Monday, 2 August 2010

முகத்திரை விலக்க ஒரு சட்டம்: விடுதலையா அத்துமீறலா?


ந்த இளம் பெண் கண்ணாடி முன் வந்து நிற்கிறாள். பார்த்துப் பார்த்துக் கூந்தலை வாரி நேர்த்தியாகச் சடை பின்னுகிறாள். தன் முகத்தை ஒரு ஓவியத்திரையாக்கி, ஒளிரச் செய்யும் ஒப்பணைத் தூள் பூசிக்கொள்கிறாள். புருவம் தீட்டிக்கொள்கிறாள். இமைகளுக்கு மை தடவித் தன் கண்களைப் பளிச்சென எவரும் காணத்தக்கதாய் ஆக்குகிறாள். அலமாரியிலிருந்து அழகான உடை ஒன்றை எடுத்து அணிகிறாள். அதன் கசங்கல்களை நேர்கிறாள். தேவதை என வர்ணிக்கத் தக்க வடிவில் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு புறப்படுகிறாள். புறப்படுவதற்கு முன்... கொடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் இன்னொரு கருப்பு அங்கியை எடுத்து மாட்டிக்கொள்கிறாள். அவளது தலை முதல் பாதம் வரையில் மூடுகிற அந்த அங்கியை மாட்டிக்கொண்டபின் அதன் நெற்றிப்பகுதியில் மடிந்திருக்கும் முகத்திரையை இழுத்துவிடுகிறாள். யாரும் அவளது தலைமுடியைக் கூடப் பார்க்க முடியாது என்பதை உறுதிப்படுத்திய பின் வாசல் படியில் கால்வைக்கிறாள்...

இதற்காகத்தானா இவ்வளவு நேர அலங்காரமும் என்ற சிந்தனையையும், அவளது சொந்த விருப்பங்கள் அந்தக் கருப்பு அங்கிக்குள் புதையுண்டுபோவது பற்றிய வேதனையையும் ஏற்படுத்துகிற இந்தக் காட்சி ஒரு குறும்படத்தில் வருகிறது (படத்தின் பெயர்: ‘மறைபொருள்’, இயக்குநர்: பொன் சுதா). நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த இந்தக் குறும்படத்தைப் பற்றிய நினைவு இப்போது எழுந்ததற்குக் காரணம் ஒரு செய்தி.

பிரான்ஸ் நாடாளுமன்றம் இந்த ஜூலை மாதத்தில் ஒரு சட்ட முன்வரைவை நிறைவேற்றியிருக்கிறது. 335 பேர் அதனை ஆதரித்தும், ஒரே ஒருவர் எதிர்த்தும் வாக்களித்திருக்கிறார்கள். வரும் செப்டம்பரில் பிரான்ஸ் நாடாளுமன்ற மேலவை இந்த சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும். அதன் பின் அது அதிகாரப்பூர்வமான சட்டமாகிவிடும். பொது இடங்களில் எந்தவொரு பெண்ணும் தனது உடலை முற்றிலுமாக மறைக்கிற பர்தா உள்பட, முகத்தை மறைக்கும் எந்தவொரு திரையையும் அணிந்துகொள்வதற்குத் தடை விதிக்கும் சட்டம் அது. தடையை மீறுவோருக்கு 150 யூரோ ( ரூ. 9,120 ரூபாய்) தண்டம் விதிக்கப்படும்! குடியுரிமை பற்றிய பயிற்சி முகாமுக்கும் அவர் அனுப்பிவைக்கப்படுவார். பர்தா அல்லது முகத்திரை அணியக் கட்டாயப் படுத்துவோருக்கு 15,000 யூரோ அபராதம் (ரூ. 9,12,000) அல்லது ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

குறிப்பாக இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த பெண்கள்தான் பர்தா அணிகிறார்கள் என்பதால், இந்தச் சட்டம் அவர்களது நம்பிக்கையில் குறுக்கிடுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமல்லாமல், மதப் பாகுபாடற்ற மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. உலகப் பொதுமன்னிப்பு அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 82 விழுக்காட்டினர் இந்தத் தடைச் சட்டத்தை வரவேற்பதாகவும், 17 விழுக்காட்டினர் இது ஏற்கத்தக்கதல்ல எனக் கருத்துத் தெரிவித்திருப்பதாகவும் பியூ குளோபல் ஆட்டிடியூட்ஸ் பிராஜக்ட் என்ற அமைப்பு தெரிவிக்கிறது. பர்தா அணிவதை ஒரு மதநம்பிக்கை சார்ந்த நடைமுறையாகக் கடைப்பிடிக்கும் இஸ்லாமிய மக்களிடையே ஆய்வு நடத்தப்பட்டதா, அவர்களில் எத்தனை விழுக்காட்டினர் இதை ஆதரிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை.
பிரான்ஸ் நாட்டு இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் அங்கேயே தலைமுறை தலைமுறையாக வாழ்கிறவர்கள். மேற்கத்தியப் பண்பாட்டுடன் இணைந்தே வாழ்ந்துவந்திருப்பதால் பிரெஞ்சு இஸ்லாமியப் பெண்களில் பலர் இந்தச் சட்டத்தை உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள் என்று அங்குள்ள என் நண்பரொருவர் கூறினார். இதை எதிர்க்கிற இஸ்லாமியர்களில் ஆண்கள்தான் மிகுதியாக இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரெஞ்சு அரசாங்கம் என்ன கூறுகிறது ? பர்தா, முகத்திரை அணிதல் நாட்டின் சம உரிமை விதிகளுக்கு முரணானதாக இருக்கிறது என்று கூறுகிறது. “சமுதாய வாழ்க்கையை அனுமதிக்கிற, தனிமனித கவுரத்தையும் பாலின சமத்துவத்தையும் உறுதிப்படுத்துகிற சட்ட விதிகளுக்கு இந்த (பர்தா/முகத்திரை) வழக்கம் ஊறு விளைவிக்கிறது; இதனை ஒருவர் தானாகவே முன்வந்து கடைப்பிடிக்கிறார் என்றாலும் கூட பொது இடங்களில் இது சகித்துக்கொள்ளக்கூடியதல்ல,
” என்பது அந்நாட்டு அரசின் வாதம். மேலவையிலும் நிறைவேறி சட்டமாக அறிவிக்கப்படுமானால், ஐரோப்பாவிலேயே இப்படியொரு தடையை முதலில் கொண்டுவந்த நாடாக பிரான்ஸ் இருக்கும். இது எப்படிப்பட்ட தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கவனித்து பின்னர் தங்கள் நாடுகளிலும் இதே போன்ற தடையாணை கொண்டுவருவது குறித்து ஆலோசிக்க இதர மேற்கத்திய அரசுகள் திட்டமிட்டுள்ளனவாம்.

பிரான்ஸ் அரசின் இந்த நடவடிக்கையை எப்படி எடுத்துக்கொள்வது? மத வேலியிலிருந்து விடுதலையளிக்கும் புரட்சிகரமான முயற்சியா, அல்லது சொந்த நம்பிக்கைகளில் தலையிடும் அத்துமீறலா?

பெண்கள் முகத்திரை அல்லது முழு உடலையும் மறைக்கும் அங்கி அணிவது இஸ்லாமியர்களிடையே மட்டுமே உள்ள நடைமுறை அல்ல. இந்தியாவில் மார்வாடிகள் உள்பட பல சமூகங்களில் சேலை முந்தானையையே தலை வரை இழுத்து மூடி முகத்தை மறைத்துக் கொள்கிற பழக்கம் இருக்கிறது.
தமிழகத்திலும், பல சமூகங்களில் இந்தப் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக வேற்று ஆடவர்கள் வீட்டுக்கு வந்தால் பெண்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டாக வேண்டும். கிறிஸ்துவத்திலும் பெண் துறவிகள் தலையில் பின்பக்கமாக ஒரு துணியைத் தொங்கவிட்டுக்கொள்கிறார்கள்
. அவர்கள் முகத்தை மறைப்பதில்லை. ஆனால் உடலை மறைக்கும் நீண்ட அங்கியை அணிகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பெண்களின் ஆடைச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துடையவவன். ‘பெண்ணே நீ‘ ஏட்டிற்கு நான் எழுதிய முதல் கட்டுரையே பெண்ணின் ஆடை உரிமை பற்றியதுதான். பண்பாட்டுப் பெருமையாகப் பேசப்படும் சேலையை விட, தன்னிடம் வம்பு செய்கிறவனைக் காலால் ஓங்கி மிதிக்கவும், நிறுத்தத்தில் நிற்காமல் ஓடும் பேருந்துகளை ஓடிப்பிடிக்கவும் எந்த உடைகள் வசதியாக இருக்கின்றனவோ அவைதாம் பெண்களுக்கு ஏற்ற உடைகள் என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

எப்படி வந்தது இந்த பர்தா/முகத்திரைப் பழக்கம்? இஸ்லாம் சமயம் தழைத்து வளர்ந்த அரபு நாடுகள் பாலைவனப் பகுதிகளில் அமைந்திருப்பவை. அங்கே வீசும் காற்று தன்னோடு மணலையும் வாரிக்கொண்டு வருவது இயற்கை. அந்த மணல் காற்றிலிருந்து உடலையும் முகத்தையும் பாதுகாப்பதே நீண்ட அங்கி/முகத்திரையின் ஆதி நோக்கம். ஆகவேதான் ஆண்களும் நீண்ட அங்கி அணிகிறார்கள், முகத்தை மூடிக்கொள்கிறார்கள். இன்று இருசக்கர வாகனம் ஓட்டுகிற பல பெண்கள் வேகக்காற்றிலிருந்தும் தூசுகளிலிருந்தும் ஒரு தற்காப்பாகத் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்வது போன்றதே இது.

இப்படி, வாழ்க்கைச் சூழலையொட்டி ஒரு தேவையாக ஏற்பட்ட உடைப்பழக்கம், பின்னர் சமய அடையாளமாக்கப்பட்டு, ஒரு கட்டுப்பாடாகவே மாற்றப்பட்டது. அரபு நாடுகளிலிருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு வணிகத் தொடர்புக்காகவும் அரசியல் பின்னணியோடும் புலம்பெயர்ந்து குடியேறிய அராபியர்கள் இந்த உடைப் பழக்கத்தையும் எடுத்து வந்தார்கள். புதிய நாட்டில் தங்கள் சமய அடையாளத்தைப் பாதுகாக்கிற உணர்வோடு தங்களது தனி அடையாளங்களைத் தொடர்ந்து பின்பற்றினார்கள். மதம் மாறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினார்கள்.

அரசியல் மோதல்கள், சமயச் சண்டைகள் என்று வந்தபோது, வன்முறைகளை நிகழ்த்துவோர் ஆண்களாகவே இருந்து வந்துள்ள பின்னணியில், ஒரு அரசியல் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் எதிர்த்தரப்பு ஆண்களைப் பழிவாங்க அந்தத் தரப்பின் பெண்களைக் கடத்துவதும், வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவதும் எப்போதும் நிகழ்ந்து வந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் ஆண்களுக்கிடையே தகராறு ஏற்படுகிறபோது கூட பழிவாங்கும் உணர்ச்சியோடு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் தொடுக்கப்படுகிறது. பெண்கள் தங்கள் முகத்தை மூடிக்கொள்ளத் தொடங்கியதன் பின்னணியில், எதிரிக்கூட்டத்தின் ஆண்களிடமிருந்து தப்பிக்கிற நோக்கமும் இருந்தது. இதுவே ஒரு பண்பாடாகவும் பதிந்துபோனது.

