Monday, 13 February 2012

காதலைக் காதலிப்போம்.............. காவல்காரர்களிடமிருந்து காப்போம்



ந்தப் பேரண்டத்தின் இயக்கம் காதலால்தான் நிர்வகிக்கப்படுகிறது. அணுத்துகள்களின் காதல்தான் அணுக்களைப் பிரசவித்தது, அணுக்களின் காதலில்தான் பொருட்கள் பிறந்தன, பொருள்களின் காதலில்தான் நட்சத்திரங்களும் கோள்களும் உருவெடுத்தன...

ஒவ்வொரு ஆண்டும் காதலர் தினம் நெருங்க நெருங்க  இந்துத்துவா கூடாரம்  கூச்சல் எழுப்புவதும், அடாவடி நடவடிக்கைகளில் இறங்குவதும், வன்முறைத் தாக்குதல்கள் தொடுப்பதும் வழக்கம்தான். ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் அந்நியக் கலாச்சார ஊடுருவல் என்று கருத்துப் பிரச்சாரமாகச் செய்வார்கள். அவர்களது உதிரி அமைப்புகள் களக் கலவரங்களில் இறங்குவார்கள்.

காதலர் தினத்தன்று வரம்பு மீறினால் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று ம.பி. மாநில பஜ்ரங் தள் அறிவித்திருக்கிறது. யார் நிர்ணயித்த வரம்பு? எது வரையில் அந்த வரம்பு? ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ளலாம் என்பது வரையிலா அல்லது பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளலாம் என்பது வரையிலா? கைகுலுக்கிக்கொள்ளலாம் என்பது வரையிலா அல்லது கண்ணடித்துக்கொள்ளலாம் என்பது வரையிலா? முத்தமிடுவது வரம்புக்குள் வருமா? பறக்கும் முத்தம் அனுப்பினால் கூட காற்று கறையாகிவிட்டது என்று பினாயில் தெளிப்பார்களோ?

கிட்டத்தட்ட இதே தொனியில் மற்ற மாநிலங்களில் உள்ளவர்களும் அறிவித்திருக்கிறார்கள். சிலர் சொல்லாமல் செய்வதே பெருமை என்ற நினைப்பில் இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடாமலே ஆயுதங்களைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். உருட்டுக்கட்டைகளும் ஈட்டிகளும் வாள்களும் மட்டுமல்ல இந்த சுயநியமின கலாச்சார காவல்காரர்களுடைய ஆயுதங்கள் - தாலி, ரட்சாபந்தன் போன்றவையும் ஆயுதங்கள்தான். காதலர் தினம் கொண்டாடப்படும் உணவகங்கள், வாழ்த்துப் பொருள் விற்கிற கடைகள் ஆகியவற்றின் மீது முதல் வகை ஆயுதங்களால் தாக்குதல் தொடுக்கப்படும். சாலையில், தெருவோரத்தில், பூங்காவில், கடற்கரையில் என எந்தப் பொது இடத்திலும் ஆணும் பெண்ணுமாய் இருவர் நெருங்கிப் பேசிக்கொண்டிருந்தால் அங்கே இரண்டாவது வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்.

காதல் என்பது அந்நியக் கலாச்சாரமா? மனத்தளவில் ஈர்க்கப்பட்ட இருவர் காதல் வயப்படுவதும் ஒருவருக்காக இன்னொருவர் என கரம் கோர்ப்பதும் உலகில் எந்த ஒரு நாகரிகமும் தனது பண்பாடல்ல என்று கூற முடியாது. ஆனால் இவர்கள் எதற்காக இதை எதிர்க்க வேண்டும்? இயற்கையான காதல் உறவுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்? ஒரே காரணம்தான்: இந்துத்துவம் என்பது எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது? சாதிப் பாகுபாட்டின் மீது. அதன் மீது தொடுக்கப்படுகிற தாக்குதலாகவே காதலைக் காண்கிறார்கள்.

இந்தியாவின் பல சமூகங்கள் நவீன வளர்ச்சிகளோடு சம்பந்தமில்லாதவர்களாகப் பின்தங்கியிருப்பதற்குக் காரணம் குடும்ப உறவுகளுக்கு உள்ளேயே திருமணம் என்ற சாதி வரப்புகள்தான் என்று சமூக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் மாற்றம் ஏற்படுவதை சூலாயுதங்களால் ஏற்கமுடியவில்லை என்பதுதான் பிரச்சனையே.

இந்துத்துவத்தின் இன்னொரு அடித்தளமாகிய பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாத்தல், சிறுபான்மை சமயங்களைச் சேர்ந்த மக்களோடு கலப்பு ஏற்படுவதைத் தடுத்தல் என்ற வக்கிரம் மிகுந்த நோக்கங்களும் இவர்களது மிரட்டலின் சாராம்சங்களாக இருக்கின்றன.

இதை எழுதிக்கொண்டிருக்கிறபோதே, முகநூலில் ஒரு இஸ்லாமிய நண்பர், திருச்சி நகரில் தமுமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ஒரு சுவரொட்டியை இணைத்திருக்கிறார். காதலர் தினத்தில் கற்பைக் காப்பாற்றிக்கொள்ளுமாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது அந்தச் சுவரொட்டி. காதலர் தினக் கொண்டாட்டம் என்றாலே அதைப் படுக்கையறையோடு சம்பந்தப்படுத்துகிற வக்கிரம் எங்கிருந்து வந்தது? கற்பு என்றால் மனம் சம்பந்தப்பட்டது என்ற புதுயுகப் புரிதலும் இல்லாதவர்களாக, கற்பெனும் திண்மை உண்டாகப் பெறின் அதை இரு பாலருக்கும் பொதுவில் வைப்போம் என்ற பாரதியின் பார்வையும் இல்லாதவர்களாக இவர்கள் இப்படி எச்சரித்திருப்பது ஒன்றைத்தான் உணர்த்துகிறது: காதலுக்கு எந்தவொரு மதவாதமும் எதிரிதான்.

இந்துத்துவவாதிகள் இஸ்லாமியவாதிகள் இருதரப்பாரும் காதலர் தினத்தை எதிர்ப்பதில் இன்னொரு அம்சமும் உண்டு. மதம் தொடர்பான அம்சம் அது. காதலர் தினம் யார் பெயரால் கொண்டாடப்படுகிறதோ அந்த வாலன்டைன் ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் என்பது. கொடுமை என்னவென்றால், கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களும் தங்கள் குடும்பத்துப் பிள்ளைகள் காதல் வயப்படுவதை வரவேற்பதில்லை என்பதுதான். மற்ற சமயங்களிலும் இதே நிலைதான்.

மதவாத அமைப்புகள் இப்படியெல்லாம் மிரட்டியிருப்பதன் பின்னணியில், யாரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை அனுமதிக்க இயலாது என்று காவல்துறையினர் எச்சரித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட பொத்தாம் பொதுவாக எச்சரிக்கையைக் கண்டு,  இப்படிப்பட்டவர்கள் பின்வாங்கிவிட மாட்டார்கள். பல இடங்களில் காவல்துறையினரே கூட காதலர்களை அசிங்கப்படுத்துகிற வேலையைச் செய்ததுண்டு. பிரிக்க முயலும் பெற்றோரிடமிருந்து பாதுகாப்புக் கொடுங்கள் என்று கேட்டு வருகிற காதலர்களை, எந்தச் சாதிக்காரர்கள் என்று பார்த்து, பெற்றோருடன் பேரம் பேசி, பிரித்துவைக்கிற அக்கிரமங்களும் பல காவல்நிலையங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உண்மையிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கிற காவலர்கள் கொஞ்சம் பேர்தான்.

சமூக மாற்றத்திற்கு ஒரு வகையில் பங்களிக்கிற இளம் காதலர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் அளிக்கிற கடமை, மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கிறது. முற்போக்கு சக்திகளிடமிருந்தும் ஜனநாயக இயக்கங்களிடமிருந்தும் காதலர்களுக்கு அந்த நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்திட வேண்டும்.

மனக் காதலும் இனக் கலப்பும் இயற்கையானவை என்பதை சமுதாயம் அங்கீகரிகிற நாள் வரும் வரையில் அதை உரக்கச் சொல்வதற்குக் காதலர் தினம் தேவை.

No comments: