Friday, 4 April 2025

அனோரா: ஒரு பாலியல் தொழிலாளியும் ‘அலிகார்ச்’ அற்பனும்

 ஓடிடி மேடையில் உலக சினிமா

 


னைத்து நாட்டு திரைப்படக் கலைஞர்கள், ரசிகர்களால்  எதிர்பார்க்கப்படுவது ஹாலிவுட் திரையுலகின் ‘ஆஸ்கர் விருதுகள்’ என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் ‘அகாடமி விருதுகள்’.  97வது ஆஸ்கர் விழா இந்த மார்ச் 2 அன்று நடந்தது.சிறந்த படம், இயக்குநர், திரைக்கதை, படத்தொகுப்பு, பெண் நடிகர் ஆகிய ஐந்து விருதுகளை வென்ற ‘அனோரா’ உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அலெக்ஸ் கோகோ, சமந்தா குவான் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள சீன் பேக்கர் படத்தை இயக்கியுமிருக்கிறார். மேடையில் விருதைப் பெற்றுக்கொண்ட பேக்கர், கடந்த கால, நிகழ்கால, எதிர்காலப் பாலியல் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பிரிட்டிஷ் அகாடமி உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இப்படத்தின் கதை ஒரு பாலியல் தொழில் பெண் பற்றியதுதான்.

அமெரிக்காவில் ரஷ்ய மக்கள் வாழும் புரூக்ளின் பகுதியைச் சேர்ந்த 23 வயது அனோரா ஆடையவிழ்ப்பு நடன – பாலியல் தொழில் விடுதியில் வேலை செய்கிறாள்.. தனது மொழி தெரிந்தவள் வேண்டுமென்று கேட்டு வருகிறான் வான்யா என்ற 21 வயது ரஷ்ய இளைஞன். மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டவனான அவன் கேளிக்கை விடுதிகளில் பொழுதைக் கழிப்பவன். ஒரு வாரத்திற்கு 15,000 டாலர் பேரம் பேசி அவனுடைய மாளிகைக்குச் செல்கிறாள் அனோரா.  பின்னர் இருவரும் நெருக்கமாகிறார்கள். நெவேடா நகரத்தின் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.

ரஷ்யாவில் இருக்கும் வான்யாவின்  பெற்றோர் நிகோலாய்–கலினா திருமணத்தை எதிர்க்கின்றனர். பணபலமும் அரசியல் செல்வாக்கும் உள்ள ‘அலிகார்ச்’ எனும் கும்பலைச் சேர்ந்த குடும்பம் அவர்களுடையது (அலிகார்ச் என்பது சோவியத் யூனியன் தகர்ந்து ஆட்சிமுறை மாறியபோது அரசின் சொத்துகளைக் கைப்பற்றி அரண்மனை வாழ்க்கை வாழ்கிற கும்பலுக்கான அடையாளம்).

நியூயார்க்கில் இருக்கும் வான்யாவின் ஞானத்தந்தை டோரோஸ், தனது அடியாட்களான கார்னிக், இகோர் இருவரையும் வான்யாவின் மாளிகைக்கு  அனுப்புகிறான். வான்யா ஓடிப் போகிறான். அனோராவை அவமானப்படுத்தும் அடியாட்கள், வான்யா அமெரிக்காவில் நிலையாகக் குடியிருக்க ‘கிரீன் கார்டு’ பெறுவதற்காகத்தான் அவளை மணந்துகொண்டான் என்றெல்லாம் கூறி அவள் மனதைக் கலைக்க முயல்கிறார்கள். அவள் இருவரையும் தாக்கிக் காயப்படுத்துகிறாள் அவர்கள் அவளை அடக்குகிறார்கள். அவளுடைய திருமண மோதிரத்தைப் பறித்துக்கொள்ளும் டோரோஸ், அவளாக விலகிக்கொள்வதற்கு 10,000 டாலர் தருவதாகக் கூறுகிறான். “வான்யாவும் நானும் காதலிக்கிறோம்,” என்கிறாள் அவள். அவனை அவளுடைய முன்னாள் விடுதியில் கண்டுபிடிக்கிறார்கள்.

