சனால் எடமருகு - ஒரு பகுத்தறிவாளர். இவர் மீது மும்பை நகரின் மூன்று காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்படுமானால் இவருக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும்.
இவர் செய்த குற்றம்? “மக்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்தினார், மதப் பகையுணர்வைக் கிளறிவிட்டார், அமைதியை சீர்குலைக்க முயன்றார்...”
என்ன நடந்தது? மும்பையின் இர்லா சாலையில் ஒரு வேளாங்கன்னி ஆலயம் இருக்கிறது, அதன் வளாகத்தில், ஏசு சிலுவையில் தொங்குகிற சிலை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம், திடீரென ஏசு சிலையின் பாதத்திலிருந்து தானாகவே சொட்டுச் சொட்டாக நீர் சொட்டத் தொடங்கியிருக்கிறது. அது ஏசுவின் கண்ணீர் என்றும், அதற்கு நோய்களைப் போக்கி இல்லங்களைப் புனிதப்படுத்தும் சக்தி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதை நம்பிய ஒரு பகுதி மக்கள் வரிசையில் நின்று சொட்டுவடி நீரை பாத்திரங்களிலும் பாட்டில்களிலும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள்.
தகவலறிந்து இரண்டு வாரங்களில் அங்கே வந்து ஆராய்ந்த எடமருகு, அரை மணி நேரத்தில் உண்மையைக் கண்டுபிடித்தார். சிலுவை ஊன்றப்பட்டுள்ள இடத்தில் தரைக்கடியில் சேர்ந்துள்ள தண்ணீர், அழுத்தம் காரணமாக சிலுவையின் மெல்லிய, முடி அளவிலான கோடுகள் போன்ற இடைவெளிகள் வழியாக மேலே எறி வழிகிறது என்பதே அந்த உண்மை. அறிவியல் பாடத்தில் இதை “தந்துகி விளைவு” என்பார்கள். தாவரங்களுக்கு இந்த இயற்கையான விளைவின் காரணமாகத்தான் வேர்களிலிருந்து நீர் கிடைக்கிறது.
இந்த உண்மையைக் கண்டுபிடித்ததோடு நிற்காமல் இதை ஊரறிய அறிவிக்கவும் செய்தார் எடமருகு. செய்யலாமோ? புகார் பதிவு செய்திருக்கிறார்கள்.
முன்பு இப்படித்தான் பிள்ளையார் பால் குடிப்பதாகக் கிளப்பிவிட்டார்கள். அது “பரப்பு இழுவிசை” எனும் இயற்பியல் செயல்பாடே என்று அறிவியல் இயக்கத்தினரும் பகுத்தறிவாளர்களும் வெளிப்படுத்தினார்கள். அந்த இயற்பியல் செயல்பாட்டின்படி மார்க்ஸ், பெரியார் சிலைகள் கூட “பால் குடிக்கும்” என நிரூபித்துக் காட்டினார்கள்.
அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதைப் பொறுத்தவரையில் மத வேறுபாடே இல்லை! இந்த உண்மையைச் சொல்வது எப்படி மத நம்பிக்கையைப் புண்படுத்துவதாகும்? மறைநூல்களில் எங்காவது இப்படி ஏசு சிலை கண்ணீர் வடிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறதா? இது எப்படி மதப் பகைமையைத் தூண்டும்? “ஏசு சாமி போலி, என் மதத்தின் சாமிதான் ஒரிஜினல்” என்று எடமருகு ஏதாவது பிரச்சாரம் செய்தாரா? இது எப்படி பொது அமைதியைக் குலைக்கும்? பொதுமக்கள் ஏசுவின் கண்ணீர் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், எடமருகுவின் செய்தியையும் கேள்விப்பட்டார்கள், தங்களுடைய வேலையைப் பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். இதை ஒரு மதப்பிரச்சனையாக மாற்ற சிலர் முயல்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உண்மையிலேயே ஏசு சிலை கண்ணீர் வடிக்கிறது என்றால், எட மருகு சொல்வது பொய் என்று நிரூபித்து மகிமையை நிலைநாட்ட வேண்டியதுதானே? எதற்காகக் காவல் நிலையம் செல்ல வேண்டும்? கர்த்தர் உள்ளிட்ட மகிமை மிகு கடவுளர்களால் எடமருகு போன்றோரை ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தானே சட்டத்தின் துணையுடன் அவர்களது வாயை அடைக்க முயல்கிறார்கள்? அறியாமல் செய்கிறார்கள், கர்த்தரே இவர்களை மன்னியும் என்று சொல்ல முடியவில்லை.
இந்தியாவின் அரசமைப்பு சாசனம், மக்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை வளர்ப்பது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கூறுகிறது. அரசு அதைச் செய்யத்தவறுகிறது. சில தனி மனிதர்களும் முற்போக்கான இயக்கங்களைச் சேர்ந்தோரும் செய்கிறார்கள். அவர்களைக் கைது செய்வது நாட்டின் அரசமைப்பு சாசனத்தை அவமானப்படுத்துகிற செயல்.
மக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கிறவர்களாக, எதையும் ஏன் எப்படி என்று கேள்வி கேட்பவர்களாக இருக்கக்கூடாது என்பது நாட்டின் வளங்களை எல்லாம் வளைத்துக் கொழுக்கிற நவீன உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்ளையர்களின் விருப்பம். எல்லா மதங்களையும் சேர்ந்த திடீர் மகிமைக் கதைகள் அந்த விருப்பத்தைத்தான் நிறைவேற்ற முயல்கின்றன. அந்தக் கதைகளின் மூளைச்சலவை இரைச்சல்களை மீறி உண்மைகளும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன - அடக்குமுறைகளைப் பொருட்படுத்தாமல்.
நீங்கள் கதையின் பக்கமா, உண்மையின் பக்கமா?
(தகவல் ஆதாரம்: தி ஹிண்டு நாளேட்டின் 7.5.2012 இதழில் பிரவீன் ஸ்வாமி எழுதியுள்ள கட்டுரை)
No comments:
Post a Comment