பண்பாடாகவும் சமயச் சடங்காகவும் மாறிவிட்ட பின்னணியில், பின்னர் இந்தப் பழக்கம் பெண்கள் மீது மட்டும் வலிந்து ஏற்றப்பட்ட ஒன்றாகியது. தன் மனைவியை மற்ற ஆண்கள் பார்க்கக்கூடாது என்ற ஆணாதிக்க வக்கிரம் மேலோங்கியது. அடங்கி ஒடுங்கி இருப்பதே அழகு என பெண்ணுக்கான லட்சண வரையறுப்பு இப்படி முகத்தை மூடிக்கொள்வதும், வேற்று ஆடவர் முன்பாக இழுத்துப்போர்த்திக்கொள்வது
ம்மாக இறுக்கமானது. இந்தப் பரம்பரைப் பண்பாட்டுத் திணிப்பில் ஒவ்வொரு புதிய தலைமுறைப் பெண்ணின் சொந்த விருப்பம், உடை ரசனை போன்ற நுட்பமான உணர்வுகள் ஒடுக்கப்பட்டுகின்றன. அதை மீறி, முக்காட்டை விலக்கி சற்றே எட்டிப்பார்க்கிற பெண் ஒழுக்கம் கெட்டவளாகச் சித்தரிக்கப்பட்டு, அந்த மீறல் துணிவு மற்ற பெண்களுக்கும் பரவிடாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது. இப்படிப்பட்ட முழு மூடல் அங்கிகளைப் பெண்கள் ‘அணிகிறார்கள்’ என்று கூட சொல்லக்கூடாது, அவர்கள் அவற்றை ‘மாட்டிக்கொள்கிறார்கள்’ என்றே சொல்ல வேண்டும்.

ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களது செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளில், பெண்ணின் உடைச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது இந்த நூற்றாண்டிலும் தொடர்வது நியாயம்தானா என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், இதுதான் பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பதாக விளக்கம் அளித்திருக்கிறார்கள். சிலர், பெண் இப்படி உடையணியாவிட்டால் ஆணின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்படும், அது தவறு செய்யத் தூண்டும் என்று கூடுதல் விளக்கம் அளித்திருக்கிறார்கள். அப்படியானால், ஆண் தன் முகத்தையும் கழுத்தையும் கைகளையும் வெளிப்படுத்துகிற ஆடைகளை அணிந்துகொள்கிறானே, அதனால் பெண்ணின் பாலியல் உணர்ச்சிகள் தூண்டப்படாதா என்று கேட்டபோது பதில் சொல்லாமல் மௌனமாகிவிடுவார்கள். பொத்திப் பொத்தி வைப்பதால்தானே விரல் நுனியைக் கண்டால் கூட கிளர்ச்சி ஏற்படுகிறது, தொடக்கத்திலிருந்தே தேவைக்கேற்ற ஆடையணிந்தால் போதும் என்றிருந்தால், அப்படிப்பட்ட கிளர்ச்சிகள் ஏற்படாதல்லவா என்று கேட்டிருக்கிறேன். அதற்கும் மௌனமே பதில். அந்த மௌனத்தில் பொதிந்திருப்பது பெண்ணின் உணர்வுகளை அடக்குவது பற்றிய உறுத்தலல்ல, இப்படிப்பட்ட கேள்விகளின் மீதான கோபம்தான்.

உடல் முழுக்க மூடுகிற கருப்பு அங்கியின் மேல், அந்தக் கருப்பு வண்ண நூலிலேயே அழகிய பின்னல் வேலைப்பாடுகளைப் பெண்கள் செய்துகொள்கிறார்கள்; அல்லது அழகிய பின்னல் வேலைப்பாடுகளோடு கூடிய அங்கியாகப் பார்த்து வாங்கிக்கொள்கிறார்கள். இந்தப் பண்பாட்டுத் திரையைக் கிழித்துக்கொண்டு அழகுணர்ச்சியோடும் ரசனையோடும் வாழவேண்டும் என்ற தாகத்தின் வெளிப்பாடாகவே இதனை நான் பார்க்கிறேன்.

பிரான்ஸ் அரசின் சட்டம், முதலில் குறிப்பிட்ட குறும்பட நாயகி போன்றோரின் ஏக்கத்துக்கு ஒரு வடிகாலாகும்தான். அதே வேளையில், அந்தச் சட்டத்தை அத்தகையோரின் ஏக்கம் தவிர்க்க வந்த அருட்கொடையாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியவில்லை. உடலங்கியும் முகத்திரையும் அணிகிற பழக்கம் பல்வேறு பிரிவினரிடையயேயும் இருப்பதால், இதை ஒரு மதச்சார்பற்ற சட்டம் என்பதாக அந்நாட்டு அரசு சொல்லக்கூடும்.

உலக வளத்தையெல்லாம் ஆக்கிரமிக்கும் நோக்கத்துடன் காய்களை நகர்த்தும் அமெரிக்க அரசு, உலகத்தின் பொது எதிரி பயங்கரவாதம்தான் என்று அறிவித்து, அதை வீழ்த்தப் புறப்பட்டதாகக் கூறி, பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் அடையாளப்படுத்திக்காட்டி, இஸ்லாமிய நாடுகள் மீது பல்வேறு நெருக்கடித் தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. இராக் நாட்டில் அரங்கேற்றப்பட்ட அந்த அட்டூழியத்தால் ஏற்பட்ட ரத்தக் காயங்கள் இன்னும் அந்த நாட்டில் ஆறவில்லை. பொருளாதார ஆதிக்கத்துக்கான சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் பண்பாட்டுத்தளத்திலும் கையாளப்படுகிறது. மேற்குலகில் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற நாடுகளிலும் கூட, பன்னாட்டு விமான நிலையங்களில் வந்து இறங்குவோரின் பெயர்கள் இஸ்லாமிய அடையாளத்துடன் இருந்தால் சந்தேகப் பார்வை கூர்மைப்படுத்தப்பட்டு சோதனைகள் இறுக்கமாக்கப்படுகின்றன. இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அமெரிக்கா சென்றபோது அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டதே!
முகத்தை மூடிக்கொண்டு பயங்கரவாதிகள் ஊடுறுவுவார்கள் என்று எண்ணவைத்து, பயங்கரவாத அச்சமூட்டும் அமெரிக்க வல்லாமை அரசியல் இதிலே இருப்பதைக் காணத் தவறக்கூடாது.

பெட்ரோலிய எண்ணைக் கிணறுகளையே கப்பமாகச் செலுத்த முன்வரும் அரபு ஷேக்குகள் இனி முழு அங்கியோடும் தலைத் துணியோடும் வரக்கூடாது என்று பிரான்ஸ் அரசு ஆணையிடுமா? முதலாளித்துவ அரசுகள் எடுக்கிற ஒவ்வொரு சமூக நடவடிக்கையிலும் கூட இப்படிப்பட்ட பொருளாதார ஆதிக்க அரசியல் மறைபொருளாக இருக்கிறது. அதே வேளையில், சமத்துவச் சமுதாயம் உருவாகிற வரையில், முதலாளித்துவ அரசுகள் உள்நோக்கத்துடன் கொண்டுவருகிற இதுபோன்ற நடவடிக்கைகளை வேண்டாமெனத் தள்ளிவிட முடியுமா? மதங்கள் விரித்த பண்பாட்டு வலையிலிருந்து பெண்கள் தப்பிச் சிறகடிப்பதற்கு இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏதோவொரு வகையில் உதவுகின்றன என்பதும் உண்மையே.

ஆனால், முற்போக்கான மாற்றங்களுக்கான முயற்சிகள் அந்தந்த சமூகங்களுக்கு உள்ளேயும் நடைபெற்றாக வேண்டும். சில இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள், தங்கள் சமூகத்திற்குள்ளேயே பழைமைவாதக் கருத்துக்களுக்கு எதிரான சமூக சீர்திருத்த இயக்கங்களை நடத்த வேண்டியிருப்பது உண்மைதான் என்றும், அதற்கான முயற்சிகள் ஆங்காங்கே நடந்துவருகின்றன என்றும் என்னிடம் கூறியிருக்கிறார்கள்.

இஸ்லாமியத்திற்குள் மட்டுமல்லாமல், எந்தெந்த சமூகத்திலெல்லாம் பெண்ணை முன்னால் செல்லவிடாமல் இழுக்கும் கயிறுகள் கட்டப்பட்டிருக்கின்றனவோ அந்தக் கயிறுகள் அறுபட வேண்டும். கயிற்றை அறுக்க வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் மதப் பகைமையற்ற சமத்துவப் பகுத்தறிவுக் கரங்கள் இணையட்டும்.

(‘பெண்ணே நீ’ ஆகஸ்ட் இதழில் சற்று சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ள எனது கட்டுரையின் முழு ஆக்கம் இது.)

1 comment:

vimalavidya said...

Burka/burda certainly deny the freedom and freshness to women..The French govt may try to implement it in a paced manner..It is a sensitive matter..The religious heads will react immediately before the women..good debate your article has started..