Monday, 31 August 2015

முதுகு என்று இருக்கும் வரை...

உளமாடும் உரையாடல்: 2


(ஏற்கெனவே சொல்லியிருப்பது போல இது நெடுங்கால தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து எடுத்துக்கொண்டு பகிர்ந்துகொள்கிற பொதுச்சிந்தனைதான். அப்படியாக இருக்குமோ இப்படியாக இருக்குமோ என்ற குடைச்சல்களைத் தள்ளிவிட்டுப் படியுங்கள்.)



“வந்ததிலேயிருந்து பார்க்கிறேன், மவுனமா இருக்கிற. எனக்கு கவலையா இருக்கு...”

“முதுகுக்குப் பின்னால சிரிக்கிறவங்களைப் பத்தி பத்தி யோசிச்சுக்கிட்டிருந்தேன்.”

“முதுகுக்குப் பின்னால சிரிக்கிறதை நாம பார்க்க முடியாது. உனக்கு எப்படித் தெரிஞ்சுது?”

“அவங்க பேசுனது என் காதுக்கு வந்துச்சு.”

“உன் நல்லதுக்காகத்தான் பேசியிருப்பாங்க.”

“கெடுதல் செய்யணும்கிறதுக்காகவே ஏதாவது செய்றவங்களை விட, நல்லது செய்றதா நினைச்சுக்கிட்டு ஏதாவது செய்றவங்களால ஏற்படுற கெடுதல்தான் நிறைய வலியைத் தருது.”

“சமூகமே அப்படித்தான் இருக்கு. அதிலே இவங்களும் ஒரு பார்ட்...”

“முகம் பார்த்துப் பேசுறப்ப அந்த சமூகத்தைத்தான் இழுத்துக்கிடுறாங்க. ‘நீங்க முற்போக்கானவங்களா இருக்கலாம், ஆனா சமூகம் இன்னும் மாறலை. அதுக்கேத்த மாதிரி நீங்கதான் அனுசரிச்சுக்கிட்டு நடக்கணும்,’னு அறிவுரை சொல்றாங்க.”

“பொதுவா இது எல்லாரும் சொல்றதுதானே?”

“பொதுப்புத்தியை மாத்த வேணாமா? சமூக மாற்றத்துக்காகத் தங்களை ஒப்படைச்சுக்கிட்டவங்க, மாறாத சமூகத்தை மாத்துறதுக்கு முயற்சி பண்றதுக்கு பதிலா, சமூகம் மாறலை, அதனால நீ அனுசரிச்சுப் போன்னு சொல்றாங்க. சமூகம் எந்தெந்த விசயத்திலே எப்படியெப்படி இருக்கோ, அந்தந்த விசயத்திலே அப்படியப்படியே வைச்சிருக்கப் பார்க்கிறாங்க.    இதையெல்லாம் என்னால தாங்க முடியலை. தோத்துக்கிட்டிருக்கிறமோன்னு சோர்வா இருக்கு.”

“என்ன நடந்துச்சுன்னு சொல்லாம கருத்தாக மட்டும் சொல்ற... அதுவும் நல்லதுதான்.  சாதி, மதம், சடங்கு, உறவுன்னு எல்லாத்திலேயும இப்படித்தான் குழப்புறாங்க. சமூகப்புத்தியை மாத்துறது வெறுமனே பேசுறதால மட்டுமில்லை, முடிஞ்ச அளவுக்கு வாழ்க்கையிலேயும் கடைப்பிடிச்சாத்தான் நடக்கும். அப்படி முயற்சி பண்றவங்க மேல சகதியடிக்கிறதும் நடக்கும். இதெல்லாம் உனக்குத் தெரியாததில்லையே...”

“தெரியும்தான்... ஆனாலும்...”

“உண்மையான பிரச்சனை அது இல்லை. உனக்கு வயசாயிடுச்சுன்னு நீ நினைக்க ஆரம்பிச்சுட்ட...”

“ம்...?”

“ஆமா, முந்தி நான் இதே மாதிரி ஒரு மனநிலையோட இருந்தப்ப எனக்குத் தெம்பூட்டிச் செயல்பட வைச்சதே நீதான். முதுகுக்குப் பின்னால சிரிக்கிறவங்களைப் பத்தி அலட்டிக்காம போய்க்கிட்டே இருந்த ஆளாச்சே... சரியானதுன்னு நினைக்கிறதைச் செய்துக்கிட்டே இருந்த ஆளாச்சே... சரியில்லைன்னு உணர்ந்தா அதை வெளிப்படையா ஒத்துக்கிட்டு மாத்திக்கிடுற ஆளாச்சே... இப்ப முதுகுக்குப் பின்னால பேசுறவங்களால சோர்வடையுறன்னா உனக்கு வயசாயிட்டதா நீ நினைக்கிறேன்னுதான் அர்த்தம்.”

“......”

“கிளம்பு கிளம்பு, மறுபடி தெளிவா, தெம்பா, திமிரா கிளம்பு.”

No comments: