Wednesday 19 May 2010

கம்யூனிசம் என்றால்...


வரலாற்றின் அடுத்த கட்ட தேவை

மனித நேயம், அழகுணர்ச்சி, நட்பு, சமுதாயத்தின் மீது பாசம், கலைத்தாகம், இலக்கிய மோகம், சாதி-மத-இன-மொழி வேலிகளற்ற காதல், கடவுள் கோட்பாடுகளுக்குள் சிக்காத அறிவியல் கண்ணோட்டம், பட்டினியில்லா வாழ்வு, அடுத்தவர் உரிமையை மீறாத சுதந்திரம், ஒருவர் உழைப்பை இன்னொருவர் சுரண்டாத சமுதாய அமைப்பு... இந்த முற்போக்கான கூறுகள் அனைத்தும் இணைந்ததே கம்யூனிசம். இது ஏதோ மார்க்ஸ் என்கிற தனி மனிதர் உருவாக்கிப் பரப்பிய கோட்பாடு அல்ல. மனிதர்கள் இயற்கையாய் இப்படித்தான் பரிணமித்தார்கள், வாழ்ந்துவந்தார்கள். நம் ஆதித்தாத்திகளும் தாத்தன்களும் சமத்துவத்துவத்துடன் வாழ்ந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லை, பாலினப் பாகுபாடு இல்லை, இனப் பகைமை இல்லை, தேசங்களின் பெயரால் மோதல் இல்லையென வாழ்ந்தார்கள்.

இப்படி இருந்த அந்த ஆதிப்பொதுவுடைமைச் சமுதாயத்தில் பின்னர் நிலம் என்பது ஒரு சொத்தாக உருவான பிறகு அதைக் கைப்பற்றுவதற்கான சண்டையில் தொடங்கியது. நிலத்திலும், நிலத்தைக் கைப்பற்றியவர்களின் வீட்டிலும் வேலை செய்வதற்காக மக்களில் ஒரு பகுதியினர் அடிமைப்படுத்தப்பட்டார்கள். பெரும் பரப்பில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப வாழ்க்கை முறைகள் உருவாக்கப்பட்டு, அன்றைய சமூக அமைப்பைக் கட்டிக்காப்பதற்கான அரசாங்க அமைப்பாக பரம்பரை மன்னராட்சி தொடங்கியது.

அந்தப் பண்ணைச் சமுதாய அமைப்பின் நியாயங்களை எல்லோரும் ஏற்கச் செய்வதற்காகவும், கட்டுப்பட்டு இருக்கச் செய்வதற்காகவும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அதையொட்டியே, இயற்கையின் புதிர்களைப் புரிந்துகொள்ள இயலாத மக்களின் அச்சங்களை அடிப்படையாக வைத்து மதங்களும் மதச் சடங்குகளும் ஏற்படுத்தப்பட்டன. நிலத்தை ஆக்கிரமிக்க நடந்த சில உண்மையான சண்டைகளை அடிப்படையாக வைத்து கற்பனையான சாகசங்களைக் கலந்து புராணக்கதைகள் புனையப்பட்டன.

முந்தைய அடிமைச்சமுதாயத்தை விட இது முன்னேறிய சமுதாயமாக இருந்தது. ஆனால் இது மக்களுக்கு முழு விடுதலை அளிக்கவில்லை.
அறிவியல் கண்டுபிடிப்புகளின் துணையோடு தொழில்களும் தொழிற்சாலைகளும் உருவானபோது, அவற்றைத் தொடங்கி நடத்துவதற்கு செல்வ பலம் வைத்திருந்தவர்கள் முதலாளிகளானாகள். அவர்களுடைய எந்திரங்களை இயக்குகிறவர்கள் தொழிலாளர்களானார்கள்

இந்தப் புதிய அமைப்புக்கு முந்தைய நிலவுடைமைச் சமுதாயமும் அதைப் பாதுகாக்கும் மன்னராட்சி அரசியலும் முட்டுக்கட்டையாக இருந்தன. எனவே, நிலப்பண்ணையார்களிடமும் மன்னர்களிடமும் அடிமைப்பட்டிருந்த தொழிலாளர்களை மீட்பதற்கான சுதந்திரம், ஜனநாயகம் என்ற முழக்கங்களோடு அரசியல் இயக்கங்கள் தோன்றின. முதலாளித்துவ சமுதாய அமைப்பு பரிணமித்தது. முதலீடு போட முடிகிற ஒருவர் தொழிற்சாலையைத் தொடங்கி அதிலே பலரைத் தொழிலாளர்களாக வைத்துக்கொண்டு வேலை வாங்க முடியும் என்பதே முதலாளித்துவம்.

இதுவும் முழுமையான சமுதாய விடுதலையை அளிக்கவில்லை. இதிலே நேரடியான அடிமைத்தனம் இல்லை என்றாலும் கூலி அடிமைத்தனம் என்பது இருக்கிறது. எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், உடல் ஆற்றல் மிக்கவரானாலும் முதலீட்டாளரின் (முதலாளியின்) விருப்பப்படியே செயல்பட்டாக வேண்டும். முதலாளிகளோ ஒரு புதிய எந்திரம் வாங்குவது முதல் தொழிலாளிக்கு குடியிருப்பு கட்டித்தருவது வரையில் ஒவ்வொன்றையும் லாப நோக்கத்தோடுதான் செய்கிறார்கள். இந்த லாப நோக்கம் என்பது தனி மனித பேராசையிலிருந்து வருவதல்ல. லாபம் என்ற விளைவு இல்லாமல் முதலாளித்துவம் என்ற அமைப்பே செயல்பட முடியாது.

