Monday, 7 February 2011

பள்ளிக் கட்டணம், சமச்சீர் கல்வி: அரசு பெருமைப்படலாமா?


திமுக அரசு தனது சாதனை என விளம்பரப்படுத்தத் தக்க, ஆனால் அவ்வாறு பெருமைப் பட்டுக்கொள்ளும் தகுதி அரசுக்கு இல்லை என்று சொல்லத்தக்க இரண்டு சட்டங்கள் உள்ளன. ஒன்று: தனியார் பள்ளிகளின் தாறுமாறான கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் முறைப்படுத்துதல்) சட்டம் - 2009; இரண்டு: தமிழ்நாடு சமச்சீர் கல்விச் சட்டம். நல்ல முன்னுதாரணங்களாக அமைய வேண்டிய இந்த இரண்டு சட்டங்களிலும் உள்ள ஓட்டைகளும், நடைமுறைப்படுத்தப்படுகிற முறைகளும் அரசின் நோக்கத்தில் ஐயப்பாட்டை ஏற்படுத்துகின்றன. அரசுக்கு எளிய, நடுத்தரக்குடும்பங்களின் குழந்தைகளுக்கு கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் பள்ளிக் கல்வி கிடைக்கச் செய்வதிலும், ஏற்றத்தாழ்வற்ற கல்வி வழங்குவதிலும் உண்மையான அக்கறை இருக்கிறதா?

நீண்ட நெடும் போராட்டதிற்கும், நீதிமன்ற ஆணைக்கும் பிறகே கட்டணம் முறைப்படுத்துதல் சட்டத்தை இந்த அரசு கொண்டுவந்தது. தங்களது சொற்ப வருமானத்தில் கணிசமான பங்கினைத் தனியார் பள்ளி நிர்வாகங்களின் கட்டணக் கொள்ளைக்கு இரையாக்கிவிட்டு, கடன் சுமையோடு வாழ்க்கையைத் தள்ளுகிற நிலைக்குத் தள்ளப்பட்ட எண்ணற்ற குடும்பங்கள், இந்தச் சட்டத்தால் தங்களுடைய அவலம் மாறும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், பல நிர்வாகங்கள் சட்டத்தை மீறுகிற நிலையில், நடப்பு கல்வியாண்டு முழுக்க தமிழக பள்ளிகளின் முன்பாகப் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதைத்தான் காண முடிந்தது. சட்டம் மீறப்படுவதைத் தடுக்கவேண்டிய அரசோ, மக்களை ஒரு புறம் கொந்தளிக்கவிட்டுவிட்டு, இன்னொரு பக்கம் அந்தத் தனியார் நிர்வாகங்களுக்கு வலித்துவிடக்கூடாதே என்ற கரிசனத்தோடு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. நடைமுறையில் சட்டம் பலனளிக்கவில்லை என்பதற்கான அடிப்படைகளாக பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு இரண்டையும் சேர்ந்தவர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறார்கள்:

நீதிபதி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழுவில் முழுக்க முழுக்க பள்ளிக்கல்வி இயக்குனர்களும் உயரலுவலர்களும் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எளிய பெற்றோரின் உண்மை வலி அறியாத இவர்களோடு கல்வியாளர்களும், பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளும் இடம்பெறச் செய்திருந்தால் சட்டத்தில் உள்ள, நிர்வாகங்கள் நழுவுவதற்கான ஓட்டைகளை அடைத்திருகக முடியும். ஆனால், அந்த ஓட்டைகள் அடைபட்டுவிடக்கூடாதேயென்று விழிப்புடன் இந்தப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.

அடுத்து, குறிப்பிட்ட ஒரு நிர்வாகம் சட்டத்தை மீறிவிட்டது, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கிறது என்று பெற்றோர் எவரேனும் எழுத்துப்பூர்வமாகப் புகார் செய்தால் மட்டுமே காவல்துறை அதைப் பதிவு செய்யும் என்று சட்டம் கூறுகிறது. பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு பாதிப்பு வந்துவிடுமே என்ற அச்சத்தின் காரணமாக அவ்வாறு காவல்நிலையம் சென்று புகார் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது வெளிப்படை. சட்டம் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று கண்காணிப்பதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை.

சென்னையில் கடந்த நவம்பரில் ஒரு பொதுவிசாரணையை நடத்திய தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா, சட்டத்தின் செயலாக்கத்தைக் கண்காணித்து, மீறல் குறித்து காவல்நிலையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே புகார் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதை அரசின் ஆணையாக்கவோ, சட்டத்தில் இணைக்கவோ அரசு தயாராக இல்லை. உண்மையில், மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க சட்டத்தில் ஒரு பிரிவு (11) ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில், அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆவணங்களைக் கைப்பற்றலாம் என்கிற அளவுக்கு இருந்தது. ஆனால், தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற எண்ணத்துடன், அந்தப் பிரிவை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. எனினும், மாவட்டக்குழுக்கள் அறிவிப்புக் கடிதம் அனுப்பி ஆவணங்களைக் கேட்டுப்பெறலாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. மாவட்டக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லை என்பதற்கு இதுவே சான்று. ஆனாலும், அக்குழுக்களை அமைக்க அரசு ஏனோ தயங்குகிறது.

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு, அந்த மையங்களில் புகார் பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு, புகார்கள் வரிசை எண்ணிட்டுப் பதிவு செய்யப்பட வேண்டும். அந்த மையங்கள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் தங்களது நடவடிக்கை குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசு அந்த வலியுறுத்தலைக் கண்டுகொள்ள மறுக்கிறது.

மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு உட்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று கூறுகின்றன. ஆனால், சட்டத்தின் 7 வது பிரிவும் அதன் (3-1,2,3) உட்பிரிவுகளும், இந்தச் சட்டத்தை மீறுகிற சிபிஎஸ்இ பள்ளிகளின் அங்கீகாரத்தையும் மாநில அரசு ரத்துச் செய்யலாம் என்று தெளிவாகக் கூறுகிறது. மாநில அரசுகள் இப்பள்ளிகளின் கட்டணங்களைக் கட்டுப்படுத்தலாம் என்று அந்த மத்திய வாரியமே கூட கூறியுள்ளது. இப்படி தெளிவாக இருந்தாலும், தமிழக அரசு தனது ஆணையை சென்னையில் உள்ள மத்தியப் பள்ளி வாரிய இயக்குநர் மூலமாக அந்தப் பள்ளிகளின் முதல்வர்களுக்கு அனுப்ப முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

சட்டத்தை மீறுகிற தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு சிறைத்தண்டனை, அங்கீகார ரத்து என்றெல்லாம் சட்டத்தில் பூச்சாண்டி காட்டப்பட்டுள்ளது. நிர்வாகிகள், தங்களது கல்வி நிலையம் கல்லூரியாக மாறிவிட்டது என்று அறிவித்து எளிதில் தப்பித்துவிடுவார்கள். அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடியது, சட்டத்தை மீறினால் அரசாங்கமே அந்தப் பள்ளிகளை ஏற்று நடத்தும் என்று சட்டத்தில் சேர்க்கப்படுவதுதான். அதற்கு ஏனோ அரசு மனமில்லை.

மிக முக்கியமாக, இந்த ஆண்டு முழுக்க கொந்தளிப்புகளாகவே கடந்ததற்குக் காரணம், வெளிப்படைத்தன்மை இல்லாததுதான். ரகசியமாக பள்ளி நிர்வாகிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டண விவரங்களை அளித்த பள்ளிக்கல்வி இயக்ககம், அவற்றை பகிரங்கமாக அறிவிக்கவில்லை, மக்களுக்கு எந்தப் பள்ளிக்கு என்ன கட்டணம் என்பதே தெரியவில்லை.

கட்டண நிர்ணயச் சட்டத்தின் கதை இதுவென்றால், சமச்சீர் கல்விச் சட்டத்தின் நோக்கமும் முழுமையாக நிறைவேறவில்லை. அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமான, சீரான கல்வி என்ற நோக்கம் கொச்சைப்படுத்தப்பட்டதாக, இந்தியாவில் வேறு எங்குமே இல்லாததாக தமிழகத்தில் மட்டும் இருக்கிற நான்குவிதமான பள்ளிக் கல்வி இயக்ககங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் மாற்றப்படவில்லை. பொது இயக்ககம் என்று அறிவிக்கப்பட்ட பின் மெட்ரிக் பள்ளி இயக்ககம் என இனியும் தொடரவேண்டிய அவசியம் என்ன? அனைத்துப் பள்ளிகளுக்குமான பொதுப் பாடத்திட்டம் வந்தபின் மெட்ரிக் பள்ளி என்றே செயல்பட அனுமதிக்கப்படுவது எப்படி? இதற்கெல்லாம் அரசுத்தரப்பிலிருந்து வருகிற பதில்: மவுனம்.

பாட நூல்களை தனியார் பதிப்பகங்கள் வெளியிடலாம் என அனுமதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எதிர்த்து வலுவாக வாதாட அரசு தயாராக இல்லை.

இப்படி அடுக்கடுக்கான அரசுத்தரப்பு அலட்சியங்கள் இவ்விரு சட்டங்களின் அடிப்படை நோக்கங்களையே அடிபடச் செய்துகொண்டிருக்கின்றன என்று கல்வியாளர்களும், சமச்சீர் கல்விக்காகப் போராடுகிறவர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள். வெறும் விமர்சனத்தோடு அவர்கள் நின்றுவிடவில்லை. சட்டங்கள் உயிர்ப்புடன் இயங்க வேண்டுமானால் அதற்குச் செய்ய வேண்டியது என்ன என்ற சரியான ஆலோசனைகளையும் முன்வைக்கிறார்கள்:

1) கட்டண நிர்ணயக் குழுவில் கல்வியாளர்கள், பெற்றோர் சங்கப் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும்;

2) விதிகளை மீறும் நிர்வாகங்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வேண்டும்;

3) மாவட்டக் குழுக்கள் அமைக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்;

4) மாநில புகார் மையமும், மாவட்ட புகார் மையங்களும் அமைக்கப்பட வேண்டும்;

5) மத்தியப் பள்ளிகள் சட்டப்பூர்வ கட்டணங்களை செயல்படுத்துவதற்கான ஆணையை மத்தியப் பள்ளி இயக்குநர் மூலம் அனுப்பச் செய்ய வேண்டும்:

6) சட்டத்தை மதிக்காத பள்ளிகளை அரசாங்கமே ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பு சட்டத்தில் இடம்பெற வேண்டும்;

7) நிர்ணயிக்கப்படும் கட்டணங்கள் என்ன என்பது இனியேனும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, பெற்றோர் சங்கங்களின் மூலம் பெற்றோருக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்;

8) நிர்வாகம் கட்டாயப்படுத்துகிற கட்டணங்களைச் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் என்றோ, தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாகள் என்றோ மிரட்ட முடியாது என்று அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

இத்தனை வேண்டும்கள் தமிழக மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அமைப்புகளாலும், ஆர்வலர்களாலும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றிற்கு அரசு செவி சாய்க்க வேண்டும். அப்போதுதான், அரசின் அக்கறை யாருடைய முன்னேற்றத்தில் என்பது தெளிவாகும்.

  • (‘தீக்கதிர்’ 7.2.2011 இதழில் வெளியாகியுள்ள எனது கட்டுரை)

No comments: