நேற்றைய இரவின் நடுப்புள்ளியாக 12 மணி முடி கிறது. இன்றைய நாளுக்கான முதல் நொடி தொடங்குகிறது. செல்லி தன் இசையொலியில் அழைக்க எடுத்தவுடன் ஒரு இளம் நண்பரின் குரல், புத்தாண்டு வாழ்த்து கூறுகிறது. இந்த நொடிக்காக விழித்துக் காத்திருந்ததாக மகிழ்ச்சி யுடன் கூறுகிறார் அவர். அடுத்தடுத்து சில அழைப்புகள் இப்படியே வர இளைஞர்களின் வாழ்த்தில், ஒரு புதிய ஆண்டின் தொடக்கத்தில் வயது குறைவது போன்றதொரு உற்சாகம் தொற்றுகிறது.
தெருவில், சாலையில் வாகனங்களில் வேக மாகச் செல்கிறவர்கள் எதிரே வருகிறவர்களுக் கெல்லாம் வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். வாழ்த் துப் பெற்றவர்கள் பதில் வாழ்த்துச் சொல்லும் போதே, வேகத்தைக் கட்டுப்படுத்திப் போவ தற்கு அறிவுரை சொல்கிறார்கள். நடந்து செல் கிறவர்கள் எதிரே வருபவர்களுக்குக் கை குலுக்க லோடு வாழ்த்துச் சொல்கிறார்கள். சில இடங் களில் சாக்லெட், கேக் ஆகியவையும் கிடைக் கின்றன. பொதுமக்கள் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிற கலை இரவு. சரியாக இந்த நேரத்தில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, மேடையி லிருந்தும் பார்வையாளர்களிடையேயிருந்தும் புத்தாண்டு வாழ்த்துகள் உரக்கப் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. வீடுகளில் குடும்பத்தா ரின் வாழ்த்துகளோடு விடிகிறது. இன்று முழுக்க ஒரு கடமை போல வாழ்த்துவது நடக்கிறது.
தொழில் நிமித்தம் அன்றாட ரயில் பயண வாழ்க்கை வாய்த்த நண்பர்கள், புத்தாண்டை யொட்டி ஒரே வண்டியின் ஒரே பெட்டியில் பய ணிப்பதும், வழியில் உள்ள நிலையங்களில் ஏறுகிறவர்கள் எங்களோடு இணைந்துகொள் வதும், ஆளுக்காள் பரிசுப்பொருள்களோடு கவிதை, உரை எனப் பரிமாறிக்கொள்வதுமாய் பய னுள்ள முறையில் அந்தப் பயணம் அமைகிறது. கடந்த ஆண்டைவிட மிகுந்த மகிழ்ச்சிகர நிகழ்வுகள் கூடி வரவேண்டும், துன்ப நிகழ்வு கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற விருப்பம் அந்த வாழ்த்துக்குள் இருக்கிறது. நல்லதே நடக்க வேண்டும் என்ற நாட்டமும், மனமுவந்து வாழ்த்துவதால் அப்படி நடக்கும் என்ற நம்பிக் கையும் அதில் பொதிந்துள்ளன. நம்பிக்கைப் படி நடக்குமோ நடக்காதோ, வாழ்த்தப்படுகிறவர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஒரு ஊக்குவிப் பாக அந்த வாழ்த்துகள் அமைவது உண்மை.
புத்தாண்டுக்காக வாங்கிய புதிய டயரியின் அட்டையைப் பிரியத்தோடு தடவிக்கொடுத்த படி இன்றைய அனுபவத்தையும் உணர்வையும் எழுதுகிறவர்கள் உண்டு. இந்த ஆண்டாவது முழுமையாக எல்லா நாட்களும் நாட்குறிப்பை எழுதுவேனாக, என்று ஒவ்வொரு ஜனவரி ஒன் றிலும் எழுதுவது என் வழக்கம்! இதைச் சொன்ன போது ஒரு நண்பர், பரவாயில்லை நீங்கள் இந்த அளவுக்காவது எழுதுறீங்க... நான் புதுசா வாங்கி வைக்கிறதோட சரி, என்றார்! பலருடைய கதையும் இப்படித்தான். ஆனால், புதிய டயரி வழங்கப்படுகிறது என்றால் அதை முண்டி யடித்துப் பெறுவதில் யாரும் பின்தங்குவ தில்லை!
தேவைகளையொட்டிப் புதிய ஆடைகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கி அணிய லாம்தான். ஆயினும் புத்தாண்டையொட்டி வாங்கி அணிவதில் இரட்டிப்புக் களிப்பு. அதுவே யாராவது அன்பளிப்பாய் வழங்கிய புத்தாடை என்றால் மும்மடங்கு களிப்பு!
அந்தக் களிப்பை அங்கீகரிக்க மறுத்து, இந்தக் கொண்டாட்டமெல்லாம் தேவைதானா, என்று கேட்கிற குரல்களும் ஒலிக்கின்றன. இது நம் புத்தாண்டு அல்ல. நம் புத்தாண்டு என்றால் அது சித்திரைதான். அதைக் கொண்டாடுவதுதான் நம் கலாச்சாரம், என்று இதிலே கலாச்சாரப் பகை மையைப் புகுத்துகிற குரல்கள் அவை.