தெருவோரத்தில் இட்லிக்கடை போட்டால் கூட, எல்லா அடக்கச் செலவுகளும் சேர்ந்து ஒரு இட்லிக்கு ஒரு ரூபாய் செலவாகிறது என்றால் அதை அதே ஒரு ரூபாய்க்கு விற்றால் மறுநாள் கடை நடத்த முடியாது. லாபம் இருக்க வேண்டும். இதே லாபத்தை தொழிலாளிகளை ஏமாற்றும் அநியாயமான வழிமுறைகள், அடுத்த நிறுவனத்தை அழிக்கிற உத்திகள், அதற்கு அரசாங்க அதிகாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் சதிகள் என்று ஈட்டுகிறபோது அது கொள்ளை லாபமாக மாறுகிறது.

இந்த லாப வேட்டை நாடுகளின் எல்லைகளைத் தாண்டி நடக்கிறபோது அது பன்னாட்டுச் சந்தையாகிறது. அந்தச் சந்தையில் ஏகபோகமாக நாட்டாமை செலுத்துகிற வெறிதான் போர்களுக்கு அடிப்படையாக இருக்கிறது. முன்பு நிலத்தைக் கைப்பற்றுவதற்காக மன்னர்களிடையே போர்கள் நடந்தன. இன்று சந்தையைக் கைப்பற்றுவதற்காக முதலாளிகளிடையே போர்கள் நடக்கின்றன. முதலாளிகள் நேரடியாகப் போர்க்களம் வரமாட்டார்கள். இந்த அமைப்பைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அரசாங்கங்கள் தங்களது ராணுவங்கள் மூலம் அவற்றின் ராணுவங்கள் போர்களை நடத்தும். அந்தப் போர்களுக்கு ஏதாவது பெயர் சூட்டிக்கொள்ளும்.

முதலாளிகளின் லாபம் எப்படி உருவாகிறது என்ற ரகசியத்தைக் கண்டுபிடித்த சமுதாய ஆராய்ச்சியாளர்தான் மார்க்ஸ். அந்த லாபம்தான் முதலாளித்துவ சமுதாய அமைப்பின் உயிர் மூச்சு என்ற பொருளாதார உண்மையை அறிவியல் தேடலோடும், வரலாற்று ஞானத்தோடும் அவர் கண்டறிந்தார். முந்தைய சமுதாய அமைப்புகள் எப்படி அந்தந்தக் காலகட்டத்தில் அடிமைப்படுத்தப்பட்டிருந்த மக்களின் புரட்சியால் மாறினவோ அதே போல் இந்த முதலாளித்துவ அமைப்பும் தொழிலாளர்களாகிய மக்களின் எழுச்சியால் மாறும் என்பதே மார்க்ஸ் முன்வைத்த கோட்பாடு. இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும், யாவரும் யாவையும் பெற்ற சமத்துவச் சமுதாயம் மலர வேண்டும் என்பது அவருடைய தலையில் உதித்த ஆசை அல்ல. அது வரலாற்றின் அடுத்த கட்ட தேவை.

அந்தப் புதிய சமுதாயம், தொடக்க கால மானுட சமுதாயத்தைப் போலவே சமத்துவ உரிமைகள் உள்ளதாக, அதே வேளையில் இயற்கையைப் பற்றிய அன்றைய அச்சங்கள் இல்லாததாக இருக்கும். சுரண்டலற்ற அந்தச் சமுதாய அமைப்பு நிலைபெறுகிறபோது உலகில் சண்டைகளுக்குத் தேவை இல்லாமல் போய்விடும். தன்னலம் அடிபட்டுப்போய்விடும். பாலினப் பாகுபாடு முற்றிலுமாக ஒழிந்துவிடும். சாதி-மத-இன வரப்புகள் நொறுங்கிவிடும்.

இந்தப் புரிதலோடு இயங்குகிறவர்களே மார்க்சியவாதிகள். கம்யூனிஸ்ட்டுகள் மார்க்ஸ் என்பவரை பக்தியோடு பின்பற்றுகிற சீடர்கள் அல்ல. மார்க்சியத்தின் துணையோடு இயற்கையையும் வரலாற்றையும் புரிந்துகொண்டு, அவரவர் நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்றபடி சமுதாய மாற்றத்திற்காகச் செயல்படுகிறவர்கள். அந்த மாபெரும் சமுதாய இயக்கத்தை நடத்திக்கொடுக்கிற ஒரு கட்டமைப்புதான் கம்யூனிஸ்ட் கட்சி என்ற அரசியல் வடிவம்.

... இது ஒரு சிறு அறிமுகம். இவ்வளவு மகத்தான கம்யூனிசம் ரசியாவில் தோற்றது ஏன்? தியானென்மென் தாக்குதல் ஏன்? இந்தியாவில் மார்க்சியக் கட்சிகள் தங்கள் சொந்தக் காலில் நிற்காமல் முதலாளித்துவக் கட்சிகளைச் சார்ந்திருப்பது ஏன்? அடுத்த ஓய்வில் தொடர்வேன்.

1 comment:

vimalavidya said...

Very simply way of explaining "Communism"--Good start>>Spare time to continue and write about the present day contemporary issues also.