Monday 3 September 2012

வதந்திகளால் வளைக்கப்படுகிறதா வாழ்க்கை?

வெறும் தந்திக்கும் வதந்திக்கும் என்ன வேறுபாடு? வெறும் தந்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் ஒரு என்னவோ ஏதோ என்ற ஒரு பதைப்பை ஏற்படுத்தும். அவர்களோடு முடிந்துவிடும். வதந்தியோ, அதைப் பெறப்பட்டவரிடமிருந்து மற்றொருவருக்கு அவரிடமிருந்து இன்னொருவருக்கு அந்த இன்னொருவரிடமிருந்து இன்னொரு இன்னொருவருக்கு என்று காற்றுக் காலத்துத் தீ போல எல்லைகள் தாண்டி பரவிவிடும். தகவல் தொடர்பு மூலமாகத்தான் மனித சமுதாயம் வளர்ந்தது. பொய்யான தகவல் தொடர்பாகிய வதந்தியோ சமுதாய வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த, குறிப்பாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் மாணவர்களும் சென்ற மாதம் கூட்டம் கூட்டமாகத் தங்களது சொந்த ஊர்களுக்கே திரும்பினார்கள். இப்போது அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தாங்கள் வேலை செய்கிற, படித்துக்கொண்டிருக்கிற மாநிலங்களுக்கு வந்துகொண்டிருகிறார்கள். முதலில் அவர்கள் இப்படிக் கூட்டம் கூட்டமாக வெளியேறியதன் பின்னணி என்னவென்றால் - வதந்தி. தாங்கள் தாக்கப்படலாம் என்றும், ஏற்கெனவே சில இடங்களில் தாக்குதல்கள் நடந்திருப்பதாகவும், ஒரு சில கொலைகளும் நிகழ்ந்திருப்பதாகவும் பரவிய வதந்தி.

இது வடகிழக்கு மாநிலங்களிலும் பரவியது. அங்கே உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் பட்டத்தோடும் பணத்தோடும் வருவதைவிட உயிரோடு வந்தால் போதும் எனக் கருதியதில் வியப்பில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைமேடைகளில் பயணப்பைகளில் துணிமணிகளோடு தங்களது அச்சங்களையும் சுமந்துகொண்டு காத்திருந்தவர்களிடம் செய்தியாளர்கள் விசாரித்தபோது, யாராலும் எந்த ஒரு குறிப்பிட்ட தாக்குதலையும் அடையாளங்காட்ட இயலவில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார், அங்கே நடந்ததாம், இங்கே நடந்ததாம் என்ற வகையிலேயே அவர்களது பதில்கள் இருந்தன.

வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறியதற்கு, கைப்பேசி குறுஞ்செய்திகள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் பரவிய வதந்திகளே காரணம் என்று கூறி, ஒரு நாளில் 5 குறுஞ்செய்திகளுக்கு மேல் அனுப்பத் தடை விதிக்கப்பட்டது, பின்னர் அது 20 ஆக உயர்த்தப்பட்டது, சில சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன, கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டன என்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத கூறுகளாகிவிட்ட இந்த வசதிகளை அரசாங்கமே பயன்படுத்த முடியுமே? எவ்வித தாக்குதலும் எங்கேயும் நடக்கவில்லை, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படும், வதந்திகளை நம்பாதீர்கள் என்று அனைத்து கைப்பேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்புமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்குக் கட்டளையிட்டிருக்க முடியும். அதே போல், வலைத்தளங்களில் உண்மை நிலவரங்களையும் உத்தரவாதங்களையும் கொண்டுசென்றிருக்க முடியும், எளிதில் முடியக்கூடிய இந்த வழிமுறையை ஏன் அரசு எந்திரம் யோசிக்கவே இல்லை?

வரலாறு நெடுகிலும் இப்படிப்பட்ட வதந்திகள் பரவி வந்திருக்கின்றன. 1517ம் ஆண்டில், லண்டன் நகரில் புனித மேரி தேவாலயத்தில் ஒரு பாதிரியார், அந்த நகரில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர்களால் உள்ளூர்க் குழந்தைகள் பசியால் வாடுகிறார்கள், உள்ளூர்க் கைவினைக் கலைஞர்களின் வாழ்வதாரத்தைப் பறிக்கிறார்கள் என்று பேச, மறுநாள் அந்த நகரில் பெரும் கலவரம் மூண்டது. பிழைப்புக்காக லண்டனுக்கு வந்திருந்த சிறு வியாபாரிகள், கைவினைஞர்கள், அடகுக்கடைக்காரர்கள் உள்ளிட்டோர் தாக்கப்பட்டார்கள். லண்டனில் தொழில் பயிற்சி பெற்று வேலை கிடைக்காமல் இருந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டவர்களின் வீடுகளைத் தாக்கினார்கள்.

இந்தியப் புராணங்களைப் பார்த்தால் தேவர்களின் சார்பாக தெய்வங்கள் நடத்திய போர்களில், வதந்திகளும் வஞ்சகங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. போர்க்களத்தில் துரோணரை வீழ்த்த, அவரது மகன் இறந்துவிட்டதாகப் பொய்யாக ஒரு செய்தி பரப்பப்பட்டதாக மகாபாரதம் சொல்கிறதல்லவா? அண்மையில் குஜராத்தின் அகமதாபாத் நகரில், குடிசை வாழ் மக்களிடையே இலவச வீடுகள் வழங்கப்பட இருப்பதாக வதந்தி பரவ, அதை நம்பி விண்ணப்பப் படிவங்களுக்காகக் கூடிய மக்களைக் காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். ஊழலற்ற, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான, வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னோடியான ஆட்சியை குஜராத்தில் நரேந்திர மோடி அரசு வழங்கிக்கொண்டிருப்பதாக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுவது வேறு விவகாரம். தமிழகத்தில், ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின் கடைசி ஆண்டில், சென்னை எம்ஜிஆர் நகரில் பரப்பப்பட்ட வதந்தி 42 பேர் கூட்ட நெரிசலில் இறந்துபோகக் காரணமானது.