திருமணம் நெவேடாவில் பதிவாகியிருப்பதால் அது செல்லாது என்று தன்னால் அறிவிக்க முடியாது என நியூயார்க் நீதிமன்றம் கூறிவிடுகிறது. போதையிலும்,  ரஷ்யாவிலிருந்து வந்துவிட்ட பெற்றோரின் கட்டுப்பாட்டிலும் இருக்கும் வான்யா அனோராவைக் கைவிடுகிறான். முதுகெலும்பற்ற அவனையும் அவனுடைய பெற்றோரையும் திட்டுகிற அனோரா வழக்குத் தொடுக்கப் போவதாகக் கூறுகிறாள். “உன்னிடம் இருக்கும் மொத்தப் பணத்தையும் வழக்குக்கே செலவு செய்ய வைத்துவிடுவேன்,” என்று கலினா ஆணவமாகப் பேசுகிறாள்.  வேறு வழியின்றி அனோரா விலகல் ஆவணத்தில் கையெழுத்திடுகிறாள். அவளிடம் வான்யா மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்கிறான் அடியாளான இகோர். தன் மகன் யாரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை என்கிறாள் கலினா. 

அனோராவின் உடைமைகளையும், டோரோஸ் கொடுத்த பணத்தையும் ஒப்படைக்கிறான் இகோர். “மாளிகைக்கு நீ முதலில் வந்தபோது நான் போராடாமல் இருந்திருந்தால் என்னை நீ வன்புணர்ந்திருப்பாய்,” என்று அவள் குற்றம் சாட்ட, அவன் மறுக்கிறான். அவளுடைய வீட்டுக்குக் காரில் அழைத்துச் செல்கிறபோது திருமண மோதிரத்தைத் திருப்பித் தருகிறான். ஏமாற்றம், கோபம் ஆற்றாமை என உணர்ச்சிச் சுழலில் இருக்கும் அனோரா அவனிடம் பாலியலாக நெருங்குகிறாள். பின்னர், அவனுடைய மார்பில் சாய்ந்து அழுகிறாள். உணர்வுகளைப் புரிந்துகொண்டவனாக, அவளிடம் அடிபட்டிருந்தாலும், அவன் அவளை அணைத்துக்கொள்கிறான்.

பாலியல் விடுதியின் தொடக்கக் காட்சிகள் அதிர வைக்கக்கூடும். அடுத்தடுத்து வரும் திருப்பங்களுக்கு அந்த அதிர்ச்சி தேவைப்படுகிறது. விடுதிச் சூழலை பெருமளவுக்குத் துல்லியத்துடன், அந்தப் பெண்களின் காய வடுக்கள், இயல்பான நடத்தை உட்பட பேக்கர் நேர்த்தியாகச் சித்தரித்திருக்கிறார். “எங்களை வைத்துப் பல படங்கள் வந்திருக்கின்றன, விருதுகளும் பெற்றிருக்கின்றன. ஆனால் விருது மேடையில் முதல் முறையாக எங்களுக்கு நன்றி தெரிவித்தவர் பேக்கர்தான்,” என்று பாலியல் தொழிலாளிகள் நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார்கள்.

தற்காலிக வசதிகள் வாய்த்தாலும் இவர்களின் வாழ்க்கை எளிதில் மாறிவிடுவதில்லை, பணக்காரக் கும்பல்களின் புத்தியும் போய்விடுவதில்லை என்று திரைமொழியில் சொல்லப்படுகிறது. அனோராவின் அவலம், வான்யாவின் துரோகம் இவற்றோடு, அடியாளானாலும் அரண்மனைக் குடும்பம் அல்லாத எளியவனுக்குள் இருக்கும் நேயத்தைக் காட்டியிருப்பதில் ஒரு வர்க்கப் பார்வையும் வெளிப்படுகிறது.

அனோராவாக மிக்கே மேடிசன் சிறந்த நடிகைக்கான விருது பெற்றதன் பொருத்தத்தை நிறுவியிருக்கிறார். வான்யாவாக மார்க் ஐடெல்ஷ்டைன், ஒளிப்பதிவாளர் ட்ரூ டேனியல்ஸ், இசையமைப்பாளர் மேத்யூ ஹீரான் ஸ்மித் உள்ளிட்ட கலைஞர்களும் இணைந்து, படத்தைத் தொகுத்தும் அளித்திருக்கிற சீன் பேக்கரின் புனைவுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள். படம் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது. 

[0]

நன்றி: செம்மலர் ஏப்ரல் 2025 இதழ்


Wednesday, 2 April 2025

நாடு முழுவதும் விவாதிக்கப்பட்ட மதுரை மாநாட்டுக்கான விவாதம்




“என்ன சார், மதுரைக்குப் போகலையா நீங்க? உங்க கட்சி ஆல் இண்டியா மாநாட்டுக்குப் போயிருப்பீங்கன்னு நினைச்சேன்…”

காலை நடையின் வழக்கமான கடைசிக் கட்டமான பூங்கா அமர்வில் நண்பர் கேட்டார்.

“வெளியூர்ப் பயணமெல்லாம் இப்ப சாத்தியமில்லையே. சென்னைக்குள்ளேயே நடக்கிற நிகழ்ச்சிகளுக்கு இப்பதான் போக ஆரம்பிச்சிருக்கேன். மாநாடு எப்படி போய்க்கிட்டு இருக்குதுன்னு இங்கேயிருந்தே கவனிப்பேன்…”

“அது என்ன…? டிராஃப்ட் பொலிடிக்கல் ரிசொல்யூசன்… அதுக்கு யார் வேணும்னாலும் திருத்தம் சொல்லலாம்னு சொல்றாங்களே…”

“ஆமா. கட்சியோட முக்கியமான செயல்பாடு அது. நடப்பு அரசியல் நிலைமையையும் சமுதாய நிலைமையையும் எப்படி கணிக்கிறது, அதுக்கேத்த மாதிரி என்ன அணுகுமுறையை வகுக்கிறது… இதிலேயெல்லாம் கட்சிக் கிளைகளில் இருக்கிற எல்லா உறுப்பினர்களும் பங்களிக்கிற ஏற்பாடு. பொதுவெளியிலே வெளியிடுறதால கட்சிக்கு வெளியே இருக்கிறவங்களும் கருத்துகளை அனுப்பலாம். நீங்க கூட அனுப்பலாம். எந்தத் தேதிக்குள்ள அனுப்பணும்னு கூட அறிவிச்சிருந்தாங்களே...”

”அதையெல்லாம் என்ன செய்வீங்க?”

“வந்திருக்கிற ஆலோசனைகள், திருத்தங்களை அதுக்குன்னே அமைக்கப்பட்டிருக்கிற குழு தொகுத்துக் கொடுக்கும். மாநாட்டிலே பிரதிநிதிகளா கலந்துக்கிடுறவங்க அதையெல்லாம் விவாதிப்பாங்க. அரசியல் தீர்மான முன்வரைவிலே எதையெல்லாம் அப்படியே வைச்சிக்கலாம், எதையெல்லாம் மாத்தலாம்னு பேசுவாங்க. பெரும்பான்மைக் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் நிறைவேறும். அடுத்த மாநாடு வரையில் அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் கட்சியின் அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் இருக்கும். கம்யூனிஸ்ட் இயக்கங்களோட தனித்துவம்னு இதைச் சொல்லலாம்.”

“நீங்க உங்களோட கருத்துகளை எழுதி அனுப்பிட்டீங்களா?”

“ஓ… அனுப்பிட்டேன். நான் இருக்கிற கிளையிலே நடந்த விவாதத்திலேயும் பங்கெடுத்துக்கிட்டேன்.”

“இன்னிக்கு இருக்கிற கவர்மென்ட்டை எப்படிச் சொல்றது… பாசிசமா, நியோ பாசிசமான்னு ஒரு விவாதம் ஓடிச்சே. அது பத்தி உங்க ரீயாக்சன் எதையும் நான் பார்க்கலையே?”

“கிளையிலே சொல்லியிருக்கேன்… ”

“இல்லை, நிறைய இன்டெலெக்சுவல்ஸ் அதை கிரிட்டிசைஸ் பண்ணி எழுதியிருக்காங்க… அதுக்கெல்லாம் பதில் சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்.”

“ஒரு கட்சியோட மாநாட்டிலே விவாதிச்சு முடிவெடுக்கப்போற ஒரு நிலைப்பாடு பத்தி நாடு முழுக்க இப்படியொரு விவாதம் வந்தது எனக்குத் தெரிஞ்சு, அண்மைக் காலத்திலே இதுதான் முதல் முறை. இது ஆரோக்கியமான வளர்ச்சிப்போக்கு இல்லையா? இப்படிப்பட்ட மாற்றுக் கருத்துகளும் விமர்சனங்களும் வரும்னு தெரிஞ்சுதானே கட்சி அதைப் பொதுவிலே வெளியிட்டுச்சு? சரியா சொல்லணும்னா, அப்படி வரட்டும்னுதான் வெளியிட்டுச்சு. அது நடந்திருக்கு. இப்ப அதையெல்லாம் வைச்சு மாநாட்டிலே விவாதிக்கிறது நடக்கும்.“

“இது தேவையில்லாத கான்ட்ரவெர்ஸியோன்னு நினைக்கிறேன். லெஃப்டிஸ்ட் வியூ உள்ளவங்க கூட கடுமையா ரியாக்ட் பண்ணியிருக்காங்க. சில பேரு சிபிஎம் பிரச்சினையை சாஃப்டாக்குது, காம்ப்ரமைஸ் பண்ணுதுன்னுலாம் எழுதுறாங்க. சோசியல் மீடியாவுலேயும், மெயின்ஸ்ட்ரீம் மீடியாவுலேயும் பார்த்தேன்…“

“சார், ஒரு விசயம் புரிஞ்சிக்கிடுங்க. இந்தியாவிலே கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கினதிலிருந்தே இப்படி நடந்துக்கிட்டு வருது. இந்த நாட்டு ஆளும் வர்க்கத்தை, அரசியல் நிலையை, சமுதாய அடிப்படையை எப்படிப் புரிஞ்சிக்கிடுறது, எப்படி வகைப்படுத்துறது... இப்படி ஆழமான விவாதங்களும் கருத்து மோதல்களும் நடந்திருக்கு. இப்ப நடக்கிறது ஒண்ணும் புதுசு இல்லை. ஒரு முக்கிய முடிவெடுக்கிறப்ப, இப்படிப்பட்ட கருத்து மோதல்கள் இல்லாட்டி எப்படி? என்ன சில பேர் கருத்து வேறுபாடுங்கிற தளத்திலே நின்னு நிதானமா வாதம் செய்திருக்காங்க. சில பேரு இதைச் சாக்கா வைச்சுக்கிட்டு கட்சியைத் தாக்குறாங்க. கடந்த காலத்திலே ஜாதிக்கட்சின்னு பேசலையா என்ன? இப்ப அதை வேற மாதிரி சொல்லி வேற கலர் பூசுறாங்க. எப்பவும் போல இப்பவும் அதையெல்லாம் உதறிட்டு, தப்பான முடிவுகளை மாத்திக்கிட்டு. சரியான முடிவுகளோட போய்க்கிட்டே இருப்போம்.“

“எல்லாரும் கேட்கிறதைத்தான் இப்ப நானும் கேட்கிறேன்….”

