Thursday, 2 January 2025

அவர்கள் பட்டத்தைச் சுட விடாதீர்கள்


1989ல் வெளியான துருக்கிய மொழிப் படம் ‘டோண்ட் லெட் தெம் ஷூட் தி கைட்’. இதே பெயரில் ஃபெரைட் சிசிகோக்லு எழுதியிருந்த நாவல்தான் படமாக்கப்பட்டது. துருக்கியில் 1980ல் ராணுவச் சதியால் ஆட்சி கைப்பற்றப்பட்டிருந்த நிலையில், அரசியல் கைதியாகப் பெண்கள் சிறையில் நான்கு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தவர் அவர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்தச் சிறை வாழ்க்கையின் பின்னணியில் நாவலை எழுதியிருந்தார். தயாரிப்பாளரும் இயக்குநருமான டன்க் பஸ்ரான் சக கலைஞர்களோடு அங்காரா நகரச் சிறைக்கே சென்று படப்பிடிப்பை நடத்தினார். திரைக்கதையை அவரும் எழுத்தாளரும் சேர்ந்து அமைத்திருந்தனர்.


போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஃபாட்மா பெண்களுக்கான சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். துருக்கி நாட்டு நடைமுறையின்படி அவளுடன், பேரிஸ் என்ற ஐந்து வயது மகனும் சிறைக்குள் அவளுடன் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறான். வெறுப்பும் சோம்பேறித்தனமுமாக இருக்கும் ஃபாட்மா மகனை சரியாகக் கவனித்துக்கொள்வதில்லை.

அங்கே அரசியல் கைதியாக அடைக்கப்பட்டிருப்பவள் இன்சி. அவள் பேரிஸ் மீது பாசம் கொள்கிறாள். அவனும் அவளுக்கு நெருங்கிய உறவாகிறான். சிறைக்குள் வளரும் இவர்களின் அன்புப் பயிரையும், அதைச் சாய்க்க வரும் சூறாவளியையும் கதையாகச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன், அதிகாரக் கெடுபிடிகளையும், கைதிகளின் மன நிலைகளையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சிறையின் மதில் சுவருக்கு வெளியே உயரத்தில் ஒரு பட்டம் பறக்கிறது. “வானத்துல புதுசா ஒரு பறவை பறக்குதே,” என்று காட்டுகிறான் பேரிஸ். அதைப் பிடிக்க முடியுமா என்று கேட்பவனை மகிழ்விப்பதற்காகத் தரையில் வெள்ளை எழுதுகோலால் ஒரு பட்டத்தை வரைகிறாள் இன்சி. “இது பறக்குமா” என்று கேட்கிறான். “பார்த்துக்கிட்டே இரு, பறக்கும்,” என்கிறாள்.



இன்சியும் அவளைப் போன்றவர்களும், அநாகரிகமானவர்களாகக் கருதப்படும் மற்ற கைதிகளோடு நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் அதிகாரிகள்தான் அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள். தரையில் வரையப்பட்டிருக்கும் பட்டத்தைப் பார்த்துவிட்டு அதை அழிப்பதற்கு ஆணையிடுகிறான் தலைமைச் சிறையதிகாரி. உள்ளே ஒரு குறிப்பிட்ட வேலை சரியாக நடக்கிறதா என்று கண்காணித்துவிட்டு வருமாறு ஒரு துணையதிகாரியை அனுப்புகிறான். அவன் போன பிறகு, அவன் சரியாகக் கண்காணிக்கிறானா என்று கண்காணித்துவிட்டு வருமாறு இன்னொரு துணையதிகாரியை அனுப்புகிறான். அவனைக் கண்காணிப்பதற்கு மூன்றாவதாகவும் ஒரு துணையதிகாரியை அனுப்புகிறான். அதிகாரத்தை இப்படித் தாறுமாறாகப் பயன்படுத்தும் தலைமை அதிகாரியின் ஆட்டம், அன்றைய ராணுவ ஆட்சியின் பற்றிய எள்ளல்.

இன்சியிடமிருந்து பேரிஸ், “பட்டத்தை அடிக்காதீங்க, அப்புறம் அது உங்களையே அடிச்சிடும்,” என்று சொல்வதற்குக் கற்கிறான். மற்ற கைதிகளின் உரையாடல்களிலிருந்தும் சண்டைகளிலிருந்தும் அவன் “கம்யூனிஸ்ட்”, “வசவு” எனப் பல புதிய சொற்களைக் கற்றுக்கொள்கிறான். வேறொரு சொல்லுக்குப் பொருள் கேட்கிறபோது, “இவனுக்கு இன்னமும் சுன்னத்தே நடக்கவில்லை, அதற்குள் இதையெல்லாம் கேட்கிறான் பாரு,” என்று பேசிச் சிரிக்கிறார்கள். சில நாட்களில், சிறை மருத்துவரைக் கொண்டு அவனுக்கு சுன்னத் செய்ய வைத்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடுகிறார்கள். சிறையானாலும் விடாத சமூகப் பழக்கம் சுட்டிக்காட்டப்படுகிறது.

நிறைமாதக் கர்ப்பிணி ஒருத்திக்கு, ஒரு விடுமுறை நாளில் திடீரென இடுப்பு வலி ஏற்பட, மருத்துவரை அழைத்துவர முடியாத நிலையில், தங்களுடைய சண்டைகளை மறந்து கைதிகள் பொறுப்பேற்பதும், சுகப்பேறு நடப்பதும் சிறைவாசத் திரைப்படங்களில் அரிதான காட்சி.

தண்டனைக் காலம் முடிந்து இன்சி விடுதலையாகிறாள். பேரிஸ்சிடம் சொல்லிக்கொண்டு விடைபெறுவதற்குத் துணிவற்றவளாக, அவள் வெளியேறுவதிலும், அவன் அவளைத் தேடிச் சிறைத்தாழ்வாரங்களில் ஓடிவருவதிலும் உண்மையான உருக்கம்.

படம் தொடங்குவதே, விடுதலை பெற்ற இன்சி வெளியேயிருந்து நினைத்துப் பார்ப்பதிலிருந்துதான். அவள் வெளியேறிய பிறகு, பேரிஸ்சின் கண்கள், இப்போதும் மேலே ஒரு பட்டத்தைக் காண்கின்றன. மற்ற பெண்களும் அதைக் கவனித்துக் கும்மாளம் போடுகிறார்கள். அப்போது அங்கே வருகிற தலைமையதிகாரி, பட்டத்தைத் துப்பாக்கியால் சுட ஆணையிடுகிறான். முடியவில்லை. சில நொடிகளில் இன்னொரு பட்டம், அடுத்தொரு பட்டம், அடுத்தடுத்துப் பட்டங்கள் என ஆகாயத்தில் ஒரு பட்டப்படை அணிவகுப்பே நடக்கிறது. கவித்துவமாக விடுதலையின் பரவசம்.

மனம் கவரும் சிறுவனாக ஓஜான் பிலேன், அன்றைய அரசியலைத் தெரிந்துகொள்ளத் தூண்டும் பெண்ணாக நூர் சுரூர் உள்ளிட்டோரின் நடிப்பு, எர்டால் காராமான் ஒளிப்பதிவு, ஓஸ்கான் டர்பே இசைக்கோர்ப்பு என சிறப்பானதொரு படத்திற்குச் சிறப்பான கூட்டுப் பங்களிப்பு.

அனடால்யா கோல்டன் ஆரஞ்ச், மையத் தரைக்கடல் நாடுகள் விழா, இஸ்தான்புல் பன்னாட்டுத் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களின் விருதுகளையும் திறனாய்வாளர்களின் பாராட்டுகளையும் பெற்ற இந்த 100 நிமிடப் படம் தற்போது நவீன 4கே பதிவு நுட்பத்துடன் மூபி தளத்தில் காணக் கிடைக்கிறது.

[‘செம்மலர்’ ஜனவரி, 2025 இதழ் ‘ஓடிடி மேடையில் உலக சினிமா’ பகுதியில் வந்துள்ள எனது கட்டுரை]




No comments: