Sunday, 21 July 2013

சுவரை நாறடிக்கும் வி.வீ.பே. அணி

கரச் சுவர்களில் இனி பேரணிகள் போராட்டங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் குறித்து விளம்பரம் செய்ய முடியாது. தலைநகர் சென்னையில் முந்தைய மாநகரத்தந்தையின் நிர்வாகத்தில், சுவர் விளம்பரங்களுக்குத் தடை விதித்தாலும்  பொதுச் சுவர்களை வண்ண ஓவியங்களாவது அலங்கரித்தன (அதனால் நகரம் அழகாக மாறியதா என்று கேட்காதீர்கள்). இப்போதோ விளம்பரம் செய்யத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது, மீறினால் தண்டனை என்று பயமுறுத்தும் விளம்பரம்தான் பத்தடிக்கு ஒன்றாக நகரத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறது. எப்படியோ சுவர்களைக் கருத்துப் பரவலுக்குப் பயன்படுத்தியது பழங்காலமாகிவிட்டது.

சுவரெழுத்து உரிமை இப்படி உதிர்க்கப்பட்டுவிட்டது என்றாலும், இணைய உலகத்தில் எழுப்பப்பட்டுள்ள ஒரு சுவர் புதிய வாய்ப்பாக நிற்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் நமது கருத்துகளைப் பதிவு செய்கிற இடத்திற்கு சுவர் (ஆங்கில வால்) என்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள். கணினியை இயக்க முடிந்தவர்கள் மட்டுமல்லாமல், கைப்பேசியின் நவீன வசதிகளைக் கையாளத் தெரிந்தவர்களும் கூட இந்தச் சுவரில் தங்களது பல்வேறு சிந்தனைகளைப் பதிவு செய்ய முடிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அந்தச் சிந்தனைகளுக்கு வரவேற்புகளும் விமர்சனங்களும் பின்னூட்டமாகப் பதிவு செய்யப்படுகின்றன. அந்தக் கால பேனா நண்பர்களை விடப் பல மடங்கு விரிவாகவும் உடனடியாகவும் இந்தக் கால விசைப்பலகை நண்பர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கிறார்கள்.
பெரிய ஊடகங்களில் தங்களது படைப்புகள் அறிமுகமாகும் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு இந்தத் தொடர்புத் தளங்கள் மிகப்பெரும் துணையாக வந்துள்ளன. நண்பர்கள் மட்டுமல்லாமல் நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று பலரும் இவர்களது கவிதைகளையும் கதைகளையும் படித்துவிட்டு உடனடியாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.

அவ்வாறு கருத்துப் பதிவும் பகிர்வும் செய்வதற்கான சுதந்திரமும் உரிமையும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே பண்பாட்டுத் தளங்களில் இயங்கிவரும் முற்போக்கு அமைப்புகளும் சிந்தனையாளர்களும் வலியுறுத்துவது. மும்பையில் சிவசேனா தலைவர் பால் தாக்கரே மரணமடைந்தபோது வலுக்கட்டாயமாகக் கடைகளும் தொழிற்சாலைகளும் அடைக்கப்பட்டதைத் தனது ஃபேஸ்புக் சுவரில் விமர்சித்த ஒரு கல்லூரி மாணவியும், அதற்கு ஆதரவு தெரிவித்த அவரது தோழியும் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் அதற்குக் கண்டனக் குரல்கள் எழுந்தன. மேற்கு வங்கத்தில் மாநில அரசை விமர்சிக்கும் ஒரு அரசியல் நையாண்டி ஓவியத்தை மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதற்காக ஒரு பேராசிரியர் சிறையில் அடைக்கப்பட்டபோதும் நாட்டின் நியாயக் குரல்கள் உயர்ந்தன. அண்மையில் ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பற்றியும், தமிழக ஆளுநர் பற்றியும் அவதூறான கருத்தை வெளியிட்டதாகக் கூறி ஒரு மனித உரிமை இயக்கத்தைச் சேர்ந்த பெண்ணின் மீது காவல்துறை நடவடிக்கை பாய்ந்ததையும் பலர் கண்டித்திருக்கிறார்கள். ஆனால், சமூக வலைத்தளக் கருத்து வெளிப்பாட்டு உரிமையை சிலர் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்கிறபோது, அந்த உரிமைக்காக வாதாடுகிறவர்கள் அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறார்கள். வலைத்தளச் சுவர்களில் எழுதப்படும் சொற்களும் கண்ணோட்டங்களும், பொதுக்கழிப்பறைகளின் சுவர்களில் காணக்கூடிய எழுத்துகளின், சித்தரிப்புப் படங்களின் வாரிசு வார்ப்பாக இருக்கின்றன. இது, அருவருப்பை ஏற்படுத்திவிட்டால், தாக்கப்படுகிறவர்களும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் நாகரிகம் கருதி எதிர்க்கருத்துச் சொல்லாமல் ஒதுங்கிவிடுவார்கள் என்ற இழிவான உத்தி.