–குறுக்கிட்டார் எப்போதும் உடன் வந்தாலும் அரிதாகவே பேசுகிற நண்பர்.

“இவ்வளவு பெர்ஃபெக்டா தீர்மானிச்சு எல்லாம் பண்றீங்க… ஆனா கட்சி இன்னும் பெரிய அளவுக்கு வளரலையே… ஏன் சார்? தப்பான முடிவுகள் எடுத்ததாலதான்னு சொல்லலாமா?”

“சரியான முடிவுகளோட செயல்படுறதுக்கும், முன்னேறுறதுக்கும், வளர்றதுக்கும் என்னவெல்லாம் தடையா இருக்குதுன்னும் சொல்லியிருக்கோமே… அந்த நிலைமைகளுக்கு ஏத்த மாதிரி அனுசரிச்சிக்கிட்டுப் போறதா அணுகுமுறையை மாத்தியிருந்தா அதுதான் சமரசம். அப்படியெல்லாம் சமரசம் பண்ணிக்கிடாம இயங்குறோம் பாருங்க, அது எங்க சாகசம்.”

“விட்டுக்கொடுக்க மாட்டீங்களே…”

“விட்டுக்கொடுக்கிறது, கொடுக்காம இருக்கிறதுங்கிற பிரச்சினையே இல்லை. நீங்க சொன்ன கோணத்திலேயும் மாநாட்டுப் பிரதிநிதிகள் விவாதிப்பாங்கன்னு நான் சொன்னதிலிருந்தே புரிஞ்சிக்கிடலாமே… குறைபாடுகள் என்னங்கிறது பத்தியும் விவாதிப்பாங்க. அதெல்லாம் இருக்கட்டும். உங்க கருத்து என்னன்னு சொல்லுங்களேன்…”

“ஹஹஹா… உங்க மாநாட்டு முடிவு வரட்டும் சார், சொல்றேன். சரி, பார்க்குல நம்ம சிட்டிங் டைம் முடிஞ்சிருச்சு. புறப்படுவோம். முக்கியமான விசயம் பேசினோம், அதனால டீக்கடை விசிட்டோட முடிச்சுக்குவோம். அதுக்கு முன்னாடி நீங்க இப்ப கடைசியா என்ன சொல்றீங்க?”

“இன்னிக்கு ஆரம்பிக்கிற மாநாட்டைத் தலைமைப் பொறுப்புகள்ல இருந்து நடத்திக்கொடுக்கிறவங்க, எல்லா மாநிலங்கள்லயிருந்தும் பிரதிநிதிகளா வந்திருக்கிறவங்க, பார்வையாளர்களாக் கலந்துக்கிட்டு கவனிக்கப் போறவங்க, பொது நிகழ்ச்சிகள்ல ஆதரவாப் பங்கெடுக்கிறவங்க, மதுரைக்கு இன்னொரு பெருமைன்னு மாநாட்டை நல்லா நடத்த உழைச்சிக்கிட்டு இருக்கிறவங்க, தொண்டர்களா பணி செய்யப் போயிருக்கிறவங்க, நாடு முழுக்க விவாதிச்ச விசயங்களோட மாநாட்டிலே பேசுவாங்கன்னு எதிர்பார்ப்போடு பிரதிநிநிதிகளை அனுப்பி வைச்சிருக்கிறவங்க, மாநாட்டையொட்டி பல ஊர்கள்லேயும் பலவிதமான பரப்புரை நிகழ்ச்சிகளை நடத்துனவங்க, ஆறாந்தேதி நடக்கப்போற பேரணியிலே நடைபோடப் புறப்படுறவங்க, கருத்து வேறுபாடுகளைக் கட்சி மேல இருக்கிற அக்கறையால வெளிப்படுத்தியிருக்கிறவங்க… அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்னு சொல்றேன்.”