Sunday, 12 June 2011

உசேனின் தூரிகைகள் கேட்பது என்ன?

மொழியின் எழுத்துரு பிறப்பதற்கும் அடிப்படையாகத் தொன்மை மனிதர்கள் பாறைகளில் தொடங்கி வைத்த ஓவியக்கலை இன்றளவும், மொழியின் எல்லைகளுக்கு உட்படாத உணர்வுகளை வெளிப்படுத்த வல்லதாகத் திகழ்கிறது. அதனாலேயே எக்காலத்திலும் புதுமையைத் தக்கவைத்துக்கொள்கிறது. இத்தகைய தொன்மை, புதுமை இரண்டுக்கும் பாலம் அமைத்து தமக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட ஒப்பற்ற கலைஞர்தான் எம்.எப். உசேன்.

தமது இருபதாம் வயதுகளில் அன்றைய பம்பாய் நகரின் மலிவான விடுதிகளில் அரைப்பட்டினி முழுப்பட்டினியோடு தங்கி, பிழைப்புக்காக திரைப்பட விளம்பர ஓவியங்களை வரைந்துகொண்டிருந்தவர் மக்பூல் ஃபிதா உசேன். படைப்பாளிக்கே உரிய திமிறலோடு அதிலிருந்து உதறி விடுபட்டதால், புவிக்கோளெங்கும் கலைக் காதலர்களின் அஞ்சலியைப் பெறுகிற நிலைக்கு உயர்ந்தார்.

மராத்தி மாநிலம் பந்தாபூர் நகரில், எளிய நிலையில் வாழ்ந்த சுலைமானி போரா குடும்பத்தில் பிறந்தவரான உசேன், குழந்தைப் பருவத்திலிருந்தே அந்தக் கோவில் நகரின் ஓவியங்களில் மனதைப் பறிகொடுத்தவராக, தானும் அதே போல் தீட்டிப் பார்த்து வளர்ந்தார். கடிகாரம் பழுது நீக்கும் தொழில் செய்தவரான எளிய தந்தை, தன் மகன் தையல் கடையில் துணிகளை வெட்டிக்கொடுப்பவராக வரக்கூடும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆயினும் ஒரு குடும்ப நண்பர், உசேனின் உள்ளாற்றலைப் புரிந்துகொண்டவராக, அவரை ஒரு ஓவியப் பள்ளியில் சேர்த்துவிடுமாறு பரிந்துரைத்தார். உள்ளூர் ஓவியப் போட்டி ஒன்றில் உசேனுக்குக் கிடைத்த தங்கப் பதக்கம் அந்த நண்பரின் பரிந்துரைக்கு வலுச் சேர்த்தது. மும்பை ஜே.ஜே. ஓவியப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் 17 வயது உசேன்.

குடும்பத்தின் வறுமை அவரை ஐந்தாண்டுகளுக்கு மேல் அந்தப் பள்ளியில் பயில விடவில்லை. தனது நகரத்துக்கே திரும்பிய அவர், திரைப்பட விளம்பர ஓவியங்களில் ஈடுபட்டார். அது ஒரு வகையில், வாழ்க்கையோடு இணைந்த சமுதாயப் பள்ளியில் நேரடிப் பயிற்சி பெறுகிற வாய்ப்பை உசேனுக்கு வழங்கியது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அனுபவமாய் உள்வாங்கிக்கொண்ட புரிதல், அவரது சொந்தப் படைப்புகளிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. வறுமையோடு போராடிய அந்த வாழ்க்கைதான், பிற்காலத்தில், ஓவியச் சந்தையில் பல லட்சம் ரூபாய் விலை பெறக்கூடிய அரிய படைப்புகளைக் கூட, வறியவர்கள் கண்ணீர் துடைத்தலோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு அன்பளிப்பாக வழங்க வைத்தது போலும். சக மனிதர்கள் மீதான அவரது அக்கறை, முற்போக்கு ஓவியர்கள் சங்கத்தில் இணைந்து செயலாற்ற வைத்தது.

ஒரு தச்சுப் பட்டறையில் பணிக்குச் சேர்ந்தார் உசேன். இருக்கைகளும் மேசைகளும் விதவிதமாக அங்கே உருவெடுத்த சூழல் அந்த வளரும் ஓவியன் உள்ளத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கத்தோடு கூடிய ஓவியங்களாக உருவாக்குவதில் ஈடுபட்டார். 1947ல் அவர் நடத்திய ஒரு ஓவியக் கண்காட்சிக்கு விருது கிடைத்தது. அது அவரை அடுத்தடுத்த தளங்களில் அடியெடுத்துவைக்கத் தூண்டுதலாக அமைந்தது.

திரைப்படங்களோடு அவர் கொண்ட ஈடுபாடு தொடக்ககால விளம்பர ஓவியங்களோடு நின்றுவிடவில்லை. தனது ஒவ்வொரு ஓவியத்துக்கும் இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பணம் பெற்றவராக உச்சத்திற்குச் சென்ற அவர், அந்தப் பணத்தைக்கொண்டு இரண்டு திரைப்படங்களைத் தயாரித்தார். அவருக்குப் பெரும் பொருளிழப்பையே அந்தப் படங்கள் ஏற்படுத்திக்கொடுத்தன. குறிப்பாக தனது மனம் கவர்ந்த இந்தித் திரைப்படக் கலைஞர் மாதுரி தீட்சித் நாயகியாக நடிப்பதற்கென்றே அந்தப் படங்களை இயக்கினார் அவர். அவரது ஓவிய முனைப்பும், மனித உடல்களையே கலையாக்கங்களாகக் காணும் படைப்புக் கண்ணோட்டமும் இணைந்த ஒரு நேர்த்தி அந்தப் படங்களில் வெளிப்பட்டதாக திரை விமர்சகர்களின் பாராட்டை அந்தப் படங்கள் பெற்றன.

உள்ளது உள்ளபடி காட்டும் சித்தரிப்பு, இயல்பான பார்வையாளர்களை விட்டு வெகுதொலைவு விலகிநிற்கும் அருவ பாணி இரண்டுக்கும் அப்பாற்பட்ட ஒரு தனித்தன்மையைக் கொண்டிருந்த உசேனின் ஓவியங்களைப் பற்றி விவாதிப்பது ஒரு பெருமிதத்துக்குரிய செயலானது. அதே நேரத்தில், தன்னுடைய படைப்புகள் பற்றி அளவுக்கு மீறிய தத்துவ விளக்கங்கள் அளிக்கப்பட்டதை அவரே கிண்டல் செய்திருக்கிறார்.

பெரிய படைப்பாளிகளுக்கு எதிர்ப்பு இல்லாமல் போகுமா? உசேனுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சோகம் என்னவெனில், கலை விமர்சனம் என்ற களத்துக்கே தொடர்பில்லாமல் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

கண்காட்சிகளில் உசேன் வைத்திருந்த சில இந்தியப் பெண் தெய்வங்களின் சித்திரங்கள் ஆபாசமாக இருப்பதாகக கூறிய இந்துத்துவ வெறிக் கும்பல், அந்த ஓவியங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைக்கவில்லை. நேரடியாகக் கண்காட்சி அரங்குகளுக்குள் புகுந்து சூறைடியது. கிறுக்கல் வடிவிலான அந்த ஓவியங்களின் நோக்கம் வழிபாட்டு நம்பிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதல்ல, இந்திய ஓவிய மரபுப்படியான நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவதுதான் என்று, அந்தக் கும்பல்களைச் சேர்ந்தவர்களை விடவும் பல மடங்கு இந்து சமயப் பண்பாடுகள் பற்றிப் படித்தறிந்தவரான உசேன் விளக்கினார். இதே போல் பல ஓவியர்கள் சித்தரித்திருப்பதையும், கோவில்களில் கூட சிற்பங்கள் இருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். எதையுமே ஏற்காத அந்தக் கும்பல் எந்த இடத்தில் கண்காட்சி நடந்தாலும் அங்கே புகுந்து வன்முறைகளில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு அவர்கள் மூர்க்கமாக நடந்துகொண்டதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது: படைப்பாளியின் பெயர்.

உசேனுக்கு முற்போக்காளர்கள் ஆதரவுக் கரம் நீட்டினார்கள் என்றாலும், கொலை மிரட்டல் விடுக்கிற அளவுக்கு இந்துத்துவத் தலிபான்கள் வெறித் தீ மூட்டினர். அதை விசிறி விடுவதாக, உள்ளூர் நீதிமன்றம் அந்த முத்திரைப் படைப்பாளியின் வீட்டைப் பூட்டி முத்திரை பதிக்க ஆணையிட்டது. தன் குழந்தைகள் தன் கண்ணெதிரே சித்திரவதை செய்யப்படுவது போன்ற வேதனையுடன், தன் தாய் மண்ணிலேயே பாதுகாப்பற்றுப் போன துன்பத்துடன், எல்லாவற்றையும் விட தன் படைப்புகளுக்கு வேண்டுமென்றே தவறான உள்நோக்கம் கற்பிக்கப்பட்ட வலியுடன் 2006ல் இந்தியாவை விட்டு வெளியேறினார் உசேன். அவரை லண்டன் மாநகரம் வரவேற்றது.

2008ல் தில்லி உயர்நீதிமன்றம் அவர் மீதான அபத்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றமே அவருக்கு ஆதரவாகத் தலையிட்டது என்றாலும் அவரால் இங்கே திரும்பிவர இயலவில்லை. அவ்வாறு வரலாம் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் சூழல் இங்கே உருவாகவே இல்லை. மத்தியில் பாஜக அரசு வெளியேற்றப்பட்ட பின் வந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, அவரை இங்கே பாதுகாப்புடன் அழைத்துக்கொள்வதாகக் கூறியதேயன்றி, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எதையும் எடுக்கவே இல்லை. இன்றைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் உசேன் மீது வெறுப்பை உமிழும் கட்டுரைகள் பரப்பப்படுகின்றன. இந்தியாவில் ஆர்எஸ்எஸ் திட்டப்படி மதவாத அரசியல் மூச்சுடன் இருக்க வேண்டுமானால் இப்படிப்பட்ட பகைமை வளர்ப்பில் இறங்கியாக வேண்டிய கட்டாயம் அந்தக் கூடாரத்திற்கு இருக்கிறதே!

காலில் செருப்பணியாமலே உலகெங்கும் சுற்றி, தமது 95 வயதிலும் சுறுசுறுப்பாகத் தூரிகை சுழற்றிய அவரது விருப்பம் தன் தாயக மண்ணில் தலைசாய வேண்டும் என்பதுதான். அது நிறைவேறாத விருப்பமாகிப்போனது. மவுனமான மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அமைதியாக தம் வாழ்நாளை முடித்துக்கொண்டார் - என்றென்றும் வாழ்ந்திருக்கும் வல்லமையைத் தன் படைப்புகளுக்கு வழங்கியிருக்கும் நிறைவோடு.

உயர்ந்த மத நல்லிணக்கம், நுட்பமான பண்பாட்டு ஒடுக்குமுறை விமர்சனம், சுதந்திர வாழ்க்கை பற்றிய கனவு, குழந்தை போன்ற கலை ஆசை என அவரது எண்ணங்களை வெளிப்படுத்திய தூரிகைகள் கேட்கின்றன: இந்திய மண்ணில் உசேன்களுக்கு படைப்புச் சுதந்திரமும் பாதுகாப்பு உத்தரவாதமும் வேரூன்றுவது எப்போது?

(தீக்கதிர் 13.6.2011 இதழ் இலக்கியச் சோலை பக்கத்தில் இடம்பெற்றுள்ள எனது கட்டுரை