கருத்துச் சுதந்திரம் போலவே எதிர்க்கருத்துச் சுதந்திரமும் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுதான். எந்த ஒரு கருத்தையும் அதைப் படிக்கிறவர்கள் நூற்றுக்கு நூறு அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  எவ்விதமான கட்டளையும் இல்லை. ஆனால் கருத்தை எதிர்ப்பதென்றால் அது தவறான கருத்து என்று மறுக்க வேண்டும், அதை ஏன் ஏற்பதற்கில்லை என்று விளக்க வேண்டும்., அதற்கான மாற்றுக் கருத்து இதுவென்று முன்வைக்க வேண்டும், அதற்கும் எதிர்ப்பு வரலாம் என்பதை ஏற்கத்தயாராக இருக்க வேண்டும். ஆனால், இதெல்லாம் சகமனிதர்கள் மீதான மரியாதையோடு முறைப்படி விவாதிக்கிறவர்களுக்குத்தான் பொருந்தும், தங்களுக்கு அல்ல என்பது போல இந்த வீறாப்பாளர்கள் தட்டச்சுகிறார்கள்.

ஒரு கூட்டணி போல அமைத்துக்கொண்டு இவர்கள் குறிப்பிட்ட சிலர் மீது வசைச் சகதி வீசுகிறார்கள். குறிப்பாக, இவ்வாறு தாக்கப்படுகிறவர்கள் யாரென்று பார்த்தால் மனித மாண்புகளுக்காகவும், தலித் மக்களின் சமத்துவ உரிமைகளுக்காகவும், பெண் விடுதலைக்காகவும் செயல்படுவோர், எழுதிவருவோர், வாதிடுவோர் ஆகியோர்தான். இன்னும் குறிப்பாக தர்மபுரி வன்கொடுமைத் தாக்குதல்களுக்குப் பிறகு அந்த உண்மைகளை எழுதுகிறவர்கள், தலித் மக்களின் நியாயங்களை எடுத்துரைப்பவர்கள், சாதிய ஆதிக்கவாதிகளின் வெறித்தனங்களைச் சாடுகிறவர்களே இவர்களது தாக்குதல் இலக்கு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பத்திரிகையாளர்கள் மனுஷ்யபுத்திரன், கவின் மலர், கவிஞர் மீனா கந்தசாமி ஆகியோர் அண்மை நாட்களில் விசைப்பலகை வீறாப்புப் பேர்வழிகள் (வி.வீ.பே.) தங்களது துருப்பிடித்த வாள்களை வீசிவருகிறார்கள்.

திருமாவளவன் தலித் மக்களுக்காகத் தொடர்ந்து இயங்கிவருவதும், மனுஷ்யபுத்திரன் தனது கட்டுரைகளில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி விவாதங்களிலும் சாதிய ஆதிக்கவாதிகளைக் கடுமையாகச் சாடிவருவதும், கவின் மலர் தலித் மக்களை நேரில் சந்தித்து அவர்களது வலிகளைப் பதிவு செய்வதும், மீனா தனது காட்டமான கவிதை வரிகளில் தலித் விரோத அரசியல் மீது சாட்டையடி கொடுத்துவருவதுமே இவர்களது ஆத்திரத்துக்குக் காரணம் என்பது வெளிப்படை. இவர்களது கருத்துகளில் அரசியலாகவும் சமூகக் கண்ணோட்டத்துடனும் எவரும் முரண்படலாம். மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்ளவும் விவாதிக்கவும் அவர்களும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் இந்த வி.வீ.பே. குழுவினரது பதிவுகளில் ஆத்திரம் இருக்கிறது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு இருக்கிறது, நக்கல் இருக்கிறது, தரக்குறைவான சித்தரிப்பு இருக்கிறது, தனி மனித அவமதிப்பு இருக்கிறது... மறந்தும் கூட, இவர்களது மாற்றுக் கருத்து என்ன என்பது மருந்துக்கும் இல்லை. மாற்றுக் கருத்தை முன்வைத்தால் இவர்களது அப்பட்டமான சாதிய ஆதிக்கப்புத்தி வெளியே தெரிந்துவிடுமே!

மனுஷ்யபுத்திரன் அண்மையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதற்காகக் கூடுதல் வன்மத்துடன் இவர்கள் பதிவிடுகிறார்கள். அவரது உயிர்மை பத்திரிகை நடத்திய விருதுவழங்கு விழாவில் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சித் தொகுப்பாளர் சுகிதா பற்றியும் கடுப்போடு எழுதினார்கள். இப்படியெல்லாம் எழுதுகிறபோது எதற்கும் இருக்கட்டும் என்று தங்களை ஆளுங்கட்சியின் ஆட்கள் என்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். பாலியல் வக்கிரச் சொற்களோடு தாக்குதல் தொடுப்பது பற்றி இணையக் குற்றங்கள்பிரிவில் புகார் செய்யப்பட்டாலும், தங்களை ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது, காவல்துறை நடவடிக்கைக்குக் கேடயமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் போலும் இந்த வி.வீ.பே. குழுவினர்.

சில மாதங்களுக்கு முன்பு, பாடகர் சின்மயி பற்றியும் அவரது தாயார் பற்றியும் இழிவாகப் பதிவு செய்த ஒருவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். அந்த வேகத்திற்குக் காரணம், சின்மயியின் சமூகப் பின்னணியிம் மேலிடத் தொடர்பும்தான் என்று பின்னர் விமர்சிக்கப்பட்டது. தற்போதைய புகார்கள் தொடர்பாகக் காவல்துறை அசையாமல் இருப்பது அந்தச் சந்தேகத்தை வலுப்படுத்துகிறதே!

இதற்கு முன்பும் இதே போன்ற தாக்குதல்கள் வேறு விதமாகத் தொடுக்கப்பட்டதுண்டு. இதற்கென் ற ஒரு வலைத்தளம் தொடங்கப்பட்டு, அதில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர்களாகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகவும் இருக்கிற பெண்களின் படங்களை வெளியிட்டு, அவர்களது அங்க அவயங்களைச் சுதந்திரமாக வர்ணிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. வாசகர்களின் வர்ணனைகளில் ஆணாதிக்கத்தின் ஆபாச ஆழம் தெரிந்தது. மாற்றுக் கருத்து என்ன என்று கேட்டுவிட்டால், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களம் காண்கிற மார்க்சிஸ்ட்  கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் மீது வசை மலம் வீசத் தயங்குவதில்லை இந்த வி.வீ.பே. அணியினர். யார் மீது வீசுகிறார்களோ அவர்கள் ஒரு துளியும் கலக்கமில்லாமல் தங்கள் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர்களது கைதான் நாற்றமெடுக்கிறது.  பொறுப்பற்ற சிலர் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு அவனுக்கும் இவளுக்கும் அப்படி இப்படியாம்ல  என்று கதைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்களே, அவர்களது வாய் நாற்றம் போன்றதே இதுவும்.

இப்படிப்பட்டவர்களெல்லாம் ஒருவகை சைக்கோ, என்கிறார் ஒரு நண்பர். இத்தகையவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதானால் அவர்கள் தங்களையறியாமல் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்றாகிவிடும். தங்களுடைய சுயவிளம்பரத்துக்காகத்தான் அப்படி எழுதுகிறார்கள், என்கிறார் அந்த நண்பர். அதை ஒப்புக்கொண்டு விமர்சிக்கலாம் என்றால்  அந்த விளம்பரப் பசிக்குச் சோறு போட்டதாகிவிடும்.
குறிப்பாக இன்றைய சமூகச் சூழலில் பெரும்போராட்டம் நடத்தியே முன்னிலைக்கு வரவேண்டியிருக்கிற பெண்களை, பின்னுக்கு இழுக்க முயலும் அடக்குமுறைப்போக்குகளின் அரசியல் குறித்துப் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டும். வீட்டுச் சண்டையில் அல்லது தெருச்சண்டையில் எதிராளியின் நியாயமான பேச்சுக்கு பதில் சொல்ல முடியாதவர்கள் அந்தத் தோல்வியை மறைக்க அவரது ஒழுக்கம், தொடர்புகள் என்று சம்பந்தமில்லாமல் எதையாவது கூறி வசவுகளில் இறங்குவார்கள். அதைப் போல இணைய உலகத்தை, வலைத்தள வசவுகளில் இறங்குகிறவர்களின் முகமூடிகள் கிழித்தெறியப்பட வேண்டும். இப்படியெல்லாம் தாக்குகிறபோது தாக்கப்படுகிறவர்கள் தங்களது செயல்முனைப்புகளை விட்டுவிட்டு ஒதுங்கிவிடுவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். தாக்கப்படுகிறவர்களோ சமூக அக்கறை சார்ந்த ஈடுபாடுகளைத் தொடர்வதன் மூலம் இந்த வி.வீ.பேர்வழிகளைச் சுண்டுவிரலால் ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

இணைய ஏடுகளையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துவோரின் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் வெளிப்பாட்டு உரிமைக்காகவும் முற்போக்கு சக்திகள் நிற்கின்றன. அந்தச் சுதந்திரத்தையும் உரிமையையும்  கொச்சைப்படுத்துகிறவர்கள், இவற்றை ஒடுக்க முயல்கிறவர்களுக்குத்தான் ஆயுதம் எடுத்துக்கொடுக்கிறார்கள். அரசியல் களத்தில், சமுதாயக் களத்தில் மாற்றுக் கருத்துகள் முன்வைப்போர் மீது அவதூறுச் சேறு வீசுகிறவர்களை மக்கள் மன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்துவது கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஒரு பகுதிதான்.

அப்படி மக்கள் மன்றத்தின் வெளிச்சம் பாய்கிறபோது இந்த வி.வீ.பேர்வழிகள், எல்லாரும் நல்லா தெரிஞ்சுக்குங்க நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான், என்று பரவசத்தோடு வலம் வரலாம்தான். அப்படியாவது  உண்மை வெளிவரட்டுமே...

(‘தீக்கதிர்’ 21-7-2013 ஞாயிறு இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வெளியாகியுள்ள எனது கட்டுரை.)