வழியனுப்புக் கூட்டத்திலே பேசுனவங்க, ‘இவருகிட்ட கோபம், நகைச்சுவை இரண்டும் இருக்கும். முனுக்குனு கோபப்படுற மாதிரியே கண்ட இடத்திலேயும் ஜோக்காகப் பேசுவாரு… சென்னையிலே இதையெல்லாம் கட்டுப்படுத்திக்கிட்டா நல்லது… எல்லாருமே சரியா புரிஞ்சிக்கிடுவாங்கன்னு சொல்ல முடியாது. இவரைத் தப்பா நினைச்சுக்குவாங்க’ன்னு அறிவுரை சொன்னாங்க. என்னோட ஏற்புரையிலே, ‘குமரேசன் கோபப்படுறதில்லை, நகைச்சுவையா பேசுறதில்லைன்னு உங்களுக்குத் தகவல் வந்தா, நான் செத்துட்டேங்கிற செய்திதான் அதுன்னு எடுத்துக்குங்க’ன்னு சொன்னேன்.”


புன்னகையோடு கைகுலுக்கியவர் இன்றைய தேநீர்க்கடை செலவு தன்னுடையதுதான் என்று அங்கேயே அறிவித்தார்.


அவர் ரசித்த, தலைமுறைகள் மாற்றம் பற்றிய கேள்விக்கு நான் சொன்ன பதில் இதோ:


“பேன்ட் அயர்ன் பண்றப்போ, கால் இணைப்புளைச் சேர்த்து வச்சு, முன்னாலேயும் பின்னாலேயும் மடிப்புக் கோடு வர்ற மாதிரி செய்றவங்க மூத்த தலைமுறை. பேன்ட் கால் இணைப்புகளை இரண்டு பக்கமும் விரிச்சு வச்சு முன்னாலேயும் பின்னாலேயும் மடிப்பு வராம அயர்ன் பண்ணினா இளைய தலைமுறை. அயர்ன் பண்ணாமலேயே போட்டுக்கிட்டா இன்றைய தலைமுறை.”

[0]

முகநூல் பதிவு (31 ஆகஸ்ட் 2026)

 

Friday, 28 August 2026

மக்கள் சந்திப்பு இயக்கமும் தோழர்கள் முன்போல இல்லையென்பதும்...


                காலை நடையில் பூங்கா நிழலில் 


“தோழரே, நேத்து பார்க் என்ட்ரன்சிலே நீங்க ஒரு குரூப்பா நின்னுக்கிட்டு வர்றவங்களுக்கும் போறவங்களுக்கும் ஏதோ நோட்டீஸ் கொடுத்துக்கிட்டு இருந்தீங்க போல இருக்கே… என்ன ஏதாவது போராட்ட அறிவிப்பா?”


இயக்கத்தோடு தொடர்பில்லாதவர் என்றாலும் என்னைத் தோழர் என்றே (சற்று கிண்டல் தொணியில்) அழைக்கிற காலை நடை நேர நண்பர், கடைசிக் கட்டமான மரத்தடி இருக்கை அமர்வின்போது இதைக் கேட்டார்.


நான்கைந்து பேர் கூட இருக்கிறபோது இதைப் பற்றிப் பேசக் கிடைத்த வாய்ப்பை விடுவேனா? அவருக்குப் பதில் சொல்வது போலப் பேசினேன்.


“போராட்டமில்லை.  மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துறதுன்னு கட்சியிலே முடிவு செஞ்சு நடந்துக்கிட்டிருக்கு. நாடு தழுவிய அளவிலான முக்கியமான நிலவரங்கள், தமிழ்நாட்டில் மாநில அளவில் மக்களுக்குத் தேவைப்படுகிற நடவடிக்கைகள், நம்ம தொகுதியிலேயே இன்னமும் சரி செய்யாமல் இருக்கிற பொதுவான குறைகள்… இதைப் பற்றியெல்லாம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துறதுக்காக இந்த இயக்கம். எல்லாக் கிராமங்களிலேயும் நகரங்களிலேயும் இந்த மாசம் 31 வரை நடக்குது. அதையொட்டி நாங்கள் இங்கே ஒரு குழுவாகப் போய் மக்களைச் சந்திக்கிறோம், துண்டறிக்கை கொடுக்கிறோம், நாங்க சொல்றதைக் கேட்கத் தயாரா இருக்கிறவங்ககிட்ட ஒரு சில நிமிடங்கள் பேசுறோம்… நேத்து இந்தத் தெருவிலே ஒவ்வொரு கடை, ஒவ்வொரு வீடா துண்டறிக்கை கொடுத்துட்டு, கடைசியா பூங்கா வாயிலுக்கு வந்தோம்.”


“ஆமா சார், எங்க வீட்டுல கூட நோட்டீசை வாங்கி வச்சிருந்தாங்க. படிச்சுப் பார்தேன். அட, இந்த ஏரியாவுலதான் இத்தனை வருசமா குடியிருக்கோம், இந்தப் பிரச்சினையெல்லாம் இங்கே இருக்கிறதைத் தெரிஞ்சுக்காம இருந்துட்டோமேன்னு கொஞ்சம் ஷையா கூட இருந்துச்கு.”


இதைச் சொன்னவர் பூங்காவிலேயிருந்து இருபது நிமிடத் தொலைவில் உள்ள வீட்டில் குடியிருக்கிறவரான மற்றொரு நண்பர்.


“தெரிஞ்சு என்ன ஆகப் போகுது சார்?  ரியல் சேஞ்ஜ் எதுவும் வரப் போறதில்லை. தோழரோட கட்சியால சும்மா இருக்க முடியாதுல்ல? கட்சி மெம்பர்ஸ் சும்மா இருக்க விடக்கூடாதுல்ல?  அதுக்காக இப்படியொரு மூவ்மென்ட்டை நடத்துறாங்க.”


“மாற்றம் தானா வராது. உங்களை மாதிரி விவரம் தெரிஞ்சவங்க ஆதரவு தரணும். விவரம் தெரியாதவங்க தெரிஞ்சுக்கிட்டு ஆதரவு தரணும். அப்பதான் மாத்த முடியும். ஆனா, நேத்து கூட பாருங்க, பொதுவா வீடுகள்ளேயும் கடைகள்ளேயும் சாலையிலேயும் தெருவிலேயும் நாங்க குடுத்த துண்டறிக்கையை வாங்கிப் படிச்சவங்களும் இருந்தாங்க. வாங்கிக்கிட்டு பேச மறுத்தவங்களும் இருந்தாங்க. சில பேரு வாங்க மாட்டேன்னு தலையை ஆட்டினாங்க. இன்னும் சில பேரு தலையை ஆட்டுறது கூட கௌரவக் குறைச்சல்னு கடந்து போனாங்க. இந்த நிலைமையிலே மக்கள் இதிலேயெல்லாம் கவனம் செலுத்த விடாம, அற்பத்தனமான விசயங்களைக் கிளப்பிவிட்டுத் திசை திருப்புற வேலையும் நடக்கும் (ஒன்றிரண்டு உதாரணங்களையும் சொன்னேன்). படிப்படியாதான் விழிப்புணர்வு பரவும்.”


“சரிதான் தோழரே. ஆனா, கம்யூனிஸ்ட் கட்சியும் முந்தி இருந்த மாதிரி இப்ப இல்லை. முந்தி மாதிரி தியாகம் பண்றவங்களை இப்ப பார்க்க முடியலை. தகுதியுள்ளவங்களுக்கு வாய்ப்பு தர்றதில்லை. பிரச்சினைகள்ல சரியான ஸ்டேண்ட் எடுக்கிறதில்லை. நேத்து ஈவ்னிங் கூட நீங்க நாலைஞ்சு பேருதான் இருந்தீங்க. மத்தவங்க நிறையப் பேர் வரலைல்ல...”


வீட்டுக்குக் கிளம்பலாமென்று இருக்கையிலிருந்து எழப் போனவர்கள் மறுபடி அமர்ந்து என் பதிலைக் கேட்க ஆவலானார்கள்.


“கட்சி இப்படித்தான் இருக்குது, கட்சியில இப்படிப்பட்டவங்கதான் இருக்காங்கன்னு உங்களுக்கு எப்படித்  தெரிஞ்சது?”


“அதுதான் அடிக்கடி பல பேரும் பேசுறாங்களே. ஏன், உங்க கட்சிக்காரங்களே கூட பேசியிருக்காங்க. என் கிட்டயே பேசியிருக்காங்க…  அதை வெச்சுதான் சொல்றேன். ஏன் நானெல்லாம் உங்க கட்சியை கிரிட்டிசைஸ் பண்ணக்கூடாதா?”


“தாராளமா பண்ணலாம். தடையே இல்லை. ஆனால் எந்த அடிப்படையிலே விமர்சனம் பண்றீங்கன்றது முக்கியமில்லையா? ஒண்ணு நீங்களே கட்சியிலே இருந்து, உள்ளே என்ன நடக்குதுன்னு பார்த்துட்டு விமர்சிக்கணும். வெளியிலே பல பேருக்குக் கட்சி எடுக்கிற நிலைப்பாட்டிலே மாறுபாடு இருக்குது, அதனால இப்படிப் பேசுவாங்க…”


“கட்சியிலே இருக்கிறவங்களே சொல்றாங்கன்னு சொன்னேனே தோழர்...”


