Thursday, 30 July 2015

யாரையும் சார்ந்திருக்காமல் சுயேச்சையாக வாழ்வது குறித்து...

உளமாடும் உரையாடல்

(ஏற்கெனவே தெரிவித்தது போல் இது நெருக்கமானவர்களோடு அவ்வப்போது நடத்திய உரையாடல்களின் பதிவு. அந்த உரையாடல்களிலிருக்கும் பொதுச்செய்தியைப் பகிர்ந்துகொள்வதே இதன் நோக்கம். அந்த நெருக்கமானவர்கள் யார், உடனிருப்பவர்களா, உற்ற தோழமைகளா, பொறுப்புகளில் இருப்பவர்களா, குறிப்பிட்ட அடையாளமற்றவர்களா, பெண்களா, ஆண்களா, மாற்றுப் பாலினத்தவர்களா, சமவயதினர்களா, வயது கூடியவர்களா, குறைந்தவர்களா... என்ற குடைவுகளின்றி படிக்கக் கேட்டுக்கொள்கிறேன். விளக்கம் அளித்தது மட்டுமல்லாமல், விளக்கம் பெற்றதும் நானாக இருக்கக்கூடும் என்பதால் அதையும் கடந்து, உரையாடலுக்குள் மட்டும் பயணிக்க வேண்டுகிறேன்.)

“என்ன திடீரென்று ஆள் காணாமப் போயிட்ட? என்னோடுதான் தொடர்பில் இல்லைன்னு பார்த்தால் நம் நண்பர்கள் பலரும் உன்னோடு தொடர்புகொள்ள முடியலைன்னு சொன்னாங்களே...”

“ஒண்ணுமில்லை...”

“ஒண்ணுமில்லைன்னு நீ சொல்றதால ஏதோ இருக்குது. எதுவுமே இல்லாம பேரண்டத்திலே எதுவுமே இல்லைன்னுதான் அறிவியல் சொல்லுது.”

“அட, கொஞ்சம் மூட் அவுட் ஆகியிருக்கேன், அதுக்குப் போயி இப்ப எதுக்கு அறிவியல் தத்துவமெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ற?”

“அப்படி வா வழிக்கு. தொடர்ந்து நான் தத்துவம் பேசறதுக்குள்ள உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லிவிடு.

மனசுவிட்டு எதை வேணும்னாலும் பேசமுடியும்கிறதுக்காகத்தானே உன்கிட்ட வர்றதே...”

“சரி சரி, விசயத்துக்கு வா.”

“இனிமே யாரையும் டிபெண்ட் பண்ணியிருக்கக்கூடாது, இண்டிபெண்டன்ட்டா இருக்கணும்னு முடிவு செஞ்சிருக்கேன். அப்படி இண்டிபெண்டன்ட்டா இருக்குறதுதான் சரின்னு என் கூட இருக்கிறவங்களும் சொல்றாங்க.”

“அது சரியா தப்பான்னு அப்புறம் பார்க்கலாம். யாரையும் சார்ந்திருக்க வேண்டியதிலைங்கிற முடிவுக்கு இப்ப நீ வர்றதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?”

“பணத்துக்காகவோ, ஒரு மாரல் சப்போர்ட்டுக்காகவோ, வேற வாய்ப்புகளுக்காகவோ, சும்மா ஹேப்பியா இருக்குறதுக்காகவோ கூட யாரையாவது சார்ந்திருக்கிறப்ப, அவங்க நம்மை ஏதோ ஒரு வகையிலே இளக்காரமா பார்க்கிறாங்க. நமக்கே கூட ஒரு கான்ஃபிடன்ஸ் வர மாட்டேங்குது.”

“என்ன நடந்துச்சுன்னு சொல்லு.”

(என்ன நடந்தது, யார் என்ன பேசினார்கள் என்ற தகவல்கள் சொல்லப்படுகின்றன.)

“... இப்ப சொல்லு, நான் எடுத்த முடிவு சரிதானே?”