பருவமாறுதல்கள் இயற்கையாக நடக்கின்றன. அதிலே இப்படி ஆண்டுக்கணக்குகள் வகுத்துக் கொண்டதெல்லாம் அந்தப் பகுதியின் மக்கள் வாழ்க்கை முறை சார்ந்து உருவானதுதான். ஆங் கிலப் புத்தாண்டும் அதற்கான கொண்டாட்டமும் எங்கும் பரவியிருப்பதன் பின்னணியில் கடந்த நூற்றாண்டுகளின் காலனியாதிக்கம், அவற்றின் அடிப்படையில் கட்டப்பட்ட சமூகப் பொருளாதாரம் போன்ற பல நிலைமைகள் இருந்திருக்கின்றன என்பது உண்மைதான். அவையெல்லாம் வரலா றாகிவிட்ட நிலையில், தற்போதைய காலண்டர் முறை வலுவாக நடப்பிற்கு வந்துவிட்ட சூழலில், மாதக் கணக்குகளும் ஊதியங்களும் இதன் அடிப் படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. நடை முறை வாழ்க்கையில் இதை ஏற்றுக்கொண்டு விட்ட பிறகு, புத்தாண்டுத் தொடக்கத்தை மட்டும் ஏற்க மாட்டேன் என்பதில், கலாச்சார அடையா ளத்தைப் பாதுகாக்கிற உணர்வுதான் வெளிப் படுகிறதா?
“நம்” புத்தாண்டு என்பதே ஒரு திணிப்பு வேலைதான், ஒரு வகை அடையாள அழிப்புதான் என்ற எதிர்ப்பு எழுந்துள்ளதை இவர்கள் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். அந்தந்த வட்டாரத்தின் விவசாயம் உள்ளிட்ட பின்னணிகளில் உருவாகி யிருந்த கொண்டாட்டங்கள், பின்னர் சமஸ்கிருத மயமாக்கலோடு இணைந்த கலாச்சார ஆதிக்கத் தில் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.
எடுத்துக்காட்டாக, தமிழ் மக்களின் புத்தாண்டு என்பது தை முதல் நாள்தான் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால், அரசியல் அதிகாரம், பண்பாட்டு ஒடுக்குமுறை இவற் றோடு சேர்ந்து சித்திரைதான் நம் ஆண்டின் முதல்நாள் என்றாக்கப்பட்டுவிட்டது.
ஆங்கிலப் புத்தாண்டு திணிக்கப்பட்ட ஒன்று என்றால், இது மட்டும் என்ன? நடுவில் இதைச் சரி செய்வதற்காக, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்பதை மீட்டமைக்கக் கடந்த ஆட்சியில் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தற்போதைய அரசு திருத்தி மறுபடி சித்திரையையே கொண்டாடச் சொல்லிவிட்டது.
வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருள்கள் விற் பனை உள்ளிட்ட வர்த்தக நோக்கங்களுக்காகவே ஆங்கிலப்புத்தாண்டு பற்றிய எதிர்பார்ப்புகள் கிளப்பப்படுகின்றன என்றொரு வாதம் வைக்கப் படுகிறது. இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பில் எதுதான் வர்த்தகமயமாகவில்லை? சித்திரை முதல்நாளுக்குக் கூட பெரிய வர்த்தக நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கின் றன. அட்சய திருதியை என்று புதிதாக ஒன்று நம் மக்களின் மீது புகுத்தப்பட்டு, அன்று ஒரு அரைப் பவுன் நகையாவது வாங்கியாக வேண்டும் என்ற மனநிலை ஏற்படுத்தப்படவில்லையா?
இப்படிப்பட்ட விவாதங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, உழைப்பாளிகள், மாணவர்கள், இளைஞர்கள், பக்கத்துவீட்டு - எதிர்வீட்டு அன் பர்கள் என ஹேப்பி நியூ இயர் வாழ்த்தி 2012ஐ வரவேற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இவர் களில் பலர் சம்பிரதாயப்படி சித்திரையையும் கொண்டாடுகிறவர்கள்தான்.
இவர்களது கொண்டாட்டங்களும் வாழ்த்துப் பரிமாற்றங்களும் புத்தாண்டை வரவேற்றுக்கொண் டிருக்க இவற்றில் எந்த சம்பந்தமும் இல்லாதவர் களாக ஒரு பகுதி மக்கள் விழா வேலிக்கு அப்பால் நிறுத்தப்பட்டிருக்கிறார்களே! கொண்டாட்டங் களில் கழிக்கப்படுகிறவைகளுக்காகக் காத்திருக் கிறார்களே. அப்படி ஏதாவது கிடைத்தால் அதுதான் கொண்டாட்டம் என்று குதிக்கிறார்களே. இவர் களுக்கு எந்த மதத்தின் கடவுளும் எதுவும் செய்வதில்லை. தாங்கள் இப்படி விளிம்புக்குத் தள்ளப்பட்டதற்கு காரணம் அரசின் கொள்கை களும், சமுதாயக் கெடுபிடிகளும்தான் என்பதையும் அறியாமல் இருட்டிலேயே கிடக்கிறார்கள். இவர்கள் இருப்பதே அரசு எந்திரத்திற்கு, இவர்கள் இருக்கும் இடங்களைக் கையகப்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறபோதுதான் தெரிய வருகிறது...
இவர்களும் புத்தாண்டு கொண்டாடுகிற புதிய மலர்ச்சிக்கான மாற்றம் நிகழ்ததப்பட்டாக வேண் டும். அந்த மாற்றத்திற்காகப் போராடுகிறவர்களின் லட்சியம் வென்றாக வேண்டும். அதற்கான ஈடு பாடாகப் புத்தாண்டு வாழ்த்து ஒலிக்கட்டும்.
(தீக்கதிர் 1-1-2012 இதழ் வண்ணக்கதிர் இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)
No comments:
Post a Comment