“சொல்லியிருக்கலாம். கட்சியின் கொள்கை நிலைப்பாடுகள்ல, மக்களுக்காகப் போராட்டங்களை நடத்திக்கிட்டே விஜய் கட்சியோட ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது மாதிரியான முடிவுகள்ல உடன்பட முடியாதவங்க இருப்பாங்க.  கட்சிக்குள்ளேயோ, கட்சியோட வழிகாட்டல்ல செயல்படுற அமைப்புகள்ளேயோ அவங்க எதிர்பார்க்கிற இடம் கிடைக்கலைங்கிற கோபத்திலேயும் சில பேரு இருப்பாங்க. உறுப்பினர்களா இருக்கிற பல பேரு இது மாதிரியான நிகழ்வுகள்ல ஏதோ காரணத்தால கலந்துகொள்ளாமப் போறதிலே ஆதங்கப்படுறவங்க இருப்பாங்க. இப்படியெல்லாம் இருக்கிறவங்கள்ல சில பேரு அமைப்பு ஒழுங்கோ, சொந்தக் கட்டுப்பாடோ இல்லாம வெளியே பேசுவாங்க. உங்களை மாதிரியான நண்பர்கள்ட்டயும் சொல்லிப் புலம்புவாங்க. அவங்க சொல்றதை நம்புற நீங்க, என்னை மாதிரி ஆட்களும் இருக்கோம்ல, நாங்க சொல்றதை ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க?“


“ஆனாலும் அந்தக் கால கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்தக் காலத்துக்கும் டிஃபரென்ஸ் இருக்கத்தான் செய்யுது தோழரே. முந்தி…”


“இதுக்கு முன்னாலேயும் இதைப் பத்தி நம்ம சபையிலே பேசியிருக்கோம்னு நினைக்கிறேன். எப்படி அர்ப்பணிப்போட செயல்படுறவங்க கட்சியிலே இருக்காங்களோ, அதே போல மேலோட்டமா பங்கெடுக்கிறவங்களும் இருப்பாங்க. அவங்களும் புரிஞ்சிக்கிடறதுக்காகத்தான் இந்த இயக்கம். அந்தக் காலம் போலவே இந்தக் காலத்திலேயும் வீரத்தோடேயும் அர்ப்பணிப்போடேயும் எளிமையாவும் இயங்குறவங்க பல பேரு இயக்கத்திலே இருக்காங்க. அதைத் தியாகம்னெல்லாம் அவங்களே சொல்லிக்கிடறதில்லை, இயல்பான இயக்க ஈடுபாட்டிலே தியாகம்கிறதெல்லாம் கிடையாது. மத்தவங்க வேணும்னா அவங்களோட ஈடுபாட்டையும், சொந்த ஆதாயம் தேடிக்காம இருக்கிறதையும் தியாகம்னு சொல்வாங்க. இவங்க அந்த அடைமொழி பத்தியெல்லாம் கவலைப்படாம இயக்கத்துக்காக உழைச்சுக்கிட்டு இருப்பாங்க.”


கொஞ்சம் உரக்கவே பேசிவிட்டேன் போலும். இருக்கையைக் கடந்து போனவர்களும் நின்று கவனித்துவிட்டு நடையைத் தொடர்ந்தார்கள். மௌனம் எங்களைக் கவ்விக்கொள்வதைத் தவிர்க்க, சட்டென எழுந்து விரைவாக நடந்து தேநீர்க்கடையை அடைந்தோம்.


Friday, 21 August 2026

மாணவர் போராட்டங்களுக்கு விஜய் அரசு அஞ்சுகிறதா - சுற்றறிக்கை வாபஸ் பெற்றது பின்வாங்கலா, பதுங்கலா?


 மாணவர்களும் இளைஞர்களும் தங்களின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், பொது நியாயங்களுக்காகவும் போராட்டக் களம் காண்பது உலகம் முழுவதும் நடைபெறுவதுதான். அந்தப் போராட்டங்கள் அதிகாரத் தடிகளால் அடக்கப்படுவதை உலகம் முழுவதும் பார்த்துவருகிறோம். குறிப்பாக, இந்தியாவில் மாணவர் - இளைஞர் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தீவிரமாக ஈடுபடுவதை தற்போது பார்த்துவருகிறோம்.

கல்லூரி மாணவர்கள் அரசியல் இயக்கங்களில் – குறிப்பாக இடதுசாரி அமைப்புகள் மற்றும் கரப்பான் ஜனதா கட்சி முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகளின் முதல்வர்களுக்கு ஒரு சுற்றறிக்கை (ஆக. 17) அனுப்பப்பட்டது. தமிழ்நாட்டின் கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையர் சார்பில் இணை இயக்குநர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.

அதில் அரசின் ஆகஸ்ட் 14 கடிதத்தை (கடித எண் 1075/ஏ1/2026–1) மேற்கோள் காட்டி, “இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத் தொடர்பு, ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

"...எனவே இடதுசாரி கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ மாணவிகள், இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, நடவடிக்கை குறித்த விவரங்களை உடனே இந்த அலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்," என்றும் அது கூறுகிறது.

குஜிலியம்பாறை வட்டாட்சியர்


இதே போல் பிற மாவட்டங்களில், மற்ற வட்டாட்சியர்களும் கட்டளையிட்டு எச்சரித்திருக்கிறார்களா என்று உடனடியாகத் தெரியவில்லை. இந்தக் கெடுபிடிகளுக்கான ஊற்றுவாயாக அமைந்தது, ஜூலை 28 அன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம். அதில், இடதுசாரி இயக்கங்கள், கரப்பான் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்ற “துடிப்புக்கு” (urge) மாணவர்களும் இளைஞர்களும் “இரையாகி” (succumb) விடாமல் தடுப்பது பற்றிப் பேசப்பட்டிருக்கிறது.


ஜூலை 30 தேதியிட்ட ரகசிய, அவசரக் கடிதத்தில் அரசின் ஒரு செயலர் சார்பில், முந்தைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துக் கேட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 14 அன்று அரசின் சிறப்புச் செயலர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம், தலைமைச் செயலர் இந்த நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தியிருப்பதாகத் தெரிவிக்கிறது.

அரசாங்க நடவடிக்கை என்று வருகிறபோது இத்தனை அதிகார மட்டங்கள் சம்பந்தப்படும் என்பது தெரிந்ததுதான். நமது கேள்வி, இதிலெல்லாம் கல்வித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் சம்பந்தமே இல்லையா? என்பதுதான். மாணவ சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்தையும், ஜனநாயகப் போராட்ட உரிமையையும் பறிக்கும் இந்த அப்பட்டமான சர்வாதிகார ஆணை, அரசியல் இயக்கங்கள், கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகளிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ(எம்), சிபிஐ, பாமக, திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டன.

த.வெ.க அணி ஆட்சியில் பங்கேற்றுள்ள விசிக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் கூட விமர்சித்தார்கள். அடக்குமுறைகளால் மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வைக் கொஞ்சமும் முடக்கிவிட முடியாது. அதை உணர்த்தும் வகையில், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கின.


முற்றுகை அறைகூவல்

புதனன்று (ஆகஸ்ட் 19) காலையில் உயர் கல்வி இயக்குநரக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. வன்முறைத் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் இப்படிப்பட்ட போராட்ட அறைகூவல்களுக்கு எப்படி மாணவர்கள் எழுச்சியோடு பெருந்திரளாகக் கூடுவார்கள் என்று காட்டுகிற அண்மைக்காலச் செய்திகள் நிறையவே வந்திருக்கின்றன.


முற்றுகைக் கிளர்ச்சி அறிவிப்பின் விளைவாக, மாணவர்களின் அரசியல் ஈடுபாட்டைக் கண்காணிக்கவும், போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கவும் ஆணையிடும் சுற்றறிக்கை உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட்டது.

அத்துமீறல் ஆணையை விலக்கிக்கொண்டது நல்லது. ஆனால் விளக்கியாக வேண்டிய வினாக்கள் இருக்கின்றன. கல்விக்கூட வளாகங்களில் அதிகார வன்முறையைப் புகுத்தும் இந்த நடவடிக்கைக்கான திட்டத்தை வகுத்தது யார்? மாணவர், இளைஞர் உரிமைக் குரலை ஒடுக்குவதற்கான இந்த முன்முயற்சியின் பின்னணி என்ன? அதிலும், அரசியல் இயக்கங்கள் என்று பொதுவாகச் சொல்லாமல், இடதுசாரிக் கட்சிகள், கரப்பான் ஜனதா கட்சி என்று குறிப்பாகவே கூறப்பட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன?


நாடு முழுவதுமே நிலவுகிற, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரமான அரசியல், சமூக அக்கறை ஈடுபாடுகளுக்குத் தடை விதிக்கும் போக்கு இங்கேயும் பிரதிபலிக்கிறதா? இதற்கு முன் சென்னை ஐஐடி வளாகத்தில் பெரியார், அம்பேத்கர் வாசிப்பு வட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டதன் விரிவாக்கமா?


நாடு முழுவதுமே நிலவுகிற, கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களுக்குள் மாணவர்களின் சுதந்திரமான அரசியல், சமூக அக்கறை ஈடுபாடுகளுக்குத் தடை விதிக்கும் போக்கு இங்கேயும் பிரதிபலிக்கிறதா? இதற்கு முன் சென்னை ஐஐடி வளாகத்தில் பெரியார், அம்பேத்கர் வாசிப்பு வட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டதன் விரிவாக்கமா?


சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அறிவுக்கள நக்சல்கள்” (டிமாகி நக்சல்ஸ்) அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னாரே, அதற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? அறிவுக்களப் போராளிகள் மாணவர்கள், இளைஞர்களிடையேயிருந்தும் பரிணமிக்கிறார்கள் அல்லவா? ஆகவேதான் மேலே எட்டடி பாய்ந்தால் கீழே பதினாறடி பாய்கிற வேகமா?



ஒன்றிய ஆளுங்கட்சி ஆளுகிற மாநிலங்களிலேயே கூட இப்படிப்பட்ட ஆணைகள் வந்ததாகச் செய்திகள் வராத நிலையில் அவர்களுக்கும் சொல்லித்தரப்படுகிறதா? தமிழக ஆட்சியாளர்களின் அரசியல் வழிகாட்டலோடு அதிகாரிகள் இந்த முடிவை எடுத்தார்களா அல்லது ஏதோ ஊக்கத்தில் சுயம்புவாக ஆணையிட்டார்களா? ஆளுங்கட்சிக்குப் போராட்ட வரலாறு இல்லை என்பதோடு, நிகழ்காலப் போராட்ட ஒவ்வாமையும் இருப்பதை அதிகார வர்க்கம் பயன்படுத்திக்கொள்கிறதா?


முதலமைச்சருக்கோ, அமைச்சருக்கோ தெரியாமல்தான் அதிகாரிகள் முடிவெடுத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியானால், தவெக அரசு தன்னாளுமையோடு இயங்கவில்லை, அதிகாரிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றுதானே அர்த்தம்? அதிகார வர்க்கத்தினரிடையே வலதுசாரி டிமாகிகள் ஊடுருவியிருப்பதாகக் கூறப்படுகிறதே, அதன் அறிகுறியா இது?


அல்லது, இடதுசாரிச் சிந்தனைகள் வளர்வதை முளையிலேயே கிள்ளியெறிந்துவிட வேண்டும் என்ற அரசியல் ஆசை தவெக தலைமைக்கே இருக்கிறதா? கல்வி வளாகங்கள் பாடப்புத்தக அட்டைகளுக்கிடையே மடிக்கப்பட்டுவிடக்கூடாது, வருங்காலத் தலைமுறையின் பன்முக அக்கறைகளுக்கான நுழைவாயில்களாகவும் இருந்தாக வேண்டும், அப்போதுதான் நாடும் சமுதாயமும் ஆரோக்கியமாக வளர முடியும் என்ற புரிதல் (அரசுக்கும் அதிகாரிகளுக்கும்) இல்லையா?


இவ்வினாக்களுக்கெல்லாம் உயர் கல்வித் துறைச் செயலரும், அமைச்சரும் விடையளித்தாக வேண்டும். குறிப்பாக, முதலமைச்சர் தமிழ்நாட்டிற்குத் தெளிவான விளக்கமளித்தாக வேண்டும். முக்கியமாக, தவெக ஆட்சிக்கு வழியமைத்த இளைய தலைமுறையைப் பகைத்துக்கொள்ளும் இப்படிப்பட்ட அத்துமீறல்கள் இனிமேல் தொடராது என்று திட்டவட்டமான வார்த்தைகளால் உறுதியளிக்க வேண்டும். செய்வீர்களா இளைஞர்களின் அண்ணன் அவர்களே?

இறுதி ‘வெற்றி’!


கண்காணிப்புகளும் கட்டுப்பாடுகளும் புதிய தலைமுறைகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வீரிய எழுச்சியையும் சிறிதளவும் மட்டுப்படுத்திவிட முடியாது. உலகின் எல்லா நாடுகளிலும் இதற்கான சான்றுகள் இருக்கின்றன. தமிழகத்திலும், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் என வரலாற்றுத் தடங்கள் அழுத்தமாகப் பதிந்துள்ளன.


மாணவர் உரிமைகளை நோக்கி வீசப்பட்ட அதிகாரக் கட்டாரியை மழுங்கடித்த மாணவர் இயக்கங்களுக்கு நிச்சயமாக இது ஒரு வெற்றிதான். மாணவர் சமூகத்திற்கு நம்பிக்கைச் சான்றுதான். அதேவேளையில், கவனத்துடன் இருந்தாக வேண்டியிருக்கிறது. வெளிப்படையாகச் சுற்றறிக்கை விலக்கப்பட்டுவிட்டாலும், அதன் உள்ளடக்கத்தை மறைமுகமாகச் செயல்படுத்த வைக்கும் முயற்சிகள் நடக்காதென்று கூறிவிட முடியாதே. ஆயினும், கவனமாக இருப்பதற்கான ஊக்கத்தை இந்த வெற்றி அளிக்கும் என்று கூறலாம்!

[0]

விகடன் ப்ளஸ் (ஆகஸ்ட் 20) தளத்தில் எனது கட்டுரை






Friday, 14 August 2026

காவிரி பங்கீடு, தொகுதி மறுவரையறை: ஒரு வேண்டுகோள், ஓர் அழைப்பு, இரு புறக்கணிப்புகள்!


 

முக்கியமான ஒரு பிரச்னை முன்னுக்கு வருகிறபோது, அதில் பொது அணுகுமுறையை உருவாக்குவதற்கென அரசாங்கம் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுவதுண்டு. அதை ஏற்று அப்படிப்பட்ட கூட்டங்கள் நடப்பதும் உண்டு,

அத்தகைய கூட்டங்களுக்கு அரசு அழைப்பு விடுப்பதும், கட்சிகள் பங்கேற்பதும் நடந்திருக்கின்றன. இப்போது, மேகதாது அணை விவகாரத்தின் பின்னணியில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பொது அணுகுமுறையை வகுப்பதற்காகத் தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டுவதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால், அதை ஜோசப் விஜய் அரசு ஏற்கவில்லை.

மற்றொரு கூர்மையான விவகாரமாக மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்ட முன்வரவை ஒன்றிய அரசு மறுபடியும் கொண்டுவரக்கூடும் என்ற நிலையில், அதில் மாநிலத்தின் குரலாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்காகத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.


தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பிரச்னையில் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்ட மறுக்கும் முதலமைச்சர் விஜய், மற்றொரு முக்கியமான பிரச்னைக்காக இப்படியொரு கூட்டத்தைக் கூட்டியது ஏன்? அந்தக் கூட்டத்தைக் கூட்டாததற்காகப் பழி வாங்குவது போல இந்தக் கூட்டத்தை ஐந்து கட்சிகள் புறக்கணித்தது ஏன்?
தவறவிட்ட செய்தி!

காவிரிப் பிரச்னையில் தமிழகத்தின் எல்லாக் கட்சிகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றன. தனது நிலைப்பாடும் அதுவேதான் என்று தவெக–வும் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒருமித்த குரல் ஒலிக்கிறது என்ற செய்தியை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும், ஏன் புதிய வழக்கை எடுத்துக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றத்துக்குமே கூட, கொண்டுசென்றிருக்க முடியும். ஒருமித்த குரலின் தாக்கம் எப்போதுமே வலுவானதாக அமையும். அந்த வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை விஜய் அரசு தவறவிட்டுவிட்டது.


அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுத்ததில் ஒரு பக்குவமின்மை வெளிப்பட்டது என்றால், அதற்காக த.வெ.க தரப்பிலிருந்து கூறப்பட்ட காரணங்கள் இரு மடங்கு பக்குவமின்மையை வெளிப்படுத்தியது. எரிசக்தி வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “சட்டமன்றமே அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் ஒரு மன்றம்தான். அங்கு ஏற்கெனவே மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இருக்கிறார்கள். எனவே, தனியாக மீண்டும் ஒரு கூட்டத்தைக் கூட்டத் தேவையில்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கர்நாடக அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியது என்ற செய்தியை அவர் கவனிக்கவில்லை போலும். இறுதிப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் விவாதிப்பதற்கும், தேர்தலில் ஓர் இடம் கூடப் பெற முடியாமல் போகிற கட்சி உட்பட, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கூடி விவாதிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.


சட்டமன்றக் கூட்டம் அலுவல் சார்ந்தது. அனைத்துக் கட்சிகள் கூட்டமோ, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த அரசியல் முக்கியத்துவத்தை உருவாக்கத் தேவையில்லை என்று த.வெ.க நினைக்கிறது என்றால், இன்னமும் உரிய அரசியல் பயிற்சி பெறாததுதான் காரணமா அமைச்சர் அவர்களே?
ஒருமித்த கருத்து?

அமைச்சர் இன்னொரு காரணத்தையும் கூறினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைக் கூறுவார்கள், அதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முடியாமல் போகும் என்றார். மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுவதுதான் ஜனநாயக மாண்பு! அனைவரும் ஒரே கருத்தை ஒப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஒவ்வொரு கட்சியும் தனக்கெனத் தனி அணுகுமுறையைக் கொண்டிருக்கும், அந்த அடிப்படையில்தான் அதன் கருத்துகள் வெளிப்படும்.

ஒரே கருத்தாக வராதபோது பெரும்பான்மையாக முன்வைக்கப்பட்ட கருத்து எதுவோ அதுவே பொதுக்கருத்தாக மாறும். இந்த ஜனநாயகத்தை மதிக்கத் தயாராக இல்லையா இந்த அரசு? அமைச்சர் கூறும் காரணத்தை ஏற்பதானால், சட்டமன்றக் கூட்டமே கூட மாறுபட்ட கருத்துகள் ஒலிக்கும் இடம்தானே? அதையும் வேண்டாம் என்று தள்ளிவிடலாமா?

ஒருமைப்பாடு உள்ளக் கருத்துகள் வரப்போவதில்லை என்ற முன்முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நலன் சார்ந்த முக்கியமான கலந்துரையாடலை நடத்த மறுக்கப்பட்டது என்றால், அதில் ஜனநாயகம் இல்லை, நல்ல மாற்றத்திற்கான அறிகுறியும் இல்லை.


ஆலோசனைகளுக்கு அணை!
அனைத்துக் கட்சிக் கூட்டம் என்றால் அதில் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, எந்தப் பிரச்னைக்காக அந்தக் கூட்டம் கூட்டப்படுகிறதோ, அதை நன்கு ஆராய்ந்திருக்கக்கூடிய தனிப்பட்ட வல்லுநர்கள், தொண்டு அமைப்புகள் உள்ளிட்டோரும், அரசாங்க அழைப்பின் பேரில் பங்கேற்க வாய்ப்புண்டு. அப்போது மேலும் திட்டவட்டமான தீர்வுகளை உருவாக்க முடியும். அப்படிப்பட்ட ஆலோசனைகளைப் பெற என்ன தயக்கம்?


அத்துடன், தற்போது மறுபடியும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், அங்கே முன்வைப்பதற்கான வலுவான வாதங்களுக்கான ஆலோசனைகளும் அந்தக் கூட்டத்தில் வந்திருக்கும். வறட்டுக் கவுரவப் பிடிவாதத்தால் அந்த ஆலோசனைகளுக்கு அணை போடப்பட்டுவிட்டது.

இப்படியெல்லாம் யோசிக்கவில்லை என்று த.வெ.க தலைமை சொல்லக்கூடும். அப்படியானால், இந்தப் பிரச்னையை “வெற்றிகரமாக” மேலாண்மை செய்த பெருமை தனக்கு மட்டுமே வந்து சேர வேண்டும் என்ற குறுகிய நோக்கமே காரணமாகிறது. அப்படிதானா? கர்நாடகத்தில் பெரு மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்ததால், தமிழகத்திற்கும் கேரளத்துக்கும் புதுச்சேரிக்குமான காவிரி நீர் தற்போதைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. அதை வேண்டுமானால் தனது அணுகுமுறைக்குக் கிடைத்த “வெற்றி” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.


எதிர்க்கட்சிகள் வரவில்லை!
இதற்குச் சற்றும் குறையாத ஒரு தவறான முடிவாகவே, தொகுதி மறுவரையறை சட்ட முன்வரவை குறித்து ஆலோசிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததையும் பார்க்க வேண்டியிருக்கிறது.



 

அதற்கான காரணங்கள் மேம்போக்கானவை அல்லதான். தனது கட்சிக்கென நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், தமிழகத்தின் கவலையையும், சட்ட முன்வரைவு கைவிடப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலையும் ஒரே குரலாக ஒலிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கத்தக்கதே.

ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சிகளின் தலைமைகளுக்கு முறைப்படி கடிதம் அளித்து, நோக்கத்தை எடுத்துச்சொல்லி, கூட்டத்திற்கு அவர்களை அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, நேரடியாக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததில் நிச்சயமாக ஒரு நெறிமீறல் இருக்கிறது. அந்த நெறிமீறலுக்கும் அரசியல் பயிற்சியின்மைதான் காரணமா?


இருந்தபோதிலும், நடைமுறைச் சடங்குகளைவிட நாட்டு நிலவரங்கள் தலையானவை என்ற புரிதலோடு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அழைப்பு விடுத்ததில் உள்ள நெறிமீறலைச் சுட்டிக்காட்டிவிட்டு, எடுத்துக்கொண்ட பொருள் மீது பேசியிருக்க வேண்டும். தொகுதி மறுவரையறை சட்ட முன்வரைவு இன்னும் தாக்கல் செய்யப்படவே இல்லை. இந்த நிலையில் எதற்காக இந்தக் கூட்டம் என்று – குறிப்பாக அதிமுக தரப்பில் – கேட்கப்படுகிறது.

ஆனால், கடந்த ஏப்ரலில் போதிய பெரும்பான்மை கிடைக்காததால் தோற்கடிக்கப்பட்ட சட்ட முன்வரைவை, கொஞ்சம் ‘டிங்கரிங்’ வேலை செய்து மறுபடியும் கொண்டுவருவதற்கான முயற்சிகளை பா.ஜ.க முடுக்கிவிட்டிருப்பதாக வெளிப்படையாகத் தகவல்கள் வருகின்றன. அப்படியிருக்க, சட்ட முன்வரைவைக் தாக்கல் செய்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று காத்திருப்பது முறைதானா? வருமுன் காப்பதற்குத் தயாராக வேண்டாமா?

ராகுல் ஏற்பாடா?
அரசியலாக இன்னொரு காரணம் இருப்பதாகப் பேசப்படுகிறது. அதாவது, இந்தச் சட்ட முன்வரைவு தொடர்பாக தி.மு.க நிலைப்பாடு என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டாராம். அவரது தூண்டுதலால்தான் இக்கூட்டம் கூட்டப்பட்டது என்கிறார்கள். தி.மு.க தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதாக வரும் ஊகச் செய்திகள் போல இதுவும் ஊக அடிப்படையிலேயே இருக்கிறது.


ஒருவேளை அது உண்மை என்றே வைத்துக்கொள்வோம் – கூட்டத்தில் கலந்துகொண்டு அதை அம்பலப்படுத்தலாமே? தனது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று அங்கே உரத்து உரைக்கலாமே? வேறு சிலர் வேறு ஐயப்பாடுகளைப் பகிர்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடனான முந்தைய உறவு முறிந்துவிட்டதால், திமுக இப்போது பாஜக–வுக்கு சாதகமாக நகரக்கூடும், சட்ட முன்வரைவை ஆதரிக்கக்கூடும் என்ற ஊகங்கள் அடிபடுகின்றன. இது உண்மையாக இருக்குமானால், காங்கிரஸ் மீதுள்ள (நியாயமான) கோபத்திற்காக மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிற செயல்களில் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுகிறது.

பொருள் என்ன?
கடந்த முறை, இந்த நடவடிக்கைகளை அடியோடு எதிர்த்தது தி.மு.க. இப்போது, முந்தைய வடிவத்திலேயே சட்ட முன்வரைவு வருமானால் எதிர்ப்போம் என்று சொல்கிறார்கள். அதன் பொருள் என்ன?


அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை இடங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பதாக பாஜக தலைவர்கள் கூறுகிறார்களாம். அப்படியானால், 816 உறுப்பினர்களாக அதிகரிக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ விகிதம் குறையாது என்பதால் அதை ஏற்கலாம் என்ற கருத்தில் திமுக தலைவர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது ஆதாரமற்ற ஊகமாகக் காற்றில் கரைந்துபோக வேண்டும் என்றே கூட்டாட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் விரும்புகிறார்கள்.


பெரிய கவலைகள்

ஏனென்றால், எண்ணிக்கை விதிதத்தைத் தாண்டி, அதைவிடவும் கவலைக்குரிய கூறுகள் தொகுதி மறுவரையறை நகர்வில் இருக்கின்றன. அதில், மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கிறபோது, தமிழ்நாட்டிற்குக் கூடுதல் உறுப்பினர்கள் (59) கிடைப்பார்கள் என்றாலும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவ பலம் கணிசமாக அதிகரித்துவிடும். அதைப் பயன்படுத்தி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்கக்கூடிய நடவடிக்கைகளைச் சட்டமாக்கிவிட முடியும், கூட்டாட்சிக் கோட்பாடு புறந்தள்ளப்படும் என்று அரசமைப்பு சாசனத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தற்போதுள்ள ஏற்பாட்டிலேயே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தைக் கீழிறக்கி வேலைகளைக் குறைக்கிற விபி–ஜி ராம் ஜி என்று வேறொரு சட்டத்தைக் கொண்டுவர முடிகிறது. வந்தே மாதரம் தேசியப் பாடல் என்று கொண்டுவர முடிகிறது. தற்போதைய பலம் அதிகரிக்குமானால் வேறு எப்படிப்பட்ட சட்டங்கள் வருமோ?

ஒற்றை மதம் சார்ந்த நாடாக மாற்றுவதை நோக்கிய நகர்வுகளை எளிதாக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று, அரசமைப்பு சாசனம் கூறுகிற அரசின் மதச்சார்பின்மைத் தன்மையில் பிடிப்புள்ளவர்கள் அஞ்சுகிறார்கள்.


இத்தகைய ஆழமான, நாட்டின் எதிர்காலக் கட்டமைப்பு சார்ந்த அச்சங்கள் உள்ள சூழலில், அதற்கெல்லாம் இடமளிக்க மாட்டோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கும் மேடையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தியிருக்க முடியும். இதில் தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்கள் ஒன்றுபட்டிருக்கின்றன என்ற எண்ணத்தை ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் தெரிவிப்பது மாநில நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு தொடர்புள்ள அக்கறை. அப்படி ஒன்றுபட்டிருக்கவில்லை என்பதில் ஒன்றிய ஆளுங்கட்சி தனக்குச் சாதகம் என்று எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு செய்தி இருக்கிறது.


எப்படியோ, தமிழ்நாட்டு நலன் சார்ந்த ஒரு முக்கியப் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அரசு மறுத்ததிலும், மற்றொரு முக்கியப் பிரச்னையில் முதலமைச்சர் கூட்டிய கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததிலும் கைவிடப்பட்டிருப்பவர்கள் தமிழ்நாட்டு மக்கள்தான். மாநில அரசியல் உடல்நலம் சீர்குலைந்திருப்பதன் அறிகுறியே இது!

[0]

விகடன் ப்ளஸ் தளத்தில் (13 ஆகஸ்ட் 2026)  எனது கட்டுரை