“அவங்க அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற அளவில் உன் வருத்தம் நியாயமானதுதான். ஒருவருக்கு ஒரு உதவியைச் செஞ்சிட்டு, அப்புறம் அதைச் சொல்லிக்காட்டுறதே அநாகரிகம், அதுக்காக இளக்காரமா பேசுறதோ அதை விடவும் அநாகரிகம். ஆனால் அவங்ககிட்டே வாதிடணும், யோசிக்க வைக்கணும். அவங்க மாறலைன்னா, நாம சார்ந்திருக்கிற இடத்தை, ஆட்களை மாத்திக்கிடலாம். நம்மகிட்ட தப்பு இருக்கும்னா நம்மையும் மாத்திக்கிடலாம். அதை விட்டுட்டு யாரையுமே சார்ந்திருக்க வேண்டியதில்லைன்னு முடிவெடுக்கிறது தவறு, அது சாத்தியமுமில்லை.”

“ஏன் சாத்தியமில்லை?”

“இப்ப நான் அறிவியல் தத்துவமாத்தான் பேச வேண்டியிருக்கு. உலகத்திலே எதுவுமே எதையுமே சார்ந்திருக்காமல் இல்லை. யாருமே யாரையுமே சார்ந்திருக்காமல் இல்லை. ஒன்றையொன்று சார்ந்திருக்காத முழு சுயம்புன்னு பேரண்டத்திலேயே எதுவும் கிடையாது.”

“ஏன், நான் சுயமா சம்பாதிக்கிறேன், சொந்தமா வீடு கட்டியோ வாடகை கொடுத்தோ குடியிருக்கிறேன்,  என் முயற்சியிலேயே எங்கே வேணும்னாலும் டிராவல் பண்றேன்னு வாழ முடியாதா?”

“நீ சொன்ன எதிலாவது முழுக்க முழுக்க சுயம், வேறு யாருமே சம்பந்தப்படாத சுயேச்சைன்னு இருக்கா? சொந்தமா வீடு கட்டுறதுன்னா மனை வாங்குவது, வரைபடம் தயாரித்து ஒப்புதல் பெறுவது, கட்டி முடிப்பது, மின்சார இணைப்பு பெறுவது, குடிநீர்க் குழாய் பொருத்துவது, அதிலே நிற்காமல் தண்ணீர் வரவைப்பது, நாற்காலி கட்டில்னு போடுவது, பால் பாக்கெட் போட வைப்பது, சமையல் வாயு வரவழைப்பது... இப்படி எத்தனை விசயங்களில் எத்தனை பேரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கு? வாடகை வீடுன்னா கூட வீட்டு உரிமையாளர் எப்படிப்பட்டவர்ங்கிறதைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கே! உன் சொந்தப் பணத்திலே பயணம் போகலாம், ஆனால் வாகன ஓட்டுநரையும் அவரது திறமையையும் சார்ந்திருக்க வேண்டியிருக்கா இல்லையா? எங்கே, யாரையுமே எதற்குமே சார்ந்திருக்காத நூறு சதவீத சுயேச்சையான வாழ்க்கைன்னு ஒரு எடுத்துக்காட்டு சொல்லு பார்க்கலாம்?”

“அது வேற, இது வேற இல்லையா?”

“இப்படி யாரையும் சார்ந்திருக்காம சுயேச்சையா - இண்டிபெண்டன்ட்டா - இருக்கணும்கிற மனநிலையை ஏற்படுத்துவதே இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்புதான் என்கிற வர்க்க அரசியலும் இதுக்குள்ளே இருக்கு தெரியுமா? மனிதர்களுக்குக் கூட்டுச் செயல்பாட்டுச் சிந்தனை வராமல், சுயேச்சையா இருப்பதிலே ஒரு மோகத்தை அல்லது நாட்டத்தை ஏற்படுத்திவிட்டால், சுரண்டப்படும் மக்கள் ஒன்றுபட மாட்டார்கள். அது சுரண்டல் மகா சக்திகளுக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு! ஏற்கெனவே நாடுகளின் எல்லைக்கோடுகளாக, இன அடையாளங்களாக, மத நம்பிக்கைகளாக, சாதிப் பெருமைகளாகக் கூறுபோடப்பட்டிருக்கிறோம். இதிலே சுயம், சுயேச்சைன்னு தனித்தனி மனிதர்களாகவும் ஒதுங்கிக்கொள்ளலாமா?”

“இதிலேயும் அரசியலா?”

“எல்லாத்துக்கும் மேலே, மற்றவர்களைச் சார்ந்திருக்க விரும்பாமல் நீ விலகுகிறாய் என்றால் மற்றவர்களும் உன்னைச் சார்ந்திருக்க விரும்பாமல் நீ விலக்குகிறாய். அதற்குப் பெயர் சுயநலம் இல்லையா?”

“அது வந்து...”

“அது வந்துன்னு இழுக்கிறியே, இது போதும். நீ சிந்திக்கத் தொடங்குகிறாய்...”

Saturday, 18 July 2015

புண்படுத்தப்படுவதான அரசியல்

ஊ என்றால் இப்படியாகத்தான் ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய மனம் புண்படுத்தப்படுவதாகக் கூறியே புதிய கருத்துகளைக் காதுகொடுத்துக் கேட்க மறுக்கிறார்கள். அவர்கள் கேட்கமாமல் போவது அவர்களுடைய விருப்பம், ஆனால் ஒட்டு மொத்த சமூகத்துக்கே அவர்களே ஏகபோக ஆணையர்களாகத் தங்களுக்குத் தாங்களே அவதரித்துக்கொண்டு, யாருமே அந்தப் புதிய கருத்துகளைக் கேட்க விடாமல் தடுக்கிறார்கள். அவர்களைச் சார்ந்துள்ள மக்களிலும் பெரும்பாலோர், "எது ஒன்றையும் நாங்கள் கேட்டு முடிவு செய்துகொள்கிறோம்" என்று சுதந்திரமாக நிற்பதற்கு மாறாக, தலைவர்கள் சொன்னால் சரிதான் என்று மாற்றுக் கருத்துகள் எதையும் கேட்டுக்கொள்ளாமல் ஒதுங்குகிறார்கள். ஒதுங்கிப்போவதோடு நிற்காமல், சில நேரங்களில் மேற்படி தலைவர்கள் சொன்னதைக் கேட்டுவிட்டு, மாற்றுச் சிந்தனைகளை முன்வைத்தவர்களைத் தாக்கவும் துணிகிறார்கள்.

எழுத்தாளர்களின் படைப்புகளை முன்வைத்து அந்த எழுத்தாளர்களையே தாக்குவது, குறிப்பிட்ட தொலைக்காட்சி விவாதத்தை முன்வைத்து அந்தத் தொலைக்காட்சி ஊழியர்களைத் தாக்குவது, ஒரு கதையின் மூலம் கேள்வி எழுப்புகிறவர்களை ஊரை விட்டே ஒதுக்குவது, ஒரு கவிதையால் ஒரு விமர்சனத்தை முன்வைப்பவர்களின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி வசைபாடுவது, ஒரு திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சட்டப்பூர்வமற்ற தணிக்கைக்குழுவாக மாறி அந்தப் படத்தைத் திரையரங்கிற்குள் நுழைய விடாமல் முடக்குவது அல்லது சில காட்சிகளையோ, வசனங்களையோ நீக்கும்படி கெடுபிடி செய்வது, ஆய்வுகளாலும் விவாதங்களாலும் அறிவுப் பயிர் செழித்தோங்க வேண்டிய பல்கலைக்கழக வளாகத்திலேயே மாற்றுக் கருத்துடையோர் உரையாற்றவிடாமல் தடுப்பது, புதிதாக ஒரு புத்தகம் வருகிறதென்றால் அந்தப் புத்தக வெளியீட்டையே கெடுப்பது...
இது எந்த அளவுக்குப் போகிறதென்றால், ஒரு திரைப்படத்தில் ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தை விமர்சித்து ஒரு வசனம் வருகிறதென்றால், உடனே அது வழக்கறிஞர்கள் அத்தனை பேரையும் சாடுகிறது என்று கூறி அந்த வசனத்தை நீக்க வேண்டும் அல்லது கதாபாத்திரத்தையே மாற்ற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்! வழக்கறிஞர் என்ற இடத்தில் மருத்துவர், ஆசிரியர், வர்த்தகர், சாமியார்... இன்னபிற கதாபாத்திரங்களைப் போட்டுக்கொள்ளலாம்.

இருபத்தோராம் நூற்றாண்டில் இப்படி இங்கே நடந்துகொண்டிருக்கிறது. சுயமாகக் காதுகளை அடைத்துக்கொள்கிற மனநிலையோடு  இவர்கள் நாடு வல்லரசாக மாறுவது பற்றி முழங்குவது நல்ல நகைச்சுவையான முரண்!
தங்களது நம்பிக்கை அல்லது கலாச்சாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும் அதனால் தங்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும் கூறியே இதையெல்லாம் செய்கிறார்கள். எதற்கடா வம்பு என்று நினைத்தோ, வாக்கு வங்கி வளர்ப்புக்காகவோ அரசாங்கமும் இதற்கெல்லாம் துணைபோகிறது, அரசு அதிகாரிகளே கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள், புத்தகத்தை விலக்கிக்கொள்ள வைக்கிறார்கள், திரைப்படத்தில் கத்தரி போட வைக்கிறார்கள், உரையரங்குகளை நிறுத்தவைக்கிறார்கள்.

கருத்து - மாற்றுக் கருத்து, வாதம் - எதிர்வாதம் என்பதையெல்லாம் அனுமதிக்காத சமுதாயம் பாசிபிடித்து நஞ்சேறிய குட்டையாகவே தேங்கிப்போகும். சமூகம் அப்படி தேங்கிக்கிடப்பதுதான் நல்லது - அதாவது தங்களுக்கு நல்லது - என்று நினைக்கிறவர்கள், அதற்கு ஆதரவாகத் தங்களது ஆட்களைத் திரட்டப் பயன்படுத்துகிற சொல்லாடல்தான் எங்கள் மனம் புண்படுத்தப்படுகிறது, என்பது. குறிப்பாக இதனை சாதி அமைப்புகளும், சாதிப் பாகுபாடுகளைக் கட்டிக்காப்பதற்கென்றே கட்டமைக்கப்பட்ட மதவாத அமைப்புகளும்தான் செய்கின்றன.

குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களையும் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்ட சாதிகளையும் சேர்ந்தவர்கள் அவர்களது மரபின் பெருமையை எடுத்துக்கூறும் புத்தகத்தை எழுதினால், தங்களுடைய உணர்வு புண்படுத்தப்படுவதாகக் கூறி குறிப்பிட்ட ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். புத்தகம் தடை செய்யப்படுகிறது. உண்மையிலேயே அந்தப் புத்தகம் என்ன சொல்கிறது என்று யாருமே தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. அந்தப் புத்தகத்தில் உண்மையிலேயே தரக்குறைவான சொற்கள் இருக்குமானால், உண்மைக்கு மாறான தகவல்கள் எழுதப்பட்டிருக்குமானால் அதைக் கடுமையாக விமர்சிக்கிற வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. பெண்ணின் சுதந்திரத்தை வலியுறுத்தும் சிந்தனைகள் வெளிப்படுத்தப்படுகிறபோதும் இதே போல் தங்களுடைய பாரம்பரியப் பெருமை புண்படுத்தப்படுவதாகக் கூறி கிளம்பிவிடுகிறார்கள். அதற்கு ஆதரவாகத் தங்களுடைய வட்டத்தைச் சேர்ந்த பெண்களையும் திரட்டிக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே ஒரு மாற்றுக் கருத்து புண்படுத்தி விடுமா? நிலத்தைத் துளைக்காமல் பயிர் வளருமா? கல்லைச் செதுக்காமல் சிலை வெளியே வருமா? நிலத்தை உழுவது புண்படுத்துகிற செயலா? கல்லை உதிர்ப்பது புண்படுத்துகிற நடவடிக்கையா? உண்மையில், புண்பட்டுக் குதறிப்போயிருக்கிற சமூக உடலில் மருந்திடுவதைத்தான் இவர்கள் தடுக்கிறார்கள்.

கதைகளிலோ, நாடகங்களிலோ, திரைப்படங்களிலோ, மேடைப்பேச்சுகளிலோ, தொலைக்காட்சி-வானொலி உரைகளிலோ எப்படியெல்லாம் பொதுவுடைமைக் கருத்துகளை, நாத்திகச் சிந்தனைகளை மட்டம் தட்டுகிறார்கள்! சிவப்புச் சிந்தனைகளைப் பேசுகிற கதாநாயகன் பயங்கரவாதி போல சித்தரிக்கப்பட்டு இறுதியில் மனம் திருந்துவதாகக் கதை செய்கிறார்கள்! தொழிற்சங்கத் தலைவர் தொழிலாளிகளைக் காட்டிக்கொடுப்பது போல் காட்சிப்படுத்துகிறார்கள்! நாத்திகவாதம் பேசுகிற பெண்ணைத் திமிர் பிடித்தவளாகக் காட்டி, கடைசியில் அவள் கடவுளின் சக்தியை உணர்வதாக முடிக்கிறார்கள்! சுய மரியாதைக்காக வாதாடுகிற பெண்ணை அடங்காப்பிடாரியாக சிதிதரித்து பின்னர் அவள் அடக்க ஒடுக்கமாக மாறி பெண்மையின் பெருமையைக் காக்கிற தேவதையாக்குகிறார்கள்!

இதெல்லாம் புண்படுத்துகிற வேலையில்லையா?
ஆனால், சிவப்புச் சிந்தனையாளர்களும் பகுத்தறிவாளர்களும் பெண்ணியலாளர்களும் இதற்கெல்லாம் தடை கோரவில்லை. மாறாக, தங்களது மாற்றுக் கருத்துகளையும் தாங்கள் சரியானதெனக் கருதுகிற நிலைகளையும் விளக்குவதற்கான வாய்ப்பாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இப்படி புண்படுத்துப்படுவதாகக் கூறி பயமுறுத்துகிறவர்களைப் பார்த்து சில முற்போக்காளர்கள் பயந்துவிடுகிறார்கள் என்பது இன்னும் பரிதாபம். சமுதாய மாற்றத்திற்காகப் போராடக் களம் இறங்கியவர்கள், கண் முன் நடக்கும் அநீதிகளையும், பண்பாட்டுத் திரை மறைவில் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளையும், நம்பிக்கையின் பெயரால் தொடரும் அபத்தங்களையும் கண்டுகொள்ளாமல் விடுகிறார்கள். கேட்டால், அதையெல்லாம் விமர்சிப்பது மக்களின் மனதைப் புண்படுத்தி விடும், பிறகு அவர்கள் போராட்டங்களுக்கு வரமாட்டார்கள் என்பார்கள். சமுதாய மாற்றம் நிகழும்போது மற்றதெல்லாம் தானாக மாறிவிடும் என்று நவீன கருத்துமுதல்வாதிகளாக இருந்துவிடுகிறார்கள்.

ஆனால் சமுதாய மாற்றத்திற்கான போராட்டம் அப்படியெல்லாம் நிகழ்ச்சி நிரல் அமைத்துக்கொண்டு வரிசைப்படி நிறைவேற்றக்கூடியதல்ல. லட்சியத்திற்காகப் பயணித்துக்கொண்டே வழியில் எதிர்ப்படுகிற முட்டுக்கட்டைகளையும் அகற்றத்தான் வேண்டும். அப்போது அந்த முட்டுக்கட்டைகளுக்குப் புண்படத்தான் செய்யும். அதற்காக அவற்றை அப்படியே விட்டுவிடுவதானால் அங்கேயே நிற்க வேண்டியதுதான், இலக்கை அடைவது மேலும் மேலும் தள்ளிப்போகும்.

அதே போல், மாற்றுக் கருத்துகளை முன்வைத்து சமூக விமர்சனத்திற்குத் துணிகிறவர்களில் சிலர், பழமைக் கருத்துகளை அப்படியே ஊறவைத்துக் கெட்டிப்படுத்திக்கொண்டிருக்கிற வர்க்கச் சுரண்டல் பற்றியோ, நவீன உலகமய தாராளமய தனியார் மய வேட்டைகள் பற்றியோ வாய் திறப்பதில்லை. இதனால், இந்த வேட்டைகளை நடத்திக்கொண்டிருக்கிற சுரண்டல் சக்திகள் எவ்விதத்திலும் புண்படாமல் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்கின்றன.

இதை சரியாகப் புரிந்துகொண்டவர்களாக மார்க்சியவாதிகளும் பகுத்தறிவாளர்களும் உரிமைப் போராளிகளும் விடுதலைத் தாகம்கொண்டவர்களும் சமத்துவ லட்சியம் பூண்டவர்களும் தோள் சேர்ந்து அணிவகுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைக் கண்டும் சிலர் புண்படுகிறார்கள், அதற்கு என்ன செய்ய முடியும்?

(‘தீக்கதிர்’ 2015 ஜூலை 12 இதழ் ‘வண்ணக்கதிர்’ இணைப்பில் வந்துள்ள எனது கட்டுரை)