அகில இந்திய அளவில் கூட, பாஜக கூட்டணி ஆட்சியின்போது இந்தியா ஒளிர்கிறது என ஆட்சியாளர்கள் சொல்லிவிட்டதால், அதை மக்கள் நம்பியாக வேண்டும் என்று பிரச்சார வதந்தி பரப்பப்பட்டது. இன்றும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, வறுமைக்கோடு மட்டத்தை அவர்களாகக் கீழிறக்கிக்கொண்டு, வறுமை பெருமளவுக்குக் குறைக்கப்பட்டுவிட்டதாக வதந்தியைப் பரப்பத்தானே செய்கிறது!

வதந்திகள்  வெறும் தீயல்ல. அவற்றில் வாழ்க்கை உண்மைகள் அடிநிலையாக இருக்கின்றன. வடகிழக்கு இளைஞர்கள் வெளியேறியதன் பின்னணியில், பொருளாதார வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வு, பெருகியிருக்கும் வேலையின்மை போன்ற நிலைமைகள் இருக்கின்றன. அதைப் பயன்படுத்தி, ஏழை முஸ்லிம் மக்கள் மீது இனவாதிகள் முடுக்கிவிட்ட வன்முறைகளால், அதற்குப் பழிவாங்க மற்ற மாநிலங்களில் உள்ள அஸ்ஸாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் எழுந்தது. மும்பையில் ஒரு இஸ்லாமிய இளைஞர் அமைப்பு அரங்கேற்றிய் வன்முறை அந்த அச்சத்தீயை விசிறிவிட்டது. அந்த இஸ்லாமிய இளைஞர்கள் பார்த்த சில சமூகவலைத்தள செய்திகளில், ஒரே படத்தையே மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, நாட்டின் பல பகுதிகளிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்ததாக நம்பவைக்கிற முயற்சி நடந்திருக்கிறது. அந்த விசமச் செய்திகள் பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டதாக இந்திய அரசு சொன்னது, அதற்கு ஆதாரம் தேவை என்று பாகிஸ்தான் அரசு கேட்டுள்ளது. இதற்கிடையே, வதந்தியைப் பரப்பியது பாகிஸ்தான் என்று ந்ம் ஊர் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கி, ஏதோ பாகிஸ்தான் அரசே திட்டமிட்டு அந்த வதந்தியைப் பரப்பியது போன்ற வதந்தியைப் பரப்பின.

ஆந்திராவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த முஸ்லிம்கள் தேசபக்தியே இல்லாமல், பாகிஸ்தானின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் மின்னஞ்சல் மூலமாக படத்துடன் ஒரு செய்தியைப் பரப்பினர். அந்தப் படம், பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் நடந்த கொண்டாட்டமே என்பது உளவுத்துறை புலனாய்வில் தெரியவந்து, அது செய்தியல்ல வதந்தியே என தெளிவானது. விஎச்பி வதந்திச் சேவை நோக்கம் என்னவென விளக்க வேண்டியதில்லை.
மக்களின் வறுமை, வேலையின்மை, அடிப்படை வசதிகளுடனாவது வாழவேண்டும் என்ற கனவுகள் நிறைவேறாத ஏக்கம், அதைக்கூட நிறைவேற்ற வக்கில்லாத அரசுக் கொள்கைகள், பணமிருந்தால் பிழைத்துக்கொள் என்ற குரூரமான நவீன முதலாளித்துவம், அதன் உடன்பிறப்புகளாக பணத்தைத் தேடுவதற்கான சமூகவிரோத உத்திகள், நவீன சிந்தனைகளைத் தடுத்துக்கொண்டிருக்கிற பண்ணைச் சமுதாயப் பழமைவாதங்கள்... இவையும் வாழ்க்கையின் உண்மை நிலவரங்கள்தான்.

முன்பு பிள்ளையார் சிலைகள் பால் குடித்தது என நாடு முழுதும் பாக்கெட் பாலுக்கு கிராக்கி ஏற்படுத்திய வதந்தி, பிறந்த குழந்தை பேசுகிறது என அண்மையில் கிளப்பிவிடப்பட்ட வதந்தி போன்றவை ஒரு பக்கம் சிரிப்பூட்டுகின்றன. ஆழமாக யோசித்தால், மக்களிடையே இன்னும் அறிவியல் உண்மைகள் கொண்டுசெல்லப்படாத உண்மை நிலைமையை அவை வெளிப்படுத்துகின்றன. அறிவியல் கண்ணோட்டம் ஆழமாக வேரூன்றாதவரையில் சுரண்டலுக்கும் வஞ்சகங்களுக்கும் தடையில்லை என ஆளும் வர்க்கங்கள் நிம்மதியாக இருக்கின்றன. அந்த நிம்மதி நிலைக்க விடக்கூடாது. வர்க்க - வர்ண - பாலின ஆதிக்கக்கோட்டைச் சுவர்களைத் தகர்க்க மக்கள் சக்தி திரட்டப்பட்டாக வேண்டும் - உண்மைகளின் பலத்தில்.

-‘தீக்கதிர்’ ஞாயிறு (2-9-2012) இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.

No comments: